வியாழன், 1 நவம்பர், 2012

பதில் கவிதை


 
ஆண்:
 
 தாரகையே....
நீ என்னவள் என்று நான் சொல்லிவிட்டேன்...
உனக்கு இன்னும் ஏன் தயக்கம்...?
தயங்காது துணித்து சொல்,
நான் உன்னவன் என்று...!!!
தொட்டு விடும் தூரத்தில் இல்லை நாம்...
தொடர்பற்று போகவில்லை நாம்...
தயங்காது சொல்...
தடுமாற்றம் இல்லாமல் சொல்...
தன்னிலை உணர்ந்து சொல்...
என்னை நம்பி சொல்...
நீ என்னவள் என்று.....!!!!


பெண்:தாம்பூலம் மாற்றியவள்
உன்னவள் ஆகலாமா?
நீ ஒருவன் சொல்லிவிட்டால்
ஊருலகம் ஏற்றிடுமா?

தடுமாறி நிற்கின்றேன்
தன்னிலை மறந்துவிட்டேன்
தனிமையை நாடுகின்றேன்
தோழனே உதவி செய்!

மண்டியிட்டுக் கேட்கின்றேன்
மன்றாடி அழுகின்றேன்
இன்னொரு வலி வேண்டாம்
என் மீது கருணைக்கொள்!

உடைந்த இதயம்...உடந்துபோன மனதை
எத்தனை முறை ஒட்டுவது?
ஒட்டுவதும் உடைவதும் வாடிக்கை
இது மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை!

ஒட்டி ஒட்டி உடைந்த மனம்
இன்று துகள்களாகி போயிற்றே
இனி ஒட்டவும் முடியாது
யாராலும் உடைக்கவும் முடியாது!

இனி இதற்கு உயிரில்லை
இதனால் எவ்வித பயனுமில்லை
இருந்த அறிகுறி தெரியவில்லை
இது இருப்பதுதானே பெரும் தொல்லை?

வந்து அள்ளிக்கொள்ளுங்கள்
காற்றினில் கரைக்கலாம்
கடலோடு கலக்கலாம்
மண்ணினிலே புதைக்கலாம்!