ஐந்து வயது குழந்தை
அவள். அவளுக்கு எதுவும் தெரியவில்லை. பெற்றோர் சண்டை, குடும்பப் பிளவு, இப்போது
பாட்டி வீட்டில் அடைக்கலம். எதுவும் அவளுக்குப் புரியவில்லை. வீடு நிறைய
சொந்தங்கள், ஓடியாடும் குழந்தைகள், அனுதினமும் விளையாட்டு, அடிக்கடி வந்து போகும்
தந்தை, பாசம் பொழியும் பாட்டி என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். புதிய இடத்தின்
சந்தோசத்தில் அவள் தாயை மறந்திருந்தாள்.
தினமும் சேலையுடன்
இருக்கும் பாட்டியின் முந்தானைத்தான் அவளுக்கு வழிக்காட்டி. அதனைப்
பற்றிக்கொண்டுதான் அவள் எங்கும் செல்வாள். சமயங்களில் வீடே அல்லோலங்கல்லோலப்படும்.
அவளுக்கு ஏனென்று தெரியாது. பாட்டி அவளை ஏதாவது அறையில் பூட்டி வைப்பாள். வெளியே
வராமல் ஒளிந்துக்கொள்ளச் சொல்வாள். அறைக்கு வெளியே அழுகுரலும் ஏச்சுப்பேச்சுகளும்
கேட்கும். தாயின் குரல் போலவே ஒளிக்கும். அவளுக்கு வெளியே செல்ல ஆவலாக இருக்கும். உள்ளுக்குள்
ஒருவித பயம் சூழ்ந்துக்கொள்ளும். மீண்டும் பாட்டி வரும் வரை திருதிருவென
விழித்துக்கொண்டிருப்பாள்.
பாட்டி வருவாள், எதுவும்
கூறமாட்டாள். இவளும் எதுவும் கேட்கமாட்டாள். அம்மா வந்திருக்கிறாள் என்பது மட்டும்
தெரியும். ஆனால், அம்மா எங்கே என்று கேட்கும் தைரியம் அவளுக்கு வரவேயில்லை.
அவளுக்கு யாரும் சோறூட்டியது இல்லை. தானாகவே சிந்திச் சிதறி உண்பாள். எப்போதாவது
பாட்டி குளிப்பாட்டுவாள். மற்ற நேரங்களில் குளிருக்குப் பயந்து அவளாகவே கொஞ்சம்
தண்ணீரை மேனி எங்கும் தெளித்துக்கொண்டு குளித்துவிட்டது போல் பாசாங்குச் செய்வாள்.
அப்படியும் ஒருநாள் பாட்டி அதனைக் கண்டுப்பிடித்து மற்றவர்களிடமும் சொல்லி மானத்தை
வாங்கிவிட்டாள்.
சமயங்களில் பாட்டி
அக்கம் பக்கத்துப் பெண்கள் வீட்டில் கதைப்பேச சென்றுவிடுவாள். முந்தானையைப் பிடித்துக்கொண்டே
அவளும் செல்வாள். அந்தப் பெண்கள் அவளைப் பரிதாபத்தோடு பார்ப்பார்கள். அவர்களது
பார்வை அவளை என்னவோ செய்யும். இன்னும் சில சமயங்களில் அவள் தூங்கிக்கொண்டிருப்பாள்.
பாட்டி இவளை விட்டுவிட்டுச் சென்று விடுவாள். இடையில் அவள் கண்விழித்தால்,
அவ்வளவுதான்! பத்து வீடுகள் தள்ளி அவளது அழுகுரல் கேட்கும். அவளுக்கு எல்லாமே
பாட்டிதான். பாட்டி என்ன செய்தாலும் பார்ப்பாள். அது போலவே செய்வாள். அதிகம்
பேசமாட்டாள்.
