கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஜூலை, 2013

புழலில் ஒரு நாள் (2)

 
 


முகாம் உள்ளே இருக்கும் பழக்கடை

முகாம் மக்கள் மட்டுமே ஒருங்கிணைந்து நடத்தும் அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் வெளி ஆட்களான எங்களைக் கண்டதும் அம்மக்கள் மகிழ்ச்சியடையவே செய்தனர். தங்களது மனநிலையை அவர்களே எங்களிடம் கொட்டினர். தங்களுக்கு நீதி வேண்டி போராடும் தமிழ்நாட்டு மாணவர்களை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.  சரியாக மாலை 5.30 மணிக்கு அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. காலையிலிருந்து அங்கே கூடியிருந்த சிறார்களும் அப்போதுதான் பழரசம் அருந்தி தங்கள் தொண்டையினை நனைத்துக் கொண்டனர். அங்கே குழுமியிருந்த மக்களைக் கண்ட போது சொல்ல இயலா சோகம் ஒன்று தொண்டையை அடைத்தது.
 
அறிவிப்பு பலகைகள்

உண்ணாவிரதம் முடிந்து அனைவரும் அவரவர் இல்லம் செல்லத் தொடங்கினர். ஒருசிலரே எங்களைத் தேடி வந்து எங்கள் விபரம் கேட்டனர். இதுதான் சமயம் என்று அவர்களின் வாழ்வியலை அறிந்துக்கொள்ள நானும் சில கேள்விகள் தொடுத்தேன். எனது கேள்விகளுக்கு பலரும் தயங்கியபடி பதில் கூற, ஒரு பெண்மணி மட்டும் மிக தைரியமாக தங்களது முகாம் வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினார். அவரை அக்கா என்று உரிமையோடு அழைத்து, முகாமை சுற்றிப் பார்க்க இயலுமா என்று கேட்டேன். மற்ற பெண்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து தயங்கி நின்றனர். அந்த அக்கா சற்று யோசித்தார். "சரி, வாங்கோ" என அழைத்தார். என்னுடன் வந்த மாணவர்களிடம் சற்று நேரத்தில் வந்து விடுவதாகக் கூறி அக்காவைப் பின் தொடர்ந்தேன்.
பாலர் பாடசாலை

அப்போதுதான் உண்ணாவிரதம் நடந்த பந்தலுக்கு அருகில் பழக்கடை ஒன்று இருப்பதைப் பார்த்தேன். முகாம் மக்கள் தங்களுக்கு வேண்டிய பழ வகைகளை அவ்விடமே வாங்கிக்கொள்வார்கள். முகாமிலிருந்து வெளியில் சென்றால் மற்ற பொருட்களை வாங்க இயலுமாம். பழக்கடையைத் தள்ளி சிறிது தூரம் சென்றவுடன் பாலர் பாடசாலை ஒன்று தென்பட்டது. முகாமில் வாழும் சிறுவர் சிறுமியர் இவ்விடமே தங்கள் பாலர் கல்வியைத் தொடங்கலாம் என்றும், மேற்கொண்டு படிப்பதற்கு வெளியில் செல்ல வேண்டும் என்றும் அக்கா கூறினார்.
ஒற்றையடி சந்து

முகாமின் ஒரு பகுதியில் இரு கரும்பலகைகள் இருந்தன. அவற்றில்தான் பொது நிகழ்வுகள், முக்கியமான செய்திகள் அனைத்தும் எழுதப்பெற்று முகாம் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அக்கா தெரிவித்தார்.  அதில் ஒரு பலகையில் அன்றைய உண்ணாவிரத நிகழ்வு குறித்து தகவல் பகிரப்பட்டிருந்தது. மற்றொரு பலகையில், 'ரேஷன்' பொருட்கள் எப்போது வழங்கப்படும் என குறிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறுகிய சாலையில் பல ஒத்தை சந்துகள் பிரிந்துச் சென்றன. ஒவ்வொரு சந்துக்குள்ளும் தீப்பெட்டிகள் போல் பல சிறு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. "என்ன அக்கா, வீடுகள் இவ்வளவு சிறியதாக இருக்கிறதே?" எனக் கேட்டேன். முகாம் வாசலை ஒட்டி அமைந்திருப்பதனால் முகாமிலேயே சற்று வசதியான வீடுகளையே நான் பார்ப்பதாக அவர் சொன்னார். சற்று தள்ளி இருக்கும் முகாம் வீடுகள் இன்னும் சிறியதாக, நெருக்கமாக இருக்கும் எனவும் கூறினார். அவ்விடம் செல்ல முடியுமா எனக் கேட்டேன். நேரமாகிவிட்டதால் சந்தேகப்படுவார்கள் என தயங்கியப்படி சொன்னார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லவும், "உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள். நீங்கள் சென்ற பிறகு கேள்வி மேல் கேள்வி கேட்டு எங்களை சித்ரவதை செய்து விடுவார்கள்," என்றார். அதற்கு எதுவும் கேட்க எனக்கு மனம் வரவில்லை.
சமையல் செய்யும் இடம்

அந்த அக்காவிற்கு மிகவும் பழக்கமான ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த வீட்டின் முன்முறம் சற்று விசாலமாக இருந்தது. "பரவாயில்லையே, வீட்டிற்கு முன்புறம் இவ்வளவு இடம் இருக்கிறதே!" என்றேன். அதற்கு அந்த அக்கா சொன்ன பதில் எனது ஆச்சர்யக்குறியை அதிர்ச்சிக்குறியாக மாற்றியது. அவ்விடம்தான் அந்த வீட்டு ஆட்கள் சமையல் செய்ய வேண்டுமாம். வீட்டின் உள்ளே சமையல் செய்வதற்கான வசதியும் போதிய இடமும் இல்லையாம். அதற்குப் பக்கத்துக் குழாயில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வந்துக்கொண்டிருந்தது. எங்கேயிருந்தோ சில பலகைகளைக் கொண்டும், தெருவோர விளம்பர பதாகைகளைக் கொண்டும் மறைவிடம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதுதான் குளியல் அறையாம்!
குளிப்பதற்காக செய்யப்பட்ட மறைவிடம்

அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். எனக்கு மூச்சி முட்டியது. அந்த வீட்டின் வரவேற்பறை இரண்டு அங்குலம், பத்தடி நீளமாக இருக்கும். சரியாக கணக்குத் தெரியவில்லை. பாதி சுவர் மட்டுமே எழுப்பப்பட்டிருந்தது. மீதி அட்டைப்பெட்டிகளைக் கொண்டுச் சுவராக எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மேல் ஓட்டை ஒடிசலுடன் தகரமும், எர்நேரத்திலும் கலண்டு விழும் தருவாயில் இருக்கும் ஒரு மின்விசிறியும் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்த சில நொடிகளிலேயே எனக்கு வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. சில ஓவியச் சுவரொட்டிகளைக் கொண்டு தங்களால் இயன்ற மட்டும் அந்த வீட்டினை அலங்காரம் செய்து வைத்திருத்கனர். ஒரு அலைப்பேசியும் பழைய சிறிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் சிறிய மேசை மீது வைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் வரவேற்பறை

அதனையொட்டி, இரண்டு சிறு அறைகள் இரண்டு அமைக்கப்பெற்றிருந்தன. ஒற்றைக் கட்டில், இரு நெகிழி நாற்காலிகள்,பழைய மேசையோடு, சிறு சிறு மூட்டைகள் (உடைமைகள்), மடிக்கணினி மற்றும் சில புத்தகங்கள்  இருந்தன. இந்த அறையில் சற்று தாரளமாகப் படுக்கலாம் போலும். அடுத்த அறையில் அலமாரிகளும் ஒரு சில மரப்பெட்டிகளும் இருந்தன. மூன்று பேர் ஒரே சமயத்தில் நுழைந்தால் இந்த அறை நிறைந்துவிடும் போல இருந்தது. இவ்வளவுதான் இவர்கள் உடைமை! இதுதான் இவர்கள் வாழ்க்கை! மறுபடியும் வரவேற்பறைக்கு வந்தேன். வீட்டுப் பெண்மணியும் என்னை அழைத்து வந்த அக்காவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.  வீட்டில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்தேன்.

அந்த அம்மாவின் வீட்டுக்காரர் போரில் உயிரிழந்துவிட்டார். இரண்டு பெண் பிள்ளைகள். அதில் இளையவள் இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாள். பெரியவள் எங்கே என்று கேட்டேன். அந்த அம்மா, அக்காவின் முகத்தைப் பார்த்தார். அவர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. "இவங்ககிட்ட சொல்லுங்க. வெளியில போய் சொன்னாதான் ஏதாவது தகவல் தெரியும்," என அக்கா தைரியம் கூறினார்.  பெரிய பிள்ளையை வெளிநாட்டிற்கு கள்ளத்தனமாக முகவருக்குப் (ஏஜெண்ட்) பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். அனுப்பி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் அவர்களிடமிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை. முதலாவதாக இந்தோனேசியா கடல் எல்லையில் அவர்கள் சென்ற கப்பல் பிடிபட்டுவிட்டது என்ற செய்தி வந்ததாம். அதன் பின்னர் ஒரு தகவலும் வரவில்லையாம்.  யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும் ஒரு தகவலும் பிடிபடவில்லையாம். அந்தத் தாய் அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் கதறியழ ஆரம்பித்தார். நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.
தகர ஓடும், அபாய நிலையில் இருக்கும் மின்விசிறியும்

அந்தப் பெண்ணோடு முகாமிலிருந்து மொத்தம் 9 பேர் கள்ளத்தனமாகக் கப்பலில் சென்றுள்ளனர். அவர்களின் நிலையும் இன்று வரையில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்கள் எந்த நாட்டில் எல்லையிலாவது கைது செய்யப்பட்டார்களா? அல்லது கடல் அவர்களைக் காவு வாங்கி விட்டதா என்று யாருக்குமே தெரியவில்லை. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விடயம் ஒன்றுதான். சென்றவர்கள் ஒருவர் கூட செல்ல வேண்டிய இலக்கைச் சென்றடையவில்லை. பெற்ற பிள்ளை எங்கே இருக்கிறாள்? அவளுக்கு என்ன நேர்ந்தது? உயிரோடு இருக்கிறாளா இல்லையா? என்று அறியாமல் அந்தத் தாய் தவித்த தவிப்பு இன்னமும் என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. அவருக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று எனக்கே தெரியவில்லை. முந்தைய காலமாக இருந்தால், ஏதாவது முயற்சி செய்ய வழியிருக்கும். அனைத்திலிருந்தும் விலகி, அனைத்துத் தொடர்புகளையும் அறுத்தெறிந்துவிட்டு வாழும் என்னால் இப்போது என்ன செய்ய இயலும்? மனம் வலித்தது. அந்தத் தாய்க்கு என் கண்ணீர் மட்டுமே சமாதானம் சொல்லியது. 
சற்று வசதியாக இருக்கும் முதல் அறை

அதற்கு மேலும் அவ்விடம் நிற்க மாட்டாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.  என்னுடன் வந்த சட்டப்பல்கலைக்கழக மாணவர்களுடன் முகாம் இளைஞர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் சலிப்பு, ஆற்றாமை, கோபம் என பல்வகை உணர்வுகளும் கொப்பளித்ததால் விடயம் அறிய அவர்களை நோக்கிச் சென்றேன். "எங்கட தமிழர்கள் இங்க இருங்காங்கன்னு நம்பி வந்தோம். ஆனா, இங்க வந்த பிறகு அங்கச் சண்டையிலேயெ செத்திருக்கலாமோன்னு தோணுது, " என ஒரு பையன் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறினான். அப்படி என்ன தான் நடந்தது என விசாரித்தேன். எனக்கே கோபம் வந்தது!`
மிகவும் குறுகலாக இருக்கும் இரண்டாம் அறை

சுதந்திரத்திற்காக போராடிய இவர்களுடைய சுதந்திரம் இவ்விடம் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டது. நான்கு பேர் ஒன்றாக அமர்ந்துப் பேச முடிவதில்லை. வெளியில் சென்று தாமதமாக வரமுடிவதில்லை.  இரவில் புழுக்கம் தாங்காமல் வீட்டுக்கு வெளியே உலாவ நினைத்தாலும் முடிவதில்லை. காவல் துறையினரின் அதிகப்படியான கெடுபிடி, கேவலமான வார்த்தைகள் என அனைத்தும் இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கிவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாக இருக்கிறதாம். அப்படியே கிடைத்தாலும் சம்பளம் என்று வரும் போது மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படியான பலப்பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்தனர்.

