புதன், 30 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 4)
சுமார் 5 நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் அவளுடன் நான் கதைத்திருந்தேன். “சரியம்மா, வீட்டிலிருந்து ஆட்கள் வந்திருந்து எமக்காகக் காத்திருப்பார்கள். நான் விடைப்பெறுகிறேன்,” என்றேன். “ஒரு நிமிடம் அக்கா,” எனச் சொல்லி தனது தோள்பையில் கையை விட்டு எதையோ துளாவினாள். பின்னர், சாக்லெட் ஒன்றை எடுத்து என் கைகளுக்குள் திணித்தாள். நன்றி சொல்லி புன்முறுவல் செய்தேன். அவளுக்குக் கொடுப்பதற்கு எனது கைப்பையில் எதுவுமில்லை. அனைத்துப் பொருட்களும் எனது பெரிய பைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தன. கண்ணா அண்ணாவும், பாக்கியா அக்காவும் வந்திருக்கிறார்களா என அறிந்துக்கொள்ள நான் வரவேற்பாளர்கள் காத்திருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தேன். சுமதியும் என்னுடனேயே வந்தாள். அவளது தம்பி தள்ளு வண்டியை எம்மிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவர்களது அன்பை எம்மால் புறக்கணிக்க முடியவில்லை.

நான் அவர்கள் இருவரிடமும் கதைத்துக் கொண்டே நடந்துக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ எம்மைப் பிடித்து இழுக்கவும், திரும்பிப் பார்த்தேன். சித்தி நின்றுக்கொண்டிருந்தார். பக்கத்தில் கண்ணா அண்ணா. பார்த்த வேகத்தில் சித்தியையும் கட்டி அணைத்தேன். சித்தியுடைய குழந்தைகள் இருவரும் உடன் வந்திருந்தனர். பாக்கியா அக்காவின் அம்மாவும் இம்முறை வந்திருந்தார். என் ஒருத்தியை அழைத்துச் செல்ல இத்தனைப் பேர் வந்திருக்கிறார்களே என இனம் புரியாத மகிழ்ச்சிப் படர்ந்தது. அதே வேளை, திருமண காலத்தில் வேலைகளை விட்டுவிட்டு எம்மை அழைத்துச் செல்வதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்களே என வருத்தமாகவும் இருந்தது. அவர்களுக்கு சுமதியையும் அவளது தம்பியையும் அறிமுகப்படுத்தி வைத்தேன். பின்னர் அவர்கள் இருவரும் விடைப்பெற்றுச் சென்றனர்.

கண்ணா அண்ணா எனது பொருட்களை எல்லாம் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பிறக்கப் போதும் குழந்தைக்காக நான் வாங்கி வந்திருந்த மெத்தையை எல்லாரும் பார்த்துவிட்டனர். “பவா யாருக்காக மெத்தையெல்லாம் கொண்டு வந்திருக்கிறியள்?” என சித்தி கேட்க. “அக்கா குழந்தைக்கு,” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன். கண்ணன் அண்ணா முகத்தில் வெட்கம் படர்ந்தது. “அக்காவுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று தெரியுமா? நீல நிற மெத்தை வாங்கி வந்திருக்கிறாயே,” என அம்மா கேட்டார். “அதெல்லாம் தெரியாது. நீல நிறம்தான் அழகா இருந்தது,” என்றேன்.

மழை லேசான தூறல் விட ஆரம்பித்தது. அனைவரும் மகிழுந்தில் ஏறி அமர்ந்தோம். பாக்கியா அக்காவும், கவிதாவும் திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றிருப்பதாக அம்மா கூறினார். போகும் வழியும் மாப்பிள்ளை வீட்டாருக்குச் சமைப்பதற்காகக் கோழியும், முட்டைகளும் வாங்கிக் கொண்டனர். கோழி விற்கும் அந்தக் கடையில் ‘சிக்கன், மட்டன் இங்கே கிடைக்கும்’ என எழுதப்பட்டிருந்தது. கோழி, ஆடு என்று தமிழில் எழுதாமல் ஏன் இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என சற்று வருத்தமாக இருந்தது. தமிழகத்தில் தமிழின் நிலையை நினைத்து நொந்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். சாலையின் குறுக்கும் நெடுக்கும் ஓடும் வாகனங்களும், புகையும், சத்தங்களும் நான் சென்னையில் இருப்பதை அறிவுறுத்துக் கொண்டிருந்தன.

கண்ணா அண்ணாவிடம் எனக்குப் புதிய தொலைப்பேசி எண்கள் எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சரியென்றார். வீட்டை அடைந்தவுடன் சித்தியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பாக்கியா அக்காவும் கவிதாவும் இல்லாததால் சற்று வெறுமையாகத் தோன்றியது. சித்தியிடமும் அம்மாவிடமும் அவர்கள் இருவரும் எப்போது வருவார்கள் என நொடிக்கொரு தரம் கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்த கவிதாவையும் தாவி அணைத்துக் கொண்டேன். அவள் முகத்தில் திருமண கலை குடிக்கொண்டிருந்தது. “அவர் வந்திருக்கிறார். வெளியே நிற்கிறார். உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். வந்துப் பாருங்கள் அக்கா,” என வெட்கத்தோடு கூறினாள்.

நானும் வெளியே சென்று மாப்பிள்ளையைப் பார்த்து சில நிமிடங்கள் கதைத்துவிட்டு உள்ளே வந்து விட்டேன். அதிகம் கதைக்கவில்லை. என்ன பேசுவதென்று எனக்கே தெரியவில்லை. பயணத்தைப் பற்றியும் திருமண ஏற்பாடுகள் குறித்து மட்டும் மேலோட்டமாக கேட்டு வைத்தேன். மாப்பிள்ளையின் சொந்தக்காரர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரவேண்டும் என்று மாப்பிள்ளையுடன் கவிதாவும் சென்றுவிட்டாள். பாக்கியா அக்காவின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது. இருப்பினும், கடைகளில் அலைந்துத் திரிந்ததால் சற்று களைத்திருந்தாள். சற்று பெரிதாகத் தெரிந்த அவரது வயிற்றை கை வைத்து மென்மையாகத் தடவிப் பார்த்தேன். அவர் என் கையினை பிடித்து வயிற்றில் அழுத்தி வைத்தார். எமக்கு உடல் சிலிர்த்தது. அக்காவின் மேல் எமக்கிருந்த பாசம் மேலும் அதிகரித்தது. இந்தச் சின்ன உடல் இன்னொரு உயிரை எப்படிச் சுமக்கப்போகிறது என்ற கவலையும் உடன் வந்துச் சேர்ந்தது.

நான் பிறக்கப் போகும் குழந்தைக்காக வாங்கி வந்திருந்த மெத்தையை எடுத்து அக்காவிடம் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியில் திளைத்துப் போனார். “நான் அத்தானிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். என்ட பிள்ளைக்கு பவா என்ன வாங்கி வரா’னு பார்க்கணும்’னு. நாங்க கேட்காமலேயே வாங்கி வந்துட்டா,” என்று பூரித்தார். அந்த சமயத்தில் திறந்திருந்த எனது பையிலிருந்து எட்டிப்பார்த்த ‘சிவாஸ்’-சை அம்மா பார்த்துவிட்டார். “இது யாருக்கு?” என அவர் கேட்க, நான் பட்டென்று, “கண்ணன் அண்ணாவுக்கு,” என்று உடைத்துவிட்டேன். அம்மாவின் முகம் நொடிப் பொழுதில் மாறிப்போனது. ஆஹா, தப்பு பண்ணிவிட்டோமே என நினைக்கத் தோன்றியது. உடனே பாக்கியா அக்கா, “அத்தானுடை நண்பர்களுக்காக இருக்கலாம். பாலா அண்ணா கேட்டுக்கொண்டே இருந்தார்,” எனக் கூற, “அப்படியும் இருக்கலாம்,” என நானும் சமாளித்தேன்.

நேரமாகிக் கொண்டிருந்தால் நீராட எழுந்துச் சென்றேன். நான் குளித்துவிட்டு வரும் போது மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். களைப்பாக இருந்ததால் அப்படியே மெத்தையில் படுத்துவிட்டேன். அறைக்குள் பாக்கியா அக்கா வந்து வரவேற்பறைக்கு என்னை இழுத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அங்கேயிருந்த படிக்கட்டில் அமர்ந்துக்கொண்டேன். அனைவரும் சாப்பிட ஆரம்பித்த வேளையில் சித்தி எனக்கும் உணவுத்தட்டைக் கொண்டு வந்தார். அதனைப் பார்த்த கண்ணன் அண்ணா, “புலிக்குட்டிக்குத் தீட்டி (ஊட்டி) விடுங்கோ சித்தி,” என அனைவர் முன்னிலையும் கூற எனக்கு வெட்கமாகிப் போனது.

நான் வேண்டாம் என்று மறுத்தும் அண்ணா மற்றும் சித்தியின் வற்புறுத்துதலால் இறுதியில் இணங்க வேண்டியதாயிற்று. உண்மையில் சொல்லப் போனால், அவர்கள் எனக்குத் தீட்டி விடுவதை நான் பெரிதும் விரும்பினேன். ஏதோ சொல்ல முடியாத பாசப்பிணைப்பில் கட்டுண்டுக் கிடந்தேன். அந்த வேலை பாக்கியா அக்கா ஒரு குவளை முழுக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கண்ணன் அண்ணா அடிக்கடி நான் சாப்பிடுகிறேனா என்று பார்த்து, “நல்லா தீட்டுங்கோ,” என சித்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பாச மழையில் நான் நனைந்துக் கொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ வந்த எம்மீதே இவ்வளவு பாசம் வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள் என மனம் நெகிழ்ந்துப் போனேன். பின்னர் கவிதாவிற்கும், சித்தியின் பிள்ளைகளுக்கும் நான் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களையும், இனிப்பு வகைகளையும் வழங்கினேன். நான் வீட்டுப் பெண்களுடன் கதைத்திருந்த வேளையில் கண்ணன் அண்ணா வெளியே சென்று கைப்பேசி எண்கள் வாங்கிக் கொண்டு வந்தார். மலேசிய நேரம் பின்னிரவு 2.30 மணியாகிவிட்டது. தொலைப்பேசி எண்கள் கிடைத்ததும் தோழர் அருண்ஷோரிக்குக் குறுந்தகவல் அனுப்பி எமது வருகையைத் தெரியப்படுத்திவிட்டு அப்படியே உறங்கிவிட்டேன்.

அதிகாலை 6 மணிக்கே அங்கே விடிந்துவிட்டது எமக்கு விழிப்பு வந்துவிட்டது. குளித்து, உடைமாற்றி வீட்டின் வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். இம்முறையில் காலை உணவை சித்தி எமக்கு ஊட்டி விட்டார். அம்மா பாக்கியா அக்காவுக்கு உணவு ஊட்டிவிட்டார். உண்டு முடித்த பிறகு, நானும் பாக்கியா அக்காவும், சித்தியின் குழந்தை திவ்யாவிற்கு காலை உணவை மாறி மாறி ஊட்டிவிட்டோம். அவர்களின் குடும்பச் சூழல் எம்மை மிகவும் கவர்ந்திருந்தது.

அன்று கீரா அண்ணா தமது வீட்டில் மதிய உணவை உட்கொள்ளுமாறு எம்மை அழைத்திருந்தார். எனவே, காலை உணவை முடித்துக்கொண்டு விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்குச் செல்ல தயாரானேன். சென்ற முறை தமிழகம் சென்ற போது அவரது மனைவி குழந்தைகளைச் சந்திக்க இயலவில்லை. எனவே இம்முறை முன்னெச்சரிக்கையாக அவரது குழந்தைகளுக்கு இனிப்புக்களும் அண்ணாவுக்கும் அவரது தோழர்களுக்கும் மேற்சட்டையும் வாங்கிச் சென்றிருந்தேன். கண்ணன் அண்ணா விருகம்பாக்கத்தில் இருந்த இளங்கோ நகர் பேருந்து நிறுத்தம் வரையில் எம்மை மகிழுந்தில் கொண்டுச் சென்றுவிட்டார். அவ்விடம் கீரா அண்ணாவும், அவரது கதாநாயகன் (பச்சை என்கிற காத்து) வாசனும் எமக்காகக் காத்திருந்தனர்.

வியாழன், 24 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 3)
விமானம் ஆகாயத்தில் பறந்துக்கொண்டிருந்தது. விமானப் பணிப்பெண் ஒருவர் பயணிகள் பயண விபர அட்டை ஒன்றை அனைவரிடமும் கொடுத்துப் பூர்த்திச் செய்யச் சொன்னார். எனது கைப்பையில் எப்போதும் பேனா வைத்திருக்கும் பழக்கம் இருப்பதால், அட்டையைப் பெற்றவுடன் நானும் அதனைப் பூர்த்தி செய்யத் தொடங்கிவிட்டேன். எமது பக்கத்தில் அமர்ந்திருந்த மாதுவும் ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார். அடிக்கடி அவர் நான் என்ன எழுதுகிறேன் என்று கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அவரது அட்டையைப் பார்த்தேன். அவர் பல விபரங்களைப் பூர்த்தி செய்யாமல் தடுமாறுவதைப் புரிந்துக் கொண்டேன்.

