ஞாயிறு, 1 மார்ச், 2009

எங்கே செல்லும்…? (16)


“இங்க இல்லை’னா உங்க வீட்லதான் இருப்பாங்க. என்ன விஷயம்?”

“ஒரு ஆள் உன்னை ரொம்பெ கேட்டதாச் சொன்னாங்க,” என்றுக் கூறி விஷமமாகப் புன்னகைத்தாள் தேவி.

“யாரு?” என்று எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் கேட்டாள் கவிதா.

“உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தடவை கோவில்ல என்னோட அக்கா ப்பிரண்ஸ்’னு ரெண்டு பேரைப் பார்த்தோமே?”

“ஆமா…”

“அதுல ஒரு ஆளு உன்னை ரொம்பெ கேட்டதாச் சொன்னாங்களாம்.”

“யாரு?” ஏதும் அறியாதது போல் கேட்டாள் கவிதா.

“ஐங்கரன். அதான் அன்னைக்குக் கூட வெள்ளை ஜிப்பா போட்டிருந்தாங்களே? பையன் நல்லா ஹாண்ஸ்சமா இருப்பான்’லா.”

கவிதாவால் அதற்கு மேல் விசயத்தை மறைக்க முடியவில்லை. தான் ஐங்கரனைத் திடலில் சந்தித்தது, கோவிலில் மீண்டும் தேவியின் உறவுப் பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது, அவனுடன் சாட் செய்தது, மீண்டும் கோவிலில் சந்தித்தது வரை அனைத்தையும் கதை போல கோர்வையாகக் கூறினாள்.

“ஹ்ம்ம்ம்… இவ்ளோ நடந்துருக்கா? என்கிட்ட சொல்லவே இல்ல…” என்றவாறு கவிதாவை ஏற இறங்கப் பார்த்தாள் தேவி. கவிதாவால் அவள் பார்வையைத் தாங்க முடியவில்லை.

“ஒன்னும் நடக்கல. நாங்க ஜஸ்ட் ப்பிரண்ஸ்’தான். நீ ஏதும் தப்பா எடுத்துக்காத. ஏதாவது இருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா?”

“உங்கள நம்ப முடியாது’டி. இவ்ளோ நடந்திருக்கு…என்கிட்ட ஒரு வார்த்தைச் சொன்னியா? எதுவுமே தெரியாத மாதிரி ஆக்டிங் வேற. இரு’டி. எனக்கும் நேரம் வராமலா போயிரும்.” என்று செல்லமாகக் கோபித்தாள் தேவி.

“கோவிச்சுக்காதடா செல்லம். இனிமே என்ன நடந்தாலும் உன்கிட்ட சொல்றேன்,” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் கவிதா. அதற்குள் பாட்டியின் குரல் கேட்கவே, தேவி கவிதாவிடமிடருந்து விடைப்பெற்றுச் சென்றாள்.

மறுபடியும் வெள்ளிக்கிழமை வந்தது. சங்கரி, கோமளாவுடன் கவிதா கோவிலுக்குச் சென்றாள். ஐங்கரனும் கோவிலில் இருந்தான். ஒரு சின்னப் புன்னகையோடு இருவரும் தலைத் தாழ்த்திக்கொண்டனர். ஆனால், கவிதாவின் குறும்புக் கண்களே நொடிக்கொரு தரம் ஐங்கரன் இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்தன.

அன்று கோவிலை வெட்டு வெளியாகும் முன்பு ஐங்கரன் தன்னுடன் அன்று போல் பேசுவான் என்று கவிதா பெரிதும் எதிர்ப்பார்த்தாள். அவன் பேசவே இல்லை. இவளும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள். அகத்தில் அழகு முகத்தில் தெரியும் அல்லவா? அவளின் முகவாட்டத்தைத் தோழிகள் இருவரும் கவனிக்கவே செய்தனர்.

“ஏய், என்னலா ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” என்று கேட்டாள் சங்கரி.