வானம் சற்று இருட்டத் தொடங்கியது. பெரியவர் ஒருவர் வந்து, அந்த இளைஞர்களைக் களைந்துப் போகுமாறு கேட்டுக்கொண்டார். "உங்ககிட்ட கதைச்சத கண்டிப்பா பொலீஸ் பார்த்திருக்கும். நீங்க போன பிறகு எங்களை விசாரிப்பானுங்க. இங்க இப்படித்தான்," என்று சலிப்புடன் கூறிய இளைஞன் ஒருவன் களைந்துச் சென்றான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் களைய ஆரம்பித்தனர்.  பலவிதமான எண்ணங்கள் ஆட்கொள்ள வேறு எதுவும் பேசாமல் நாங்களும் வீடு நோக்கிப் புறப்பட்டோம். போகும் வழியில் புழல் சிறை. மீண்டும் சொல்கிறேன். புழல் சிறைக்கும் புழல் முகாமிற்கும் எனக்கு அதிக  வித்தியாசம் தெரியவில்லை.

***முற்றும்***

புழலில் ஒரு நாள் (1)

 
 வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதத்தின் போது, தமிழீழ கொடியினை ஆடையாக தரித்து வந்த சிறுவர்கள்

மார்ச் 2013  தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் எழுச்சிப்பெற்று நடந்துக்கொண்டிருந்தது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது; இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்; ஆசிய நாடுகள் சர்வதேசிய விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாது; இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்து லயோலா கல்லூரி மாணவர்கள் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.  லயோலா கல்லூரி மாணவர்கள் சிலரால் மூட்டப்பட்ட இத்தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத்தீ போல் பரவிய காலகட்டம். தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இம்மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக வாழ் ஈழ அகதிகள் மார்ச் 22-ஆம் திகதி அன்று ஒன்று திரண்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை வள்ளுவர் கோட்டத்தின் அருகே மேற்கொண்டனர். அதே நாளன்று 'புழல்' அகதிகள் முகாமிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.  முதல் நாள் இரவே கேணல் கிட்டுவின் மாமியார் அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு விபரம் கூறியிருந்தபடியால், அன்று காலையிலேயே வள்ளுவர் கோட்டத்திற்குக் கிளம்பிவிட்டேன். வீட்டைவிட்டு புறப்படும் போதே, "இன்டைக்கும் உண்ணாவிரதமா?" என அம்மா கவலையுடன் கேட்டார். சிரித்துவிட்டு, "இரவுக்குள் வந்துவிடுவேன்" என சமாதானம் கூறினேன். கடந்த சில நாட்களாகவே மாணவர் போராட்டம், உண்ணாவிரதம் என அடிக்கடி வெளியில் சென்று விடுவதால் அந்தத் தாயின் உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. போகும் இடங்களில் கைது நடவடிக்கைகள் இருப்பதாலும் , என்னுடைய தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததாலும் அம்மா கொஞ்சம் பயப்படவும் செய்தார். எம்மை சுமந்து பெறா தாயாக இருந்த போதிலும், பெற்றப் பிள்ளைப் போல் எம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அந்த ஈழத்துத் தாயின் பாசம் எம்மை நெகிழ வைத்தது.
அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழ ஆதரவாள திரையுலக பிரபலங்கள்

வாடகை வண்டியில் வள்ளுவர் கோட்டம் சென்றடைந்தேன். மிகப்பெரிய கூடாரம் அமைத்து ஈழத்தமிழர்கள் பலர் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இயக்குனர் சேரன், தேனிசைத் தென்றல் செல்லப்பா, மைசூர் அலிகான், இயக்குனர் களஞ்சியம் ஆகியோருடன் இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அவ்விடம் கூடியிருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. பிற்பகல் வரை அவர்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தேன். உண்ணாவிரதப் பந்தலில் நெற்பயிரோடு கலந்திருக்கும் களை போல சில துரோகிகளும் கலந்திருக்கக் கண்டேன். "உங்களை இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஒதுங்கியிருந்தீர்களே?" என ஒருவன் அவனாகவே வந்து கேட்டது எரிச்சலூட்டியது. நெஞ்சம் படபடத்தது. "அடப்பாவிகளா? இங்கேயும் கலந்துவிட்டீர்களா" என மனம் கதறியது. ஒரு புன்னகையோடு விலக முற்பட்டேன். வேண்டுமென்றே போராட்டங்களிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்ள காரணமாக இருந்த சம்பவங்களை அவனாகவே நினைவூட்டினான்.

அதற்கு மேலும் அவ்விடம் இருக்க மனம் விரும்பவில்லை.  அதற்குள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய  மாணவர்கள் அவ்விடம் வர, அவர்களோடு புழல் நோக்கிச் சென்றேன். தமிழ்நாட்டில் புழல் சிறை பிரபலமானது. அதனை அடுத்து புழல் அகதிகள் முகாம். இவ்விரண்டிற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில், ஈழத்து அகதிகளை இடம் பற்றாக்குறைக் காரணமாக புழல் சிறையின் உள்ளேதான் வைத்திருந்தார்களாம். பின்னர்தான் அதன் அருகாமையிலேயே அகதிகள் முகாம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் என பெரியவர் ஒருவர் கூறி அறியப்பெற்றேன்.
புழல் அகதிகள் முகாமில் நடைப்பெற்ற அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழத்தமிழர்கள்

மிகவும் குறுகலான செம்மண் சாலை. சிறைக்கதவுகள் போன்று பெரிய வாயிற்கதவுகள் அதனைத் தாண்டிய அடுத்த நொடியே புழல் அகதிகள் முகாமின் எல்லை ஆரம்பமாகிறது. காலையிலேயே உண்ணாவிரதம் தொடங்கிவிட்டதால், முகாமிலுள்ள அனைத்து ஈழத்தமிழர்களும் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இவ்விடம் பெரும்பான்மை பெண்களும் குழந்தைகளுமே கண்ணில் பட்டனர். மிக நீண்ட உண்ணாவிரதப் பந்தலின் கடைசியில் சில ஆண்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஈழத்தமிழர் ஒருவர் உணர்ச்சிப்பொங்க உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை விவரிக்கும் வேளையில் தாங்க மாட்டாமல் அவரது கண்கள் பனித்துவிட்டன. நாம் அறிந்த, அறிந்திராத சில திடுக்கிடும் விடயங்களை அவர் அன்று அனைவர் மத்தியிலும் பகிர்ந்துக்கொண்டார்.

தமிழ்ப்பெண்களின் மார்பை அறுத்து, "தமிழச்சிகளின் மார்பு கறி இங்கே கிடைக்கும்" என்று எழுதிப்போட்ட சிங்கள வெறிநாய்களின் அராஜகத்தைச் சொன்னார். போர் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச அரிசி வழங்குகிறோம் என்று பொய்யுரைத்து, சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்து வெடி வைத்துக் கொன்ற சிங்களவனின் வெறிச்செயலைச் சொன்னார். இன்னும் என்னென்னவோ சொன்னார். நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களைச் சொன்னார். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சட்டப் பல்கலைக்கழக மாணவியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஊற்றெடுத்தது. அந்தத் தெலுங்கு மாணவி தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் எம்மையும் உருக்கியது.
 
***தொடரும்***

செவ்வாய், 18 ஜூன், 2013

சாமசுந்தரா (கறுப்பழகன்)


அழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவ்வுலகத்தில், கறு நிறத்தை மேனியாகக் கொண்டு அவதரித்த கிருஷ்ணன் உலகில் அனைவரது மனதையும் கவர்ந்தான். அவன் அழகன். சாதரண அழகன் அல்ல. கறுப்பு அழகன். அதன் காரணமாகவே அவனை சாமசுந்தரா என்று அழைத்தனர்.

இந்தப் பதிவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியது அல்ல. மலேசியாவில் கடந்த 15 & 16 ஜூன் 2013 அன்று மலாயாப் பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சாமசுந்தரா' என்ற நாட்டிய நாடகத்தினைப் பற்றியது. இயல், இசை, நாடகத்தினைப் போற்றிப் புகழும் தமிழுலகில் 'சாமசுந்தரா' என்ற இந்நாடகம் மற்றுமொரு மைல் கல் என்றால் அது மிகையில்லை.

மலேசிய மலைநாட்டில் மேடை நாடகங்கள் அதிக அளவில் நடைப்பெறுவதில்லை. இருந்த போதிலும் எஸ்.டி, பாலா போன்ற இயக்குனர்களின் பேரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில நாடகங்கள் அபூர்வமாக நடந்தேறுவது உண்டு. அதிலும் மேடை நாட்டிய நாடகங்கள் என்பது சமீப காலமாகவே இவ்விடம் வேறூன்ற தொடங்கியுள்ளது. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண்பதை விட இவ்வாறு நேரில் ஒரு மேடை நாடகத்தினை, அதிலும் நாட்டிய நாடகத்தினை காண்பது மெய்யாகவே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

சுமார் 60 நடனமணிகள் 'சாமசுந்தரா' என்ற மேடை நாட்டிய நாடகத்தில் பங்குப்பெற்றுள்ளனர். இதனை 11 நடன இயக்குனர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர். பரதம், குச்சுப்புடி, கதக் போன்ற பாரம்பரிய நடனத்துடன் பாலிவூட் நவநாகரிக நடனத்தையும் இணைத்து புது பொலிவுடன் இந்நாட்டிய நாடகத்தினை தயார் செய்துளனர். கேசவா, கோபாலா, மதுசூதனா, கோவிந்தா, சியாமசுந்தரா என கிருஷ்ணனின்  பல்வேறு பரிவாரங்களையும் மிக அழகாக விளக்கி அபிநயம் பிடித்துள்ளனர்.

இதில், கிருஷ்ணரின் சிறு வயது விஷமங்களை எடுத்துக்கூறும் பாகத்தில், சிறு குழந்தைகள் மிக அழகாகத் தங்கள் குறுப்புத்தனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளின் குறும்பும் அபிநயமும் பார்ப்போர் இதழ்களில் புன்னகையை மலரச் செய்வதில் வெற்றிப்பெற்றன. நாட்டிய மணிகளில் உடை அலங்காரங்களும் மேடை அலங்கரிப்பும் நம்மை பிருந்தாவனத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டன.

மொத்தம் 16 அத்தியாயங்களில் மிகச் சுருக்கமாக கிருஷ்ணாவின் ஒரு சில லீலைகளை நாட்டிய நாடகத்தின் வழி மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். சுகன்யா வேணுகோபால் அவர்கள் இந்நாட்டிய நாடகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் மிக அழகான சொல்லாடலுடன் விளக்கிக் கூறினார். ஸ்ரீ மதி கீதாசங்கரனின் அபரிதமான நாட்டியத்தினை விவரித்துச் சொல்வதற்கு எமக்கு வார்த்தை கிட்டவில்லை. அவரது சலங்கை ஒலி, கண்ணின் அசைவு, உடலின் நெலிவு, நடனத்தின் இலாவம் அனைத்தும் பார்ப்போரை மயக்கம்கொள்ளச் செய்வதாய் இருந்தன. இப்படியும் நடனமாட முடியுமா என்று வியக்கவும் வைத்தன.