நான் பார்ப்பதை அவர் பார்த்ததும் புன்னகைப் புரிந்தார். நானும் சிரித்தேன். எனது அட்டையை அவரிடம் கொடுத்து இப்படி எழுத வேண்டும் என ஆங்கிலத்தில் கூறினேன். அவர் ஆங்கிலத்தில் பேச சற்றுத் தடுமாறினார். “தமிழ் தெரியுமா” எனக் கேட்டேன். தமக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும் ஆங்கிலம் புரியும் என்றும் கூறினார். சரியென்று அவர் பூர்த்தி செய்ய வேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டினேன். நன்றி சொல்லிவிட்டு எம்மைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்தார். வழக்கமாக வழிப்பயணிகள் கேட்கும் கேள்விகள்தான். நானும் பதிலளித்தேன். உறக்கமின்மையாலும், களைப்பாலும் இமைகள் கனக்க ஆரம்பித்தன. கையோடு கொண்டு வந்திருந்த போர்வையை முழுக்கப் போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டேன்.

நான் கண் விழிக்கையில் விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழக நேரம் சரியாக மாலை மணி 5.25-க்கு விமானம் சென்னையை அடைந்தது. வெளிநாட்டுப் பயணிகள் வேறு ஒரு வரிசையில் நிற்க வேண்டும் என்பதனால், கடப்பிதழ் பரிசோதிக்கும் முன்னரே இராஜ்குமாருக்கு நன்றி கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். வரிசை சற்று நீளமாக இருந்தது. இதற்கு முன்னர் சென்னை வந்த அனுபவம் இருந்ததால் சூழல் எதுவும் புதுமையாக இல்லை. எனது மலேசிய கைப்பேசி அட்டையைக் கலட்டிவிட்டு முன்பு தமிழகத்தில் நான் உபயோகித்த ‘யுனிநோர்’ கைப்பேசி அட்டையைப் அழைப்பேசியில் பொருத்தினேன். எண் பதியப்படவில்லை என்ற செய்தி வந்தது. இனி அந்த எண்களை நான் மீண்டும் பயன்படுத்த முடியாது. வெளியில் உள்ளவர்களை எவ்வாறு தொடர்புக் கொள்வது? சரி, ஏதாவது வழி இல்லாமலா போய்விடும் என மனதைத் தேற்றிக்கொண்டேன்.

கடப்பிதழ் சரிப்பார்க்கப்பட்டு, பயணப் பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்திற்குச் சென்றேன். இந்த முறை 3 பைகள் அல்லவா கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா என்ன? ஏற்கனவே நடந்தது போல, நான் பைகளைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டுச் செல்லவும், சுங்கத்துறை அதிகாரி இருவர் எம்மை நெருங்கி வந்து, “உங்கள் பைகளை நுண்கூறு மேவுதல் (ஸ்கேன்) செய்ய வேண்டும்,” என்று ஆங்கிலத்தில் சொன்னனர். “எனக்கு முன் கூட்டியே தெரியும். எனது பைகளை நுண்கூறு மேவுதல் செய்வதுதான் உங்களுக்கு வழக்கமான ஒன்றாயிற்றே. மற்ற பயணிகளை விட்டுவிட்டு எதற்கு எனது பைகளை மட்டும் திரும்பத் திரும்ப நுண்கூறு மேவுதல் செய்ய வேண்டும்? இனி இந்த விமான நிலையத்திற்கே நான் வரப்போவதில்லை,” என கூச்சலிட்டவாறு வெறுப்புடன் நுண்கூறு மேவுதல் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றேன்.

நான் சத்தமிடவும் சாதரண உடையணிந்த மற்றும் இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்விடம் விரைந்து வந்தனர். “என்ன ஆனது? ஏதாவது பிரச்சனையா?” என ஒரு அதிகாரி கனிவுடன் கேட்டார். இருந்த கடுப்பில், “சென்னை விமான நிலையத்திற்கு நான் இரண்டாவது முறையாக வருகிறேன். முன்பு வந்த போதும் மற்ற பயணிகளை விட்டுவிட்டு எனது பைகளை மட்டும் சோதனை செய்தார்கள். இப்பொழுதும் அப்படியே செய்கிறார்கள். என்னைப் பார்க்க உங்களுக்கெல்லாம் எப்படித் தெரிகிறது? இவர்கள் எம்மை நடத்தும் விதம் வெறுப்படையச் செய்கிறது,” என படபடவெனக் கொட்டிவிட்டேன். அந்த அதிகாரி பவ்யமாக “எந்த நாட்டிலிருந்து வருகிறீர்? என்ன விடயமாக வந்தீர்? எங்குத் தங்கப் போகிறீர்? எத்தனை நாட்கள் இருப்பீர்? என்ன தொழில் செய்கிறீர்? இதற்கு முன்பு இங்கு வந்து என்ன செய்தீர்?” என உரையாடுவது போல் கேள்விகள் தொடுத்தார். அது உரையாடல் போன்று தோற்றமளிக்கும் விசாரணை என்று தெரியாமல் இருக்க நான் அடிமுட்டாள் அல்லவே?

நானும் அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் முறையே பொய்யான பதில்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். அது ஒரு உரையாடல் என்பதற்கு அடையாளமாக நானும் சில கேள்விகள் கேட்டு வைத்தேன். பிறகுதான் அவர்கள் இருவரும் சுங்கத்துறைப் புலனாய்வாளர்கள் என்பது தெரிய வந்தது. நான் பையைத் தூங்கி நுண்கூறு மேவும் இயந்திரத்தில் வைக்கப் போனேன். “ஏதாவது உதவி வேண்டுமா?” என அவர்கள் இருவரும் கேட்டனர். “தேவையில்லை. என்னால் முடியும். நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகின்றீர்கள். இதற்கு முன்பு இவ்விடம் இருந்தவர்கள் பயணிகள் வெறுப்படையும் அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக்கொண்டனர்,” என எமது முந்தைய அனுபவங்களை விவரித்தேன். அவர்கள் அதற்காக வருத்தம் தெரிவித்தனர்.

அவர்கள் எம்மிடம் கனிவுடன் நடந்துக் கொண்டதால் எமது கோபம் அப்போது தணிந்திருந்தது. விடைப்பெறுமுன் அவர்களது பெயர்களைக் கேட்டேன்; சொன்னார்கள். “நீங்கள் தமிழ், நீங்கள் தெலுங்கா?” என இருவரையும் பார்த்துக் கேட்டேன். அவர்கள் சற்று திகைத்தனர். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டனர். “உங்கள் பெயர்களே உங்கள் இனத்தை அடையாளப்படுத்திவிட்டன,” என்று சொல்லி, தெலுங்குக்காரர் பக்கம் திரும்பி, “உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என கேட்டேன். அவர் தெரியும் என்று சொல்லவே, “முன்பே சொல்லியிருந்தால் தமிழிலேயே பேசியிருக்கலாமே?” என்று தமிழில் சொன்னேன். இவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் பேசியிருந்தபடியால் சற்று நேரம் தமிழில் அவர்களுடன் கதைத்துவிட்டு விடைப்பெற்றேன்.

நான் விமான நிலையத்திலிருந்து வெளியாகும் போது யாரோ ஒரு பெண் தூரத்தில் இருந்து கையசைப்பது தெரிந்தது. நடந்துக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தேன்; யாருமில்லை. அப்படியானால் அந்தப் பெண் என்னை நோக்கித்தான் கையசைக்கிறாள் என்பதனை ஒருவாறு யூகித்துக்கொண்டேன். யாராக இருக்கும் என எண்ணியவாறு நானும் கையசைத்தேன். அப்பெண்ணை நெருங்க நெருங்க அவள் யாரென்பதை அறிந்துவிட்டேன். இந்தச் சந்திப்பினை நான் எதிர்ப்பார்க்கவில்லை. சுமதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) எனக்கு முகநூலில் அறிமுகமான பெண். இந்தப் பெண் எம்மீது கொண்டிருக்கும் அன்பு அபூர்வமானது. ‘அக்கா, அக்கா’ என்று சதா நேரமும் எனது முகநூலில் செய்தி அனுப்பிக்கொண்டிருப்பாள். தனக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன் எனவும், என்னைப் போல் தானும் ஆளாக வேண்டும் எனவும் பிதற்றுவாள். ஒரு முறை எனக்காக ‘இரசிகர் பக்கம்’ வேறு முகநூலில் திறந்திருந்தாள். அதெல்லாம் வேண்டாம் என நானே எடுக்கச் சொன்னப் பிறகு தான் அவற்றை நீக்கினாள்.

நான் சென்னைக்கு வருவதாக அவளுக்குச் சொல்லியிருந்தேன். விமானம் வந்திறங்கும் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தேன். சுமதி அவளது வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்திருந்தாள். நேரம் அதிகம் இல்லாததாலும், குறுகிய கால பயணம் என்பதாலும் எம்மால் இம்முறை வர இயலாது என்று சொல்லியிருந்தேன். “ஒரு 5 நிமிடமாவது உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசையாய் இருக்கிறது அக்கா. நானே விமான நிலையம் வந்துப் பார்க்கிறேன். 5 நிமிடம் கூட போதும்,” என அவள் சொன்ன போது அது எனக்குச் சற்றுப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. “சரி, பார்க்கலாம்,” என சொல்லி வைத்தேன். ஆனால், நிஜமாகவே அந்தப் பெண் இவ்வளவு தூரம் எம்மைப் பார்க்க வருவாள் என நான் நினைக்கவில்லை.

நான் விமான நிலைய நுழைவாயிலை விட்டு வெளியே வரவும் சுமதி முகத்தில் பரவசம் பொங்க என்னருகே சிறுப்பிள்ளை போல் குதூகலத்துடன் ஓடி வந்தாள். “அக்கா…” என்றாள். மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றவாறு , “சுமதி?” என கேட்டேன். தலையாட்டினாள்; அவள் கண்கள் கலங்கின. நான் நிலைத் தடுமாறிப் போனேன். “என்னம்மா?” என அப்படியே அவளை வாரி அணைத்தேன். அவளது தடையையும் மீறி கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. “ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?” என பதற்றத்துடன் கேட்டேன். “ஒன்றுமில்லை அக்கா. உங்களைப் பார்த்த சந்தோஷம்,” என அவள் கூறிய போது நான் நெகிழ்ந்துப் போனேன். “இதிலென்ன இருக்கிறது? நான் சாதாரணப் பெண். இதற்காக எதற்கு அழுகிறாய்? அழாதே,” என அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன்.

“மன்னிச்சிருங்க அக்கா… நான் அழலை. அது பாட்டுக்கு வருது. எனக்கு ரொம்பெ சந்தோஷமா இருக்கு,” என்றவள், எதையோ மறந்துவிட்டவள் போல் அவ்விடம் சிறிது தள்ளி நின்றுக்கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து, “டேய், இங்க வா,” என அழைத்து, “அக்கா, இது என் தம்பி,” என அறிமுகம் செய்து வைத்தாள். “யாருடன் வந்திருக்கிறீர்கள்,” எனக் கேட்க, “நாங்கள் இருவர் மட்டும்தான்,” என பதில் சொன்னாள். அவள் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது. ஆனால், கண்களின் ஓரத்தில் இன்னமும் நீர் அரும்பியிருந்தது.

செவ்வாய், 22 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 2)
“நீங்கள் எப்போதும் இப்படித்தானா?” நான் சாப்பிட்டு முடிந்தவுடன் அவன் திடீரென்று இப்படிக் கேட்டான். அவன் எதைக் கேட்கிறான் என்று அனுமானிக்க முடியவில்லை. இருந்தாலும் அவன் கேட்ட தொனியும் அவனது முகபாவனையும் பார்க்க எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. வாய்விட்டுச் சிரித்து, “என்ன கேட்கிறீர்,” என்றேன். “நீங்கள் அதிகம் பேசுவதில்லை. எப்போதுமே இப்படித்தானா இல்லை நான் அதிகம் பேசிக் கரைச்சல் கொடுக்கிறேனா? எதுவாக இருந்தாலும் இப்போதே சொல்லிவிடுங்கள். முகநூலில் எதையும் எழுதி வைக்காதீர்கள்,” என கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

அவனுக்கு நான் பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தேன். இதற்கு முன்னும் இப்படிச் சிலர் முகநூலில் தங்களைப் பற்றி எழுத வேண்டாம் எனச் சொன்னது நினைவு வந்தது. அவனுக்கு எந்தவொரு வாக்குறுதியும் நான் வழங்கவில்லை. அந்தப் பேச்சிலிருந்து விடுப்பட விரும்பி, “நேரமாகிறது, உள்ளே செல்வோமா?” என எழுந்தேன். அவனும் உடன் எழும்பி வந்தான்.