“ஒன்னுமில்லையே. நல்லாதான் இருக்கேன்,” என்று தன் முககுறிப்பை மறைக்க முயன்றாள் கவிதா.

“இல்ல! நானும் முதல்ல இருந்து கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஏன் ஒரு மாதிரி இருக்கே? ஐங்கரன் ஒங்கிட்ட பேசாதனாலா?” என்றாள் கோமளா.

“ச்சே, அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நான் எப்போதும் மாதிரிதான் இருக்கேன்,” என்று சமாளித்தாள் கவிதா.

“ஏய், பொய் சொல்லாதே. நீ எப்போதும் எப்படி இருப்பேன்’னு எங்களுக்குத் தெரியாதா? கவலைப்படாத! அவருக்குத் தெரிஞ்சவங்க யாராவது கோவில்ல இருந்திருப்பாங்க. அதனால கூட பேசாம இருந்திருக்கலாம் இல்லையா?” என்று அவளை சமாதானப்படுத்தினர் தோழிகள் இருவரும்.

அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலும் ஐங்கரன் அவளுடன் பேச முயற்சிக்கவில்லை. சிறு புன்னகையை உதிர்த்ததோடு நிறுத்திக்கொண்டான். எப்போது அவன் தன்னுடன் பேசுவான் என்ற ஏக்கம் கவிதாவை ஆட்கொண்டது. முகிலனிடம் யோசனைக் கேட்கலாம் என்றால் அவன் பாட்டி வீட்டுப் பக்கம் வருவதே இல்லை.

கவிதாவிற்கு ஐங்கரனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.

தொடரும்…

9 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\“கோவிச்சுக்காதடா செல்லம். இனிமே என்ன நடந்தாலும் உன்கிட்ட சொல்றேன்,”\\

அழகான உரையாடல்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\சிறு புன்னகையை உதிர்த்ததோடு நிறுத்திக்கொண்டான். எப்போது அவன் தன்னுடன் பேசுவான் என்ற ஏக்கம் கவிதாவை ஆட்கொண்டது.\\

காதல்
வந்ததும்
கன்னியின் உள்ளே
காதலை யாருக்கும் ...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி...

நான் சொன்னது…

அடுத்த பதிவு எப்போது உங்கள் கற்பனை மிகவும் அழகு வாழ்த்துகள்

அபுஅஃப்ஸர் சொன்னது…

//“ஒன்னும் நடக்கல. நாங்க ஜஸ்ட் ப்பிரண்ஸ்’தான். நீ ஏதும் தப்பா எடுத்துக்காத. ஏதாவது இருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா?”
/

இப்படிதான் முதலில் ஆரம்பமாகும்

அபுஅஃப்ஸர் சொன்னது…

//கவிதாவின் குறும்புக் கண்களே நொடிக்கொரு தரம் ஐங்கரன் இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்தன.
/

இது நல்லா இருக்கே...

புதியவன் சொன்னது…

//“உங்கள நம்ப முடியாது’டி. இவ்ளோ நடந்திருக்கு…என்கிட்ட ஒரு வார்த்தைச் சொன்னியா? எதுவுமே தெரியாத மாதிரி ஆக்டிங் வேற. இரு’டி. எனக்கும் நேரம் வராமலா போயிரும்.” என்று செல்லமாகக் கோபித்தாள் தேவி.//

சுவாரஸ்யமான உரையாடல்...ரசித்தேன்...தொடருங்கள் காத்திருக்கிறோம்...

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//அடுத்த பதிவு எப்போது உங்கள் கற்பனை மிகவும் அழகு வாழ்த்துகள்//

விரைவில் அடுத்த பகுதி வருகிறது. தங்களைக் காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//“ஒன்னும் நடக்கல. நாங்க ஜஸ்ட் ப்பிரண்ஸ்’தான். நீ ஏதும் தப்பா எடுத்துக்காத. ஏதாவது இருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா?”
/

//இப்படிதான் முதலில் ஆரம்பமாகும்//

:) இருக்கலாம்...