புதன், 24 ஜூன், 2015

அவளும் அதுவும்... (பாகம் 5)


 
"அதுக்கு நம்ம கூட பேச விருப்பம் இல்லைனா?" பவானி சந்தேகத்துடன் கேட்டாள்.

"இல்லைனா ‘நோ’ என்ற வட்டத்தைக் காட்டும்".

"இங்கே பேயே இல்லைனா?" இப்போது பாலா கேட்டான்.

"ஒன்னுமே இல்லைனா காசு நகராது. ‘ஹோம்’லேயே இருந்திடும். ஆனா, நாம ரொம்பெ நேரம் முயற்சி செஞ்சாதான் ‘அது’ வரும். எல்லார்கிட்டேயும் அது பேசாது. அதுக்குப் பிடிச்ச ஒருசிலர்கிட்ட மட்டும்தான் அது பேசும். இப்ப நான் ‘அதை’க் கூப்பிடப் போறேன். எல்லாரும் மெதுவா ‘ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்’னு சொல்லிக்கிட்டே இருக்கணும். சரியா?"

"சரி" என மூவரும் தலையசைத்தனர். மேகலா தனது ஆள்காட்டி விரலை நாணயத்தின் மேல் பட்டும் படாமல் வைத்தாள். "ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்" என அனைவரும் அதனை அழைக்கத் தொடங்கினர். நால்வரின் தலைகளும் குனிந்து கண்கள் நாணயத்தின் மேல் நிலை குத்தின. சிறிது நேரத்திற்குப் பிறகு மேகலா கண்களை மூடிக்கொண்டாள். அந்த அறை முழுவதும் ஒருவகையான சூன்யம் பரவியது. மேகலாவின் விரல் லேசாக அசைந்தது. நாணயம் ‘ஹோம்’ என்ற வட்டத்தைச் சுற்றி மெதுவாக வட்டமிட ஆரம்பித்தது. பவானியின் கண்கள் பெரிதாயின.

"பாலா!!! ஏய், பாலா…!" என்று தாத்தா பாலாவைத் தேடிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது. நாணயம் சட்டென நின்றது. மேகலா பட்டென கையை எடுத்தாள். சில வினாடிகள் செய்வதறியாது நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். தாத்தாவின் குரல் இப்போது வெகு அருகில் சத்தமாக ஒலித்தது. வாடிக்கையாளர்கள் யாராவது வந்திருக்க வேண்டும். அதனால்தான் தாத்தா பாலாவைத் தேடிக்கொண்டு வருகிறார்.

"இங்கே இருக்கேன் தாத்தா!" என்று பதிலுக்கு உரத்துக் கத்தியபடி பாலா எழுந்துச் சென்றான். அதேவேளையில், மேகலா அந்த வரைத்தாளைச் சுருட்டி பத்திரமாக கட்டிலுக்கடியில் மறைத்து வைத்தாள்.

"நாளைக்குத் திரும்பவும் முயற்சிப் பண்ணலாம்," என்று மெல்லியக் குரலில் கூறினாள். மூவரும் அறையை விட்டு வெளியேறினர். வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தனர். பவானி மேகலாவிற்கும் வாணிக்கும் இடையே அமர்ந்துக்கொண்டாள். நாவல் மர நிழலும், மெல்லிய காற்றும் மாலை வெயிலுக்கு இதமாக இருந்தன.

"நிஜமாவே காசு நகர்ந்துச்சா இல்ல, நீ விரலை வச்சு நகர்த்தினியா?" வாணிதான் நம்பமுடியாமல் கேட்டாள். மேகலா கடுப்புடன் அவளைப் பார்த்தாள்.
"உண்மையாவே நகர்ந்துச்சு’லா. நாங்க ‘ஸ்க்கூல்’ல செஞ்சுப் பார்த்தோம். சுகன்யாதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தா. சுகன்யா செய்யும் போது காசு ரொம்ப வேகமா நகர்ந்துச்சு. நான் செய்யும் போது ரொம்ப மெதுவா நகருது."
"நாளைக்கு திரும்பவும் முயற்சி செஞ்சுப் பார்க்கலாமா?" பவானி ஆர்வம் மேலிட கேட்டாள். மேகலா சம்மதமாய் தலையசைத்தாள்.


மறுநாள் பள்ளி முடிந்து மூவரும் மறுபடியும் அந்தக் கடைசி அறையில் கூடினர். இன்று பாலாவும் சீக்கிரமே வந்து சேர்ந்தான். முந்தைய தினத்தைவிட அனைவரின் கண்களிலும் ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் அதிகமாகத் தெரிந்தன.


"ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன், ‘ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்," என நால்வரும் இடைவிடாது ‘அத’னை அழைக்கத் தொடங்கினர். சில நிமிடங்களுக்குப் பிறகு அறை முழுவதும் ஒருவித குளிர்ச்சிப் படர்வதை பவானி உணர்ந்தாள். அவளது உடம்பின் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. மேகலாவின் கண்கள் மூடியிருந்தன. அவளது மெல்லிய விரலில் ஒருவித நடுக்கம் தென்பட்டது. இருபது காசு நாணயம் மெதுவாக நகர ஆரம்பித்தது. பாலா ஆச்சர்யத்தில் அழைப்பதை நிறுத்தினான். மற்ற மூவரும் அதனைத் தொடர்ந்து அழைத்தனர். நாணயம் ‘யெஸ்’ என்ற வட்டத்தை அடைந்தது. மேகலா கண்களைத் திறந்தாள். இன்னொரு விரலை உதட்டின் மேல் வைத்து அமைதியாக இருக்கும்படி மற்றவர்களுக்குக் கட்டளையிட்டாள். அனைவரும் அழைப்பதை நிறுத்தினர்.
"உன் பெயர் என்ன? ‘சியாபா நாமா காமு’?" என்று தமிழிலும் பின்னர் மலாயிலும் இரண்டு முறைக் கேட்டாள். நாணயம் மறுபடியும் நகரத் தொடங்கியது. அதன் நகர்வு ஆமையை விட மெதுவாக இருந்தது. ‘எம்’ என்ற வட்டத்தை அடந்த நாணயம் அதனுள்ளேயே ஒருமுறை சுற்றியது. மேகலா சைகைக் காட்ட, வாணி வெள்ளைக் காகிதத்தில் அவ்வெழுத்தைக் குறித்துக்கொண்டாள். நாணயம் மெதுவாக நகர்ந்து ‘எ’ என்ற எழுத்தை வட்டமிட்டது. அடுத்ததாக அது நகர ஆரம்பிக்கும் போது வாணியின் விரலை மெதுவாக எடுத்து, மேகலா தனது விரலுக்கருகில் நாணயத்தின் மீது வைத்தாள். மின்சாரம் தாக்கியது போல் வாணி பட்டென விரலை நாணயத்திலிருந்து எடுத்தாள். நாணயத்தின் மேல் வைக்கப்பட்ட விரலில் சூடு பட்டுவிட்டதைப் போல் அழுத்தித் தேய்த்தாள். மேகலாவின் நுனி விரலின் கீழ் நகர்ந்துக் கொண்டிருந்த நாணயம் நகர்ந்து இப்போது ‘ஆர்’ என்ற எழுத்தை வட்டமிட்டது. நாணயம் அடுத்த வட்டத்தை நோக்கிச் செல்லும் போது வாணி மெதுவாக தனது விரலை அதன் மீது வைத்தாள். வாணியின் விரல் முழுவதுமாக நாணயத்தின் மீது படர்ந்தபின் மேகலா தன் விரலை மீட்டுக்கொண்டாள். இப்போது வாணியின் விரல் நுனியின் கீழ் நகர்ந்த நாணயம் ‘ஐ’ என்ற எழுத்தை வட்டமிட ஆரம்பித்தது.

"அடாகா நாமா அண்டா மரியா?" என்று மேகலா மலாய் மொழியில் கேட்டாள். நாணயம் நகர்ந்து ‘எஸ்’ என்ற வட்டத்தை அடைந்துச் சுற்றியது.

"பெராபாகா உமூர் அண்டா?" என்று மீண்டும் மேகலாவே கேட்டாள். வாணி ஆச்சர்யமாக தன் விரல் நுனியில் அசையும் நாணயத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நாணயம் 3 என்ற எண்ணை அடைந்தது. அடுத்த எண்ணுக்கு அது நகர ஆரம்பிக்கும் போது பவானி வாணியின் தொடையைச் சுரண்டினாள். தானும் நாணயத்தின் மேல் விரல் வைக்க விரும்புவதாகச் சைகை செய்தாள். வாணி மூத்தவளான மேகலாவைப் பார்த்தாள். மேகலா தலையசைத்து, "மெதுவா பட்டும் படாம வை", என்று கிசுகிசுத்தாள்.