குடிநுழைவு மற்றும் சுங்கத்துறையினரின் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு பயணிகள் காத்திருக்கும் இடத்திற்குச் சென்றோம். மலேசியாவிலிருந்து வரும் போது கண்ணன்  அண்ணா ‘சரக்கு’ (மது பாட்டில்) வாங்கிவரச் சொல்லியிருந்தார். “நான் மதுபாட்டில் வாங்க வரிவிலக்குக் கடைக்குச் செல்கிறேன். நீங்கள் ஏதாவது வாங்க வேண்டுமா?” எனக் இராஜ்குமாரைக் கேட்டேன். “நானும் வருகிறேன்,” என உடன் வந்தான். உள்ளே விதம் விதமான பாட்டில்களிலும் வர்ணங்களிலும் பல வகையான மதுபான வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் ஒவ்வொரு பாட்டிலாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் என் பின்னாலேயே வந்துக்கொண்டிருந்தான்.

“இதில் இருக்கிற முக்கால் வாசி மதுபானங்களை நான் குடித்திருக்கிறேன்,” என தனது சொந்தப் புராணத்தைப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் அவனை அதிகம் சட்டைச் செய்யாது, பாட்டில்களை நோட்டம் விடுவதிலேயே குறியாய் இருந்தேன். சட்டென்று, “உங்களுக்கு எந்த மதுபானம் பிடிக்கும்?” எனக்கேட்டான். “நான் குடிப்பதில்லை,” ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு, ஒரு மது பாட்டிலை கையில் ஏந்தினேன். “உண்மையாகவா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே,” என்று என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

இவனும் ஒரு புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்து அதன் உள்ளடகத்தை எடைப் போடுபவன்தான் என்பதனை அப்போதே உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் அணிந்திருந்த உடையும், எனது தோற்றமும் அவனை அவ்வாறு எண்ணச் செய்திருக்கலாம். ஒரு வேலை நான் சேலைக் கட்டி வந்திருந்தால் அவன் பார்வை வேறு விதமாக இருக்குமோ என்றுக்கூட எண்ணத் தோன்றியது.

“யாரிடமும் எதற்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் குடிப்பதில்லை. அதற்காக குடித்ததே இல்லை எனக் கூறவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அதன் சுவை எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள குடித்துப்பார்த்திருக்கிறேன். ஒரு முறை குடித்த பானத்தை நான் மீண்டும் சுவைப்பதில்லை. அதன் சுவை எனக்குத் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு இவைகளை நான் தொடுவதில்லை,” என்றேன்.

“எப்போதாவது கூட குடிக்க மாட்டீர்களா?” என்றான். “மாட்டேன்,” என்று உறுதியாகக் கூறினேன். அவன் அதனை நம்புவதாகத் தெரியவில்லை. அவன் நம்பவேண்டும் என நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. அவன் கேட்டக் கேள்விக்கான பதிலை நான் தந்துவிட்டேன். அதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவனைப் பொறுத்ததல்லவா?

கடை முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு ‘சிவாஸ்’ என்ற முத்திரையைக் கொண்ட மதுபானத்தை வாங்கினேன். பின்னர் இருவரும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தோம். அவன் மேலும் ஏதோ பேசினான். அதில் எதிலும் என் மனம் இலயிக்கவில்லை. அவனுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்துச் சென்னைக்குச் சென்றதும் கண்டிப்பாகத் தொடர்புக்கொள்ளச் சொன்னான். சரி என்று வாங்கிக் கொண்டேன்.

திடீரென புதிய எண்களிலிருந்து எனது கைப்பேசிக்குக் குறுந்தகவல் வந்தது. அதற்கு பதில் எழுதாமல் வைத்துவிட்டேன். சற்று நேரம் சென்ற பிறகு மீண்டும் அதே எண்களிலிருந்து இன்னொரு குறுந்தகவல் வந்தது. அதையும் படித்துவிட்டு அப்படியே வைத்தேன். இப்பொழுது அதே எண்களிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. புதிய எண், புதிய ஆணின் குரல். யாராக இருக்கும்? கேட்டேன். “நீங்கள் கடைசியாக யாருடைய பெயரை உச்சரித்தீர்கள்?” எனக் கேட்டார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “தெரியவில்லை, சொல்லுங்கள்,” என்றேன். “சென்னைக்கு எத்தனை மணிக்குச் செல்கிறீர்? சுங்கத்துறை பரிசோதனை எல்லாம் முடித்தாகிற்றா?” என மிகவும் நெருக்கமானவர் போல் பேச ஆரம்பித்தார். எப்படி எமது பயணம் இந்த அந்நிய நபருக்குத் தெரிந்தது என்ற குழப்பத்துடன், குரல் தடிக்க, “நீங்கள் யாரென்று சொல்லுங்கள். இல்லையேல் எம்மை அழைத்துத் தொந்தரவு செய்ய வேண்டாம்,” எனக் கூறவும் அவர் சற்று இறங்கி வந்தார்.

“நான்தான் சூர்யா,” என்றார். “எந்த சூர்யா,” எனப் பட்டெனக் கேட்டேன். “சற்று நேரத்திற்கு முன்னர் எனக்கு நன்றி கூடச் சொன்னீர்கள். அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்கள் பயணப் பைகளை வைக்கும் இடத்தில்,” என அவர் சொல்லும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது. “ஓ, சூர்யா. சொல்லுங்கள்! உங்களுக்கு எப்படி என்னுடைய எண்கள் கிடைத்தது,” என சற்று வியப்புடன் கேட்டேன். “ரொம்பெ சுலபம். நான் ஏர் ஆசியாவில் வேலை செய்கிறேன். சற்று முன்னர்தான் உங்கள் பயண விபரங்களைச் சரிபார்க்க உங்கள் கடப்பிதழைக் கொடுத்தீர்கள். அதிலிருந்து எங்கள் கணினியில் உங்கள் விபரங்களைப் பெறுவது அவ்வளவு கடினமான வேலை இல்லை,” என சிரித்துக்கொண்டே கூறினார்.

“ஓ, அப்படியா. இப்படித்தான் மற்ற பயணிகளின் விபரங்களைப் பெற்று அழைத்துப் பேசுவீர்களோ?” என நான் விளையாட்டாகக் கேட்க அவர் அரண்டுவிட்டார். “ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க. சத்தியமா நான் இங்க வேலை செய்த நாளிலிருந்து இன்றைக்குத்தான் முதல் முதலா ஒரு பயணியோட எண்களை எடுத்து அழைக்கிறேன். அதுவும், நீங்க அழகான தமிழில் என் பெயரைச் சொல்லி நன்றி சொன்னீங்க இல்ல, அது ரொம்பெ புதுசா இருந்திச்சு. ஏதோ, உங்கக்கிட்ட பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் கூப்பிட்டேன். நீங்க எதுவும் தவறா எடுத்துக்காதீங்க,” என கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டார்.

எனக்கு அது தவறாகத் தோன்றவில்லை. சிறிது நேரம் உரையாடினோம். “தனியா போறீங்க, பத்திரமா போயிட்டு வாங்க. என்னைத் தனியே போகச் சொல்லி கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டேன். இருந்தாலும் உங்களுக்கு ரொம்பெதான் தைரியம்,” என்றார். “நான் தனியே போகிறேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையே,” என்றேன். “உங்கள் பயண விபரத்தில்தான் எல்லாமே இருக்கிறதே,” என மீண்டும் சிரித்துக்கொண்டுக் கூறினார். நல்ல ஆள்தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். பழைய நண்பர்கள் போல் சிறிது நேரம் கதைத்துவிட்டு அழைப்பேசியை வைத்தேன்.

இராஜ்குமார் எங்கேயோ சென்று இரண்டு குவளைகளில் காப்பியோடு வந்தான். அதில் ஒன்றை என்னிடம் நீட்ட, “ஐயோ, நான் காப்பி குடிக்க மாட்டேனே,” என்றேன். அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “பரவாயில்லை, கொடுங்கள். எப்போதாவது குடிப்பேன். அதிகம் குடிப்பதில்லை,” என வாங்கிக்கொண்டேன். அதனை ஒரு மூலையில் வைத்துவிட்டு நெருங்கிய நண்பர்களுக்கு எனது பயணத்தைக் கைப்பேசியின் மூலம்  அறிவித்துக் கொண்டிருந்தேன். பயணத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை விமானப் பயணச் சீட்டைச் சரிப்பார்த்துக் கொண்டேன். “உங்கள் இருக்கை எண் என்ன?” எனக் கேட்டான். பதில் சொன்னேன்.

தம்முடைய இருக்கை இரண்டு வரிசைகள் தள்ளி பின்புறம் இருக்கிறது என்றான். அப்படியா என தலையாட்டிக் கொண்டேன். “பிறகு பக்கத்தில் அமர்பவர்களிடம் சொல்லி இருக்கைகளை மாற்றிக் கொள்ளலாம். அப்போதுதான் பேசிக்கொண்டே செல்ல வசதியாய் இருக்கும்,” என்றான். “அதெல்லாம் தேவையில்லை. நான் விமானத்தில் ஏறியவுடனேயே உறங்கிவிடுவேன். எனக்கு அவ்வளவு களைப்பாக இருக்கிறது,” என சாக்குப் போக்குக் கூறிவிட்டு மீண்டும் கைப்பேசியில் ஐக்கியமானேன்.

விமானம் வந்துவிட்டது. அனைவரும் வரிசைப்பிடித்து விமானத்தில் ஏறினோம். எனக்குச் சன்னல் ஓர இருக்கை. எனது பக்கத்தில் ஆண் ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு அடுத்தபடியாக நடுத்தர வயது மாது ஒருவர் வந்தமர்ந்தார். இரு பெண்களுக்கு நடுவில் அமர்வது அந்த ஆணுக்குக் கூச்சத்தையோ அல்லது அசெளகர்யத்தையோ உண்டு பண்னியிருக்க வேண்டும். அந்த மாதுவை எனதருகில் அமரச் சொல்லி இடம் மாற்றி அமர்ந்துக்கொண்டார். எனக்கும் கொஞ்சம் வசதியாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் விமானம் ஆகாயத்தை நோக்கி பறக்க ஆரம்பித்தது. இந்த முறை பயணம் எப்படி அமையப் போகிறது என்ற கற்பனை வானில் நானும் சிறகடிக்க ஆரம்பித்தேன்.


வியாழன், 17 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 1)

வெள்ளிக்கிழமையாகிவிட்டது. நாளை மாலை சென்னைப் பயணம். அதிக வேலைப் பளுவின் காரணமாக பயண ஏற்பாடுகள் ஒன்றுமே செய்யவில்லை. இன்றைக்கு இரவு தைப்பிங் மாநகர காவல் துறையினரின் தீபாவளி விருந்தோம்பலுக்கு எமக்குச் சிறப்பு விருந்தினர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கும் சென்றாக வேண்டும். இன்றைக்கு மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு வந்து சேருமாறு தம்பி கேட்டுக்கொண்டிருந்தான். விடுப்பு எடுத்தால் எமது வேலையை யார் செய்வது? சரி, அரைநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என வேலைகளை இயன்றவரையில் செய்தேன்.

பின்னர், பயணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். கடந்த முறை நான் சென்று வந்த பிறகுதான் பாக்கியா அக்கா கருவுற்றிருப்பதாகச் சொல்லியிருந்தார். குழந்தைப் பிறக்கும் போது நான் இருப்பேனோ, இல்லையோ. இப்போதே ஏதாவது வாங்கிச் செல்வது நல்லது எனத் தோன்றியது. குழந்தைகள் தூங்கும் சிறிய மெத்தை ஒன்றும், மற்றவர்களுக்குக் கொடுக்க மிட்டாய்களும் வாங்கிக் கொண்டு வீடுச் சென்றேன். வீட்டை அடைந்ததும் கடுமையான மழை பிடித்துக்கொண்டது. சுறுசுறுப்பாக பயணப் பொருட்களைப் பையில் அடுக்கி வைத்தப் பிறகு எப்படி பினாங்கிலிருந்து தைப்பிங் செல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதற்குள் எனது தம்பி தேவா ஐந்தாறு முறை கைப்பேசிக்கு அழைத்துவிட்டான். மழையின் காரணமாக என்னால் வீட்டை விட்டு வெளியாக முடியவில்லை என விளக்கப்படுத்தினேன். எனது மகிழுந்து இன்னமும் தைப்பிங் நகரிலேயே இருக்கிறது. உடனே அவன் நண்பன் ஒருவனிடம் உதவிக்கோரி தாமதமாவதற்குள் விருந்துக்கு வந்துச் சேருமாறு அறிவுறுத்தினான். தம்பியின் நண்பன் உதவிக்கு வர சற்று தாமதமாகவே விருந்துக்குச் செல்ல நேரிட்டது. வழக்கம் போல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறைவில்லாமல் நடந்தேறின. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. நாளை மதியம் நான் கோலாலம்பூரிலுள்ள விமான நிலையத்தில் இருக்க வேண்டும். தம்பி எனது கோலாம்பூர் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்துவிட்டதாகக் கூறினான்.

வேலை முடிந்து பினாங்கிலிருந்து தைப்பிங்  வந்த களைப்பே தீரவில்லை. அதற்குள் ஆட்டம் பாட்டத்துடன் விருந்து. நாங்கள் வீடு போய்ச் சேர அதிகாலை மணி 3 ஆகிவிட்டது. குளித்து முழுகி, பயணத்திற்குத் தேவையான பொருட்களை ஒழுங்குப்படுத்திவிட்டு நான் படுக்கைக்குச் செல்லும் போது அதிகாலை மணி 4.30 ஆகிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் நித்திரைக் கொண்டிருப்பேன், அதற்குள் எனது அலாரம் அலறியது. அதனை அடைத்துவிட்டு படுத்துக்கொள்ள ஆசைதான். என்ன செய்வது? தாமதமாகிவிட்டால் விமானத்தை தவறவிட்டு விடுவேனே. எம்மை நானே கட்டாயப்படுத்தி அதிகாலை 5.30 மணிக்கே எழும்பி காலைக்கடன்களை முடித்துப் பயணத்திற்குத் தயாரானேன்.

வெளியே இன்னமும் மையிருட்டாக இருந்தது. சாலைகளில் வாகனங்களே இல்லை எனக் கூறலாம். கடுங்குளிர் எழும்புகளில்  குத்த, சால்வையை உடலைச் சுற்றிப் போர்த்திக்கொண்டேன். தேவா என்னுடன் பேருந்து நிலையம் வரையில் வந்தான். சரியாக காலை 6.00 மணிக்கு பேருந்து தைப்பிங்கிலிருந்து ஈப்போ நோக்கிப் பயணமானது. அதிக களைப்பாக இருந்ததால் நான் பேருந்தில் ஏறியவுடன் நித்திரைக் கொண்டேன். பாதி வழியில் தான் விழித்தெழுந்தேன். ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு பேருந்து ஈப்போ நகரை வந்தடைந்தது. அங்கியிருந்து விமான நிலையம் செல்லும் பேருந்து காலை 8.00 மணிக்குத்தான் புறப்படும்.

பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது. எமது 3 பெரிய பயணப் பைகளை நிராதரவாக விட்டுச் சாப்பிட செல்ல மனம் வரவில்லை. விமான நிலையத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாக அமர்ந்திருந்தேன். 8.00 மணிக்குப் புறப்பட்ட பேருந்து காலை 11.30-க்குக் கோலாலம்பூர் ‘எல்.சி.சி.தி’ அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது. விமான நிலையத்தின் உட்புறம் அமைந்திருந்த பயண வழிக்காட்டிப் பலகையில் எமது பயண விபரங்களைச் சரிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பங்களாதேசியைப் போல் தோற்றமளித்த ஒரு ஆடவன் என்னையே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏதேச்சையாக நானும் திரும்பி அவனைப் பார்க்க, அவன் நெருங்கி வந்து உருட்டு விழியால் உற்றுப் பார்த்தான். அவன் செய்கை எனக்கு வினோதமாக இருந்தது.

என்னிடம் ஏதாவது விபரம் கேட்க வந்திருப்பானோ என நான் நினைக்கும் போதே, “நீங்கள் புவனேஸ்வரி துரைசிங்கம் தானே?” என அவன் கேட்க, “இல்லை. நான் பவனேஸ்வரி,” என சற்று நக்கலுடன் பதில் சொன்னேன். அவன் அசடு வழிய, “என்னைத் தெரியுதா?” எனக் கேட்டான். “இல்லை. எனது முகநூல் நண்பரா?” என அப்படித்தான் இருக்க வேண்டும் என அனுமானித்துக் கூறினேன். “சரியாகச் சொன்னீர்கள். நான்தான் இராஜ்குமார். ஒருமுறை சினிமா தொடர்பாகக் கூட உங்களிடம் பேசியிருந்தேன். நீங்கள் தான் விருப்பமில்லை என்று கூறிவிட்டீர்கள்,” என்று ஆங்கிலமும் தமிழும் கலந்துக் கதைத்தான்.

“பரவாயில்லையே. இத்தனைப் பேர் நடுவிலும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டீர்களே,” என்றேன். “நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. என்ன, இந்த முறை முகநூலில் பயணத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் வந்துவிட்டீர்,” எனக் கேட்டான். “சென்று வந்த பிறகு சொல்லலாம் என விட்டுவிட்டேன். நான் சந்திக்கச் செல்பவர்களுக்கு எனது வருகைத் தெரியும்,” என்றேன். “நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள் என நான் தெரிந்துக்கொள்ளலாமா,” அவன்தான் மீண்டும் கேட்டான். “சென்னை,” ஒற்றை வரியில் பதில் அமைந்தது. “நானும் சென்னைக்குத்தான் செல்கிறேன்,” அவன் முகத்தில் குதூகலம் தெரிந்தது. “எந்த விமானம்? எத்தனை மணிக்கு?” இம்முறை நான் கேட்டேன். “ஏர் ஆசியா. மாலை 3.55 மணிக்குப் பயணம்,” என்றான். “ஒரே விமானம்தான். பரவாயில்லை, பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்துவிட்டது,” என்றேன்.

“சரி, நான் சென்று எனது பைகளை விமானத்தில் ஏற்ற கொடுக்க வேண்டும். நீங்களும் வருகிறீர்களா?” நான் தான் அழைத்தேன். “எனக்குக் கொடுக்க வேண்டிய எந்த பையும் இல்லை. ஒரு பைதான். நான் என்னுடனே எடுத்துச் சென்று விடுவேன். இருந்தாலும், நானும் உடன் வருகிறேன்,” என தாரளமாய் உடன் வந்தான். பைகளை ஒப்படைப்பதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தோம். “இப்போதுதான் முதன்  முறையாக நான் இந்த மலிவு விமானம் எடுக்கிறேன். நான் எப்போதுமே, ஏர் இந்தியாவில் தான் செல்வேன். ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளுக்குச் செல்லும் போதும் வெவ்வேறு விமானங்களைத்தான் பயன்படுத்துவேன். இன்றுதான் ஏர் ஆசியாவில் ஏறப் போகிறேன்,” என்றான். அவன் பேச்சில் தற்பெருமை இருப்பதாகப் பட்டது. “அப்படியா,” என்றதுடன் முடித்துக்கொண்டேன்.

அவன் தொடர்ந்தான், “எனக்குக் கப்பலில் (ஷிப்) வேலை. எப்போதாவதுதான் விடுப்பு கிடைக்கும். திரைப்பட வேலைகள் கொஞ்சம் இருக்கிறது. அதற்காகத்தான் விடுப்பு எழுதிப் போட்டுவிட்டு வருகிறேன்.” “ம்ம்ம்” என்றேன். இன்னும் அவனது படம் பற்றி என்னென்னவோ சொன்னான். வேலியிலே போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்ட கதையாகிப் போனது என் கதை. அவன் சொல்லச் சொல்ல, அதற்கு ‘ம்ம்ம்’ கொட்டிக் கொண்டிருந்தான்.

பைகளை ஒப்படைக்க என்னுடைய முறை வந்தது. அனைத்தையும் எடை நிறுத்து அனுப்பிவிட்ட பிறகு, விமான நிலைய பணியாள் எனது கடவுச்சீட்டையும் பயண விபரங்களையும் சரிப்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தலை கவிழ்த்து வேலையில் மூழ்கியிருந்ததால் முகத்தைச் சரியாக பார்க்க முடியவில்லை. ‘சூர்யா’ என பெயர் பட்டையில் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் எனது பாரங்களை எம்மிடம் திரும்பத் தந்த போது, “நன்றி சூர்யா” எனத் தமிழில் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். கூடவே இராஜ்குமாரும் வந்தான்.

“இன்னும் நேரம் இருக்கிறது. நான் சாப்பிடப் போகிறேன்.” என்றேன். “நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். உங்களுக்குத் துணையாக வருகிறேன்,” என்றான். “அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை,” எனச் சொல்லி அவ்விடம் இருந்த ‘மெக் டானல்ஸ்” துரித உணவு விடுதிக்குச் சென்றேன். “நீராவது அருந்துகிறீர்களா?” எனக் கேட்டதற்கு ஒன்றும் வேண்டாம் என மறுத்துவிட்டான். நான் எனக்குத் தேவையான உணவு வகைகளை வாங்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்தேன். அவன் திரும்பவும் என்னென்னவோ பேசினான். நாம் , “ம்ம்ம்’ கொட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சில வேளைகளில் எந்த வொரு பதிலும் தராமல் சாப்பாட்டிலேயே முழு கவனத்தையும் செலுத்தினேன்.
திங்கள், 14 நவம்பர், 2011

பெண் ஏன் அடிமையானாள்? -தந்தை பெரியார்
“பெரியாரைப் படியுங்கள்,” என பல முறை நண்பர் அருண்ஷோரி வற்புறுத்திக் கொண்டிருந்தார். தமிழகம் சென்றிருந்த வேளையில் எனக்கு விரும்பம் இல்லாத போதிலும், “நீங்கள் முதலில் படித்துப் பாருங்கள்,” என வலுக்காட்டாயமாக இந்த நூலை வாங்க வைத்துவிட்டார். வாங்கி பலநாட்கள் அப்படியே கிடந்த வேளையிலும், தொடர்புக் கொள்ளும் போதெல்லாம், “படித்துவிட்டீர்களா? படித்துவிட்டீர்களா?” என அவர் கேட்க, படித்துத்தான் பார்ப்போமே என புத்தகத்தில் மூழ்கினேன்.

முன்னுரை
இந்நூல் பெண்கள் எந்தெந்தக் காரணங்களால் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதனைச் சுட்டிக்காட்டி, அதனிலிருந்து விடுபட அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை முக்கியக் கருவாகக் கொண்டு மொத்தம் 10 அத்தியாயங்களில் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1934-இல் வெளிவந்துள்ளது.

1. கற்பு
கற்பு எனப்படுவது பெண்களுக்கே உரித்தானது போன்ற தோன்றத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துவிட்டனர். இதனால், தன் விருப்பங்களுக்குச் சமாதிக் கட்டிவிட்டு ‘கற்புடையவள்’ என்ற பேர் வாங்குவதற்காக ஒரு பெண் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

2.வள்ளுவரும் கற்பும்
‘பெண்கள் சொல்லைக் கேட்கக்கூடாது’, ‘அறியாமை என்பது பெண்களின் ஆபரணம்’, ‘பெண்கள் சுய விருப்பப்படி நடக்கக் கூடாது’ என பொருள் பதிக்கும் குறள்கள் பெண்களைத் தாழ்மைப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவற்றைப் பொருட்படுத்தாது, இரு பாலருக்கும் சமயுரிமை, சம வலிமை இருப்பதை பெண்கள் உணர வேண்டும் என பெரியார் சுட்டுகின்றார்.

3. காதல்
காதல் ஒருவரிடம் ஒரு முறைதான் வரும் என்பதை பெரியார் வன்மையாக மறுக்கிறார். அது எப்போது வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் வரலாம். ஒருவரையே காதலித்து, அவரையே மணந்து, காதலின் காரணமாக (கட்டாயத்தின் பேரில்) அவருடனேயே நடத்தப்படும் வாழ்க்கை ஒரு நடிப்பு போல் இருக்கிறது. காதல் என்பது தனது சுய நன்மையை, மனத்திருப்தியை வேண்டித்தான் ஏற்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை. தமக்குத் தேவைப்படும் மனத்திருப்தி கிடைக்காத பட்சத்தில் ஆண் பெண் இருபாலரின் காதல் மாறக்கூடியதாய் இருக்கிறது. இந்த மாற்றத்தைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, ‘காதல்’ ‘புனிதம்’ என்ற பேரில் தங்களைத் தாங்களே இம்சித்துக் கொள்வது அழகல்ல என பெரியார் கூறுகிறார்.

4. கல்யாண விடுதலை
இந்நூல் எழுத்தப்பட்ட காலத்தில் கல்யாண விடுதலை என்பது கடினமான ஒன்றாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களுக்கு ஒத்துவராத திருமண பந்தத்திலிருந்து தங்களைத் தாரளமாக விடுவித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தெய்வீக பந்தம் எனும் பெயரில் பிடிக்காத கல்யாணப் பந்தத்தில் அகப்பட்டால் அதிலிருந்து பெண்கள் துணிந்து விடுபட முயல வேண்டும் என பெரியார் வேண்டுகிறார்.

