செவ்வாய், 10 மார்ச், 2009

எங்கே செல்லும்…? (17)


கவிதாவிற்கு ஐங்கரனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள். ஒரு கடிதம் எடுத்து ஏதோ கிறுக்கினாள். பின்னர் அதனைப் படித்துப் பார்த்து முகத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினாள்; கிழித்தெறிந்தாள். மீண்டும் எதையோ ஆழ்ந்து யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தொலைப்பேசி அருகே சென்று சில எண்களைச் சுழற்றினாள்.

“ஹலோ, முகி இருக்கானா?”

“முகிலன் தான் பேசுறேன். என்ன விசயம் கவி?”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். ஐங்கரனோட போன் நம்பர் வச்சிருக்கியா?”

“ஏன்?”

“எனக்கு வேணும்! ப்பிளீஸ் எப்படியாவது கேட்டு வாங்கிக் கொடு.”

“ஹ்ம்ம்ம்… நான் நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்.” என்றான் முகிலன்.

மறுநாள் முகிலன் பாட்டி வீட்டிற்கு வந்தான். அவன் முகமே சரியில்லை. கவிதாவிற்கும் அவன் முகத்தைப் பார்க்க என்னவோ போல் இருந்தது. அவனே ஏதாவது சொல்வான் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தான். அவன் வாய் திறந்து எதுவுமே கூறவில்லை. கவிதா பொறுமை இழந்து மீண்டும் ஐங்கரனின் தொலைப்பேசி எண்களைக் கேட்டாள்.

“கவி, அவனை மறந்திரு. அவன் சரியா வரமாட்டான்,” என்றான் முகிலன்.

“ஏன்?” கவிதாவின் முகத்திலும் கேள்வியிலும் அதிர்ச்சித் தேங்கி நின்றது.

“அவனுக்கு வேற கேர்ள் இருக்கு!” முகிலன் இதனை மெதுவாகத்தான் சொன்னான். ஆனால், அது கவிதாவிற்குப் பேரிடி போல் விளங்கியது. அதனன அடுத்து அவள் வேறு எந்தக் கேள்வியும் அவனிடம் கேட்கவில்லை.

விருட்டென்று தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள். பின்னர், குலுங்கிக் குலுங்கி அழுதாள். தலையை அடித்துக் கொண்டாள். கால்களால் மெத்தையை உதைத்தாள். தலை முடியைப் பிய்த்துக் கொண்டாள். தேம்பித் தேம்பி அழுதாள். பின்னர் அப்படியே தூங்கிப் போனாள்.

மறுநாள் மீண்டும் முகிலனுக்குத் தொலைப்பேசி அழைப்புச் செய்தாள்.

“ஹலோ முகி, கவிதா பேசுறேன்.”

“தெரியும். சொல்லு.”

“நேத்து நீ சொன்னது உண்மையா?”

“ஆமா! நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லப் போறேன்?”

“அப்புறம் ஏன் மொதல்லயே சொல்லல? எதுக்கு அவங்க என்னைப் பிடிச்ச மாதிரிக் காட்டிக்கணும்”

“கவி, எனக்குத் தெரியாதும்மா. பையனுங்கதான் அவனுக்கு வேற கேர்ள் இருக்குனு சொன்னானுங்க. அவன்கிட்ட கேட்டதுக்கு ஆமா’னு சொன்னான். அப்புறம் எதுக்கு உனக்கு ‘லைன்’ போட்டான்’னு கேட்டேன். அதுக்கு அவன், ‘நான் ஒன்னும் லைன் போடல. அதுதான் என் பின்னாலேயே வருது’னு சொன்னான்.”

கவிதாவிற்குத் தலைச் சுற்றியது. தொலைப்பேசியை வைத்துவிட்டு மீண்டும் அழுதாள். சில நாட்கள் இப்படியே அழுதுவடித்தாள் (யாருக்கும் தெரியாமல்). இரண்டு வாராம் கழித்துத் தான் ஐங்கரனை வழக்கமாகச் சந்திக்கும் கோவிலுக்குச் சென்றாள்.

அங்கே ஐங்கரன் இருந்தான். அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் தலையைத் திருப்பிக் கொண்டாள். பாவம் கவிதா! கோவிலிலேயே அவளது கண்கள் குளம் கட்டிவிட்டன. அவளது நிலையைப் பார்த்த சங்கரியும் கோமளாவும் என்னவென்று விசாரித்தனர். கவிதா சகலத்தையும் கூறினாள். அவர்கள் அவளுக்கு முடிந்த அளவில் ஆறுதல் கூறினர்.

நாட்கள் கடந்துச் சென்றது. கவிதாவால் ஐங்கரனை மறக்க முடியவில்லை. அவன் ஏன் தன்னை இந்த கதிக்கு ஆளாக்கினான் என்று அவளுக்குத் தெரியவில்லை. முன்னம் இருந்த கலகலப்பு இப்போது அவளிடம் இல்லை. கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள். இருந்தும் தனிமையில் அழுதாள்.

காலங்கள் உருண்டோடியது. கவிதா அதிக நேரத்தை நண்பர்களுடன் கழிக்க ஆரம்பித்தாள். மீண்டும் சாட்டிங் சென்று பொழுது போக்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக ஐங்கரனை மறக்க முயன்றுக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவளுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதனைக் கண்டதும் அவள் எல்லையில்லா ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் கொண்டாள். மீண்டும் மீண்டும் அதனைப் படித்தாள்.

“நிஜமாகவே அவர் தானா?” என்று தன் கண்களையே நம்பாமல் அனுப்புனர் மின்னஞ்சல் முகவரியை எழுத்துக்கூட்டிப் படித்தாள். பழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது.

தொடரும்…

5 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அது கவிதாவிற்குப் பேரிடி போல் விளங்கியது. \\

அப்படியே உணர முடிகிறது

நட்புடன் ஜமால் சொன்னது…

\\“நிஜமாகவே அவர் தானா?” என்று தன் கண்களையே நம்பாமல் அனுப்புனர் மின்னஞ்சல் முகவரியை எழுத்துக்கூட்டிப் படித்தாள். பழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது.\\

அடடடா உற்சாகம் எனக்கு தொற்றிகொண்டது

சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க ...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\“நிஜமாகவே அவர் தானா?” என்று தன் கண்களையே நம்பாமல் அனுப்புனர் மின்னஞ்சல் முகவரியை எழுத்துக்கூட்டிப் படித்தாள். பழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது.\\

//அடடடா உற்சாகம் எனக்கு தொற்றிகொண்டது

சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க ...//

உங்கள் உற்சாகம் எனக்கும் உற்சாகம் ஊட்டுகிறது. விரைவில் அடுத்தப் பகுதி வரும்.

Divyapriya சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சு இந்த பகுதி போட்டிுக்கீங்க...நல்லா இருக்ு...

புதியவன் சொன்னது…

//விருட்டென்று தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள். பின்னர், குலுங்கிக் குலுங்கி அழுதாள். தலையை அடித்துக் கொண்டாள். கால்களால் மெத்தையை உதைத்தாள். தலை முடியைப் பிய்த்துக் கொண்டாள். தேம்பித் தேம்பி அழுதாள். பின்னர் அப்படியே தூங்கிப் போனாள்.//

காதல் தோல்வியில் ஒரு பெண்ணின் வலியை உணர்த்தும் வரிகள் அருமை...தொடருங்கள் பவனேஸ்வரி...காத்திருக்கிறோம்...