சனி, 30 ஆகஸ்ட், 2014

அவளும் அதுவும்… (பாகம் 1)

1.   ராஜா வீடு
அந்த வரிசையிலேயே அதுதான் கடைசி வீடு. வீட்டின் அருகே ஒரு மாமரம். சற்றுத் தள்ளி அடர்த்தியான நாவல் மரம். அதன் கீழே சிறியதாய் ஒரு கோழிக்கூடு. ஐந்தடித் தள்ளி செழுமையான வேப்பமரம்.  அதனையொட்டி வெள்ளைப் பூ மரம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. பத்தடி தூரத்தில் இரண்டு பெரிய புளியமரங்கள். அங்கே இரு பெரிய பொது குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் புளிய மரங்களைச் சுற்றிலும் காடு மண்டியிருந்தது. இன்னும் சற்று தூரத்தில் கொய்யா மரம். அதன் நிழலில் மிகவும் பழைய, துருப்பிடித்தவேன்வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆறடி தூரத்தில் பெரிய தூங்கு மூஞ்சி மரம். ஆங்காங்கே தென்னை மரங்களும் வாழை மரங்களும் நட்டு வைக்கப்பட்டிருந்தன.

வீட்டின் பின்புறம் காய்கறித் தோட்டம் போடப்பட்டிருந்தது. பின்புறமுள்ள ஒரு தென்னைமரத்திற்கும் மாமரத்திற்கும் இடையில் துணிகள் காய வைப்பதற்காகக் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. அதனையடுத்து சிறிய கால்வாய். கால்வாயைத் தாண்டி பலகையினால் ஆன ஒரு வெள்ளை மாளிகை. உண்மையில் அது மாளிகை அல்ல. பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு வீடு.  இரட்டை மாடி பலகை வீடு. அதன் அருகே ஒரு கூடாரமும் பெரிய அண்டாவும் இருந்தது. அது வண்ணான் வீடு. துணிகளை அந்த அண்டாவில் போட்டுத்தான் அவித்தெடுப்பார்கள். சற்றுத் தூரத்தில் செயற்கையாகக் கட்டப்பட்ட துணி துவைக்கும் குளம். அதனையொட்டி அவர்களின் காவல் தெய்வமான முனீஸ்வரனுக்குச் சிறிய கோயில் கட்டப்பட்டிருந்தது.

மீண்டும் அந்த கடைசி வீட்டிற்கு வருவோம். வீட்டின் முன் புறம் இரு பக்கங்களிலும் துளசிச் செடிகள் செழுமையாக வளர்ந்திருந்தன. சுவரை ஒட்டினாற்போல் இரண்டு நாற்காலிகள் திண்ணையில் போடப்பட்டிருந்தன. வீட்டில் நுழைந்தவுடன் இடது புறத்தில் பூஜையறையும், அதனையடுத்து ஒரு படுக்கையறையும் இருந்தன. அது ஒரு அறவைத் தொழிற்சாலை. வீட்டிலேயே மிளகாய், மஞ்சள், அரிசி, பருப்பு போன்றவைகளை அரைத்துக் கொடுத்து  வியாபாரம் செய்து வந்தனர். எனவே, வீட்டின் முற்பகுதி வியாபாரத்திற்காக ஒதுக்கப்பட்டிந்தது. நடுவே ஒரு கதவு. கதவைத் திறந்தால் வரவேற்பறை. அதனைத் தாண்டி சமயலறை. அதனைத் தகரங்களைக் கொண்டு பெரியதாய் இழுத்துக் கட்டியிருந்தார்கள். அதனையொட்டி கழிப்பறையும் குளியலறையும் அருகருகே கட்டப்பட்டிருந்தன. வீட்டின் கடைசிப் படுக்கையறை, வரவேற்பறையையும் சமயலறையையும் ஒட்டி இருந்தது.

அப்போது மாலை மணி சுமார் மூன்று இருக்கும். வீட்டில் பெரியவர்கள் அனைவரும் உண்ட களைப்புத் தீர சற்று உறங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். மாலை நேரத்தில் சிறிது நேரம் உறங்குவது அந்த வீட்டுப் பெரியவர்களின் வழக்கங்களில் ஒன்றாக இருந்தது. அந்தக் கடைசி வீட்டுச் சிறுவர்கள் அனைவரும் மொத்தமாக தங்களுக்குப் பிடித்த அந்தக் கடைசி அறையில் கூடியிருந்தனர்.

இரண்டு அடுக்குக் கட்டிலின் மேற்பகுதியில் சசி, ராம், இந்திரன் மூவரும் அமர்ந்திருந்தனர். கீழ்பகுதியில் பவானி, வாணி, மேகலா மற்றும் அவர்களின் கடைசித் தம்பி பாலா ஆகிய நால்வரும் மிரளும் கண்களுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தனர்.  பகல் வேளையாக இருந்த போதிலும் அந்தக் கடைசி அறை மிகவும் இருட்டாகவே இருந்தது. சூரிய வெளிச்சம் கொஞ்சமும் உள்நுழையாதவாறு சன்னல்கள் அனைத்தும் திரையால் மூடப்பட்டிருந்தன. சன்னலுக்கு அருகே ஒற்றைக் கட்டில் ஒன்றும் இருந்தது. ஏனோ, யாரும் அதில் அமரவில்லை. மூத்தவன் சசியைத் தவிர மற்ற அனைவரின் முகங்களிலும் ஒருவித பயம் பரவியிருந்தது. அனைவரும் சசியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரகசியம் ஓதுவது போல் சசி கதைச் சொல்ல ஆரம்பித்தான். அனைவரின் கற்பனைகளும் சிறகு விரிக்க ஆரம்பித்தன.

நாம இருக்கிற இந்த வீடு ராஜாவுக்குச் சொந்தமானது. இந்த வீட்ல தான் ராஜா தனக்குப் பிடித்தமான வைப்பாட்டியை வச்சிருந்தார்.”

உண்மையாவா? ராஜாவோட வீடா இது?” என்று இடைமறித்தாள் சசியைவிட இரண்டு வயது இளையவளான வாணி.

ஆமா. நம்பலைன்னா தாத்தாக்கிட்ட கேளு. இது ராஜாவோட வீடுதான்.”

சரி, நீங்க கதையைச் சொல்லுங்க,” என்றாள் மேகலா.

ஒருநாள் ராஜாவுக்கும் வைப்பாட்டிக்கும் சண்டை. ரொம்ப ஆத்திரமான அந்தப் பொம்பள ராஜா போன பிறகு ஆத்திரம் தீர ராஜாவுக்கும் தனக்கும் பொறந்த குழந்தையைப் போட்டு கண்மண் தெரியாம அடிச்சா. வலி தாங்கமுடியாத அந்தக் குழந்தை அழுதுகிட்டே செத்துப்போச்சி. பிறகு என்ன செய்யுறதுன்னே அவளுக்குத் தெரியல. இந்த வீட்டிலேயே குழித் தோண்டி குழந்தையைப் புதைச்சிட்டா. ”

ஐயோ! இந்த வீட்லயா?!” அனைவரும் கலவரத்துடன் கத்தினர்.

உஷ்ஷ்இந்த வீட்லதான்.”

 அப்புறம் என்ன ஆச்சி?” ஆர்வம் தாங்காமல் கேட்டாள் பவானி.

அப்புறம் அவளுக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சி. இந்த விசயம் ராஜாவுக்குத் தெரிஞ்சா தன்னை நிச்சயம் கொன்னுடுவார்னு அவளே தூக்குப் போட்டு தற்கொலைப் பண்ணிக்கிட்டா.”

அவளும் இங்கேயே செத்துட்டாளா?” முகமெல்லாம் சுருங்கிப் போய் கேட்டான் பாலா. சசி மெளனமாக தலையசைத்தான்.

அவளையும் ராஜா இந்த வீட்டிலேயே குழந்தைக்குப் பக்கத்துல புதைச்சுட்டார். அப்புறம் ராஜாவுக்கு இந்த வீட்டைப் பார்க்கவே பிடிக்காம போச்சி. அதனால இந்த வீட்டைக் குறைஞ்ச விலைக்கு வித்துட்டாராம்.”