5. மறுமணம் தவறல்ல
‘மணம்’ என்பது மனமக்கள் தங்கள் வாழ்க்கை வசதிக்காகச் செய்துக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமாக பெரியார் கருதுகிறார். எனவே, அன்பும் ஆசையும் இல்லாத, அல்லது நமது விருப்பு வெறுப்புகளை அறிந்து நடந்துக்கொள்ள இயலாத துணை கிடைக்குமாயின், தாரளமாக நாம் மறுமணம் செய்துக்கொள்ளலாம். பெண்களுக்கும் இது பொருந்தும் என பெரியார் சொல்கிறார்.

6. விபச்சாரம்
விபச்சாரம் என்பது பெரும்பாலும் பெண்களின் ஒழுக்கக்கேட்டைக் குறிக்கும் சொல்லாகவே இருந்து வருகிறது. ஆண்களுக்கும் இந்தச் சொல்லுக்கும் இதுவரையில் எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. உண்மையில், ஆண் இல்லாமல் பெண் விபச்சாரம் செய்ய இயலுமா? அப்படிச் செய்ய முடியாத சூழலில் ஆண்களுக்கும் இதில் சரி பாதி பங்கு உள்ளது தானே? அப்படியாயின்  அவர்களையும் விபச்சாரர்கள் என்று ஏன் அழைப்பதில்லை? எனவே விபச்சாரம் என்பது பெண்களை அடிமைகளாக வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் சொல் என பெரியார் விளக்குகிறார்.

7. விதவைகள் நிலைமை
பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் விதவைகள் மறுமணத்தை பெரியார் வலியுறுத்துகிறார். அன்றைய இந்தியச் சூழலைக் காணும் போது குழந்தைத் திருமணங்கள் பெருவாரியாக நடைப்பெற்று வந்தன. எனவே, இளம் விதவைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காமல் இருந்தது. மேலும் விதவைகள் பல வகையில் இம்சிக்கப்பட்டு வந்தனர். அவர்களது இல்லற வாழ்வு எனும் கனவு பலிக்காமலே செத்தது. அவளாக வேறொருவனை விரும்பினாலும் அவளுக்கு மறுமணம் செய்விக்க யாரும் முன் வராத காலம் அப்போது இருந்தது. அதனை உடைத்தெறிந்து பெண்கள் தைரியமாக இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என பெரியார் போராடுகிறார்.

8. சொத்துரிமை
பெண்களுக்குச் சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படாமல் இருப்பதனாலேயே அவர்களை ஆண்கள் எளிதில் அடிமைப்படுத்துகின்றனர். எனவே, பெண்கள் துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என பெரியார் தூண்டுகிறார்.

9. கர்ப்பத் தடை
கர்ப்பம் தரிப்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை தடை செய்து அவளை அடிமையாக்குகிறது. குழந்தைகள் இருப்பதால் அது ஆண்களையும் பல சமயங்களில் தயங்க வைக்கிறது. எனவே, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என பெரியார் சொல்வது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றால் இருக்கிறது. இந்த மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டதோ என்றும் யோசிக்க வைக்கிறது. குழந்தைகளால் பொருளாதாரச் சிக்கலோ அல்லது வேறு பிரச்சனைகளோ ஏற்படுமாயின் அதனைக் களைய முனைய வேண்டும். அதனை விடுத்து கர்ப்பத் தடையை ஆதரிப்பது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதற்குச் சமம் என்பது எமது தனிப்பட்டக் கருத்து.

10. பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை அழிய வேண்டும்’
பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் ஒரு போதும் உண்மையாகப் போராட முடியாது என பெரியார் கூறுகிறார். ‘ஆண்மை’ உலகில் உள்ள வரையில் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்கிறார். ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என பெரும்பாலான பெண்கள் எண்ணம் கொண்டிருக்கின்றனர். எனவே முதலில் ஆண்மை அழிய வேண்டும். அதற்கு முன்பு சொன்னது போல் பெண்கள் பிள்ளைப் பெறும் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் பெரியாரின் இந்தக் கூற்றையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முடிவுரை
பெண் ஏன் அடிமையாகிறாள்? அவள் அடிமைக் கூண்டிலிருந்து விடுதலைப் பெற என்ன செய்ய வேண்டும் என பெரியார் தமது கருத்துக்களை இந்த நூலில் பதிய வைத்திருக்கிறார். அவற்றில் சில கருத்துக்கள் நிஜ வாழ்விற்குப் பொருந்தாத ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக கடைசி இரண்டு அத்தியாயத்தில் கூறப்படும் கர்ப்பத் தடை மற்றும் பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும் ஆகிய இரண்டையும் நான் வன்மையாக மறுக்கிறேன். ஏனைய அத்தியாயங்களில் கூறப்படும் கருத்துக்களும் உதாரணங்களும் வரவேற்கக் கூடியவனவாகவே இருக்கின்றன. இதனைப் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் வாசித்தல் நலம்.

செவ்வாய், 8 நவம்பர், 2011

எரியும் பனிக்காடு (Red Tea)


எரியும் பனிக்காடு எனும் நாவலின் தலைப்பை பார்த்தவுடனேயே பனிக்காடு எப்படி எரியும்? என கீரா அண்ணாவைக் கேட்டேன். “படித்துப்பார். எப்படி எரிகிறது என்பது உனக்கே தெரியும்,” என்றார்.

முன்னுரை

பி.எச். டேனியல் எழுதிய இந்நூலை இரா. முருகவேள் அழகாகத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். 1925-ஆண்டு கதைத் தொடங்குகிறது. இதில் முக்கியக் கதாமாந்தர்களாக கருப்பன், வள்ளி, மேஸ்திரி சங்கரப்பாண்டியன், வொய்ட் ஆகியோரும் ஏகப்பட்ட துணை கதாமாந்தர்களும் வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தைச் சுற்றி இந்நாவல் நகர்கிறது. அங்கே இந்திய கூலிகள் தங்கள் வியர்வையையும் இரத்தையும் எப்படியெல்லாம் சிந்தி தோட்டத்து வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளனர் என்பதை இந்நாவல் சித்தரிக்கின்றது.

பஞ்சத்தாலும் ஏழ்மையாலும் பாதிப்புற்ற கருப்பனை, சங்கரபாண்டியன் சந்திக்கிறான். தோட்டத்தில் (எஸ்டேட்டில்) நல்ல வேலை இருப்பதாகவும், அங்கே வந்தால் கை நிறைய சம்பாதித்து வசதியாக வாழலாம் என ஆசைக்காட்டி கருப்பனையும் அவனது மனைவி வள்ளியையும் அழைத்துச் செல்கிறான். அவர்களுடன் இன்னும் ஏராளமான கூலிகள் பயணமாகிறார்கள். தோட்டத்தை அடைந்தவுடன் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அங்கே அவர்கள் ஆடு மாடுகள் போல நடத்தப்படுகின்றனர். அடிப்படைச் சுதந்திரம் கூட இல்லாமல் அடிமைகள் போல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மலேரியாவாலும் இன்னும் பல நோய்களாலும் பெரும்பான்மையான மக்கள் அவ்விடமே இறக்க நேரிட்டது. இவையனைத்தும் சகித்துக்கொண்டு எப்படியாவது பணம் சேர்த்து, கடனை அடைத்து ஊர் திரும்பிவிட வேண்டும் என கருப்பனும் வள்ளியும் போராடுகிறார்கள். இறுதியில் வள்ளியும் அவளது குழந்தையும் இறக்க நேரிடுகிறது. கருப்பன் தன்னந்தனியாக அதே தோட்டத்தில் தனது வாழ்க்கையைத் தொடர்கிறான்.முதலாளித்துவம்

நாவல் முழுக்க முதலாளிமார்களின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. சங்கரபாண்டியனும் வெள்ளையனும் தங்களுக்குக் கீழுள்ள கூலிகளுக்கு உடல்நிலை சரியில்லாத போதும் வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மீறுபவர்களை அடித்துத் துன்புறுத்துகின்றனர். பலர் தோட்டத்திலேயே அடித்துக் கொல்லப்படுவதும் சகஜமாக இருக்கிறது.

இதில் வரும் வெள்ளை அதிகாரியான வொய்ட், தனக்குக் கீழுள்ள அதிகாரிகளை மிக மோசமாகத் திட்டுகிறார். தனக்குப் பிடிக்காதவர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்கவும் செய்கிறார். தன் முன்னே யாரும் செறுப்பு அணியக் கூடாது, தொப்பிப் போடக் கூடாது, குடைப் பிடிக்கக் கூடாது என ஏராளமான சட்டங்கள் வைத்திருக்கிறார்.

தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு நிறைய சலுகையும், பிடிக்காதவர்களுக்கு ஏராளமான தொல்லைகளையும் இந்த முதலாளிமார்கள் கொடுக்கின்றனர். வொய்ட் தனது கம்பெனிக்கு அதிக இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். அதன் பொருட்டு எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கூலிகளின் நலனுக்காக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கிறார்.

சாதி

தோட்டத்தில் கூலிகளாக வேலைக்குச் சேரும் மக்கள் பெரும்பான்மை கீழ்ச்சாதியினராகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்குச் சேரும் போதே, “எல்லாம் நம்ம சாதி மக்கள்தான்” என சங்கரபாண்டியன் சொல்கிறான். நாயக்கர், தேவரில் ஒரு சிலரே தோட்ட வேலைக்கு வருவதாக நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர கொச்சை வார்த்தைகளின் பயன்பாடு இவர்களிடையே சர்வ சாதரணமாக இருக்கிறது. இந்நாவலில் வரும் மக்கள் மாட்டுக்கறி உண்கின்றனர்.

பெண்ணடிமை

அழகானப் பெண்கள் தங்கள் கட்டிலில் புரள வேண்டும் என அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் எண்ணுகின்றனர். தனக்குக் கீழே வேலை செய்பவள் தனக்கு அடிமை என்றும் எப்போதும் தமது ஆசைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் மாத்யூஸ், வொய்ட் போன்றோர் எண்ணுகின்றனர். தங்களது தோட்டத்தில் வேலை செய்யும் பல பெண்களின் தொடையைக் கிள்ளியும், ஆங்காங்கே தடவியும் வொய்ட் விளையாடுகிறார். இதனை மற்ற பெண்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாத்யூஸ் வள்ளிக்கு பல தடவைகள் தொல்லைக் கொடுக்கிறான். அவள் அவன் ஆசைக்கு இணங்காத போது பல வழிகளில் துன்புறுத்துகிறான்.

பெண்களும் அதிகாரத்தில் உள்ளவர்களை அனிசரித்துப் போனால்தான் தாங்கள் நன்றாக இருக்க முடியும் என நினைக்கின்றனர். எனவே, முதலாளிமார்களின் பார்வை எப்போது தங்கள் மீது விழும் என ஏங்கும் பெண்களும் நாவலில் வருகின்றனர். சில ஆண்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் தங்கள் சொந்த மனைவி பிள்ளைகளையே கூட்டிக் கொடுக்கின்றனர். கதையில் வரும் சங்கரபாண்டியன் தன்னிடம் பணவசதி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரே குடும்பத்தைச் சார்ந்த அக்கா தங்கைகள் மூவரையும் மணந்துக் கொள்கிறான்.பணத்தின் தேவை

இந்நாவல் முழுவதும் பணத்தின் தேவையை மக்களுக்கு நன்றாக உணர்த்துகிறது. பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே கருப்பனும்  வள்ளியும், ஏனையோரும் தோட்டத்திற்குச் செல்கின்றனர். அங்கே தாங்கள் பட்ட கடனன அடைப்பதற்கு குளிரிலும், காய்ச்சலிலும் வேலை செய்கின்றனர். எப்படியாவது பணம் சேர்த்து, கடனை அடைத்து, ஊர் திரும்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் தங்களுக்கு நேரும் பல்வகையான இன்னல்களையும் தாங்கிக் கொள்கின்றனர். பணத்திற்காக சில பெண்கள் முதலாளிமார்களின் ஆசைக்கு இணங்கவும் தயாராக இருக்கின்றனர். ஆண்கள் தங்கள் மனைவிகளை அனுப்பிவிட்டு கண்டும் காணாமல் இருக்கின்றனர். பணத்தைச் செலுத்த முடியாமல் தங்கள் சொந்த ஊர்களுக்குப் போக முடியாமல் பலர் புழுங்கிச் சாகின்றனர்.