பவானி தனது ஆள்காட்டி விரலை நாணயத்திற்கு மிக அருகில் கொண்டுச் சென்றாள். அவளது விரல் நாணயத்தில் உரசிய உணர்ச்சிக் கூட அவளுக்கில்லை. சட்டென நாணயத்தின் நகர்வு நின்றது. பவானி குழப்பத்துடன் தனது சகோதரிகளைப் பார்த்தாள். அவர்கள் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. ‘ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்’ என மேகலா மீண்டும் அழைக்கத் தொடங்கினாள். பவானி தன் விரலை எடுத்துக்கொண்டாள். வாணியின் விரல் நுனியில் இருந்த நாணயம் அசையவே இல்லை. மேகலாவும் முயற்சி செய்தாள். பலன் இல்லை.பவானிக்கு மிகுந்தக் குழப்பமாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல, மேகலா வாணிக்கும் அதே நிலைதான். நாணயத்தின் நகர்வு ஏன் திடீரென நின்றது? அது தானாகவே நின்றதா அல்லது பவானியின் விரல் பட்டு நின்றதா? மறுநாள் அதனைச் சோதனைச் செய்துப் பார்த்துவிட வேண்டும் என மூவரும் முடிவு செய்தனர்.
 
...தொடரும்...

வெள்ளி, 19 ஜூன், 2015

திறந்த மேனியும் திறந்த மடலும்...வணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும். இந்த மடலை நான் பல வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்க வேண்டும். எனது பலவீனமான இதயமும், எதிர்ப்பார்க்காத துரோகமும், எதிர்க்கொள்ளமுடியா வலியும் எம்மை இத்தனைக் காலமும் முடக்கிப்போட்டுவிட்டன. அதுமட்டுமின்றி, சிறு வயது முதலே வலிகளையும் வேதனைகளும் எமக்குள்ளேயே முடக்கி அதுவே பழக்கமாகியும் போய்விட்டது. இன்று (ஜூன் 19) என் அண்ணனின் பிறந்தநாள். மரணத்தைவிட கொடியது வேறென்ன இருக்க முடியும்? எதுவுமே இல்லை என்பதை இந்த வேளையில், இந்த நொடியில் நான் உணர்கிறேன். மரணத்தை ஒப்பிடும் போது என்னுடைய அனைத்து வலிகளுமே அர்த்தமற்றவையாய் போய்விடுகின்றன.

உங்களுக்கெல்லாம் நான் நடந்த உண்மைகளைக் கூற கடமைப்பட்டுள்ளேன். ஏன் இத்தனைக் காலம் இதனைக் கூறவில்லை என நீங்கள் கேள்வி எழுப்பலாம். என் துன்பம் என்னோடு போகட்டும் என்ற மனநிலையும், என்னை எதற்காக யாரிடம் நிரூபிக்க வேண்டும் என்ற அலட்சியமும், என் சொந்தங்கள் இதனைப் படிக்க நேரிட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சமுமே இத்தனை நாட்களும் என்னை அடக்கிவைத்தன. காலப்போக்கில் எல்லாம் ஆறிவிடும், மாறிவிடும் என்பார்கள். இணையம் என்ற ஒன்று இருக்கும் வரை இந்தப் புகைப்படங்களும், புனைக்கதைகளும் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் என்கிற உண்மை அறிந்ததால் இருக்கும் சந்ததியினருக்கும், இனி வரப்போகும் தலைமுறைக்கும் விளக்கம் கூற விரும்புகிறேன்.
என்னை விமர்சிப்பதற்கு முன்பு முடிந்தால் என்னை அறிந்துக்கொள்ள முற்படுங்கள். தாய்வழி ஈழமாகவும், தந்தைவழி இந்தியமாகவும், இரு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டு மலேசியத் திருநாட்டில், இரு சகோதரர்களைக் கொண்டு, கடைப்பெண்குட்டியாகப் பிறந்தவள் நான். கடைக்குட்டி என்பதால் செல்லமாக வளர்ந்தவள், புத்திக்கெட்டுவிட்டாள் என உடனே யாரும் முடிவுக்கு வரவேண்டாம். ஐந்து வயதிலேயே தாய் தந்தையர் பிரிவால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். அக்காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பங்கள் அதிகமிருந்ததால் அங்கும் செல்லம் கொஞ்சுவதற்கு யாரும் இல்லை. எனக்குப் பாட்டி வீடு ஒன்று என்றாலும் அந்த பாட்டி தாத்தாவிற்குப் பேரப்பிள்ளைகள் அதிகமல்லவா? வீட்டிற்கு வரும் உறவினர் முதல் அயலார் வரை, “அம்மா பார்க்கலையா? அப்பா வரலையா?” என்று கேட்கும் போதெல்லாம் எங்கேயாவது குழித்தோண்டி என்னைப் புதைத்துக்க்கொள்ளலாமா என்று தோன்றும். நல்ல வேளையாக என்னைத் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்தார்கள். தாயில்லா குறையைத் தமிழ்த் தீர்த்தது.  தமிழ் எனக்கு அனைத்தும் கற்றுக்கொடுத்தது. பள்ளியிலேயே அதிக நூல் வாசித்ததற்கான பரிசு என்றும் எனக்கே உரித்தானது. அவ்வளவு பைத்தியமாக இருந்தேன். தமிழாசிரியர்களுக்கு நான் என்றுமே செல்லப்பிள்ளை. எனது வாசிப்பின் பயன் எழுத்திலும் பிரதிபலித்தது.

எனது தமிழாசிரியர் தயவால் 14 வயதிலேயே எனது முதல் சிறுகதை மலேசிய நாளிதழில் வெளிவந்து பலரது பாராட்டையும் ‘இளம் எழுத்தாளர்’ என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. தமிழே எனக்குப் பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. அதனால் நான் தமிழை அளவு கடந்து நேசித்தேன். தமிழர்களையும், தமிழ், தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப்புலிகளையும் நேசித்தேன். இறக்கும்வரை என்னுடனேயே இருக்க வேண்டும், இறந்த பின்னும் என்னுடனேயே வேக வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் புலிகளின் சின்னத்தை என் முதுகில் பச்சைக்குத்திக்கொண்டேன். 2009 இறுதிப் போருக்குப் பின்னர் இலங்கைச் சென்று அங்கு வாழும் தமிழர்களின் நிலையையும், சிங்கள் இராணுவத்தினரின் கொடுங்கோலையும் நேரிடையாகக் கண்ட பின்னரே ‘எனக்கென்ன பயம்?’ என்ற திமிரில் குத்திக்கொண்டதுதான் இந்தப் பச்சை. விடுதலைப்புலிகளைப் பற்றி பேசுவதற்கே அச்சம் கொண்டிருந்த வேலையில், ‘ஒரு பெண்ணாகிய நான் எம்மினத்தின் சின்னத்தைப் பச்சைக் குத்தியிருக்கிறேன் பார்’ என்ற ஆணவத்திமிரில் செய்தது.

அப்பொழுதெல்லாம் காலையிலேயே முகநூலில் ஈழம் தொடர்பான சண்டைதான் நடக்கும். இறுதிக்கட்ட யுத்தத்தில் நடந்தவைகளைப் பற்றிய விவாதங்கள் இரவுவரை நீண்டுக்கொண்டே போகும். அப்பொழுதுதான் தன்னை ‘கரும்புலி’ படையைச் சார்ந்தவன் என்று அடையாளைப்படுத்திக்கொண்ட கயவனிடம் காதல் கொண்டேன். யார் அன்பைப் பொழிந்தாலும் மயங்கிவிடுபவள் நான். அது எனது பலவீனம் என்றுக்கூட சொல்லலாம். எனது நட்புவட்டம் அப்பொழுது பெரியது என்றே சொல்ல வேண்டும். என்னையும் மதித்துத் தகவல்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள ஒரு கூட்டம் இருந்தது. குளிர்சாதன அறையில் அமர்ந்தது இணையத்தில் மட்டும் ஈழத்திற்காகக் குரல் கொடுப்பவள் என்றுமட்டும் எண்ணிவிட வேண்டாம். ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி ஐ.நாவிற்கு அனுப்புவதற்காக ஐயாயிரம் கையெழுத்துக்களை ஒரே ஆளாகப் பெற்றுத் தந்திருக்கிறேன். வேலை முடிந்து, தெருத்தெருவாக அலைந்து, ஈழம் என்றால் என்னவென்றே அறியாதவர்களிடம் அதனை விளக்கி, அவர்களின் அலட்சியமான பார்வைக்கும் ஏளனமான நகைப்புக்கும் இலக்காகியிருக்கிறேன். ‘முதலமைச்சர் அலுவலகத்தில் பணி செய்யும் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை’ என்று பலர் என் முகத்துக்கு நேரே கேட்டிருக்கின்றனர். ‘இதனால் உனக்கு ஏதாவது வருமானம் வருகிறதா?’ என்று நாக்கூசாமல் கேட்டவர்களும் உண்டு. இதுமட்டுமன்றி தமிழகத்தில் நடந்த சில போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளேன், தெரு ஆர்ப்பாட்டங்கள் உட்பட. ஒரு சமயம் கோலார் தங்க வயலில் நடைப்பெற்ற ‘நாம் தமிழர்’ கூட்டத்திற்கு முன்பு சீமானைச் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு அவரை நான் சந்தித்தது எனது திருமண வரவேற்பில். இவையனைத்தும் நான் வெளியில் கூறி விளம்பரம் தேட விரும்பவில்லை. இப்பொழுது கூட இதனை நான் கூறுவதன் நோக்கம், எனது உணர்வின் புனிதத்தை வெளிப்படுத்தவே.

கரும்புலி என்று கூறிய கயவனைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவனுடன் சுமார் ஓராண்டு மேலாகவே பழக்கம். (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. அவன் இலண்டனில் வசிக்கிறான் என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்). நல்லவனாகத்தான் தெரிந்தான். நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர் ஒருவரும் அவனுக்கு நெருக்கம்தான். ஒரு காலகட்டத்தில் அவர்களுடன் இணைத்து சில பணிகள் செய்துள்ளேன். கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்ற தீக்கிரையான பெண்ணும், வாய்க்கூசாமல் தங்கை என்றழைத்த கயவனின் நண்பனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது எனக்குக் காலம் கடந்தே தெரியவந்தன. இவர்களை நான் முழுமையாக நம்பினேன். சொந்தச் சகோதரன், சகோதரி போல் நட்பு பாராட்டினேன். சில காலங்கள் சென்ற பின்பு இவர்கள் நடவடிக்கைகளில் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இலண்டனில் வருடந்தோரும் நடந்துவரும் மாவீர்ர் நினைவு தினத்தை இவர்கள் வேறு இடத்தில் கொண்டாட திட்டமிட்டனர். இதனால் ஈழத்தமிழர்களிடையே பிளவு ஏற்படக்கூடிய சூழல் இருந்தது. ஒரே நேரத்தில் எதற்காக இரண்டு இடங்களில் மாவீர்ர் தினம் கொண்டாட வேண்டும்? அதற்குப் பதில் ஏற்கனவே நடந்துவரும் இடத்திலேயே அனைவரும் ஒன்றுகூடினால் சிறப்பாக இருக்கும் என வாதிட்டேன். அன்று தொடங்கி எங்களுக்குள் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் உண்டாயின. இடையிடையே காதல் மழையும் தூறிக்கொண்டுதான் இருந்தது.

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பிழை, எனது அந்தரங்கப் புகைப்படங்களை நானே எடுத்தது. இரண்டாம் பிழை ‘பார்த்தவுடன் அழித்துவிடுகிறேன்’ என்று அவன் சொன்ன வாக்குறுதியை நம்பி அனுப்பியது. இவனைத் தானே திருமணம் செய்ய போகிறோம் என்ற குருட்டு நம்பிக்கையும் ஒரு காரணம். வெறும் படம்தானே இதில் என்ன இருக்கிறது என்ற அசட்டுத்தனமும் காரணம்தான். உலகத்தில் யார் யாரோ என்னென்னவோ செய்கிறார்கள். இந்தப் படங்களை அனுப்பிவிட்டு நான் படும் பாடு சொல்லில் அடங்காது. ஒருநாள், தமிழ்நாட்டு நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது. ”உன்னைப் பற்றிய செய்தியம்மா, காணக்கூடாத புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கிறது. யாருக்காவது உனது அந்தரங்கப் புகைப்படத்தை அனுப்பினாயா?” என்று கேட்டார். அதிர்ந்தேன். உடனடியாக அவைகளை எனக்கு அனுப்புமாறு கேட்டேன். அவரும் அனுப்பினார். ‘ஈழத்தமிழர்களிடம் பணம் பறிக்கும் பெண்’ என்ற தலைப்புடன் அவனுக்கு அனுப்பிய அத்தனைப் படங்களும் வந்திருந்தன..

