திங்கள், 14 நவம்பர், 2011

பெண் ஏன் அடிமையானாள்? -தந்தை பெரியார்




“பெரியாரைப் படியுங்கள்,” என பல முறை நண்பர் அருண்ஷோரி வற்புறுத்திக் கொண்டிருந்தார். தமிழகம் சென்றிருந்த வேளையில் எனக்கு விரும்பம் இல்லாத போதிலும், “நீங்கள் முதலில் படித்துப் பாருங்கள்,” என வலுக்காட்டாயமாக இந்த நூலை வாங்க வைத்துவிட்டார். வாங்கி பலநாட்கள் அப்படியே கிடந்த வேளையிலும், தொடர்புக் கொள்ளும் போதெல்லாம், “படித்துவிட்டீர்களா? படித்துவிட்டீர்களா?” என அவர் கேட்க, படித்துத்தான் பார்ப்போமே என புத்தகத்தில் மூழ்கினேன்.

முன்னுரை
இந்நூல் பெண்கள் எந்தெந்தக் காரணங்களால் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதனைச் சுட்டிக்காட்டி, அதனிலிருந்து விடுபட அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை முக்கியக் கருவாகக் கொண்டு மொத்தம் 10 அத்தியாயங்களில் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1934-இல் வெளிவந்துள்ளது.

1. கற்பு
கற்பு எனப்படுவது பெண்களுக்கே உரித்தானது போன்ற தோன்றத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துவிட்டனர். இதனால், தன் விருப்பங்களுக்குச் சமாதிக் கட்டிவிட்டு ‘கற்புடையவள்’ என்ற பேர் வாங்குவதற்காக ஒரு பெண் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

2.வள்ளுவரும் கற்பும்
‘பெண்கள் சொல்லைக் கேட்கக்கூடாது’, ‘அறியாமை என்பது பெண்களின் ஆபரணம்’, ‘பெண்கள் சுய விருப்பப்படி நடக்கக் கூடாது’ என பொருள் பதிக்கும் குறள்கள் பெண்களைத் தாழ்மைப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவற்றைப் பொருட்படுத்தாது, இரு பாலருக்கும் சமயுரிமை, சம வலிமை இருப்பதை பெண்கள் உணர வேண்டும் என பெரியார் சுட்டுகின்றார்.

3. காதல்
காதல் ஒருவரிடம் ஒரு முறைதான் வரும் என்பதை பெரியார் வன்மையாக மறுக்கிறார். அது எப்போது வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் வரலாம். ஒருவரையே காதலித்து, அவரையே மணந்து, காதலின் காரணமாக (கட்டாயத்தின் பேரில்) அவருடனேயே நடத்தப்படும் வாழ்க்கை ஒரு நடிப்பு போல் இருக்கிறது. காதல் என்பது தனது சுய நன்மையை, மனத்திருப்தியை வேண்டித்தான் ஏற்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை. தமக்குத் தேவைப்படும் மனத்திருப்தி கிடைக்காத பட்சத்தில் ஆண் பெண் இருபாலரின் காதல் மாறக்கூடியதாய் இருக்கிறது. இந்த மாற்றத்தைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, ‘காதல்’ ‘புனிதம்’ என்ற பேரில் தங்களைத் தாங்களே இம்சித்துக் கொள்வது அழகல்ல என பெரியார் கூறுகிறார்.

4. கல்யாண விடுதலை
இந்நூல் எழுத்தப்பட்ட காலத்தில் கல்யாண விடுதலை என்பது கடினமான ஒன்றாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களுக்கு ஒத்துவராத திருமண பந்தத்திலிருந்து தங்களைத் தாரளமாக விடுவித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தெய்வீக பந்தம் எனும் பெயரில் பிடிக்காத கல்யாணப் பந்தத்தில் அகப்பட்டால் அதிலிருந்து பெண்கள் துணிந்து விடுபட முயல வேண்டும் என பெரியார் வேண்டுகிறார்.

5. மறுமணம் தவறல்ல
‘மணம்’ என்பது மனமக்கள் தங்கள் வாழ்க்கை வசதிக்காகச் செய்துக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமாக பெரியார் கருதுகிறார். எனவே, அன்பும் ஆசையும் இல்லாத, அல்லது நமது விருப்பு வெறுப்புகளை அறிந்து நடந்துக்கொள்ள இயலாத துணை கிடைக்குமாயின், தாரளமாக நாம் மறுமணம் செய்துக்கொள்ளலாம். பெண்களுக்கும் இது பொருந்தும் என பெரியார் சொல்கிறார்.

6. விபச்சாரம்
விபச்சாரம் என்பது பெரும்பாலும் பெண்களின் ஒழுக்கக்கேட்டைக் குறிக்கும் சொல்லாகவே இருந்து வருகிறது. ஆண்களுக்கும் இந்தச் சொல்லுக்கும் இதுவரையில் எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. உண்மையில், ஆண் இல்லாமல் பெண் விபச்சாரம் செய்ய இயலுமா? அப்படிச் செய்ய முடியாத சூழலில் ஆண்களுக்கும் இதில் சரி பாதி பங்கு உள்ளது தானே? அப்படியாயின்  அவர்களையும் விபச்சாரர்கள் என்று ஏன் அழைப்பதில்லை? எனவே விபச்சாரம் என்பது பெண்களை அடிமைகளாக வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் சொல் என பெரியார் விளக்குகிறார்.