ஒரு சிலர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்கின்றனர். கிருஸ்துமஸ் பண்டிகையின் போது வொய்ட்’டிற்கு ஏராளமான பணமும் பரிசுப் பொருட்களும் குவிகிறது. இவ்வாறு பணம் கொடுத்து முதலாளியின் மனதைக் குளிர வைத்தால் தாங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என  அவருக்கு கீழே உள்ளவர்கள் நினைக்கின்றனர்.மனிதத்தன்மையற்ற சூழல்

கதையில் முதலாளிமார்கள் மனிதத்தன்மையற்றவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வள்ளி தவறேதும் செய்யாத போதும் அவள் மாத்யூஸ் ஆசைக்கு இணங்காத காரணத்தால் அவளைப் பிரம்பால் அடித்து, கூலி கொடுக்காமல் பல வகையில் துன்புறுத்துகின்றனர். கடுங்குளிர், மழையென்றும் பாராமல் கூலிகள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருந்த போதும் அவர்களைக் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்புகின்றனர். சிலர் பெற்றோர் தங்கள் குழந்தை இறந்த மறு நாளே துக்கத்தை நெஞ்சோடு சுமந்துக் கொண்டு வேலைக்குச் செல்வதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வொய்ட் கூலிகளை மிகவும் கேவலமான கண்ணோட்டத்தோடு பார்க்கிறார். தனக்குப் பிடிக்காதவர்களை ஈவிறக்கமின்றி அடித்துத் துறத்துகிறார். கொச்சை வார்த்தைகளால் திட்டுகிறார். அது தவிர, மாடுகளை விட கேவலமாக கூலிகளை நடத்துகிறார். கூலிகளுக்கு மிகவும் அசுத்தமான, வசதிகள் அற்ற அறைகளே வழங்கப்படுகின்றன. தவிர  இரண்டு மூன்று குடும்பங்கள் அந்தச் சின்ன அறையைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் குடிப்பதற்கோ, கழிப்பதற்கோ முறையான வசதிகள் செய்துக் கொடுக்கப்படவில்லை.

மலேரியா போன்ற நோயினால் மக்கள் மடிந்த போது அதனை எவரும் பெரிதுபடுத்தவில்லை. தோட்டத்தில் இதெல்லாம சாதாரணம் என்பது போல் இருந்துவிட்டனர். அந்த நோய்களைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, “பிளடி நான்சென்ஸ். கொஞ்சப் பிச்சைக்காரப் பயல்கள் செத்தா என்ன- அந்த நாயக்கள்தான் பன்னிமாதிரி பெத்து போடுகிறார்களே! நான் சொல்கிறேன் நமக்கு ஒருநாளும் கூலிகளுக்குப் பற்றாக்குறை வராது,” என வொய்ட் சொல்கிறார். மேலும், “நம்மைப் பொருத்தவரை மலேரியா ஒழிப்புக்கும் மருத்துவத்துக்கும் ஏராளமான தொகையைச் செலவழிப்பதை விட இந்த நாத்தம் பிடித்த பிச்சைக்காரப் பயல்கள் செத்துத் தொலைந்து போவதே நல்லது. கொஞ்சம் ஆட்கள் குறைந்துப் போவது இந்த நாட்டுக்கு மிகவும் நல்லது. பொருளாதார அடிப்படையில்,” என கூசாமல் சொல்கிறார். “மனிதாபிமானத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குத்தாரர்களுக்கு லாபமீட்டித் தருவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம். அதுவும் கொழுத்த இலாபம்,” எனவும் தனது கூற்றை நியாயப்படுத்துகிறார்.

மருத்துவ வசதியின்மை

மலையில் வேலை செய்யும் மக்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாதக் காரணத்தினாலேயே மரண எண்ணிக்கை அதிகப்படியாக இருக்கிறது. கம்பவுண்டர் வேலை செய்து வந்த குரூப் என்ற மனிதரையே அங்குள்ளவர்கள் ‘டாக்டர்’ என அழைத்து வந்தனர். முறையான மருத்துவ கல்வி இல்லாத காரணத்தினால் குரூப் தன்னிடம் இருக்கும் மருந்துகளைக் கொண்டு கூலிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தான். மருத்துவமனை ஆட்டுக் கொட்டகையை விட கேவலமாக இருந்தது. அவ்விடம் குரூப் மற்றும் ஒரு மருத்துவ கூலியாள் ஆகிய இருவர் மட்டுமே பணிப்புரிந்து வந்தனர். எனவே, அவ்விடம் அசுத்தமாகவும் போதிய வசதிகள் இன்றியும் நோயாளிகளுக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்தது.

தவிர குரூப் வேலை செய்ய தகுதியற்றவர்களுக்குக் கூட போலியான சான்றிதழ் கொடுத்து சங்கரபாண்டியனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறான். “குரூப் ஐயா மட்டும் இங்க இருந்தா நாம ஒன்னு கேட்டா மாட்டேனு சொல்லுவாரா? நாம ஒரு கூலிய ஆஸ்பத்திரியில சேத்திக்குங்கன்னு சொன்னா மறுக்க மாட்டாரு. வேண்டான்னு சொன்னா ஒரு வார்த்த மறுத்துப் பேசாம அந்தக் கூலிய தொரத்தியே விட்டுடுவாரு,” என சங்கரபாண்டியன் கூறுகிறான்.

“ஆஸ்பிட்டல்ல மருந்துன்னு ரொம்பெ கொஞ்சம் தான் இருக்கு. ஒரு கருவிகூட இல்ல. ரெண்டே ரெண்டு வார்டுதான் இருக்கு. ரெண்டிலும் கால் வைக்கவே முடியல. அப்படி நாறுது. தினமும் கூட்டறதுக்கு கூட யாரும் இல்ல. மெடிக்கல் கூலிதான் காவல்காரன். அவன் தான் சமையல்காரன். ஆனா இங்க சமைக்கறதேயில்ல. நோயாளிகளுக்கு அவுங்க வீட்டில இருந்துதான் சாப்பாடு வருதுன்னு நினைக்கிறேன், அவுங்க, வறுத்த நிலக்கடலை எல்லாம் கொண்டு வந்து சாப்பிடுறாங்க. இந்த மாதிரி இடத்துக்கு வந்துட்டு எப்படி நோயாளிங்க உயிரோட வெளியே போறாங்கன்னுதான் ஆச்சர்யமாயிருக்கு,” என புதியதாக வந்த மருத்துவர் ஆபிரஹாம் மருத்துவமனையில் நிலையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இயலாமை

இந்நாவலில் வரும் இந்திய வம்சாவளியினர் வெள்ளையர்களை எதிர்க்க முடியாமல் அவர்களுக்குப் பணிந்து அடங்கிப் போக வேண்டியதை நினைத்து பல இடங்களில் வருந்துகின்றனர். ஆட்சியில் வெள்ளையர்கள் இருப்பதால் அவர்களிடமிருந்து எங்குப் போனாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் கூலிகளையும் பிடித்து ஆட்டுகிறது. எனவே, எதிர்க்க, கேள்வி கேட்க துணிவின்றி அந்த மலையிலேயே வேலை செய்து உயிரை விட்டவர்கள் ஏராளம். தனது மனைவிக்கு மாத்யூஸ் பல வகைகளில் தொல்லைக் கொடுப்பது கருப்பனுக்கு தெரிய வந்தபோதும் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவனைச் சுற்றி இருப்போர் அவனது இயலாமையை எடுத்துக்கூறி சமாதானப்படுத்துகின்றனர்.

முடிவுரை

பிரிட்டனில் உள்ள தங்கள் நிர்வாகத்துக்காக அதிகப்படியான இலாபம் ஈட்டவே வெள்ளையர்கள் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களைக் குறி வைத்தனர். அதில் ஏராளமான கூலிகளைக் கொண்டு வந்து குவித்து அவர்களை வதைத்தனர். தோட்டத்தில் பயங்கரமான சீதோஷ்ண நிலையிலும், அட்டை கடிகளுக்கு மத்தியிலும் மற்றும் பல கொடிய நோய்களின் தாக்கத்திலும் கூலிகள் அவதிப்பட நேர்ந்தது. மலைக்கு வேலைக்கு வரும் பாதிப்பேர் அங்கேயே மரணத்தைத் தழுவுகின்றனர். ஒரு வருடத்தில் ஏராளமான பணம் சம்பாதித்து ஊருக்குத் திரும்பிவிடலாம் என்ற அவர்கள் கனவு, தோட்டத்தில் காலடி எடுத்து வைத்ததும் உடைந்துச் சுக்குநூறாகின்றது. இவ்வாறு இந்திய மக்களின் தியாகத்தின் உருவான தேயிலைத் தோட்டத்தின் உண்மை நிலவரம் பலருக்குத் தெரியாமலேயே இருக்குன்றது. ஒவ்வொரு தேயிலை புதருக்குள்ளும் ஓரிரு இந்தியர்களின் உயிர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்நாவலில் வழி கதாசிரியர் தெளிவாக விளக்குகிறார். இந்தியர்களின் உயிர்களைக் காவு வாங்கிய தேயிலைத் தோட்டம் என்பதாலேயே இதற்கு ‘சிகப்புத் தேநீர்’ (Red Tea) என ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார். பனிக்காடு எப்படி எரியும் எனக் கேட்டிருந்தேன். இப்போது புரிகிறது பனிக்காடும் எரியும்!

வெள்ளி, 4 நவம்பர், 2011

மனுநீதி

இது மிகவும் அநீதியானது. அண்மையில் தமிழகம் சென்ற போது  திருச்சி. கே. செளந்தரராசன் எழுதிய இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒற்றுமையாக வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூகத்திடையே ‘மனுதர்ம சாஸ்திரத்தை’ திணித்து, சாதி என்னும் கொடிய நோயை ஆரியர்கள் பரப்பியுள்ளனர். ‘மனுநீதி’ இந்துக்களின் பண்டையகால நீதிநூல் என இதுவரையில் உலக வரலாற்றில் படித்துள்ளேன். முதன் முறையாக அதனுள்ளே இருக்கும் சில அநீதிகளையும் அசிங்கங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

நீதி என்றாலே அது அனைவருக்கும் பொதுவாகவும் சமமாகவும் இருக்க வேண்டும். ஆனால், ‘மனுநீதி’ சொல்வது என்ன? ஒரு குலத்துக்கொரு நீதி என்ற வகையில் மிகவும் அநியாயமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சூத்திரன் என்பவன் விபச்சாரியின் மகன் என்றும் கொச்சைப்படுத்துகிறது. இப்படிப்பட்ட நூல் இன்னமும் இந்துக்களின் அடிப்படைச் சட்டமாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது என்பது வேதனைக்குரிய விடயம்.

இந்த நூலில் இந்துத் தெய்வங்களின் வெட்கம் கெட்ட வரலாறு குறித்தும் எழுதப்பட்டுள்ளது. பரசிவன்-பார்வதி திருமணத்தின் போது பிரம்மன் பார்வதியின் தொடையைப் பார்த்து இச்சைக் கொண்டதும், அதனால் தோன்றிய இந்திரியத்திலிருந்து பிறந்தர்கள்தான்  அகஸ்தியன், சல்லியன், மண்டோதரி என்று மனுதர்மம் கூறுகிறது. அதுமட்டுமின்றி குழந்தைப் பெறுவதற்காக ஒருவன் தனது தாய், தமக்கை, மகள் என யாரோடு வேண்டுமானலும் கூடிப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழர்களின் ஒழுக்கத்தையே குழி தோண்டிப் புதைக்கிறது மனுநீதி! மிருகம் முதல் மகள் வரை அனைவருடனும் கூடிப் புணர்ந்த பிரம்மாவின் யோக்கியதையை மனுநீதி எடுத்துரைக்கிறது.

அதுமட்டுமின்றி, நமது கடவுள்கள் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபட்டுள்ளதாக மனுதர்மம் கூறுகிறது. அதாவது, பிரம்மனும் பரமசிவனும் கூடிப்புணர்ந்து ‘ஐயப்பன்’ எனும் பிள்ளையைப் பெற்றதாக அது தெரிவிக்கின்றது! அத்தோடு நில்லாமல், விஷ்ணுவும் நாரதரும் புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள்! இப்போதுதான் ஏன் நாரதர் அடிக்கடி விஷ்ணு புராணம் பாடுகிறார் என்று தெரிகிறது.

பிராமணனை முன்னிலைப் படுத்தும் மனுநீதி, சூத்திரன் என்று கூறப்படுபவர்களை மிருகத்திலும் கேவலமாகச் சித்தரிக்கிறது. அதுமட்டுமின்றி பிராமணன் சொல் படிதான் அரசாங்கம் இயங்க வேண்டும் என்றும் மனுநீதி சொல்கிறது. இதுதான் நீதியா? பெண் என்பவள் எப்போதும் சுயமாகச் செயல்படக் கூடாது. இளமையில் தந்தையின் கண்காணிப்பிலும், பின்னர் கணவனின் கண்கானிப்பிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என மனுதர்மம் குறிப்பிடுகிறது.