தொடர்ந்து, இராதா, மீரா, திரெளபதை, யசோதா, சத்தியபாமா, கோபால கோபியர்கள் என அனைவருமே தங்கள் கதாப்பாத்திரங்களைச் சிறப்புரச் செய்திருந்தனர். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் வந்திறங்கினான் கிருஷ்ணன்! மங்கையர் மனம் கவரும் கள்வன், மாயக்கண்ணன் சாமசுந்தரா!!! அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்திறங்கியது போன்ற உணர்வு. கதைப் பேசும் கண்கள், நீண்ட நாசி, புன்னகைப் புரியும் வதனம், உருண்டு திரண்ட தோள்கள், மயக்கம் கொள்ள வைக்கும் உடலழகு,சுருள் சுருளான கேசம், மயிலிறகினால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம், மேனியெங்கும் கண்ணைக் கவரும் ஆபரணங்கள்; ஜொலிக்கும் பட்டாடை, தங்க நிறத்தில் புல்லாங்குழல்! வந்திறங்கினான் கண்ணன், காமக்கலைஞன் கிருஷ்ணன்!

தெய்வீக அம்சத்துடன் தோன்றிய கிருஷ்ணரைக் கண்டவுடன் பார்வையாளர்கள் அனைவருமே பரவசமடைந்தனர் என்று சொல்லலாம். இவ்வாறு மேடை நாட்டிய நாடகத்தினை காண வந்த அனைவரையும் கவர்ந்திழுத்த கிருஷ்ணனின் நிஜப் பெயர், கண்ணன் இராஜமாணிக்கம். இவர்தான் 'சாமசுந்தரா'வின் கதாநாயகன். முகம், உடல் முழுக்க நீல நிறக்க கலவையை மிக அழகாகப் பூசி, நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தார். பாவம், அந்த அலங்காரத்தைக் கலைக்கவே அவருக்கு எவ்வளவு அவகாசம் தேவைப்படுமோ தெரியவில்லை.


நிகழ்வின் இறுதியில், அனைத்து நாட்டிய மணிகளும் மேடையிலும் பார்வையாளர் மத்தியிலும் ஒன்றாகத் தோன்றி ஆடி அரங்கையே பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தனர். மலேசியாவில் இப்படி ஒரு தரமான மேடை நாட்டிய நாடகம் உருவாகியிருப்பது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை. இதனை அரும்பாடுபட்டு உருவாக்கிய தயாரிப்பாளரும் பிரபல நடன இயக்குனருமான ரவி சங்கர் அவர்களுக்கு பாராட்டுகள். கடந்த இரண்டு நாட்களாக கோலாலம்பூர், மாலாயா பல்கலைக்கழக அரங்கில் நடைப்பெற்ற இந்நாடகத்தினைக் கண்ட எவரும் இதனைப் பற்றி குறை கூற மாட்டார்கள். அப்படியொரு சிறந்த படைப்பினை அஸ்தானா ஆர்ட்ஸ் படைத்துள்ளது.

இதுபோன்ற மேடை நாட்டிய நாடகங்கள் நமது நாட்டில் இன்னும் அதிக அளவில் நடக்க வேண்டும். நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. கதாப்பாத்திரங்களாக கண் முன் நடித்துக்காட்டிய அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி.


வெள்ளி, 2 டிசம்பர், 2011

பினாங்கு, மலேசியாவில் மாவீரர் தினம்




கடந்த 27 நவம்பர் 2011 அன்று உலகில் பல இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. வழமை போல பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி ஐயா தலைமையில் பட்டர்வெர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கேணல் சங்கரின் மரணத்தைத் தழுவிய நாளையே மாவீரர் தினமாக தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அறிவித்திருந்தார். இருப்பினும், 27-ஆம் திகதி நிகழ்வினை நடத்த இடம் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி 28-ஆம் திகதி, திங்கட்கிழமை இந்நிகழ்வு நடத்தப்பட்டது. காலை 11.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு சரியாக 2.00 மணிக்கு நிறைவுற்றது.

மக்கள் ஓசையின் நிருபரும், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவருமான தோழர் சே.குணாளன் நிகழ்வினை வழிநடத்திச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ஈழப் பண் இசைக்கப்பட்டு முறையே நிகழ்ச்சித் தொடங்கியது. சுமார் 200 பேர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் பினாங்குத் துணை முதல்வர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகன், வழக்குரைஞர் மங்களேசுவரி, சமூக நல இயக்கத் தலைவர் ஏ.சவுந்தர்ராஜன், டத்தோ ஆர். அருணாசலம், கவியழகர் க. பெருமாள் மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் ஈழத்து ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர். பேராசிரியர் அவர்கள் மாவீரர்களை நினைவுக் கூரும் வண்ணம் அகல் விளக்கினை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரமுகர்கள் குத்துவிளக்கினை ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர், நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் மலர் தூவி போரில் உயிர் நீத்த மாவீரர்களை வணங்கினர்.

கவிச்சித்தர் பெ.கோ.மலையரசன் வாசித்த விடுதலைப் போராட்டம் குறித்தான கவிதை அனைவரது மனதினையும் கவர்ந்தது. இவர் ‘பாய் புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. மாவீரர் தின அறிக்கையை பேராசிரியரின் அரசியல் – ஊடக பிரிவு செயலாளர் திரு. சத்தீஸ் முனியாண்டி வாசித்தார். பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகனின் திறப்புரையைத் தொடர்ந்து, மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் தமக்கும் தலைவர் மேதகு பிரபாகரனுக்கும் இருந்த உறவை வந்திருந்தோரிடம் பகிர்ந்துக் கொண்டார். போரின் இறுதிக் கட்டத்தின் போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை தம்மால் எப்போதுமே மறக்க முடியாது என்று ஆக்ரோஷமாக முழங்கினார். தாம் பிரபாகரனைத் தம்பி என்று அழைத்த போதிலும், அவரையே தமது முதன்மை தலைவராக வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“பிரபாகரன், ஆயிரங்காலத்துப் பயிர். கடவுளுக்கு நிகரானவர். இப்படியொரு மனிதர் இந்த உலகிற்கு இனி எப்போது கிடைப்பார் என்பது யாருக்குமே தெரியாது. எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் பிரபாகரனுக்கு ஈடாகமாட்டார்கள்,” என அவர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் நடந்த தனிப்பட்ட சந்திப்பில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவர் அவையில் அனைவரிடமும் பகிர்ந்துக்கொண்டார். “கலைஞர் தங்களுக்கு எந்த உதவியுமே செய்யவில்லை என அவரே தன் வாயால் என்னிடம் கூறினார். நம் நாட்டு ‘தலைவர்’ சாமிவேலுவைப் பற்றிக் கேட்டேன். அவர் கொடுத்ததை திருப்பிக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என பிரபாகரன் சொன்னார்,” எனவும் அவர் தெரிவித்தார்.

போரில் இறுதிக்கட்டத்தின் போது, கே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் தம்மைத் தொடர்புக் கொண்டு தலைவர் வீரமரணம் எய்துவிட்டார் என்று சொன்னதாகவும், அச்செய்தி உண்மையாக இருந்தால் விடுதலைப் புலிகளே அதனை அறிவிக்கட்டும் என தாம் அந்த இனத் துரோகியிடம் கூறியதாக பேராசிரியர் குறிப்பிட்டார். “தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சையில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராட வேண்டும். போராட்டங்கள் பலவகைப் படும். ஆயுதப் போராட்டத்தைப் பிரபாகரன் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்களவனின் வெறியாட்டத்தை ஒடுக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அன்றைய சூழலில் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது போராட்டத்தின் சூழல் மாறியுள்ளது. அதற்கேற்றாற் போல நாமும் நம்மை மாற்றிக்கொண்டு போராட வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் கூட்டணி ‘புத்ரா ஜெயாவை’ (மத்திய அரசை) கைப்பற்றுமானால், ஈழத்திற்குத் தகுந்த அங்கீகாரத்தினை தாங்கள் வழங்குவோம் எனவும் பேராசிரியர் வாக்குறுதியளித்தார். “சீமான் தலைமையில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டில் கலந்துக்கொண்டு நான் ஈழத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினேன். நான் மேடையில் பேசுவதற்கு முன்பு, பயண விசாவில் வந்திருப்பதால் மேடையில் எதுவும் பேசக்கூடாது என காவல் துறையினர் என்னை எச்சரித்தனர். இந்தியா, ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். அத்தனைப் பெரிய ஜனநாயக நாட்டில் இந்த இராமசாமி பேசுவதால் என்ன வந்துவிடப் போகிறது? கைது செய்தால் செய்துக் கொள்ளுங்கள், நான் பேசுவேன் என்று சொல்லிவிட்டேன். சுமார் 2000 காவல் துறையினர் அங்கே குவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. அன்று நான் ஈழதிற்குக் குரல் கொடுத்ததால் தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இன்று வரையில் அந்த தடை இன்னும் அகற்றப்படவில்லை,” என தெரிவித்தார்.

மேலும், தாம் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழீழத்திற்கு ஆதரவாக என்றுமே குரல் கொடுப்பேன் எனவும் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். அவரது உரையில் மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் மகுடிக்குக் கண்டுண்ட பாம்பு போல் மயங்கிக் கிடந்தனர். பேராசிரியரின் சிறப்புரைக்குப் பிறகு, மலேசிய வலைப்பதிவு எழுத்தாளர் து. பவனேஸ்வரி, புலிகளின் ஊடகப் பிரிவினைச் சார்ந்த இசைப்பிரியாவைப் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்தார். உருக்கமான அக்கவிதை வந்திருந்தோர் ஒரு சிலரது கண்களில் நீரை வரவழைத்தது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சே.குணாளன் தொகுப்புரை வழங்கினார். மாவீரர் தின கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிப்பிற்குரிய திரு. வைகோ வெளியிட்ட ஈழம் தொடர்பான குறுந்தட்டு இலவசமாக வழங்கப்பட்டது. மாலை மணி 2.00-க்கு மாவீரர் தின கூட்டம் இனிதே நிறைவுற்றது. மலேசியாவில் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்துடன் சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது என இவ்விடம் அறியத் தருகிறோம். அதுமட்டுமின்றி தமிழீழத் தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளையின் பிறந்த தினமும் நாட்டில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. நம்புங்கள், தமிழீழம் வெகு தொலையில் இல்லை!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

என்ன வித்தியாசம்?



இந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் யார்? பிரிட்டிஷ் காலகட்டத்தின் போது இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களே இந்தியர்கள். இந்தியர் என்று சொல்லும் போது அவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அடக்கம். அதே போல், அன்றைய காலக்கட்டத்தில் சிலோன் (தற்போதைய ஸ்ரீ லங்கா) நாட்டிலிருந்து வந்தவர்களை சிலோனிஸ்ட் என்று அழைத்தனர்.

இவ்வாறாக இந்தியா, ஸ்ரீ லங்கா நாடுகளிலிருந்து வந்தவர்களை வெள்ளையர்களும், மலாய்க்காரர்களும் வித்தியாசம் தெரியாமல் பொதுவாக, இந்தியன் என்றே அழைத்து வந்தார்கள். சிலோனிலிருந்து வந்தவர்களில் சிலர் மட்டும் (இன்றுவரையில்) தங்களைச் சிலோனிஸ்ட் என்று அடையாளப்படுத்தி வருகின்றனர். வெள்ளையனும் மலாய்க்காரனும் தெரியாமல் செய்த பிழையை நாம் ஏன் தெரிந்தே செய்ய வேண்டும்?

நம் முன்னோர் இந்தியாவிலிருந்து வந்ததினால், அவர்களை பொதுவாக இந்தியன் என்று அழைத்ததன் கூற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். அதே வேளை, மலேசியாவில் பிறந்து, வளர்ந்து, மலாய் மொழியை தேசிய மொழியாகவும், தேன் தமிழ்மொழியைத் தாய் மொழியாகவும் கொண்ட எம்மை இந்தியன் என்று அடையாளப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

எம் தாயின் கருவில் தோன்றிய போது எம் தாயும் தந்தையும் பேசிய மொழி தமிழ்மொழி. எனவே, கருவாக இருக்கும்போதே நான் தமிழனாக உருப்பெற்றேன். எமது தாய் எம்மை மலேசிய மலைநாட்டில் பிறசவித்தாள். எனவே, நான் மலேசியனாகிறேன். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நான் மலேசியாவில் பிறந்ததால் மலேசியத் தமிழச்சியானேன். ஈழத்தில் பிறந்திருந்தால் ஈழத்தமிழச்சியாயிருப்பேன். இலண்டனில் பிறந்திருந்தால் இலண்டன் தமிழச்சியாகியிருப்பேன். இதுவே, இந்தியாவில் பிறந்திருந்தால் எம்மை இந்தியன்/ இந்திய தமிழச்சி என்று அழைப்பதில் நியாயமுள்ளது. தமிழனாக உருப்பெற்று மலேசியனாகப் பிறந்த எம்மை இந்தியன் என அடையாளப்படுத்துவது முறையா?

