புதன், 16 மார்ச், 2011

உயிரோடு இருக்கின்றாயா?


தமிழா
உயிரோடு இருக்கின்றாயா?
இன்னமும் உயிரோடு இருக்கின்றாயா?

சாக்கடையில் விழுந்திருக்கின்றாயே
இறந்துவிட்டாயென்று நினைத்தேனடா
ஈக்கள் உன் மீது மொய்க்கின்றதே
சுரணை இன்னும் இருக்கின்றதா?
உயிரோடுதான் இருக்கின்றாயா?

மூக்கின் நுனியைக் காக்கை ஒன்று
கொத்திக் கொத்திப் பார்க்கிறதே
வழவழப்பான புழுக்கள் பலவும்
உன் வாயில் நுழைய முயல்கிறதே!
உயிரோடுதான் இருக்கின்றாயா?

அடேய் தமிழா
சீக்கிரம் எழுந்திரு
மிச்சமிருக்கும் வலுவை
மொத்தமாகத் திரட்டி எழுந்திரு!
இன்னமும் படுத்துக்கிடந்தால்
குப்பை என்று எண்ணி-உன்
மீது எச்சை உமிழ்வார்கள்!

உன் வலது காலை
பாம்பு ஒன்று சுற்றுதே
எழுந்து அதனை உதறி வீசு
இல்லையேல் மிதித்து நசுக்கு
உயிரோடுதானே இருக்கின்றாய்?

என் குரல் காதில் விழுகின்றதா
இமைகள் லேசாக அசைகின்றதே
பார்க்க முடிகின்றதா உன்னால்?
உணர்வு இன்னும் இருக்கின்றதா?
உயிரோடுதான் இருக்கின்றாயா?

தெருவில் திரியும் தெருநாய் ஒன்று
முகத்தை நக்கிப் பார்க்கின்றதே
‘மதம்’ பிடித்த யானை ஒன்று
வயிற்றில் ஏறி மிதிக்கின்றதே
உயிரோடுதான் இருக்கின்றாயா?

தெறித்த எச்சிலைத் துடைக்காதே
எழுந்து நின்று விடு ஒர் அறை!
அவன் கன்னம் சிவக்க
கண்ணீர் வடிய இரத்தம் ஒழுக
ஓடிப் போகட்டும்!

நீ இன்னும் சாகவில்லை
உயிரோடுதான் இருக்கின்றாய்
உணர்த்து அவனுக்கு-நடுங்கட்டும்
உன்னைக் கண்டு-உளரட்டும்
உன் பெயரைக் கேட்டு!

குட்டக் குட்டக் குனிந்துப் போனால்
எட்டி மிதிப்பான் எதிரியடா
நீ பணிந்துப் பதுங்கி விலகிப் போனால்
பாடைக் கட்டும் வையமடா
படுகுழியில் தள்ளும் மனிதரடா!

எழுந்திரு தமிழா எழுந்திரு
உன் நெஞ்சை நிமிர்த்தி நடந்திடு
வாழ்வில் உயர்ந்துக் காட்டிடு
மறத்தமிழன் நீயென சாற்றிடு!


7 கருத்துகள்:

eye brows சொன்னது…

tamilanain urimai ponal koda parava illai unarvum thirudu poi vittathe intha palai pona arasilalal illai illai araaialvathikalal

து. பவனேஸ்வரி சொன்னது…

என்ன செய்வது? நடைமாடும் பிணங்களாக மக்கள் இருக்கும் வரை இந்நிலைத் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும்..

சமுத்ரா சொன்னது…

கவிதை அருமை..

து. பவனேஸ்வரி சொன்னது…

சமுத்ரா: நன்றி நண்பரே :)

Unknown சொன்னது…

குட்டக் குட்டக் குனிந்துப் போனால்
எட்டி மிதிப்பான் எதிரியடா
நீ பணிந்துப் பதுங்கி விலகிப் போனால்
பாடைக் கட்டும் வையமடா
படுகுழியில் தள்ளும் மனிதரடா!

Super... this line is very nice...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செவிடன் காதுல ஊதி இருக்கீங்க சங்கை...வீர உணர்வு ஊட்டிய மங்கை.. வரிகளாலே வைரியை துரத்தும் வேங்கை

து. பவனேஸ்வரி சொன்னது…

இலட்சுமணன்: நன்றி நண்பரே...

செந்தில்குமார்: ஹ்ம்ம்ம், என்ன செய்வது.சொல்வது நம் கடமையல்லவா? இயன்றவரை முயன்றுப் பார்ப்போம்..