புதன், 27 ஏப்ரல், 2011

இப்படியும் நடக்குமா?
தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் போராளிகளின் கலைக் கண்காட்சி அண்மையில் இலங்கையில் நடைப்பெற்றுள்ள செய்தியினையும் படங்களையும் இணையத்தளத்தில் பார்க்கும் துர்பாக்கியம் எமக்குக் கிட்டியது. தமிழினக் கொலைக்காரன் இராஜபக்சேவின் படம் பெரிதாக வரையப்பட்டு சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமது இனத்தை அழித்தவனின் உருவத்தை எந்தப் போராளி அணுஅணுவாய் இரசித்து வரைந்தான் என்று எமக்குத் தெரியவில்லை. புத்தர் தியானம் செய்வது போல் மற்றொரு படம். இந்து தெய்வங்களின் ஓவியங்கள் நான் பார்த்த இணையத்தள செய்தியில் இல்லை.‘புனர்வாழ்வின் ஊடாக மீள்சிந்தனை’ எனும் தொனிப்பொருளில் இக்கண்காட்சி கொழும்பில் நடைப்பெற்றதாம். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டதனால் தமது எதிர்காலம் பாழாய் போனது போன்ற தொனியில் முன்னாள் போராளி ஒருவர் வரைந்திருந்தாராம். இயக்கத்தில் சேர்ந்த கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்து பெண் ஒருவள் காத்திருப்பது போல், சிறுவர்கள் கல்வி கற்கும் உரிமையை இழந்து வாடுவது போல், இளைஞர்கள் சுதந்திரத்தை இழந்துத் தவிப்பது போல் ஏராளமான ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றனவாம்.இந்தச் செய்தியைப் படிக்கும் போதும் படங்களைப் பார்க்கும் போதும் ‘நாண்டுக்கிட்டுச் சாகலாம்’ என்று கிராம வழக்கில் சொல்வார்கள் அல்லவா? அப்படி இருந்தது எமக்கு! பல்லாயிரக்கணக்கான போராளிகள் எதற்காக அய்யா உயிர்த்தியாகம் செய்தார்கள்? விடுதலைப்புலிகள் உங்களை எல்லாம் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் சேர்த்தார்களா இல்லையா என்று எமக்குத் தெரியாது. போராட ஆட்கள் வேண்டும் என்று சொன்னால் அவர்கள் பின்னே அனைத்தையும் துறந்துச் செல்வதற்கு உலகெங்கிலும் எத்தனையோ தமிழர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இயக்கத்தில் சேர உங்களை வற்புறுத்த என்னக் காரணம்?தமிழர்களின் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டதற்காக நீங்கள் பெருமைப் பட வேண்டும். அதைவிடுத்து வீண் பழி சுமத்தி இயக்கத்திற்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றத்தை அல்லவா இது ஏற்படுத்தித் தருகிறது? அடிமையாய் கோழையாய் தினம் தினம் செத்துப் பிழைப்பதை விட வீரனாய் வாழ்ந்து மடிவது மேல்!தவிர இரு முன்னாள் போராளிகள் மருத்துவப் பீடத்திற்குத் தெரிவுச் செய்யப்பட்டுள்ளனராம். இது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்குப் பாரிய வெற்றியினைக் கொடுத்துள்ளதாம். மிகவும் அழகாய் இருக்கிறது! இலட்சக்கணக்கில் எமது இனத்தைக் கொன்றுவிட்டு இரண்டே இரண்டு மருத்துவர்களை உருவாக்கினால் அனைத்தும் சரியாகிவிடுமா?என்ன நடக்கிறது அங்கே? என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் நமது மக்கள்? இவற்றையெல்லாம் வரைந்தது உண்மையிலேயே முன்னாள் போராளிகள் தானா அல்லது இது இலங்கை அரசாங்கத்தின் கண்கட்டி வேலையா? இது பொய்யா மெய்யா என்று தெரியவில்லை. ஆனால், நெஞ்சம் வலிக்கிறது. தமிழர்களை அழித்த கொடியவனின் உருவத்தை இன்னொரு தமிழன் வடிவாய் வரைந்து காட்சிப் பொருளாய் வைப்பானா? ஒரு போராளியால் இவ்வாறு செய்ய முடியுமா? மனம் வருமா? இப்படியும் நடக்குமா?

2 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

..தமிழர்களை அழித்த கொடியவனின் உருவத்தை இன்னொரு தமிழன் வடிவாய் வரைந்து காட்சிப் பொருளாய் வைப்பானா? ஒரு போராளியால் இவ்வாறு செய்ய முடியுமா? மனம் வருமா? இப்படியும் நடக்குமா?..

யோசிக்க வேண்டிய விசயம்....

து. பவனேஸ்வரி சொன்னது…

எவ்வளவு யோசித்தாலும் பதில் கிடைப்பதில்லையே நண்பரே...