வியாழன், 24 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 3)




விமானம் ஆகாயத்தில் பறந்துக்கொண்டிருந்தது. விமானப் பணிப்பெண் ஒருவர் பயணிகள் பயண விபர அட்டை ஒன்றை அனைவரிடமும் கொடுத்துப் பூர்த்திச் செய்யச் சொன்னார். எனது கைப்பையில் எப்போதும் பேனா வைத்திருக்கும் பழக்கம் இருப்பதால், அட்டையைப் பெற்றவுடன் நானும் அதனைப் பூர்த்தி செய்யத் தொடங்கிவிட்டேன். எமது பக்கத்தில் அமர்ந்திருந்த மாதுவும் ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார். அடிக்கடி அவர் நான் என்ன எழுதுகிறேன் என்று கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அவரது அட்டையைப் பார்த்தேன். அவர் பல விபரங்களைப் பூர்த்தி செய்யாமல் தடுமாறுவதைப் புரிந்துக் கொண்டேன்.

நான் பார்ப்பதை அவர் பார்த்ததும் புன்னகைப் புரிந்தார். நானும் சிரித்தேன். எனது அட்டையை அவரிடம் கொடுத்து இப்படி எழுத வேண்டும் என ஆங்கிலத்தில் கூறினேன். அவர் ஆங்கிலத்தில் பேச சற்றுத் தடுமாறினார். “தமிழ் தெரியுமா” எனக் கேட்டேன். தமக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும் ஆங்கிலம் புரியும் என்றும் கூறினார். சரியென்று அவர் பூர்த்தி செய்ய வேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டினேன். நன்றி சொல்லிவிட்டு எம்மைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்தார். வழக்கமாக வழிப்பயணிகள் கேட்கும் கேள்விகள்தான். நானும் பதிலளித்தேன். உறக்கமின்மையாலும், களைப்பாலும் இமைகள் கனக்க ஆரம்பித்தன. கையோடு கொண்டு வந்திருந்த போர்வையை முழுக்கப் போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டேன்.

நான் கண் விழிக்கையில் விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழக நேரம் சரியாக மாலை மணி 5.25-க்கு விமானம் சென்னையை அடைந்தது. வெளிநாட்டுப் பயணிகள் வேறு ஒரு வரிசையில் நிற்க வேண்டும் என்பதனால், கடப்பிதழ் பரிசோதிக்கும் முன்னரே இராஜ்குமாருக்கு நன்றி கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். வரிசை சற்று நீளமாக இருந்தது. இதற்கு முன்னர் சென்னை வந்த அனுபவம் இருந்ததால் சூழல் எதுவும் புதுமையாக இல்லை. எனது மலேசிய கைப்பேசி அட்டையைக் கலட்டிவிட்டு முன்பு தமிழகத்தில் நான் உபயோகித்த ‘யுனிநோர்’ கைப்பேசி அட்டையைப் அழைப்பேசியில் பொருத்தினேன். எண் பதியப்படவில்லை என்ற செய்தி வந்தது. இனி அந்த எண்களை நான் மீண்டும் பயன்படுத்த முடியாது. வெளியில் உள்ளவர்களை எவ்வாறு தொடர்புக் கொள்வது? சரி, ஏதாவது வழி இல்லாமலா போய்விடும் என மனதைத் தேற்றிக்கொண்டேன்.

கடப்பிதழ் சரிப்பார்க்கப்பட்டு, பயணப் பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்திற்குச் சென்றேன். இந்த முறை 3 பைகள் அல்லவா கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா என்ன? ஏற்கனவே நடந்தது போல, நான் பைகளைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டுச் செல்லவும், சுங்கத்துறை அதிகாரி இருவர் எம்மை நெருங்கி வந்து, “உங்கள் பைகளை நுண்கூறு மேவுதல் (ஸ்கேன்) செய்ய வேண்டும்,” என்று ஆங்கிலத்தில் சொன்னனர். “எனக்கு முன் கூட்டியே தெரியும். எனது பைகளை நுண்கூறு மேவுதல் செய்வதுதான் உங்களுக்கு வழக்கமான ஒன்றாயிற்றே. மற்ற பயணிகளை விட்டுவிட்டு எதற்கு எனது பைகளை மட்டும் திரும்பத் திரும்ப நுண்கூறு மேவுதல் செய்ய வேண்டும்? இனி இந்த விமான நிலையத்திற்கே நான் வரப்போவதில்லை,” என கூச்சலிட்டவாறு வெறுப்புடன் நுண்கூறு மேவுதல் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றேன்.

நான் சத்தமிடவும் சாதரண உடையணிந்த மற்றும் இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்விடம் விரைந்து வந்தனர். “என்ன ஆனது? ஏதாவது பிரச்சனையா?” என ஒரு அதிகாரி கனிவுடன் கேட்டார். இருந்த கடுப்பில், “சென்னை விமான நிலையத்திற்கு நான் இரண்டாவது முறையாக வருகிறேன். முன்பு வந்த போதும் மற்ற பயணிகளை விட்டுவிட்டு எனது பைகளை மட்டும் சோதனை செய்தார்கள். இப்பொழுதும் அப்படியே செய்கிறார்கள். என்னைப் பார்க்க உங்களுக்கெல்லாம் எப்படித் தெரிகிறது? இவர்கள் எம்மை நடத்தும் விதம் வெறுப்படையச் செய்கிறது,” என படபடவெனக் கொட்டிவிட்டேன். அந்த அதிகாரி பவ்யமாக “எந்த நாட்டிலிருந்து வருகிறீர்? என்ன விடயமாக வந்தீர்? எங்குத் தங்கப் போகிறீர்? எத்தனை நாட்கள் இருப்பீர்? என்ன தொழில் செய்கிறீர்? இதற்கு முன்பு இங்கு வந்து என்ன செய்தீர்?” என உரையாடுவது போல் கேள்விகள் தொடுத்தார். அது உரையாடல் போன்று தோற்றமளிக்கும் விசாரணை என்று தெரியாமல் இருக்க நான் அடிமுட்டாள் அல்லவே?

நானும் அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் முறையே பொய்யான பதில்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். அது ஒரு உரையாடல் என்பதற்கு அடையாளமாக நானும் சில கேள்விகள் கேட்டு வைத்தேன். பிறகுதான் அவர்கள் இருவரும் சுங்கத்துறைப் புலனாய்வாளர்கள் என்பது தெரிய வந்தது. நான் பையைத் தூங்கி நுண்கூறு மேவும் இயந்திரத்தில் வைக்கப் போனேன். “ஏதாவது உதவி வேண்டுமா?” என அவர்கள் இருவரும் கேட்டனர். “தேவையில்லை. என்னால் முடியும். நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகின்றீர்கள். இதற்கு முன்பு இவ்விடம் இருந்தவர்கள் பயணிகள் வெறுப்படையும் அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக்கொண்டனர்,” என எமது முந்தைய அனுபவங்களை விவரித்தேன். அவர்கள் அதற்காக வருத்தம் தெரிவித்தனர்.

அவர்கள் எம்மிடம் கனிவுடன் நடந்துக் கொண்டதால் எமது கோபம் அப்போது தணிந்திருந்தது. விடைப்பெறுமுன் அவர்களது பெயர்களைக் கேட்டேன்; சொன்னார்கள். “நீங்கள் தமிழ், நீங்கள் தெலுங்கா?” என இருவரையும் பார்த்துக் கேட்டேன். அவர்கள் சற்று திகைத்தனர். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டனர். “உங்கள் பெயர்களே உங்கள் இனத்தை அடையாளப்படுத்திவிட்டன,” என்று சொல்லி, தெலுங்குக்காரர் பக்கம் திரும்பி, “உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என கேட்டேன். அவர் தெரியும் என்று சொல்லவே, “முன்பே சொல்லியிருந்தால் தமிழிலேயே பேசியிருக்கலாமே?” என்று தமிழில் சொன்னேன். இவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் பேசியிருந்தபடியால் சற்று நேரம் தமிழில் அவர்களுடன் கதைத்துவிட்டு விடைப்பெற்றேன்.

நான் விமான நிலையத்திலிருந்து வெளியாகும் போது யாரோ ஒரு பெண் தூரத்தில் இருந்து கையசைப்பது தெரிந்தது. நடந்துக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தேன்; யாருமில்லை. அப்படியானால் அந்தப் பெண் என்னை நோக்கித்தான் கையசைக்கிறாள் என்பதனை ஒருவாறு யூகித்துக்கொண்டேன். யாராக இருக்கும் என எண்ணியவாறு நானும் கையசைத்தேன். அப்பெண்ணை நெருங்க நெருங்க அவள் யாரென்பதை அறிந்துவிட்டேன். இந்தச் சந்திப்பினை நான் எதிர்ப்பார்க்கவில்லை. சுமதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) எனக்கு முகநூலில் அறிமுகமான பெண். இந்தப் பெண் எம்மீது கொண்டிருக்கும் அன்பு அபூர்வமானது. ‘அக்கா, அக்கா’ என்று சதா நேரமும் எனது முகநூலில் செய்தி அனுப்பிக்கொண்டிருப்பாள். தனக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன் எனவும், என்னைப் போல் தானும் ஆளாக வேண்டும் எனவும் பிதற்றுவாள். ஒரு முறை எனக்காக ‘இரசிகர் பக்கம்’ வேறு முகநூலில் திறந்திருந்தாள். அதெல்லாம் வேண்டாம் என நானே எடுக்கச் சொன்னப் பிறகு தான் அவற்றை நீக்கினாள்.

நான் சென்னைக்கு வருவதாக அவளுக்குச் சொல்லியிருந்தேன். விமானம் வந்திறங்கும் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தேன். சுமதி அவளது வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்திருந்தாள். நேரம் அதிகம் இல்லாததாலும், குறுகிய கால பயணம் என்பதாலும் எம்மால் இம்முறை வர இயலாது என்று சொல்லியிருந்தேன். “ஒரு 5 நிமிடமாவது உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசையாய் இருக்கிறது அக்கா. நானே விமான நிலையம் வந்துப் பார்க்கிறேன். 5 நிமிடம் கூட போதும்,” என அவள் சொன்ன போது அது எனக்குச் சற்றுப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. “சரி, பார்க்கலாம்,” என சொல்லி வைத்தேன். ஆனால், நிஜமாகவே அந்தப் பெண் இவ்வளவு தூரம் எம்மைப் பார்க்க வருவாள் என நான் நினைக்கவில்லை.

நான் விமான நிலைய நுழைவாயிலை விட்டு வெளியே வரவும் சுமதி முகத்தில் பரவசம் பொங்க என்னருகே சிறுப்பிள்ளை போல் குதூகலத்துடன் ஓடி வந்தாள். “அக்கா…” என்றாள். மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றவாறு , “சுமதி?” என கேட்டேன். தலையாட்டினாள்; அவள் கண்கள் கலங்கின. நான் நிலைத் தடுமாறிப் போனேன். “என்னம்மா?” என அப்படியே அவளை வாரி அணைத்தேன். அவளது தடையையும் மீறி கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. “ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?” என பதற்றத்துடன் கேட்டேன். “ஒன்றுமில்லை அக்கா. உங்களைப் பார்த்த சந்தோஷம்,” என அவள் கூறிய போது நான் நெகிழ்ந்துப் போனேன். “இதிலென்ன இருக்கிறது? நான் சாதாரணப் பெண். இதற்காக எதற்கு அழுகிறாய்? அழாதே,” என அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன்.

“மன்னிச்சிருங்க அக்கா… நான் அழலை. அது பாட்டுக்கு வருது. எனக்கு ரொம்பெ சந்தோஷமா இருக்கு,” என்றவள், எதையோ மறந்துவிட்டவள் போல் அவ்விடம் சிறிது தள்ளி நின்றுக்கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து, “டேய், இங்க வா,” என அழைத்து, “அக்கா, இது என் தம்பி,” என அறிமுகம் செய்து வைத்தாள். “யாருடன் வந்திருக்கிறீர்கள்,” எனக் கேட்க, “நாங்கள் இருவர் மட்டும்தான்,” என பதில் சொன்னாள். அவள் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது. ஆனால், கண்களின் ஓரத்தில் இன்னமும் நீர் அரும்பியிருந்தது.

கருத்துகள் இல்லை: