“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் பார்த்தா
பிரச்சனையாகிடும்,” என்றுச் சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் வந்துப் போகிறவர்களைக் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை வேடிக்கையாகப் பார்த்தான்.
“கொஞ்ச நேரம் கூட பேச முடியாதா?” என்று பரிதாபமாய் கேட்டான் அவன். கவிதா தர்மசங்கடமான நிலைக்கு ஆளானாள். பேந்தப் பேந்த விழித்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குள் அங்கே யாரோ நடந்துவரும் சத்தம் கேட்கவே, “ஐயோ, யாரோ வராங்க. நான் கிளம்பறேன்,” என்று கூறிக்கொண்டே தன் தோழிகள் இருவர் நின்றுக்கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சிட்டாய் பறந்தாள்.
கோவிலைவிட்டு வெளியேறும் முன்பு ஐங்கரனை நோக்கிக் கையசைத்தாள். அவன் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடியது. கவிதா கோவிலை விட்டுப் புறப்பட்டதிலிருந்து வீட்டை அடையும் வரை குறைந்தது நான்கு முறையாவது அவளைச் சுற்றி சுற்றி மோட்டார் வண்டியில் வட்டமடித்துவிட்டான் ஐங்கரன்.
கவிதாவிற்கு உள்ளூர மகிழ்ச்சித் தாண்டவமாடியது. பற்றாக்குறைக்கு அவளது தோழிகள் வேறு அவளை உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.
“ஏய், ஆள எங்கலா பிடிச்சே? பையன் நல்லாதான் இருக்கான்,” என்றாள் கோமளா. கவிதா வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
“பையனுக்கு எத்தனை வயசு?” என்றாள் சங்கரி.
“என்னோட மூனு வயசு கூட,” என்றாள் கவிதா.
“நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்பள புரிஞ்சி நடந்துக்குவாங்க,” என்றாள் சங்கரி.
“ஆமா, அப்பதான் நம்பளவிடச் சின்னப்புள்ள’னு விட்டுக்கொடுத்துப் போவாங்க. வீணாப் பிரச்சனை வராது,” என்று ஒத்து ஊதினாள் கோமளா.
கவிதாவிற்குக் கனவுலகில் சஞ்சரிப்பது போல் இருந்தது. நடுநடுவே ஐங்கரன் வேறு அவளை வட்டமிட்டுக் கொண்டிருந்ததால் அவள் கால்கள் நிலத்தில் ஊன்றவே இல்லை.
“பையனுக்கு உன் மேல ஒரே ‘லவ்சு’ போல. சுத்தி சுத்தி வராரு,” என்று கிண்டலடித்தாள் கோமளா. கவிதாவிற்கு வெட்கமாக இருந்தது.
“இல்லக்கா. சும்மாதான்…” என்று இழுத்தாள் கவிதா.
“கதை விடாதே. எனிவேய், விஸ் யூ கூட் லக். நல்லா இருந்தா சரி. அப்புறம் எல்லா ஒகே ஆனப் பிறகு எங்களைக் கலட்டி விட்டிருராதே!” என்றாள் சங்கரி.
“என்னக்கா இப்படிச் சொல்றீங்களா? நான் என்ன அந்த மாதிரிப் பிள்ளையா?” என்று முகத்தைச் சோகமாக்கினாள் கவிதா.
“ச்சே, சும்மாதான் சொன்னோம். அப்புறம் திரும்ப எப்ப உன்னோட ஆளப் பார்க்கப் போறே?” என்று வினவினாள் சங்கரி.
“அடுத்த வெள்ளிக்கிழமைதான். வருவீங்க தானே?” என்றாள் கவிதா. அவர்களை விட்டால் அவளுக்கு வேறு துணை ஏது? சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் விஷமமாகப் பார்த்துக்கொண்டு புன்னகைத்தனர்.
“வர்றோம், என்னப் பண்றது? நீ எங்களுக்குப் பிரண்டா ஆகித் தொலைச்சிட்டியே,” என்றாள் கோமளா. அதற்குள் கவிதாவின் வீடு வந்துவிட்டது. ஐங்கரனும் கடைசிச் சுற்றை அத்துடன் முடித்துக்கொண்டான். தோழிகளும் கவிதாவுடன் விடைப்பெற்றுக்கொண்டு தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.
கவிதாவிற்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. ஐங்கரனின் நினைவு அவளை வாட்டிக்கொண்டிருந்தது. புரண்டுப் புரண்டுப் படுத்துப் பார்த்தாள்; போர்வையை இழுத்து தலை வரை மூடிப்பார்த்தாள்; அப்பொழுதும் தூக்கம் வரவில்லை. ஐங்கரனின் நினைவிலேயே திளைத்த அவள் எப்பொழுது உறங்கிப்போனாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
ஒருவாரம் ஒரு மாதம் போல் ஓடியது அவளுக்கு. அதற்கிடையில் முகிலனும் பாட்டி வீட்டிற்கு வரவில்லை. ஐங்கரனைப் பற்றி எந்தவொரு தகவலும் தெரியவில்லை. தனது நெருங்கியத் தோழியான தேவியிடம் சற்று இடைவெளி விட்டே பழகினாள். எங்கே தனக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவள் கண்டுப்பிடித்துவிடுவாள் என்று அஞ்சினாள் போலும்.
வியாழக்கிழமை அன்று தேவியே கவிதாவைத் தேடிக்கொண்டு பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டாள். வழக்கம் போல கவிதா அவளது அறையில் இருந்தாள். அறைக்குள் நுழைந்துச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த தேவி, “கவிதா, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்,” என்றுப் பீடிகைப் போட்டாள்.
“என்ன,” என்றாள் கவிதா.
“முக்கியமான விசயம். ஆமா, உன்னோட பாட்டி எங்கே?” என்று வினவினாள்.
“இங்க இல்லை’னா உங்க வீட்லதான் இருப்பாங்க. என்ன விஷயம்?”
தொடரும்...