வியாழன், 28 நவம்பர், 2013

கி.ராஜநாராயணன் கதைகள்


கேள்விப்படாத எழுத்தாளராக இருந்தும் நிறைய எழுதியிருக்கிறாரே என்ற எண்ணத்தில்தான் மொத்தம் 81 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைப் புத்தகத்தைச் சென்னையில் வாங்கினேன். நாவல்களைப் படித்து முடிப்பதில் இருக்கும் ஆர்வமும் சுறுசுறுப்பும் சிறுகதைகள் வாசிப்பதில் எனக்கு இல்லாமல் போனது வியப்புதான். எனவே சில நாட்களுக்குப் பிறகே தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்து முடிக்க முடிந்தது.

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த எழுத்தாளரின் அனைத்துச் சிறுகதைகளும் கிராமங்களையும், கரிசல்காடுகளையுமே தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் முக்கியக் கதாப்பாத்திரங்கள் குறிப்பிட்ட சாதியினரையும் (நாயக்கர்), அவர்களின் பேச்சு வழக்குமுறைகளையும் மையமாகக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தற்போது வழக்கில் இல்லாத, சில புதுமையான சொல் வழக்கங்களையும் சொற்களையும் நம்மால் அறிந்துக்கொள்ள முடிகிறது. உதாரணமாக ‘கோட்டி’ என்ற சொல்லை என் வரையில் நான் கேள்விப்பட்டதில்லை. பைத்தியம் என்பதைத் தான் கோட்டி என்று அழைக்கின்றனர் என்பதனை இக்கதைகளின் மூலம் அறிந்துக் கொண்டேன். மேலும், ’சம்சாரிகள்’ என்றால் விவசாயிகள் என்று பொருள்படும் என்பதனையும் அறிய நேர்ந்தது. அதனைப் போன்று இன்னும் எத்தனையோ சொற்கள் இச்சிறுகதைகளில் கையாளப்பட்டிருக்கின்றன.

கதைகள் சம்சாரிகளின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகின்றதே தவிர, ஒருசில கதைகளில் எந்தச் சமுதாயக் கருத்தினையும் காண முடியவில்லை. சில கதைகள் ஏன், எதற்காக எழுத்தப்பட்டன என்றே விளங்கவில்லை. ஏதோ எழுதியே ஆக வேண்டும் என்ற மயக்கத்தில் கிறுக்கி வைத்தவைகளாகவே அவை விளங்குகின்றன. இருந்த போதிலும், சில கதைகளில் கதைக்களம் செம்மையாக அமைக்கப்பெற்று மக்களுக்குப் படிப்பினையும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. 81 கதைகள் கொண்டிருந்த போதிலும் இத்தொகுப்பிலுள்ள ஒன்றிரண்டு கதைகளே மனதில் நிலைத்து நிற்கின்றன. மற்றவை படித்தவுடன் மறந்தும், மறைந்தும் விடுகின்றன.


மிகவும் பொறுமை உள்ளவர்கள் ஆர அமர ஒவ்வொன்றாக இக்கதைகளைப் படிக்கலாம். சுவாரஸ்யம் குறைவாகவே இருப்பதனாலும், கதைகள் கடந்த நூற்றாண்டு கரிசல்காட்டு நாயக்கமார்களைச் சுற்றி வருவதாலும், இன்றைய இளைய தலைமுறை இதனை விரும்பி வாசிக்குமா என்பது கேள்விக்குறியே.