
பத்தொன்பது வயதில் தான் கர்ப்பமாக இருப்பதை காசி அன்டர்வூட் அறிகிறாள். கையில் பணமில்லை, திருமணமாகவில்லை, மதுவுக்கு அடிமை, வீட்டைலிருந்து வெகு தூரம் வசிக்கும் வேளையில், கருவினைக் கலைக்க முடிவு செய்கிறாள். அவளின் முடிவு சரியா தவறா என்று அவளுக்குத் தெரியவில்லை.
கருக்கலைப்பு அவளிடமிருந்த பெண்ணியச் சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமை, எதையோ தொலைத்த உணர்வு, எல்லையில்லா குடிப்பழக்கம் என அவள் தனது மனதினை தேர்த்த முயல்கிறாள். தனது கருக்கலைப்பினைப் பற்றிப் பெற்றோர், நண்பர்கள், அயலார் என எல்லாரிடமும் உரையாடுகிறாள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு எவ்வாறோ குடிப்பழக்கத்தை நிறுத்தி, தனது கனவு வேலையில் அமர்கிறாள். அப்போது அவளைக் கருவுறச் செய்த முன்னாள் காதலன் வேறு ஒருத்தியுடன் குழந்தைப் பெற்றுக்கொண்ட செய்தி அவளை என்னவோ செய்கிறது. அவள் உடைந்துப் போகிறாள். ஆழ்ந்த மன அழுத்தம் அவளை உட்கொள்கிறது. கருக்கலைப்புச் செய்த குற்ற உணர்விலிருந்து தான் என்றுமே விடுப்பட போவதில்லை என எண்ணுகிறாள்.
உணர்ச்சிகளை வெல்ல ஆன்மீகத்தைப் பயன்படுத்திய பெண்களின் சரித்திரத்தைத் தேடிப் படித்த காசி, தானும் அவ்வழியைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கிறாள். புத்தம், ரோமன் கத்தோலிக், மனோதத்துவ நிபுணர் என இன்னும் பலரின் உதவியுடன் அவள் தனது தேடலைத் தொடர்கிறாள். கருக்கலைப்புச் செய்த பெண்களுக்கு ஆறுதலாகச் செயல்படவும் ஆரம்பிக்கிறாள்.
காசியின் இந்த வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக் கதையல்ல. அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற ஒரு பெண் சந்தித்த ஏமாற்றங்களும் சவால்களும், அதனை எதிர்க்கொள்ள அவள் செய்த முயற்சிகளையும் இரசனையுடன் சொல்லும் நாவல். நாவலில் ஆங்காங்கே வெளிப்படும் காசியின் வாழ்க்கைச் சிந்தனைகள் எம்மை வியப்புறச் செய்தன.
காசி...அவளுக்கு என் வயதோ அல்லது என்னைவிட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். அவள் மேற்கொண்ட பயணங்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி இவற்றில் நூறில் ஒரு பங்குக் கூட நான் செய்ததில்லை. காசியின் விடிவை நோக்கிய இந்தப் பயணம் என்னுள் ஓர் எழுச்சியை உண்டாக்குகிறது. எனது வட்டத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது. இவ்வுலகை வேறு கண்ணோட்டத்தில் காண வைக்கிறது.