வியாழன், 19 மார்ச், 2009

காதல் தோல்வி…


காதல் என்ற ரோஜா
உன் கைகளை மட்டுமல்ல
இதயத்தையும் குத்திவிட்டதை
இதயம் திறந்து சொல்லாமலே
இனம் கண்டு கொண்டேன் நான்…

அமைதியாக இருக்கும் உனக்குள்
ஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை
பார்த்த மருகணமே உணர்ந்துக்கொண்டேன்
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!

இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!

நீ யார்?அடிக்கடி சண்டையிட்டாய்
வெறுப்புடன் பேச வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாய்
தனிமையில் அழ வைத்தாய்
இத்தனையும் செய்ய நீ
என் எதிரியல்ல!

பாசமாய் பழகினாய்
அன்பாய் பார்த்தாய்
கனிவுடன் பேசினாய்
நேசத்தை வளர்த்தாய்
இத்தனையும் செய்த நீ
என் நண்பனல்ல!

அக்கறைக் காட்டினாய்
அதிகாரம் செய்தாய்
அறிவுரைகள் வழங்கினாய்
அரவணைத்துக் கொண்டாய்
இத்தனையும் செய்த நீ
என் பெற்றோர் அல்ல!

புதுப்பாடம் கற்பித்தாய்
சந்தேகங்கள் தீர்த்தாய்
சிந்தனைகள் வளர்த்தாய்
தவறுகளைத் திருத்தினாய்
இத்தனையும் செய்த நீ
என் ஆசான் அல்ல!

எனக்கு நீ எதிரியல்ல
ஆருயிர் நண்பனல்ல
தவமிருந்த பெற்றோர் அல்ல
சொல்லிக்கொடுக்கும் ஆசான் அல்ல
பாசமூட்டும் அன்னை அல்ல
நீ யார், தெரியுமா?

சில நேரம் அழ வைத்தாலும்
பல நேரம் சிரிக்க வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாலும்
மகிழ்ச்சியை எனக்களித்தாய்
நீ யார் தெரியுமா?
என் மூச்சு!

அன்பாய் பழகினாலும்
அளவோடு நிறுத்திக்கொண்டாய்
கனிவுடன் பேசினாலும்
பணிவுடன் நடந்துக்கொண்டாய்
நீ யார் தெரியுமா?
என் உயிர்!

காலம் மாறலாம்
என் காதல் மாறாது
காலம் சென்றாலும்
நம் உறவு மறையாது
உலகம் அழிந்தாலும்
நம் காதல் அழியாது!

புதன், 18 மார்ச், 2009

மன்னிக்கவும்!


நட்பிற்கு இனியவனே
நேசிக்கிறேன் என்பதைவிட
வெறுக்கிறேன் என்றிருந்தால்
மிகவும் மகிழ்ந்திருப்பேன்!

நானொரு புரியாத புதிர்
விடைத் தேட முயற்சிக்காதே
அது முடியாத காரியம்-ஏனெனில்
எனக்கு நானே கேள்விக்குறி!

என்னைப் பொறுத்தவரை
காதல் என்பது விஷம்
ஒருமுறை அருந்திவிட்டேன்
மறுநொடி இறந்துவிட்டேன்!

இப்பொழுது என்னிடம்
இதயமும் இல்லை-அதில்
ஈரமும் இல்லை-ஏனெனில்
என் காதல் கைகூடவில்லை!

வாடிவிட்ட மலர் மீண்டும் மலராது
இறந்துவிட்ட காதல் மீண்டும் பிறக்காது
தொலைந்துப் போன இதயம் மீண்டும் திரும்பாது
காயம் பட்ட மனம் என்றும் ஆறாது!

இந்த வரிகளைத் தடவிப்பார்
எனது மனக்காயங்கள் தென்படும்
இந்த வரிகளை அனுபவித்துப்பார்
எனது வலிகள் உனக்குப் புரியும்!

ஆறுதல் தேட முயன்றேன்
நீயோ ஆதரிக்க வருகின்றாய்
துன்பத்தைப் பகிர்ந்துக்கொள்ள நினைத்தேன்
நீயோ வாழ்க்கையப் பகிரப் பார்க்கின்றாய்!

காதலிக்க நேரமில்லை
காத்திருக்க காலமில்லை
மென்மையான மனமும் இல்லை
வாழ்வில் என்றும் வசந்தம் இல்லை!

பட்ட காயம் போதுமடா
காயம் இன்னும் வலிக்குதடா
வடுக்கள் இன்னும் மறையவில்லை
வலிகள் இன்னும் குறையவில்லை!

வலியை மறைக்கப் பார்க்கின்றேன்
தோற்று நானும் தவிக்கின்றேன்
ஏற்கனவே இறந்து விட்டேன்
பிழைக்க வைக்கப் பார்க்காதே!

நினைத்ததைச் சொன்னதில் தவறில்லை
எனக்கோ அதிலே நாட்டமில்லை
நினைத்தது எதுவும் நடப்பதில்லை
எனக்குக் காதல் ராசி இல்லை!

எங்கே செல்லும்…? (18)


பழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது. ‘நவநீதன்!’ இந்தப் பெயரைக் கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன? உற்சாகத்தோடு அதற்கு மறுமொழி அனுப்பினாள். பின்னர் சிறிது நேரம் யார் யாருடனோ சாட்டிங் செய்து பொழுது போக்கினாள். காலங்கள் இறக்கைக் கொண்டுப் பறந்தன. ஐங்கரன் விட்டுச் சென்ற காயம் ஆறினாலும் அதன் வடு அவள் இதயத்தில் இருந்துக்கொண்டு அடிக்கடி உறுத்தவே செய்தது.

இதனிடையே முகிலனின் தங்கை குமாரி கவிதாவின் நெருங்கிய தோழியாக மாறினாள். ஒரே வயதாக இருப்பினும் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் பயின்று வந்தனர். பள்ளி நேரம் போக மீத நேரங்களில் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். இது கவிதாவின் நெருங்கியத் தோழியான தேவிக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. இருந்தும் கவிதாவும் குமாரியும் உறவினர்கள் ஆதலால், ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டாள்.

மூன்றாம் படிவ பி.எம்.ஆர். தேர்வு நெருங்கி வந்தது. குமாரி எந்நேரமும் புத்தகமும் கையுமாகத் திரிந்தாள். கவிதாவோ நண்பர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவழித்தாள். அனைவரும் உறங்கியப் பின்னர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்தாள். விடிந்த பின்பு போர்வைக்குள் சுருண்டாள்.

இதனால் கவிதாவின் உறவினர்கள் அனைவரும் அவளைக் கண்டிக்க தலைப்பட்டனர். குமாரியை உயர்வாகவும் கவிதாவைத் தாழ்த்தியும் பேசினர். பி.எம்.ஆர் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியாகின. கவிதா 8 ஏ’க்கள் பெற்று பள்ளியின் சிறந்த இந்திய மாணவியாகத் தேர்வுப் பெற்றிருந்தாள். குமாரியோ மிகச் சாதாரண நிலையிலேயே தேர்ச்சிப் பெற்றிருந்தாள்.

இது குமாரியின் தாய்க்குப் பொறாமையை உண்டு பண்னியது. தனது மகளைவிட தாய் தந்தையற்ற கவிதா எப்படி சிறப்புத் தேர்ச்சிப் பெற்றாள் என்று பொங்கி எழுந்தாள். அன்று முதல் கவிதாவிடம் விரோதம் பாராட்டினாள். குமாரியின் போக்கிலும் மாறுதல்கள் தென்பட்டன. நண்பர்களே உலகம் என்று வாழ்ந்துவந்த கவிதா இவர்களின் பொறாமைக் குணத்தை அறியவில்லை. எப்பொழுதும் போல் அனைவரிடமும் சகஜமாகப் பழகினாள்.

எதனையும் பெரிதுப்படுத்தாத கவிதாவின் பெருந்தன்மையான குணமே பின்னாளில் அவளுக்குப் பெருத்தத் துன்பங்களைத் தேடித்தரப் போகிறது என்பதை அவள் அறியவில்லை. நான்காம் படிவத்தில் காலடி எடுத்து வைத்த உடனேயே அவளுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பம் வந்து உயிர் வாங்கியது. குமாரியின் தாய் அவளுக்கு எமனாய் வந்து முன் நின்றாள்.

கவிதாவிற்குத் தெரியாமலேயே அவளது பாட்டியிடமும், உறவினர்களிடமும் கவிதாவைப் பற்றி தப்புத் தப்பாகக் கூறினாள். “அந்தப் பிள்ள ரொம்பெ மோசம்! கேட்குறதுக்கு ஆள் இல்லேன்னு கண்டவனுங்கக்கூட திரியுது! யாரும் அதக் கண்டிக்கறதே இல்ல! இப்படியே போனா நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறுடும்!” என்று இல்லாததும் பொல்லாததும் கூறினாள்.

உறவினர்கள் கவிதாவைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர். எதையும் நேருக்கு நேர் தைரியமாகப் பேசும் கவிதாவின் குணமே அவளுக்கு உறவினர் மத்தியில் கெட்டப் பெயரைச் சம்பாத்தித்துக் கொடுத்தது. எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து அவளை நோகடிக்க அனனவரும் குறியாய் இருந்தனர்.

“எங்கப் போயிட்டு வர்ற? ஏன் வெளியில போகணும்? என்ன வேலை? யாரைப் பார்க்கப் போற? யார் கூடப் போற?” என்று தொட்டத்திற்கெல்லாம் அவளது பாட்டியும் அவளைக் கேள்விக்கேட்க ஆரம்பித்துவிட்டார். இதனால் கவிதா ரொம்பவும் மனவுளைச்சலுக்கு ஆளானாள். தலை சாய்த்து அழுவதற்குத் தாயின் மடி கூட கிடைக்காமல் தவித்தாள். தன் மீது எந்தத் தவறும் இல்லை; தான் தப்பானப் பாதைக்குப் போகவில்லை என்பதை எடுத்துக்கூற அவளால் இயலவில்லை.

அதே சமயம் குமாரியின் செய்கை அத்துமீறிப் போய்க்க்கொண்டிருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு கண்ட கண்ட ஆடவருடன் ஊர் சுற்றினாள். அதே வேளை தன்னை ‘கவிதா’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு அவள் பெயரைக் கலங்கப்படுத்தினாள். கவிதாவுக்கும் குமாரிக்கும் கொஞ்சம் முக ஒற்றுமை இருந்ததால் பலர் குமாரியைக் கவிதா என்று எண்ணி அவள் செய்கையை நொந்துக்கொண்டனர். சிலர் நேரிடையாக கவிதாவின் தாத்தா பாட்டியிடமே முறையிட்டனர்.

நடப்பது என்னவென்று அறியாத கவிதா நிஜமாகவே குழம்பித்தான் போனாள். தன்னை ஏன் அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர்; நோகடிக்கின்றனர் எனபதை அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதற்கான பதில் அவளுக்குக் கூடிய விரைவிலேயே கிடைத்தது!

தொடரும்….

செவ்வாய், 10 மார்ச், 2009

வேண்டாம் வன்முறை!


வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா!

சதி வேண்டாமடா
சாதிக் கொடுமை வேண்டாமடா
பொய் வேண்டாமடா
போலிப் பெருமை வேண்டாமடா!

மது வேண்டாமடா
மயக்கும் மாது வேண்டாமடா
கத்தி வேண்டாமடா
கடுஞ் சொற்கள் வேண்டாமடா!

கண்ணீர் வேண்டாமடா
காதல் தொல்லை வேண்டாமடா
சீற்றம் வேண்டாமடா
சிறை வாசம் வேண்டாமடா!

சோகம்!


சிரிப்பது சுமையாகிவிட்டது
அழுகை வழக்கமாகிவிட்டது
சிந்தனைத் தடைப்பட்டுவிட்டது
கண்ணீர் மடைதிறந்துவிட்டது!

வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை
சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை!

காத்திருந்து காத்திருந்து
கால்களும் மறத்துவிட்டது
பார்த்திருந்து பார்த்திருந்து
பார்வையும் மங்கிவிட்டது!

இன்னமும் காத்திருக்கிறேன்
காதல் கிடைக்காதா என்று
இன்னமும் பார்த்திருக்கிறேன்
பாசம் கிடைக்குமா என்று!

இமைகளை மூடுகிறேன்
தூக்கம் வாராதா என்று
தினம் தினம் அழுகிறேன்
கண்ணீர் வற்றாதா என்று!

எங்கே செல்லும்…? (17)


கவிதாவிற்கு ஐங்கரனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள். ஒரு கடிதம் எடுத்து ஏதோ கிறுக்கினாள். பின்னர் அதனைப் படித்துப் பார்த்து முகத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினாள்; கிழித்தெறிந்தாள். மீண்டும் எதையோ ஆழ்ந்து யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தொலைப்பேசி அருகே சென்று சில எண்களைச் சுழற்றினாள்.

“ஹலோ, முகி இருக்கானா?”

“முகிலன் தான் பேசுறேன். என்ன விசயம் கவி?”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். ஐங்கரனோட போன் நம்பர் வச்சிருக்கியா?”

“ஏன்?”

“எனக்கு வேணும்! ப்பிளீஸ் எப்படியாவது கேட்டு வாங்கிக் கொடு.”

“ஹ்ம்ம்ம்… நான் நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்.” என்றான் முகிலன்.

மறுநாள் முகிலன் பாட்டி வீட்டிற்கு வந்தான். அவன் முகமே சரியில்லை. கவிதாவிற்கும் அவன் முகத்தைப் பார்க்க என்னவோ போல் இருந்தது. அவனே ஏதாவது சொல்வான் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தான். அவன் வாய் திறந்து எதுவுமே கூறவில்லை. கவிதா பொறுமை இழந்து மீண்டும் ஐங்கரனின் தொலைப்பேசி எண்களைக் கேட்டாள்.

“கவி, அவனை மறந்திரு. அவன் சரியா வரமாட்டான்,” என்றான் முகிலன்.

“ஏன்?” கவிதாவின் முகத்திலும் கேள்வியிலும் அதிர்ச்சித் தேங்கி நின்றது.

“அவனுக்கு வேற கேர்ள் இருக்கு!” முகிலன் இதனை மெதுவாகத்தான் சொன்னான். ஆனால், அது கவிதாவிற்குப் பேரிடி போல் விளங்கியது. அதனன அடுத்து அவள் வேறு எந்தக் கேள்வியும் அவனிடம் கேட்கவில்லை.

விருட்டென்று தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள். பின்னர், குலுங்கிக் குலுங்கி அழுதாள். தலையை அடித்துக் கொண்டாள். கால்களால் மெத்தையை உதைத்தாள். தலை முடியைப் பிய்த்துக் கொண்டாள். தேம்பித் தேம்பி அழுதாள். பின்னர் அப்படியே தூங்கிப் போனாள்.

மறுநாள் மீண்டும் முகிலனுக்குத் தொலைப்பேசி அழைப்புச் செய்தாள்.

“ஹலோ முகி, கவிதா பேசுறேன்.”

“தெரியும். சொல்லு.”

“நேத்து நீ சொன்னது உண்மையா?”

“ஆமா! நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லப் போறேன்?”

“அப்புறம் ஏன் மொதல்லயே சொல்லல? எதுக்கு அவங்க என்னைப் பிடிச்ச மாதிரிக் காட்டிக்கணும்”

“கவி, எனக்குத் தெரியாதும்மா. பையனுங்கதான் அவனுக்கு வேற கேர்ள் இருக்குனு சொன்னானுங்க. அவன்கிட்ட கேட்டதுக்கு ஆமா’னு சொன்னான். அப்புறம் எதுக்கு உனக்கு ‘லைன்’ போட்டான்’னு கேட்டேன். அதுக்கு அவன், ‘நான் ஒன்னும் லைன் போடல. அதுதான் என் பின்னாலேயே வருது’னு சொன்னான்.”

கவிதாவிற்குத் தலைச் சுற்றியது. தொலைப்பேசியை வைத்துவிட்டு மீண்டும் அழுதாள். சில நாட்கள் இப்படியே அழுதுவடித்தாள் (யாருக்கும் தெரியாமல்). இரண்டு வாராம் கழித்துத் தான் ஐங்கரனை வழக்கமாகச் சந்திக்கும் கோவிலுக்குச் சென்றாள்.

அங்கே ஐங்கரன் இருந்தான். அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் தலையைத் திருப்பிக் கொண்டாள். பாவம் கவிதா! கோவிலிலேயே அவளது கண்கள் குளம் கட்டிவிட்டன. அவளது நிலையைப் பார்த்த சங்கரியும் கோமளாவும் என்னவென்று விசாரித்தனர். கவிதா சகலத்தையும் கூறினாள். அவர்கள் அவளுக்கு முடிந்த அளவில் ஆறுதல் கூறினர்.

நாட்கள் கடந்துச் சென்றது. கவிதாவால் ஐங்கரனை மறக்க முடியவில்லை. அவன் ஏன் தன்னை இந்த கதிக்கு ஆளாக்கினான் என்று அவளுக்குத் தெரியவில்லை. முன்னம் இருந்த கலகலப்பு இப்போது அவளிடம் இல்லை. கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள். இருந்தும் தனிமையில் அழுதாள்.

காலங்கள் உருண்டோடியது. கவிதா அதிக நேரத்தை நண்பர்களுடன் கழிக்க ஆரம்பித்தாள். மீண்டும் சாட்டிங் சென்று பொழுது போக்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக ஐங்கரனை மறக்க முயன்றுக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவளுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதனைக் கண்டதும் அவள் எல்லையில்லா ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் கொண்டாள். மீண்டும் மீண்டும் அதனைப் படித்தாள்.

“நிஜமாகவே அவர் தானா?” என்று தன் கண்களையே நம்பாமல் அனுப்புனர் மின்னஞ்சல் முகவரியை எழுத்துக்கூட்டிப் படித்தாள். பழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது.

தொடரும்…

ஞாயிறு, 1 மார்ச், 2009

வெறி வேண்டும்!


வெறி வேண்டும்
வாழ்வதற்கு வெறி வேண்டும்
வானமே இடிந்து விழுந்தாலும்
வாழும் வெறி பெருகவேண்டும்!

தோல்விகள் நிரந்தரமில்லை
வாழ்க்கையில் சுதந்திரமில்லை
கைவசம் பணமும் இல்லை
உலகத்தின் வாழ்வே தொல்லை!

தொல்லை என்னடா தொல்லை
கேட்காதேடா ஊர் சொல்லை
உடைத்து எறியடா எதிரியின் பல்லை
நமக்கு ஏதடா இங்கு இல்லை?

உலகம் நமக்குச் சொந்தம்
தோழர் நமக்குப் பந்தம்
இன்னும் ஏனடா மெளனம்
பார்க்காதேடா இங்குச் சகுனம்!

தடையில்லா முயற்சியா?
துன்பமில்லா வாழ்க்கையா?
வீழ்ச்சியில்லா எழுச்சியா?
வெறியில்லாமல் வெற்றியா?

காதல் மருந்து!


நினைத்ததெல்லாம்
கிடைக்கவில்லை
கிடைத்ததெல்லாம்
நிலைக்கவில்லை
நினைத்தது வேறு
நடந்தது வேறு
கேட்டது வேறு
கிடைத்தது வேறு!

இதுதான் வாழ்க்கையா
வெறுத்துவிட்டது எனக்கு
எத்தனைச் சுமைகள்
எத்தனைக் கஷ்டங்கள்
எத்தனைக் காயங்கள்
எத்தனை வலிகள்?

வலிக்கு மருந்தென
நினைத்து தவறுதலாக
நஞ்சைத் தேய்த்துவிட்டேன்
ஒவ்வொரு நொடியும்
மரித்துக்கொண்டிருக்கிறேன்!

எங்கே செல்லும்…? (16)


“இங்க இல்லை’னா உங்க வீட்லதான் இருப்பாங்க. என்ன விஷயம்?”

“ஒரு ஆள் உன்னை ரொம்பெ கேட்டதாச் சொன்னாங்க,” என்றுக் கூறி விஷமமாகப் புன்னகைத்தாள் தேவி.

“யாரு?” என்று எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் கேட்டாள் கவிதா.

“உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தடவை கோவில்ல என்னோட அக்கா ப்பிரண்ஸ்’னு ரெண்டு பேரைப் பார்த்தோமே?”

“ஆமா…”

“அதுல ஒரு ஆளு உன்னை ரொம்பெ கேட்டதாச் சொன்னாங்களாம்.”

“யாரு?” ஏதும் அறியாதது போல் கேட்டாள் கவிதா.

“ஐங்கரன். அதான் அன்னைக்குக் கூட வெள்ளை ஜிப்பா போட்டிருந்தாங்களே? பையன் நல்லா ஹாண்ஸ்சமா இருப்பான்’லா.”

கவிதாவால் அதற்கு மேல் விசயத்தை மறைக்க முடியவில்லை. தான் ஐங்கரனைத் திடலில் சந்தித்தது, கோவிலில் மீண்டும் தேவியின் உறவுப் பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது, அவனுடன் சாட் செய்தது, மீண்டும் கோவிலில் சந்தித்தது வரை அனைத்தையும் கதை போல கோர்வையாகக் கூறினாள்.

“ஹ்ம்ம்ம்… இவ்ளோ நடந்துருக்கா? என்கிட்ட சொல்லவே இல்ல…” என்றவாறு கவிதாவை ஏற இறங்கப் பார்த்தாள் தேவி. கவிதாவால் அவள் பார்வையைத் தாங்க முடியவில்லை.

“ஒன்னும் நடக்கல. நாங்க ஜஸ்ட் ப்பிரண்ஸ்’தான். நீ ஏதும் தப்பா எடுத்துக்காத. ஏதாவது இருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா?”

“உங்கள நம்ப முடியாது’டி. இவ்ளோ நடந்திருக்கு…என்கிட்ட ஒரு வார்த்தைச் சொன்னியா? எதுவுமே தெரியாத மாதிரி ஆக்டிங் வேற. இரு’டி. எனக்கும் நேரம் வராமலா போயிரும்.” என்று செல்லமாகக் கோபித்தாள் தேவி.

“கோவிச்சுக்காதடா செல்லம். இனிமே என்ன நடந்தாலும் உன்கிட்ட சொல்றேன்,” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் கவிதா. அதற்குள் பாட்டியின் குரல் கேட்கவே, தேவி கவிதாவிடமிடருந்து விடைப்பெற்றுச் சென்றாள்.

மறுபடியும் வெள்ளிக்கிழமை வந்தது. சங்கரி, கோமளாவுடன் கவிதா கோவிலுக்குச் சென்றாள். ஐங்கரனும் கோவிலில் இருந்தான். ஒரு சின்னப் புன்னகையோடு இருவரும் தலைத் தாழ்த்திக்கொண்டனர். ஆனால், கவிதாவின் குறும்புக் கண்களே நொடிக்கொரு தரம் ஐங்கரன் இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்தன.

அன்று கோவிலை வெட்டு வெளியாகும் முன்பு ஐங்கரன் தன்னுடன் அன்று போல் பேசுவான் என்று கவிதா பெரிதும் எதிர்ப்பார்த்தாள். அவன் பேசவே இல்லை. இவளும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள். அகத்தில் அழகு முகத்தில் தெரியும் அல்லவா? அவளின் முகவாட்டத்தைத் தோழிகள் இருவரும் கவனிக்கவே செய்தனர்.

“ஏய், என்னலா ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” என்று கேட்டாள் சங்கரி.

“ஒன்னுமில்லையே. நல்லாதான் இருக்கேன்,” என்று தன் முககுறிப்பை மறைக்க முயன்றாள் கவிதா.

“இல்ல! நானும் முதல்ல இருந்து கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஏன் ஒரு மாதிரி இருக்கே? ஐங்கரன் ஒங்கிட்ட பேசாதனாலா?” என்றாள் கோமளா.

“ச்சே, அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நான் எப்போதும் மாதிரிதான் இருக்கேன்,” என்று சமாளித்தாள் கவிதா.

“ஏய், பொய் சொல்லாதே. நீ எப்போதும் எப்படி இருப்பேன்’னு எங்களுக்குத் தெரியாதா? கவலைப்படாத! அவருக்குத் தெரிஞ்சவங்க யாராவது கோவில்ல இருந்திருப்பாங்க. அதனால கூட பேசாம இருந்திருக்கலாம் இல்லையா?” என்று அவளை சமாதானப்படுத்தினர் தோழிகள் இருவரும்.

அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலும் ஐங்கரன் அவளுடன் பேச முயற்சிக்கவில்லை. சிறு புன்னகையை உதிர்த்ததோடு நிறுத்திக்கொண்டான். எப்போது அவன் தன்னுடன் பேசுவான் என்ற ஏக்கம் கவிதாவை ஆட்கொண்டது. முகிலனிடம் யோசனைக் கேட்கலாம் என்றால் அவன் பாட்டி வீட்டுப் பக்கம் வருவதே இல்லை.

கவிதாவிற்கு ஐங்கரனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.

தொடரும்…