நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 ஜூன், 2017

முதிர்ச்சி (All Grown up) -Jami Attenberg


Image result for all grown up novel

ஆண்ரியா 40 வயதைத் தொடும் திருமணமாகாதப் பெண். அவள் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என தீர்மானிக்கவில்லை. சமூகம் விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டுக்கொள்ளவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கவில்லை. அவள் மனம் போன போக்கில் வாழ்கிறாள். தனிமை அவளை வாட்டுகிறது, ஆனால் அவள் தனது வாழ்க்கையை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பவில்லை. தான் விரும்பும் ஆணுடன் உறவுக்கொள்கிறாள். வேண்டிய நேரத்தில் போதையின் உதவியை நாடுகிறாள். தான் வளர்ந்துவிட்டபடியால் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி தனக்கிருப்பதை உணர்கிறாள். இருப்பினும், அவளுக்கு அது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சி அவளை ஏதோ செய்கிறது. மனதளவில் தான் இன்னும் வளரவில்லை என்ற உண்மை அவளுக்குப் புரிகிறது.

தனது அண்ணன் மகள் ஊனமுடன் பிறந்து, வளர்ச்சியின்றி இறப்பதைப் பார்க்கிறாள். தன் தந்தை அளவுக்கதிமான போதையில் இறப்பதைப் பார்க்கிறாள். தான் விரும்பிய ஆண், வாழ்க்கையைப் பற்றி கவலைக்கொள்ளாமல் ஏழ்மையில் தவிப்பதைப் பார்க்கிறாள். தன் தாய் வாழ்க்கையை வாழ பிற ஆண்களின் தயவை வேண்டி நிற்பதைப் பார்க்கிறாள். திருமணமான தனது தோழி, விவாகரத்துக் கேட்டு நிற்பதைப் பார்க்கிறாள். இந்த வாழ்க்கை அனைவருக்கும் ஏதோ ஒரு சிரமத்தை, தடையை விதித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்ரியாவுக்கு இது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சியை அவள் விரும்பவில்லை. இருப்பினும், அவளின் அனுமதியின்றி அவள் வளர்ந்துவிட்டாள். எனவே, இந்த வாழ்க்கையை அவள் வாழ வேண்டும்; அவள் போக்கில்...

பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் சிந்திக்கும் விதமும், வாழ்க்கையை அவர்கள் எதிர்க்கொள்ளும் வழியும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதை சற்று விரக்தியாகவே நகர்கிறது. வளர்ந்துவிட்டவர்களின் வாழ்க்கையே விரக்தி நிறைந்தது தானே? வளர்ச்சியும், வயதின் முதிர்ச்சியும் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது, சிந்திக்க வைக்கிறது என்பதை விளக்க நாவலாசிரியர் ஜாமி அத்தென்பெர்க்ஸ் முயன்றுள்ளார். 

செவ்வாய், 30 மே, 2017

நேசிக்க நேரிடும் (May Cause Love)

Image result for may cause love
பத்தொன்பது வயதில் தான் கர்ப்பமாக இருப்பதை காசி அன்டர்வூட் அறிகிறாள். கையில் பணமில்லை, திருமணமாகவில்லை, மதுவுக்கு அடிமை, வீட்டைலிருந்து வெகு தூரம் வசிக்கும் வேளையில், கருவினைக் கலைக்க முடிவு செய்கிறாள். அவளின் முடிவு சரியா தவறா என்று அவளுக்குத் தெரியவில்லை.

கருக்கலைப்பு அவளிடமிருந்த பெண்ணியச் சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமை, எதையோ தொலைத்த உணர்வு, எல்லையில்லா குடிப்பழக்கம் என அவள் தனது மனதினை தேர்த்த முயல்கிறாள். தனது கருக்கலைப்பினைப் பற்றிப் பெற்றோர், நண்பர்கள், அயலார் என எல்லாரிடமும் உரையாடுகிறாள்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு எவ்வாறோ குடிப்பழக்கத்தை நிறுத்தி, தனது கனவு வேலையில் அமர்கிறாள். அப்போது அவளைக் கருவுறச் செய்த முன்னாள் காதலன் வேறு ஒருத்தியுடன் குழந்தைப் பெற்றுக்கொண்ட செய்தி அவளை என்னவோ செய்கிறது. அவள் உடைந்துப் போகிறாள். ஆழ்ந்த மன அழுத்தம் அவளை உட்கொள்கிறது. கருக்கலைப்புச் செய்த குற்ற உணர்விலிருந்து தான் என்றுமே விடுப்பட போவதில்லை என எண்ணுகிறாள்.

உணர்ச்சிகளை வெல்ல ஆன்மீகத்தைப் பயன்படுத்திய‌ பெண்களின் சரித்திரத்தைத் தேடிப் படித்த காசி, தானும் அவ்வழியைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கிறாள்.  புத்தம், ரோமன் கத்தோலிக், மனோதத்துவ நிபுணர் என இன்னும் பலரின் உதவியுடன் அவள் தனது தேடலைத் தொடர்கிறாள். கருக்கலைப்புச் செய்த பெண்களுக்கு ஆறுதலாகச் செயல்படவும் ஆரம்பிக்கிறாள்.

காசியின் இந்த வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக் கதையல்ல. அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற ஒரு பெண் சந்தித்த ஏமாற்றங்களும் சவால்களும், அதனை எதிர்க்கொள்ள அவள் செய்த முயற்சிகளையும் இரசனையுடன் சொல்லும் நாவல். நாவலில் ஆங்காங்கே வெளிப்படும் காசியின் வாழ்க்கைச் சிந்தனைகள் எம்மை வியப்புறச் செய்தன.

காசி...அவளுக்கு என் வயதோ அல்லது என்னைவிட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். அவள் மேற்கொண்ட பயணங்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி இவற்றில் நூறில் ஒரு பங்குக் கூட நான் செய்ததில்லை. காசியின் விடிவை நோக்கிய இந்தப் பயணம் என்னுள் ஓர் எழுச்சியை உண்டாக்குகிறது. எனது வட்டத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது. இவ்வுலகை வேறு கண்ணோட்டத்தில் காண வைக்கிறது.






திங்கள், 22 மே, 2017

இதயம் இருக்கும் இடம் (Where The Heart Is)

Image result for where the heart is


நோவலி பதினேழு வயது நிறைமாத கர்ப்பிணி. தனது காதலன் வில்லி ஜாக்குடன் புதிய வாழ்வை ஆரம்பிக்க கனவுகளுடன் கலிபோர்னியா நோக்கி பழைய மகிழுந்தில் பயணம் மேற்கொள்கிறாள். வில்லி ஜாக்கின் கையைப் பிடித்து தனது வயிற்றின் மீது வைத்து, "கேட்கிறதா? இதுதான் இதயம் இருக்கும் இடம்," என்கிறாள். அவனோ எதுவும் கேட்கவில்லை என மிக அலட்சியமாகக் கூறி கையை இழுத்துக்கொள்கிறான். பயணத்தின் போது அவளது காலணி மகிழுந்தில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்துத் தொலைந்துப் போனது. அவளிடம் இருந்த ஒரே காலணி அது மட்டுமே. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணாகிய அவளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு. பயணத்தின் ஊடே 'வால்மாட்' எனும் பேரங்காடியைக் கண்ட நோவலி செருப்பு வாங்கவும், சிறுநீர் கழிக்கவும் அவ்விடம் வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.

பேரங்காடியில் செருப்பு வாங்கிக்கொண்டிருந்தவளின் மூளையில் ஏதோ தோன்ற, ஓடி வந்து வெளியே பார்க்கிறாள். அங்கு வில்லி ஜாக் இல்லை. அவளது புகைப்படக் கருவி மட்டுமே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்தது. அவளிடம் எதுவுமே இல்லை, வயிற்றில் சுமக்கும் குழந்தையும் கையில் இருக்கும் புகைப்படக் கருவியைத் தவிர்த்து. அந்நேரத்தின் சிஸ்டர் ஹஸ்பண்ட் எனும் பெண்மணி, நோவலியை வேறொரு பெண் என நினைத்து உரையாடுகிறார். அந்த சிறு பட்டணத்திற்கு மீண்டும் திரும்பி வந்திருப்பதாக நினைத்து வரவேற்புப் பரிசுக் கூடை ஒன்றையும் நோவலியின் கையில் திணித்துவிட்டு நேரம் இருக்கையில் தன் வீட்டுற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

நோவலி பட்டணத்தைச் சுற்றி வரும் போது, பென்னி குட்லட் எனும் சிறுவன் அவளுக்கு 'பக் அய்' எனும் மரக்கன்றை வழங்கி, அது நல்ல சகுனத்தை வழங்கும் எனக் கூறுகிறான். அடுத்து என்ன செய்வது என்றறியாது தவித்த நோவலி பக் அய் செடியுடன் வால்மாட் பேரங்காடியில் வாழ ஆரம்பிக்கிறாள். ஒரு சமயம் தனது செடி வாடுவதைக் கண்ட அவள் அதனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள நூலகம் செல்கிறாள். அங்கே போர்னி அவளுக்கு உதவி புரிகிறான். சிஸ்டர் ஹஸ்பண்ட் வீட்டிற்குச் சென்று அந்தச் செடியை நட உரிமைப் பெற்று அங்கேயே செடியை நடுகிறாள்.

ஒருநாள் இரவு அவளுக்குப் பிரசவ வலி எடுத்தது. அவள் பேரங்காடியில் தங்கியிருப்பதை ஏற்கனவே போர்னி அறிந்துக்கொண்டான். நோவலி வலியில் துடித்த போது, கண்ணாடி கதவினை உடைத்து போர்னி அவளுக்கு பிரசவம் பார்க்கிறான். வால்மாட்டில் வசித்து, அங்கேயே குழந்தைப் பெற்ற நோவலியைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல் பரவியது. வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ் என அனைத்திலும் அவளைப் பற்றிய செய்திகள் வெளியாயின. அதனைக் கண்ட நோவலியின் தாய், பத்து வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் நோவலியைப் பார்க்க வருகிறாள். மகளுக்கு உதவி செய்வதாகக் கூறி அவளிடம் இருந்த அனைத்துப் பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்று விடுகிறார். சென்றவர் மீண்டும் வரவே இல்லை.

சிஸ்டர் ஹஸ்பண்ட் நடந்ததைக் கேள்வியுற்று, நோவலியையும் அவளது மகள் அமெரிகுஸ் நேசனையும் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். நோவலிக்கு வால்மாட் பேரங்காடியில் வேலை தரப்பட்டது. கால ஓட்டத்தின் மோசசின் உதவியுடன் புகைப்படங்கள் எடுக்கக் கற்றுக்கொண்டு சிறந்த புகைப்படக் கலைஞர் விருதையும் பெறுகிறாள். போர்னி அவளுக்கு நிறைய நூலக புத்தகங்களையும் தந்து வாசிக்கிக் கற்றுக்கொடுத்து, அவளைப் புதிய மனிதனாக்குகிறான். அவளை வீதியில் விட்டுச்சென்ற வில்லி ஜாக், சிறைச் சென்று, பலவாறாகத் துன்புற்று, இறுதியில் தண்டவாளத்தில் தனது கால்களை இழக்கிறான்.  போர்னியும, நோவலியும் இறுதியில் ஒன்றாக இணைகின்றனர்.

இந்நாவலில் 'லெக்சி' போன்று இன்னும் சில முக்கியக் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் இருக்கின்றன. பதினேழு வயது பெண்ணின் முட்டாள் தனமும், போராட்டமும், அமெரிக்க வாழ்க்கை முறையும் இந்நாவலில் வெகுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் இதே தலைப்பில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

ஹாரி போட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (Harry Potter and The Cursed Child)



ஹாக்வர்ட்ஸ் போர் முடிந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கதை நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹாரி போட்டர் ஜின்னியை மணம் புரிந்து ஜேம்ஸ் மற்றும் ஆல்பஸ் ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். ஹெர்மியோனி - ரோன் தம்பதியினருக்கு ரோஸ் எனும் பெண் குழந்தை இருக்கிறது. டிராகோ மால்ஃபோய்'யின் மகனாக ஸ்கோர்பியஸ் வருகிறான்.

இக்கதையில் ஹாரியின் இளைய மகன் ஆல்பஸ் தந்தையின் பெயருக்கும் புகழுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணருகிறான். தந்தையின் திறமை தன்னிடம் இல்லை என எண்ணி மனதிற்குள்ளேயே குமுறுகிறான். அதன் விளைவாகத் தன் அடையாளமாகத் திகழும் ஹாரியை விட்டு விலக முயல்கிறான். டிராகோவின் மகன் ஸ்கோர்பியஸ் அல்பஸ்சின் உற்ற நண்பனாக வலம் வருகிறான்.

தனது மகன் சிட்ரிக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அமோஸ், நேரத்தின் ஊடாக பயணம் செய்து தனது மகனை மீட்டுத்தரும்படி ஹாரி போட்டரிடம் உதவி நாடுகிறான். அதனால் விளையும் பின்விளைவுகளை எண்ணி ஹாரி உதவ மறுக்கிறான். இதனை ஒட்டுக்கேட்ட அல்பஸ்  அமோசுக்கு உதவ முன்வருகிறான். டெல்பியின் துணையுடன் அல்பசும் ஸ்கோர்பியசும் நேரத்தின் ஊடாகப் பயணம் செய்யும் கருவியைக் கைப்பற்றுகின்றனர். சிட்ரிக்கைக் காப்பாற்றுவதற்காக இரு முறைப் பயணம் செய்து, அதன் பின்விளைவுகளைக் கண்டு அஞ்சி அந்த முயற்சியைக் கைவிடுகின்றனர். நேரத்தின் ஊடாகப் பயணம் செய்வது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என்பதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதனை அழிக்கவும் ஆயத்தமாகின்றனர்.