அவ்வாறு அடையாளப்படுத்துவதால்தான் இன்றும் சில பேர் நம்மை இந்தியாவிற்குத் திரும்பிப் போ என்று சொல்கிறார்கள். நாம் மலேசியத் தமிழ்/ மலேசியத் தெலுங்கு/ மலேசிய மலையாளம் என்று சொல்லி வந்திருந்தால், மற்றவர்களுக்கும் நமது தாய்மொழி என்னவென்று தெரிந்திருக்கும், நமக்கு இந்த நாட்டில் உரிமை கூடியிருக்கும். இப்போதாவது உண்மை உணர்ந்து நம்மை நாம் மலேசியத் தமிழன் என்று அடையாளப்படுத்துவோமா?

இந்திய நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வருபவர்களை இந்தியன் என்று அழைக்கிறோம். நம்மையும் இந்தியன் என்று அடையாளப்படுத்துகிறோம். அப்படி என்றால், நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் இந்தியாவிற்குச் செல்லும் போது, ஒருவரும் நம்மை இந்தியன் என்று அழைப்பதில்லையே? மலேசியத் தமிழா என்று தானே கேட்கின்றனர். அப்பொழுதும் நம்மில் பலரால் ஏன் இந்த உண்மையை உணரமுடிவதில்லை?



                                           -மலேசியத் தமிழச்சி

சனி, 21 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 5



தொடர்ச்சி...

ஒட்டுமொத்த ஒப்பீடு

‘ஆத்துக்குப் போகணும்’ மற்றும் ‘ஆறுமுகம்’ நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைச் சூழலையே அனுபவித்து வருகின்றனர். சிறிய மாற்றம் என்னவென்றால் ‘ஆத்துக்குப் போகணும்’ நாவல் மேல் சாதிப் பெண்களைப் பற்றியும், ‘ஆறுமுகம்’ நாவல் தலித் பெண்களைச் சுற்றிலும் பின்னப்பட்டுள்ளன. இவ்விடம் காயத்ரி எவ்வாறு தன் மேலதிகாரியின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு ‘அட்ஜஸ்’ பண்ண நேரிடுகிறதோ அதே போல் வசந்தாவும் தனபாக்கியமும் தங்கள் மேலதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரே மாதிரியான தொல்லைகளையே எதிர்நோக்க நேரிகிறது. பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர் என்பதை இவ்விரு நாவல்களும் ஒப்புக்கொள்கின்றன.



அதனைத் தவிர்த்து, பெண்கள் ஆண்களுக்குப் பயந்து கட்டுப்பட்டு நடக்கும் வாழ்க்கையையே இவ்விரு நாவல்களும் காட்டுகின்றன. காயத்ரி தன் விருப்பு வெறுப்புகளையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு கணவனுக்காக வாழ்கிறான். ரமாவும் கணவனின் ஆசைகளை நிறைவேற்றும் நிர்ப்பந்தத்தில் நிற்கிறாள். ஆறுமுகம் நாவலில் வரும் செக்குமேட்டுப் பெண்கள் ஆண்களின் காமப்பசியைப் போக்கி தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்கின்றனர். இவ்வாறாக இரு நாவல்களிலும் பெண்கள் அடக்குமுறையில் சிக்கித் தவிப்பதை நம்மால் தெளிவாகக் காண முடிகின்றது. பெண்கள் சாதி அடிப்படையிலும் தீங்கிழைக்கப்படுகின்றனர். தலித்தாக பிறந்ததனால் தங்கள் தாயார் செய்த அதே தொழிலையே செய்யும் நிலைக்கு அபிதா தள்ளப்படுகிறாள். இவர்களுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெண்கள் கூட இவர்களின் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் இவர்களை உதாசீணப்படுத்துவது வேதனைக்குரிய உண்மை.



முடிவுரை

பொருளாதாரமே ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்பது இவ்விரு நாவல்களிலிருந்தும் அறியப்பட்ட மறுக்க முடியாத உண்மை. சமுதாயம் பெண் என்பவளின் மீது குடும்பத்தலைவி என்ற சுமையை ஏற்றி வைக்கின்றது. ஒரு குடும்பத் தலைவிக்கு இதுதான் அழகு, இதைத்தான் அவள் செய்ய வேண்டும் என்று இலக்கணமும் வகுத்துக் கொடுக்கிறது. தந்தை, அண்ணன், தம்பி, கணவன், மகன் என்ற அதிகார அமைப்பினாலும், ஆணின் சுயநலம் காரணமாகவும் பெண் அடக்கி வைக்கப்படுகிறாள். இறுதியாக, பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண் அடக்கி வைக்கப்படுகிறாள். இவ்வாறாக பெண் பல அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றாள் என்பதனையே ‘ஆத்துக்குப் போகணும்’, ‘ஆறுமுகம்’ ஆகிய இரு நாவல்களும் உணர்த்துகின்றன.


*** முற்றும் ***

ஞாயிறு, 8 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 4




...தொடர்ச்சி

பெண்ணே பெண்ணுக்கு எதிரியாதல்

“ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவாலில் ரமாவின் மாமியார் ரமா படித்தப் பெண்ணாக இருந்த போதிலும் அவளைச் சராசரி மருமகளாகவே பார்க்கின்றார். நமது இந்தியச் சமுதாயத்தில் பெண் என்பவள் காலை எழுந்தவுடன் கோலம் போட வேண்டும், பெருநாள் காலங்களில் பலகாரங்கள் செய்துக் கொடுக்க வேண்டும், மாமனார் மாமியாருக்குச் சமையல் செய்து போட வேண்டும் என்று பல எழுதப்படாத சட்டங்களைப் பெண்கள் மீது திணிக்கின்றனர். இதனையே துரைசாமியும் அவனது பெற்றோர்களும் ரமாவிடம் எதிர்ப்பார்க்கின்றனர். இன்றையக் காலகட்டத்தில் பெண்களும் ஆணுக்குச் சமமாக வேலை செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் பெண்களுக்கு இவ்வகையான எதிர்ப்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய இயலாமல் போய்விடுகிறது. இதனைச் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்துக் குறைக்கூறக் கூடாது. ரமாவின் மாமியார் ரமா எது செய்தாலும் அதில் குற்றம் காண்கிறார். அவள் எடுத்துக் கொடுத்தத் துணிகளையும் கொடுத்தனுப்பிய பொருள்களையும் காயத்ரியின் முன்பாகவே தூக்கியெறிகிறார். ரமாவை மிகவும் இழிவாகவும் பேசிகின்றார். ஒரு பெண்ணே மற்றொருப் பெண்ணைப் புரிந்துக்கொள்ளாமல் இழிவு படுத்தும் நிலை இவ்விடம் காட்டப்படுகிறது. காயத்ரி கூட தன் மருமகளைப் புரிந்துக்கொள்ள முயலவில்லை. அதற்கு மாறாக அவளிடம் காணப்படும் குறைகளையே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இதன் மூலம் மரபு வழி வந்த சமூகம் இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது.



‘ஆறுமுகம்’ நாவலில் வரும் பாக்கியம் கூட செக்குமேட்டில் உள்ள பெண்களை இழிவாகவே பார்க்கிறாள். தான் மேல் சாதிப்பெண் என்ற திமிர் அவளிடம் உள்ளதை பல இடங்களில் நம்மால் உணர முடிகின்றது. “சீன்னு நாறிப்போயி சீலப்பேணு குத்தறவ ளெல்லாம் வந்து எங்கிட்டப் பேசுறதா?” என்ற வரிகள் பாக்கியம் செக்குமேட்டுப் பெண்கள் மீது வைத்துள்ள பார்வைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி செக்குமேட்டில் உள்ள பெண்களே தங்களை ஒருவர்க்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வதும் இழிவுப்படுத்துவதும் அப்பெண்கள் ஒருவரை ஒருவர் மதிப்பதில்லை என்பதனைக் காட்டுகிறது. ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணைப் புரிந்துக்கொண்டு அவளுக்கு அங்கீகாரம் கொடுக்க முன் வராத போது ஆண் வர்க்கத்திடம் அதனை எதிர்ப்பாப்பது வேடிக்கையல்லவா?

                                                                                                                                          தொடரும்...


செவ்வாய், 3 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 3



...தொடர்ச்சி

அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்ணை அடிமையாக்குதல்

‘ஆத்துக்குப் போகணும்’ நாவலில் வரும் காயத்ரி என்ற பாத்திரம் தனது மேலதிகாரியிடம் அடங்கி ஒத்துப் போகவேண்டிய சூழலைக் காண்பிக்கின்றது. பெண்கள் எங்குச் சென்றாலும் அவர்களுக்கு ஆண்களால் தொல்களே மிஞ்சுகின்றன. வேலைக்குச் செல்லும் இடத்தில் மேலதிகாரிகளிடம் அவர்கள் விரும்பும் வண்ணம் நடந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தொழிலில் முன்னேற முடியாது; பதவியுயர்வு கிடைக்காது; வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். காயத்ரியின் மேலதிகாரி சனிக்கிழமை அவளை வெளியே அழைக்கிறார். காயத்ரியின் மனம் இடம் தராவிட்டாலும் அதிகார ஆண் வர்கத்தைப் பகைக்க முடியாத காரணத்தால் சாக்குப் போக்குச் சொல்லி நழுவப் பார்க்கிறாள். தனக்கு இது பிடிக்கவில்லை என்று நேரடியாகச் சொல்ல முடியாத சூழலில் அவள் சிக்கிக்கொண்டிருக்கிறாள்.



‘ஆறுமுகம்’ நாவலில் வரும் ஜெரி ஆல்பட் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனபாக்கியத்தை அடைகிறான். வசந்தாவும் அட்டை கம்பெனி மெனேஜரிடம் எல்லா வகையிலும் குறிப்பாக உடல் பசியைத் தீர்ப்பது போன்ற காரியங்களுக்கும் ஒத்துப் போவதனால் மட்டுமே நூறு ரூபாய் சம்பள உயர்வு பெறுகிறாள். சமையல் தொழில் செய்யும் குப்புசாமி கூட தன்னிடம் வேலைப் பார்க்கும் பெண்களைக் கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறான். பெண்களைச் சிறிதும் மதிக்காமல் நாயைப் போல் நடத்துகிறான். அவனது ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டுக் கிடைக்கின்ற கூலிக்காக வாய் மூடி வேலை செய்கின்ற அவல நிலையையும் நாவலில் காண்கிறோம்.



அதுமட்டுமின்றி நர்ஸ் புஷ்பமேரியும் ஒரு டாக்டரால் ஏமாற்றப்படுகிறாள். தனக்கு மேலே வேலை செய்யும் டாக்டர் என்ற பயமும் அவளை டாக்டரின் காமப்பசிக்கு இணங்கிப் போகச் செய்திருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. மருத்துவமனைக்கு அரும் செக்குமேட்டுப் பெண்களை கிழட்டு டாக்டர்கள் கில்லுவதும், உரசுவதும், கண்ணடிப்பதும் அவர்களின் கேவலமான அதிகாரத்துவ புத்தியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையினர் கூட செக்குமேட்டுப் பெண்கள் விபச்சாரிகள் என்பதால் மிருகத்திலும் கீழாக நடத்துகின்றனர். பெண் என்றும் பாராமல் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடித்துத் துன்புறுத்துவதை நாவலின் வழி காண முடிகின்றது. இதன் மூல அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்துகிறது என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது.


...தொடரும்

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 2




தொடர்ச்சி...

ஆணாதிக்கம்

ஒரு பெண் பிறந்தவுடன் தந்தையின் அரவணைப்பிலும், வளரும்போது சகோதரனின் கண்காணிப்பிலும், திருமணமானவுடன் கணவனின் கட்டுப்பாட்டிலும், வயதானவுடன் ஆண் பிள்ளையின் ஆதரவிலும் வாழ்கிறாள். இவ்வாறாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முழுக்க முழுக்க ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. காவேரியின் ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவலிலும் இந்த ஆணாதிக்கப் போக்கை நம்மால் காண முடிகின்றது. இந்நாவலில் திருமணமானப் பெண்கள் தங்கள் திறமைகளைத் தொடர முடியாமல் முடக்கி வைக்கப்படுவது காட்டப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு காயத்ரி நாட்டியத்திலும் ரமா எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு ரமாவுக்கு எழுவது ஒரு பொழுதுபோக்காகவும், காயத்ரிக்கு நாட்டியம் ஒரு உடற்பயிற்சியாகவும் தேய்ந்துவிட்டது. இருவருக்கும் தங்களின் கலைகளைத் தொடர நேரமும் வசதியும் இல்லாமல் போய்விட்டது.



பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் திறமைகளையும் கலைகளையும் தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனை கணவர்களான ஆண்களும் கண்டுக்கொள்வதில்லை. மனைவியின் திறமை அல்லது ஆசைகளுக்குக் கணவன்மார்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களுக்கும் ஆண்களைப் போல் மனதில் ஆசைகளும் இயற்கையாகச் சில திறமைகளும் இருக்கும் என்பதை ஆண்கள் மறந்துவிடுகின்றனர். பெண்களை எப்போதும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். உதாரணமாக, ரமா தன்னுடைய கணவன் துரைசாமி தன் எழுத்துத் திறமையை அங்கீகரிக்காததோடு தன்னைச் சந்தேகப்படுவதைக் கண்டு கவலைப் படுகிறாள். கணவன் மட்டுமல்லாது இந்தச் சமுதாயமே தன்னைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதையும் அவளால் உணர முடிகிறது. பெண் எழுத்தாளர்களின் விஷயத்தில் மட்டும் இலக்கிய படைப்புகளை அவர்களின் சொந்த வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுவதை எண்ணி நோகிறாள். இவ்விடம் எழுத்தாளர்களின் மத்தியில் கூட ஆண் பெண் பேதம் பார்க்கப்படுவதைக் காண முடிகிறது.



பெற்றோர்களே தன் பிள்ளைகள் மத்தியில் ஆண் பெண் பேதம் பார்த்து வளர்ப்பதையும் இந்நாவலில் காண்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் கொடுத்து சாகடிக்கும் பழக்கம் இருந்து வந்ததை நாம் நன்றாய் அறிவோம். இந்நாவலில் வரும் ரமாவின் அண்ணன் முட்டாள் உதவாக்கரையாக இருந்தபோதிலும் ரமாவின் பெற்றோர்கள் அவனை ரமாவை விடச் செல்லமாக வளர்த்தனர். அனைத்து விசயத்திலும் ரமா கெட்டிக்காரியாக இருந்தபோதிலும் அவளை அவளது பெற்றோர்களே மதிக்கவில்லை. ரமாவுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத துரைசாமியை அவளுக்குக் கட்டிவைத்து அவளை அத்தோடு கைக்கழுவி விடுகின்றனர். சொந்த பெற்றோர்களே ரமாவின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவளை உதாசீனம் செய்கின்றனர்.



ஆறுமுகம் நாவலிலும் ஆணாதிக்கப் போக்குப் பரவலாகக் காட்டப்படுகிறது. ஜெரி ஆல்பட் தன்னிடம் வேலைப் பார்க்கும் தனபாக்கியத்திற்கு திருமணமாகி ஒரு மகனும் உண்டு என்பதை அறிந்திருந்தும் தனது காமப்பசிக்கு அவளை இரையாக்குகின்றான். தனது ஒரே மகனை நன்றாகப் படிக்க வைத்து இன்ஜினியராக்க வேண்டும் என்ற கனவு அவளை ஜெரி ஆல்பட்டின் ஆசைக்கு இணங்க வைத்தது. இதனால் தனபாக்கியம் தனது தந்தையை இழந்து மகனைப் பிரிய நேரிடுகிறது.



செக்குமேட்டில் வாழ்ந்து வரும் சின்னப் பொண்ணுவிற்கும் தருமமூர்த்திக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத போதிலும் பெண் என்ற ஒரே காரணத்தால் சின்னப் பொண்ணு அடிமைப்படுத்தப்படுகிறாள். தருமமூர்த்தி அவளைத் தகாத வார்த்தைகளால் திட்டுகிறான்; பணம் கேட்டு அடிக்கிறான். சின்னப் பொண்ணு, அபிதா போன்றோரிடம் தங்களது காமப்பசியைப் போக்கிக்கொள்ள வரும் ஆண்களும் அவர்களை ஒரு போகப்பொருளாக, உணர்ச்சியற்ற பிண்டமாகவே பார்க்கின்றனர். ஒரு சில ஆண்கள் அவர்களின் தேவைத் தீர்ந்த பின்பு இவர்களுக்குப் பணம் கொடுக்காமல் அடிக்கவும் செய்கின்றனர். இவ்விடம் ஆணாதிக்கப் போக்கு நன்கு வெளிப்படுகிறது.

...தொடரும்

புதன், 27 ஏப்ரல், 2011

இப்படியும் நடக்குமா?




தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் போராளிகளின் கலைக் கண்காட்சி அண்மையில் இலங்கையில் நடைப்பெற்றுள்ள செய்தியினையும் படங்களையும் இணையத்தளத்தில் பார்க்கும் துர்பாக்கியம் எமக்குக் கிட்டியது. தமிழினக் கொலைக்காரன் இராஜபக்சேவின் படம் பெரிதாக வரையப்பட்டு சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமது இனத்தை அழித்தவனின் உருவத்தை எந்தப் போராளி அணுஅணுவாய் இரசித்து வரைந்தான் என்று எமக்குத் தெரியவில்லை. புத்தர் தியானம் செய்வது போல் மற்றொரு படம். இந்து தெய்வங்களின் ஓவியங்கள் நான் பார்த்த இணையத்தள செய்தியில் இல்லை.



‘புனர்வாழ்வின் ஊடாக மீள்சிந்தனை’ எனும் தொனிப்பொருளில் இக்கண்காட்சி கொழும்பில் நடைப்பெற்றதாம். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டதனால் தமது எதிர்காலம் பாழாய் போனது போன்ற தொனியில் முன்னாள் போராளி ஒருவர் வரைந்திருந்தாராம். இயக்கத்தில் சேர்ந்த கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்து பெண் ஒருவள் காத்திருப்பது போல், சிறுவர்கள் கல்வி கற்கும் உரிமையை இழந்து வாடுவது போல், இளைஞர்கள் சுதந்திரத்தை இழந்துத் தவிப்பது போல் ஏராளமான ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றனவாம்.



இந்தச் செய்தியைப் படிக்கும் போதும் படங்களைப் பார்க்கும் போதும் ‘நாண்டுக்கிட்டுச் சாகலாம்’ என்று கிராம வழக்கில் சொல்வார்கள் அல்லவா? அப்படி இருந்தது எமக்கு! பல்லாயிரக்கணக்கான போராளிகள் எதற்காக அய்யா உயிர்த்தியாகம் செய்தார்கள்? விடுதலைப்புலிகள் உங்களை எல்லாம் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் சேர்த்தார்களா இல்லையா என்று எமக்குத் தெரியாது. போராட ஆட்கள் வேண்டும் என்று சொன்னால் அவர்கள் பின்னே அனைத்தையும் துறந்துச் செல்வதற்கு உலகெங்கிலும் எத்தனையோ தமிழர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இயக்கத்தில் சேர உங்களை வற்புறுத்த என்னக் காரணம்?



தமிழர்களின் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டதற்காக நீங்கள் பெருமைப் பட வேண்டும். அதைவிடுத்து வீண் பழி சுமத்தி இயக்கத்திற்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றத்தை அல்லவா இது ஏற்படுத்தித் தருகிறது? அடிமையாய் கோழையாய் தினம் தினம் செத்துப் பிழைப்பதை விட வீரனாய் வாழ்ந்து மடிவது மேல்!



தவிர இரு முன்னாள் போராளிகள் மருத்துவப் பீடத்திற்குத் தெரிவுச் செய்யப்பட்டுள்ளனராம். இது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்குப் பாரிய வெற்றியினைக் கொடுத்துள்ளதாம். மிகவும் அழகாய் இருக்கிறது! இலட்சக்கணக்கில் எமது இனத்தைக் கொன்றுவிட்டு இரண்டே இரண்டு மருத்துவர்களை உருவாக்கினால் அனைத்தும் சரியாகிவிடுமா?



என்ன நடக்கிறது அங்கே? என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் நமது மக்கள்? இவற்றையெல்லாம் வரைந்தது உண்மையிலேயே முன்னாள் போராளிகள் தானா அல்லது இது இலங்கை அரசாங்கத்தின் கண்கட்டி வேலையா? இது பொய்யா மெய்யா என்று தெரியவில்லை. ஆனால், நெஞ்சம் வலிக்கிறது. தமிழர்களை அழித்த கொடியவனின் உருவத்தை இன்னொரு தமிழன் வடிவாய் வரைந்து காட்சிப் பொருளாய் வைப்பானா? ஒரு போராளியால் இவ்வாறு செய்ய முடியுமா? மனம் வருமா? இப்படியும் நடக்குமா?

சனி, 23 ஏப்ரல், 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 1




முன்னுரை

‘பெண்ணியம்’ என்ற சொல் பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவளே; எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் அவள் அடக்கி வைக்கப்படக்கூடாது; தனிமைப்படுத்தி வைக்கப்படக்கூடாது என்று பொருள்படும். தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, அடிமை போல் நடத்தப்படும் பெண்களுக்குக் கல்வியறிவும் பொதுவறியும் ஊட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் நிலையை உயர்த்துவதே பெண்ணியத்தின் இலக்காகும். ஆண் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு, அவர்களின் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, அவர்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் சேவை செய்து, தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஆணையே நாடும் மரபு வழி வாழ்க்கை முறையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து, அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து, அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு போராடும் ஓர் இயக்கமாகப் பெண்ணியம் திகழ்கிறது. சுருங்கக்கூறின், பெண் என்பவளை சக உயிரியாக மதிப்பதே பெண்ணியம். ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவலும் ‘ஆறுமுகம்’ என்ற நாவலும் இப்பெண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டுப் படைக்கப்பட்டதே.



‘ஆத்துக்குப் போகணும்’ கதைச்சுருக்கம்

‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல் காவேரி என்ற பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இந்நாவல் முற்றிலும் பெண்ணியச் சிந்தனையை அடியுற்றி எழுதப்பட்டுள்ளது. சங்கர்-காயத்ரி மற்றும் துரைசாமி-ரமா ஆகிய இரு தம்பதிகளின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்டதே ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல். காயத்ரியின் ஒவ்வொரு செய்கையிலும் திருப்தி அடைந்த கணவனாக சங்கர் விளங்குகிறான். காயத்ரி தன் குடும்பத்தாருக்கு ஏற்புடைய ஒரு மகளாக, மனைவியாக, தாயாக நடந்துக்கொள்கிறாள். காயத்ரியும் சங்கரும் டெல்லியில் ஒரு வீடு வாங்குகின்றனர். இருந்த போதிலும், காயத்ரி தான் சிறு வயதில் பெங்களூரில் தாத்தாவின் விசாலமான வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறாள். ஏக்கங்கள் அவளது அடி மனதில் ஆழமான தாக்கங்களை உ ண்டாக்குகின்றது. காயத்ரி தன்னுடைய உடலையே ஒரு வீடாக எண்ணிக்கொள்கிறாள்.



துரைசாமி-ரமா ஆகியோரின் இல்லற வாழ்க்கை சுமூகமாக இல்லை. பிறந்தகத்திலும் புக்ககத்திலும் ரமா தன்னுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாத மனிதர்களின் மத்தியில் சிக்கித் தவிக்கிறாள். துரைசாமி மரபு வழி வந்த ஆண் ஆதிக்கம் நிறைந்த கணவனாக இருக்கிறான். ரமாவின் கஷ்டங்களைச் சிறிதும் புரிந்துக்கொள்ளாமல் அவளைச் சந்தேகப்பட்டு அவளது மனதை மென்மேலும் காயப்படுத்துகிறான். ரமாவின் மாமனார் மாமியாரும் அவளைப் புரிந்துக்கொள்ளாது சுடுசொற்களை வீசுகின்றனர். ஒரு மனைவியின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாத துரை அவளது எழுத்து பணிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் வேளையில் ரமா மனதளவில் துரையை ஒதுக்கி விடுகிறாள். அதே சமயம் தன்னுடன் பணி புரியும் தாமோதரன் என்ற நண்பனை மனதளவில் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள்.

‘ஆறுமுகம்’ கதைச்சுருக்கம்

இமையத்தின் ‘ஆறுமுகம்’ என்ற நாவல் முழுக்க முழுக்க தலித் மக்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையாகும். இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரமே ஆறுமுகம்தான். அவனது அழகான அம்மாவான தனபாக்கியம் கணவன் ராமன் இறந்தவுடன் தனது தந்தையுடன் பிறந்த வீட்டில் வாழ்கிறாள். தனது மகன் ஆறுமுகத்தை நன்றாகப் படிக்க வைத்து இன்ஜினியராக்கக் கங்கணம் கட்டுகிறாள். அதற்காகத் தனது தகப்பன் பேச்சையும் மீறி தன் கணவன் பணிபுரிந்த ஆரோவில் வேலைக்குச் சேர்கிறாள். அங்கே தனது மேலதிகாரியான ஜெரி ஆல்பட்டுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. இது அரசல் புரசலாக தனபாக்கியத்தின் தந்தையான முத்துக் கிழவரின் காதில் விழ கிழவர் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். ஒரு சமயம் ஜெரி ஆல்பட்டுடன் தனது தாயை நிர்வாணமாகப் படுக்கை அறையில் காணும் ஆறுமுகம் மனம் வெறுத்து வீட்டை விட்டே ஓடுகிறான்.



பின்னர் ரிக்ஷாக்காரன் தருமமூர்த்தியைக் காண்கிறான். அவன் மூலமாக செக்குமேட்டில் சின்னப்பொண்ணுவிடம் தஞ்சமடைகிறான். செக்குமேட்டு வாழ்வு ஆறுமுகத்திற்கு நிறைய வாழ்க்கை அனுபவங்களைக் கொடுக்கிறது. எதைப் பார்த்து, நொந்து ஓடி வந்தானோ அதுவே செக்குமேட்டின் வாழ்க்கை முறையாக இருப்பதைக் காண்கிறான். அங்கு சின்னப்பொண்ணு, அபிதா, பாக்கியம் , வசந்தா போன்ற பெண்களைச் சந்திக்கின்றான். தலித் பெண்கள் படும் அவதியையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் கண் கூடாகக் காண்கிறான். தனது தாய் தனபாக்கியத்தின் நிலையை உணர்ந்து அவளை மன்னிக்கிறான். இறுதியில் ஒருநாள் தனது தாயை ஒரு விபச்சாரியாகச் செக்குமேட்டில் பார்க்கிறான். மகனை என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற எதிர்ப்பார்ப்புடன் நடைப்பிணமாக வாழ்ந்துக் கொண்டிருந்த தனபாக்கியம் ஆறுமுகத்தைச் சந்தித்த மறுநாளே உயிர் துறக்கிறாள்.

-தொடரும்

புதன், 23 பிப்ரவரி, 2011

கிழக்கு வாசல் திரைப்படம் காட்டும் பெண்களின் வாழ்க்கை



முன்னுரை
இயக்குனர் ஆர். வி. உதயகுமார் கைவண்ணத்தில் தலித் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ள திரைப்படம் ‘கிழக்கு வாசல்’ ஆகும். இதில் முன்னனி கதாப்பாத்திரங்களாக கார்த்திக் (பொன்னுரங்கம்), மனோரமா (சின்னத்தாயி), ரேவதி (தாயம்மா), குஷ்பு (செல்வி), விஜயகுமார் ( கவுண்டர்) ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. பெண்ணடிமைத்தனம், தாசிக்குலம், சாதி பேதம் ஆகியவைப் பற்றி இப்படத்தில் பேசப்பட்டுள்ளன.

கதைச்சுருக்கம்
இப்படத்தில் பொன்னுரங்கம் கூத்துக்கட்டும் இளைஞனாக வருகிறான். கதையின் தொடக்கத்திலேயே தன்னுடன் கூத்துக்கட்டும் பெண்ணை பலவந்தப்படுத்த முயன்ற பண்ணையாரையும் அவரது ஆட்களையும் வெளுத்துக்கட்டுகிறான் பொன்னுரங்கம். அவனிடம் விளையாட்டுத் தனமாக குறும்புகள் செய்யும் குறும்புக்காரப் பெண்ணாக செல்வி வருகிறாள். இதனிடையே கவுண்டரின் தோப்பு வீட்டிற்குத் தாயம்மாவும் பெரியகருப்புத்தேவரும் வருகின்றனர். தாயம்மாவுடன் பொன்னுரங்கத்தின் நட்பு தொடர்கிறது. ஒரு முறை தன்னைப் பெண் கேட்டு வருமாறு விளையாட்டுத்தனமாக செல்வி கூற அதனை உண்மை என்று நம்பி தனது தாயைப் பெண் கேட்க அனுப்புகிறான் பொன்னுரங்கம். பெண் கேட்கப் போன இடத்தில் வள்ளியூரானால் அடிக்கப்பெற்று அவமானப்படுத்தப்பட்ட பொன்னுரங்கத்தின் தாய் சின்னத்தாயி வேதனைத் தாங்க மாட்டாது உள்ளுக்குள்ளேயே புழுங்கி உயிர் மாய்க்கிறாள். உண்மை அறிந்த பொன்னுரங்கம் வள்ளியூரானிடம் நியாயம் கேட்கிறான். வள்ளியூரானும் தன் தவற்றை உணர்ந்து செல்வியைக் கண்டிக்கிறார். பின்னர் செல்விக்கு தன் மாமன் மகனுடன் திருமண ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றன.

செல்வியும் பொன்னுரங்கமும் தனிமையில் பேசுவதைக் கேட்ட கவுண்டரின் மகன் அவள் மீது சந்தேகம் கொள்கிறான். சொத்திற்காக மட்டும் அவளை மணக்க சம்மதிக்கிறான். இதனை அறிந்த வள்ளியூரான் திருமணத்தை நிறுத்துகிறார். இதனிடையே தாயம்மாவின் உண்மை நிலையை அறிந்து பொன்னுரங்கம் அவள் மீது பரிதாபம் கொள்கிறான். அவளுக்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்பதையறிந்து தான் அவளுக்குத் துணையாக வர ஆவல் கொள்கிறான். தாயம்மாவின் சம்மதத்தையும் பெறுகிறான். செல்வியின் மாமன் மகன் விஷம் தடவிய அரிவாளால் பொன்னுரங்கத்தை வெட்டிவிடுகிறான். விதிவசத்தால் பொன்னுரங்கம் உயிர் பிழைக்கிறான். இதனிடையே குஷ்பு பொன்னுரங்கத்தைத் திருமணம் புரிய விரும்புகிறாள். கவுண்டர் தாயம்மாவை பலவந்தமாக அடைய முயற்சி செய்கிறார். பொன்னுரங்கத்தையும் அடித்து கொடுமைப்படுத்துகிறார். இச்சம்பவத்தின் போது அவ்விடம் வந்த வள்ளியூரான் ஊர் மக்களைத் திரட்டி கவுண்டருக்கும் அவனது மகனுக்கும் சரியான தண்டனை வழங்குகிறார். கவுண்டரும் தாயம்மாள் சுத்தமானவள் என்பதை ஊர் மத்தியில் ஒப்புக்கொள்கிறார். பொன்னுரங்கமும் தாயம்மாவும் ஒன்று சேர்கின்றனர். இதுதான் ‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

சின்னத்தாயி
தலித் குலத்தில் பிறந்த சின்னத்தாயி இப்படத்தில் மிகவும் இழிவுப் படுத்தப்படுகிறாள். முதலாவதாக பெண் என்ற அடிப்படையிலும், கீழ் சாதியானதாலும், விதவையாக இருப்பதாலும் அவள் பல அவமானங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் இவளே இன்னொரு பெண்ணின் மனதைப் பிள்ளை இல்லாத வெறுஞ்சிருக்கி என்றுக் கூறிப் புண்படுத்துகிறாள். இவளிடம் தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே இருக்கிறது. பொன்னுரங்கம் வள்ளியூரான் மகள் செல்வியைப் பெண் கேட்கச் சொன்ன அடுத்த நிமிடமே சின்னத்தாயி அதிர்ச்சியுறுகிறாள். தம் தகுதிக்கு வள்ளியூரான் வீட்டுப் பெண்ணைக் கேட்கலாமா என்று தயங்கி நிற்கிறாள். இருந்தாலும் மகனின் ஆசைக்காகப் பெண் கேட்கச் சம்மதிக்கிறாள். போன இடத்தில் வள்ளியூரானால் மோசமாகத் திட்டி அடிக்கப்படுகிறாள். பெண் என்றும் பாராமல் வள்ளியூரானின் வேலை ஆட்கள் அவளைத் தரமட்டமாக அடிக்கின்றனர். அடித்த அடியின் வலியையும், வார்த்தைகளின் இரணத்தையும் தாங்க மாட்டாதச் சின்னத்தாயி மறுநாளே தன் உயிரை விடுகிறாள். தலித் குலத்தில் தோன்றியவளானாலும் சின்னத்தாயிடம் சுயமரியாதையும் தன்மானமும் இருப்பதை இதன் மூலம் காண முடிகின்றது. நம் சமுதாயத்தில் கீழ் சாதிப் பெண்களைப் பார்க்கும் பார்வையில் வேறுபாடு இருப்பதையும் இக்கதையில் அறிய முடிகிறது. உதாரணமாக, பெண் கேட்க வந்த சின்னத்தாயை வள்ளியூரான் ‘முண்டச் சிருக்கி’ என்று திட்டுகிறார். ஒரு வயதான பெண் என்றும் பாராமல் சின்னத்தயை அடிப்பது கொடுமையான ஒன்றாகத் தெரிகிறது. இதிலிருந்து மேல் சாதியினர் எவ்வாறு கீழ்சாதியினரை அடக்குமுறைச் செய்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.


செல்வி
              மேல்குலத்தைச் சார்ந்த பணக்கார வள்ளியூரானின் பெண்ணாகச் செல்வி காட்டப்படுகிறாள். இதனால் இவள் மற்ற கீழ்சாதிப் பையன்களை கிண்டல் கேளி செய்து விளையாடுகிறாள். ஆண்களின் உணர்வுகளோடு விளையாடுபவளாக இவள் சித்தரிக்கப்பட்டுள்ளாள். பின்விளைவுகளை யோசிக்கத் தெரியாத ஒரு முட்டாள் பெண்ணாகச் செல்வி காட்டப்படுகிறாள். விளையாட்டுத் தனமாகப் பொன்னுரங்கத்தைப் பெண் கேட்க வரச் சொல்வதிலிருந்து இக்கூற்றுத் தெளிவாகிறது. இவளது விளையாட்டுத்தனம் எல்லை மீறிப் போவதைக் கண்ட வள்ளியூரான், கவுண்டர் மகனுக்கு அவளைக் கட்டிக்கொடுக்க முடிவு செய்கிறார். இவ்விடம் செல்வியின் சம்மதம் சிறிதேனும் கேட்கப்படவில்லை. அவளது ஆசைகளுக்கும் உணர்வுகளுக்கும் தந்தை என்ற முறையில் வள்ளியூரான் முறையான மதிப்பளிக்கவில்லை. திருமண விசயத்தைப் பொருத்த மட்டில் செல்வி ஒரு கைபொம்யாகவே காட்டப்படுகிறாள். அவளது திருமணம் நின்ற பிறகே வள்ளியூரான் செல்வியைப் பொன்னுரங்கத்திற்குக் கட்டிக்கொடுக்க முன்வருகிறார். இதனை முதலிலேயே ஏன் வள்ளியூரான் செய்யவில்லை? மேலும் தன் தாயை இழந்த பின்பும் பொன்னுரங்கம் எப்படி செல்வியை ஏற்றுக்கொள்வான் என்று வள்ளியூரான் நினைத்துப் பார்க்கவில்லை. கெட்டுப்போன ஒரு பொருள் மேல் சாதியிடம் இருந்தால் என்ன கீழ் சாதியிடம் இருந்தால் என்ற நினைப்பில் செல்வியைப் பொன்னுரங்கத்திற்குக் கட்டி வைக்கத் துணிந்ததாகவே தோன்றுகிறது.