இதுதான் நமது தர்மமா? இப்படிப்பட்ட  அசிங்கமான, அநீதியான ஆரியர்கள் அறிமுகப்படுத்திய நீதி நூல் நமக்குத் தேவையா? இந்த நூலைப் படித்தப் பிறகு இந்து தெய்வங்களைப் பற்றி ஒருவன் எப்படி மேலான கொள்கைகளைக் கொண்டிருக்க முடியும்? அல்லது மனுநீதியை எப்படி முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இத்தகைய நூல் இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை! கடவுள், கடவுள் என்று மனிதனையும் மனிதத் தன்மையையும் மறந்தவர்கள் மனுநீதி கூறும் கதைகளுக்கு விளக்கம் கொடுத்தாலோ, அல்லது நியாயப்படுத்தினாலோ தேவலாம்! வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள் தோழர்களே.

வியாழன், 3 நவம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 24)


மறுநாள் காலையிலேயே எழும்பியாயிற்று. இன்று நண்பர் ஒருவருடன் மாமல்லபுரம் செல்வதாக இருந்தது. காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சிறிது நேரம் இணையத்தில் உலாவினேன். கண்ணன் அண்ணா என்னை வடபழனி சாலை போக்குவரத்து சமிக்ஞை (சிக்னல்) அருகே மோட்டார் வண்டியில் அழைத்துச் செல்வதாகக் கூறினார். நண்பர் மாறன் அவ்விடம் காத்துக்கொண்டிருந்தார். அண்ணா குளித்து தயாராகி வருவதற்கு எனக்கு ஏகப்பட்ட குறுந்தகவல்கள் வந்துவிட்டன. நண்பரை சிறிது நேரம் காக்கச் சொல்லிவிட்டு, கண்ணன் அண்ணாவுடன் வடபழனி நோக்கிப் பயணமானேன்.

வடபழனியில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில் நண்பர் மாறனுடன் பேருந்துக்காகக் காத்திருந்தோம். இந்த முறை குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பேருந்தில் ஏறும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 3.30 மணியளவில் மாமல்லபுரத்தை அடைந்தோம். அங்கே இருந்த ஒரு கடையில் மதிய உணவை முடித்துக் கொண்டு சுற்றுலா ஆட்டோ எடுத்தோம். ஆட்டோவின் மூலம் பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டோம். வெயில் அதிகமாக இருந்ததால் எம்மால் அதிகமாக அலைந்துத் திரிய முடியவில்லை. ஆங்காங்கே பெரும்பான்மையாக சிலைகளே சுற்றுப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்தோனேசியாவில் உள்ள ஜோக்ஜகர்த்தா நகரில் இந்துப் பாரம்பரியம் இருந்த வேளையில் கட்டப்பட்ட சிற்பங்கள் போலவே இவ்விடமும் காணப்பட்டன. ஆனால், எனக்கென்னவோ, இந்தோனேசியாவில் இன்னும் பழமையான, அதிகமான சிற்பங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. மாமல்லபுரத்தில் அதிகப்படியான சிவலிங்கங்கள் இருப்பதைக் கண்டேன். தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்த நந்தியைப் போன்று இங்கேயும் ஒன்று இருந்தது. நாங்கள் பார்க்க வேண்டிய தலங்கள் அனைத்தும் மிக அருகருவே இருந்ததால் மிக விரைவாகவே அனைத்தையும் பார்த்து முடித்துவிட்டேன். வெய்யிலின் காரணமாகவோ இல்லை அதிகக் களைப்பாலோ எம்மால் சிற்பங்களை முழுமையாக இரசிக்க முடிக்கவில்லை.

மாமல்லபுரச் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு பேருந்தின் மூலம் ‘மாயாஜாலம்’ எனும் திரையரங்கிற்குச் சென்றோம். அரங்கம் மலேசியாவைப் போலவே நவீனமாகக் கட்டப்பட்டிருந்தது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ‘ஹரி போட்டர்’ திரைப்படத்தைப் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் அவ்விடம் அடை மழை பொழிந்துக் கொண்டிருப்பதை இருவருமே உணர்ந்தோம். இரவு நேரம் ஆனதால், சாலையில் மிகக் குறைவான வாகனங்களே சென்றுக் கொண்டிருந்தன. நாங்கள் ஏற வேண்டிய பேருந்துக்காக அதிகம் நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பிறகுதான் பேருந்து அவ்விடம் வந்தது.

மீண்டும் வடபழனி போக்குவரத்து சமிஞ்சை விளக்கின் அருகில் நாங்கள் இறங்கிக் கொண்டோம். அங்கே கண்ணன் அண்ணா மோட்டார் வண்டியில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். பாவம்! மழையில் முழுமையாக நனைந்துவிட்டிருந்தார். மாறனிடம் விடைப்பெற்றுக் கொண்டு கண்ணன் அண்ணாவின் மோட்டார் வண்டியில் ஏறி வீடு நோக்கி பயணமானோம். இப்போது மழையின் காரணமாக என் நிலை பரிதாபத்துகுரியதாயிற்று. குளிர்காற்று எலும்பின் உள்ளே ஊடுருவ, அடை மழை உடல் முழுவதும் நனைக்க, குளிரில் நடுக்கிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

பாக்கியா அக்கா எங்களுக்காக நித்திரைக் கொள்ளாமல் காத்திருந்தார். முழுகி உடைமாற்றி, அண்ணாவுடனும் அக்காவுடனும் சிறிது நேரம் கதைத்திருந்தேன். பின்னர் அவர்களது திருமண ஒளிவட்டை எமக்குத் திரையிட்டுக் காட்டினர். அதிக களைப்பின் காரணமாக என் கண்கள் அதில் இலயிக்காமல் தானாகவே சொருக ஆரம்பித்தன. அதைக் கவனித்த பாக்கியா அக்கா எம்மை படுக்கைக்கு அனுப்பினார். படுக்கையில் படுத்தவுடனே அடுத்த வினாடி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் பிணம் போல் உறங்கிவிட்டேன்.

விடிந்ததும் விடியாததுமாக காலையிலேயே எழும்பிவிட்டேன். அழுக்குத் துணிகளைத் துவைத்துப் போட்டுவிட்டு சில முக்கியமான மின்னஞ்சல்களுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது பாக்கியா அக்கா அறையில் உள்நுழைந்து என்னோடு கதைக்க ஆரம்பித்தார். என் விரலில் அணிந்திருந்த சிறிய தங்கம் மற்றும் வெள்ளைத் தங்கள் கலந்த கணையாழியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் நிறைய கணையாழிகள் இருந்த போதும், வெள்ளைத் தங்கம் கலந்த கணையாழி இல்லை என கூறினார். அதே போல் இன்னொரு கணையாழி எம்மிடம் இருந்தபடியால், அதனை அவரது விரலில் அணிவித்தேன். மீண்டும் கலட்டிக் கொடுக்க அவர் முயற்சிக்கையில், “இப்போது கலட்ட வேண்டாம். அடுத்த முறை வரும் போது நானே எடுத்துக் கொள்கிறேன். அதுவரையில் உங்கள் விரலிலேயே இருக்கட்டும்,” என அன்புக் கட்டளை விடுத்தேன். அவரும் மிகுந்த சங்கடத்துடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

பாக்கியா அக்காவும், கவிதாவும் எமது துணிகளையும் பொருள்களையும் பையில் அடக்க உதவிப் புரிந்தார்கள். வரும் அக்டோபர் அன்று நடக்கவிருக்கும் கவிதாவின் திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக அவர்களுக்கு உறுதியளித்தேன். அதற்குள் பெங்களூரில் விட்டு வந்திருந்த எமது பெரிய துணிப்பையும் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. கண்ணன் அண்ணாவும் பாலன் அண்ணாவும் அதனை பேருந்து நிலையத்திலிருந்து எடுத்து வந்திருந்தனர். இன்று வீட்டில் சற்று ஓய்வு இருந்ததால் மதிய உணவிற்குப் பின்னர் கவிதாவின் நீண்ட நெடிய கூந்தலை நான் கொண்டு வந்திருந்த முடி சுருட்டும் கருவியின் மூலம் சுருட்டி விட்டு அழகுப் பார்த்தேன். புது விதமான சிகை அலங்காரத்தில் அவள் உற்சாகம் கொண்டது எனக்கு மகிழ்வை அளித்தது.

பின்னர், பாலன் அண்ணா, கண்ணன் அண்ணா மற்றும் பாக்கியா அக்கா ஆகிய மூவரும் என்னை வழியனுப்புவதற்காகச் சென்னை விமான நிலையம் வரையில் வந்தனர். பாக்கியா அக்காவின் முகத்தின் சோகம் படர்ந்திருந்தது. “கவிதா கல்யாணத்திற்குக் கண்டிப்பா வாங்க,” என்று எனது கைகளைப் பிடித்துக் கொண்டு கூறினார். “நிச்சயம் வருகிறேன்,” என மீண்டும் உறுதி கொடுத்தேன். என்னுடன் சென்னை வந்த புனிதா அக்காவும் அவ்விடம் வர, நாங்கள் அவர்களிடமிருந்து விடைப்பெற்று கனக்கும் இதயத்துடன் விமான நிலையத்தின் உள்ளே சென்றோம்.

புனிதா அக்காவுடன் வந்திருந்த மாது, பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டொன்று வாங்கி எங்களுடன் விமான நிலையத்தின் உள்ளே வந்தார். உள்ளே வழியனுப்ப வருவதற்குக் கூட நுழைவுச் சீட்டு வாங்க வேண்டுமா என சற்று வியப்பாக இருந்தது. எங்கள் பைகளை நிறுத்து, விமானத்தின் உள்ளே வைக்க அனுப்பிவிட்ட பிறகு புனிதா அக்கா அந்த மாதுவோடு கதைத்துக் கொண்டிருந்தார். நான் அங்கே இருந்த ‘கிருஷ்ணா’ இனிப்பகத்தில் சில இனிப்பு பலகாரங்கள் வாங்கிக் கொண்டேன்.

நேரம் ஆகிக்கொண்டிருந்ததால் புனிதா அக்காவிற்கு நினைவுறுத்திவிட்டு விமானம் ஏறுவதற்கு உள்ளே சென்றோம். அப்போதுதான் நாங்கள் குடிநுழைவுத் துறையின் பாரங்களை இன்னும் பூர்த்தி செய்யாதது நினைவு வந்தது. அவசர அவசரமாக அதனைப் பூர்த்தி செய்தி கொடுக்கும் போதுதான், அந்த அதிகாரியின் கணினியில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. ஏற்கனவே இங்கே நேரமாகிவிட்டது. ஏற்கனவே ஒரு முறை தாமதத்தால் விமானத்தைத் தவறவிட்ட அனுபவம் இருந்ததால் என்னுள் பதட்டம் குடிக்கொள்ள ஆரம்பித்தது.

“தாமதமாகிவிட்டது. கொஞ்சம் சீக்கிரம் வேலையை முடித்து எங்களை அனுப்புங்கள்,” என அந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன். சுமார் 45 வயது இருக்கும் அவருக்கு. மிகவும் அமைதியாக, “ஏன் தாமதமாகிடுச்சி? என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்,” என கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டிருந்தார். எமக்குச் சின்னதாய் எரிச்சல் உண்டானது. “அதான் தாமதமாகிவிட்டதே? இப்படி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் நாங்கள் எப்படி சீக்கிரமாகப் போவது. தயவு செய்து சீக்கிரம் எங்களைப் போக அனுமதியுங்கள்,” என்றேன்.

புனிதா அக்காவை பரிசோதித்த வேறொரு அதிகாரி அவரை எப்பவோ விட்டுவிட்டார். இந்த அதிகாரியின் கணினியில் ஏற்பட்ட பிரச்சனையாலும், இவர் சாவகாசமாக என்னோடு உரையாடிக் கொண்டிருந்ததாலும் நான் மட்டும் இங்கேயே மாட்டிக் கொண்டேன். “இப்போது தாமதமாகிவிட்டால் இன்னும் ஓரிரு தினங்கள் இங்கேயே தங்கிவிட்டுச் செல்லுங்கள்,” என நக்கலான வசனம் வேறு. “விமான நுழைவுச் சீட்டு நீங்கள் வாங்கித் தருவதாக இருப்பின் நான் இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுச் செல்கிறேன்,” என சற்று கடுமையான குரலில், முகத்தில் கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையோடு பதில் சொன்னேன். அவர் முகத்தில் ஈயாடவில்லை.

“அதோ, அந்த வரிசைக்குப் போங்கள். அங்குக் கணினி பிரச்சனை இல்லை,” என்று வேறொரு வரிசையைக் காட்டினார். ஒலிப்பெருக்கியில் கோலாலம்பூருக்குச் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுமாறு அறிவிப்புச் செய்துக் கொண்டிருந்தனர். அவசர அவசரமாக குடிநுழைவுத் துறை பரிசோதனையையும் சுங்கத் துறை பரிசோதனையையும் முடித்துக் கொண்டு, எனது கையில் இருந்த தள்ளு பையை இழுத்துக் கொண்டு ஓடினேன். நான் அணிந்திருந்த தூக்குக் காலணி சத்தம் எழுப்பியதால், உள்ளே இருந்த மற்ற பயணிகளின் கவனத்திற்கு உள்ளானேன். எப்படியாவது விமானத்தில் குறித்த நேரத்தில் ஏறினால் போதும் என அவர்களைச் சட்டை செய்யாது ஒருவாறு விமானத்தை வந்தடைந்தேன்.

விமானத்தில் வந்து அமர்ந்த பிறகுதான் நிம்மதி பெருமூச்சே வந்தது. விமானம் ஆகாயதில் பறக்க ஆரம்பித்தது. நான் கடந்த ஒரு மாத காலத்தில் எமது இந்தியப் பயணத்தில் நடந்த நிகழ்வுகளை அசைப் போட ஆரம்பித்தேன். காலம் எவ்வளவு சீக்கிரமாக ஓடிவிட்டது. நடந்தது அனைத்தும் ஒரு கனவு போல் இருந்தது. இதோ, மீண்டும் மலேசியா! இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு எம்மை விமானத்திலேயே தயார் படுத்துக்கொண்டேன். தாய் மண்ணே வணக்கம்!

முற்றும்

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 23)
குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார்கள். சக்சேனாவிடம் நான் எதுவும் பேச மாட்டேன், என்னை யாருக்கும் அடையாளப்படுத்தாதீர்கள் என மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினேன். பல பிரச்சனைகள் பற்றி அவ்விடம் கலந்துரையாடப்பட்டது. நேரமாகிக் கொண்டே சென்றது. காலையிலிருந்து கடுமையான வயிற்று வலி. நிகழ்வு முடிந்த பிறகு பேருந்து எடுக்கும் இடம் சென்றோம்.

மாலை நேரமாதலால் பேருந்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. நானும் பாக்கியா அக்காவும் நின்றுக் கொண்டிருந்தோம். அடுத்த நிறுத்தத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதிய பெண் ஒருத்தர் பேருந்தில் ஏறினார். நின்றுக்கொண்டிருந்த எங்களை இடித்துத் தள்ளிவிட்டு எங்கள் பின்னால் சென்று நின்றுக்கொண்டார். அவர் இடித்ததால் நிலைத் தடுமாறிய பாக்கியா அக்காவின் தோளை நல்லவேளையாக நான் பிடித்துக் கொண்டேன். நானும் பாக்கியா அக்காவும் நின்றுக்கொண்டே நிகழ்வைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம்.

“ஏம்மா, தலையை திருப்பாதே! முடி முகத்தில படுது,” என அதே மூதாட்டி குரல் கொடுத்தாள். பாக்கியா அக்காவின் நீண்டு விரிந்த கூந்தலைத் தான் அந்த மூதாட்டிச் சொன்னார். அக்கா, தனது கூந்தலை முன் பக்கம் இழுத்துவிட்டார். நான் பேசாமல் இருந்தேன். சற்று நேரத்தில் இன்னொரு நிறுத்தத்தில், மற்றுமொரு பெண்மணி ஏறினார். இவருக்குச் சுமார் 40 வயது இருக்கும். அவரும் பேருந்தில் பின்னால் வர, நானும் பாக்கியா அக்காவும் ஒதுங்கி வழி விட்டோம்.

இதற்கு முன் ஏறிய மூதாட்டி அப்படியே சிலை போல் நிற்க, இந்தப் பெண் அவரை உரசிக் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. “ஏம்மா, இடிக்காம போகத் தெரியாதா? இப்படி இடிச்சிக்கிட்டு போறிங்க. கண்ண தொறந்து பார்க்க மாட்டீங்களா?” என கேட்டதும் நான் சற்று அதிர்ந்துத்தான் போனேன். பொது பேருந்தில் இவ்வாறு தெரிந்தோ தெரியாமலோ இடிப்பதும் உரசுவதும் சகஜம்தானே? எதற்காக இவர் இப்படிப் பேசுகிறார்.

“நாங்க வர்றோம்னு தெரியுது தானே? எதுக்கு வழியை அடைச்சிக்கிட்டு நிக்கறீங்க? தள்ளி நிக்க வேண்டியது தானே?” அந்தப் பெண்மணி பதிலுக்குக் கூறினார். “நான் எதுக்குத் தள்ளி நிக்கணும்? நீ தள்ளிப் போக வேண்டியது தானே,” என மூதாட்டி ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். “இடிக்கறதையும் இடிச்சிப்புட்டு பேச்சு வேற,” என மூதாட்டி தொடர்ந்து பேசினார். ஆஹா, இன்று பேருந்தில் குடுமிப்புடி சண்டை ஒன்று நடக்கும் போலிருக்கே எனத் தோன்றியது.

“இடி படாம போகணும்னா கார்ல போக வேண்டியதுதானே? எதுக்கு ‘பஸ்’ல வரணும்,” என அந்தப் பெண் கேட்க. “நான் எதுல வேணும்னாலும் போவேன். எவ என்னை என்ன கேட்கறது?” என மூதாட்டி கத்த, எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் தென்பட்டது. நல்ல வேளையாக மூதாட்டி இறங்க வேண்டிய இடம் வந்தது. “நான் கார்ல போவேன், பஸ்லெ போவேன், நடந்துப் போவேன். இவ யார் என்னைக் கேட்கறதுக்கு? இவ கார்ல போக வேண்டியதுதானே? என்னைச் சொல்றா,” என எங்கள் பக்கம் திரும்பி முனகியவாறே மூதாட்டி இறங்கிச் சென்றார்.

நானும் அக்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. வீட்டை அடைந்து குளித்து, உடை மாற்றி உறங்கச் சென்றோம். அன்று இரவு முழுக்க எனக்குச் சரியான வயிற்றுப் போக்கு. குறைந்தது 10 முறைக்கு மேல் கழிவறைக்குச் சென்றுவிட்டேன். காலையிலும் அதே நிலை. அன்று ஒரு நண்பரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். உடல்நிலை காரணமாக சந்திப்பை தவிர்க்க வேண்டியதாயிற்று. உடல் சக்தி அனைத்தையும் இழந்து, சோர்ந்து படுக்கையில் சாய்ந்திருந்தேன். எழ முடியவில்லை. பாக்கியா அக்காவும், சித்தியும் பல தடவை எழுப்பிப் பார்த்தார்கள், முடியவில்லை.

லேசாக காய்ச்சல் வேறு. பாக்கியா அக்கா என் நிலையைப் பார்த்து ரொம்பவே கவலையானார். மறுநாள் உடல் நிலை சற்று சீரானது. மாலை நானும் பாக்கியா அக்காவும் கண்ணன் அண்ணாவுடன் மோட்டார் வண்டியில் சந்திரா பேரங்காடிக்குச் சென்றோம். ஒரு வண்டியில் மூன்று பேர் பயணம் செய்வது சற்று விசித்திரமாக இருந்தது. சந்திரா பேரங்காடி நடிகர் விஜய்க்குச் சொந்தமானது என கண்ணன் அண்ணா கூறினார். அங்கே இருந்த திரையரங்கில், ‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்திற்கான நுழைவுச் சீட்டுக்களை வாங்கிக் கொண்டோம். இன்று இரவு வீட்டில் அனைவரும் படம் பார்க்கச் செல்லலாம் என முன்பே திட்டம் தீட்டியிருந்தோம். பாலன் அண்ணாவிற்கும் சேர்த்து நுழைவுச் சீட்டு வாங்கினோம்.

திரும்ப வீட்டிற்கு வந்து குளித்து, சாப்பிட்டுவிட்டு திரையரங்கிற்குச் செல்ல தயாரானோம். இரவு 9.10-க்கு படம். கண்ணன் அண்ணா மோட்டார் ஓட்ட, அவருக்குப் பின்னால் பாக்கியா அக்கா அமர்ந்துக் கொண்டார். நீங்களும் ஏறுங்கள் என என்னைத் துரிதப்படுத்த, “நீங்கள்?” என குழப்பத்தோடு கவிதாவை ஏறிட்டேன். “அவள் வருவாள். நீங்க முதல்ல ஏறுங்கோ,” என பாக்கியா அக்கா அவசரப்படுத்தினார். சரியென்று பாக்கியா அக்காவின் பின்னால் நானும் ஏறி அமர்ந்தேன். கொஞ்சம் தள்ளி உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு பட்டென்று கவிதாவும் அதே வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

ஒரு வண்டியில் நான்கு பேர். கண்ணன் அண்ணா வண்டி ஓட்ட, நாங்கள் மூவரும் பின்னால் அமர்ந்திருந்தோம். அது எனக்கு முற்றிலும் புதுமையான அனுபவமாக இருந்தது. சாலையில் வண்டிச் செல்லும் போது நான் மிகுந்த பரவசமடைந்தேன். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாருமே எங்களை வினோதமாகப் பார்க்கவில்லை. இங்கு இப்படி மூன்று நான்கு பேர் ஒன்றாக மோட்டார் வண்டியில் செல்வது சகஜம் போலும்  என அனுமானித்துக் கொண்டேன். படம் முடிந்து மீண்டும் அதே போல் நால்வரும் மோட்டார் வண்டியில் வீடு திரும்பினோம். பாலன் அண்ணா எங்கள் நால்வரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே தனது வண்டியில் நண்பருடன்  சென்றுவிட்டார்,

வீடு வந்து சேர அதிகாலை 1.30 ஆகிவிட்டது. வந்ததும் நித்திரையாகிப்போனேன். மறுநாள் காலையிலேயே எழுந்து பாக்கியா அக்காவுடனும் கவிதாவுடனும் கதைத்துக் கொண்டிருந்தேன். நான் இந்தியா செல்கிறேன் என்று தெரிந்தவுடனேயே எனக்குத் தெரிந்தவர்களும் அலுவலக நண்பர்களும் ஏராளமான பொருட்கள் வாங்கி வரும்படி வேண்டியிருந்தனர். வந்து இத்துணை நாட்களிலும் நான் ஒன்றும் வாங்காமலே ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். ஊர் திரும்ப இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அன்று மாலை தி நகருக்குச் செல்வது என முடிவு செய்தோம்.

நான், பாக்கியா அக்கா, கவிதா, கண்ணன் அண்ணா, சித்தி, குழந்தைகள் என குடும்பமே வெளியே செல்ல தயாரானோம். தி நகரில் தேவையான பொருட்கள் வாங்கியப் பிறகு அனைவரும் மெரினா கடற்கரைக்குச் சென்றோம். நாங்கள் மெரினாவை அடைந்த பொழுது நன்றாக இருட்டிவிட்டது. பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது. மழை வருவதற்காக அறிகுறிகள் தெரிந்தன. இருந்த போதும், அனைவரும் குதூகலமாக மெரினாவில் ஓடித் திரிந்துக் கொண்டிருந்தோம்.

மெரினா கடற்கரை பரந்து விரிந்துக் கிடந்தது. ஆங்காங்கே சிலர் மணலில் அமர்ந்துக் கதைத்துக் கொண்டிருந்தனர். பெட்டிக் கடைகளில் பானங்கள், நொறுக்குத் தீனிகள் என அங்கங்கே விற்பனையாகிக் கொண்டிருந்தன. திடீரென மழைத்துளிகள் மண்ணில் விழ அவ்விடம் அமைந்திருந்த மீன் கடை ஒன்றுக்குள் நாங்கள் அனைவரும் நுழைந்தோம். இருந்த போதும் பலத்த காற்றினால் சாரல்கள் கடையில் உள்ளேயும் வர நாங்கல் நனையவே செய்தோம்.

அங்கே கடையில் சுடச்சுட பொரித்து எடுக்கப்பட்ட மீனையும் இறால்களையும் வாங்கி உண்டோம். அது அதிக சூடாக இருந்ததால் கண்ணன் அண்ணாவும், சித்தியும் எனக்கு ஆற வைத்து ஊட்டி விட்டனர். மழையால் உடல் நனைய, அவர்களின் எல்லையற்ற அன்பில் என்னுள்ளம் நனைந்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மழை நின்றது. மீண்டும் கடலின் அலையோடு விளையாட ஆரம்பித்தோம்.

அவ்விடம் பொய்க் குதிரைகள் பூட்டப்பட்ட சுற்றும் இராட்டினம் ஒன்று இருந்தது. சித்தியின் குழந்தைகள் அதில் ஏறி விளையாட ஆசைப்பட்டனர். உடனே, என்னையும் கவிதாவையும் அவர்களுடன் சேர்த்து ஏற்றிவிட்டு விட்டனர். சிறுப்பிள்ளைத் தனமாக இருந்த போதும் அதனை நான் பெரிதும் விரும்பினேன். இராட்டினம் சுற்றி நின்ற பிறகும் எனது தலை சுற்றிக் கொண்டே இருந்தது. கடற்கரையில் நன்றாக உலவி விட்டு இரவு வீடு வந்துச் சேர்ந்தோம். அன்று இரவு முழுக்க அழகிய இந்தக் குடும்பத்தின் பாசத்தினைப் பற்றி நினைத்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன்.