வெள்ளி, 5 டிசம்பர், 2008

யவன ராணி – சாண்டில்யன்

முன்னுரை
சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.

கதையோட்டம்
ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராடுகிறான். டைபீரியஸ் படைத்தலைவனுக்கு மயக்கத் துளிகளைக் கொடுத்து யவனர் கப்பல் ஒன்றில் அனுப்பிவிடுகிறான். கப்பல் பயணத்தில் இளஞ்செழியன் பல வாறான இன்னல்களுக்கு ஆளாகினாலும், அத்தனையும் வெற்றிக்கொண்டு தாயகத்திற்குத் திரும்புகிறான். ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி படைத்தலைவன் மேல் காதல் கொண்டு அவனுக்கு பல வழிகளில் உதவி புரிகிறாள். ஏற்கனவே பூவழகியிடம் இதயத்தைப் பறிக்கொடுத்த இளஞ்செழியன் யவன ராணியின் அழகில் தடுமாறவே செய்கிறாள். இறுதியாக, இளஞ்செழியன் வகுத்த போர் திட்டத்தால் கரிகாலன் வெற்றியுடன் அரியணையில் அமருகிறான். யவண ராணி டைபீரியஸால் கொல்லப்படுகிறாள். இளஞ்செழியன் பூவழகியை மணந்து இன்பமாக வாழ்கிறான்.

காதல்
இந்நாவலில் அக்காலத்து தமிழர்களின் செல்வமும், வீரமும், திறமையும், தந்திரங்களும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இருப்பினும், நாவலைப் படித்து முடித்தப் பிறகு யவன ராணியின் காதலும் தியாகமுமே மனதில் மேலோங்கி நிற்கிறது. தமிழகத்தில் ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி தமிழனான இளஞ்செழியன் மீது மையல் கொள்கிறாள். படைத்தலைவன் மீது அவள் கொண்ட காதல், சொந்த நாட்டையும் கடமையையும் மறக்கச் செய்கிறது. யவன ராணி தனது இலட்சியத்தை விட தான் மனதால் வரித்திருக்கும் படைத்தலைவனின் இலட்சியத்தை நிறைவேற்ற அரும் பாடுபடுகிறாள். இதனால் ராணியாக இருந்தும் டைபீரியஸால் அரண்மனையிலேயே சிறை வைக்கப்படுகிறாள். பல சோதனைகளைச் சந்தித்த போதும் ராணியின் காதல் சிறிதும் உறுதி குலையவில்லை. படைத்தலைவனின் மனதில் பூவழகி இருப்பதை அறிந்திருந்தும் அவள் அவனை விரும்புவதை நிறுத்தவில்லை. தன் காதலின் மீது அவளுக்கிருந்த உறுதி வியப்பளிக்கிறது. உயிருக்கே அபாயம் விளையும் தருணத்தில் கூட அவள் படைத்தலைவனுக்கு உதவுதை பேருவகையாக, மனைவி கணவனுக்குச் செய்யும் கடமையாகக் கருதுகிறாள். இறுதியாக கடமையை மறந்து தேச துரோகம் செய்தமைக்காக டைபீரிஸால் கொல்லப்படுகிறாள். அவள் இறுதி மூச்சி படைத்தலைவனின் அணைப்பில் நிற்கிறது. யவன ராணியின் காதலும் தியாகமும் மகத்தானது. அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

முடிவுரை
சாண்டில்யன் இந்நாவலுக்கு மற்ற பெயர்களை விடுத்து ‘யவன ராணி’ என்று பெயர் வைத்தமைக்கு அர்த்தம் இருக்கவே செய்கிறது. யவன ராணியின் தியாகம் படைத்தலைவன் திறமையையும், கரிகாலன் வீரத்தையும், பூவழகியின் அழகையும் மிஞ்சி நிற்பதை யாராலும் மறுக்க முடியாது. ராணியின் காதல் அவளைப் போலவே அழகானது. தான் காதலித்தவன் தன்னை முழு மனதோடு காதலிக்கவில்லை என்பதை அறிந்தும் அவள் அவனை வெறுக்கவோ அவன் மீது கோபப்படவோ இல்லை. மாறாக, அவனுக்குப் பல வகைகளில் உதவி புரிந்து உறுதுணையாக இருக்கிறாள். யவன ராணியின் காதல் மரணத்தையும் மிஞ்சி நிற்கின்றது. நாவலில் விமர்சிப்பதற்கு பல விசயங்கள் இருப்பினும் யவன ராணியின் காதலை மட்டுமே சிறப்பித்துக் கூறுவதற்கு மன்னிக்கவும். என்னைப் பொருத்தமட்டில் யவன ராணியின் காதல் தியாகத்திற்கு நாவலில் காணப்படும் எவரும், எதுவும் இணையாகாது!

9 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அருமை...

மு.வேலன் சொன்னது…

அருமையான பதிவு, வாழ்த்துக்கள்!

சாண்டில்யனின் 'யவன ராணி'யை பிழிந்து, சுவைகெடாமல் பழரசமாய் கொடுத்தமைக்கு நன்றி!

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

விக்னேஸ்வரன் அவர்களே, அருமையாகத்தான் சாண்டில்யன் எழுதியுள்ளார்... மிக அருமையான் நடை...கதையும் கூட...

வேலனின் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறுவது போல் 'யவன ராணி'யை முழுமையாகப் பிழியவில்லை. இன்னும் விமர்சிப்பதற்கு நிறைய இருக்கிறது. அதில் ஒரு பகுதியான யவன ராணியின் காதலையே அடியேன் எழுதியுள்ளேன். பழரசம் வேண்டுமென்றால், அது சாண்டில்யனிடம் தான் கிடைக்கும். இவ்விடம் பழத்தின் ஒரு பகுதியே உள்ளது.

பெயரில்லா சொன்னது…

saandilyan paatri naam vivathikumbothu,
yavana raani unggal kaiyil irunthathu
naan arinthathe..
Oru rasiganaai enai avar ematravillai..
Avarathu eluthu unggalai kavarum ena ninaten..Nirubithar,,
Nirubanamaagivitathu..
Vaaltugal Bavaness..

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் ராஜ்மகன்,
உங்கள் கருத்துக்கு நன்றி. சாண்டில்யனிடம் எப்பொழுதுமே எனக்கு ஈடுபாடு உண்டு. அருமையான எழுத்தாளர்... உங்களுக்கும் அவரிடம் அதீத ஈடுபாடு உண்டு என்பதை அறிவேன். நீங்கள் வலைப்பதிவை தொடங்கி அவரைப் பற்றி மேலும் எழுதலாமே?

muralidharan சொன்னது…

arumaiyana padivugal. Sandilyanin rasigargal ulagam muzhuvathum iruppathu viyappillai. oru thagaval., thiru.sandilyanin mudhal sarithira novel "jeeva boomi" . Ithu andraya "RaniMuthu" novelil velivanthathu. Athil matume avarin photo irukkum

வெற்றிவேல் சொன்னது…

நான் படித்த புத்தகங்களில் யவன ராணியைத் தான் குறிப்பிடுவேன், பொன்னியின் செல்வனில் கூட சில முரண்பாடுகளை கண்டேன்...ஏனெனில் ஈழத்து ராணிக்கும், பந்திய மன்னனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதைக் குறிப்பட வில்லை... ஈழத்து ராணி சோழனின் காதலி.... ஆனால் யவன ராணியில் அத்தகைய எந்த குறையும் இல்லை. நானும் யவன ராணியின் காதலையே குறிப்பிடுவேன்.... கதையைப் படித்த, அன்றைய இரவு நான் உறங்கவே இல்லை. அவளது காதலில் உருகிவிட்டேன். எனக்கு அப்படி ஒருத்தி இல்லை எனபதையும் நினைத்து வருந்தினேன்...

Unknown சொன்னது…

I am reading yavana rani now and i find it very difficult to keep that away. Thiru. Saandilyan yennai Illancheziyanodu payanicka seikirar. Kallathalum Azhiyamal nammodu kalanthu ullar Thiru. Saandilyan

Unknown சொன்னது…

I am reading yavana rani now and i find it very difficult to keep that away. Thiru. Saandilyan yennai Illancheziyanodu payanicka seikirar. Kallathalum Azhiyamal nammodu kalanthu ullar Thiru. Saandilyan