இதற்கிடையில் தனது மகன் ஆல்பசைச் சுற்றி கறுப்பு மாயைப் படர்வதைக் கேள்வியுற்ற ஹாரி, ஸ்கோர்பியசின் நட்புதான் அதற்குக் காரணம் என எண்ணி அவர்களைப் பிரிக்க முயல்கிறான். இவ்விடம் மிகவும் உணர்ச்சிகரமானச் சம்பங்கள் சில நிகழ்கின்றன. ஆல்பசும் ஸ்க்கோர்பியசும் நேரக் கருவியை அழிக்கும் தருவாயில் டெல்பி அவ்விடம் தோன்றி அதனைக் கைப்பற்றுகிறாள். வல்டெர்மோர்ட் மீண்டும் வரவேண்டும் எனவும் அதற்கான ஆயத்தங்களை அந்தக் கருவின் துணைக்கொண்டு தாம் செய்யப்போவதாகவும் கூறி, அவ்விருவரையும் கடத்தி செல்கிறாள். டெல்பியின் தீய எண்ணத்தை அறிந்த அவ்விருவரும் அவளுக்கு உதவ மறுக்கின்றனர். இதனால் கோபமுற்ற டெல்பி கடந்தக் காலத்திற்குப் பின்னோக்கி சென்று, கருவியை அவ்விடத்திலேயே அழித்து விடுகிறாள். இதனால் மீண்டும் தற்காலத்திற்குத் திரும்ப முடியாமல் சிறுவர்கள் இருவரும் தவிக்கின்றனர்.

இதனிடையே, சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்ட பெரியவர்கள் டெல்பி வல்டெர்மோர்ட்டின் மகள் என்பதனைக் கண்டுப்பிடிக்கின்றனர். சிறுவர்களும் தாங்கள் இருக்கும் காலத்தையும், இடத்தையும் அறிவுப்பூர்வமாக ஹாரி போட்டருக்குத் தெரிவிக்கின்றனர். டிராகோ தன்னிடமிருந்த மற்றொரு நேரத்தின் ஊடே பயணம் செய்யும் கருவியை ஹாரியிடம் கொடுக்கிறான். அதனைப் பயன்படுத்தி சிறுவர்களை டெல்பியிடமிருந்து மீட்கின்றனர். கடந்த கால நிகழ்வுகள் எதனையும் சிதைக்காமல் மீண்டும் தற்காலத்திற்குத் திரும்பி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகு தந்தை - மகன் உறவில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் நிகழ்கின்றன‌.

இவையனைத்தையும் முழுமையாக சுவைக்க வேண்டுமானால் நீங்கள் முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரையில், கதை மிகவும் சுறுசுறுப்பாக நகர்கிறது; வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. கற்பனைக்கதை ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். வாசித்து மகிழுங்கள்!





வியாழன், 7 ஜூலை, 2016

கடல் புறா -சாண்டில்யன் (பாகம் 3)


அஷையமுனையை விட்டு கடலில் பயணம் மேற்கொண்ட இளைய பல்லவன் மனதில் கடாரத்து இளவரசி காஞ்சனா தேவியும், மஞ்சளழகியும் மாறி மாறி வந்துப் போயினர். கடல் மோகினியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கடல் புறாவை கலிங்கத்துப் போர்க் கப்பல்கள் தாக்க ஆரம்பித்தன. கடல் புறாவின் முதல் கடல்போர் வெற்றியில் முடிந்தது. அதிஷ்டவசமாக, கடாரத்து இளவரசி காஞ்சனாதேவியும், அவளது தந்தை குணவர்மனும் கலிங்கத்து கப்பல்களில் இருந்ததினால், அவர்களையும் இளைய பல்லவன் காப்பாற்றினான்.

நக்காவரத்தில் இருக்கும் தமிழர்கள் துணையுடன் போரினால் சேதமடைந்த  தனது கப்பல்களைச் சரிசெய்ய நினைத்த இளைய பல்லவனுக்கு பெருத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. மாநக்காவரத்தில் இருந்த கங்கதேவனைச் சூழ்ச்சியின் மூலம் வீழ்த்துகிறான் கருணாகரப் பல்லவன். கங்கதேவன் காஞ்சனா தேவியை அடைய முயன்றதால், அவனைக் கொலையும் செய்கிறான். அடுத்ததாக, கடாரத்தைப் பலவர்மனுக்குப் பெற்றுக்கொடுக்கும் அடுத்தக் கட்ட முயற்சியில் ஈடுபடுகிறான். கடாரத்தில் குணவர்மனையும் காஞ்சனா தேவியையும் விட்டுவிட்டு, கடல் நாடுகளில் காலை ஊன்றச் சென்றுவிடுகிறான். வெற்றிக்கொண்டு மீண்டும் கடாரம் வந்திறங்கிய இளைய பல்லவனை சொர்ணபூமிக் கடல் பிராந்தியங்களுக்குச் சோழ மன்னரால் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இளவரசர் அநபாயர் சிறைப்பிடிக்கிறார். 

இளைய பல்லவனின் சிறைப்பிடிப்பு ஒரு அரசியல் நாடகம் என்பதை அநபாயர் அவனுக்கு விளக்குகிறார். கருணாகரனைச் சிறிது காலம் அஷையமுனையில் தங்கியிருக்குமாறும், காஞ்சனா தேவியை உடன் அழைத்துச் செல்லுமாறும் உத்தரவுப் பிறப்பிக்கிறார். மஞ்சளழகியை நினைத்து இளைய பல்லவன் அதற்கு உடன்பட மறுக்கிறான். அனைத்தையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த அநபாயக் குலோத்துங்கன் அமீரின் உதவியுடன் தந்திரம் செய்து அவர்களை அஷையமுனைக்கு அனுப்புகிறான். இருப்பினும், கடல் பயணத்தின் பாதி வழியில், இளைய பல்லவன் கப்பலில் வழியை மாற்ற, அது மலையூர்க் கோட்டையை நோக்கிச் சென்றது. ஜம்பி நதி முகத்துவாரத்தில் பெரும் போரில் ஈடுப்பட்ட கடல்புறா இறுதியாக, ஸ்ரீவிஜயத்தின் கடற்படை தளபதி விஜயசந்திரனைச் சுற்றி வளைத்தது. 

மலையூரைத் தன் வசமாக்க நினைத்த இளைய பல்லவன், கோட்டையில் மஞ்சளழகியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான். ஜெயவர்மன் மஞ்சளழகியைத் தன் மகளாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீவிஜயத்தின் இளவரசி பட்டத்தினை அளித்ததையும், தாம் தற்போது மலையூர்க் கோட்டையின் தலைவர் என்பதையும் மஞ்சளழகி விளக்குகிறாள். இருப்பினும், இளைய பல்லவன் மீதுள்ள காதலினால், அவனுக்கு உதவ முற்படுகிறாள். 

இவ்வேளையில், இளைய பல்லவனைத் தேடி கோட்டைக்கு வந்த காஞ்சனா தேவிக்கும், மஞ்சளழகிக்கும் வாக்கு வாதமும், மனவருத்தமும் முற்றுகிறது. மஞ்சளழகி கோட்டையைப் பிடிப்பதற்கு உதவியதையும், தனக்காகச் செய்த பெரும் தியாகத்தையும் இளைய பல்லவன் காஞ்சனா தேவியிடம் விளக்கு இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறான். மலையூர்க் கோட்டையை தன் வசமாக்கிக்கொண்ட இளைய பல்லவன், மங்கையர் இருவரையும் கடல்புறாவில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவிஜ‌யத்தை நோக்கிப் பயணமானான். 

சுமார் மூன்று நாட்கள் நடந்த போரில், ஸ்ரீவிஜயம் வீழ்ந்தது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சொர்ணத் தீவும், கடாரமும் சேர்ந்த பெரும்பகுதி குணவர்மனுக்கும், சைலேந்திரர்களின் ஜன்ம பூமியான சாவகத் தீவு ஜெயவர்மனுக்கும் பிரித்தாள கொடுக்கப்பட்டன. 

தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்ற இளையபல்லவனை வரவேற்ற வீரராஜேந்திர சோழர் வண்டைக் குறுநிலத்தை இளையபல்லவனுக்கு அளித்து கருணாகரத் தொண்டைமான் என பெயரும் வழங்குகிறார். அவனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில், மஞ்சளழகியையும், காஞ்சனாதேவியும் மணமுடித்து வாழ ஆசியும் வழங்குகிறார் வீரராஜேந்திர சோழர். 

இவ்வாறாக சுபமுடன் நாவல் முடிவுறுகிறது. மூன்று பெரும் பாகங்களாகப் படைக்கப்பட்டுள்ள இந்நாவலின் முதல் பாகத்தில் காஞ்சனா தேவியும், இரண்டாம் பாகத்தில் மஞ்சளழகியும் கதைத்தலைவிகளாக வலம்வருகின்றனர். நாவலின் மூன்றாம் பாகத்தில் மட்டுமே மங்கையர் இருவரும் சந்திக்கின்றனர். ஆகவே, மூன்றாம் பாகத்தில் இளையபல்லபன் மற்றும் இரு மங்கையர் துணையுடன் பயணிக்கிறது கடல்புறா. 

நாவலில் இடம்பெரும் கடாரம் பற்றிய சில குறிப்புகள்:

*இராஜேந்திர சோழதேவரைப் போன்ற வீரரும் ரசிகரும் தமிழகத்தில் இருந்ததில்லை காஞ்சனாதேவி. அவர் கங்கையைக் கொண்டதன்றிக் கடாரத்தையும், ஏன் கீழ்த்திசை முழுவதையுமே வெற்றிக் கொண்டதும் உலகமே வியந்தது. பக்.70

*தமிழர்கள் சங்க காலம் முதல் அறிந்த கடாரத்தின் சிறப்பையும் இயற்கைக் காவலையும் கூட அசட்டை செய்தவண்ணம்... பக்.362

*'தொடு கடல் காவல் கடுமுரட்  கடாரமும்' என்று இராஜேந்திர சோழ தேவர் தஞ்சை இராசராசேச்சுரத்துக் கர்ப்பக்கிருகத்தில், தென்புறத்திலுள்ள இரண்டாம் பட்டைக் கல்வெட்டில் படைத்த சாஸனத்தை நினைத்து ஓரளவு புன்முறுவல் கொண்டான். பக்.363

* "கலைத்தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும்
    திதமாவல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிரக்'
    கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில்
    மானக்காவரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்..."  பக்.363

*மலாக்க ஜலசந்தி என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸ்ரீவிஜய சாம்ராஞ்யக் கடற்பகுதி நாடுகளில் பல இடங்களில் தனது கால்களை ஊன்றினான். பக்.365

*கி.பி. 1062-வது வருடத்திற்குப் பிறகு குலோத்துங்கத் தேவன் கடாரத்தில் வீரராஜேந்திரன் பிரதிநிதியாகப் பணியாற்றியதாகவும், சோழநாட்டுத் தூதனாக கி.பி.1067-ல் சீனத்துக்கும் சோழத் தூதராகச் சென்றதாகவும் கூறுகிறார். பக்.372

*நமது நாட்டு இளவலொருவன் தற்கால வசதிகளில்லாத அக்காலத்தில் கடாரத்தில், அங்குள்ள மன்னர்களுக்கும் உத்தரவிடும் நிலையில் அமர்ந்திருந்தான். பக்.373



ஞாயிறு, 3 ஜூலை, 2016

கடல் புறா- சாண்டில்யன் (பாகம் 2)



பாலூர்ப் பெருந்துறையில் சிக்கிக்கொண்ட இளைய பல்லவனை அகூதா காப்பாற்றி கப்பலில் போர் பயிற்சி அளிக்கிறார். அகூதாவின் வழிக்காட்டலின் பேரில் மிக விரைவிலேயே இளையபல்லவன் பிரசித்திப்பெற்ற கடற்போர் வீரனாக அறியப்படுகிறான்.

நாவலின் இரண்டாம் பகுதி அஷையமுனையில் தொடங்குகிறது. அஷையமுனைக் கோட்டைத் தலைவன் பலவர்மன், குணவர்மனின்  ஒன்றுவீட்டுச் சகோதரன் என்பதையும் , மிகவும் ஆபத்தானவன் என்பதையும் இளையபல்லவன் கண்டறிகிறான். அஷையமுனையில் தான் சிறிய கடற்படை அமைக்க விரும்புவதாக கோட்டைத் தலைவனின் உதவியை நாடுகிறான். அவ்விடம் கோட்டத் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சளழகியின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மஞ்சளழகியும் இளையபல்லவன் பால் ஈர்க்கப்படுகிறாள். இவற்றை தனது அரசியலில் இலாபத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள பலவர்மன் முனைகிறான். 

இதற்கிடையில் மஞ்சளழகியை மணமுடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனக்குக் கிடைத்த சலுகையைப் பயன்படுத்தி இளையபல்லவன் தனது மரக்கலத்தை மறுசீரமைக்கிறான். அதற்கு புறாவின் முகத்தை அமைத்து, கடாரத்தின் இளவரசியின் நினைவாக 'கடல் புறா' என பெயரிடுகிறான். இளையபல்லவனைக் கொலை செய்ய பலவர்மன் வெகுவாக முயன்று தோல்வியைத் தழுவுகிறான். மஞ்சளகி அகூதாவின் சகோதரிக்கும் ஜெயவர்மனுக்கும் பிறந்தவள் என்ற இரகசியம் வெளிவருகிறது.

இறுதியாக, தனது சாமர்த்தியத்தின் மூலம் கலிங்கத்தின் கடற்பலமாகத் திகழ்ந்த அஷையமுனையை இளையபல்லவன் கைப்பற்றி, மறுசீரமைக்கிறான். அதனை மஞ்சளழகிக்கு அளித்து அரசாளும் உரிமையை வழங்குகிறான். பின்னர், மிஞ்சியிருக்கும் தனது கடமையை நிறைவேற்ற மீண்டும் படற்பயணம் மேற்கொள்கிறான். இம்முறை கரையிருந்தபடியே கனத்த இதயத்துடன் அவனை வழியனுப்புவது மஞ்சளழகி.

...தொடரும்...








சனி, 2 ஜூலை, 2016

கடல்புறா -சாண்டில்யன் (பாகம் 1)




சரித்திர நாவல்களில் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு. அதிலும் கல்கி, சாண்டில்யன் ஆகிய இருவரின் தீவிர வாசகி. வெகுகாலமாகவே சாண்டில்யனின் கடல்புறா எனும் நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மலேசியாவின் 'கெடா' (கடாரம்) என்ற மாநிலம் குறித்து இந்நாவலில் சில குறிப்புகள் இருந்ததனால் இது எனது ஆர்வத்தை மென்மேலும் தூண்டியது. நாவலை வாசித்து முடித்து பல மாதங்கள் ஆன போதிலும் இதனைப் பற்றி சிலவற்றை குறிப்பெழுத வேண்டும் என உள்மனம் நச்சரித்துக்கொண்டே இருந்தது. அதற்கான அரிய வேளை இப்பொழுதுதான் எனக்கு வாய்த்தது.

கடல்புறா நாவல் மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. 1967-இல் எழுதப்பட்ட இந்நாவலில் பல சரித்திர நிகழ்வுகள் பதியப்பெற்றிருக்கின்றன. புனைக்கதையாக இருந்த போதிலும் பல வரலாற்று நூல்களின் துணைக்கொண்டே இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

இளைய பல்லவனைக் (கருணாகர பல்லவன்) கதைத்தலைவனாகக் கொண்டு கலிங்கத்தில் கதைத் தொடங்குகிறது. பாலூர்ப் பெருந்துறையில் வந்திரங்கிய உடனேயே சிக்கலில் மாட்டிய கருணாகரனுக்குச் சுங்க அதிகாரி தப்புவதற்கு உதவி செய்கிறான். உயிர் தப்பி ஒரு மாளிகையில் தஞ்சம் புகுந்த இளைய பல்லவன் அவ்விடம் கடாரத்தின் அரசகுமாரி காஞ்சனா தேவியைச் சந்திக்கின்றான். கலிங்க வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இளைய பல்லவனையும், கூலவாணிகன் சேந்தனையும், அநபாய குலோத்துங்கன் (சோழர் குல இளவல்) மற்றும் காஞ்சனாதேவி ஆகிய இருவரும் தக்க நேரத்தில் வந்து காப்பாற்றுகின்றனர்.அநபாயரின் நண்பனான அரபு நாட்டைச் சேர்ந்த அமீர் அவர்களுக்கு உதவ முன்வருகிறான். அமீர் பிரசித்திப்பெற்ற கடற்கொள்ளைக்காரனான அகூதாவின் சிறந்த சீடன் என்பது குறிப்பிடத்தக்கது. அகூதா மற்றும் அமீரின் துணையுடன் அநபாயன், காஞ்சனாதேவியையும் அவளது தந்தை குணவர்மனையும் கப்பலில் ஏற்றி கலிங்கத்தை விட்டு வெளியேறுகிறான். இவர்களைத் தப்புவிக்கும் முயற்சியில் அமீரும், இளைய பல்லவனும் கரையிலேயே தங்கி விடுகின்றன. மாளிகையில் முதன் முதலாகச் சந்தித்த அன்றே தனது இதயத்தை இளைய பல்லவனிடம் பறி கொடுத்த காஞ்சனா தேவி கனத்த இயத்துடன் கப்பலில் பயணிக்கிறாள். இவ்வாறாக நாவலின் முதல் பாகம் சோகத்துடன் நிறைவடைகிறது.

கடாரத்தைப் பற்றி நாவலில் இடம்பெறும் சில தகவல்கள்:

*வைரமும் வைடூரியமும் பதிக்கப் பெற்ற மணிக்கதவுகள் உள்ள கடாரத்துக்கும், தங்கம் மண்ணிலே கொழித்துக் கிடக்கும் சொர்ணத்தீவுக்கும் இந்த பாலூர்ப் பெருந்துறைதான் திறவுகோல். -பக்.44

*தென்கிழக்கு நாடுகளின் வாணிபத்தின் முழுப்பலனை அடையும் கடாரத்தை வெற்றி கொண்டு மரகதத் தோரணத்தையும் ஆபரண வாயிலையும் கொண்டு வந்தும்  முதலாம் ராஜேந்திரரின் கடற்படை இங்கிருந்துதான் கிளம்பியது. -பக்.45

*கோட்டைக் காவலரிடமிருந்து தப்பிக் கடாரத்தின் இளவரசர் தங்கியிருக்கும் மாளிகைக்குள் வந்து குதிப்பேனென்பதை நாம் எப்படி எதிர்ப்பார்த்திருக்க முடியும்? -பக்.68

*தந்தையின் பெயர் குணவர்மன் என்றேன். கடாரத்தின் இளவரசர் ஒருவருக்குத்தான் அந்தப் பெயர் இருக்க வேண்டுமா? -பக்.68

*ஓலையில் கண்டிருப்பது நடந்தால் எங்கள் குலம் ஒழிந்தது! சைலேந்திரர் பேரரசு முறிந்தது! சொர்ண பூமியே அழிந்தது! -பக்.74

*கடாரத்தின் மன்னன் என ஜெயவர்மனை இளைய பல்லவன் குறிப்பிட்டதை ரசிக்காத குணவர்மனின் முகம் லேசாகச் சுளித்தது. -பக்.78

*கடாரத்தின் ஆட்சி பீடத்தையும் அந்த ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத்தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப்பட்டது. -பக்.90

*கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே அனுப்பியிருந்தீர்களே? -பக்.90

*அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்தர்களின் மாபெரும் அரசான ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது. பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. -பக்.91

*பாரதத்தின் கடற்கரையோரமாகப் போய்த் தெற்கே திரும்பினால் கிழக்கு நாடு பாரதத்தின் நிலப் பரப்புடன் தொடர்பு கொண்டே செல்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடாரத்துக்குக் கீழேதான்,  கடல் குறுக்கிட்டு உடைக்கிறது. அப்படிக் கடல் உடைத்துப் பிரிந்த இடங்கள் தீவுகளாகிச் சொர்ணத் தீவு (சுமாத்ரா) என்றும், சாவகத் தீவு என்றும், பாலித் தீவு என்றும் வெவ்வேறு விதமான பெயர்களைப் பெற்றுத் திகழ்கின்றன. -பக்.92

*ஸ்ரீமார விஜயதுங்கவர்மனுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்த ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் பாரதத்திலிருந்து வரும் பொருள்களுக்குப் பலமான சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெகுண்ட இராஜேந்திர சோழ தேவர் ஸ்ரீ விஜயத்தை நோக்கித் தமது கடற்படையை ஏவினார். எந்தக் கடலைத் தாண்டி பெருவாரியான தமிழர் படை வர முடியாதென்ற தைரியத்தால் ஸங்க்ரம விஜயதுங்கர் சுங்க வரிகளை விதித்தாரோ, அந்தக் கடலைத் தாண்டித் தமிழர் பெரும் படை வந்தது. கடாரத்தையும், ஸ்ரீ விஜயத்தையும் சூறையாடியது. ஸங்க்ரம விஜயதுங்கவர்மனையும் சிறை பிடித்துச் சென்றது. பிறகு ராஜேந்திர சோழதேவரின் கருணையால் ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் விடுதலையடைந்தார். அவர் காலமுதல் ஸ்ரீவிஜயம் வலிமை குன்றியது. என் தந்தையின் காலத்தில் அரியணைப் போட்டிச் சண்டையும் கிளம்பியது. என் சகோதரன் அரசைப் பறித்துக்கொள்ள விரும்பினான். அதன் விளைவாக, என்னைச் சொர்ணத் தீவிலிருந்து கடாரத்துக்கு அனுப்பி அங்கு என்னை இளவரசனாக்கினார் என் தந்தை. -பக்.95

*ஜெயவர்மன் ஆட்சி ஸ்ரீவிஜயத்துக்குப் பெரும் சாபக்கேடாக முடிந்தது. மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். சாதாரணக் குற்றங்களுக்குப் பெரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஜெயவர்மனுக்குப் புத்தி சொல்ல முற்பட்ட மந்திரிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மெள்ள மெள்ளச் சீரழியத் தொடங்கியது. அக்கம் பக்கத்து அரசாங்கங்களின் விரோதமும் வந்து சம்பவித்தது. இப்படியே போனால் மக்கள் தவிப்பார்கள், நாடு அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே, கடாரத்தைத் தன் வசம் ஒப்புவிக்கும்படி ஜெயவர்மன் அனுப்பிய ஓலையைத் திருப்பியனுப்பினேன். முடிந்தால் ஜெயவர்மன் கடாரத்தை அழித்திருப்பான். ஆனால் மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கிருப்பதைக் கண்டு அஞ்சியிருக்கிறான்.  அவன் அச்சம் குலையுமுன்பு சோழர் உதவியை நாடி சைலேந்திரர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தவும் , என் நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்கவும், இந்நாடு வந்திருக்கிறேன். -பக்.96

*கடாரத்தின் மன்னர்-இவர் இளவரசரா மன்னரா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது- ஆகவே மன்னரென்றே அழைக்கிறேன். இவரும் இவரது மகள் இளவரசி காஞ்சனாதேவியும்  கடாரத்தின் தளையை அவிழ்க்கச் சோழ நாட்டு உதவி நாடி வந்திருக்கிறார்கள். -பக்.367

...தொடரும்...





வெள்ளி, 27 மே, 2016

ஹரி போட்டரும் மந்திரவாதியின் கல்லும் -ஜெ.கே.ரோவ்லிங் (Harry Potter and The Sorcerer's Stone)


பெற்றோர் மறைவிற்குப் பிறகு ஹரி சித்தியின் வீட்டில் பல கொடுமைக்களுக்கிடையில் வளர்கிறான். பதினோரு வயது வரையில் தனது பிறந்தநாளை ஒருநாள் கூட அவன் கொண்டாடியதில்லை. ஒருநாள் அவனுக்கு ஆந்தையின் மூலம் கடிதம் கொண்டு வரப்பட்டது. அவனது சித்தாப்பாவும் சித்தியும் அதனை அவனிடம் கொடுக்காது கிழித்துவிடுகின்றனர். சித்தியின் குடும்பத்தினரைத் தவிர்த்து வேறு உறவோ நட்போ இல்லாத நிலையில் அவன் அந்தக் கடிதம் யாருடையதாக இருக்கும் என நினைத்து ஏங்குகிறான். அவனது ஏக்கத்தைப் போக்க, கடிதங்கள் கிழிக்கப்பட இன்னும் பல கடிதங்கள் வந்த வண்ணமாகவே இருந்தன. 

ஹரியின் 11-வது பிறந்தநாளன்று ஹாக்ரிட் எனப்படும் பெரிய மனிதன் ஒருவன் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, ஹாரி ஒரு மந்திரவாதி என்ற உண்மையைச் சொல்கிறான். மேலும், மந்திரவாதிகளான ஹரியின் பெற்றோர் எப்படி கொல்லப்பட்டனர் என்பதையும் விவரிக்கிறான். ஹரியை ஹோக்வர்ட் எனப்படும் மந்திரம் பயிலும் பள்ளியில் சேர்ப்பதற்கே தான் அவ்விடம் வந்ததாகக் கூறி அழைப்புக் கடிதத்தை கொடுத்து ஹரியை அழைத்துச் செல்கிறான். 

ஹரியின் படிப்புச் செலவிற்கு அவனது பெற்றோர் அதிகமான செல்வத்தை வங்கியில் வைத்திருந்தனர். ஹாக்ரிட்டின் உதவியின் மூலம், வங்கிலியிருந்து பணத்தை எடுத்துப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறான். பொருட்கள் வாங்கும் சந்தையில் ஏறத்தாள அனைவருக்குமே ஹரியை நன்குத் தெரிந்தது. அவனது நெற்றியில் இருந்த மின்னல் வெட்டு போன்ற தழும்பு அவன் மரணத்தை வென்ற 'ஹரி போட்டர்' என்பதை உலகிற்குப் பறைச்சாற்றியது.

மாயத் தொடர்வண்டியில் ஏறி மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஹரிக்கு, ரோன் மற்றும் ஹெர்மியோனியின் நட்பு கிட்டுகிறது. பள்ளியிலும் மூவருக்கும் ஒரே குழுவில் இடம் கிடைத்ததால் பிற்காலத்தில் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மாயப்பள்ளியின் அழகையும் ஆடம்பரத்தையும் கண்டு ஹரி மயங்குகிறான். அவனிடம் மற்ற சிறுவர்களைவிட ஏதோ ஒரு பெரிய சக்தி இருப்பதை அனைவரும் உணர்கின்றனர். ஹோக்வர்ட்டின் பிரபலமான பறக்கும் பந்து விளையாட்டுப் போட்டிலும் ஹரி கலந்துக்கொண்டு தன் குழுவிற்கு வெற்றித் தேடி தருகிறான். பள்ளியின் தலைமையாசிரியர் அல்புஸ் டம்பெல்டோர் மற்றும் ஹாக்ரிட் இருவரும் ஹரியிடம் மிகுந்த அன்புக் காட்டுகின்றனர். இருந்த போதிலும், பேராசிரியர் சினேப் அவனை விரோதியைப் போல் நடத்துகிறார். 

ஒரு சமயம் வங்கியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாட முயற்சி நடந்திருப்பதான செய்தி நாளிதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முந்தினம்தான்  தலைமையாசிரியரிடம் ஒப்படைப்பதற்காக ஹாக்ரிட் வங்கியிருந்து அதனை எடுத்து வந்திருந்தான். அது என்னப் பொருளாக இருக்கும் என அலசி ஆராய்ந்துக் கடைசியாக அது, மரணமில்லாமல் வைத்திருக்கும் மந்திரக் கல் என்பதை ஹரி தெரிந்துக்கொண்டான். அந்தக் கல்லைப் பெருவதற்கு சினேப்  முயன்றுக்கொண்டிருக்கிறான் என்றெண்ணி எப்படியாவது அந்தக் கொடியவனைத் தடுக்க வேண்டி தனது நண்பர்கள் ரோன் மற்றும் ஹெர்மியோனியின் உதவியுடன் செயல்படுகிறான். 