தாயம்மா
தாயம்மா நாச்சியம்மை என்ற தாசிக்கு வளர்ப்பு மகளாகக் காட்டப்படுகிறாள். சிறு வயதிலேயே நாச்சியம்மையிடம் தஞ்சமடைந்த தாயம்மாவிற்கு ஏன் வயது வந்தப் பிறகே நாச்சியம்மையைப் பற்றிய உண்மைத் தெரியவருகிறது. உண்மை தெரியாதவாறு தாயம்மா எவ்வாறு வளர்க்கப்பட்டாள் என்பது இவ்விடம் மிகப் பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. பெண் என்பவள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதனை மிகத் தாமதமாகவே அறிந்துக்கொள்கிறாள் என்பதை இயக்குனர் கூற வருகிறாரா என்று தெரியவில்லை. இப்படத்தில் தாயம்மா அடிமைப்படுத்தப்பட்ட தலித் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். நாச்சியம்மையின் மருத்துவச் செலவிற்காக வாங்கியப் பணத்தைத் திருப்பித் தர இயலாததால் கவுண்டருக்கு அடிமையாக வேண்டிய சூழல் இவளுக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இவள் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறாள். நித்தம் ஒரு நாடகம் நடத்தி தனது கற்பைக் காப்பாற்றுகிறாள். இறுதியில் தான் இவ்வளவு நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த துணை பொன்னுரங்கம்தான் என அறிந்து அவனை ஏற்கிறாள். இக்கதையில் வரும் கவுண்டர் தாயம்மாவை வெறும் போகப்பொருளாகவே பார்க்கிறான். தன் மகள் வயதை ஒத்த தாயம்மாவுடன் உறவுக்கொள்ளத் துடிக்கிறான். இங்கே தாயம்மையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. பல இன்னல்களுக்கிடையேயும் தாயம்மா உறுதியுடனும் கற்புடனும் வாழ்கிறாள். இயக்குனர் அவர்கள் தாயம்மா என்பவளை ஓர் உன்னத கதாப்பாத்திரமாகப் படைத்துள்ளார் என்றால் மிகையில்லை.



நாச்சியம்மை
‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தில் நாச்சியம்மை ஒரு தாசிப் பெண்ணாக, கவுண்டரின் போகப்பொருளாகக் காட்டப்படுகிறாள். இவளது நிலை கட்டுப்படுத்தப்பட்ட ஓர் எல்லைக்கு உட்பட்டே இருக்கிறது. தாசிக்குலத்தைச் சார்ந்தவளானாலும் தாயம்மாவை உத்தமியாகவே வளர்க்கிறாள். ஆதரவற்ற தாயம்மாவிற்கும் பெரியகருப்பத்தேவருக்கும் அடைக்கலம் தருகிறாள். இருந்தபோதிலும் தான் ஒரு தாசி என்ற உண்மையைத் தாயம்மாவிற்குத் தெரியாமல் மறைத்து வளர்க்கிறாள். இது இவளிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது. தாயம்மா தன்னை விட்டு போவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிர் விடுகிறாள். இங்கே பெண்ணை நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கோழையாகக் காட்டியுள்ளது வேதனைக்குறியதாகும்.

கவுண்டரின் மனைவி
இத்திரைப்படத்தில் கவுண்டர் தன் மனைவிக்கு உரிய உரிமையும் மரியாதையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. தன் மனைவியை ஒரு அடிமைப் போலவே நடத்துகிறான். அவளுக்கு பேச்சுரிமைக் கொடுக்கப்படவில்லை. கவுண்டரின் மனைவியும் கணவனை எதிர்க்கத் துணிவற்றப் பெண்ணாகவே காட்டப்படுகிறாள். கவுண்டர் தோப்பு வீட்டுச் சாவியை ஏன் எடுத்து வரச் சொல்கிறார் என்று தெரிந்திருந்தும் அதனை மறு பேச்சுப் பேசாமல் எடுத்து வருகிறாள். தன் கணவனின் நடத்தைத் தெரிந்திருந்தும் மரபு வழி வந்தப் பெண்ணாக அவனுடனேயே தன் வாழ்நாளைக் கழிக்கிறாள். இவ்விடம் ஒரு பெண் திருமணமானப் பிறகு கணவனுக்கு அடிபணிந்து அடிமைப் போல் வாழும் நிலை எடுத்துக்காட்டப்படுகிறது.

முடிவுரை
‘கிழக்கு வாசல்’ திரைப்படம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் எப்படியெல்லாம் மேல் சாதி மக்களாலும், ஆண்களாலும் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இத்திரைப்படத்தில் காணமுடிகின்றது. இப்படத்தில் வரும் அனைத்துப் பெண் பாத்திரங்களும் ஒருவித கோழைத்தனத்துடன் படைக்கப்பெற்றிருக்கிறார்கள். செல்வி தன் தந்தைக்குப் பயந்து கவுண்டர் மகனைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்; சின்னத்தாயி மேல் சாதியான வள்ளியூரானைக் கண்டு பயப்படுகிறாள்; கவுண்டரின் மனைவி தன் கணவனுக்குப் பயப்படுகிறாள்; நாச்சியம்மை உண்மைக்குப் பயந்து தான் ஒரு தாசி என்பதை தாயம்மைக்குக் கூறாமலேயே வளர்க்கிறாள்; தாயம்மா கவுண்டருக்குப் பயந்து அவரது தோப்பு வீட்டில் குடியேறுகிறாள். இவ்வாறாகப் பெண்களின் பாத்திரப் படைப்பு என்பது ஒரு கோழைத்தனமான சூழலிலேயே படைக்கப்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்கச் செய்தியாகும்.



சனி, 26 செப்டம்பர், 2009

இலங்கையில் என் தமிழன் நிலை…


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வீரப்பாடல் படித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டன. தமிழன் என்று சொன்னாலே தலை போய்விடுமோ என்ற அச்சம்தான் இப்பொழுது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரவிக்கிடக்கின்றது. கடந்த மாதம் நமது இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை நிலையைக் கண்டறிய இலங்கைப் பயணம் மேற்கொண்டேன். அங்கே நம்மின மக்கள் சிங்களவர்கள் மத்தியில் அவர்களைப் போலவே வேடமிட்டு வாழ்ந்து வருவதைக் கண்டு உள்ளம் கொதித்தேன்.

தமிழன் என்று சொன்னாலே ‘விடுதலை புலி’ என்று சந்தேகப்பட்டு இராவணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிடுவதாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் கூறினர். மேலும் தமிழர்கள் சொத்துகளை இலங்கை அரசு அபகரித்துக்கொள்கிறது எனவும் குற்றம் சாட்டினர். தாய்மொழி பேசவும் அஞ்சி சிங்களம் பேசி, சிங்களவர்கள் போலவே பொய்யான வாழ்க்கை முறையைப் பெரும்பாலானத் தமிழர்கள் அங்கே வாழ்ந்து வருகின்றன.

வாகனங்கள் வைத்திருக்கும் தமிழர்களைக் குடும்பத்தோடு வாகனத்தோடு எரித்து விடும் சிங்களவர்களின் வெறியாட்டத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். இதனாலேயே வாகனம் வைத்திருக்கும் தமிழர்கள் அதனை விற்றுவிட்டு வேறு வாடகை வண்டியில் பயணம் செய்கின்றனர். தமிழ்ப்பெண்கள் பொட்டு வைக்கவும் அஞ்சுகின்றனர். கோயிலுக்குச் செல்லும் பெண்கள் கூட இட்ட குங்குமத்தை கோயில் வளாகத்தைவிட்டு வெளியேறும் முன்னரே அழித்துவிடுவதையும் கண்டேன்.

இனி என்ன சமாதானம் பேசினாலும் இலங்கையில் தமிழர்கள் வாழ்வது ஆபத்தானது என்றே தோன்றுகிறது. சிங்களவர்களின் இனவெறி எல்லையைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. அமைதியைப் போதிக்கும் புத்த மதத்தைப் பின்பற்றும் சிங்களவர்களால் எவ்வாறு மிருங்களைப் போல் செயல்பட முடிகின்றது என்பதுதான் தெரியவில்லை. தமிழர்கள் கடைத்தெருவிற்குப் போவதற்கும் அஞ்சுகின்றனர்.

விசாரணை என்ற பெயரில் பிடித்துச் செல்லப்படுவர்கள் மீண்டும் வீடு திரும்புவதில்லை. சிங்கள இளைஞர்கள் நம் தமிழ் இளைஞர்களை வேண்டுமென்றே உசுப்பேற்றி வம்பிழுக்கும் பழக்கமும் அங்கே தோன்றியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அவர்கள் ஆண்பிள்ளைகளே ஆயினும் வீடு திரும்ப தாமதம் ஆனால் கலவரம் அடையும் நிலை. சென்ற பிள்ளை உயிரோடு வருவானா இல்லை ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொள்வானா என்றே ஒவ்வொரு பெற்றோரும் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர்.

வெளியே செல்லும் பிள்ளைகளிடம், யாராவது வம்புக்கு இழுத்தாலும் அமைதியாக வாருங்கள்; சிங்களவன் உங்களை அடித்தால் அடியை வாங்கிக்கொள்ளுங்கள். திருப்பி அடித்துவிடாதீர்கள். இது அவர்கள் நாடு. தற்போது நாம் இருக்கும் நிலைமையில் அடங்கித்தான் செல்ல வேண்டும் என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லிச் சொல்லி அனுப்புகின்றனர்.

தங்கள் பிள்ளைகளை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பதே அங்குள்ள பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பம். தங்களுக்கு என்ன நேரிட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறும் போதே குரல் தழுதழுக்கின்றது. அதற்காக பல இலட்சம் வெள்ளிகளை செலவழிக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்திக்கொண்டு பல ஏஜென்சிகள் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றிவிடுவதும் உண்டு. இவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கின்றது.
என்ன செய்யப் போகிறார்கள் எப்படி வாழப்போகிறார்கள் என்றே தெரியவில்லை.

பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டிற்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பணப்பற்றாக்குறையால் தவிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே போவதாக பலர் சலித்துக்கொண்டனர். இந்நிலையில் இலங்கையில் வசிக்கும் நமது தமிழர்களின் நிலை விடை தெரியா புதிராகவே இருக்கின்றது.

பண வசதி உள்ளவர்கள் எப்படியாவது வெளிநாட்டிற்குச் சென்று பிழைத்துக்கொள்கின்றனர். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? எப்படி வாழப் போகிறார்கள்? அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்?
அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். எப்படியாவது உதவ வேண்டும்!
எப்படி? இலங்கையிலிருந்து திரும்பியதிலிருந்து மனம் பாரமாகவே இருக்கின்றது. தமிழ் இனத்தின் எதிர்காலம் சூன்யமாக என் கண் முன்னே தோன்றித் தோன்றி மறைகின்றது!

செவ்வாய், 19 மே, 2009

வதந்தியை வாந்தியெடுக்கும் ஓநாய்கள்!



இனவெறி பிடித்த சிங்கள இராணுவ ஓநாய்கள் தலைவர் இறந்துவிட்டார் என்று வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். எமது தலைவன் துணிவைக் கண்டு வாந்திபேதியில் நடுங்கியவர்கள் வேறு வழியின்றி வதந்தியைப் பரப்ப முனைந்துவிட்டனர்! தமிழ் மக்களே, வெறிநாய்கள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்.