தலை சுழன்றது. கதறியழுதேன். தேற்றுவதற்குக்கூட யாருமில்லை. யாரிடம் சொல்லி ஆறுதல் தேட? யாரை நம்பினேனோ அவனே என்னைக் கொன்று புதைத்துவிட்டானே? பூமி இரண்டாக பிளந்து என்னைத் தின்றுவிடக்கூடாதா என்று வேண்டினேன். உண்ணவில்லை, உறங்கவில்லை, அலுவலகமும் செல்லவில்லை. எனது நலன்விரும்பிகள் சிலர் தமிழ்நாட்டிலிருந்து எனக்குத் தொலைப்பேசி மூலமாக ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தனர். இவர்கள் மட்டும் ஏன் என்னை நம்புகின்றனர் என்றுகூட தோன்றியது. தமிழ் படித்தவள் நான், கவரிமானைப் பற்றியும் படித்திருக்கிறேன். மானம் போன பின் உயிர்வாழ ஆசை இருக்குமா? ’ஒருவனுக்கு மட்டும்’ என்று அனுப்பியதை ஊரே பார்க்கிறதே என்ற எண்ணம் என்னைக் கொன்று தின்றது. மற்றவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது என்று கூனி குறுகினேன். தற்கொலைக்கும் துணிந்தேன். சிறுவயது முதலே மருந்து மாத்திரைகள் உண்டு பழக்கமில்லாததால், விழுங்கிய அனைத்து மாத்திரைகளும் வாந்தியாய் வெளியேறின. நரம்பினை அறுத்துக்கொள்ளலாம் என்றால், ‘மூன்று’ பட தனுஷ் மாதிரி கத்தியைக் கொண்டு செல்வதும், பின்னர் தைரியம் இல்லாமல் கதறியழுவதுமாய் தோற்றுப்போனது. அதற்குள் எனது தொடர்பு கிடைக்காத தமிழ்நாட்டு நண்பர்கள் எப்படியோ துணை முதல்வரைத் தொடர்புக்கொண்டு விடயத்தை எடுத்துக்கூறியுள்ளனர். துணைமுதல்வர் அழைத்து ஆறுதல் கூறிய பிறகே சற்று தெம்பு வந்தது எனலாம். அதன்பிறகு நடந்தவை சகித்துக்கொள்ள முடியாதவை.

ஈழத்தமிழர் தொடர்பான இணையத்தளங்கள் எம்மைப் போட்டிப் போட்டுக்கொண்டு தொடர்புகொண்டன. நானும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடந்ததைக் கூறினேன். அவர்களும் பதிவிட்டனர், அதே படங்களைப் பிரசுரித்து! அதிர்ந்தேன்; துடித்தேன்; படங்களை நீக்குமாறு மன்றாடினேன்! எனது கதறல்கள் அவர்கள் காதில் விழவே இல்லை. எனது கண்ணீர் அவர்கள் இதயத்தை நனைக்கவே இல்லை. நடந்ததைக் கூறுங்கள் என்று கேட்டு, நயவஞ்சகமாக அதனைப் பதிவு செய்து, எனது புலி பச்சையுடன் சேர்த்து யுதியூப் (YouTube)-இல் பதிவேற்றினர். கயவனின் கூட்டமோ கண் காணாமல் மறைந்தோடியது, எனது அழைப்புகள் அனைத்தும் குரல்பெட்டிக்குள் முடங்கிப்போனது. இத்தனைச் சுமைகளையும் யாருக்கும் சொல்லாமலேயே சுமந்து வந்தேன். ஒரு சமயம் மனம் உடைந்து, துணை முதல்வரின் உதவியாளர் ஒருவனிடம் மனம் திறந்து கூறி, எனக்கு நானே புதைக்குழித் தோண்டிக்கொண்டேன். அவனுக்கு என் மீது என்ன வெறுப்போ, பொறாமையோ தெரியவில்லை, படங்கள் அனைத்தும் மலேசியாவைச் சார்ந்த முகநூலிலும் வலம்வர ஆரம்பித்துவிட்டன.

நான் யாரென்றே தெரியாத தெருநாய்கள் எல்லாம் என் உள்பெட்டிக்கு ஆபாசமாக தகவல் அனுப்பின. ‘ஈழத்தமிழர்களுக்குத் திறந்து காட்டும் உன் போன்ற ஈனப்பிறவிகள் போராட வேண்டாம்’ என்று ஒருவன் கூறியது இன்னமும் என்னுள்ளே வலித்துக்கொண்டே இருக்கிறது. இவர்களுக்காகவா போராடினேன்? இவர்களுக்காகவா உண்ணாவிரதம் இருந்தேன்? இரக்கமில்லா இந்த மனிதர்களுக்காகவா கண்ணீர் சிந்தினேன் என என்னை நானே வெறுத்தேன். எனது முகநூலில் இருந்த, நான் நேரில் பார்த்துப் பேசாத அத்தனைப் பேரையும் நீக்கினேன். எனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டேன்; எழுதுவது உட்பட. அப்படியிருந்தும் பல நேரங்களில் எம்மால் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தான் ஆடாது போனாலும் தன் சதை ஆடும் அல்லவா? இரணமாகிப் போனாலும் பல சமயங்களில் இதயம் இளகவே செய்கிறது.

