செவ்வாய், 22 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 2)
“நீங்கள் எப்போதும் இப்படித்தானா?” நான் சாப்பிட்டு முடிந்தவுடன் அவன் திடீரென்று இப்படிக் கேட்டான். அவன் எதைக் கேட்கிறான் என்று அனுமானிக்க முடியவில்லை. இருந்தாலும் அவன் கேட்ட தொனியும் அவனது முகபாவனையும் பார்க்க எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. வாய்விட்டுச் சிரித்து, “என்ன கேட்கிறீர்,” என்றேன். “நீங்கள் அதிகம் பேசுவதில்லை. எப்போதுமே இப்படித்தானா இல்லை நான் அதிகம் பேசிக் கரைச்சல் கொடுக்கிறேனா? எதுவாக இருந்தாலும் இப்போதே சொல்லிவிடுங்கள். முகநூலில் எதையும் எழுதி வைக்காதீர்கள்,” என கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

அவனுக்கு நான் பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தேன். இதற்கு முன்னும் இப்படிச் சிலர் முகநூலில் தங்களைப் பற்றி எழுத வேண்டாம் எனச் சொன்னது நினைவு வந்தது. அவனுக்கு எந்தவொரு வாக்குறுதியும் நான் வழங்கவில்லை. அந்தப் பேச்சிலிருந்து விடுப்பட விரும்பி, “நேரமாகிறது, உள்ளே செல்வோமா?” என எழுந்தேன். அவனும் உடன் எழும்பி வந்தான்.

குடிநுழைவு மற்றும் சுங்கத்துறையினரின் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு பயணிகள் காத்திருக்கும் இடத்திற்குச் சென்றோம். மலேசியாவிலிருந்து வரும் போது கண்ணன்  அண்ணா ‘சரக்கு’ (மது பாட்டில்) வாங்கிவரச் சொல்லியிருந்தார். “நான் மதுபாட்டில் வாங்க வரிவிலக்குக் கடைக்குச் செல்கிறேன். நீங்கள் ஏதாவது வாங்க வேண்டுமா?” எனக் இராஜ்குமாரைக் கேட்டேன். “நானும் வருகிறேன்,” என உடன் வந்தான். உள்ளே விதம் விதமான பாட்டில்களிலும் வர்ணங்களிலும் பல வகையான மதுபான வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் ஒவ்வொரு பாட்டிலாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் என் பின்னாலேயே வந்துக்கொண்டிருந்தான்.

“இதில் இருக்கிற முக்கால் வாசி மதுபானங்களை நான் குடித்திருக்கிறேன்,” என தனது சொந்தப் புராணத்தைப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் அவனை அதிகம் சட்டைச் செய்யாது, பாட்டில்களை நோட்டம் விடுவதிலேயே குறியாய் இருந்தேன். சட்டென்று, “உங்களுக்கு எந்த மதுபானம் பிடிக்கும்?” எனக்கேட்டான். “நான் குடிப்பதில்லை,” ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு, ஒரு மது பாட்டிலை கையில் ஏந்தினேன். “உண்மையாகவா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே,” என்று என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

இவனும் ஒரு புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்து அதன் உள்ளடகத்தை எடைப் போடுபவன்தான் என்பதனை அப்போதே உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் அணிந்திருந்த உடையும், எனது தோற்றமும் அவனை அவ்வாறு எண்ணச் செய்திருக்கலாம். ஒரு வேலை நான் சேலைக் கட்டி வந்திருந்தால் அவன் பார்வை வேறு விதமாக இருக்குமோ என்றுக்கூட எண்ணத் தோன்றியது.

“யாரிடமும் எதற்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் குடிப்பதில்லை. அதற்காக குடித்ததே இல்லை எனக் கூறவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அதன் சுவை எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள குடித்துப்பார்த்திருக்கிறேன். ஒரு முறை குடித்த பானத்தை நான் மீண்டும் சுவைப்பதில்லை. அதன் சுவை எனக்குத் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு இவைகளை நான் தொடுவதில்லை,” என்றேன்.

“எப்போதாவது கூட குடிக்க மாட்டீர்களா?” என்றான். “மாட்டேன்,” என்று உறுதியாகக் கூறினேன். அவன் அதனை நம்புவதாகத் தெரியவில்லை. அவன் நம்பவேண்டும் என நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. அவன் கேட்டக் கேள்விக்கான பதிலை நான் தந்துவிட்டேன். அதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவனைப் பொறுத்ததல்லவா?

கடை முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு ‘சிவாஸ்’ என்ற முத்திரையைக் கொண்ட மதுபானத்தை வாங்கினேன். பின்னர் இருவரும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தோம். அவன் மேலும் ஏதோ பேசினான். அதில் எதிலும் என் மனம் இலயிக்கவில்லை. அவனுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்துச் சென்னைக்குச் சென்றதும் கண்டிப்பாகத் தொடர்புக்கொள்ளச் சொன்னான். சரி என்று வாங்கிக் கொண்டேன்.

திடீரென புதிய எண்களிலிருந்து எனது கைப்பேசிக்குக் குறுந்தகவல் வந்தது. அதற்கு பதில் எழுதாமல் வைத்துவிட்டேன். சற்று நேரம் சென்ற பிறகு மீண்டும் அதே எண்களிலிருந்து இன்னொரு குறுந்தகவல் வந்தது. அதையும் படித்துவிட்டு அப்படியே வைத்தேன். இப்பொழுது அதே எண்களிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. புதிய எண், புதிய ஆணின் குரல். யாராக இருக்கும்? கேட்டேன். “நீங்கள் கடைசியாக யாருடைய பெயரை உச்சரித்தீர்கள்?” எனக் கேட்டார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “தெரியவில்லை, சொல்லுங்கள்,” என்றேன். “சென்னைக்கு எத்தனை மணிக்குச் செல்கிறீர்? சுங்கத்துறை பரிசோதனை எல்லாம் முடித்தாகிற்றா?” என மிகவும் நெருக்கமானவர் போல் பேச ஆரம்பித்தார். எப்படி எமது பயணம் இந்த அந்நிய நபருக்குத் தெரிந்தது என்ற குழப்பத்துடன், குரல் தடிக்க, “நீங்கள் யாரென்று சொல்லுங்கள். இல்லையேல் எம்மை அழைத்துத் தொந்தரவு செய்ய வேண்டாம்,” எனக் கூறவும் அவர் சற்று இறங்கி வந்தார்.

“நான்தான் சூர்யா,” என்றார். “எந்த சூர்யா,” எனப் பட்டெனக் கேட்டேன். “சற்று நேரத்திற்கு முன்னர் எனக்கு நன்றி கூடச் சொன்னீர்கள். அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்கள் பயணப் பைகளை வைக்கும் இடத்தில்,” என அவர் சொல்லும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது. “ஓ, சூர்யா. சொல்லுங்கள்! உங்களுக்கு எப்படி என்னுடைய எண்கள் கிடைத்தது,” என சற்று வியப்புடன் கேட்டேன். “ரொம்பெ சுலபம். நான் ஏர் ஆசியாவில் வேலை செய்கிறேன். சற்று முன்னர்தான் உங்கள் பயண விபரங்களைச் சரிபார்க்க உங்கள் கடப்பிதழைக் கொடுத்தீர்கள். அதிலிருந்து எங்கள் கணினியில் உங்கள் விபரங்களைப் பெறுவது அவ்வளவு கடினமான வேலை இல்லை,” என சிரித்துக்கொண்டே கூறினார்.

“ஓ, அப்படியா. இப்படித்தான் மற்ற பயணிகளின் விபரங்களைப் பெற்று அழைத்துப் பேசுவீர்களோ?” என நான் விளையாட்டாகக் கேட்க அவர் அரண்டுவிட்டார். “ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க. சத்தியமா நான் இங்க வேலை செய்த நாளிலிருந்து இன்றைக்குத்தான் முதல் முதலா ஒரு பயணியோட எண்களை எடுத்து அழைக்கிறேன். அதுவும், நீங்க அழகான தமிழில் என் பெயரைச் சொல்லி நன்றி சொன்னீங்க இல்ல, அது ரொம்பெ புதுசா இருந்திச்சு. ஏதோ, உங்கக்கிட்ட பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் கூப்பிட்டேன். நீங்க எதுவும் தவறா எடுத்துக்காதீங்க,” என கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டார்.

எனக்கு அது தவறாகத் தோன்றவில்லை. சிறிது நேரம் உரையாடினோம். “தனியா போறீங்க, பத்திரமா போயிட்டு வாங்க. என்னைத் தனியே போகச் சொல்லி கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டேன். இருந்தாலும் உங்களுக்கு ரொம்பெதான் தைரியம்,” என்றார். “நான் தனியே போகிறேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையே,” என்றேன். “உங்கள் பயண விபரத்தில்தான் எல்லாமே இருக்கிறதே,” என மீண்டும் சிரித்துக்கொண்டுக் கூறினார். நல்ல ஆள்தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். பழைய நண்பர்கள் போல் சிறிது நேரம் கதைத்துவிட்டு அழைப்பேசியை வைத்தேன்.

இராஜ்குமார் எங்கேயோ சென்று இரண்டு குவளைகளில் காப்பியோடு வந்தான். அதில் ஒன்றை என்னிடம் நீட்ட, “ஐயோ, நான் காப்பி குடிக்க மாட்டேனே,” என்றேன். அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “பரவாயில்லை, கொடுங்கள். எப்போதாவது குடிப்பேன். அதிகம் குடிப்பதில்லை,” என வாங்கிக்கொண்டேன். அதனை ஒரு மூலையில் வைத்துவிட்டு நெருங்கிய நண்பர்களுக்கு எனது பயணத்தைக் கைப்பேசியின் மூலம்  அறிவித்துக் கொண்டிருந்தேன். பயணத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை விமானப் பயணச் சீட்டைச் சரிப்பார்த்துக் கொண்டேன். “உங்கள் இருக்கை எண் என்ன?” எனக் கேட்டான். பதில் சொன்னேன்.

தம்முடைய இருக்கை இரண்டு வரிசைகள் தள்ளி பின்புறம் இருக்கிறது என்றான். அப்படியா என தலையாட்டிக் கொண்டேன். “பிறகு பக்கத்தில் அமர்பவர்களிடம் சொல்லி இருக்கைகளை மாற்றிக் கொள்ளலாம். அப்போதுதான் பேசிக்கொண்டே செல்ல வசதியாய் இருக்கும்,” என்றான். “அதெல்லாம் தேவையில்லை. நான் விமானத்தில் ஏறியவுடனேயே உறங்கிவிடுவேன். எனக்கு அவ்வளவு களைப்பாக இருக்கிறது,” என சாக்குப் போக்குக் கூறிவிட்டு மீண்டும் கைப்பேசியில் ஐக்கியமானேன்.

விமானம் வந்துவிட்டது. அனைவரும் வரிசைப்பிடித்து விமானத்தில் ஏறினோம். எனக்குச் சன்னல் ஓர இருக்கை. எனது பக்கத்தில் ஆண் ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு அடுத்தபடியாக நடுத்தர வயது மாது ஒருவர் வந்தமர்ந்தார். இரு பெண்களுக்கு நடுவில் அமர்வது அந்த ஆணுக்குக் கூச்சத்தையோ அல்லது அசெளகர்யத்தையோ உண்டு பண்னியிருக்க வேண்டும். அந்த மாதுவை எனதருகில் அமரச் சொல்லி இடம் மாற்றி அமர்ந்துக்கொண்டார். எனக்கும் கொஞ்சம் வசதியாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் விமானம் ஆகாயத்தை நோக்கி பறக்க ஆரம்பித்தது. இந்த முறை பயணம் எப்படி அமையப் போகிறது என்ற கற்பனை வானில் நானும் சிறகடிக்க ஆரம்பித்தேன்.


1 கருத்து:

karthick சொன்னது…

Nice trip....Each & Every Malaysian(Indians)..must know Indian culture..