சனி, 23 ஏப்ரல், 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 1
முன்னுரை

‘பெண்ணியம்’ என்ற சொல் பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவளே; எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் அவள் அடக்கி வைக்கப்படக்கூடாது; தனிமைப்படுத்தி வைக்கப்படக்கூடாது என்று பொருள்படும். தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, அடிமை போல் நடத்தப்படும் பெண்களுக்குக் கல்வியறிவும் பொதுவறியும் ஊட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் நிலையை உயர்த்துவதே பெண்ணியத்தின் இலக்காகும். ஆண் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு, அவர்களின் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, அவர்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் சேவை செய்து, தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஆணையே நாடும் மரபு வழி வாழ்க்கை முறையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து, அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து, அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு போராடும் ஓர் இயக்கமாகப் பெண்ணியம் திகழ்கிறது. சுருங்கக்கூறின், பெண் என்பவளை சக உயிரியாக மதிப்பதே பெண்ணியம். ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவலும் ‘ஆறுமுகம்’ என்ற நாவலும் இப்பெண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டுப் படைக்கப்பட்டதே.‘ஆத்துக்குப் போகணும்’ கதைச்சுருக்கம்

‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல் காவேரி என்ற பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இந்நாவல் முற்றிலும் பெண்ணியச் சிந்தனையை அடியுற்றி எழுதப்பட்டுள்ளது. சங்கர்-காயத்ரி மற்றும் துரைசாமி-ரமா ஆகிய இரு தம்பதிகளின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்டதே ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல். காயத்ரியின் ஒவ்வொரு செய்கையிலும் திருப்தி அடைந்த கணவனாக சங்கர் விளங்குகிறான். காயத்ரி தன் குடும்பத்தாருக்கு ஏற்புடைய ஒரு மகளாக, மனைவியாக, தாயாக நடந்துக்கொள்கிறாள். காயத்ரியும் சங்கரும் டெல்லியில் ஒரு வீடு வாங்குகின்றனர். இருந்த போதிலும், காயத்ரி தான் சிறு வயதில் பெங்களூரில் தாத்தாவின் விசாலமான வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறாள். ஏக்கங்கள் அவளது அடி மனதில் ஆழமான தாக்கங்களை உ ண்டாக்குகின்றது. காயத்ரி தன்னுடைய உடலையே ஒரு வீடாக எண்ணிக்கொள்கிறாள்.துரைசாமி-ரமா ஆகியோரின் இல்லற வாழ்க்கை சுமூகமாக இல்லை. பிறந்தகத்திலும் புக்ககத்திலும் ரமா தன்னுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாத மனிதர்களின் மத்தியில் சிக்கித் தவிக்கிறாள். துரைசாமி மரபு வழி வந்த ஆண் ஆதிக்கம் நிறைந்த கணவனாக இருக்கிறான். ரமாவின் கஷ்டங்களைச் சிறிதும் புரிந்துக்கொள்ளாமல் அவளைச் சந்தேகப்பட்டு அவளது மனதை மென்மேலும் காயப்படுத்துகிறான். ரமாவின் மாமனார் மாமியாரும் அவளைப் புரிந்துக்கொள்ளாது சுடுசொற்களை வீசுகின்றனர். ஒரு மனைவியின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாத துரை அவளது எழுத்து பணிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் வேளையில் ரமா மனதளவில் துரையை ஒதுக்கி விடுகிறாள். அதே சமயம் தன்னுடன் பணி புரியும் தாமோதரன் என்ற நண்பனை மனதளவில் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள்.

‘ஆறுமுகம்’ கதைச்சுருக்கம்

இமையத்தின் ‘ஆறுமுகம்’ என்ற நாவல் முழுக்க முழுக்க தலித் மக்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையாகும். இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரமே ஆறுமுகம்தான். அவனது அழகான அம்மாவான தனபாக்கியம் கணவன் ராமன் இறந்தவுடன் தனது தந்தையுடன் பிறந்த வீட்டில் வாழ்கிறாள். தனது மகன் ஆறுமுகத்தை நன்றாகப் படிக்க வைத்து இன்ஜினியராக்கக் கங்கணம் கட்டுகிறாள். அதற்காகத் தனது தகப்பன் பேச்சையும் மீறி தன் கணவன் பணிபுரிந்த ஆரோவில் வேலைக்குச் சேர்கிறாள். அங்கே தனது மேலதிகாரியான ஜெரி ஆல்பட்டுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. இது அரசல் புரசலாக தனபாக்கியத்தின் தந்தையான முத்துக் கிழவரின் காதில் விழ கிழவர் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். ஒரு சமயம் ஜெரி ஆல்பட்டுடன் தனது தாயை நிர்வாணமாகப் படுக்கை அறையில் காணும் ஆறுமுகம் மனம் வெறுத்து வீட்டை விட்டே ஓடுகிறான்.பின்னர் ரிக்ஷாக்காரன் தருமமூர்த்தியைக் காண்கிறான். அவன் மூலமாக செக்குமேட்டில் சின்னப்பொண்ணுவிடம் தஞ்சமடைகிறான். செக்குமேட்டு வாழ்வு ஆறுமுகத்திற்கு நிறைய வாழ்க்கை அனுபவங்களைக் கொடுக்கிறது. எதைப் பார்த்து, நொந்து ஓடி வந்தானோ அதுவே செக்குமேட்டின் வாழ்க்கை முறையாக இருப்பதைக் காண்கிறான். அங்கு சின்னப்பொண்ணு, அபிதா, பாக்கியம் , வசந்தா போன்ற பெண்களைச் சந்திக்கின்றான். தலித் பெண்கள் படும் அவதியையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் கண் கூடாகக் காண்கிறான். தனது தாய் தனபாக்கியத்தின் நிலையை உணர்ந்து அவளை மன்னிக்கிறான். இறுதியில் ஒருநாள் தனது தாயை ஒரு விபச்சாரியாகச் செக்குமேட்டில் பார்க்கிறான். மகனை என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற எதிர்ப்பார்ப்புடன் நடைப்பிணமாக வாழ்ந்துக் கொண்டிருந்த தனபாக்கியம் ஆறுமுகத்தைச் சந்தித்த மறுநாளே உயிர் துறக்கிறாள்.

-தொடரும்

கருத்துகள் இல்லை: