புதன், 18 மார்ச், 2009

எங்கே செல்லும்…? (18)


பழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது. ‘நவநீதன்!’ இந்தப் பெயரைக் கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன? உற்சாகத்தோடு அதற்கு மறுமொழி அனுப்பினாள். பின்னர் சிறிது நேரம் யார் யாருடனோ சாட்டிங் செய்து பொழுது போக்கினாள். காலங்கள் இறக்கைக் கொண்டுப் பறந்தன. ஐங்கரன் விட்டுச் சென்ற காயம் ஆறினாலும் அதன் வடு அவள் இதயத்தில் இருந்துக்கொண்டு அடிக்கடி உறுத்தவே செய்தது.

இதனிடையே முகிலனின் தங்கை குமாரி கவிதாவின் நெருங்கிய தோழியாக மாறினாள். ஒரே வயதாக இருப்பினும் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் பயின்று வந்தனர். பள்ளி நேரம் போக மீத நேரங்களில் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். இது கவிதாவின் நெருங்கியத் தோழியான தேவிக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. இருந்தும் கவிதாவும் குமாரியும் உறவினர்கள் ஆதலால், ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டாள்.

மூன்றாம் படிவ பி.எம்.ஆர். தேர்வு நெருங்கி வந்தது. குமாரி எந்நேரமும் புத்தகமும் கையுமாகத் திரிந்தாள். கவிதாவோ நண்பர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவழித்தாள். அனைவரும் உறங்கியப் பின்னர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்தாள். விடிந்த பின்பு போர்வைக்குள் சுருண்டாள்.

இதனால் கவிதாவின் உறவினர்கள் அனைவரும் அவளைக் கண்டிக்க தலைப்பட்டனர். குமாரியை உயர்வாகவும் கவிதாவைத் தாழ்த்தியும் பேசினர். பி.எம்.ஆர் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியாகின. கவிதா 8 ஏ’க்கள் பெற்று பள்ளியின் சிறந்த இந்திய மாணவியாகத் தேர்வுப் பெற்றிருந்தாள். குமாரியோ மிகச் சாதாரண நிலையிலேயே தேர்ச்சிப் பெற்றிருந்தாள்.

இது குமாரியின் தாய்க்குப் பொறாமையை உண்டு பண்னியது. தனது மகளைவிட தாய் தந்தையற்ற கவிதா எப்படி சிறப்புத் தேர்ச்சிப் பெற்றாள் என்று பொங்கி எழுந்தாள். அன்று முதல் கவிதாவிடம் விரோதம் பாராட்டினாள். குமாரியின் போக்கிலும் மாறுதல்கள் தென்பட்டன. நண்பர்களே உலகம் என்று வாழ்ந்துவந்த கவிதா இவர்களின் பொறாமைக் குணத்தை அறியவில்லை. எப்பொழுதும் போல் அனைவரிடமும் சகஜமாகப் பழகினாள்.

எதனையும் பெரிதுப்படுத்தாத கவிதாவின் பெருந்தன்மையான குணமே பின்னாளில் அவளுக்குப் பெருத்தத் துன்பங்களைத் தேடித்தரப் போகிறது என்பதை அவள் அறியவில்லை. நான்காம் படிவத்தில் காலடி எடுத்து வைத்த உடனேயே அவளுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பம் வந்து உயிர் வாங்கியது. குமாரியின் தாய் அவளுக்கு எமனாய் வந்து முன் நின்றாள்.

கவிதாவிற்குத் தெரியாமலேயே அவளது பாட்டியிடமும், உறவினர்களிடமும் கவிதாவைப் பற்றி தப்புத் தப்பாகக் கூறினாள். “அந்தப் பிள்ள ரொம்பெ மோசம்! கேட்குறதுக்கு ஆள் இல்லேன்னு கண்டவனுங்கக்கூட திரியுது! யாரும் அதக் கண்டிக்கறதே இல்ல! இப்படியே போனா நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறுடும்!” என்று இல்லாததும் பொல்லாததும் கூறினாள்.

உறவினர்கள் கவிதாவைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர். எதையும் நேருக்கு நேர் தைரியமாகப் பேசும் கவிதாவின் குணமே அவளுக்கு உறவினர் மத்தியில் கெட்டப் பெயரைச் சம்பாத்தித்துக் கொடுத்தது. எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து அவளை நோகடிக்க அனனவரும் குறியாய் இருந்தனர்.

“எங்கப் போயிட்டு வர்ற? ஏன் வெளியில போகணும்? என்ன வேலை? யாரைப் பார்க்கப் போற? யார் கூடப் போற?” என்று தொட்டத்திற்கெல்லாம் அவளது பாட்டியும் அவளைக் கேள்விக்கேட்க ஆரம்பித்துவிட்டார். இதனால் கவிதா ரொம்பவும் மனவுளைச்சலுக்கு ஆளானாள். தலை சாய்த்து அழுவதற்குத் தாயின் மடி கூட கிடைக்காமல் தவித்தாள். தன் மீது எந்தத் தவறும் இல்லை; தான் தப்பானப் பாதைக்குப் போகவில்லை என்பதை எடுத்துக்கூற அவளால் இயலவில்லை.

அதே சமயம் குமாரியின் செய்கை அத்துமீறிப் போய்க்க்கொண்டிருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு கண்ட கண்ட ஆடவருடன் ஊர் சுற்றினாள். அதே வேளை தன்னை ‘கவிதா’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு அவள் பெயரைக் கலங்கப்படுத்தினாள். கவிதாவுக்கும் குமாரிக்கும் கொஞ்சம் முக ஒற்றுமை இருந்ததால் பலர் குமாரியைக் கவிதா என்று எண்ணி அவள் செய்கையை நொந்துக்கொண்டனர். சிலர் நேரிடையாக கவிதாவின் தாத்தா பாட்டியிடமே முறையிட்டனர்.

நடப்பது என்னவென்று அறியாத கவிதா நிஜமாகவே குழம்பித்தான் போனாள். தன்னை ஏன் அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர்; நோகடிக்கின்றனர் எனபதை அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதற்கான பதில் அவளுக்குக் கூடிய விரைவிலேயே கிடைத்தது!

தொடரும்….

6 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி விட்டு

வழமை போல் ...

தொடரும் ...

புதியவன் சொன்னது…

//காலங்கள் இறக்கைக் கொண்டுப் பறந்தன. ஐங்கரன் விட்டுச் சென்ற காயம் ஆறினாலும் அதன் வடு அவள் இதயத்தில் இருந்துக்கொண்டு அடிக்கடி உறுத்தவே செய்தது.//

காயங்கள் ஆறினாலும் வடுக்கள் மறைவதில்லை தான்...கதையின் இந்தப் பகுதியும் நல்லா வந்திருக்கு...தொடருங்கள் பவனேஸ்வரி காத்திருக்கிறோம்...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//நல்ல ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி விட்டு

வழமை போல் ...

தொடரும் ...//

இந்தப் பகுதியை வெளியிடுவதற்குச் சற்று காலதாமதமாகிவிட்டது. பொறுமையுடன் இருந்து படித்தமைக்கு நன்றி. கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//காலங்கள் இறக்கைக் கொண்டுப் பறந்தன. ஐங்கரன் விட்டுச் சென்ற காயம் ஆறினாலும் அதன் வடு அவள் இதயத்தில் இருந்துக்கொண்டு அடிக்கடி உறுத்தவே செய்தது.//

//காயங்கள் ஆறினாலும் வடுக்கள் மறைவதில்லை தான்...கதையின் இந்தப் பகுதியும் நல்லா வந்திருக்கு...தொடருங்கள் பவனேஸ்வரி காத்திருக்கிறோம்...//

தங்களை நீண்ட நாட்கள் காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன். கருத்துக்கு நன்றி நண்பரே.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இந்தப் பகுதியை வெளியிடுவதற்குச் சற்று காலதாமதமாகிவிட்டது. பொறுமையுடன் இருந்து படித்தமைக்கு நன்றி. கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே.\\

இந்த முறை சீக்கிரம் போட்டுடுங்கோ

ஆதரவுகள் என்றென்றும் தொடரும் என்பதை விட
உங்கள் எழுத்துக்களை எங்களுக்கு ரசிக்கும் படியாக அறியதந்தமைக்கு தங்களுக்கே நன்றி

தொடருங்கள் தொடரை ...

ரூபன் தேவேந்திரன் சொன்னது…

அது எப்படி பவா உங்களுக்கு மட்டும் மளமளவென்று இப்படி பின்னூட்டம் குவியுது? கொஞ்சம் பொறாமையா இருக்கு