அதுக்கப்புறம் நாம இந்த வீட்டுக்கு வந்துட்டோமா?” இம்முறை மேகலா கேட்டாள்.

இல்ல. நமக்கு முன்னாடி நிறைய பேர் இங்க இருந்திருக்காங்க. ஆரம்பத்துல ராத்திரில குழந்தை அழுவுற சத்தம் கேட்குமாம். சில பேருக்கு பொம்பள அழுவுற சத்தமும் கேட்டிருக்கு.” சில வினாடிகள் அங்கே ஒரு மயான அமைதி நிலவியது.

அவங்க ரெண்டு பேரையும் இந்த வீட்ல எந்த இடத்துல புதைச்சு வச்சிருக்காங்கன்னு தெரியுமா?” என்ற மர்மத்துடன் சசி மற்றவர்களைப் பார்த்தான். ஒருவரும் பதில் கூறாது ஒருவர் முகத்தை மற்றவர் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்த அறையில தான்!” என்று சசி சொன்னதுதான் தாமதம், “…” என்று கத்திக்கொண்டு, கதறியடித்து அந்த அறையை விட்டு அனைவரும் வெளியேறினர். சசி சொன்ன கதை நிஜம்தானா என்ற கேள்வி அந்தச் சிறுவர்கள் மனதில் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. அதனை உறுதிச் செய்துக்கொள்ள பாலா தாத்தாவிடமே கேட்டுவிட்டான்.

தாத்தா, இது ராஜாவோட வீடா?”

ஆமா. உனக்கு யார்டா சொன்னது?”

ராணி இந்த வீட்லயா செத்து போனா?”

அதாவதுராஜாவோட வைப்பாட்டி இந்த வீட்லதான் தூக்குப் போட்டுத் தற்கொலைப் பண்ணிக்கிட்டா. அதனால இந்த வீட்டை ராஜா ஒரு மலாய்க்காரனுக்கு வித்திட்டார். அதுக்குப் பிறகு நிறைய பேர் இந்த வீட்ல தங்கியிருக்காங்க. ஆனா, நாமதான் ரொம்பெ நாளா தங்கிக்கிட்டிருக்கோம்.”

அப்படின்னா, இது பேய் வீடா?” என்று தன்னையும் அறியாமல் கேட்டான் பாலா. அதற்குத் தாத்தாவிடமிருந்து பலத்த சிரிப்பு வந்தது.

..ஹாஹா.. நான் இருக்கிற இடத்துல பேய் வருமாடா? இது சாமி இருக்கிற இடம்டா,” என்றுச் சொல்லி தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

பாலாவிற்கும் மற்ற சிறுவர்களுக்கும் அதற்குப் பிறகும் குழப்பம் தீரவில்லை. சில தினங்களுக்குப் பிறகு, ஒரு மாலை வேளையில் சிறுவர்கள் எழுவரும் அதே கடைசி அறையில் கூடினர்.

ராஜாவோட வைப்பாட்டியையும் பிள்ளையையும் புதைச்சு வைச்ச இடத்தைப் பார்க்கப் போறீங்களா?” இந்த முறையும் சசிதான் கேட்டான். “பார்க்கலாமா?” என ஒருவரையொருவர் கண்களாலேயே வினவினர். சில வினாடிகளுக்குப் பிறகு அனைவரும் சம்மதமாக தலையசைத்தனர். சசி கட்டிலிலிருந்து இறங்கினான். அறையின் மூலைக்குச் சென்று தரையில் போடப்பட்டிருந்த விரிப்பை இரு கைகளால் தூக்கினான்.

டேய் இந்திரன், அந்தப் பக்கம் வந்துலெட்டைப் பிடிச்சுத் தூக்கு,” என்று கட்டளையிட்டான். இந்திரன் நடுங்கும் கரங்களுடன் சசியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான். அந்தச் சிமெண்டு தரையில் சிறிதும் பெரியதுமாக இரண்டுப் பெட்டிகளைப் புதைத்து வைத்தது போன்ற தடயம் இருந்தது. சிறுவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஒருவர் கரத்தை மற்றவர் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர்

...தொடரும்