ஞாயிறு, 20 மார்ச், 2011

ஆயிரம் மடங்கு!


என்னைவிட அவளை
ஆயிரம் மடங்குப் பிடிக்குமென்றாய்
ஏதோ, மனம் சுக்கு நூறாய் உடைந்துச்
சிதைந்ததைப் போல் ஓர் உணர்ச்சி

வலிக்கிறது
மனம் அதிகம் வலிக்கிறது
நீ என்னை வெறுக்கிறேன் என்றபோது
உண்டாகாத வலி இப்போது வருகிறது

அவ்வளவு பிடிக்குமா அவளை?
பொறாமையாய் இருக்கிறதடா
முகம் தெரியாத அவள் மீது
அதிகப் பொறாமையாய் இருக்கிறது!

நினைத்துப் பார்க்கவும் தைரியமில்லை
எந்தளவிற்குக் காதலித்திருப்பாய் அவளை
இதனைத் தெரிந்ததும் எனது எதிர்ப்பார்ப்புகள்
சுக்கு நூறாய் உடைந்துச் சிதைந்தது!

மனக்கோட்டைகள் விழுந்து சிதறியது
ஆகாயம் தலை மேல் விழுந்தது போன்று
பூமி இரண்டாகப் பிழந்தது போன்று
தலைச் சுற்றி மனம் இருண்டது!

ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இப்பொழுது நினைத்தாலும்
தலைச் சுற்றி மயக்கம் வருகிறது
இப்படியே உயிர் போகக்கூடாதா?

எதற்காகக் கேட்டேன் என்றாகிவிட்டது
உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று
ஒரே ஒரு பொய் சொல்லியிருக்கலாமே
என்னுயிர் நிம்மதியில் உறைந்திருக்கும்

பேசிய மூன்று மணி நேரத்தில்
அவளைக் காதலிக்கிறேன் என்றாயா?
அந்தளவிற்குப் பாக்கியசாலியா அவள்?
நான் மட்டும் ஏன் எப்பொழுதும் துரதிஷ்டவாதியாய்?

வலிக்கிறது அன்பே
இந்த வலிக்கு மருந்தொன்று இருந்தால்
இந்த வலியின் வடுவை மறைக்க முடிந்தால்
எவ்வளவோ நன்மையாய் இருக்கும்!

‘உன்னைவிட ஆயிரம் மடங்குப் பிடிக்கும்’
இந்த ஒற்றை வரி என்னை
ஒரேயடியாய் கொன்று புதைத்து
என் ஆசைகளுக்கு சமாதி கட்டிவிட்டது!

அதற்குப் பிறகு நீ பேசிய எதுவும்
என் காதில் விழவில்லை
நான் அழவில்லை, அழவும் மாட்டேன்
ஆனால், கண்ணீர் மட்டும் வந்தது

ஆயிரம் மடங்கு!
இரண்டு மடங்கு அதிகம் என்றிருந்தாலே
ஈராயிரம் முறை இறந்திருப்பேன்
ஆயிரம் மடங்கு என்று சொல்லிவிட்டாய்

மூன்று மணி நேரத்தில் அவளிடம் காதல்
மூக்கால் அழுதாலும் என் மீது வரவில்லை
புரிகிறதுகாதல் இயற்கையானது
அதற்குக் கூட என்மீது அனுதாபம் இல்லை!

இனி நீ பிடிக்கும் என்றாலும்
என் மனம் ஆறப்போவதில்லை
உன் மனதில் வேறொருத்தி இருக்கும் போது
நான் ஆசைக்கொள்வது முறையல்ல

இன்னமும் வலிக்கிறதடா
இதயம் வீங்கி வலிக்கிறது
இடி தாங்கும் இதயம் இந்த
வலி தாங்க மறுக்கிறது!

ஆயிரம் மடங்குப் பிடிக்குமா அவளை?
உண்மையாகவா? என்னை விடவா?
ஐயோதாங்க முடியவில்லையே
என்னால் ஏற்க இயலவில்லையே

ஆயிரம் மடங்கு என்பது எவ்வளவு அதிகம்?
என்னைவிட ஆயிரம் மடங்கு என்றாயே
அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே
எதார்த்தத்தை எதிர்க்கொள்ள முடியாமல் நான்

பரவாயில்லை
இந்த வலி எனக்குப் பழகிவிடும்
நீ மகிழ்ச்சியாய் இருந்தால்
அதுவே எனக்குப் போதும்!

இனி உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்
உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன்
உன்னைவிட்டு விலகியிருப்பது
கடினம்தான்.

ஆனால், அதுதான் நல்லது
உன் மீது நான் கொண்ட காதலுக்கும்
அவள் மீது நீ கொண்ட காதலுக்கும்
உன்னை நான் விலகியிருப்பது நல்லது!

ஆயிரம் மடங்கு என்றாயே
அதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!