7. விதவைகள் நிலைமை
பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் விதவைகள் மறுமணத்தை பெரியார் வலியுறுத்துகிறார். அன்றைய இந்தியச் சூழலைக் காணும் போது குழந்தைத் திருமணங்கள் பெருவாரியாக நடைப்பெற்று வந்தன. எனவே, இளம் விதவைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காமல் இருந்தது. மேலும் விதவைகள் பல வகையில் இம்சிக்கப்பட்டு வந்தனர். அவர்களது இல்லற வாழ்வு எனும் கனவு பலிக்காமலே செத்தது. அவளாக வேறொருவனை விரும்பினாலும் அவளுக்கு மறுமணம் செய்விக்க யாரும் முன் வராத காலம் அப்போது இருந்தது. அதனை உடைத்தெறிந்து பெண்கள் தைரியமாக இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என பெரியார் போராடுகிறார்.

8. சொத்துரிமை
பெண்களுக்குச் சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படாமல் இருப்பதனாலேயே அவர்களை ஆண்கள் எளிதில் அடிமைப்படுத்துகின்றனர். எனவே, பெண்கள் துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என பெரியார் தூண்டுகிறார்.

9. கர்ப்பத் தடை
கர்ப்பம் தரிப்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை தடை செய்து அவளை அடிமையாக்குகிறது. குழந்தைகள் இருப்பதால் அது ஆண்களையும் பல சமயங்களில் தயங்க வைக்கிறது. எனவே, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என பெரியார் சொல்வது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றால் இருக்கிறது. இந்த மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டதோ என்றும் யோசிக்க வைக்கிறது. குழந்தைகளால் பொருளாதாரச் சிக்கலோ அல்லது வேறு பிரச்சனைகளோ ஏற்படுமாயின் அதனைக் களைய முனைய வேண்டும். அதனை விடுத்து கர்ப்பத் தடையை ஆதரிப்பது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதற்குச் சமம் என்பது எமது தனிப்பட்டக் கருத்து.

10. பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை அழிய வேண்டும்’
பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் ஒரு போதும் உண்மையாகப் போராட முடியாது என பெரியார் கூறுகிறார். ‘ஆண்மை’ உலகில் உள்ள வரையில் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்கிறார். ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என பெரும்பாலான பெண்கள் எண்ணம் கொண்டிருக்கின்றனர். எனவே முதலில் ஆண்மை அழிய வேண்டும். அதற்கு முன்பு சொன்னது போல் பெண்கள் பிள்ளைப் பெறும் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் பெரியாரின் இந்தக் கூற்றையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முடிவுரை
பெண் ஏன் அடிமையாகிறாள்? அவள் அடிமைக் கூண்டிலிருந்து விடுதலைப் பெற என்ன செய்ய வேண்டும் என பெரியார் தமது கருத்துக்களை இந்த நூலில் பதிய வைத்திருக்கிறார். அவற்றில் சில கருத்துக்கள் நிஜ வாழ்விற்குப் பொருந்தாத ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக கடைசி இரண்டு அத்தியாயத்தில் கூறப்படும் கர்ப்பத் தடை மற்றும் பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும் ஆகிய இரண்டையும் நான் வன்மையாக மறுக்கிறேன். ஏனைய அத்தியாயங்களில் கூறப்படும் கருத்துக்களும் உதாரணங்களும் வரவேற்கக் கூடியவனவாகவே இருக்கின்றன. இதனைப் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் வாசித்தல் நலம்.

2 கருத்துகள்:

Sathyan சொன்னது…

அருமையான பதிவு, சகோதரி. அய்யாவின் கருத்துக்களைச் சிறந்த முறையில் நல்லதை நன்றென்றும், தீதைத் தீதென்றும் சீர்தூக்கிப் பார்த்து இடப்பட்ட இடுகை. வாழ்த்துக்கள்.

பெரியார் அவர்கள் தமிழனுக்குச் சுயமரியாதை, பகுத்தறிவு போதித்து, சாதியச் சேற்றில் உழன்று கிடந்த தமிழர்களை விழிப்படையச் செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஆற்றியபணி போற்றுதற்கும், நாமும் கடைப்பிடித்தற்கும் உரியது.

ஆனால், வள்ளுவரின் பெண்ணடிமைத்தனத்தைத் தூற்றிய அய்யா அவர்களே 72 வயதில் 26 வயதுப் பெண்ணை மணந்தார். அதற்கு அய்யாவின் 'பக்தர்கள்' பல்வேறு விளக்கம் கொடுப்பார்கள்; மேலும் பலவழியில் நியாயப்படுத்துவார்கள். தன்னுடைய சொத்து ஏழைகளுக்குப் போய்ச் சேரவேண்டுமென்றால் எத்தனையோ வழியுண்டு. இதைக் கேள்விக்குட்படுத்தினால் அவர்கள் அவதூறு செய்யப்படுவர்; பகுத்தறிவற்றவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள்.

"நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே" என்று எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தியவன் ஆதித்தமிழன். பெரியாராயினும், வள்ளுவராயினும், வேறு எவரானாலும் குற்றமாயின் குற்றம் குற்றமே. இந்தக் கருத்துத் தவறானாலும் என் குற்றமே; பொறுத்தருள்வீர்:) நன்றி.

து. பவனேஸ்வரி சொன்னது…

இதில் மன்னிப்பதற்கு எதுவும் இல்லை தோழரே. யாராக இருந்தாலும் தவறென்றால் தவறுதான். அதனை நியாயப்படுத்த முயல்வது அறிவின்மை. எனக்கும் கூட அவர் சிறு வயது பெண்ணை மணந்ததில் உடன்பாடு இல்லை. நான் இன்னும் அவரைப் பற்றி முழுமையாகப் படிக்கவில்லை. எனவே அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துக்கொள்ளமல் விமர்சிக்க விரும்பவில்லை. படிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. அப்போது இதனைப் பற்றி மேலும் விவாதிக்கலாம் :)