பலத் தடைகளைத் தாண்டி, இறுதியாக மந்திரக்கல் இருக்கும் இடத்தை அடைந்த ஹரி, பேராசிரியர் கியூரல் என்பவரே அந்தக் கல்லைப் பெருவதற்கு முயற்சிகள் செய்துவந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியுறுகிறான். தன் பெற்றோரைக் கொன்ற வொல்டெமோர்ட் என்ற தீயச்சூனியக்காரனுக்கு கியூரல் உதவி வந்துள்ளதை அறிந்து அந்தக்கல்லை அவனிடமிருந்துக் காப்பாற்ற முயல்கிறான். மாயக்கண்ணாடியின் உதவியால் கல் ஹரியின் காற்சட்டைப்பைக்குள் வருகிறது. கியூரலால் ஹரியைத் தடுக்க முடியவில்லை. ஹரியிடமிருந்த  மாயச்சக்தி கியூரலைத் தடுத்தது. பள்ளி முதல்வர் டம்பெல்டோர் தக்க சமயத்தில் வந்து ஹரியைக் காப்பாற்றுகிறார். அந்தக் கல் மேலும் துன்பங்களை விளைவிக்காமல் இருப்பதற்கு அதனை அழிக்கவும் செய்கிறார். 

இவ்வாறாக, ஹரி போட்டரும் மந்திரக்கல்லும் என்ற இந்தப்பாகம் நிறைவடைகிறது. மாயஜாலங்கள் நிறைந்த இக்கதை வாசிக்க மென்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இக்கதைத் திரைப்படமாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களையும் அற்புதங்களையும் எம்மால் இவ்விடம் பதிய முடியவில்லை. வாய்ப்பிருப்பின், நீங்களே படித்து ஹரி போட்டரின் மாய உலகில் வலம் வாருங்கள். 

வியாழன், 19 மே, 2016

பாவப்பட்டப் பெண் -ஜாக்கி கோலின்ஸ் Poor Little Bitch Girl -Jackie Collins



டென்வர் ஜோன்ஸ், அனபெல்லா, கரோலின் ஆகிய மூவரும் பெவெர்லி ஹில்சில் ஒன்றாகப் படித்தவர்கள். 

அனபெல்லா
பிரபலமான சினிமா நடிகர்களின் ஒரே மகள். பால்ய வயதிலேயே அழகினைக் கூட்டுவதற்காகப் பல அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டவள். அழகியாக இருந்த போதிலும், பெற்றோரின் கவனிப்பு இல்லாமையால் செல்வத்தை தன் விருப்பப்படி செலவழிக்கிறாள். நியூ யார்க்கில் ஆடை வடிவமைப்புத் துறையில் தனக்கென தனி அடையாளத்தைத் தேடுவதற்காகப் புறப்படுகிறாள். சென்ற இடத்தில் போதைப் பித்தனான பிராங்கியுடன் காதல் வயப்படுகிறாள். இருவரும் விரைவான வழியில் பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தைக் கையிலெடுக்கின்றனர். மிகவும் பிரபலமான பணக்காரர்களுக்கு உயர்தர நடிகைகள், அழகிகளைத் தயார் செய்து கொடுப்பது இவர்களது இரகசியத் தொழிலாக இருந்தது. இதற்கிடையில் அனபெல்லாவின் அழகிய தாயார் சொந்த வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்படுகிறார். அதே சமயம், இவளது இரகசிய தொழில் பத்திரிக்கைகளில் ஆதாரத்தோடு அம்பலத்திற்கு வருகிறது. இறுதியாக, பிராங்கியை விட்டுப் பிரிகிறாள்.

கரோலின்
வாசிங்டனின் ஆட்சிக்குழு உறுப்பினர் கிரேகரியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு கர்ப்பமாகிறாள். தனது காதலனைக் கலட்டிவிட்டு ஆட்சிக்குழு உறுப்பினரைத் திருமணம் செய்துக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள். ஏற்கனவே திருமணமான கிரேகரி அதனது குடும்பத்தை விட்டுப்பிரிய விரும்பவில்லை. இதற்கெல்லாம் கரோலினின் கர்ப்பம்தான் காரணம் என எண்ணிய அவன் ஆட்களை வைத்து அவளைக் கடத்து கர்ப்பத்தை கலைக்க முயல்கிறான். பல இன்னல்களுக்குப் பிறகு எப்படியோ உயிர்த்தப்பிய கரோலினை டென்வர் காப்பாற்றுகிறாள். கிரேகரியின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்த கரோலின், அவனை விட்டு நீங்கி தனது சொந்த ஊருக்கே செல்கிறாள். 

டென்வர் ஜோன்ஸ்
சிறுவயதிலேயே நன்றாகப் படித்து சட்டதாரியாக உருவெடுக்கிறாள். அனெபெல்லாவின் தாயாரின் திடீர் கொலை அவளை ஊரெங்கும் அலைய வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே தனது நீண்டநாள் காதலனால் கைவிடப்பட்ட டென்வர் மனதை ஒருநிலைப் படுத்தி தனது வேலையிலேயே குறியாக இருக்கிறாள். அப்பொழுதுதான் பள்ளியில் தான் விரும்பிய பணக்காரப் பையனான போப்பியைச் சந்திக்கிறாள். பலப் பெண்களுடன் பழகி சலிப்புற்ற போப்பி அனெபெல்லாவின் இயற்கையான நற்குணத்தில் தனது மனதைப் பறிக்கொடுக்கிறான். இறுதியாக இருவம் காதல் வயப்படுகின்றனர்.


முடிவுரை
ஹாலிவுட்டில் இளையோர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களிடையே நிலவும் சீர்க்கேடுகளையும் இந்நாவலின் வழி அறிந்துக்கொள்ள முடிகிறது. 



வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

டார்ஜெலிங் (Darjeeling)





இந்திய எழுத்தாளர் எழுதிய ஆங்கில நாவல். முக்கோணக் காதலையும் தேயிலையையும் மையமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டமாகிய டார்ஜெலிங், அமெரிங்காவின் நியூ யார்க் நகரம், கனடா எனக் கதை வளர்ந்து நீண்டு மீண்டும் டார்ஜெலிங் தோட்டத்திலேயே நிறைவுறுகிறது. 

அலோகா மற்றும் சுஜாதா இருவரும் நீண்ட பெரும் பாரம்பரியம் உடையத் தேயிலைத் தோட்ட முதலாளியின் மகள்களாக வலம் வருகின்றனர். மூத்தவளான அலோகா அழகும் நிறமும் மிகுந்தவள். ஆகையால் அக்குடும்ப வழக்கப்படி மூத்தவளுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. அனைவரும் அலோகாவையேக் கொண்டாடினர். கவர்ச்சிக் குறைந்த சுஜாதாவிற்கு இது மிகுந்த வருத்தத்தை அளித்து அவளது தன்னம்பிக்கையையும் குறைத்தது. அலோகா அனைவரிடமும் பேசிப் பழகி மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தாள். சுஜாதா பெரும்பகுதி நேரங்களைத் தேயிலைத் தோட்டத்தில் செடிகளுடன் கழித்தாள். இதனால் இயற்கையாகவே சுஜாதாவிற்குத் தேயிலையின் மீது ஈர்ப்பு உண்டாயிற்று.  தேயிலையின் தரத்தையும், சுவையையும் பகுத்தறிவதில் சுஜாதா கைத்தேர்ந்தாள்.

இவர்கள் இருவரின் பருவ வயதில்தான் அதே கிராமத்தில் வசித்து வந்த பிரனாப்'பின் பழக்கம் இருவருக்கும் ஏற்பட்டது. அவர்களின் தந்தை பிர்'ரின் நிர்வாகப் பிரிவில் பிரனாப் புதியதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அழகு, அறிவு, தொழிலாளர் மேல் பரிவு என அவனிடம் இருந்த அனைத்து அம்சங்களும் இரு பெண்களையும் அவன் மேல் பித்துப் பிடித்து அலையச் செய்தன. முதலாவதாக அலோகாவிற்கும் பிரனாப்பிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் தன் உறவினர் திருமணத்திற்காக அலோகா சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. இடைவெளி இருந்தால் காதல் இன்னும் அதிகமாகும் என்ற நம்பிக்கையில் அலோகா காதலுடன் வெளியூர் சென்றாள். அந்த இடைவெளி காலத்தில் வீட்டிற்கு அடிக்கடி வந்த பிரனாப்பிற்கும் சுஜாதாவிற்கும் காதல் மலர்ந்தது.

அலோகாவைக் காட்டிலும் அழகும் கவர்ச்சியும் குன்றியிருந்த சுஜாதாவின் மனமும், அவள் தேயிலையின் மீது காட்டிய ஆர்வமும், தொழிளாலர்கள் மீது காட்டிய அக்கறையும் பிரனாப்பை அவள் மீது மையலுற வைத்தது. சுஜாதாவும் பிரனாப்பின் மீது காதலுற்றாள். இவர்களின் இந்தக் காதல் ரகசியத்தை அறிந்த பாட்டி நினா, தனது மகன் பிர்ரிடம் விடயத்தைக் கூறி சுஜாதாவைக் கனடாவிற்கு அனுப்பி வைத்தாள். அதே சமயம் பிரனாப் தொழிலாளர்களின் கிளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது பிர்ருக்குத் தெரிய வந்தது.  தனது மகள்களின் வாழ்வை அழித்ததோடல்லாமல் தனது தொழிலுக்கும் பங்கம் விளைவிக்கும் பிரனாப்பைத் தீர்த்துக்கட்ட பிர் முடிவெடுத்தார். பிர்ரின் திட்டத்தை அறிந்த நினா, அலோகாவிடம் விடயத்தைக் கூறி பிரனாப்பைக் காப்பாற்றும்படி பணிந்தாள். தனது காதலனைக் காப்பாற்றுவதற்காக, அலோகா இரவோடு இரவாக பிரனாப்பைக் கூட்டிக்கொண்டு டார்ஜெலிங்கை விட்டு, தன் குடும்பத்தைவிட்டு வெளியேறினாள்.

எப்படியோ நியூ யார்க் சென்று தங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இனித்த இல்லறம் காலப்போக்கில் கசக்க ஆரம்பித்தது. அலோகா நியூ யார்க் வாழ்க்கையில் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டாள். பிரனாப்பால் அவ்வாறு இருக்க முடியவில்லை. பழையக் காதலும், தேயிலையும் அவனை வாட்டி வதக்கின. 8 வருடங்களுக்குப் பிறகு அலோகாவிடமிருந்து விவாகரத்தும் பெற்றுக்கொண்டான். சுஜாதா கனடாவில் தனக்குப் பிடித்தமானத் தேயிலை விற்பனையைத் தொடக்கி வெற்றிநடைப் போட்டுவந்தாள். பழைய காதலன் நினைவும், அலோகா எல்லாவற்றையும் தன்னிடமிருந்துப் பறித்துக்கொண்ட துயமும் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கவே செய்தன.

8 வருடங்களுக்குப் பிறகு பாட்டி நினாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி மிகவும் வயதான பாட்டித் தொலைப்பேசியின் மூலமும் அலோகாவையும், சுஜாதாவையும் அழைத்திருந்தாள். பிரனாப்பும் பழையக் காதலைப் புதுப்பிக்கும் முயற்சியில் டார்ஜெலிங் செல்ல ஆயத்தமானான். டார்ஜெலிங்கில் என்ன நடந்தது?? :)

சுஜாதா, அலோகா இருவரும் பிரனாப்பை ஒதுங்கித் தள்ள, பிரனாப் மீண்டும் நியூ யார்க்கிற்கே பறந்துச் செல்கிறான். அலோகாவும் தனது நகர வாழ்க்கையைத் தொடரச் செல்கிறாள். ஆரம்பத்தில் அனைவராலும் புறக்கணிப்பட்ட சுஜாதா, தேயிலைத் தோட்ட நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுத் தனது குடும்பப் பாரம்பரியத்தைக் காக்கத் தயாராகிறாள். 

இயன்றவறையில் கதைச்சுருக்கத்தைப் பிசகில்லாமல் இவ்விடம் கொடுத்துள்ளேன். வாய்ப்பிருந்தால் நாவலை வாசித்துப் பாருங்கள். நியூ யார்க், கனடா மற்றும் டார்ஜெலிங் வீதிகளில் நீங்களும் வலம் வருவீர்கள்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இரகசியக் காதலி (Mistress) ‍‍-அனிதா நாயர்




தென்னிந்தியாவைச் சுற்றி இக்கதைப் பின்னப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவையும் அதன் பிரசித்திப்பெற்ற கதக்களி நடனத்தையும் மையமாக வைத்து எழுத்தாளர் மிக அழகாகக் இக்கதையைக் கூறியுள்ளார். கலைக்கும் காதலுக்கும் ஏதோவொரு பந்தம் இருக்கவே செய்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நாவலில் ஒரு சில மலையாளச் சொல்லாடல்களும் இருக்கவே செய்கின்றன. வாசகர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் அவைக்குறிய அர்த்தங்களும் குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

நடனக்கலை என்பது நவரசத்தையும் தன்னகத்தே கொண்டது; வாழ்க்கையைப் போல. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி என ஒன்பது அம்சங்களையும் பிரதிபலிப்பதுதான் மனித வாழ்க்கை. இதிலிருந்து எவரும் விடுபடுவதில்லை. கதையில் முக்கியக் கதாப்பாத்திரமாக வரும் கோமன், சேது, ராதா, கிறிஸ், சியாம்,  என அனைவருமே வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தவர்கள்தான்.