பல்லாயிர மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த நம் தலைவன், கேவலம் நீரை நாக்கால் நக்கிக் குடிக்கும் நாய்களால் இறக்க மாட்டான். பொய்யான தகவலை வெளியிட்டு கோடான கோடி தமிழ் மக்களை சோகத்தில் திளைக்க வைத்துவிட்டது இலங்கை இராணுவம். இதனுடன் சேர்ந்து வெட்கம்கெட்ட கூலிப்படைகளும் மாரடிக்கின்றன.

எம்மின பெண்கள் கதறக்கதற கற்பழிக்கப்பட்டார்கள்; எம்மின ஆண்கள் ஓரின உறவுக்கு வற்புறுத்தப்பட்டார்கள்; சிறுநீரும் மலமும் உணவாகக் கொடுக்கப்பட்டன; உடல் அங்கங்கள் அறுக்கப்பட்டன; சிறுகுழந்தையும் குண்டு வீச்சுக்குப் பழியானது; இறந்த பெண் புலிகளின் உடலையும் விட்டு வைக்காமல் நிர்வாணப்படுத்தி புணர்ந்தன இலங்கை இராணுவ வெறிநாய்கள்! இத்தனையும் தாங்கிக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனதருமை தமிழ் விடுதலைப் புலிகள்!

வதந்தி மேல் வதந்தி பரப்பி எமது தமிழ் மக்களை இன்னும் கோபத்திற்கு உள்ளாக்குகின்றன ஓநாய்கள். புலிகள் நியாயம், போர் தர்மம், மனிதாபிமானத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றனர். அப்பாடி மக்கள் பலியாவதை புலிகள் விரும்பவில்லை. அதனாலேயே முடிந்த வரையில் அப்பாவி மக்களை பலியாக்குவதைத் தவிர்த்து இராணுவத்தோடு மட்டும் மோதி வருகின்றனர். எச்சில் எலிகளைப் போல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ‘வெற்றி’ என்று மார்தட்டிக் கொள்ளவில்லை!

புலிகள் நினைத்தால், இலங்கை பூமியை நொடிக்குள் மயான பூமியாக மாற்ற முடியும். அது அவர்களுடைய நோக்கம் அன்று! ‘தமிழ் ஈழம் உருவாக வேண்டும்! தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!’ அதுவே புலிகளின் எண்ணம்! கொலைவெறியும் இனவெறியும் பிடித்தவ சிங்கள இராணுவம் எதற்கு வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது என்றுதான் விளங்கவில்லை!

தமிழ் சகோதரர்களே, உறுதியை இழக்காதீர். நம்பிக்கையைக் குறைக்காதீர்! தலைவன் இன்னும் சாகவில்லை. அவன் இறந்தாலும் போராட்டம் முடியப் போவதில்லை. தமிழ் ஈழம் உருவாகும் வரை போராட்டம் தொடரும்! தமிழ் ஈழம் விரைவில் உருவாகும்!

தமிழோடு உயர்வோம்!

வியாழன், 19 பிப்ரவரி, 2009

அழிவை நோக்கி…



ஓர் இனத்தின் அடையாளமே அவர்கள் பேசும் மொழிதான். உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருப்பினும் பழமை வாய்ந்த மொழியாய், செம்மொழியாய் இருப்பது நமது தாய்மொழியாம் தமிழ்மொழியாகும். உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையில் எத்தனையோ மொழிகள் தோன்றி அழிந்துவிட்டன. உலகிலேயே முதன் முதலில் சங்கம் வைத்து மொழியை வளர்த்த இனம் நாம்.

தமிழ்மொழியில் உள்ள சிறப்பு வேறெந்த மொழியிலும் இல்லை என ஆணித்தரமாகக் கூறலாம். வையம் புகழும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழில் எழுதப்பட்டது. நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்தியம்பும் எத்தனையோ நூல்கள் நமது இலக்கியத்தில் உண்டு. பன்மொழிக் கற்ற மகாகவி பாரதியார் கூட “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்” என்றுதான் பாடியிருக்கிறார்.

அத்தகையச் சிறப்புமிக்க நம் தாய்மொழி, செழுமை வாய்ந்த தமிழ்மொழி இன்று அழிவை நோக்கிச் செல்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது நாமறிந்த உண்மை. நமது மலேசிய மலைநாட்டில் வசிக்கும் நம்மினக் குழந்தைகளுக்கு தமிழறிவு ஊட்டுவது தமிழ்ப்பள்ளிகளே. அத்தகைய தமிழ்ப்பள்ளிகள் இன்று அழிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றன.

நம்மின மக்களே ‘ஏன் வேறு பள்ளிக்கு அனுப்பக்கூடாதா?’, ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதால் என்ன பயன்?’, ‘தமிழ் சோறு போடுமா?’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இவர்களது இச்செயலானது மல்லாக்கப் படுத்து தன் மேலேயே உமிழ்வது போல்தான் இருக்கிறது. என்ன ஒரு மடத்தனமான கேள்வி!

உன் மொழியை நீ கற்காவிட்டால் பிற இனத்தவனா அக்கறையுடன் வந்துப் படிக்கப் போகிறான்? தங்கள் பிள்ளைகளைச் சீனப் பள்ளிக்கும் தேசியப் பள்ளிக்கும் அனுப்பும் மரத்தமிழர்களே, எத்தனை சீனர்களும் மலாய்க்காரர்களும் அவர்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? வீட்டிலிருக்கும் அம்மாவை (தமிழ்) விட பக்கத்து வீட்டிலிருக்கும் ஆண்ட்டி (பிறமொழி) உங்களுக்கு உயர்வோ? ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்று மூக்கால் அழும் முட்டாள்களே கேளுங்கள்!

நமக்கென்று இந்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. இருக்கும் மொழியையும் நமது பண்பாடு, கலாச்சாரத்தையாவது காப்பாற்றலாம் அல்லவா? தமிழ்ப்பள்ளிகளில் மொழியோடு சேர்ந்து சமயமும் நன்னெறியும் போதிக்கப்படுகிறது. அதனால் நம்மின பிள்ளைகள் சிறு வயதிலேயே சமயத்தை அறிந்துக்கொள்ள ஏதுவாகயிருக்கிறது. பழமொழியும், செய்யுளும், ஆத்திச்சூடியும், ராமாயண மகாபாரத கதைகளும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழ்ப்பள்ளியைத் தவிர்த்து வேற்று பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பார்களா?

‘நான் தமிழன்’; ‘நான் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியன்’; ‘நான் தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி (அரசியல்வாதி); நான் தமிழாசிரியன்; நான் தமிழ் எழுத்தாளன் என்று மார்தட்டிக்கொள்ளும் மரத்தமிழனே, உன் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க மட்டும் எப்படியடா நீ மறந்து போனாய்? ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாவிட்டால் என்ன? நான் தான் வீட்டிலேயே பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறேனே’ என்று சமாதானம் கூற முனையாதே!

வேற்றுமொழிப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக அமையலாம். ஆனால், அதைப் படித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஒரு போதும் விதிக்கப்படமாட்டாது. நீங்கள் வேற்றுப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதால் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் குறைகிறது. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு நம் நாட்டில் சிலர் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ்ப்படித்தவர்கள் எண்ணிக்கைக் குறைந்தால் அடுத்தபடியாக தமிழ் சார்ந்த துறைகளும் வீழ்ச்சியைச் சந்திக்கும். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இப்பொழுது உள்ளதை விட பன்மடங்கு தமிழ்க்கொலை நடக்கும்.

எனதருமைத் தோழர்களே இந்நாட்டில் தமக்கென சொந்த மொழியில்லாது பிறமொழிச் சொற்களை (தமிழ்மொழி உட்பட) இரவல் வாங்கி (கொள்ளையிட்டு) ஒரு மொழியினை உருவாக்கி அதுவே தமது தாய்மொழி என்றும் அதிகாரப்பூர்வ மொழியென்றும் அடையாளம் காட்டி மார்த்தட்டிக்கொள்கின்றனர் சிலர். இவர்களின் நடுவே தொன்மையான மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட நாமோ தமிழ்ப்படிப்பதற்கும் தயங்கி நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளலாமா?

இனம், மொழி உணர்வுக்காக உயிரையே துச்சமெனக் கருதிப் போராடும் புலிகள் மரபில் வந்தவர்களல்லவா நாம்? நமக்கு மட்டும் என்னவாயிற்று? வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக்கொள்ளாமல் எதற்காக அகம்பாவத்தோடுத் திரிய வேண்டும்?

தாயை இழந்தவன் அனாதை; மொழியை இழந்தவனும் அனாதை தானே? சொந்த மொழிக்கூடத் தெரியாமல் நம் பிள்ளைகள் அனாதையாக வாழ வேண்டுமா? உலகம் அவர்களைப் பார்த்து நகைக்க வேண்டுமா? நமது இலக்கியங்களைப் படிக்கத் தெரியாமல் அவர்கள் திகைக்க வேண்டுமா? பிறநாட்டில் வசிக்கும் நம்மின சகோதரர்கள் அவர்களைப் பழிக்க வேண்டுமா? இதனைத் தமிழர்களாகிய நாம் சகிக்க வேண்டுமா? சிந்தித்துப்பாருங்கள்; விடை காணுங்கள்…

வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வதும் வளர்வதும் தமிழாக இருக்கட்டும்!

திங்கள், 15 டிசம்பர், 2008

ஓ, இலங்கை இராணுவமே!



இலங்கை இராணுவத்தினரின் அராஜகம் அத்துமீறிக் கொண்டிருக்கிறது! புலிகளிடம் நேருக்கு நேர் போரிட வலுவில்லாத கோழைகள் அப்பாவி மக்களின் இரத்தத்தைக் குடித்து தாகம் தீர்க்கின்றனர்.


ஏன் இந்த கொலைவெறி? தனிநாடு கேட்டது அப்படியென்ன பெரியதொரு குற்றமாகிவிட்டது? குடிகளை காத்து அரவணைக்க வேண்டிய இலங்கை அரசு தமிழ் மக்களிடம் மட்டும் ஏன் பாராபட்சம் காட்டவேண்டும்? சரி, போர்தான் மூண்டுவிட்டதே. அறப்போர் புரியவேண்டியது தானே? எதற்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்க வேண்டும்? இதுதான் இலங்கை இராணுவத்தினரின் வீரச்செயலா?


குடிகளின் பசியைத் தீர்க்க வக்கில்லை! அவர்களின் நோயைத் தீர்க்க மருந்தும் கொடுப்பதில்லை! நடப்பது அரசாட்சியா அல்லது பேயாட்சியா? எத்தனை முறை எத்தனைப் பேர் கண்டனம் தெரிவித்தும் அவிந்துப் போன மூளைக்கு விளங்கவில்லை போலும்! அப்பாவி மக்களை ஏனடா கொன்று குவிக்கின்றீர்?


இலங்கை இராணுவமே! மனதில் தைரியம் என்ற ஒன்று உண்டென்றால் புலிகளிடம் நேரடியாக மோது! அதைவிடுத்து அப்பாவி மக்களைச் சித்திரவதைச் செய்யாதே! மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!


என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!


நீங்கள் சிதைத்து சுடுகாடாய் ஆக்கிவிட்டப் போன இடங்கள் தமிழ் சுவாசம் பெற்று நந்தவனமாய் குலுங்கும்! விடிவு வெகுதூரம் இல்லை; அதனை அடைவதற்கு வெகுநாட்களும் இல்லை! புலிகள் புத்தாடை உடுத்தி புல்லாங்குழல் வாசிக்கும் நாள் விரைவில் வரும். குழலின் இசைக்கேற்ப ஆடுவதற்கு, ஓநாய்களே, நீங்கள் தயாராக இருங்கள்!!!


குறிப்பு: இன்றைய மக்கள் ஓசை நாளிதழில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலால் ஐந்து மாதக் குழந்தைப் பலியான செய்தியைக் கண்டேன். ஜீரணிக்க முடியவில்லை. மனம் வலிக்கிறது... அதன் வெளிப்பாடே மேற்கண்ட கட்டுரை.