அதே படங்கள் மீண்டும் வெளியாகின; சீமானுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களுடன் சேர்த்து. மலேசியப் பெண்ணுடன் சீமான் கள்ள உறவாம்! பக்கத்தில் இருந்து விளக்குப் பிடித்தவர்கள் போல இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. கொளத்தூர் மணி அய்யாவுடன்கூட புகைப்படம் எடுத்துள்ளேன். அதனையும் வெளியிட்டு, ஏற்கனவே வெளியான எனது அந்தரங்கப் படங்களுடன் இணைத்துப் பேசினால் கூட வியப்பதற்கில்லை. இவர்களின் இந்த ஈனத்தனமான தனிமனித தாக்குதல்கள் பாவம் என் படம்தான் கிடைத்தது போலும். அதுமட்டுமல்ல, சில ஆபாச முகநூல் பக்கங்களிலும் அதே படம் வெளிவந்துள்ளது. ஒவ்வொருமுறையும் ‘இங்கே உங்கள் படம் வந்திருக்கிறது. இது நீங்களா? உரிய நடவடிக்கை எடுங்கள்’ என்று எனக்குச் செய்திகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்தப் பக்கங்களைப் புகார் செய்வதைத் தவிர்த்து நான் வேறு என்னதான் செய்ய முடியும்?

“அது என் படம் அல்ல” என்று ஒன்றை வரியில் சொல்லிவிட முடியும். அவ்வாறு பொய் சொல்வதால் எனக்கு நிம்மதி கிடைத்துவிடப்போவதில்லை. தவறு செய்வது மனித இயல்பு. அவ்வகையில் நான் செய்த பெருந்தவறு அந்தப் புகைப்படங்கள். இதனைப் பற்றி நான் காதலித்தவர்களிடமும் என கணவர் உட்பட சொல்லியிருக்கிறேன். நாளை எனக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதனைக் காண நேரலாம். எனது உற்றார் உறவினர், நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் இந்தப் புகைப்படங்களைக் காண நேரலாம். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக விளக்கம் சொல்லி மிச்சமிருக்கும் என் வாழ்நாளையும் வீணடிக்க நான் விரும்பவில்லை. தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் சிலர் எனது அதே பழைய புகைப்படங்களைக் கொண்டு புதியதாக கதைகள் புனைந்து வெளியிடக்கூடிய சர்ந்தப்பம் நிலவுவதால், இதனைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். உங்களின் ஈனத்தனமாக அரசியல் தாக்குதலுக்கு எவனோ ஒருவனால் ஏமாற்றப்பட்ட என் படம்தானா கிடைத்தது? ‘நூலின் அட்டையினைக் கொண்டு அந்நூலினை மதிப்பிடலாகாது’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது போல, எனது புகைப்படங்களைக் கொண்டு என்னை மதிப்பிடாதீர். மதிப்பிடும் உரிமையும் எவருக்கும் இல்லை.

இப்போது நான் முதல் அமைச்சர் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை. நன்மைகள் செய்பவர்களைப் பாராட்டுகிறேன். ஊரை ஏமாற்றுபவர்களை விமர்சிக்கிறேன். நான் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஒரு சராசரி மனிதன். என்னை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்காதீர். பொறுமைக்கும் எல்லை உண்டு. வாழ்க்கை மிகவும் குறுகியது. இதனை எனது அண்ணனின் மரணம் உணர்த்திவிட்டது. எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட ஆசைப்படுகிறேன். உங்கள் வக்கிரங்களைக் கொண்டு அதனை அழிக்க முற்படாதீர். இதனை நான் மன்றாடிக் கேட்கவில்லை, கெஞ்சவில்லை, எச்சரிக்கிறேன்! உங்கள் உழைப்பில் நான் வாழவில்லை. உங்கள் வாழ்க்கையில் நான் குறுக்கிடவில்லை. சமயம் வரும் வேளையில் என் இனத்திற்காகவும் என் மொழிக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன். உங்களால் முடிந்தால் நீங்களும் சேர்ந்துப் போராடுங்கள். முடியாவிட்டால் பொத்திக்கொண்டு போங்கள். (இன்னமும் திமிர் அடங்கவில்லை என்று நீங்கள் பொருமுவது என் காதில் விழுகிறது). இரத்தத்தில் ஊறியது, அடங்குவது கடினம்தான். உங்கள் அனுதாபத்தை வேண்டி இதனை நான் எழுதவில்லை. பல காலம் என்னுள்ளேயே அமிழ்ந்துக்கிடந்த சுமையின் ஒரு பகுதியினை இறக்கி வைக்கவே எழுதுகிறேன். உங்கள் அனுதாபங்களை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். என்னிடம் துக்கம் விசாரிக்க வேண்டாம். எனது படங்களைப் பற்றிய விளக்கம் இப்போது உங்களுக்கு ஓரளவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இவ்வளவு நேரம் பொறுமையுடன் இதனைப் படித்தமைக்கு நன்றி.

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்-அது
எண்ணிக்கை இல்லா கணக்கு
கவலை இல்லை எனக்கு!


வெள்ளி, 12 ஜூன், 2015

தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)இயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாமெல்லாம் சிறு வயதினில் தெனாலிராமனின் கதைகளைக் கேட்டதுண்டு, படித்ததுண்டு. சில வருடங்களுக்கு முன்னால் வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் ‘தெனாலிராமன்’ என்ற திரைப்படமும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் 1994 ஆண்டு வெளியீடு கண்ட இந்த நகைச்சுவை நாடக புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு மீண்டும் எனக்குக்கிட்டியுள்ளது.

இடம், பாத்திரம், சூழல் என அனைத்து நாடக அம்சத்தையும் கொண்டு இந்நூல் முறையே எழுதப்பட்டுள்ளது. கதைகள் நிகழ்வினை நம் கண் முன்னே கொண்டு வருவதில் வெற்றிப்பெற்றுள்ளன. மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமயோசித்த புத்தி, நுண்ணறிவு, பேச்சுத்திறன், நகைச்சுவை இவையனைத்தும் ஒருங்கிணைத்து இந்நூலின் வழி நம்மிடம் சேர்ப்பதில் எழுத்தாளர் வெற்றிப்பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். நாடகமும் சுவை குன்றாமல், சலிப்பினை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பாக நடந்தேறுகிறது.

இருப்பினும், நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் பேச்சு வழக்கு மொழி நாடகம் நடந்த சூழலைப் பிரதிபலிப்பதாக இல்லை. அரசரும் குடிமக்களின் வழக்கில் பேசுவது சற்று நெருடலாக, நாடகத்திற்குப் பொருந்தாதவாறு இருக்கிறது. நாடகாசிரியர் நல்ல தமிழிலேயே இதனை எழுதியிருக்கலாம். சில இடங்களில் தூயத்தமிழிலும் பல இடங்களில் பேச்சு வழக்கிலும் மாறி மாறி கதாப்பாத்திரங்கள் பேசுவது படிப்பதற்கு நன்றாக இல்லை. இதை நாடக வடிவில் அமைத்தாலும் பொருந்தாததாகவே இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.


மற்றபடி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி படிக்கக்கூடிய நூலாகவே இந்நூல் படைப்பட்டுள்ளது. நூலில் காணப்படும் ஓவியங்கள் கண்டிப்பாக சிறுவர் மனதைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை. நீங்களும் படித்து மகிழுங்கள்!

சனி, 6 ஜூன், 2015

பட்டுமாமி-கிட்டுமாமா (சூடாமணி சடகோபன்)


’நகைச்சுவை சிறுகதைகள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நூலில் நகைச்சுவையைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. இதனைப் படித்து முடித்த பிறகும் இவை சிறுகதைகளா அல்லது நாவலா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தப்பாடில்லை. இடையிடையே நாடக பாணியும் கையாளப்பட்டிருக்கிறது. ஆரம்ப அத்தியாங்களில் இவை பல்வேறு சூழலில் இயங்கும் கதைகளாகவும், பின்னர் பட்டுமாமியின் மகள் மற்றும் மருமகனைச் சுற்றியும் பின்னப்பட்டுள்ளது. கண்டிப்பாக இவர் புதிய எழுத்தாளராகத்தான் இருக்க வேண்டும். எழுத்து நடையில் சற்று தள்ளாட்டம் தெரிகிறது. கதையைக் கோர்வையாக கொண்டுசெல்ல மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.


மற்றபடி, பிராமணர்களின் பேச்சு நடையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் எதையோ சொல்ல வருகிறார், பலவற்றை இடையிடையே புகுத்திச் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லாமல் விட்டுவிட்டார். பொழுதுபோக்கிற்காக வேண்டுமானால் இதனைப் படிக்கலாம். சிரித்துப்படிக்கும்படியாக எதுவும் இல்லை. கதையில் கடைசி நான்கு வரிகளை நீக்கிவிட்டால், குழந்தைகள் படிக்க ஏதுவான புத்தகமாக மாறிவிடும்.