சேது
சிறு வயதில் கொலொம்போ ஓடிச்செல்கிறான். அங்குப் படித்து வேலை செய்து ஒரு சிறு கைகலப்பில் ஈடுப்பட்டு கடலில் குதிக்கிறான். கடலில் மிதந்து வந்தவனை மருத்துவர் சாமுவல் காப்பாற்றி அரவணைக்கிறார். சேது அரைமயக்கத்தில் தனது பெயரை 'சேத்' எனச் சொல்ல, அவனைக் கிறிஸ்துவன் என நினைத்து அவனுக்கும் புனித நூலையும் கொடுத்துப் படிக்க ஊக்குவிக்குறார். புதிய இடத்தில் புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சேது முஸ்லிம் பெண்ணான சாதியாவுடன் காதல் வயப்பட்டு அவளை மணந்துக்கொள்கிறான். இதனால் மருத்துவரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்கிறான். மதங்களிடையே இருக்கும் வேறுபாடு இருவர் மனதிலும் நுழைய, அவர்களின் இல்லற வாழ்க்கைக் கசக்க ஆரம்பித்தது. குழந்தை (கோமன்) பிறந்த பிறகு அவர்களின் விரிசலும் விரிந்தது. ஒரு சமயம் சாதியா மனம் வெறுப்புற்று கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள். சிறிது காலம் துன்பத்தில் உழன்ற சேது பின்னர் தொழிலில் ஈடுபட்டு தன்னை உயர்த்திக்கொள்ள வழி காண்கிறான். நன்றாகப் பணம் சேர்த்த பிறகு தன் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று தொழில் தொடங்கி வேறு திருமணமும் செய்துக்கொள்கிறான். தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த போதும் அவன் சாதியா மூலம் பிறந்த கோமனை அனாதையாக விடவில்லை. அவனுக்கும் தனது வீட்டில் இடம் கொடுத்து ஒற்றுமையாக தனது பிள்ளைகள் மூவரையும் வளர்த்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்துக்கொடுக்கிறான்.  

ராதா
கோமனின் தம்பி மகள். அனைத்துச் சொத்துகளுக்கும் ஒரே வாரிசு. படித்தவள்; கலையார்வம் மிக்கவள்; எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவள்; இவள்தான் இரகசியக் காதலி. படித்து முடித்து ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் போது, தன்னைவிட அதிக வயது மூத்த அதிகாரியின் காதல் வலையில் விழுந்து, அவனது ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்தவள். அவன் மூலம் கருத்தரித்து அதனை தைரியமாகக் கலைக்கவும் செய்கிறாள். இதனை வெளியார் மூலம் கேள்விப்பட்ட ராதாவின் பெற்றோர், உறவுக்காரனான சியாமிற்கு ராதாவைத் திருமணம் செய்து வைக்கின்றனர். காதல் நினைவுகளிலிருந்து விடுபட நினைத்த ராதாவும் அதனை ஒரு மாற்று மருந்தாக நினைத்துத் திருமணம் புரிகிறாள். முதல் இரவன்றே தனது கனவனிடம் தான் 'கன்னி' அல்ல என்றும் ஏற்கனவே வேறொருவனுடன் உறவுக்கொண்டவள் என்பதையும் வெளிப்படையாகக் கூறுகிறாள். ராதா தனது மனைவி பாத்திரத்தை நல்லபடியாகவே நடித்தாள். சியாமிற்கு சமைத்துப் போட்டாள்; அவனுடன் வெளியில் சென்றாள்; சம்பிரதாய இரவுகளில் சரசமாடினாள். ஆனால், அவளால் அவனைக் காதலிக்க முடியவில்லை. அவள் எவ்வளவோ முயன்றாள். அவர்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகள் முட்களாய் அவள் இதயத்தைத் தைத்துக்கொண்டே இருந்தன. இருந்தும், அவள் தன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவே செய்தாள். 

கிறிஸ்'சின் வருகை அவள் வாழ்க்கையில் புயலை உருவாக்கியது. கண்டதும் அவர்கள் இருவருக்குள்ளும் பலவகை இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தன. அவள் தன்னையிழந்தாள். கிடைக்கும் தருணங்களில் அவனுடன் காதல் செய்தாள். அவளைக் குற்ற உணர்வுத் தீண்டவில்லை. மாறாக, அவள் எல்லையில்லா மகிழ்ச்சியிலும் கற்பனையிலும் திளைத்தாள். அவளுக்கு அது பிடித்திருந்தது; அவளுக்கு அது தேவையாயிருந்தது; அது அவளை மீண்டும் உயிர்ப்பித்திருந்தது. இருந்தும் கிறிஸ்'வுடன் செல்ல அவள் தயங்கினாள். இந்த உறவு எதுவரை நீளும் என சந்தேகித்தாள். முதல் முறையாக தனது கணவனுக்கு இழைத்த துரோகத்தை நினைத்துக் கூனி குறுகிறாள். அவள் வயிற்றில் கிறிஸ்'சின் குழந்தை. ஆனால், அதனை அவள் அவனிடம் சொல்லவே இல்லை. இரு ஆண்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் தன் வாழ்க்கையை நினைத்துப் புலம்புகிறாள். பின்னர் இருவரையுமே தன் வாழ்க்கையிலிருந்து விலக்குகிறாள். அவளுக்குத் துணை அவள் வயிற்றிலேயே வளர்கிறது.

சியாம்
ராதாவை மணந்துக்கொள்ளத் தன்னை அவளது பெற்றோர் அணுகிய போதே ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துக்கொள்கிறான். சிறு வயதிலேயே தந்தையை இழந்து ஏழ்மையில் வாடிய சியாமிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. மற்றொன்று, அவன் நீண்டகாலமாக ராதாவை ஒரு தலையாக நேசித்து வருகிறான். எனவே, ராதாவைத் திருமணம் செய்கிறான். ராதா தனது ரகசியத்தை முதலிரவன்று சொன்ன போது அவன் அதிர்ச்சியடையவில்லை. மாறாக அதனை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். ராதாவின் மனதை தன் வசம் இழுக்க பெரும் பாடுபடுகிறான். நிறைய சம்பாத்தித்து அவளுக்கு நகைகளும் பரிசுப்பொருட்களும் வாங்கிக் குவிக்கிறான். அவள் தனக்குரியவள் என்பதில் தீர்மானமாக இருக்கிறான். அவளது எல்லா செயல்களையும் கூர்ந்து கவனித்து அவளை இளவரசி போல் தாங்குகிறான். ஆனால், அவளது அன்பு மட்டும் அவனுக்குக் கிட்டவே இல்லை. ராதா சொடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல் அவனுடன் வாழ்ந்தாள். சியாமிற்கு எல்லாமும் தெரிந்திருந்தது; ராதாவின் இரகசியக் காதல் உட்பட. இருப்பினும் சியாமால் ராதாவை வெறுக்க முடியவில்லை. என்றாவது ஒருநாள் தன் காதலைப் புரிந்துக்கொண்டு ராதா தன்னைக் காதலிப்பாள் என சியாம் காத்திருக்கிறான். கிறிஸ் ஊரை விட்டுச் சென்றதும், அந்தக் குழந்தையைத் தன் குழந்தையாக வளர்க்கவும் தயார் என்ற மனநிலையுடன் தொடர்ந்து ராதாவைக் காதலிக்கிறான்.

கோமன்
இந்நாவலின் கதாநாயகன். கதக்களி ஆட்டக்காரன்; ஆசான்; சேது மற்றும் சாதியாவின் காதல் சின்னம்; ராதாவின் பெரியப்பா; கிறிஸ்'சின் தாயார் அஞ்சலேயாவின் காதலன்; இப்படி பல கதாப்பாத்திரங்களில் வாழும் 'வேசக்காரன்'. இதற்குமேல், நீங்களே வாசித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்....

புதன், 16 செப்டம்பர், 2015

கடல் ராணி ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-சாண்டில்யன்




நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாண்டில்யனின் எழுத்துக்களைப் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. பல வரலாற்றுக் கதைமாந்தர்களையும் சில கற்பனைப் பாத்திரங்களையும் கொண்டு ஆசிரியர் மிக அழகாக இப்புதினத்தைத் தீட்டியுள்ளார். இதனைப் படிப்பதன் மூலம் அன்றைய சரித்திர நிகழ்வுகளை நம் மனக்கண்ணில் கண்டு அதனில் நாமும் ஒரு பாத்திரமாகக் பங்குக்கொள்ள முடிகிறது. 

இக்கதையில் வரும் கடல் ராணியான ரத்னா, அனந், சாரு ஆகிய மூவரும் கற்பனைப் பாத்திரங்கள் என ஆசிரியர் முன்னுரையிலேயே தெளிவுப்படுத்திவிட்டார். {Long John Silver}  ஒற்றைக்கால் சில்வர், காப்டன் மாக்ரே, இங்லண்ட், டெய்லர் என ஏனையோர் அனைவரும் சரித்திரத்தில் பங்குப்பெற்றவர்கள். அதற்கான ஆதாரக் குறிப்புகளையும் நாவலாசிரியர் குறிக்கத் தவறவில்லை.

கற்பனைப் பாத்திரமான கடல் ராணி சிந்து துர்க்கத்தின் கடற்கொள்ளையர்களின் தலைவியாகவும், கோட்டைத் தளபதியான சங்கர் பந்தின் மகளாகவும் புனையப்பட்டுள்ளாள். அவள் பேரழகு வாய்ந்தவளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

சிந்து துர்க்கத்தில் கதை தொடங்கி இறுதியில் பூர்ணகட்டில் முடிகிறது (சிந்து துர்க்கமும் பூர்ணகட்டும் அரபிக் கடலோரும் அமைந்துள்ள தீவுகள்). அரபிக்கடலில்  மேற்கத்திய கடற்கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கவும், ஆங்கிலேயர்களின் சக்தியை ஒடுக்கவும் சபதமேற்று அனந் சிந்து துர்க்கம் வருகிறான். பிரிட்டிஷ் அதிகாரிகளான காப்டன் ஸ்டாண்டன் மற்றும் லெப்டினண்ட் ஷ்மித்திடமிருந்து கடல் ராணியைக் காப்பாற்றி அவளது ஆதரவையும் நம்பிக்கையையும் பெருகிறான். கடலில் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்க கடல் ராணியின் படையும் பலமும் அனந்துக்குத் தேவையானதாக இருக்கிறது. இருவரும்  பார்த்த முதல் நாளே காதல் வயப்படுகின்றனர். 

அதே வேளையில் மகாராஷ்டிரத்தில் பலம் பொருந்தியக் கொள்ளைக்காரனான கனோஜி ஆங்கரேயின் மகன் துலாஜி ஆங்கரே  380 பீரங்கிகளைக்கொண்ட காஸண்ட்ரா கப்பலில் கூனியாக மாறு வேடமிட்டு மாலுமியாக தனது ஆட்களுடன் சேர்ந்து அவர்களது பலம்/பலவீனங்களைக் கண்டறிகிறான். உற்ற நண்பர்களான துலாஜியும் அனந்தும் வேளை வருகையில் ஒன்றிணைகின்றனர். மாக்ரேயைப் பிடிப்பதற்குச் சில்வர், இங்லண்ட் மற்றும் டெய்லருக்கு உதவுவதாக உடன்படுகின்றனர். அதே வேளை, காஸண்டாரைப் பெற்றுத் தருவதாக மாக்ரேயிடம் உறுதியளிக்கின்றனர். இப்படியாக இவர்கள் போடும் நாடகங்கள், இராஜதந்திரங்கள் எண்ணிலடங்கா.


இவர்களுடன் பேஷ்வா பாஜிராவின் மருமகளாகப் புனையப்பட்ட சாருவும் சேர்ந்துக்கொள்கிறாள். உளவாளியாக உலா வரும் சாருவும் அனந்தின் மேல் மையலுறுகிறாள். இவ்விடம் இரு பெண்கள் ஒரே சமயத்தில் அனந்தின் மேல் காதல் கொள்வதும், ஒரே சமயத்தில் கட்டிப்புரள்வதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்த பொழுதும் கடற்கொள்ளையர்களின் வாழ்வில் அது மிகச் சாதாரணமாகக் கருதப்படுகிறது. 

இப்படியாக பிரிட்டிஷ் அரசுக்கும், மேற்கத்திய கடற்கொள்ளையர்களும் உதவுவதாக் கூறி முக்கோணப் போரினை உருவாக்குகிறார்கள். கடற்கொள்ளையர்களான சில்வர், டெய்லர், இங்லண்ட் ஒரு பக்கம், பிரிட்டிஷ் கடற்படைத் தளபதியான மாக்ரே ஒரு பக்கம், பேஷ்வா மற்றும் கனோஜி ஆங்கரேயின் பிரதிநிதிகளாக அனந், சாரு, கடல் ராணி, துலாஜி இன்னொரு பக்கம். இதில் கடல்ராணிக்கு உதவுவதற்கும், காஸண்ட்ராவை அடைவதற்கும் அவா கொண்டு பிரெஞ்சு கடற்கொள்ளையனான லா பூஷே இவர்களுடன் இணைந்துக்கொள்கிறான்.

நாவல் முழுக்க இந்த வரலாற்றுபூர்வமிக்க போரை நடத்துவதற்கு அனந், துலாஜி, கடல் ராணி ஆகியோர் எப்படி திட்டம் தீட்டி அதற்குச் செயல்வடிவம் கொடுத்தனர் என நாவலாசிரியர்  கற்பனையில் திளைக்கிறார். இந்தப் போரில் காஸண்ட்ரா பெரிதும் சேதமடைந்து கடல் ராணியின் தரப்பிற்கு வெற்றியினைத் தேடித் தந்தது. 

பல வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் நாவலில் ஆங்காங்கே நயமாகச் சொல்லப்பட்டுள்ளன. வழக்கம் போல சாண்டில்யன் பெண்ணின் அவயங்களை அளவுக்கதிகமாகவே வர்ணித்து எழுதியுள்ளார். 1981 ஆண்டு (நான் பிறப்பதற்கு முன்பு) எழுதப்பட்ட இந்நாவலில் ஆசிரியர் எழுதியுள்ள மொழி தொடர்பான ஒரு விடயம் மனதில் மிகவும் பதிந்துப் போயிற்று.

"சுயமொழி பக்தியால் தேசபக்தியும் அதிகமாகிறது. அந்த அறிவு நமது நாட்டில் சிறிதும் இல்லையே. ஒன்று படாடோபத்துக்காகச் சுயமொழி வெறி, அல்லது சுயமொழி இழிவு, இவற்றைத் தவிர இங்கு வேறென்ன இருக்கிறது? அப்படிச் சுயமொழி பக்தியும் அறிவில் ஆசையும் இல்லாத நாட்டில் வளர்ச்சி ஏது வீரம் ஏது? நாட்டுப்பற்றுதான் ஏது?" -பக்கம் 51

இந்த வாக்கியங்களையும் மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள். அதன் உண்மை அர்த்தம் உங்களுக்கு நிச்சயம் விளங்கும். இது போல இன்னும் சில சிந்தினைக்கு உட்பட்ட விடயங்களை ஆசிரியர் ஆங்காங்கே அள்ளித் தெளித்துள்ளார். வாய்ப்புக் கிடைப்பின் நாவலை வாசித்து இன்புறுங்கள். நன்றி.

வெள்ளி, 12 ஜூன், 2015

தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)



இயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாமெல்லாம் சிறு வயதினில் தெனாலிராமனின் கதைகளைக் கேட்டதுண்டு, படித்ததுண்டு. சில வருடங்களுக்கு முன்னால் வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் ‘தெனாலிராமன்’ என்ற திரைப்படமும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் 1994 ஆண்டு வெளியீடு கண்ட இந்த நகைச்சுவை நாடக புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு மீண்டும் எனக்குக்கிட்டியுள்ளது.

இடம், பாத்திரம், சூழல் என அனைத்து நாடக அம்சத்தையும் கொண்டு இந்நூல் முறையே எழுதப்பட்டுள்ளது. கதைகள் நிகழ்வினை நம் கண் முன்னே கொண்டு வருவதில் வெற்றிப்பெற்றுள்ளன. மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமயோசித்த புத்தி, நுண்ணறிவு, பேச்சுத்திறன், நகைச்சுவை இவையனைத்தும் ஒருங்கிணைத்து இந்நூலின் வழி நம்மிடம் சேர்ப்பதில் எழுத்தாளர் வெற்றிப்பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். நாடகமும் சுவை குன்றாமல், சலிப்பினை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பாக நடந்தேறுகிறது.

இருப்பினும், நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் பேச்சு வழக்கு மொழி நாடகம் நடந்த சூழலைப் பிரதிபலிப்பதாக இல்லை. அரசரும் குடிமக்களின் வழக்கில் பேசுவது சற்று நெருடலாக, நாடகத்திற்குப் பொருந்தாதவாறு இருக்கிறது. நாடகாசிரியர் நல்ல தமிழிலேயே இதனை எழுதியிருக்கலாம். சில இடங்களில் தூயத்தமிழிலும் பல இடங்களில் பேச்சு வழக்கிலும் மாறி மாறி கதாப்பாத்திரங்கள் பேசுவது படிப்பதற்கு நன்றாக இல்லை. இதை நாடக வடிவில் அமைத்தாலும் பொருந்தாததாகவே இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.


மற்றபடி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி படிக்கக்கூடிய நூலாகவே இந்நூல் படைப்பட்டுள்ளது. நூலில் காணப்படும் ஓவியங்கள் கண்டிப்பாக சிறுவர் மனதைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை. நீங்களும் படித்து மகிழுங்கள்!

சனி, 6 ஜூன், 2015

பட்டுமாமி-கிட்டுமாமா (சூடாமணி சடகோபன்)


’நகைச்சுவை சிறுகதைகள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நூலில் நகைச்சுவையைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. இதனைப் படித்து முடித்த பிறகும் இவை சிறுகதைகளா அல்லது நாவலா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தப்பாடில்லை. இடையிடையே நாடக பாணியும் கையாளப்பட்டிருக்கிறது. ஆரம்ப அத்தியாங்களில் இவை பல்வேறு சூழலில் இயங்கும் கதைகளாகவும், பின்னர் பட்டுமாமியின் மகள் மற்றும் மருமகனைச் சுற்றியும் பின்னப்பட்டுள்ளது. கண்டிப்பாக இவர் புதிய எழுத்தாளராகத்தான் இருக்க வேண்டும். எழுத்து நடையில் சற்று தள்ளாட்டம் தெரிகிறது. கதையைக் கோர்வையாக கொண்டுசெல்ல மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.


மற்றபடி, பிராமணர்களின் பேச்சு நடையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் எதையோ சொல்ல வருகிறார், பலவற்றை இடையிடையே புகுத்திச் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லாமல் விட்டுவிட்டார். பொழுதுபோக்கிற்காக வேண்டுமானால் இதனைப் படிக்கலாம். சிரித்துப்படிக்கும்படியாக எதுவும் இல்லை. கதையில் கடைசி நான்கு வரிகளை நீக்கிவிட்டால், குழந்தைகள் படிக்க ஏதுவான புத்தகமாக மாறிவிடும். 

வியாழன், 28 நவம்பர், 2013

கி.ராஜநாராயணன் கதைகள்


கேள்விப்படாத எழுத்தாளராக இருந்தும் நிறைய எழுதியிருக்கிறாரே என்ற எண்ணத்தில்தான் மொத்தம் 81 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைப் புத்தகத்தைச் சென்னையில் வாங்கினேன். நாவல்களைப் படித்து முடிப்பதில் இருக்கும் ஆர்வமும் சுறுசுறுப்பும் சிறுகதைகள் வாசிப்பதில் எனக்கு இல்லாமல் போனது வியப்புதான். எனவே சில நாட்களுக்குப் பிறகே தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்து முடிக்க முடிந்தது.

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த எழுத்தாளரின் அனைத்துச் சிறுகதைகளும் கிராமங்களையும், கரிசல்காடுகளையுமே தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் முக்கியக் கதாப்பாத்திரங்கள் குறிப்பிட்ட சாதியினரையும் (நாயக்கர்), அவர்களின் பேச்சு வழக்குமுறைகளையும் மையமாகக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தற்போது வழக்கில் இல்லாத, சில புதுமையான சொல் வழக்கங்களையும் சொற்களையும் நம்மால் அறிந்துக்கொள்ள முடிகிறது. உதாரணமாக ‘கோட்டி’ என்ற சொல்லை என் வரையில் நான் கேள்விப்பட்டதில்லை. பைத்தியம் என்பதைத் தான் கோட்டி என்று அழைக்கின்றனர் என்பதனை இக்கதைகளின் மூலம் அறிந்துக் கொண்டேன். மேலும், ’சம்சாரிகள்’ என்றால் விவசாயிகள் என்று பொருள்படும் என்பதனையும் அறிய நேர்ந்தது. அதனைப் போன்று இன்னும் எத்தனையோ சொற்கள் இச்சிறுகதைகளில் கையாளப்பட்டிருக்கின்றன.

கதைகள் சம்சாரிகளின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகின்றதே தவிர, ஒருசில கதைகளில் எந்தச் சமுதாயக் கருத்தினையும் காண முடியவில்லை. சில கதைகள் ஏன், எதற்காக எழுத்தப்பட்டன என்றே விளங்கவில்லை. ஏதோ எழுதியே ஆக வேண்டும் என்ற மயக்கத்தில் கிறுக்கி வைத்தவைகளாகவே அவை விளங்குகின்றன. இருந்த போதிலும், சில கதைகளில் கதைக்களம் செம்மையாக அமைக்கப்பெற்று மக்களுக்குப் படிப்பினையும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. 81 கதைகள் கொண்டிருந்த போதிலும் இத்தொகுப்பிலுள்ள ஒன்றிரண்டு கதைகளே மனதில் நிலைத்து நிற்கின்றன. மற்றவை படித்தவுடன் மறந்தும், மறைந்தும் விடுகின்றன.


மிகவும் பொறுமை உள்ளவர்கள் ஆர அமர ஒவ்வொன்றாக இக்கதைகளைப் படிக்கலாம். சுவாரஸ்யம் குறைவாகவே இருப்பதனாலும், கதைகள் கடந்த நூற்றாண்டு கரிசல்காட்டு நாயக்கமார்களைச் சுற்றி வருவதாலும், இன்றைய இளைய தலைமுறை இதனை விரும்பி வாசிக்குமா என்பது கேள்விக்குறியே. 

புதன், 5 டிசம்பர், 2012

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை



ஜென்னி மார்க்ஸ் எழுதிய 'எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை' எனும் நூல் அவரின்  போராட்டகரமான வாழ்வியலை அறிந்துக்கொள்ள உதவுகிறது. போராட்டவாதியின் மனைவியாக இருப்பதில் ஏற்படும் சிக்கல், எதிர்க்கொள்ள வேண்டிய பிரச்சனைகள், தாங்கிக்கொள்ள வேண்டிய சிரமங்கள் அனைத்தையும் இந்நூலின் வழி நம்மால் அறியமுடிகிறது. ஜென்னி தமது குடும்ப நண்பர்களுக்கு எழுதிய சில கடிதங்களும் இந்நூலில் பகிரப்பட்டுள்ளன. 

ஜென்னி, தனது கணவனின் செய்கைக்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாள். ஓரிடத்தில் அமைதியாக குடியமர முடியாமல் இங்கும் அங்குமாக குழந்தைகளுடன் அலைந்துத் திரிந்தாள். போதிய பணமின்றி, உண்ண உணவின்றி, உடுத்த மாற்றுடை இன்றி, படுக்க பாயின்றி, வாழ குடிலின்றி அவள் பட்ட துயரங்கள் எண்ணிடலங்கா. பத்து மாதம் சுமந்துப் பெற்ற பிள்ளைகளையும் ஏழ்மையால் பறிகொடுத்தது கொடுமையிலும் கொடுமை. 

ஜென்னி எனும் இலட்சியப் பெண் எந்த சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை. கணவனின் நடவடிக்கைகளுக்கு அவள் எப்போதும் தடையாய் இருந்தது இல்லை. எல்லா காலக்கட்டங்களிலும் சூழ்நிலையிலும் அவள் கார்ல் மார்க்சுக்கு உறுதுணையாக இருந்தாள். எந்நிலையிலும் அவள் அவனைப் பிரிந்துச் செல்லவில்லை. அவனின் படைப்புகளைப் படித்துப் பார்த்துத் திருத்தினாள், பிரதி எடுத்தாள், பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தாள். கார்ல் மார்க்ஸ் என்கிற மனிதனின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் அவள் ஏணியாய் இருந்தாள்.

வாழ்வில் அவள் பட்ட துயரங்களை எந்தப் பெண்ணும் எண்ணிப்பார்க்கக் கூட நடுங்குவாள். ஜென்னியின் ஒருநாள் குடும்ப வாழ்க்கை என்பதே மற்றவரைக் கண் கலங்கச் செய்யும். அவள் வாழ்நாள் முழுக்கப் பட்ட துயரங்களை என்னவென்று சொல்வது?

ஜென்னி மார்க்ஸ் ஓர் இலட்சியப் பெண்! ஒவ்வொரு ஆணின் கனவு தேவதை! மாதவியிடம் சென்று வந்த கோவலனுக்காக மதுரையை எரித்த கண்ணகி, இராமனின் சந்தேகத்தைத் தீர்க்க தீயில் இறங்கிய சீதை என்று பெண்ணடிமைக்குத் துவக்கமாய் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தையும், இராமாயணத்தையும் விடுத்து, இது போன்ற உண்மையான இலட்சிய, வீரப்பெண்மணிகளைப் பற்றி படித்து நமது பெண்கள் தெளிவுப் பெற்றால் எவ்வளவு அருமையாய் இருக்கும்!

ஜென்னியின் வாழ்க்கை வரலாறு நமது பெண்களும் ஆண்களும் படித்து அறிய வேண்டிய நூல்! நம் சமுதாயம் விழுப்புணர்வு பெற இன்னும் பல ஜென்னி மார்க்சுகள் தேவைப்படுகிறார்கள்!

திங்கள், 14 நவம்பர், 2011

பெண் ஏன் அடிமையானாள்? -தந்தை பெரியார்




“பெரியாரைப் படியுங்கள்,” என பல முறை நண்பர் அருண்ஷோரி வற்புறுத்திக் கொண்டிருந்தார். தமிழகம் சென்றிருந்த வேளையில் எனக்கு விரும்பம் இல்லாத போதிலும், “நீங்கள் முதலில் படித்துப் பாருங்கள்,” என வலுக்காட்டாயமாக இந்த நூலை வாங்க வைத்துவிட்டார். வாங்கி பலநாட்கள் அப்படியே கிடந்த வேளையிலும், தொடர்புக் கொள்ளும் போதெல்லாம், “படித்துவிட்டீர்களா? படித்துவிட்டீர்களா?” என அவர் கேட்க, படித்துத்தான் பார்ப்போமே என புத்தகத்தில் மூழ்கினேன்.

முன்னுரை
இந்நூல் பெண்கள் எந்தெந்தக் காரணங்களால் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதனைச் சுட்டிக்காட்டி, அதனிலிருந்து விடுபட அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை முக்கியக் கருவாகக் கொண்டு மொத்தம் 10 அத்தியாயங்களில் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1934-இல் வெளிவந்துள்ளது.

1. கற்பு
கற்பு எனப்படுவது பெண்களுக்கே உரித்தானது போன்ற தோன்றத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துவிட்டனர். இதனால், தன் விருப்பங்களுக்குச் சமாதிக் கட்டிவிட்டு ‘கற்புடையவள்’ என்ற பேர் வாங்குவதற்காக ஒரு பெண் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

2.வள்ளுவரும் கற்பும்
‘பெண்கள் சொல்லைக் கேட்கக்கூடாது’, ‘அறியாமை என்பது பெண்களின் ஆபரணம்’, ‘பெண்கள் சுய விருப்பப்படி நடக்கக் கூடாது’ என பொருள் பதிக்கும் குறள்கள் பெண்களைத் தாழ்மைப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவற்றைப் பொருட்படுத்தாது, இரு பாலருக்கும் சமயுரிமை, சம வலிமை இருப்பதை பெண்கள் உணர வேண்டும் என பெரியார் சுட்டுகின்றார்.

3. காதல்
காதல் ஒருவரிடம் ஒரு முறைதான் வரும் என்பதை பெரியார் வன்மையாக மறுக்கிறார். அது எப்போது வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் வரலாம். ஒருவரையே காதலித்து, அவரையே மணந்து, காதலின் காரணமாக (கட்டாயத்தின் பேரில்) அவருடனேயே நடத்தப்படும் வாழ்க்கை ஒரு நடிப்பு போல் இருக்கிறது. காதல் என்பது தனது சுய நன்மையை, மனத்திருப்தியை வேண்டித்தான் ஏற்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை. தமக்குத் தேவைப்படும் மனத்திருப்தி கிடைக்காத பட்சத்தில் ஆண் பெண் இருபாலரின் காதல் மாறக்கூடியதாய் இருக்கிறது. இந்த மாற்றத்தைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, ‘காதல்’ ‘புனிதம்’ என்ற பேரில் தங்களைத் தாங்களே இம்சித்துக் கொள்வது அழகல்ல என பெரியார் கூறுகிறார்.

4. கல்யாண விடுதலை
இந்நூல் எழுத்தப்பட்ட காலத்தில் கல்யாண விடுதலை என்பது கடினமான ஒன்றாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களுக்கு ஒத்துவராத திருமண பந்தத்திலிருந்து தங்களைத் தாரளமாக விடுவித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தெய்வீக பந்தம் எனும் பெயரில் பிடிக்காத கல்யாணப் பந்தத்தில் அகப்பட்டால் அதிலிருந்து பெண்கள் துணிந்து விடுபட முயல வேண்டும் என பெரியார் வேண்டுகிறார்.

5. மறுமணம் தவறல்ல
‘மணம்’ என்பது மனமக்கள் தங்கள் வாழ்க்கை வசதிக்காகச் செய்துக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமாக பெரியார் கருதுகிறார். எனவே, அன்பும் ஆசையும் இல்லாத, அல்லது நமது விருப்பு வெறுப்புகளை அறிந்து நடந்துக்கொள்ள இயலாத துணை கிடைக்குமாயின், தாரளமாக நாம் மறுமணம் செய்துக்கொள்ளலாம். பெண்களுக்கும் இது பொருந்தும் என பெரியார் சொல்கிறார்.

6. விபச்சாரம்
விபச்சாரம் என்பது பெரும்பாலும் பெண்களின் ஒழுக்கக்கேட்டைக் குறிக்கும் சொல்லாகவே இருந்து வருகிறது. ஆண்களுக்கும் இந்தச் சொல்லுக்கும் இதுவரையில் எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. உண்மையில், ஆண் இல்லாமல் பெண் விபச்சாரம் செய்ய இயலுமா? அப்படிச் செய்ய முடியாத சூழலில் ஆண்களுக்கும் இதில் சரி பாதி பங்கு உள்ளது தானே? அப்படியாயின்  அவர்களையும் விபச்சாரர்கள் என்று ஏன் அழைப்பதில்லை? எனவே விபச்சாரம் என்பது பெண்களை அடிமைகளாக வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் சொல் என பெரியார் விளக்குகிறார்.

7. விதவைகள் நிலைமை
பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் விதவைகள் மறுமணத்தை பெரியார் வலியுறுத்துகிறார். அன்றைய இந்தியச் சூழலைக் காணும் போது குழந்தைத் திருமணங்கள் பெருவாரியாக நடைப்பெற்று வந்தன. எனவே, இளம் விதவைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காமல் இருந்தது. மேலும் விதவைகள் பல வகையில் இம்சிக்கப்பட்டு வந்தனர். அவர்களது இல்லற வாழ்வு எனும் கனவு பலிக்காமலே செத்தது. அவளாக வேறொருவனை விரும்பினாலும் அவளுக்கு மறுமணம் செய்விக்க யாரும் முன் வராத காலம் அப்போது இருந்தது. அதனை உடைத்தெறிந்து பெண்கள் தைரியமாக இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என பெரியார் போராடுகிறார்.

8. சொத்துரிமை
பெண்களுக்குச் சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படாமல் இருப்பதனாலேயே அவர்களை ஆண்கள் எளிதில் அடிமைப்படுத்துகின்றனர். எனவே, பெண்கள் துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என பெரியார் தூண்டுகிறார்.

9. கர்ப்பத் தடை
கர்ப்பம் தரிப்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை தடை செய்து அவளை அடிமையாக்குகிறது. குழந்தைகள் இருப்பதால் அது ஆண்களையும் பல சமயங்களில் தயங்க வைக்கிறது. எனவே, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என பெரியார் சொல்வது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றால் இருக்கிறது. இந்த மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டதோ என்றும் யோசிக்க வைக்கிறது. குழந்தைகளால் பொருளாதாரச் சிக்கலோ அல்லது வேறு பிரச்சனைகளோ ஏற்படுமாயின் அதனைக் களைய முனைய வேண்டும். அதனை விடுத்து கர்ப்பத் தடையை ஆதரிப்பது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதற்குச் சமம் என்பது எமது தனிப்பட்டக் கருத்து.

10. பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை அழிய வேண்டும்’
பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் ஒரு போதும் உண்மையாகப் போராட முடியாது என பெரியார் கூறுகிறார். ‘ஆண்மை’ உலகில் உள்ள வரையில் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்கிறார். ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என பெரும்பாலான பெண்கள் எண்ணம் கொண்டிருக்கின்றனர். எனவே முதலில் ஆண்மை அழிய வேண்டும். அதற்கு முன்பு சொன்னது போல் பெண்கள் பிள்ளைப் பெறும் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் பெரியாரின் இந்தக் கூற்றையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முடிவுரை
பெண் ஏன் அடிமையாகிறாள்? அவள் அடிமைக் கூண்டிலிருந்து விடுதலைப் பெற என்ன செய்ய வேண்டும் என பெரியார் தமது கருத்துக்களை இந்த நூலில் பதிய வைத்திருக்கிறார். அவற்றில் சில கருத்துக்கள் நிஜ வாழ்விற்குப் பொருந்தாத ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக கடைசி இரண்டு அத்தியாயத்தில் கூறப்படும் கர்ப்பத் தடை மற்றும் பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும் ஆகிய இரண்டையும் நான் வன்மையாக மறுக்கிறேன். ஏனைய அத்தியாயங்களில் கூறப்படும் கருத்துக்களும் உதாரணங்களும் வரவேற்கக் கூடியவனவாகவே இருக்கின்றன. இதனைப் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் வாசித்தல் நலம்.

செவ்வாய், 8 நவம்பர், 2011

எரியும் பனிக்காடு (Red Tea)






எரியும் பனிக்காடு எனும் நாவலின் தலைப்பை பார்த்தவுடனேயே பனிக்காடு எப்படி எரியும்? என கீரா அண்ணாவைக் கேட்டேன். “படித்துப்பார். எப்படி எரிகிறது என்பது உனக்கே தெரியும்,” என்றார்.

முன்னுரை

பி.எச். டேனியல் எழுதிய இந்நூலை இரா. முருகவேள் அழகாகத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். 1925-ஆண்டு கதைத் தொடங்குகிறது. இதில் முக்கியக் கதாமாந்தர்களாக கருப்பன், வள்ளி, மேஸ்திரி சங்கரப்பாண்டியன், வொய்ட் ஆகியோரும் ஏகப்பட்ட துணை கதாமாந்தர்களும் வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தைச் சுற்றி இந்நாவல் நகர்கிறது. அங்கே இந்திய கூலிகள் தங்கள் வியர்வையையும் இரத்தையும் எப்படியெல்லாம் சிந்தி தோட்டத்து வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளனர் என்பதை இந்நாவல் சித்தரிக்கின்றது.

பஞ்சத்தாலும் ஏழ்மையாலும் பாதிப்புற்ற கருப்பனை, சங்கரபாண்டியன் சந்திக்கிறான். தோட்டத்தில் (எஸ்டேட்டில்) நல்ல வேலை இருப்பதாகவும், அங்கே வந்தால் கை நிறைய சம்பாதித்து வசதியாக வாழலாம் என ஆசைக்காட்டி கருப்பனையும் அவனது மனைவி வள்ளியையும் அழைத்துச் செல்கிறான். அவர்களுடன் இன்னும் ஏராளமான கூலிகள் பயணமாகிறார்கள். தோட்டத்தை அடைந்தவுடன் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அங்கே அவர்கள் ஆடு மாடுகள் போல நடத்தப்படுகின்றனர். அடிப்படைச் சுதந்திரம் கூட இல்லாமல் அடிமைகள் போல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மலேரியாவாலும் இன்னும் பல நோய்களாலும் பெரும்பான்மையான மக்கள் அவ்விடமே இறக்க நேரிட்டது. இவையனைத்தும் சகித்துக்கொண்டு எப்படியாவது பணம் சேர்த்து, கடனை அடைத்து ஊர் திரும்பிவிட வேண்டும் என கருப்பனும் வள்ளியும் போராடுகிறார்கள். இறுதியில் வள்ளியும் அவளது குழந்தையும் இறக்க நேரிடுகிறது. கருப்பன் தன்னந்தனியாக அதே தோட்டத்தில் தனது வாழ்க்கையைத் தொடர்கிறான்.



முதலாளித்துவம்

நாவல் முழுக்க முதலாளிமார்களின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. சங்கரபாண்டியனும் வெள்ளையனும் தங்களுக்குக் கீழுள்ள கூலிகளுக்கு உடல்நிலை சரியில்லாத போதும் வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மீறுபவர்களை அடித்துத் துன்புறுத்துகின்றனர். பலர் தோட்டத்திலேயே அடித்துக் கொல்லப்படுவதும் சகஜமாக இருக்கிறது.

இதில் வரும் வெள்ளை அதிகாரியான வொய்ட், தனக்குக் கீழுள்ள அதிகாரிகளை மிக மோசமாகத் திட்டுகிறார். தனக்குப் பிடிக்காதவர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்கவும் செய்கிறார். தன் முன்னே யாரும் செறுப்பு அணியக் கூடாது, தொப்பிப் போடக் கூடாது, குடைப் பிடிக்கக் கூடாது என ஏராளமான சட்டங்கள் வைத்திருக்கிறார்.

தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு நிறைய சலுகையும், பிடிக்காதவர்களுக்கு ஏராளமான தொல்லைகளையும் இந்த முதலாளிமார்கள் கொடுக்கின்றனர். வொய்ட் தனது கம்பெனிக்கு அதிக இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். அதன் பொருட்டு எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கூலிகளின் நலனுக்காக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கிறார்.

சாதி

தோட்டத்தில் கூலிகளாக வேலைக்குச் சேரும் மக்கள் பெரும்பான்மை கீழ்ச்சாதியினராகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்குச் சேரும் போதே, “எல்லாம் நம்ம சாதி மக்கள்தான்” என சங்கரபாண்டியன் சொல்கிறான். நாயக்கர், தேவரில் ஒரு சிலரே தோட்ட வேலைக்கு வருவதாக நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர கொச்சை வார்த்தைகளின் பயன்பாடு இவர்களிடையே சர்வ சாதரணமாக இருக்கிறது. இந்நாவலில் வரும் மக்கள் மாட்டுக்கறி உண்கின்றனர்.

பெண்ணடிமை

அழகானப் பெண்கள் தங்கள் கட்டிலில் புரள வேண்டும் என அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் எண்ணுகின்றனர். தனக்குக் கீழே வேலை செய்பவள் தனக்கு அடிமை என்றும் எப்போதும் தமது ஆசைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் மாத்யூஸ், வொய்ட் போன்றோர் எண்ணுகின்றனர். தங்களது தோட்டத்தில் வேலை செய்யும் பல பெண்களின் தொடையைக் கிள்ளியும், ஆங்காங்கே தடவியும் வொய்ட் விளையாடுகிறார். இதனை மற்ற பெண்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாத்யூஸ் வள்ளிக்கு பல தடவைகள் தொல்லைக் கொடுக்கிறான். அவள் அவன் ஆசைக்கு இணங்காத போது பல வழிகளில் துன்புறுத்துகிறான்.

பெண்களும் அதிகாரத்தில் உள்ளவர்களை அனிசரித்துப் போனால்தான் தாங்கள் நன்றாக இருக்க முடியும் என நினைக்கின்றனர். எனவே, முதலாளிமார்களின் பார்வை எப்போது தங்கள் மீது விழும் என ஏங்கும் பெண்களும் நாவலில் வருகின்றனர். சில ஆண்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் தங்கள் சொந்த மனைவி பிள்ளைகளையே கூட்டிக் கொடுக்கின்றனர். கதையில் வரும் சங்கரபாண்டியன் தன்னிடம் பணவசதி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரே குடும்பத்தைச் சார்ந்த அக்கா தங்கைகள் மூவரையும் மணந்துக் கொள்கிறான்.



பணத்தின் தேவை

இந்நாவல் முழுவதும் பணத்தின் தேவையை மக்களுக்கு நன்றாக உணர்த்துகிறது. பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே கருப்பனும்  வள்ளியும், ஏனையோரும் தோட்டத்திற்குச் செல்கின்றனர். அங்கே தாங்கள் பட்ட கடனன அடைப்பதற்கு குளிரிலும், காய்ச்சலிலும் வேலை செய்கின்றனர். எப்படியாவது பணம் சேர்த்து, கடனை அடைத்து, ஊர் திரும்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் தங்களுக்கு நேரும் பல்வகையான இன்னல்களையும் தாங்கிக் கொள்கின்றனர். பணத்திற்காக சில பெண்கள் முதலாளிமார்களின் ஆசைக்கு இணங்கவும் தயாராக இருக்கின்றனர். ஆண்கள் தங்கள் மனைவிகளை அனுப்பிவிட்டு கண்டும் காணாமல் இருக்கின்றனர். பணத்தைச் செலுத்த முடியாமல் தங்கள் சொந்த ஊர்களுக்குப் போக முடியாமல் பலர் புழுங்கிச் சாகின்றனர்.