பாட்டிக்கு ஒன்பது
பிள்ளைகள். எண்ணிலடங்கா பேரப்பிள்ளைகள். அதில் அவளும் ஒருத்தி. மற்ற
பேரப்பிள்ளைகள் வந்தால் அவளுக்கு மவுசு குறைந்துவிடும். அவளுக்குப் பிடித்த
அனைத்துத் தின்பண்டங்களும் மற்றவர்களுக்குப் பாட்டி வாரிவாரி வழங்குவாள். அவளுக்கு
அது எரிச்சலாக இருக்கும். எதனையும் காட்டிக்கொள்ளாமல் அவர்களுடன் விளையாடுவாள். சயங்களில்
விளையாட்டில் சண்டை வரும். அவளும் சண்டைப்போடுவாள். விட்டுக்கொடுக்க மாட்டாள். அவளது
வாயை அடைக்க மற்றவர்கள் பயன்படுத்தும் ஒரே மந்திரம், ‘உனக்குத்தான் அம்மா இல்லையே!
இரு நான் என் அம்மாக்கிட்டே சொல்றேன்!’
அவள் அழுவாள். என் அம்மா
எங்கே? தேடுவாள்…யாரிடமும் கேட்க மனம் வராது. குப்புறப்படுத்து
அழுவாள். பாட்டிக்கு எதுவும் தெரியாது. அவள் மனதில் ஏற்பட்ட காயம் யாருக்குமே
தெரியாது. அவளும் சொல்லவில்லை. சொல்ல விரும்பவில்லை. சொந்தங்களுடன் பழகுவதை அந்த
வயதிலிருந்தே குறைத்துக்கொண்டாள். பாட்டி அதனை அவ்வளவாக கவனிக்கவில்லை.
பக்கத்து வீடுகளில்
அவளின் வயதை ஒத்த பிள்ளைகள் இருந்தனர். அதில் ஒருத்தி பாலர் பள்ளிக்குச்
சென்றுவந்தாள். எப்போதும் பள்ளிச் சீருடையுடன் வீட்டின் அருகில் அவள் தாயுடன்
விறகு எடுக்க வருவாள். அவள் பெயர் கல்யாணி. அவள் கல்யாணியைப் பார்ப்பாள்,
சிரிப்பாள், பேச மாட்டாள். அவளுக்கும் சீருடைப் போட ஆசை. பள்ளிக்குப் போக ஆசை. பாட்டியிடம்
கேட்டாள். அடுத்த வருடம் போகலாம் என்று பாட்டி சொன்னாள்.
அடுத்த வருடம் வந்தது.
சீருடை, புத்தக்கை, காலணி என அனைத்தும் புதிது. சித்தப்பா கூட்டிச் சென்று
வாங்கிக்கொடுத்தார். முதல்நாள் காலுறையைக் கூட சரியாகப் போட அவளுக்குத்
தெரியவில்லை. பாட்டிதான் சீருடை போட்டு, தலைவாரிவிட்டாள். அண்ணன் அவளை
வகுப்பறையில் விட்டுவிட்டு தமது வகுப்புக்குச் சென்றுவிட்டான். அனைத்தும் புதிது,
அனைவரும் புதியவர்கள். பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர்கள் அங்கு வந்திருந்தனர். அவள்
மட்டும் தனியே நின்றாள். வெகு நேரத்திற்குப் பிறகு பாட்டி வந்தாள். ஆசிரியைப்
பார்த்து ஏதேதோ பேசிவிட்டுச் சென்றுவிட்டாள். மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள்
வகுப்பு முடியும் வரை கூடவே இருந்தனர்.
என் தாய் தந்தை எங்கே?
ஏன் வரவில்லை? மீண்டும் சிறியதாய் ஒரு கீறல். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. அவள்
தன்னைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்தால். புதிய சூழலைக் கண்டு
அழும் பிள்ளைகள். நொடிக்கொரு தரம் தன் பெற்றோர் இருக்கின்றனரா என்று நோட்டமிடும்
குழந்தைகள், பக்கத்தில் உள்ளவர்களுடன் நட்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும்
சிலர் அன்றைய தினம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அவள் அழவில்லை. ஆனால், நொடிக்கொரு
தரம் வாசலை நோக்கி வராத உறவைத் தேடிக்கொண்டிருந்தாள்.
-தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக