வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 7)




அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். இன்று மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) மரணதண்டனையை எதிர்த்து நடந்துக்கொண்டிருக்கும் பட்டினி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஏற்கனவே இராஜ்குமார் அண்ணாவிடம் உறுதியளித்திருந்தேன். பட்டினி போராட்டம் என்பதை நினைவில் வைத்திருந்ததால் தானோ என்னவோ காலையிலேயே எனக்குப் பசிக்கத் தொடங்கிவிட்டது.

நான் பசி தாங்க மாட்டேன் என்பதை தோழர் அருண்ஷோரி முன்னதாகவே அறிவார். “உண்மையிலேயே கலந்துக்கொள்ளப் போகிறீர்களா?” என இரண்டு மூன்று தடவை நேற்று இரவே கேட்டுவிட்டார். கொடுத்த வாக்கிலும், கொண்ட இலட்சியத்திலிருந்தும் பின் வாங்குவது கோழைத்தனமானது. பசி தானே? அடக்கிக்கொள்ளலாம் என உறுதியாக இருந்தேன். கவிதாவின் சித்தி, “கொஞ்சம் சாப்பிட்டு போகலாமே?” எனக் கெஞ்சலாகக் கேட்டார். “வேண்டாம் சித்தி. சாப்பிட்டால் அதற்குப் பெயர் பட்டிப்போராட்டம் அல்ல,” என தெளிவுப்படுத்திவிட்டு, பசியை அடக்கிக்கொண்டு இருந்தேன்.

அருண்ஷோரி இரு சக்கர வண்டியில் எம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தார். நேற்றிரவு பெய்திருந்த மழையால் சாலையெல்லாம் சேராக இருந்தது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காலையிலேயே சென்னையின் அவசர வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. காலை மணி 9.30 போல் பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தோம். அங்குப் போடப்பட்டிருந்த நாற்காலியில் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். இன்னும் சிலர் நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளை வாசித்துக் கொண்டிருந்தனர். 80% பேர் கறுப்பு ஆடைகளையே அணிந்திருந்தனர்.

போராட்டம் நடக்கும் இடத்தின் வாசலில் மூன்று தூக்குக் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன. போராட்டம் நடக்கும் இடத்தின் அருகில் மரணதண்டனைக்கு எதிரான கண்காட்சி கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நான் வாசலில் நுழையும் போதே சிலர் வித்தியாசமாகப் பார்ப்பதாய் பட்டது. எல்லாம் மனப்பிராந்தி என அந்த நினைப்பை உதறித் தள்ளிவிட்டு அருண்ஷோரியுடன் கதைக்க முற்பட்டேன். கண்காட்சி கூடாரத்தைப் பார்வையிட்ட பிறகு நானும் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். ஈழத்துப் பாடல்கள் சில அவ்விடம் ஒலிப்பரப்பப்பட்டது.

சரியாக காலை 10 மணிக்கு பட்டினிப் போராட்டம் தொடங்கியது. சில பாடல்கள், மேடைப் பேச்சுகள் என நேரம் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது. “என்னையும் பிடிச்சிட்டு வந்து பட்டினி கிடக்க வச்சுட்டீங்களே,” என அருண்ஷோரி பாவமாகக் கேட்டார். “பின்னால் தண்ணீர் இருக்கிறது. தாகம் எடுத்தால் எங்கே சென்று குடித்துக்கொள்ளுங்கள்,” என பரிவுடன் கூறினார். “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,” என அதனையும் தவிர்த்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். சுற்றிலும் ஆண்கள்... என்னைத் தவிர வேறு ஒரு பெண் கூட அவ்விடம் இல்லை. இம்மாதிரியான போராட்டங்களில் பெண்கள் ஏன் முன்வருவதில்லை என வருத்தமாக இருந்தது. எனது மன வருத்தத்தை அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தினேன்.

“பெண்கள் யாரும் வருவதில்லையா?” என அவர் நிகழ்வு ஏற்பாட்டாளர் ஒருவரிடம் கேட்டார். “நேற்றைய முன்தினம்தான் பெண்கள் இயக்கம் ஒன்று பட்டினி போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். நிறையப் பெண்கள் வந்திருந்தனர்,” என அவர் கூறியது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர் என சிலர் என்னை விசாரிக்க ஆரம்பித்தனர். ஒருசிலரிடம் மட்டும் உண்மையை கூறி பலரிடம் மேலோட்டமாக அருண்ஷோரியே எம்மை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் வந்து அருண்ஷோரிடம், “இவரை செங்கொடி பாசறையைப் பிரதிநிதித்துப் பட்டினி போராட்டத்தில் கலந்துக் கொண்டவர் என அறிவிக்கலாமா?” என கேட்டார். அருண்ஷோரி எம்மிடம் அனுமதி கேட்டார். கூடவே அதற்கான விளக்கமும் அளித்தார். சரியென்று தலையாட்டினேன். அட, நாமும் ஒரு கட்சிக்குத் தலைவியாகிவிட்டோமே என மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். சற்று நேரத்தில் மற்றொருவர் வந்து அருண்ஷோரியுடன் என்னவோ கதைத்துவிட்டுச் சென்றார். அருண் மெல்ல என் காதருகில், “உங்களிடம் நிதி கேட்கலாமா எனக் கேட்டார்கள்,” என்றார். நான் சிரித்துக்கொண்டே, “என்னால் அதிகமாக ஒன்றும் கொடுக்க முடியாது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்,” என்றேன். அவ்விடம் வைக்கப்பட்டிருந்த நிதி உண்டியலில் எம்மால் இயன்றதைப் போடுகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் பார்த்துவிட்டார். “தெரிந்திருந்தால் பெரிய உண்டியலாக வைத்திருப்போமே?” என கிண்டலடித்துவிட்டுச் சென்றார்.