ஒரு சிலர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்கின்றனர். கிருஸ்துமஸ் பண்டிகையின் போது வொய்ட்’டிற்கு ஏராளமான பணமும் பரிசுப் பொருட்களும் குவிகிறது. இவ்வாறு பணம் கொடுத்து முதலாளியின் மனதைக் குளிர வைத்தால் தாங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என  அவருக்கு கீழே உள்ளவர்கள் நினைக்கின்றனர்.



மனிதத்தன்மையற்ற சூழல்

கதையில் முதலாளிமார்கள் மனிதத்தன்மையற்றவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வள்ளி தவறேதும் செய்யாத போதும் அவள் மாத்யூஸ் ஆசைக்கு இணங்காத காரணத்தால் அவளைப் பிரம்பால் அடித்து, கூலி கொடுக்காமல் பல வகையில் துன்புறுத்துகின்றனர். கடுங்குளிர், மழையென்றும் பாராமல் கூலிகள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருந்த போதும் அவர்களைக் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்புகின்றனர். சிலர் பெற்றோர் தங்கள் குழந்தை இறந்த மறு நாளே துக்கத்தை நெஞ்சோடு சுமந்துக் கொண்டு வேலைக்குச் செல்வதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வொய்ட் கூலிகளை மிகவும் கேவலமான கண்ணோட்டத்தோடு பார்க்கிறார். தனக்குப் பிடிக்காதவர்களை ஈவிறக்கமின்றி அடித்துத் துறத்துகிறார். கொச்சை வார்த்தைகளால் திட்டுகிறார். அது தவிர, மாடுகளை விட கேவலமாக கூலிகளை நடத்துகிறார். கூலிகளுக்கு மிகவும் அசுத்தமான, வசதிகள் அற்ற அறைகளே வழங்கப்படுகின்றன. தவிர  இரண்டு மூன்று குடும்பங்கள் அந்தச் சின்ன அறையைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் குடிப்பதற்கோ, கழிப்பதற்கோ முறையான வசதிகள் செய்துக் கொடுக்கப்படவில்லை.

மலேரியா போன்ற நோயினால் மக்கள் மடிந்த போது அதனை எவரும் பெரிதுபடுத்தவில்லை. தோட்டத்தில் இதெல்லாம சாதாரணம் என்பது போல் இருந்துவிட்டனர். அந்த நோய்களைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, “பிளடி நான்சென்ஸ். கொஞ்சப் பிச்சைக்காரப் பயல்கள் செத்தா என்ன- அந்த நாயக்கள்தான் பன்னிமாதிரி பெத்து போடுகிறார்களே! நான் சொல்கிறேன் நமக்கு ஒருநாளும் கூலிகளுக்குப் பற்றாக்குறை வராது,” என வொய்ட் சொல்கிறார். மேலும், “நம்மைப் பொருத்தவரை மலேரியா ஒழிப்புக்கும் மருத்துவத்துக்கும் ஏராளமான தொகையைச் செலவழிப்பதை விட இந்த நாத்தம் பிடித்த பிச்சைக்காரப் பயல்கள் செத்துத் தொலைந்து போவதே நல்லது. கொஞ்சம் ஆட்கள் குறைந்துப் போவது இந்த நாட்டுக்கு மிகவும் நல்லது. பொருளாதார அடிப்படையில்,” என கூசாமல் சொல்கிறார். “மனிதாபிமானத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குத்தாரர்களுக்கு லாபமீட்டித் தருவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம். அதுவும் கொழுத்த இலாபம்,” எனவும் தனது கூற்றை நியாயப்படுத்துகிறார்.

மருத்துவ வசதியின்மை

மலையில் வேலை செய்யும் மக்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாதக் காரணத்தினாலேயே மரண எண்ணிக்கை அதிகப்படியாக இருக்கிறது. கம்பவுண்டர் வேலை செய்து வந்த குரூப் என்ற மனிதரையே அங்குள்ளவர்கள் ‘டாக்டர்’ என அழைத்து வந்தனர். முறையான மருத்துவ கல்வி இல்லாத காரணத்தினால் குரூப் தன்னிடம் இருக்கும் மருந்துகளைக் கொண்டு கூலிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தான். மருத்துவமனை ஆட்டுக் கொட்டகையை விட கேவலமாக இருந்தது. அவ்விடம் குரூப் மற்றும் ஒரு மருத்துவ கூலியாள் ஆகிய இருவர் மட்டுமே பணிப்புரிந்து வந்தனர். எனவே, அவ்விடம் அசுத்தமாகவும் போதிய வசதிகள் இன்றியும் நோயாளிகளுக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்தது.

தவிர குரூப் வேலை செய்ய தகுதியற்றவர்களுக்குக் கூட போலியான சான்றிதழ் கொடுத்து சங்கரபாண்டியனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறான். “குரூப் ஐயா மட்டும் இங்க இருந்தா நாம ஒன்னு கேட்டா மாட்டேனு சொல்லுவாரா? நாம ஒரு கூலிய ஆஸ்பத்திரியில சேத்திக்குங்கன்னு சொன்னா மறுக்க மாட்டாரு. வேண்டான்னு சொன்னா ஒரு வார்த்த மறுத்துப் பேசாம அந்தக் கூலிய தொரத்தியே விட்டுடுவாரு,” என சங்கரபாண்டியன் கூறுகிறான்.

“ஆஸ்பிட்டல்ல மருந்துன்னு ரொம்பெ கொஞ்சம் தான் இருக்கு. ஒரு கருவிகூட இல்ல. ரெண்டே ரெண்டு வார்டுதான் இருக்கு. ரெண்டிலும் கால் வைக்கவே முடியல. அப்படி நாறுது. தினமும் கூட்டறதுக்கு கூட யாரும் இல்ல. மெடிக்கல் கூலிதான் காவல்காரன். அவன் தான் சமையல்காரன். ஆனா இங்க சமைக்கறதேயில்ல. நோயாளிகளுக்கு அவுங்க வீட்டில இருந்துதான் சாப்பாடு வருதுன்னு நினைக்கிறேன், அவுங்க, வறுத்த நிலக்கடலை எல்லாம் கொண்டு வந்து சாப்பிடுறாங்க. இந்த மாதிரி இடத்துக்கு வந்துட்டு எப்படி நோயாளிங்க உயிரோட வெளியே போறாங்கன்னுதான் ஆச்சர்யமாயிருக்கு,” என புதியதாக வந்த மருத்துவர் ஆபிரஹாம் மருத்துவமனையில் நிலையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இயலாமை

இந்நாவலில் வரும் இந்திய வம்சாவளியினர் வெள்ளையர்களை எதிர்க்க முடியாமல் அவர்களுக்குப் பணிந்து அடங்கிப் போக வேண்டியதை நினைத்து பல இடங்களில் வருந்துகின்றனர். ஆட்சியில் வெள்ளையர்கள் இருப்பதால் அவர்களிடமிருந்து எங்குப் போனாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் கூலிகளையும் பிடித்து ஆட்டுகிறது. எனவே, எதிர்க்க, கேள்வி கேட்க துணிவின்றி அந்த மலையிலேயே வேலை செய்து உயிரை விட்டவர்கள் ஏராளம். தனது மனைவிக்கு மாத்யூஸ் பல வகைகளில் தொல்லைக் கொடுப்பது கருப்பனுக்கு தெரிய வந்தபோதும் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவனைச் சுற்றி இருப்போர் அவனது இயலாமையை எடுத்துக்கூறி சமாதானப்படுத்துகின்றனர்.

முடிவுரை

பிரிட்டனில் உள்ள தங்கள் நிர்வாகத்துக்காக அதிகப்படியான இலாபம் ஈட்டவே வெள்ளையர்கள் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களைக் குறி வைத்தனர். அதில் ஏராளமான கூலிகளைக் கொண்டு வந்து குவித்து அவர்களை வதைத்தனர். தோட்டத்தில் பயங்கரமான சீதோஷ்ண நிலையிலும், அட்டை கடிகளுக்கு மத்தியிலும் மற்றும் பல கொடிய நோய்களின் தாக்கத்திலும் கூலிகள் அவதிப்பட நேர்ந்தது. மலைக்கு வேலைக்கு வரும் பாதிப்பேர் அங்கேயே மரணத்தைத் தழுவுகின்றனர். ஒரு வருடத்தில் ஏராளமான பணம் சம்பாதித்து ஊருக்குத் திரும்பிவிடலாம் என்ற அவர்கள் கனவு, தோட்டத்தில் காலடி எடுத்து வைத்ததும் உடைந்துச் சுக்குநூறாகின்றது. இவ்வாறு இந்திய மக்களின் தியாகத்தின் உருவான தேயிலைத் தோட்டத்தின் உண்மை நிலவரம் பலருக்குத் தெரியாமலேயே இருக்குன்றது. ஒவ்வொரு தேயிலை புதருக்குள்ளும் ஓரிரு இந்தியர்களின் உயிர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்நாவலில் வழி கதாசிரியர் தெளிவாக விளக்குகிறார். இந்தியர்களின் உயிர்களைக் காவு வாங்கிய தேயிலைத் தோட்டம் என்பதாலேயே இதற்கு ‘சிகப்புத் தேநீர்’ (Red Tea) என ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார். பனிக்காடு எப்படி எரியும் எனக் கேட்டிருந்தேன். இப்போது புரிகிறது பனிக்காடும் எரியும்!

வெள்ளி, 4 நவம்பர், 2011

மனுநீதி





இது மிகவும் அநீதியானது. அண்மையில் தமிழகம் சென்ற போது  திருச்சி. கே. செளந்தரராசன் எழுதிய இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒற்றுமையாக வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூகத்திடையே ‘மனுதர்ம சாஸ்திரத்தை’ திணித்து, சாதி என்னும் கொடிய நோயை ஆரியர்கள் பரப்பியுள்ளனர். ‘மனுநீதி’ இந்துக்களின் பண்டையகால நீதிநூல் என இதுவரையில் உலக வரலாற்றில் படித்துள்ளேன். முதன் முறையாக அதனுள்ளே இருக்கும் சில அநீதிகளையும் அசிங்கங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

நீதி என்றாலே அது அனைவருக்கும் பொதுவாகவும் சமமாகவும் இருக்க வேண்டும். ஆனால், ‘மனுநீதி’ சொல்வது என்ன? ஒரு குலத்துக்கொரு நீதி என்ற வகையில் மிகவும் அநியாயமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சூத்திரன் என்பவன் விபச்சாரியின் மகன் என்றும் கொச்சைப்படுத்துகிறது. இப்படிப்பட்ட நூல் இன்னமும் இந்துக்களின் அடிப்படைச் சட்டமாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது என்பது வேதனைக்குரிய விடயம்.

இந்த நூலில் இந்துத் தெய்வங்களின் வெட்கம் கெட்ட வரலாறு குறித்தும் எழுதப்பட்டுள்ளது. பரசிவன்-பார்வதி திருமணத்தின் போது பிரம்மன் பார்வதியின் தொடையைப் பார்த்து இச்சைக் கொண்டதும், அதனால் தோன்றிய இந்திரியத்திலிருந்து பிறந்தர்கள்தான்  அகஸ்தியன், சல்லியன், மண்டோதரி என்று மனுதர்மம் கூறுகிறது. அதுமட்டுமின்றி குழந்தைப் பெறுவதற்காக ஒருவன் தனது தாய், தமக்கை, மகள் என யாரோடு வேண்டுமானலும் கூடிப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழர்களின் ஒழுக்கத்தையே குழி தோண்டிப் புதைக்கிறது மனுநீதி! மிருகம் முதல் மகள் வரை அனைவருடனும் கூடிப் புணர்ந்த பிரம்மாவின் யோக்கியதையை மனுநீதி எடுத்துரைக்கிறது.

அதுமட்டுமின்றி, நமது கடவுள்கள் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபட்டுள்ளதாக மனுதர்மம் கூறுகிறது. அதாவது, பிரம்மனும் பரமசிவனும் கூடிப்புணர்ந்து ‘ஐயப்பன்’ எனும் பிள்ளையைப் பெற்றதாக அது தெரிவிக்கின்றது! அத்தோடு நில்லாமல், விஷ்ணுவும் நாரதரும் புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள்! இப்போதுதான் ஏன் நாரதர் அடிக்கடி விஷ்ணு புராணம் பாடுகிறார் என்று தெரிகிறது.

பிராமணனை முன்னிலைப் படுத்தும் மனுநீதி, சூத்திரன் என்று கூறப்படுபவர்களை மிருகத்திலும் கேவலமாகச் சித்தரிக்கிறது. அதுமட்டுமின்றி பிராமணன் சொல் படிதான் அரசாங்கம் இயங்க வேண்டும் என்றும் மனுநீதி சொல்கிறது. இதுதான் நீதியா? பெண் என்பவள் எப்போதும் சுயமாகச் செயல்படக் கூடாது. இளமையில் தந்தையின் கண்காணிப்பிலும், பின்னர் கணவனின் கண்கானிப்பிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என மனுதர்மம் குறிப்பிடுகிறது.

இதுதான் நமது தர்மமா? இப்படிப்பட்ட  அசிங்கமான, அநீதியான ஆரியர்கள் அறிமுகப்படுத்திய நீதி நூல் நமக்குத் தேவையா? இந்த நூலைப் படித்தப் பிறகு இந்து தெய்வங்களைப் பற்றி ஒருவன் எப்படி மேலான கொள்கைகளைக் கொண்டிருக்க முடியும்? அல்லது மனுநீதியை எப்படி முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இத்தகைய நூல் இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை! கடவுள், கடவுள் என்று மனிதனையும் மனிதத் தன்மையையும் மறந்தவர்கள் மனுநீதி கூறும் கதைகளுக்கு விளக்கம் கொடுத்தாலோ, அல்லது நியாயப்படுத்தினாலோ தேவலாம்! வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள் தோழர்களே.