‘உன்னைவிட ஆயிரம் மடங்குப் பிடிக்கும்’
இந்த வரி என்னுள் ஆழமாய் பதிந்துவிட்டது
இன்னமும் வலிக்கிறது அன்பே
வலித்துக்கொண்டே இருக்கிறது!

ஒருகால் நான் இறந்துவிட்டால்
என் சமாதியில் எழுதச்சொல்லுங்கள்
‘இவளைவிட அதிகமாக உன்னை
எவராலும் காதலிக்க முடியாது’ என்று!

ஆயிரம் மடங்கு அல்ல
பத்தாயிரம் மடங்கு அதிகமான காதல்
உன் மீது எனக்கு உண்டு
அதனால் விலகிச் செல்கிறேன்!

அவள் மீண்டும் உன்னைச் சேரவேண்டும்
நான் பொறாமைப் படுவேன், இருந்தும்
நீ மகிழ்ச்சியாய் இருப்பதைப் பார்த்து
அமைதிக் கொள்வேன்!

நீ அவளைச் சேரவேண்டும்
உன் காதல் தொடர வேண்டும்
திருமணத்தில் முடிந்து இன்பம் பெற வேண்டும்
அதனை நான் காண வேண்டும்!

என் வலியை மறைத்துக்கொண்டு
இயதத்தைக் கல்லாகிக்கொண்டு
பொய்யாகச் சிரித்துக்கொண்டு வாழ்த்துகிறேன்
எங்கிருந்தாலும் வாழ்க!

உன்னைப் போல் ஒருவனை
காதலித்தேன் என்ற பெருமை போதும்
வாழ்நாள் முழுக்க வாழ்ந்து விடுவேன்
எனது காதலுடன்!

புதன், 16 மார்ச், 2011

உயிரோடு இருக்கின்றாயா?


தமிழா
உயிரோடு இருக்கின்றாயா?
இன்னமும் உயிரோடு இருக்கின்றாயா?

சாக்கடையில் விழுந்திருக்கின்றாயே
இறந்துவிட்டாயென்று நினைத்தேனடா
ஈக்கள் உன் மீது மொய்க்கின்றதே
சுரணை இன்னும் இருக்கின்றதா?
உயிரோடுதான் இருக்கின்றாயா?

மூக்கின் நுனியைக் காக்கை ஒன்று
கொத்திக் கொத்திப் பார்க்கிறதே
வழவழப்பான புழுக்கள் பலவும்
உன் வாயில் நுழைய முயல்கிறதே!
உயிரோடுதான் இருக்கின்றாயா?

அடேய் தமிழா
சீக்கிரம் எழுந்திரு
மிச்சமிருக்கும் வலுவை
மொத்தமாகத் திரட்டி எழுந்திரு!
இன்னமும் படுத்துக்கிடந்தால்
குப்பை என்று எண்ணி-உன்
மீது எச்சை உமிழ்வார்கள்!

உன் வலது காலை
பாம்பு ஒன்று சுற்றுதே
எழுந்து அதனை உதறி வீசு
இல்லையேல் மிதித்து நசுக்கு
உயிரோடுதானே இருக்கின்றாய்?

என் குரல் காதில் விழுகின்றதா
இமைகள் லேசாக அசைகின்றதே
பார்க்க முடிகின்றதா உன்னால்?
உணர்வு இன்னும் இருக்கின்றதா?
உயிரோடுதான் இருக்கின்றாயா?

தெருவில் திரியும் தெருநாய் ஒன்று
முகத்தை நக்கிப் பார்க்கின்றதே
‘மதம்’ பிடித்த யானை ஒன்று
வயிற்றில் ஏறி மிதிக்கின்றதே
உயிரோடுதான் இருக்கின்றாயா?

தெறித்த எச்சிலைத் துடைக்காதே
எழுந்து நின்று விடு ஒர் அறை!
அவன் கன்னம் சிவக்க
கண்ணீர் வடிய இரத்தம் ஒழுக
ஓடிப் போகட்டும்!

நீ இன்னும் சாகவில்லை
உயிரோடுதான் இருக்கின்றாய்
உணர்த்து அவனுக்கு-நடுங்கட்டும்
உன்னைக் கண்டு-உளரட்டும்
உன் பெயரைக் கேட்டு!

குட்டக் குட்டக் குனிந்துப் போனால்
எட்டி மிதிப்பான் எதிரியடா
நீ பணிந்துப் பதுங்கி விலகிப் போனால்
பாடைக் கட்டும் வையமடா
படுகுழியில் தள்ளும் மனிதரடா!

எழுந்திரு தமிழா எழுந்திரு
உன் நெஞ்சை நிமிர்த்தி நடந்திடு
வாழ்வில் உயர்ந்துக் காட்டிடு
மறத்தமிழன் நீயென சாற்றிடு!