புதன், 12 ஜனவரி, 2011

என்னை நான் வெறுக்கிறேன்!




என் தமிழச்சியே
உன்னை நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது!

இனத்திற்காகப் போராடியது உன் குற்றமா?
இறுதிவரை ஆயுதம் கூட ஏந்தவில்லையே நீ
உன்னை சீரழிக்க எப்படி மனம் வந்தது அவர்களுக்கு?

நாளிதழ், இணையம், சஞ்சிகை
எவ்விடம் நோக்கிலும் உமது புகைப்படம்
உயிரற்ற பிணமாய், சிதைக்கப்பட்ட பூவாய் நீ

நீ பேசுவதே பாடுவது போல் இருக்குமாமே?
எம் தலைவன் சீமான் கூறியதாகப் படித்தேன்
அதனைக் கேட்கும் பாக்கியத்தை இழந்து விட்டேனே!

பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினார்களா உன்னை?
ஐயகோ, நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றதே
எப்படித் துடித்திருப்பாய் நீ?

பச்சிளம் குழந்தைக்குத் தாயானவளே
எத்தனைச் செய்திகளைச் சேகரித்திருப்பாய்
இன்று உலகத் தமிழர்களின்  துக்கச் செய்தியாய் ஆகிவிட்டாயே!

உன்னைக் காப்பாற்ற ஒருவரும் வரவில்லையே
எந்நாட்டு அரசியலும் தலையிடவில்லையே
தமிழ்நாடு கூட குரல் கொடுக்கவில்லையே!

இயலாமையும் ஆற்றாமையும்
வெட்கித் தலைகுனியச் செய்கிறது என்னை
நானும் தமிழச்சியா?

நித்தம் அலங்காரம் செய்து
விதவிதமாய் உடைஉடுத்தி
ஊர் ஊராய் சுற்றுகிறேன் நான்!

அழுகுப்படாமல் வேலை செய்து
குளிர்சாதன அறையில் ஓய்வெடுத்து
சமயங்களில் கும்மாளமும்  போடுகிறேன் நண்பர்களோடு!

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஈழத்தில் எம் உறவுகள்
நானோ, கண்டதையும் தின்றுவிட்டு
கம்பீரமாய் அலைகின்றேன்!

என்னை நினைத்து நானே வெட்கிறேன்
உன் கால் தூசுக்கு சமமாகமாட்டேன்
நான் போற்றும் பெண்மையடி நீ!

என்ன செய்வேன் என்ன செய்வேன்?
தனித் தாய் ஈழத்தை வென்றெடுக்க
நான் என்ன செய்வேன்?

பயனற்ற ஜடமாய் இருக்கின்றேன் தாயே
எம் உறவுகளின் பிணங்களை எண்ணி எண்ணி
எமது நாட்களும் கடந்துக்கொண்டே செல்கின்றன!

எமது இனம் என் கண் முன்னே அழிக்கப்படுகிறது
திரைப்படம் பார்ப்பது போல்- நான்
அதனைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்!

அழிக்காதே என்று குரல் கொடுக்க அதிகாரம் இல்லை
‘சுட்டால் நானும் சுடுவேன்’ என்பதற்குத் தோட்டாக்களும் இல்லை
கல் கொண்டு அடிப்பதற்குக் கூட நான் ஈழத்தில் இல்லை

வாய்க்கிழியப் பேசிக்கொண்டும்
பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டும் மட்டுமே இருக்கின்றேன்
செயலில் நான் கூட சுழியம் தான்

என் தமிழச்சியே
தமிழ் இனத்திற்கே அவமானச் சின்னமாய் நான்
எமது இனத்தைக் காப்பாற்ற முடியாத பிண்டமாய்!

இப்படியொரு இன அழிப்பு நிகழ்ந்தது-என
என் சந்ததியினருக்கு வெட்கமில்லாமல் சொல்வதற்கா
நான் உயிர் வாழ்கிறேன்?

இசைப்பிரியா
இயலாமை என்னை உயிரோடு கொல்கிறது
கூனிக் குறுகி நிற்கிறேன் நான்!

உன்னையும் எம் இனத்தையும் காப்பாற்ற இயலாத
ஒட்டுமொத்த அவமானத்தின் சின்னமாய் நான்
இன்னமும் உயிர் வாழ்கிறேன், என்னையே வெறுத்து!