தோழர் ஒருவர் அருகில் வந்து, “நீங்கள் பவனேஸ்வரி துரைசிங்கள் தானே?” என எம் முழுப்பெயரை உச்சரித்ததும் நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். சென்னையில் யாருக்கு நம்மைத் தெரியும்? “ஓம், நீங்கள்?” என திரும்பக் கேட்டேன். “நான் தயாளன். உங்கள் முகநூல் நண்பர். பரணி ஜெ.சி எனது மாமா. அவரை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே?” என விளக்கினார்.
“ஓம். அவரை நன்றாகத் தெரியும். உங்களைத்தான் தெரியவில்லை,” என தயக்கத்துடன் கூறினேன். “உண்மைதான். எல்லாருக்கும் உங்களைத் தெரியும். உங்களுக்கு எங்கள் அனைவரையும் தெரிய வேண்டும் என்பதில்லையே. உங்களை இங்குச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் முகநூலில் எழுதும் அனைத்தையும் நான் மறவாது படிப்பேன். தொடர்ந்து எழுதுங்கள்,” என அவர் உற்சாகமாக பேசினார்.

சிறிது நேரம் அவரிடம் கதைத்துக்கொண்டிருந்தேன். அப்போது கீரா அண்ணா எம்மை பார்க்க அவ்விடம் வந்திருந்தார். அவரும் அவரது தோழர்கள் சிலருக்கு எம்மை அறிமுகம் செய்து வைத்தார். “தங்கை சாப்பிடாமல் களைத்துவிட்டாள்,” என பரிவுடன் கூறினார். பட்டினிப் போராட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டது. சிறிது நேரம் அங்கிருந்த சிலருடன் கதைத்துவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்தோம். அவ்விடம் இருந்த தள்ளுவண்டி கடையில் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. பொரித்த காளான்கள் தட்டொன்றை வாங்கி எம்மிடம் கொடுத்தார். காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் அப்பொழுதும் எம்மால் சாப்பிட முடியவில்லை.

அதனை அருண்ஷோரியிடம் கொடுத்துவிட்டு எமது கைத்தொலைப்பேசிக்குப் பணம் போட அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றேன். 200 ரூபாய்க்குப் பணம் போடச் சொன்னேன். அதனைவிட குறைவான பணமே கைப்பேசியில் வந்து சேர்ந்தது. பணம் குறைகிறது என கடைக்காரரிடம் கூறினேன். “வரி சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் குறைவாகத்தான் வரும்,” என்ற பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது. “இதையும் விட்டு வைக்கலையா? நல்ல நாடு!” என உரக்கக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். கடையிலிருந்தவர்கள் திரும்பி என்னைப் பார்த்தனர். நான் அதனை பொருட்படுத்தவில்லை. கீரா அண்ணாவிடமும் அருண்ஷோரியிடமும் நடந்ததைக் கூறினேன். “இங்கு இப்படித்தான்,” என்று சமாதானப்படுத்தினர்.

இரு சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தோம். அருண்ஷோரியின் வண்டி மோசமாக தூசு படிந்துக் கிடந்தது. மலேசியாவில் ஒரு மாதம் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் கூட இவ்வளவு தூசு படிந்திருக்காது. அவர் அதனைத் தட்டிச் சுத்தம் செய்யவும் நான் கீரா அண்ணாவின் வண்டியில் ஏறிக் கொண்டேன். அந்த மாலை வேளையில் சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. ஆட்டோ, மிதிவண்டி, இரு சக்கர வண்டி என அனைத்தும் குறுக்கும் நெருக்குமாக ஓடிக் கொண்டிருந்தன. அவ்வேளையில் அந்தச் சாலையில் பயணிப்பதே ஆபத்தானதாகத் தோன்றியது.

மிகவும் நெருங்கியும் ஒழுங்கில்லாமலும் வந்த வாகனங்கள் மோதி விடுவது போல் பாவனைக் காட்டின. சேலை கட்டியிருந்ததால் இந்தியப் பெண்கள் போல் வண்டியில் ஒரு பக்கமாகவே நான் அமர்ந்திருந்தேன். அந்த வேளையில் ஆட்டோக்கள் இரண்டு எமது முட்டியை லேசாக உரசிச் சென்றன. இன்னும் வேகமாக வந்திருந்தால் என்னை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். எப்போது அலுவலகம் சென்று சேர்வோம் என்ற நிலைமையானது. மழை வேறு லேசாகத் தூற ஆரம்பித்தது.

ஒரு குறுக்குச் சந்தொன்றில் நுழைந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் கீரா அண்ணா என்னை இறங்கி சற்றுத் தூரம் தள்ளி நிற்கச் சென்றார். நான் அவருக்குக் காத்திருக்கும் வேளையில் அருண்ஷோரி வந்துவிட்டார். நான் உடனே அவரது வண்டியில் ஏறிக்கொண்டேன். “கீரா அண்ணாவுடன் வரும் போது இரண்டு ஆட்டோ எனது கால் முட்டியை உரசிச் சென்றுவிட்டன. நான் உங்களுடனேயே வருகிறேன்,” என்றவுடன் அவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். “உரசிவிட்டுத் தானே சென்றார்கள்? இங்கு இது சகஜம்,” என்றார்.

கருத்துகள் இல்லை: