தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 பிப்ரவரி, 2020

எது காதல்? ‍-அத்தியாயம் 2

2
கோதைக்கு மனமே சரியில்லை. பள்ளி ஆண்டுகாலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு குமார் வேறு பள்ளிக்கு ஒன்றாம் படிவம் படிக்கச் சென்றுவிடுவான். பெரும் இழப்பு நேரப்போவது போல் அவள் மனம் கனத்திருந்தது. அடுத்தாண்டு மாற்றலாகிப் போகவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பிரியாவிடை விருந்து வைப்பது வழக்கம். கோதை, கோகிலா, வசந்தி, கார்த்திகா ஆகிய நால்வரும் நடனப்பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தனக்குப் பிடித்தமான மின்னல் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊ லலலா' பாடலை கோதை தேர்வு செய்திருந்தாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தனர். பாடலுக்குப் பொருத்தமான அபிநயங்களைக் கோதையே நிர்ணயித்து மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தாள். நடனத்தில் அவளுக்கிருக்கும் திறமை அப்பள்ளியில் யாவரும் அறிந்ததே. ஆகையால் பொறுப்பாசிரியர் கூட முழுப்பொறுப்பையும் கோதையிடமே கொடுத்துவிட்டார். பள்ளி முடிந்து சில வேளையில் கோதையும் அவளது தோழிகளும் வகுப்பறையில் நடனப்பயிற்சி மேற்கொண்டனர். இந்த விடயம் குமாரின் காதுக்கும் எட்டியது.

ஒருநாள் பள்ளி ஓய்வு வேளையின் போது குமார் அவளைக் கடந்துச் செல்ல நேர்ந்தது. அவன் பக்கத்தில் இருந்த சரண். "என்ன? எங்களுக்காக நடனமெல்லாம் ஏற்பாடு செய்கிறாயாமே?" என்று கேலி செய்தான். "உங்களுக்காக தனியாக இங்கே யாரும் மனக்கெடவில்லை. இது ஒட்டுமொத்த ஆறாம் ஆண்டுக்காகச் செய்கிறோமாக்கும்," என்று சிலுப்பிக்கொண்டுச் சென்றாள். தான் நடனம் புரியப்போவது குமாருக்குத் தெரிந்துவிட்டது. நிச்சயமாக அவன் பிரியாவிடைக்கு வருவான். அவனுக்காக எப்பொழுதையும் விட நடனத்தைச் சிறப்பாக ஆடவேண்டும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.

நாட்கள் ஓடின. பிரியாவிடைக்கொடுக்கும் நாளும் வந்துச் சேர்ந்தது. கோதையும் அவளது தோழிகளும் அழகாக உடுத்தி நடனத்திற்குத் தயாராகினர். கோதை தன் மனதைப் பாடல் வரிகளுக்குள் ஒன்றிணைத்து அருமையாக ஆடினாள். அவள் ஆடுவதை முன்வரிசையில் நின்று இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் குமார். 'என் கண்ணு ரொம்ப அழகா? என் இறக்கை ரொம்ப அழகா?' என்ற வரிகளின் போது கோது குமாரைப் பார்த்து அபிநயம் பிடித்தாள்.குமார் வெட்கப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. சரண் குமாரின் இடுப்பில் இடித்து ஏதோ அவன் காதுக்கருகில் முணுமுணுத்ததை நடனத்தின் போதும் கவனிக்க கோதை தவறவில்லை.

ஒருவழியாகப் பிரியாவிடை விருந்து முடிந்தது. அனைத்தையும் சுத்தப்படுத்திவிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் வீடு செல்ல தயாராகினர். கோதையும் கோகிலாவும் உடை மாற்றி பேருந்து நிற்குமிடத்திற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு முன்பாக மிதிவண்டியில் குமாரும் சரணும் காத்திருந்தனர். அவர்களைக் கண்டதுமே கோதைக்கு மனம் படபடத்தது. அவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள்? ஒருவேளை தனக்காகத்தான் நிற்கிறார்களா? இப்போது என்ன செய்வது. இங்கே எல்லார் முன்னிலையும் அவர்களோடு பேசுவது சரியாகப் படாதே. யாராவது இதைப் பார்த்து வீட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது என பலவாறாக எண்ணத் தொடங்கினாள். அவளையறிமால் அவள் கால்கள் நடுங்கின.
"ஏய், அங்கே பார்! குமாரும் சரணும் உனக்காகத்தான் அங்கே நிற்கிறார்கள் போல் தெரிகிறது," என்றாள் கோகிலா.

"தெரியாத மாதிரி வா. நாம் அவர்களைக் கவனிக்காத மாதிரி வேறு பக்கத்தில் நின்றுக்கொள்வோம்," என்று கோகிலாவின் கைகளை இறுக்கமாகப் பற்றி, அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் வெகு வேகுமாய் நடந்தாள் கோதை. அவர்கள் கடந்துப்போகையில் சரண் அவர்களைப் பார்த்து, "ஹாய்" என்றான். அதற்கும் பதிலேதும் கூறாமல் சரேலென்று எதிர்திசையில் சென்று அமர்ந்துக்கொண்டனர் கோகிலாவும், கோதையும்.
அந்தப்பள்ளியின் பேருந்து நிற்குமிடம் மிக முக்கிய சாலையின் அருகில் இருக்கிறது. சாலையில் வருவோர் போவோர் எவர் வேண்டிலும் அங்குப் பேருந்திற்காகக் காத்திருக்கும் மாணவர்களைத் தூரத்திலிருந்தே காண முடியும். அந்தச் சிரிய பட்டிணத்தில் பெரும்பாலும் அனைவருமே ஒருவர் குடும்பத்தை மற்றவர் அறிந்து வைத்திருந்தனர். 'உம்பிள்ளையைப் பள்ளியில் பார்த்தேன், யாரோ இரண்டுப் பையன்களோட பேசிக்கிட்டிருந்தா,' என்று யாராவ‌து வீட்டில் சொன்னால் நிலமை என்னாகும்? அந்தத் தொண்ணூறுகளின் காலக்கட்டத்தின் அவ்வாறு பேசுவதே எவ்வளவுத் தவறாக எண்ணப்பட்டது? இதுதான் கோதையின் பதட்டத்திற்குக் காரணம். இதை குமாரும் தெரிந்துவைத்துதானே இருப்பான். சில நிமிடங்கள் அங்கேயே மிதிவண்டியோடு நின்றுக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு அகன்றனர். குமாரின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று மறையாமல் ஒட்டிக்கொண்டிருந்தது. அது, பதட்ட நிலையிலும் கோதையின் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது.

இன்னும் ஒரு வாரம்தான் எஞ்சியிருக்கிறது. பள்ளி ஆண்டுகாலம் முடிந்துவிடும். குமாரும் சரணும் தொலைவிலுள்ள இடைநிலைப்பள்ளிக்குச் சென்றுவிடுவர். இனி அவர்களை, குறிப்பாக குமாரை எப்போது
பார்ப்பது? தானும் ஆரம்பக்கல்வியை முடித்துவிட்டு அதே இடைநிலைப்பள்ளிக்குச் சென்றால் காணலாம். ஆனால், அதற்கு ஒரு வருடம் பொறுக்க வேண்டுமே. காலங்கள் உருண்டோடக் கூடாதா என ஏங்கினாள் கோதை. அவளுக்கு அவனைக் காண வேண்டும். ஒவ்வொரு நாளும் காண வேண்டும். ஆனால் அதனை யாரிடம் எப்படி விவரிப்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. இவையணைத்தும் அவள் மனதை பாரமாய் அமுக்கிக்கொண்டிருந்தது. சில சமயம் இவற்றை நினைக்கையில் அவளுக்கு அழுகை கூட வந்தது. யாரோ ஒருவன். அவனிடம் சரியாகப் பேசியது கூட இல்லை. அவனைப் பிரியப்போகிறோம் என்று நினைக்கையில் மனதுக்கு ஏன் இத்துணைச் சிரமமாய் இருக்கிறது? அவளுக்கு அவளையே புரிந்துக்கொள்ள இயலவில்லை.

"நீ அவனைக் காதலிக்கிறியா?" கோகிலா வாய் திறந்துக் கேட்டேவிட்டாள்.

"எனக்குத் தெரியல," என்ற பதிலை மட்டுமே கோதையால் தர முடிந்தது. 

அந்தக் கடைசி வாரத்தில் குமாரின் முகத்திலும் சோகத்தின் சாயல் படர ஆரம்பித்தது. அவளைக் கண்டபோதெல்லாம் அவன் புன்னகைக்கவே செய்தான். அந்தப் புன்னகையின் பின்னால் பெரும் சோகம் ஒளிந்திருப்பது போல் கோதையின் மனதிற்குப் பட்டது. ஒரேவேளை இந்தப் பிரிவை எண்ணி அவனும் அவளைப் போலவே மனம் கலங்குகின்றானோ? அந்தக் கடைசி வாரமும் வந்து முடிந்தது. அப்போதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அந்த ஆண்டு இறுதி விடுமுறையை காதல் பாடலிலும், சோகப் பாடலிலும் நிரப்பினாள் கோதை. அடுத்தாண்டு ஆறாம் ஆண்டிற்கான‌ தேர்வு நடைப்பெறும். அதில் நல்லமதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி மனதினுள் வந்துப் போனது. அதற்காக அவள் தன்னைத் தயார்படுத்தவும் செய்தாள். இடையிடையே தலைத்தூக்கிய குமாரின் நினைவுகளை வலிந்து அப்புறப்படுத்தினாள். 

விடுமுறை முடிந்துப் பள்ளித் தொடங்கியது. மீண்டும் தங்கள் நண்பர்களைக் காணும் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்குள்ளும் இருந்தது. கோதையும் குமாரின் நினைவுகளிலிருந்து விடுப்பட்டு ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றாள். அவளின் ஆறாம் ஆண்டு இனிதே தொடங்கியது. அவளும் வழமை போல் பாடத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். இரண்டாவது வாரம் வழக்கம் போல் அவளும் கோகிலாவும் பள்ளிப்பேருந்திற்காகக் காத்துநின்ற வேளையில் இரண்டு மிதிவண்டிகள் அவ்விடம் வந்துச் சேர்ந்தன. இடைநிலைப்பள்ளிச் சீருடையிலிருந்த குமார் தயக்கத்துடனும் புன்னகையுடனும் கோதையின் அருகில் மிதிவண்டியை நிறுத்தினாள். அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. இவன் எப்படி இங்கு? இடைநிலைப்பள்ளி இருப்பதோ வெகு தொலைவில். குமாரின் வீடும் இங்கு இல்லை. இவன் எதற்கு எப்படி இங்கே அன்று குழம்பியவாறு அவனை நோக்கினாள். அவன் முகத்தைக் கண்ட மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனிபோல் உருகினாள் கோதை. கோகிலா அவளை மெதுவாக இடிக்க, அப்போதுதான் தான் பேருந்து நிற்குமிடத்தில் இருக்கிறோம் என்ற சுயநினைவிற்கு வந்தாள். ஏனோ, ஆயிரம் கண்கள் தன்னைப் பார்ப்து போல் அவளுக்கு மனம் குறுகுறுத்தது. 

தான் ஏதாவது வினையில் சிக்கிக்கொள்வதற்கு முன் அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும் என எண்ணியவளாய், கோகிலாவின் கரத்தைப் பற்றக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தாள்.

"கோதை, நில்லு!" சொன்னது குமார். 

அவன் அவ்வாறு அழைத்தது அவளுக்கு என்னவோ செய்தது. அவன் அவளை அழைக்கிறான். அவள் பெயர் சொல்லி அழைக்கிறான். ஏதோ உரிமைக்குரலுடன் அழைக்கிறான். இந்த அழைப்பை எப்படி மீறுவது? அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். அதில் ஏக்காம் குடிக்கொண்டிருந்தது.

"யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்," என்றாள் கோதை. 

அவளுக்கு வேறு என்ன சொல்வது அல்லது செய்வது என்றுத் தெரியவில்லை. இவன் முகத்தைக் காணத்தானே அவள் தவமாய் தவமிருந்தாள். இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்றுதானே காத்திருந்தாள். இந்த சிரிப்பைக் காண்பதற்காக எவ்வளவு ஏங்கினாள். ஆனால், அவளால் அங்கு நின்றுப் பேசத்தான் முடியவில்லை.

"கவலைப்படாதே, நான் சென்றுவிடுவேன். உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதனால்தான் வந்தேன். உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்," என்றான் குமார். அதில் சோகம் படிந்திருந்ததை அவள் உணர்ந்தாள். அவன் அவளுக்காக, அவளைக் காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறானே. அப்படியானால், அவனுக்கும் தன் மீது அன்பிருக்கத்தானே செய்கிறது. நான் அவனை நினைத்திருந்தது போல் அவன் என்னை நினைத்திருக்கிறான் என்பதுதானே அர்த்தம்? அவள் மனம் இளகியது. அவளையறிமால் அவள் கண்களில் நீர் வழிந்தது.

"ஏய், ஏன் அழுகின்றாய்? அழாதே கோதை. நான் சென்றுவிடுகிறேன். உனக்குச் சிரமம் அளித்திருந்தால் என்னை மன்னித்துவிடு," என்றவாறு மிதிவண்டியை வந்த திசை நோக்கி மிதித்தான் குமார். அவள் அருகில் வந்த சரண், "எப்போதும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் இம்சை தாங்காமல் நான் தான் அழைத்து வந்தேன். பாவம், அவன் உன் நினைவாகவே இருக்கிறான். இனி நாங்கள் வரமாட்டோம்," என்றவாறு சென்றுவிட்டான்.

"ஏன் அழுகிறாய்?" என்று கோகிலா கேட்டாள்.

"தெரியவில்லை," என்றாள் கோதை. அவள் மனம் வலித்தது. ஏனென்று அவளுக்கு விளங்கவில்லை. அவள் அவனைக் காதலிக்கிறாளா? ஐயோ, இது வீட்டில் தெரிந்தால் என்னவாகும்? அடுத்து சில தினங்கள் அவள் சோகமே உருவாய் இருந்தாள். அவள் தாய் என்னவென்று கேட்டும் வெறும் களைப்பு என்று மழுப்பினாள். தன்னைத் தேடி வந்த ஒருவனைப் புண்படுத்தி அனுப்பிவிட்டோமோ என்று மனம் நொந்தாள். இனி அவன் தன்னை நினைக்க மாட்டானா என்று வருந்தினாள். இவ்வளவு மனப்போராட்டதிற்கு நடுவிலும் அவள் படிப்பில் கவனம் சிதறவில்லை. மனம் திசை மாறும் போதெல்லாம் அவள் புது நூல்கள் வாசித்தாள். ஒருவாறாக அவ்வாண்டை எப்படியோ கடந்து தேர்வும் எழுதிச் சிறப்பு மதிப்பெண்களும் பெற்றுவிட்டாள்.

அடுத்தாண்டு அவளும் இடைநிலைப்பள்ளிக்கு செல்லவிருக்கிறாள். குமார் படிக்கும் அதே இடைநிலைப்பள்ளி. அவளை அவனுக்கு நினைவிருக்குமா? அல்லது மற்ற இடைநிலைப்பள்ளி மாணவர்கள் போல் இந்நேரம் அவனுக்கும் காதலி இருக்குமா? மீண்டும் குமாரைப் பற்றிய எண்ணம் அவளும் படையெடுத்தது.

வியாழன், 30 ஜனவரி, 2020

எது காதல்? -அத்தியாயம் 1

1
அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டுப் பயின்று வரும் கோதையும் கோகிலாவும் பள்ளி முடிந்து அன்றைக்கு வீட்டுக்குச் செல்லவில்லை. புதன்கிழமைதோறும் மதிய வேளையில் புறப்பாட நடவடிக்கைகள் இருப்பதால் அவர்கள் வீடு செல்லாமல் பள்ளியிலேயே தங்கிவிட்டனர்.பள்ளிக்குத் தொலைவில் வசித்துவரும் மாணவர்கள் மதிய வகுப்பின் போது இவ்வாறு பள்ளியிலேயே தங்கிவிடுவது வழக்கம். வீடு அருகில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குச் சென்று மதியம் மீண்டும் பள்ளி திரும்புவர். இது பெரும்பாலான பள்ளிகளில் வழமை.

அப்போது 'மின்னல்' என்ற தமிழ்ப்படம் வெளிவந்து வெற்றிநடைப்போட்டுக்கொண்டிருந்த வேளை. கோகிலாவும் கோதையும் மதிய வகுப்பு தொடங்குமுன் இருக்கும் நேரத்தைச் செலவிட அந்தச் சிறிய பள்ளியை சுற்றி சுற்றி நடந்துக்கொண்டே கதைப்பேசி வந்தனர். அப்போது, "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?" என்ற பாடல்வரிகளை யாரோ ஆண் குரல் பாட, "விளையாட ஜோடி தேவை" என்று கோதை தொடர்ந்தாள். இயற்கையிலேயே சற்று குறும்புத்தனம் மிக்கவள்.

"ஏய்! யாரது எங்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவது" என்று குரலுக்குச் சொந்தக்காரர்களான குமாரும், சரணும் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். குமார், சரண் இருவரும் ஆறாம் ஆண்டுப் படிக்கும் பன்னிரெண்டு வயது மாணவர்கள். கோதையும் கோகிலாவும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள். பிள்ளைப் பருவத்திலிருந்து இளம் பருவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் காலம்.

குமாரும் சரணும் வரும் காலடிச் சத்தம் கேட்கவே, கோகிலாவும் கோதையும் சிரித்துக்கொண்டே தலைத்தெறிக்க ஓடினர். அவர்கள் அங்கிருந்து ஓடுவதைப் பார்த்த குமாரும் சரணும், "ஏய்! ரெண்டு பேரும் நில்லுங்கள்" என்று கூவியவாறு துரத்திக்கொண்டு வந்தனர். தோழிகள் இருவரும் ஓர் அறையின் வளைவில் ஓடிச்சென்ற வேளையில் எங்கிருந்தோ வந்த பள்ளியாசிரியரைக் கண்ட குமாரும் சரணும் சட்டெனெ நின்றனர்.

"என்ன ஒரே ஓட்டம்?" என்று வினவினார் நாராயணன்.

"ஒன்னுமில்லை சார்... சும்மா விளையாடிக்கொண்டிருந்தோம்" என்று மழுப்பினான் சரண்.

"சரி, இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். சில நோட்டுப்புத்தகங்களைக் காரிலிருந்து எடுத்து வர வேண்டும்," என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார் நாராயணன் என்ற கணக்காசிரியர்.

அவர்கள் போவதை வகுப்பறையின் வளைவிலிருந்து மறைந்து நின்று கோதையும் கோகிலாவும் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரின் முகத்திலும் சிரிப்பு. கோதையின் மனம் என்றைக்கும் விட அப்போது அதிகம் படபடத்தது. ஏதோ ஒருவித கிளர்ச்சி, இனம் புரியாத இன்பம்.

"நல்லவேளை அவனுங்க நம்மள பிடிக்கல," என்றாள் கோகிலா.

அதற்கு பதிலொன்றும் கூறாமல் புன்னகையுடன் தலையசைத்தாள் கோதை.
ஒருவேளை பிடித்திருந்தால்? என்று எண்ணியபோது அவளையும் அறியாமல் அவள் கன்னம் சிவந்தது.

குமார் பாடிய அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த சமீபத்திய பாடல், எனவே தான் அதைக் கேட்டதும் அவளும் தொடர்ந்துப் பாடினாள். அதே வேளை தனக்குப் பிடித்த பாடலை இன்னொருவனும் இரசித்துப் பாடுகின்றானே என்று நினைத்த மாத்திரத்தில் அவளுள் எதுவோ, என்னவோ செய்தது. அவன் பெயர் அவளுக்குத் தெரியும். அந்தப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான‌வர்களை அவளுக்குத் தெரியும். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவன் பெயரை நினைத்த மாத்திரத்தில் அவளையறியாமல் அவள் இதழ்கள் புன்னகைத்தன.

"என்ன சிரிப்பு ஒரு மாதிரியா இருக்கு?" என்று வினவினாள் கோகிலா.

"ஒன்னுமில்லை..."

"ஏய், மழுப்பாதே. அவர் பாடுவாராம்; இவங்க சேர்ந்துப் பாடுவாங்களாம். அவர் துரத்துவாராம்; இவங்க ஓடுவாங்களாம். யாருக்கிட்ட?" என்று கிண்டலடித்தாள் கோகிலா. கோதையில் இளமைப் பருவத்தின் மிக முக்கியப் புள்ளியிட்டது அன்று கோகிலாதான். கோதை சிரித்தாள். அவளால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

மதிய வகுப்பின் போது கோதையால் முழுமையாக எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. இது அவளுக்குப் புதுமையாய் இருந்தது. குமாரையும் அவன் பாடிய பாடலையும் நினைத்த மாத்திரத்தில் அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது. வீட்டிற்குச் சென்ற கோதை "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலைத் திரும்ப திரும்பக் கேட்டாள். ஒவ்வோர் வரியையும் இரசித்துக்கேட்டாள். ஒவ்வோர் முறையும் முதன் முறை கேட்பதைப் போலவே அந்தப் பாடல் அவளுக்கு சிலிர்ப்பூட்டியது.

இடையிடையே குமாரின் குரல் அவள் காதுக்கு மட்டும் ஒலித்து மறைந்தது.
அதன்பின் ஒவ்வொரு முறை அவள் குமாரை பள்ளியில் சந்திக்க நேர்ந்த பொழுது ஓரக்கண்ணால் நோட்டமிடுவாள். குமார் எப்போதும் நண்பர்கள் சூழ இருந்தான். சரண் அவனை நிழல்போல் தொடர்ந்தான். கோதையும் குமாரும் பல முறை ஒருவரையொருவர் பள்ளியில் பல சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்த போதிலும் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சில சமயம் நண்பர்கள் காணாத வேளையில் குமார் அவளைப் பார்த்துப் புன்னகைப்பான். அவளுக்கு அப்போது வெட்கம் பிடுங்கித்தின்னும். சட்டென்று பார்வையை வேறு திசைக்குத் திருப்பிவிடுவாள். சில சமயம் இவள் அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள், அவன் முகத்தில் வெட்கம் படர சிரித்தவாறு , நண்பர்கள் கவனியா வண்ணம் முக‌த்தைத் திருப்பிக் கொள்வான். இப்படியே நாட்கள் கடந்தன. அவர்கள் இருவரின் வாய் பேசாவிடினும், கண்களாலேயே அவர்கள் ஆயிரம் கதைகள் பேசினர்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்ற கோதை ஒரு முறையாவது அவனைக் கண்டுவிடமாட்டோமா என்று ஏங்கினாள். அவள் ஏக்கத்தைப் புரிந்துக்கொண்டவன் போல் குமார் அடிக்கடி அவளது வகுப்பறையைக் கடந்துப் போனான். அவன் வரும்போதும், போகும் போதும் ஓரக்கண்ணால் அவளை நோட்டமிட்டான். இதனைக் கோதையின் இணைப்பிரியா தோழி கோகிலாவும் கவனிக்கத் தவறவில்லை.

"என்ன? உன் ரோமியோ அடிக்கடி இந்தப் பக்கம் வரமாதிரி இருக்கு?" என்று கிண்டலடித்தாள்.

"யாரு?" என்று ஒன்றும் தெரியாதது போல் வினவிளாள் கோதை.

"நடிக்காத. எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவர் ஓரக்கண்ணுல பார்க்கிறதும் நீ சிரிக்கிறதும்.

"சிரிச்சா தப்பா?"

"சிரிச்சா தப்பில்ல. ஆனால், நீ சிரிக்கிற விதமே வேற மாதிரி இருக்கு. அங்க பார்வையும் வேற மாதிரி வருது."

கோதை பதில் சொல்லவில்லை. என்னவென்று சொல்வது? அதற்குள் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைய அவர்கள் பேச்சு அத்தோடு நின்றது. இந்தப் பேச்சி அடியோடு நின்றது என்று சொல்வதற்கில்லை. கோதையும் குமாரும் சிரிப்பையும் பார்வையையும் பரிமாறிக்கொள்வதை அவர்களின் நண்பர்களும் நாளடைவில் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் போதோ அல்லது ஒருவரை ஒருவர் கடந்துப் போகும் போது அவர்களுடைய‌ நண்பர்கள் தொண்டையைக் கணைத்து அர்த்தப் புன்னகை வீசுவர். அவர்களின் நட்பும் அன்பும் அந்த அளவிலேயே வளர்ந்தது எனலாம். அவர்கள் இருவருக்கும் அப்பருவத்தில் அதுவே தேவையாய் இருந்தது, ஆயிரம் அர்த்தம் தரக்கூடிய அந்தப் பார்வையும், உலகையே ஒரு கணம் மறக்கச்செய்யும் அந்தப் புன்னகையும் மட்டுமே.

அவர்கள் இருவரின் மனதிலும் வேறு எதுவும் இல்லை. அவளின் முகம் அவனுக்கும், அவனின் எண்ணம் மட்டுமே அவளுக்கும் போதுமானதாய் இருந்தது. பதினொன்று வயது சிறுமிக்கும், பன்னிரெண்டு வயது சிறுவனுக்கும் அந்த தொன்னூறுகளில் வேறு என்னதான் எண்ணத் தெரியும். அப்பழுக்கற்ற அவர்கள் இதயத்தில் தூய அன்பொன்று அழகாய் வேறூன்றத் தொடங்கியது.






வெள்ளி, 18 செப்டம்பர், 2015

அவளும் அதுவும்... (பாகம் 10)



"எல்லாரும் போய் விளையாடுங்க," என முருகன் குழந்தைகளை அனுப்பி வைத்தார். பெரியவர்கள் அறுவரும் (சிவம், அமுதா, சிவகாமி, குமார், வள்ளி, முருகன்) மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

"என்ன சிவகாமி? என்ன ஆச்சு உங்கம்மாவுக்கு?" என குமார்தான் பேச்சைத் தொடங்கினார்.

"எங்களுக்கே தெரியல... அன்றைக்கும் பேச்சியம்மனுக்குப் படையல் போடும் போது இப்படித்தான் ஆச்சு. எல்லாரும் அம்மாதான் வந்திருக்காங்கன்னு நினைச்சோம். இன்னைக்கு அப்பா வேற என்னவோ சொன்றார். அவர்கிட்டதான் கேட்கணும்," என்று சிவகாமிக்குப் பதில் வள்ளி பதிலளித்தாள். அதற்குள்ளாகவே தாத்தா மீண்டும் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

"உங்கம்மா எங்க?" எனக் கேட்டார்.

"பின்னாடிசமையல் கட்டுக்குப் போனாங்க," என்று சொல்லியவாறு பின்னே சென்ற சிவகாமி மீண்டும் திரும்பி வந்து, "பின்னாடி வீட்டுக்குப் போயிருக்காங்க போல," என முடித்தாள்.

"என்ன மாமா? என்ன நடக்குது இங்க?" என குழப்பத்துடன் கேட்டார் மூத்த மருமகனான முருகன்.

"என்னத்த சொல்ல? அவங்க அம்மாதான் வந்திருக்கு..." என்ற தாத்தாவை அனைவரும் வியப்புடன் நோக்க, "புரியல? உங்க பாட்டி எப்படியோ தேடி வந்திருக்கு. அதான் இப்படி நாடகம் ஆடுது!" என்றார் தாத்தா.

"அவங்க எதுக்கு இப்போ அம்மா மேல வர்றாங்க?" என சிவம் கேட்டார்.

"ஆசைதான். குடும்பம், பிள்ளைங்க கூட இருக்கணும்'னு ஆசை. முடியுமா? விதி முடிஞ்சா போய் சேரணும். இப்படி அலையறது நல்லது இல்ல. நம்ம குடும்பத்துக்கும்தான் நல்லது இல்ல."

"இப்ப என்ன செய்யறது? வீட்ல குழந்தை வேறு இருக்கு," என குமார் கவலையுடன் கேட்டார்.

"அதெல்லாம் ஒன்னும் செய்யாது. செய்ய விட்டிருவோமா? ஏதோ குழப்படி பண்ணுது. என்னன்னு பார்க்கணும்!" எனத் தீவிரமாக எதையோ சித்தித்தவாறு சொன்ன தாத்தா மீண்டும் அரைவை அறையை நோக்கிச் சென்றார். தாத்தா கண்ணிலிருந்து மறையும்வரை காத்திருந்த சிவம்,

"எங்கேயாவது போய் பார்ப்போமா? அப்பா எதையும் தெளிவா சொல்ல மாட்றார். சாமி பார்த்தா என்ன ஏதுன்னு தெளிவா சொல்லிடுவாங்க, " என ஏனையர் முகங்களைப் பார்த்தார்.

"அதுக்கு மாமா ஒத்துக்குவாரா? அவருக்குத்தான் சாமி பார்க்கிறது எல்லாம் பிடிக்காதே?" என சிவத்தின் மனைவி அமுதா கேட்டாள்.

"எதுக்குச் சொல்லிக்கிட்டு? முதல்ல நம்ம பார்த்து என்ன ஏதுன்னு பார்த்துட்டு அப்புறம் தேவைப்பட்டா சொல்லிக்கலாம். வீட்ல பிள்ளைகள் எல்லாம் இருக்கு. இப்படியே நடந்துக்கிட்டு இருந்தா என்ன செய்றது? 'அது' எப்படி நடிச்சிச்சுன்னு பார்த்தீங்கல்ல?"

"ஆமாம். அப்பா அடிக்க வந்ததும் ஓடிட்டு திரும்ப வந்திருச்சி. அப்பா!!! நினைக்கவே சிலிர்க்கிறது! " என அண்ணனுக்கு ஒத்து ஊதினாள் சிவகாமி.

"சரி மச்சான்,  நீங்க பார்த்துட்டு தகவல் சொல்லி அனுப்புங்க. நேரமாகுது, நாங்க முதல்ல கிளம்பிறோம். எங்க அத்தை?" என சுற்றி முற்றும் பார்த்தார் முருகன். கணவனின் குறிப்பை அறிந்த வள்ளி இந்திரனை அழைத்துப் பின் வீட்டிலிருந்து பாட்டியை அழைத்து வருமாறு கூறினாள். சிறிது நேரத்தில் பாட்டி அரக்கப்பறக்க வீடு வந்து சேர்ந்தார்.

"என்ன மாப்பிள்ளை? அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? இருந்துட்டு நாளைக்குப் புறப்படலாமே?" என கனிவுப்பொங்க பழைய மாமியாகக் கேட்டார். 

"இல்ல அத்தை. வேலை இருக்கு. இன்னொருநாள் வந்து தங்கிட்டுப் போறோம்," என அவரிடம் விடைப்பெற்றார் முருகன். பின்னர் வீட்டிலுள்ள அனைவரிடமும் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டனர். 

இத்தனைக்கும் நடுவில் மீண்டும் வந்த பாட்டியை யாரும் அறியா வண்ணம் பார்த்துக்கொண்டே இருந்தாள் பவானி. அவரின் முக‌த்தில் தாங்கவொண்ணா வேதனைப் படிந்திருந்தது அவளுக்கும் மட்டும் தெரிந்தது. பாட்டியின் மேல் அவளுக்கு அனுதாபமும் கவலையும் கூடியது. மற்றவர்கள் பாட்டியிடம் இருந்து ஒதுங்கியிருக்க இவள் மட்டும் மனதில் பயம் இருந்தாலும் இயன்றவரை இயல்பாக இருக்க முயற்சித்தாள். பாட்டியின் மனதிலும் ஓராயிரம் குழப்பங்கள் இருந்தது. ஆனால், அவர் முடிந்தவரை இயல்பாக முகத்தை வைக்க வெகுவாக முயன்றார் என்றே சொல்ல வேண்டும். ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவருக்குத் திண்ணமாகத் தெரிந்தது. ஆனால் அது என்னவென்று கேட்பதற்கு அவருக்கு வாய் வரவில்லை. ஏதோ ஒன்று அவரைக் கேட்கவிடாமல் தடுத்தது என்றும் கூறலாம்.

பாட்டிக்குத் திடீர் திடீரென இப்படி ஆவது அனைவரையும் திகிலடைய வைத்தது. வழக்கமாகச் சிறுவர்கள் பேசும் பேய்க்கதைகள் கூட வெகவாகக் குறைந்துப்போயின. ஏதோ ஒன்று இந்த வீட்டில் பாட்டியின் கூடவே இருக்கிறது என்று பவானி அடிக்கடி நினைத்துக் கொண்டாள். அதனை அவள் மற்றவர்களிடம் சொல்வதற்கும் அஞ்சினாள்.

மறுவாரம் ஏதோ ஒரு இடத்தில் யாரையோ பார்த்துவிட்டு வந்த சிவம், அமுதாவையும் சிவகாமியையும் தனியே அழைத்து சமையலறையில் பேசிக்கொண்டிருந்தார். மதிய வேளை ஆகையால் பாட்டியும் மற்றவர்களும் வழக்கம் போல குட்டித் தூக்கத்தில் இருந்தனர். படுத்தும் தூக்கம் வராத பவானி தந்தையின் குரலைக் கேட்டதும் தனது காதுகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டாள். தனது உடன்பிறப்புகளை எழுப்ப எத்தனித்து பின்னர் கைவிட்டாள். 

"பாத்தியா? என்ன சொன்னாங்க?" என சிவகாமியின் குரல் கேட்டது.

"அப்பா சொன்ன மாதிரி பாட்டிதான். ஆனா, நம்ம அம்மாவோட பாட்டி. அது நம்மள விடாதாம். பரம்பர பரம்பரையா கூடவே வருமாம். அம்மாவுக்குப் பிறகு அம்மாவோட வாரிசுக்கிட்ட போயிருமாம். பொம்பள பிள்ளைங்கக்கிட்டதான் போவுமாம். நம்ம வள்ளிக்கிட்டேயும் சொல்லி வைக்கணும். குடும்பத்துல ஏதாவது குழப்படி பண்ணிக்கிட்டே இருக்குமாம்," என்ற சிவத்தின் குரலில் கவலைத் தெரிந்தது.

"என்னங்க இப்படிச் சொல்றீங்க? இவ்ளோ நாள் அத்தை நல்லா தானே இருந்தாங்க?" என்று அமுதாவும் கவலையுடன் கேட்டாள்.

அப்போது பாட்டியின் சிரிப்பொலி மீண்டும் பயங்கரமாக ஒலித்தது. அது தூங்கிக்கொண்டிருந்த சிறுவர்களையும் எழுந்து உட்கார வைத்தது. விழித்த சிறுவர்கள் ஒரு கணம் செயலற்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் தாங்கள் இருப்பது கடைசி அறை என்பது நினைவு வரவே, நீ நானென்று கதவைத் தள்ளிக்கொண்டு சமையலறைக்கு ஓடினர். அங்கே சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் இடையில் பாட்டி விகாரமாக நின்றுக்கொண்டிருந்தார்.

"டேய்! ஏய்!" என பயங்கர ஒலியை எழுப்பிக்கொண்டே பாட்டி அட்டகாசமாக சிரிக்க அங்கிருந்த அனைவருக்குமே மெய் சிலிர்ந்தது. பவானிக்குப் பாட்டியின் கோலம் பயத்தை அளிக்கவே அவளது கை கால்கள் வெலவெலத்துக் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துக்கொண்டிருந்தது. சிவம், சிவகாமி, அமுதா மூவரும் பாட்டியை அதிர்ச்சியுடன் நோக்கினர். சத்தமான அரைவை அறையில் இருக்கும் தாத்தாவிற்கும் பாலாவிற்கும் பாட்டின் குரல் கேட்க வாய்ப்பில்லைதான்.

"என்னடா? என்னை அனுப்பப் பார்க்கிறியா? உங்கப்பனுக்குத்தான் அறிவில்ல. உனக்குமா இல்ல?" என லேசாகக் குதித்துக்கொண்டே தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு சிவத்தை நோக்கி தனது கேள்விக்கணைகளை வீசினார் பாட்டி. சற்றுத் தடுமாறிய சிவம் பின்னர் சுதாரித்துக்கொண்டு பாட்டி நோக்கிச் சென்றார்.

"நீ இன்னும் இங்கதான் இருக்கியா? உன்னை அன்னிக்கே போகச் சொன்னாங்க தானே?" என்று குரலை உயர்த்தினார். அவர் அப்படிப் பாட்டியை மரியாதைக் குறைவாகப் பேசியதுச் சிறுவர்களுக்கு வியப்பளித்தது.

"யாருடா போவணும்? இது என் வீடு! நீங்கள்லாம் என் பிள்ளைங்க!" எனப் பாட்டி கண்ணீர் விட ஆரம்பித்தார். பவானிக்கு மனம் உருகியது. அவளது கண்ணீர் நின்றபாடில்லை. நடந்துகொண்டிருக்கும் களேபரத்தில் அதனை யாரும் கவனிக்கவும் இல்லை.


....தொடரும்........



வியாழன், 17 செப்டம்பர், 2015

அவளும் அதுவும்... (பாகம் 9)


4.நாடகம்

பேச்சியம்மனுக்குப் படையல் போட்டு ஆறு வாரங்கள் ஓடி முடிந்தன. சிவகாமி அத்தைக்குப் பிறந்தநாள் வந்தது. திருமணமாகி வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அவரின் கணவர் குமார் அதனை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்தார். அத்தை இன்னமும் பாட்டி வீட்டிலேயே இருந்ததால் அங்கேயே விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாட அனைவரும் முடிவு செய்தனர். பிறந்தநாள் விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பாட்டி அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு விவரம் சொல்லி அழைப்புவிடுத்தார். இது போன்ற விழாக்காலங்களில் அக்கம் பக்கம் உள்ளோர் அனைவரும் சேர்ந்து பலகாரங்கள் செய்வதும், வீட்டை அலங்கரிப்பதில் உதவி செய்வதும் அந்தப் பகுதிவாழ் மக்களின் வழக்கமாக இருந்தது.

இதுபோன்று பிறந்தநாள்களை அந்தக் குடும்பத்தில் விமரிசையாக கொண்டாடுவதில்லை என்பதனால் குழந்தைகளும் அதனை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்தனர். குழந்தைகள் அனைவருக்கும் குமார் மாமா புத்தாடை வாங்கித் தந்து அவர்களது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கினார். விழாவிற்கு முதல் நாளே அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து இனிப்பு பலகாரங்கள் செய்துகொடுப்பதற்காக பெண்கள் பாட்டி வீட்டு சமையல் அறையில் தஞ்சம் புகுந்தனர். வீட்டின் பெண் குழந்தைகளும் அவர்களுக்குத் துணையாக ஓடியாடி வேலை செய்தனர். சசி, ராம், இந்திரன் மூவரும் வீட்டை அலங்கரிப்பதில் முனைந்தனர். 

மறுநாள் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடந்துக்கொண்டிருந்தது. அனைவரும் புத்தாடை உடுத்தி, அலங்காரம் செய்து, உண்டு மகிழ்ந்திருந்தனர். குமார் மாமா தனது குறுந்தட்டுகளிலிருந்துப் புதுப்புதுப் பாடல்களை ஒலியேற்ற குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆட ஆரம்பித்தார்கள். சிவமும் தாளத்திற்கு ஏற்றவாறு தலையாட்டி, கைத்தட்டிக் குழந்தைகளை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். அதனைப் பார்த்த குமார் மாமா ஒலிப்பெருக்கியின் சத்தத்தைக் கூட்டினார். அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத சிவம் எழந்து ஆட ஆரம்பித்தார். சிவம் ஆடுவதைப் பார்த்தா குமாரும் அவருடன் சேர்ந்து ஆடத் தொடங்கினார். அவர்கள் இருவரைத் தொடர்ந்து சில நண்பர்களும் இணைந்துக்கொண்டார்கள்.  

இப்படியாக அனைவரும் ஆடலிலும் பாடலிலும் திளைத்திருந்த வேளையில் திடீரென பாட்டி தனது இரு கைகளையும் சுழற்றி சுழற்றி சூறாவளியென ஆடிக்கொண்டே கூட்டத்திற்குள் நுழைந்தார். பாட்டி ஆடுவதைக் கண்ட சிவம் உற்சாகத்துடன் அவருடன் இணைந்து ஆடத்தொடங்கினார். சில வினாடிகள் கழித்தே பாட்டியின் முகத்திலும் அசைவிலும் இருந்த வேறுபாட்டினைச் சிவம் உணர்ந்தார். "அம்மா! அம்மா!" என சிவம் அழைக்க, பாட்டி அதனைக் காதில் வாங்கமலே கைகளை வீசி வீசி ஆடிக்கொண்டிருந்தார். அவரின் இலக்கற்ற ஆட்டம் குழந்தைகளை விலகி நிற்க வைத்தது. ஒரு கணம் அனைவரும் ஆடுவதை நிறுத்தி ஒதுங்கி நின்று பாட்டியைக் கவனிக்கலானார்கள். சிவம் குறிப்புக்காட்ட குமார் சட்டென வானொலியை நிறுத்தினார். அப்போதும் பாட்டியின் ஆட்டம் நிற்கவில்லை. பாடல் இல்லாமலேயே அவர் முன் போலவே அசுரத்தனமாக ஆடிக்கொண்டிருந்தார். பாடல் நின்றுவிட்டதை சில வினாடிகள் கழித்தே அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

"அடேய்! பாட்டைப் போடு! ஆடுங்கடா! எல்லாரும் சந்தோஷமா ஆடுங்க!" என்ற பாட்டியின் குரலின் இருந்த மாற்றத்தை அனைவரும் கவனிக்கவே செய்தனர். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதது என்பதை அறிந்த குழந்தைகள் இரண்டடி பின்னடைந்தனர். 

"என்னம்மா ஆச்சி உங்களுக்கு?" என்று சிவம்தான் முன் வந்து கேட்டார். பாட்டியின் கால்கள் அப்போதும் தரையில் நிலையாக நிற்கவில்லை. மெதுவாகக் குதித்துக்கொண்டே சிவத்தின் கேள்விக்குப் பதிலாகப் பயங்கர சிரிப்பை வெளியிட்டார். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த தாத்தா,

"மறுபடியும் வந்திட்டியா? உன்னைத்தான் எதிர்ப்பார்த்திருந்தேன். என்ன தைரியம் இருந்தா அன்றைக்கு என்னையே ஏமாத்தியிருப்பே?" என்று கோவத்துடன் முன் வந்தார். சுற்றியிருந்தவர்கள் ஏதும் புரியாமல் முழித்தனர். "என்னப்பா?" என்று சிவம்தான் மீண்டும் கேட்டார்.
பாட்டி பதிலேதும் சொல்லாமல் இன்னமும் அர்த்தமின்றிச் சிரித்துக்கொண்டிருந்தார். இங்கே நடப்பவை எதுவும் தமக்கு விளங்கவில்லை என்பதன் அறிகுறியாகக் குமார் தனது தோள்களையும் புருவங்களையும் லேசாகத் தூக்கி சைகை மொழிப் பேசினார். 

வள்ளியும் சிவகாமியும், "என்னப்பா? என்ன ஆச்சு?" என்றுக் கூட்டத்தை விலக்கிக்கொண்டுத் தந்தையின் அருகே வந்து நின்றனர். 

"நல்லா இருக்கிற குடும்பத்துல குழப்படிப் பண்ணப் பார்க்கிறியா? இப்ப போகப் போறியா? இல்லையா?" என்று இரண்டடி பாட்டியை நோக்கி முன்னே வைத்தார். இப்போது பாட்டியின் சிரிப்பு நின்று முகத்தில் கலவரம் தோன்றியது.

"டேய், யாருக்கிட்ட என்ன பேசுற? உன் குடும்பத்த காவந்துப் பண்ற தெய்வம்'டா நானு!" என ஆவேசமாக இரைந்துக் கூறினார்.

"தெய்வமா? அடி செருப்பால! டேய் சிவம், வெளியில இருக்கிற செருப்பைக் கொண்டா! இன்னைக்கு அடிக்கிற அடில இனி இவ இந்த வீட்டு வாசப்படியத் தொடக்கூடாது!" தாத்தாவின் தொனியில் கோவம் உச்சத்தைத் தாண்டியது. சிவம் கண்ணசைக்க, அதனைப் புரிந்துக்கொண்ட ,,இந்திரன் வெளியில் இருந்த தாத்தாவின் செருப்பைக் கொண்டு வந்து நீட்டினான். பெண்கள் இருவரும் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றனர். குமார் கைகளைக் கட்டியபடி ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தார். பாவம், அவர் வேறு என்னதான் செய்வார்? செருப்பை வாங்கிக்கொண்ட தாத்தா இன்னும் இரண்டடி முன்னெடுத்தார்.

"ஏய்! என்கிட்ட வராத! உங்கப்பன் புத்தியை இழந்துட்டான். அவனை என்கிட்ட வரவேண்டாம்'னு சொல்லுடா," என சிவத்தை நோக்கிக் கதறினார் பாட்டி. 

"நீங்க யாரு? ஏன் திரும்ப திரும்ப வர்றீங்க? " என்று சிவம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

"தெய்வம்'டா. உங்களையெல்லாம் காவந்துப் பண்ற தெய்வம்!"

இப்போது தாத்தா பொறுமையிழந்தார். "திரும்பத் திரும்பப் பொய்யா சொல்ற?" எனப் பாய்ந்துச் சென்றுப் பாட்டியின் முடியைக் கொத்தாகப் பிடித்தார். ஒரு கையில் பாட்டியின் முடி சிக்கியிருக்க, மறு கையில் அடிப்பதற்குத் தயாராகச் செருப்புப் பாதி உயர்ந்து நின்றது. இந்த விபரீதச் சூழலை எப்படி சமாளிப்பது என யாருக்கும் புலப்படவில்லை. 

"கையை எடுடா! தப்பு செய்ற! ரொம்ப தப்பு செய்ற!" என அலறினார் பாட்டி. 

"யாரை மரியாதை இல்லாம பேசுற?" என தாத்தா பாட்டியின் தலைமயிரை இழுத்து, செருப்பை ஓங்கினார். ஒரு கணம்தான்! ஒரே ஒரு கணம்தான்!

"ச்சே! என்ன விளையாட்டு! கையை எடுங்க!" என பாட்டித் தாத்தாவின் கையைத் தட்டிவிட்டார். அவரது இன்னொரு கையில் இருந்த செருப்பை பாட்டி நிச்சயமாகக் கவனிக்கவில்லை. பாட்டியின் திடீர் மாறுதல் அனைவரையும் வியக்க வைத்தது.

"என்ன? என்ன எல்லாரும் என்னையே பாக்கறீங்க?" என ஆடிய ஆட்டத்தில் சற்றே தளர்ந்த தனது சேலையைச் சரிசெய்தார் பாட்டி. அவரது முகத்தில் வெட்கம், குழப்பம், சந்தேகம் என அனைத்தும் ஒருங்கே கலந்திருந்தன. சுற்றியிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். கைத்தேர்ந்த நடிகையைப் போல் பாட்டி சட்டென தனது குரலையும் முகபாவத்தையும் மாற்றிக்கொண்டது சற்று வினோதமாகத்தான் இருந்தது.

"செருப்ப கைல எடுத்தவுடன் ஓடிப் போய்விட்டது பார்த்தியா?" என லேசான வெற்றிப் புன்னகையுடன் தாத்தா நகர்ந்துச் சென்றார். அவர் அப்பால் இரண்டடி எடுத்து வைத்ததும், 

"என்னை அடிக்க செருப்பா எடுத்துட்டு வர்ற? உங்களுக்கெல்லாம் நல்லது பண்ணத்தானே நான் வந்தேன்? என்னையே அடிக்க வர்றே?" என்று கோபமும் கண்ணீரும் ஒருசேர‌ பாட்டி திடீரென அழுதுக்கொண்டே குதித்தார். சட்டென மீண்டும் மாறிய பாட்டியை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

"இன்னும் போகலையா நீ?" என தாத்தா மீண்டும் அதே செருப்பை நீட்டிகொண்டு விரைந்து வந்தார். அவர் மீண்டும் பாட்டியின் குழலைப் பிடித்ததுதான் தாமதம், "சொல்லிக்கிட்டே இருக்கேன், என்ன விளையாட்டு? சும்மா சும்மா எதுக்கு முடியைப் பிடிச்சு இழுக்குறீங்க?" என பாட்டி பழைய மாதிரி ஆனால் சற்று கடுப்புடன் பேசினார். இப்படி அந்நியன் பட கதாநாயகன் போல் பாட்டி நொடிக்கரம் மாறியது வியப்பாக இருந்த போதிலும் பயத்தையும் கலக்கவே செய்தது.

"என்ன விளையாடுற? என்கிட்ட உன் வேலையைக் காட்டுறியா?" என தாத்தா பாட்டியின் குழலை விடாமல் ஆத்திரத்துடன் செருப்பை மீண்டும் தூக்கினார்.

எதுவும் புரியாமல் சுற்றி நின்றவர்களைப் பார்த்த பாட்டி, "என்ன சிவம்? உங்கப்பாவுக்கு என்ன ஆச்சு? என் முடியை விடச்சொல்லு!" என்று கலவரத்துடன் கூறினார்.

"விடுங்கப்பா! இது அம்மாதான். அது போயிருச்சி. நீங்க என்ன முடியைப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க? எல்லாரும் பாக்கறாங்க. விடுங்க," என தாய்க்கு ஆதரவாகப் பேசினார். "விடுங்க மாமா," என குமாரும் ஒத்து ஊதினார். தாத்தாவும் சற்று தயங்கி நின்று பின்னர், "எல்லாம் நாடகம்" எனக் கூறிக்கொண்டே வரவேற்பறையைத் தாண்டி தனது அரவை அறைக்கு விருவிருவெனச் சென்றுவிட்டார். பாட்டியும் ஒன்றும் நடவாதது போல், "வந்தவங்க எல்லாம் சாப்டாங்களா?" எனக் கேட்டுக்கொண்டே சமையலறையை நோக்கிச் சென்றார்.

"எல்லாரும் போய் விளையாடுங்க," என முருகன் குழந்தைகளை அனுப்பி வைத்தார். பெரியவர்கள் அறுவரும் (சிவம், அமுதா, சிவகாமி, குமார், வள்ளி, முருகன்)மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

...தொடரும்...



செவ்வாய், 8 செப்டம்பர், 2015

அவளும் அதுவும்.... (பாகம் 8)



குழந்தைப் பிறந்த முப்பதாம் நாள். அவர்கள் குல வழக்கப்படி பேச்சியம்மனுக்குப் படையல் போடும் நாள் வந்தது. அதற்கு முன்பாகவே தங்கள் தாயார் அமுதா வாங்கி வந்த சிகப்பு, வெள்ளைப் பாசிமணிகளை வாணியும், பவானியும் சேர்ந்துக் கோர்த்துக் குழந்தைக்குச் சங்கிலியும், கை வளையலும் செய்துவைத்துவிட்டனர்.  அன்று வீடே விழாக்கோலம் பூண்டது. உறவினர்கள் அனைவரும் காலையிலேயே வந்துச் சேர்ந்தனர். ஆண்கள் படையலுக்குத் தேவையானப் பொருட்களைத் தேடி ஓடி வாங்கி வந்தனர். பெண்கள் வீட்டு வேலையிலும் சமையலிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர்.

அமுதாவின் கணவனும் ஏழு சிறுவர்களின் தகப்பனுமான சிவம் அங்கும் இங்கும் அலைந்துத் திரிந்துக் கடைசியாகப் பாட்டிக் கேட்ட கறுப்புச் சேவலைக் கொண்டு வந்தார். தன் மூத்த மகள் வள்ளியையும், மருமகள் அமுதாவையும் உடன் அழைத்துக்கொண்டு, கால்கள் கட்டப்பட்டக் கறுப்புச் சேவலை ஒரு கையிலும், மறுகையில் அரிவாளையும் தூக்கிக்கொண்டுப் பாட்டி கொல்லைப்புறத்திற்குச் சென்றார். சிறுவர்கள் யாரும் வீட்டின் பின்புறம் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொல்லையில், குழந்தையின் தொப்புள்கொடி புதைக்கப்பட்ட இடத்தில் சேவலைப் படுக்க வைத்து, ஒரே வெட்டில் அதன் கழுத்தை அறுத்தார் பாட்டி! குழாயிலிருந்துத் திறந்துவிடப்பட்ட நீர் போல வெட்டப்பட்டச் சேவலின் கழுத்திலிருந்து இரத்தம் பீய்ச்சியடித்தது. தொப்புள்கொடி புதைக்கப்பட்ட நிலம் சேவலின் உதிரத்தில் நனைந்து ஈரமானது. 

கழுத்தறுப்பட்டச் சேவலை எடுத்த வந்த பாட்டி, ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுடுநீரில் அதனைப் போட்டார். கழுத்தறுப்பட்ட நிலையிலும் அந்தச் சேவல் இன்னமும் துடித்துக்கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, பரபரவென சேவலின் இறகுகளைப் பிய்த்தெறிந்தார். துகில் உரித்த சேவலின் வயிற்றுப்பகுதியின் நடுவே கத்தியாய் கீறி, அதன் உடலை இரண்டாகப் பிளந்தார். அதனுள்ளே இருந்த கழிவுகளையும், தேவையற்ற உடலுறுப்புகளையும் வெளிக்கொணர்ந்துக் குப்பையில் வீசினார். நன்றாகச் சுத்தம் செய்த பிறகு அதனை வழக்கத்தைவிட பெரியப்பெரியத் துண்டாக வெட்டினார். சேவல் குழம்பு தயாரானது.

மேகலா, வாணி, பவானியுடன் வள்ளியின் மகள் குமாரியும் சேர்ந்துக்கொண்டாள். நால்வரும் பெரியவர்களுக்கு உதவியாக்க் காய்கறிகள் நறுக்கி சமையலுக்கு உதவி செய்தனர். அன்று காலை விடிந்ததிலிருந்து அந்த வீட்டில் அனைவருமே மிகப் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தனர். மாலை ஆறு மணிக்கெல்லாம் அனைவரும் குளித்துத் தயாராகிவிட்டனர்.

மாலை ஏழு மணியளவில் சிவகாமி படுத்திருக்கும் இரண்டாவது அறையில் நீண்ட தலைவாழை இலை போடப்பட்டது. இலை நிறைய வெள்ளைச் சோறு, வாசம் மிகுந்த கருவாட்டுக் குழம்பு, சமைத்தக் கோழிக் கால்கள், அவித்த கோழி முட்டைகள், வறுத்த கருவாடு துண்டுகள், காது வடிவிலான ‘கப்பு’ ரொட்டி, கீரை வகைகள், வாழைப்பழம், வெத்தலைப் பாக்கு, சுருட்டு, இளநீர், கொழுக்கட்டை, அரிசிமாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டை விளக்கு ஆகியவை நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே சிறிய மது புட்டிலும் இருந்தது. படையலுக்குத் தேவையானச் சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, குழந்தைக்குப் புதுத்துணிகள், கறுப்பு வளையல்கள், கோர்த்து வைக்கப்பட்டப் பாசிமணி சங்கிலி, வசம்பினால் செய்யப்பட்ட காப்பு, வெள்ளி அரநாற்கயிறு ஆகியவைகளும் அவ்விடம் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

ஆண்கள் அந்த அறைக்குள் வர தடைவிதிக்கப்பட்டது. அதே போல் இலையில் பரிமாறப்பட்ட எந்த உணவையும் ஆண்கள் எவரும் உண்ணவோ, தொடவோ கூடாது எனவும் கண்டிப்புடன் கூறப்பட்டது. அறைக்குள் போடப்பட்ட படையல் போலவே வீட்டின் கொல்லைப்புறத்தில் தொப்புள் கொடி புதைத்த இடத்திலும் இன்னொரு படையல் போடப்பட்டது. படையல் போட்டு முடித்தவுடன் குழந்தைக்குப் புத்தாடைக் கட்டினர். வளையல், பாசிமணி, தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசு, மோதிரம், புத்தாடை என ஆளாளுக்குக் குழந்தைக்குப் பரிசளித்து மகிழ்ந்தனர். 

அறையில் போடப்பட்ட படையல் உணவு முழுவதையும் பெண்கள் சாப்பிட்டு முடித்துவிடவேண்டும் என பாட்டி உத்தரவிட்டார். பெண்களும் சிறுமிகளும் சேர்ந்துச் சாப்பிட்டும் கூட படையல் உணவு முழுவதும் முடிக்க முடியாமல் திணறினர். வெற்றிலைப்பாக்குச் சாப்பிடாதவர்களும், சம்பிரதாயத்திற்காகச் சிரமப்பட்டு அதனைக் கடித்து விழுங்கினர்.

அனைத்தும் சாப்பிட்ட பிறகு கடைசியாக சுருட்டும் மது பாட்டிலும்தான் மிஞ்சியது. பாட்டி வந்துப் பார்த்துவிட்டு, அதனையும் எப்படியாவது முடிக்கச் சொன்னார். ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்த அமுதா முன் அனுபவம் மிக்கதால், முதலில் அவள்தான் சுருட்டை பற்ற வைத்தாள். அதனை எப்படிப் புகைக்க வேண்டும் என சிவகாமிக்குச் சொல்லிக்கொடுத்தாள். பிள்ளைப் பெற்ற புண்ணியவதிகள் சேர்ந்துப் புகைத்து முடிந்து, மது பாட்டிலையும் காலி செய்தனர். அந்த வீடு முழுவதுமே சிரிப்பொலியும் மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்தது. ஆண்கள் வீட்டிற்கு வெளியே ஊஞ்சல் அருகில் கூடுதல் நாற்காலிகள் போட்டமர்ந்துக் கதைப்பேசினர். தாத்தா வரவேற்பறையில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது திடீரென்று, வீடே அதிரும் வண்ணம் கணீரென சிரிப்பொலி கேட்டது. அனைவருமே சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததால் ஒரு கணம் அதனை யாருமே பொருட்படுத்தவில்லை. ஆனால், வினோதமாகத் தொடர்ந்து ஒலித்த சிரிப்பும், அதனைத் தொடர்ந்து வந்த கைத்தட்டலும் மற்றவர்கள் மத்தியில் சில நொடிகள் அமைதியை ஏற்படுத்தியது. மறுகணம், அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர். அங்கே பாட்டித் தனியாகக் கையைத் தட்டித்தட்டி, லேசாக தரையில் குதித்தபடி பயங்கரமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்.  அவரது முகம் அவரது வயதைக் காட்டிலும் பத்து வயது கூடுதல் முதுமையைக் காட்டியது. ஆனால், அவரது கண்களிலும் உதடுகளிலும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

”என்னம்மா? என்ன ஆச்சு?” வள்ளிதான் முதலில் கேட்டாள். பாட்டி பதில் சொல்லவில்லை. அவர் இன்னமும் சத்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துப் பார்த்துச் சிரித்தார். அவரது சிரிப்பு பவானியின் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கியது. அதற்குள்ளாக, தாத்தா எழுந்து வந்துவிட்டார். 

“என்ன? என்னாச்சு?” என்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தார். தாத்தாவைப் பார்த்ததும் பாட்டியின் சிரிப்பு அதிகமாகியது.

“எல்லாரும் நல்லாயிருக்கீங்க….” என்று ஆனந்தத்தில் தொடங்கிய பாட்டியின் பேச்சு, “இவ்ளோ நாளா என்னை மறந்துட்டீங்களே?” என அழுகையில் முடிந்தது. கூட்டத்தில் அனைவரும் குழம்பித் தவித்தனர். தாத்தாதான் முதலில் சுதாரித்தார்.

“யாரு நீ? இங்க எதுக்கு வந்த?” என்று சாந்தமாகக் கேட்டார். அவரது கண்களில் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் தெரிந்தது. இப்பொழுது பாட்டி விசித்திரமாக அழுதுக்கொண்டே சிரித்தார்.

“நான் யாருன்னு தெரியலையா? உன் குடும்பத்த இத்தன காலமும் நாந்தானே காவந்துப்பண்ணி வரேன். இவ்ளோ நாளா எல்லாரும் என்னை மறந்துட்டீங்க. இன்னைக்குத்தான் என் நினைப்பு வந்திருக்கு.” என கொஞ்சம் அழுதும், கொஞ்சம் சிரித்தும் மாறி மாறிப் பேசினார் பாட்டி.

குதித்துக்கொண்டே இருந்த பாட்டி, “எனக்கு காலெல்லாம் வலிக்குது. காடு மேடு எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வந்தேன். உங்களையெல்லாம் பார்க்கணும்னு பறந்து வந்திருக்கேன். என்னை உட்கார வையுங்க, என்னை உட்கார வையுங்க,” என குதித்தார்.

அமுதாவும் வள்ளியும் அவரது தோளைப் பற்றி வரவேற்பறைக்குக் கொண்டுச் சென்றனர். அங்குள்ள நாற்காலியில் அவரை உட்கார வைக்க முயன்ற போது பாட்டி அதனை மறுத்துவிட்டார்.

“இது வேணாம்! எனக்கு இது வேணாம். நல்லா காலை நீட்டி உட்காரணும்,” என்று சொல்லிக்கொண்டே படக்கென்று கீழே அமர்ந்துவிட்டார். இரு கால்களையும் நீட்டி, பின்னர் ஒரு காலில் மேல் இன்னொரு காலை வைத்துக்கொண்டார். கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியபடி சுற்றிநின்ற கூட்டத்தைக் கண்ணோட்டமிட்டார். எதனையோ நினைத்து மகிழ்ச்சியில் தலையாட்டினார்.

“எம்பிள்ளைங்க எல்லாரும் நல்லாயிருக்கீங்க.! உங்களுக்குக் காவலா நான் இருக்கேன்!” என்று ஆனந்தம் பொங்கக் கூறினார்.

“யாரு நீங்க?” இப்பொழுது சிவம் கேட்டார்.

“இன்னுமாடா தெரியல? உங்கப்பனைக் கேளு. அவனுக்குத் தெரியும். தினம் பூசைப் போடுறான்ல…?” என்று சொல்லிக்கொண்டே பவானியைப் பார்த்தார். பவானிக்கு உடம்பெல்லாம் உதறியது. மேகலாவிற்குப் பின்னால் ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்தாள்.

“ஹ…ஹ…ஹா… பயப்படாதே’டா. கெட்டிக்காரி… எங்க போனாலும் பொழைச்சுக்குவா… இங்க வா…” என்று பவானியை அழைத்தார். அனைவரின் கண்களும் பவானியை நோக்கின. பவானி மேகலாவின் கரங்களை இறுக்கப் பற்றிக்கொண்டாள். அவள் கன்னங்களும் இரண்டும் நனைந்திருந்தன. அவள் எப்போது அழ ஆரம்பித்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. 

“கூப்பிடுறாங்கல்ல, வா!” என்று சிவமும் சேர்ந்து அழைத்தார். மேகலா பவானியின் கையை முன்னே இழுத்துவிட்டாள். கண்களில் நீர் வழிந்தோட பவானி பாட்டியின் முன்னே நின்றாள்.


"திருநீறு கொண்டுவாங்க. எம்பிள்ளைங்களை எல்லாம் நான் ஆசீர்வாதம் பண்ணனும்! பயப்படாதே... நான் என்றைக்கும் உங்களுக்கெல்லாம் காவலா இருப்பேன்," என்று சுற்றி நின்றவர்களைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார் பாட்டி. அதற்குள் வள்ளி பூஜையறையில் இருந்த திருநீற்றுச் சிமிழைக் கொண்டுவந்துக் கொடுத்தாள். அதனைக் கைகளால் பெறும்போதே பாட்டியின் கைகள் வெகுவாக ஆட்டம் காணுவதை அனைவரும் கவனித்தனர். சிமிழியிலுள்ள திருநீறு மேலும் கீழும் சிதற, அதனை உடனே தரையில் வைத்துவிட்டார் பாட்டி. மீண்டும் அனைவரையும் கண்ணோட்டமிட்டவாறு சைகையால் பவானியை அழைத்தார். பவானி முன்னே சென்று மண்டியிட்டு பாட்டியின் முன்னே அமர்ந்தாள். நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து பவானியின் நெற்றியில் பூசி, "நல்லாயிரு" என்று ஆசீர்வதித்து அனுப்பினார் பாட்டி. அடுத்து மேகலாவை அழைத்தார். அவளுக்கும் திருநீறு பூசப்பட்டது. இப்படியாக ஒருவர் பின் ஒருவராக பாட்டியின் முன் மண்டியிட்டு வணங்க, அனைவருக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கப்பட்டது.


தன் பங்குக்கு சிவமும் பாட்டியின் முன்னே வந்து அமர்ந்தார். "நீ நல்லா இருப்பப்பா. இனி மேலும் என்னைப் பட்டினி போடாதே ராசா. காலங்காலமா உன் குடும்பத்தைக் காவந்துப் பண்றேன். என்னைப் பசியா அலைய விடாதே. இந்தக் கிழவி தாங்கமாட்டா. பச்சப்புள்ள இருக்கிற வீடு. தெம்பு இருந்தாத்தான் என்னால காவக்காக்க முடியும். முடியுமா உன்னால? அம்மாவாசைக்கு அமாவாசை எனக்குப் படையல் போட முடியுமா உன்னால?" எனக் கண்ணீரும் கெஞ்சலுமாய் கேட்டார் பாட்டி. அவர் 'பச்சப்புள்ள' என்று சொன்ன விதம் அனைவர் வயிற்றிலும் புளியைக் கரைக்கவே செய்தது.


"ஒவ்வொரு அமாவாசையுமா? முயற்சி பண்றேன்," என்றார் சிவம்.


"உன் குடும்பத்தையே காவந்துப் பண்றேன். எனக்கு இதைச் செய்யமாட்டியா? வாக்குக்கொடு! செய்யறேன்னு வாக்குக்கொடு!" இப்பொழுது பாட்டியின் குரலில் சற்று பயங்கரம் தொனித்தது.


"செய்யறேன்னு சொல்லு அண்ணே," வள்ளி சத்தமாகவேச் சொன்னாள்.


"சரி, செய்யறேன். ஆனா, என் பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது," சிவம் வாக்குக்கொடுத்தார். "......ஹா..." என்று சிரித்துக்கொண்டே பாட்டி சிவத்திற்குத் திருநீறு பூசிவிட்டார்.


"எனக்கு ரொம்பெ களைப்பா இருக்கு. தண்ணீ கொடுங்க, நான் போறேன். உங்களையெல்லாம் பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்....ரொம்பெ சந்தோசம்..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வள்ளி வெள்ளிக் கிண்ணத்தில் தண்ணீர் கொண்டுவந்துக் கொடுத்தாள். நடுங்கும் கைகளால் பாதியைக் கீழே சிந்தி, மீதியை வாயிலும், மேலிலும் சிந்திக் குடித்த பாட்டி வேகவேகமாக மூச்சினை உள்ளே இழுத்துவிட்டார். வினாடிகளில் மயக்கமுற்று கீழே விழுந்தார். அவர் தலை தரையில் சாய்வதற்குள் சிவம் ஓடிச்சென்று பாட்டியைத் தாங்கிக்கொண்டார். சில வினாடிகள்தான்!


"ஏன்'டா என்னைப் பிடிச்சிருக்க? யாரு தண்ணிய என் மேல கொட்டுனது?" என சிவத்தின் கரங்களை உதறியபடி எழுந்து நின்றார் பாட்டி. அனைவரும் வாயடைத்து நின்றனர். என்ன சொல்வதென்று அங்கு யாருக்கும் விளங்கவில்லை. வழக்கம் போல வள்ளிதான் முதலில் சுதாரித்தாள்.



"இந்தப் பிள்ளைங்களுக்கு இதே வேலை! ஓடி விளையாடுறேன்னு தண்ணிய மேல கீழ கொட்டி வச்சிருக்குங்க," என்று சொல்லியபடியே கீழே கொட்டிக்கிடந்த தண்ணீரையும் திருநீற்றையும் துடைத்துச் சுத்தம் செய்தார். பெரியவர்கள் சாடைமாடையாய் கண்களால் ஏதோ பேசிக்கொண்டனர். சிறுவர்கள் பேந்தப் பேந்த முழித்தனர். அன்றைய நிகழ்வு நிறைவடையா முற்றுப்புள்ளி போல் நீளப்போகிறது என்பதை அன்று எவரும் அறியவில்லை
...தொடரும்...

அவளும் அதுவும்... (பாகம் 7)




3. பிள்ளை பிறப்பு
அன்று வீடு களைக்கட்டியிருந்தது. பாட்டியின் கடைசி மகன் சிவகாமி தலைப்பிரசவத்திற்காகத் தாய்வீடு வந்திருந்தாள். அத்தை சிவகாமி வந்துவிட்டாலே குழந்தைகள் உல்லாசத்தில் மிதப்பர். சிவகாமியும் குழந்தைகளின் மனம் அறிந்து வரும் போதெல்லாம் விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள், பழ வகைகள் என வகை வகையாக வாங்கி வருவாள். அதற்கு நன்றி கூறும் வகையில் குழந்தைகளும் சிவகாமியை விழுந்து விழுந்து கவனிப்பர். சிவகாமி திருமணமாகிச் சென்ற பிறகு அந்த வீடே சிறிது காலம் வெறிச்சோடித்தான் கிடந்தது. இப்போது சிவகாமி மீண்டும் வந்துவிட்டாள். இனி பிரசவம் ஆகும் வரையில் அவள் இங்குதான் இருப்பாள்.

ஒருநாள் மாலை வேளையில், சிவகாமி பவானியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு அருகே இருந்த சீனன் கடைக்குப் பொருள் வாங்கச் சென்றாள். அவர்கள் கடைக்குச் செல்லும் வழியில் பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. பலகையினால் ஆன அந்த வீட்டைச் சுற்றிலும் புற்களும் காட்டுச்செடிகளும் ஆள் உயரத்திற்கு மண்டிக்கிடந்தன.  அந்த வீட்டைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு வேறு எந்த வீடுகளோ கடைகளோ இல்லை. பவானி அந்த வீட்டை பலமுறைக் கடந்துச் சென்றிருக்கிறாள். ஆனால், இந்த முறை ஏதோ ஒன்று அவளை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தது. திடீரென அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுள் உதித்தது. பவானி அந்தப் பாழடைந்த வீட்டையே திரும்பித் திரும்பிப் பார்ப்பதைச் சிவகாமி கவனித்தாள்.

”எதுக்கு அந்தப் பேய் வீட்டையே பார்க்குற?” என சிவகாமி கேட்டாள்.

“பேய் வீடா?” என ஆர்வமாக எதிர்க்கேள்விக் கேட்டாள் பவானி.

“உனக்குத் தெரியாதா? முன்னெல்லாம் சில நேரத்துல இராத்திரி அந்த வீட்ல தானாவே விளக்கெரியும். மனுசனுங்க யாருமே அந்த வீட்டுப்பக்கம் போகமாட்டாங்க. காலையில விளக்குத் தானாவே அணைஞ்சிடும்,” என்று ஏதோ யோசித்தவாறு சொன்னாள் சிவகாமி. பவானி அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை; சிவகாமியும் எதுவும் சொல்லவில்லை.

சிவகாமி வந்த எட்டாவது தினத்தில் பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்ற செய்தி வீடு முழுக்கப் பரவியது. தாத்தா ஜாதகம் குறித்துக் குழந்தைக்குப் பெயர் சூட்டப்படவேண்டிய முதல் எழுத்துக்களை அனைவரிடமும் சொல்லி வைத்தார். ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக்கொண்டுத் தங்களுக்குத் தெரிந்த பெயர்களை எழுதித் தந்தனர். யார் சொன்ன பெயரைக் குழந்தைக்குச் சூட்டப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது. ஒரு அழகிய மாலை வேளையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடி வரிசையிடப்பட்ட பெயர்களை விவாதித்து இறுதியாக ‘கீர்த்தனா’ என்ற பெயரைத் தெரிவு செய்தனர்.

பிரசவித்த மூன்றாம் நாள் சிவகாமி கைக்குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள். புதிய குடும்ப அங்கத்தினராகச் சேர்ந்திருக்கும் கீர்த்தனாவைப் பார்ப்பதற்காகச் சிறுவர்கள் அனைவரும் வீட்டு வாயிலில் ஆவலுடன் காத்துக்கிடந்தனர். சிவகாமியை வரவேற்பதற்காக, பின்புறமுள்ள பெரிய வீட்டிலிருந்தும் பெண்கள் வந்திருந்தனர். அவர்களுடன் அவரிகளின் சிறிய பிள்ளைகளும் வந்திருந்தனர். பாட்டி உட்பட ஐந்து பெரிய பெண்கள் சேர்ந்து சிவகாமிக்கும் குழந்தைக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்தனர். பெரியவர்கள் அனைவரும் ஆளாளுக்குக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினர்.  

பாட்டி ஒரு வாளி நிறைய மஞ்சள் தண்ணீர் நிரப்பி முன் வாசலிலும், பின் வாசலிலும் வைத்தார். இனி வீட்டிற்குள் வரும் அனைவரும் மஞ்சள் தண்ணீரில் கால் கழுவிய பின்னரே உள் நுழைய வேண்டும் என கட்டளையிடப்பட்டது. அன்று இரவு கொல்லைப் புறத்தில் பெரியவர்கள் இரகசியமாக ஒன்றுக்கூடிக் குழந்தையின்  தொப்புள் கொடியைப் புதைத்தனர். 

குழந்தை வீட்டிற்கு வந்த மறுதினம் அவளுக்காகத் தொட்டில் கட்டப்பட்டது. அன்று இரவு குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு சிவகாமி கட்டியில் தன் தாயாருடன் படுத்திருந்தாள். அம்மா எங்களுடன் அதே அறையில் கீழே பாயில் படுத்திருந்தார். குழந்தை எந்நேரமும் பசியால் அழக்கூடும் என்பதால் சிவகாமி அரைத்தூக்கத்திலேயே இருந்தாள். அறையில் பூட்டப்பட்டிருந்த சிறிய விடிவிளக்கு மங்கலான மஞ்சள் நிற வெளிச்சத்தை அறையெங்கும் பரப்பிவிட்டிருந்தது. மின்விசிறியின் மெல்லிய ஒலியும், வீட்டு மேற்கூரையில் இரைக்காகச் சண்டையிடும் பல்லிகளின் சத்தமும் மிகத் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தன. வீட்டில் அனைவரும் உறங்கிவிட்டனர்.  அவ்வப்போது எழுந்து மகளுக்கு உதவியாக இருந்த பாட்டியும் அன்று இரவு எழவே இல்லை.

விடியற்காலை சுமார் மூன்று மணி இருக்கும். தாழிடப்படாத அறைக்கதவு லேசாகத் திறப்பதை மங்கலான ஒளியில் சிவகாமி பார்த்தாள். அரைத்தூக்கத்தில் இருந்ததாலோ என்னவோ அவளால் கண்களை முழுமையாகத் திறக்கவோ, எழவோ முடியவில்லை. பாதித் திறந்திருந்த கண்களின் வழி அவள் கதவையே பார்த்துக்கொண்டிருந்தாள். கரிய பெரிய உருவம் ஒன்று திறந்திருந்தக் கதவின் மெல்லிய இடைவெளியிலிருந்து வெளிப்பட்டது. சிவகாமியின் பார்வை மங்கிற்று. அந்த உருவம் குழந்தையின் தொட்டிலை நோக்கி வந்தது. அதன் நீண்டக் கூந்தல், அது பெண்ணுடையை உருவம் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் ஏனோ சிவகாமியால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அந்த உருவம் தொட்டிலை நெருங்கவும் சிவகாமியின் நெஞ்சம் படபடத்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். ஏனோ, அவள் உடல் அவளுக்கே பாரமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளால் விரலைக் கூட அசைக்க முடியவில்லை. செயலற்றவளாய் அவள் மங்கலான அந்த உருவத்தையே இயலாமையுடனும் கலவரத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள். 

அந்த உருவம் தொட்டிலில் கிடந்த குழந்தையை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்றது.  பின்னர் மெதுவாகத் தொட்டிலை ஆட்டியது. தொட்டிலில் கிடந்தக் குழந்தை உடலை நெளித்து முண்டுவது தெரிந்தது. பார்த்துக்கொண்டிருந்த அந்த உருவம் மெதுவாக சிவகாமியின் பக்கம் முகத்தைத் திருப்பியது. அதன் முகத்தைப் பார்க்கச் சக்தியற்றவளாய் சிவகாமி இரு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டாள். அவள் உடல் முழுக்க வியர்த்துக்கொட்டியது. அவள் மீண்டும் கண்களைத் திறந்த போது அந்த உருவம் அங்கில்லை. சிவகாமி அறை முழுக்க கண்களை உலவவிட்டாள். கதவு முன் போலவே மூடப்பட்டிருந்தது. நீண்ட பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது.

மறுநாள் தொட்டிலுக்கு அருகே பாட்டி செருப்பும் துடைப்பக்கட்டையும் கொண்டு வந்துப்போட்டார். இன்னொரு செருப்பு அறைக்கதவருகிலும், மற்றொன்று சிவகாமியின் கட்டிலுக்கருகிலும் வைக்கப்பட்டன. வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டிய பொருட்கள் படுக்கையறை உள்ளே கொண்டுவரப்பட்டது பவானிக்குக் குழப்பத்தையும் ஒருவித பயத்தையும் உண்டாக்கியது. 

“சிவகாமி அத்தை பிள்ளைப் பெத்திருக்காங்கல்ல, அதனால வீட்ல தீட்டுப் பட்டிருக்கு. பச்சப்புள்ள இருக்குற வீட்ல காத்துக் கருப்பு அண்டக்கூடாதுன்னு தாத்தாதான் விளக்கமாத்தையும் செருப்பையும் ரூம்ல வைக்கச் சொன்னாங்க.” ஒருநாள் இரவுத் தூங்கும் வேளையில் மேகலா சொன்னாள். 

“விளக்கமாறும் செருப்பும் வச்சா பேய் கிட்ட வராதா?” என்று சந்தேகம் தீராதவளாய் கேட்டாள் பவானி. 

“எனக்கே தெரியல. அப்படித்தான் இருக்கும் போல. கே.எல். பாட்டிக்கூட அப்படித்தான் சொல்லியிருக்காங்க,” என்று முடித்தாள் வாணி. 

அன்றிலிருந்து பவானி படுக்கும் போது, அறைக்குள் போடப்பட்டிருக்கும் செருப்புக்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் படுத்துக்கொண்டாள். செருப்புத் தனக்குப் பாதுகாப்பானது என தனக்குள் சொல்லிக்கொண்ட போதும், அதனைப் பார்க்கும் போது அவளையும் அறியாமல் அவளது நெஞ்சம் நடுங்கவே செய்தது.

கீர்த்தனா வீட்டிற்கு வந்த பிறகு வீடு முழுக்க ஒரே குதூகலம்தான். காலையில் சிறுவர்கள் பள்ளிக்குக்குப் போகும் போது சிவகாமி அத்தைக் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருப்பாள். காலையிலேயே கீர்த்தனா விழித்திருக்கிறாளா என்று பார்த்துவிட்டு அவள் கன்னத்தை வருடிவிட்டுப் பள்ளிச் செல்வதில் பவானிக்குத் தனி சந்தோஷம். பள்ளி முடிந்து வந்தவுடனேயே சிறுவர்கள் நான் நீ என போட்டிப் போட்டுக்கொண்டுக் கீர்த்தனாவைத் தூக்கி வைத்துக்கொள்வர்.

“நீங்க எல்லாரும் இப்படி மாறி மாறி அவளை மடியிலேயே தூக்கி வச்சுக்கிறதாலதான் அவ கீழேயே படுக்க மாட்றா. நான் மாமியார் வீட்டுக்குப் போயிட்டேனா, அங்க யார் இப்படி தூக்கி வச்சுக்குவா? அவளைத் தரையிலேயே போட்டுப் பழகுங்க,” என்று சிவகாமி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

குழந்தையைத் தூக்குவதுதான் குறைந்ததே தவிர, அவளைச் சுற்றியிருந்த சிறுவர் கூட்டம் குறையவில்லை. அதிலும் பவானிக்குக் கீர்த்தனாவின் மேல் தனி அன்பு. குழந்தையின் அருகிலேயே அமர்ந்து பல மணி நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருப்பாள். குழந்தையின் ரோஜா இதழ் கன்னத்தை மென்மையாக வருடிக்கொடுப்பாள். ஒரு விரலைக் குழந்தையின் கரங்களுக்கு அருகே நீட்டுவாள். குழந்தைத் தன் பிஞ்சு விரல்களால், அந்த விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.  தன் கரங்களில் சிக்கிய விரலை வாயருகே கொண்டுச் செல்ல முயற்சி செய்யும், உடனே பவானி விரலைத் தூரமாக இழுத்துக்கொள்வாள். குழந்தை மீண்டும் அதனை வாயில் வைக்க முயற்சி செய்யும். இப்படியே அவள் குழந்தையுடன் மணிக்கணக்கில் விளையாடினாள். 

சிறுவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து வந்தப் பிறகுதான் பாட்டி கீர்த்தனாவைக் குளிப்பாட்டுவாள். மேகலா குழந்தையின் துணிகளைக் களைவாள். குழந்தைக் குளிப்பதற்கு வெந்நீர் சுடவைத்து, அதனைக் குளிர்ந்த நீருடன் கலந்து, மிதமான சூட்டில், குழந்தையின் சருமம் நோகா வண்ணம் வெதுவெதுப்பான நீர் தயார் செய்து வைப்பாள். கூடவே பாட்டி உட்கார்வதற்கு மணக்கட்டையும் எடுத்து வைத்துவிடுவாள். பாட்டிக் குழந்தையைக் குளிப்பாட்டும்போது மேகலாதான் உடன்நின்று உதவி செய்வாள். பவானி பக்கத்தில் நின்று அனைத்தையும் ஆர்வமுடன் பார்ப்பாள்.

பாட்டி மணக்கட்டையில் அமர்ந்து, சேலையைத் தொடைவரையில் மடித்து வைத்துக்கொள்வாள். கால்களை நேராக நீட்டிக் குழந்தையைக் காலில் கிடத்திக்கொள்வாள். மேகலா கொஞ்சம் கொஞ்சமாக நீரூற்ற, பாட்டி மெல்ல குழந்தையைத் தடவிக்கொடுப்பாள்.  உடல் முழுக்கச் சவர்க்காரம் போட்டுக் கை கால்களை உருவி விடுவாள். பின்னர் அரைத்த பூலாங்கிழங்கு மாவைத் தண்ணீரில் குழைத்து, குழந்தையில் உடல் முழுக்கப் பூசுவாள். தலைக்குச் சாம்பூ போட்டு அலசுவாள். தண்ணீர் குழந்தையின் முகத்தில் படாமல் இருக்க, கையைக் குழந்தையில் நெற்றியில் அணை போல் பிடித்துக்கொள்வாள். மேகலா மெதுவாக எச்சரிக்கையுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றுவாள். குழந்தையின் முகத்தைக் கழுவும்போது மட்டும் கீர்த்தனா அழத்தொடங்கிவிடுவாள். விறுவிறுவென்று குழந்தை முகத்தைக் கழுவிவிட்டு எழுந்திருக்கையில், சிவகாமி கையில் துண்டுடன் வந்து நிற்பாள். ஈரம் சொட்டச்சொட்டப் பாட்டி குழந்தையை நீட்ட, சிவகாமி துண்டால் சுற்றி அணைத்தபடி குழந்தையைத் துவட்டுவாள். 

அதற்குள்ளாக, வாணி பின்புறமிருக்கும் பெரிய வீட்டிலிருந்து கனன்றுக்கொண்டிருக்கும் கரித்துண்டுகளைத் தூவக்காலில் நிரப்பிக் கொண்டுவந்துவிடுவாள். வண்ணான் வீட்டில் பாரம்பரிய முறையில் துணிகளை அவிப்பதற்கு இன்னமும் பெரிய குண்டான் சட்டியும், மரப்பலகைகளையுமே பயன்படுத்திவந்தனர். எவனே, சாம்பிராணிப் புகைப் போடுவதற்குத் தேவையான கரித்துண்டுகளைப் பெறுவது இலகுவாயிற்று. 

குழந்தையைத் துவட்டுவதற்குள்ளாக பவானி ஓடி வந்து வரவேற்பறையில் ஓலைப் பாய் விரித்து வைப்பாள். குழந்தையின் லோசன், பவுடர், காது குடையும் பஞ்சு என குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஓடி ஓடி எடுத்துவைப்பாள். பாட்டிக் குழந்தைக்குப் புகைக் காட்டக்காட்ட இவள், தூவக்காலில் இருக்கும் கரித்துண்டுகளின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகச் சாம்பிராணித் துகள்களைத் தூவுவாள். சாந்துப்பொட்டு உரசிக்கொடுப்பாள். அனைத்தும் முடிந்துக் குழந்தையை அதன் மெத்தையில் கிடத்திய பின்னர் குழந்தையை மீண்டும் மீண்டும் முகர்ந்துப் பார்ப்பாள். குழந்தையின் பவுடர் மணமும், சாம்பிராணி மணமும் கலந்து ஒருவித கிரக்கத்தை ஏற்படுத்தும். அதனை அவள் வெகுவாக ருசித்தாள். 


...தொடரும்...

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அவளும் அதுவும்... (பாகம் 6)



பவானிக்கு மிகுந்தக் குழப்பமாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல, மேகலா வாணிக்கும் அதே நிலைதான். நாணயத்தின் நகர்வு ஏன் திடீரென நின்றது? அது தானாகவே நின்றதா அல்லது பவானியின் விரல் பட்டு நின்றதா? மறுநாள் அதனைச் சோதனைச் செய்துப் பார்த்துவிட வேண்டும் என மூவரும் முடிவு செய்தனர்.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் பவானி தனது தோழி கோகிலாவிடம் நேற்று நடந்த விடயத்தைப் பற்றிக்கூறினாள். கோகிலா மேகலாவின் தோழியான சுகன்யாவின் தங்கை.  எனவே அந்த விளையாட்டைப் பற்றி அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள்.

“ஏய், அத விளையாடாத’லா!  ‘அது’ உன் உடம்புல உள்ள இரத்தத்தை விரல் வழியா உறிஞ்சிரும். என் அக்கா இப்படி விளையாடிக்கிட்டே இருந்துச்சு. நான் அப்பாக்கிட்ட சொல்லிட்டேன். நல்லா அடிவாங்கினுச்சு. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. உங்க அக்காவையும் விளையாட வேண்டாம்’னு சொல்லு. அடிக்கடி இத விளையாடினா, அது விரல் வழியா நம்ம உடம்புல புகுந்துக்கும், தெரியுமா?” என எச்சரித்தாள். பவானிக்குக் கோகிலாவிடம் எதற்குச் சொன்னோம் என்றாகிவிட்டது. எப்போது பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வோம் என தவிப்புடன் இருந்தாள். அன்று அவளுக்கு மதிய வகுப்பு இருந்ததால் தாமதமாகவே வீடு செல்ல நேர்ந்தது.

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பாலா பவானியைப் பார்த்ததும் திருட்டு முழி முழித்தான். இவன் முழியே சரியில்லையே என்று எண்ணியவாறு வீட்டினுள் நுழைந்தாள். வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் தூங்கி எழுந்துவிட்டனர். ‘ச்சே, இன்னைக்கு விளையாட முடியாது போல!’ என மனதிற்குள் சலித்துக்கொண்டாள். மேகலாவின் முகம் அழுது வடிந்தது போல் வீங்கியிருந்தது. வாணியைக் காணவில்லை. உடை மாற்ற அறைக்குள் நுழையுமுன் “பவானி!!” என்று தாத்தா உரக்க அழைக்கும் சத்தம் கேட்டது. “இதோ…வரேன்…” என்று கத்தியவாறு பவானி முன் அறைக்குச் சென்றாள்.

பவானியைக் கண்டதுதான் தாமதம், “பள்ளிக்கூடம் போனமா, படிச்சோமான்னு இருக்கணும்! கண்ட கழுதைகளோட சேர்ந்து கண்டதையும் கத்துக்கிட்டு வீட்ல வந்து விளையாடக் கூடாது. பெரியவளுத்தான் அறிவில்லை.  நீ கெட்டிக்காரிதானே? உனக்கு எங்கே போச்சு புத்தி?” தாத்தா இடைவெளி விடாமல் பொரிந்துத் தள்ளினார். எதைப் பற்றிப் பேசுகிறார் என்று தெரியாமல் தவித்த பவானிக்கு அடுத்த வரி வெள்ளிடை மலை போல் அனைத்தையும் புரிய வைத்தது.

“பேய், பிசாசுன்னு இனி இந்த வீட்ல ஒருத்தரும் பேசக்கூடாது. தினமும் மணி அடிச்சி சாமி கும்பிட்டுறோம். பூசைப் போடுறோம். நாம சாமியை நம்பணுமா; பேய் பிசாசை நம்பணுமா? அடுத்த தடவை இந்த மாதிரி விசயத்தைக் கேள்விப்பட்டேன், அத்தனைப் பேரையும் வகுந்திடுவேன் வகுந்து!” என்றதோடு நில்லாமல் இன்னும் என்னென்னவோ சொல்லித் திட்டினார். பவானியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. பாலாவின் திருட்டு முழிக்கு அர்த்தமும் புரிந்தது. அப்போதுதான் தாத்தாவின் குப்பைத் தொட்டியில் கிழித்தெறியப்பட்ட அந்த வரைப்படத்தைப் பார்த்தாள்.  சொட்டிய கண்ணீர்த் துளிகளைத் துடைத்துவிட்டு உடைமாற்ற மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். அங்கே வாணி குப்புறப்படுத்துக்கொண்டு இன்னமும் தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள்.

அன்று யாரும் யாருடனும் அதிகம் பேசவில்லை. இரவு தூங்கும் போது பாலாவின் துரோகச் செயலை மேகலா பவானியிடம் தெரிவித்தாள். ஏற்கனவே இப்படித்தான் நடந்திருக்கும் என யூகித்திருந்த பவானிக்கு இது ஆச்சரியம் அளிக்கவில்லை. மாறாக, கோபத்தையே அதிகரித்தது. இனி அந்த வெள்ளை வரைத்தாள் வீட்டிற்குள் வரப்போவதில்லை. தனது தமக்கைகள் அதனைப் பற்றி பேசப் போவதும் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவளது மனதில் ஏமாற்றம் படர்ந்தது.

பள்ளிக்கூடத்தில் பவானி கோகிலாவிடம் வீட்டில் நடந்த விடயத்தைச் சொன்னாள். பவானியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் கோகிலாவின் மனதைத் தொட்டது. தனது தோழி மனம் வாடுவதை விரும்பாதவள் கோகிலா.

“இதுக்கெல்லாம் கவலைப் படுவாங்களா? உனக்கு அந்தப் பேய் விளையாட்டு தானே விளையாடணும்? அது எப்படி விளையாடுவாங்கன்னு எனக்குத் தெரியும். அடுத்த வாரம் மத்தியான ‘க்கிளாஸ்’ ஆரம்பிக்கிற முன்னாடி க்கிளாஸ்லேயே விளையாடலாம். நிறைய பேர் வீட்டுக்குப் போய் உடுப்பு மாத்திட்டுத்தான் வருவாங்க. நாம ஸ்கூல்லேயே இருந்து விளையாடலாம்.” பவானியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“ஆனா, இந்த ஒரு தடவை மட்டும்தான். அதுக்கப்புறம் நீ இதை விளையாடக்கூடாது!” என்று ஆறுதலால் பேசி கண்டிப்புடன் முடித்தாள் கோகிலா.

“சரி” என சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள் பவானி.
”சத்தியமா?” என்று தனது ஆயுதத்தை எடுத்தாள் கோகிலா. பவானியிடம் சத்தியம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. தன்னால் வாக்கினைக் காப்பாற்ற முடியாது என்று தோன்றினால், பவானி சத்தியம் செய்ய மாட்டாள். ஒரு முறை சத்தியம் செய்துவிட்டால் அதனை மீறவும் மாட்டாள்.

“பார்க்கலாம்,” என்றாள் பவானி.

”அதெல்லாம் முடியாது. இதுதான் கடைசினு சத்தியம் செஞ்சா விளையாடலாம். இல்லாட்டி முடியாது,” எனத் தீர்க்கமாகச் சொன்னாள் கோகிலா. வேறு வழியின்றி பவானி சத்தியம் செய்தாள்.  எப்படியாவது ‘அதனுடன்’ பேசிவிட வேண்டும் என உறுதிக்கொண்டாள்.

அடுத்த வாரம் அவர்களுடன் வகுப்புத் தோழியான வசந்தியும் சேர்ந்துக்கொண்டாள்.  அன்று அவர்களுக்கு மதிய வகுப்பு இருந்தது. பவானி, கோகிலா, வசந்தி ஆகிய மூவரும் மதிய வகுப்பிற்கான மாற்று உடைகளை காலையிலேயே பள்ளிக்கு எடுத்து வந்துவிட்டனர். எனவே, அவர்கள் மூவரும் பள்ளி முடிந்து உடை மாற்ற வீட்டிற்குச் செல்லவில்லை. பள்ளிக்கூடக் கழிவறையில் அவசர அவசரமாக உடை மாற்றிக் கொண்டு யாருமில்லாத தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். பூட்டப்படாதக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்நுழைந்த பவானி, மூவரும் அமர்வதற்கு ஏதுவான இடத்தைத் தேடினாள். கோகிலா வகுப்பறைக் கதவை பழைய மாதிரியே சாத்தினாள். வாயிற் கதவை மறைத்த விதமாக வசந்தி அமர, மற்ற இருவரும் வெள்ளை வரைத்தாள் எடுத்து குறியீடுகளை வரைய ஆரம்பித்தனர்.
“யாரு முதல்ல விளையாடப் போறா?” கோகிலா கேட்டாள். பவானி மற்ற இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“நீயே ஆரம்பி,” என்றாள் வசந்தி. ஹோம் என்ற வட்டத்தில் இருபது காசு நாணயத்தை வைத்து தனது ஆள்காட்டி விரலை மெதுவாக அதன் மீது வைத்தாள் கோகிலா. ’ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்’ என மூவரும் ஒருசேர மெல்ல அழைக்கத் தொடங்கினர். சில நிமிடங்கள் கடந்தோடின.

“என்னலா ஒன்னுமே நடக்கமாட்டுது?” என்று சந்தேகமாய் கேட்டாள் பவானி.

“ஆமா. இங்க கொடு, நான் ‘ட்ரை’ பண்றேன்,” என முன்வந்தாள் வசந்தி. நாணயம் விரல் மாறியது. மூவரும் சேர்ந்து அதனை அழைக்கத் தொடங்கினர். வினாடிகள் நிமிடங்களாயின. திடீரென தன் விரலை நாணயத்திலிருந்து சட்டென நீக்கினாள்.

“என்னாச்சு?” என மற்ற இருவரும் பதற்றத்துடன் வினவினர்.

“ஏதோ ‘கரண்டு’ இழுக்கிற மாதிரி இருந்துச்சு. நான் கையை எடுத்துட்டேன். எனக்கு பயமாயிருக்குல்லா,” என்ற வசந்தியின் கண்கள் மட்டும் நாணயத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.  நாணயம் ஹோம் என்ற வட்டத்தைவிட்டு சற்று வெளியே நகர்ந்திருந்தது. அது தானாக நகர்ந்ததா அல்லது தான் விரலை எடுக்கும் போது தற்செயலாக நகர்த்தப்பட்டதா என்று வசந்திக்குத் தெரியவில்லை.

“சரி, இப்ப நான் ட்ரை பண்றேன்,” என களத்தில் இறங்கினாள் பவானி. எவ்வளவு நேரம் வைத்திருந்தும் நாணயம் இம்மியளவு கூட நகரவில்லை. பவானி கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி மீண்டும் அழைத்தாள். ஒரு கணம் மூடிய வகுப்பறைக்குள் குளிர்ந்த காற்று வீசுவதை மூவரும் உணர்ந்தனர். மூவரின் உடலும் சிலிர்த்தன. பவானி கண்களைத் திறந்தாள். நாணயம் இன்னும் நகரவில்லை. திடீரென தங்கள் உடலை வருடிச் சென்ற குளிர்காற்றினால் உண்டான மிரட்சி மூவர் கண்களிலும் தெரிந்தது.

வகுப்பறைக்கு வெளியே ஆட்களின் நடமாட்டம் கேட்டது. வீட்டிற்குச் சென்றிருந்த மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

“எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. யாராவது பார்த்து டீச்சர்கிட்ட சொன்னா அவ்ளோதான்.  வாங்க போயிடலாம்,” என்று முன்னெச்சரிக்கையுடன் கூறினாள் கோகிலா. பவானி ஏமாற்றத்துடன் நாணயத்திலிருந்து விரலை எடுத்தாள். கோகிலா எழுந்து வரைத்தாளை நார் நாராக்க் கிழித்துக் குப்பைத்தொட்டியில் வீசினாள்.

“ஏன்லா அதக் கிழிச்சுப் போட்ட?” என்று வசந்தி புரியாமல் கேட்டாள்.

“என்னோட அம்மா திடீர்னு பேக்கைச் செக் பண்ணுவாங்க. அம்மா மட்டும் இதைப் பார்த்தாங்கன்னா அவ்ளோதான். அப்பாக்கிட்ட சொல்லி எனக்கு நல்லா அடி வாங்கிக் கொடுப்பாங்க,” என விளக்கினாள் கோகிலா.

”அப்படின்னா மறுபடியும் விளையாடுறதுக்குத் திரும்பவும் புதுசா வரையணுமா?” என எரிச்சலுடன் கேட்டாள் பவானி.

“மறுபடியுமா? நான் விளையாட மாட்டேன்பா. இதுதான் கடைசின்னு நீயும் சத்தியம் பண்ணின தானே?” என எதிர்க்கேள்விக் கேட்டாள் கோகிலா.

“ஏய், நான் விளையாடவே இல்ல தெரியுமா? அந்தக் காசு நகரவே இல்ல,” என மறுத்து வாதாடினாள் பவானி.

“எனக்குக் கூடத்தான் நகரல,” என ஒத்து ஊதினாள் வசந்தி.

”அதெல்லாம் முடியாது. காசு நகர்ந்துச்சோ இல்லையோ, நாம மூனு பேருமே விளையாடிட்டோம். இதுதான் கடைசி! பவானி, நீ சத்தியம் பண்ணியிருக்கே, விளையாடாதே!” எச்சரித்தாள் கோகிலா. அதற்குள் வசந்தி எழுந்து அமர்வதற்காக எடுத்த நாற்காலியை உரிய இடத்தில் நகர்த்தி வைத்தாள். பவானி முகத்தைச் சுழித்துக்கொண்டே வகுப்பறையை விட்டு வெளியேறினாள். அவளை மற்ற இருவரும் பின் தொடர்ந்தனர்.

....தொடரும்...

செவ்வாய், 24 மார்ச், 2015

அவளும் அதுவும்... (பாகம் 4)




சரி, மோகினியை எப்படிப் பார்க்கிறது?” என ராம் கேட்டான். அதற்கும் சசி பதில் சொல்லத் தொடங்கினான்.

இது என் கூட்டாளியோட அண்ணன் சொன்னது. நீ மோகினியைப் பார்க்கணும்னா நினைச்சா இதைச் செஞ்சுப் பார்க்கலாம். ஆனா, இது ரொம்ப ஆபத்தானது. இராத்திரி நேரத்துல ஒரு சிவப்பு நூல் எடுத்து, வீட்டுப் பின்னால இருக்கிற வாழை மரத்துல கட்டணும். அந்த நூலை நீளமா இழுத்துக்கிட்டே வந்து நீ படுத்திருக்கிற கட்டிலோட காலுல கட்டணும். அதாவது, அதாவது வாழை மரத்துக்கும் உன் கட்டிலுக்கும் சிவப்பு நூல் வழியா தொடர்பு ஏற்படுத்தணும்.”

சசி சொல்லிக்கொண்டிருக்க மற்றவர்கள் தீவிரமாக அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர். சசியின் பேச்சுக்குரலும் மற்றவர்களின் மூச்சுச் சத்தத்தையும் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கே கேட்கவில்லை. சசி சற்று நிறுத்தி அனைவரின் முகங்களையும் நிதானமாகக் கவனித்தான். தான் சொல்வதை மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்கிறார்கள் என்ற திருப்தியுடன் பேசுவதைத் தொடர்ந்தான்.

சிவப்பு நூல் கட்டின பிறகு, ஊசியால விரலைக் குத்தி மூனு துளி இரத்தத்தை வாழை மரத்துல விடணும். இராத்திரி 12 மணி ஆகும் போது வீட்டுல இருக்கிற எல்லா விளக்கையும் அணைக்கணும். கட்டில் பக்கத்துல ஒரே ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏத்தி வச்சுக்கணும். சரியா 12 மணிக்கு இன்னொரு மூனு துளி இரத்தத்தை கட்டில் காலில் கட்டியிருக்கும் சிவப்பு நூலில் மேல் விடணும். பிறகு, அமைதியா தூங்கற மாதிரி படுத்திருக்கணும். தலையணைக்கு அடியில நூலை அறுத்துவிடறதுக்கு ஏதுவா கத்தி இல்லாட்டி கத்தரிக்கோல் வச்சிருக்கணும்.”

சசியின் உடன்பிறப்புகள் விழிகள் பிதுங்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பட்டப்பகல் கூட அவர்கள் கற்பனைக்கு நள்ளிரவாய் காட்சியளித்தது.

இராத்திரி ஆனதும் மாழை மரத்துல உள்ள மோகினி அங்க சிந்தியிருக்கிற இரத்தத்தை ருசி பார்க்கும். சிவப்பு நூல் வழியா இரத்த வாடையை மோந்துப் பார்த்துக்கிட்டே வரும். அங்க தனியா ஆம்பிளைப் படுத்திருந்தா அது குஷியாயிடும். அப்போ, நீ எழுந்து அதைப் பார்க்கலாம்; அதுக்கிட்டப் பேசலாம். அதுவும் உன் கூட பேசும். அது உன்னை ரொம்ப நெருங்கி வர மாதிரி தெரிஞ்சதுன்னா, உடனே கட்டிலில் உள்ள நூலை அறுத்துவிட்டிறணும்.”

அப்படி அறுத்து விடலைன்னா?” என ராம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

நூலை சரியான நேரத்துல அறுத்துவிடலைன்னா அது உனக்குள்ளே புகுந்துக்கும். இது என் கூட்டாளியோட அண்ணன் சொன்னது. இந்த வீட்ல நிறைய பேர் இருக்கோம். ஒருநாள் தனியா இருக்கும் போது இதைச் செஞ்சுப் பார்க்கப் போறேன்.” சசி ஆர்வமாய் சொன்னான். பவானிக்கு அடிவயிறு கலங்கியது.

என்ன கூட்டமா மாநாடு நடக்குது?” வழமையான குட்டித் தூக்கம் கலைந்து வந்தப் பாட்டிக் கேட்டார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் வந்தார். “நீங்க யாரும் தூங்கலையா?” என அம்மா தன் பங்குக்குக் கேட்டார். பிள்ளைகள் மதியம் தூங்குவது அரிது என்று அறிந்த போதும், பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள் பகலில் கொஞ்சம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் வலியுறுத்து வந்தனர்பிள்ளைகளோ பெரியவர்கள் கண் முன்னே ஓய்வெடுப்பது போல் சென்றுவிட்டு, அவர்கள் உறங்கியப் பிறகு சத்தம் போடாமல் எழுந்து தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவர்.

அம்மாவின் கேள்வியைப் புறக்கணித்துவிட்டு, “இல்ல பாட்டி. சும்மா பேசிக்கிட்டிருந்தோம்…” என்று மேகலாவும் வாணியும் ஒருசேர மழுப்பினர். மற்றவர்கள் எழுந்து வெளியே மீண்டும் விளையாடச் சென்றனர்.

அன்றைய கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘அதுஎப்படி இருக்கும்? அதனை எப்படிப் பார்ப்பது? அதனுடன் எப்படிப் பேசுவது? என அனைவரும் ஆராய்ச்சியில் இறங்கினர். ஒருநாள் பள்ளி முடிந்து வந்த மேகலா வாயெல்லாம் பல்லாக வாணியையும் பவானியையும் பார்த்தாள். அவள் சிரிப்பினில் மர்மம் இருந்தது. வாணி கண்களாலேயே என்னவென்று விசாரித்தாள்.

அம்மாவும் பாட்டியும் தூங்கட்டும்,” என்று கிசுகிசுத்துவிட்டு மீண்டும் ஒரு மர்ம புன்னகை உதிர்த்தாள் மேகலா.

மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் தூங்கச் சென்றனர். பெரியவர்கள் அனைவரும் தூங்கிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்திய பிறகு அமைதியாக ஒருவர் பின் ஒருவராக எழுந்துச் சென்றனர். சசி, ராம், இந்திரன் மூவரும் வழக்கம் போல் நண்பர்களுடன் காற்பந்து விளையாடச் சென்றுவிட்டனர். வாணியும் பவானியும் கடைசி அறையில் மேகலாவிற்காகக் காத்திருந்தனர். கடைசியாக எழுந்து வந்த மேகலா சத்தம் போடாமல் அறைக்குள் நுழைந்துக் கதவைத் தாளிட்டாள். அவளதுக் கையில் வெள்ளை நிற வரைத்தாலும் சில எழுதுகோல்களும் இருந்தனமற்ற இருவரும் குழப்பத்தோடு அவளைப் பார்த்தனர்.

நாம் இன்னைக்குஅதுக்கூட பேசப் போறோம்,” என்றுச் சொல்லிக் கண்ணடித்தாள் மேகலா. ‘அதுஎன்று அவள் சொன்னது எதுவென்று பவானிக்கு நன்கு விளங்கியது. அதன் பெயர் சொன்னால், தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று அறிந்துக்கொள்ளஅதுவும் வந்துப் பக்கத்தில் அமர்ந்துக் கதைக் கேட்கும் என வாணி அவர்களைப் பயமுறுத்தி வைத்திருந்தாள்.

மேகலா தான் கொண்டு வந்திருந்த வரைத்தாளைத் தரையில் விரித்தாள். தனது சட்டைப்பையிலிருந்து இருபது மற்றும் ஐம்பது காசு நாணயங்களை வெளியே எடுத்தாள். தாளின் நடுப்பக்கத்தின் ஐம்பது காசு நாணயத்தைக் கொண்டு பெரியதாய் மூன்று வட்டம் வரைந்தாள். அதனுள், ‘ஹோம்[1], ‘யெஸ்[2], ‘நோ[3] என ஆங்கிலத்தில் எழுதினாள். அதனைச் சுற்றிலும் மண்டை ஓடு, சுடுகாடு, எலும்புக்கூடு போன்ற படங்களை வரைந்தாள். அவள் சிறிதும் யோசிக்காமல் விறுவிறுவென வரைவதைப் பார்க்கும் போது, இதனை ஏற்கனவே வரைந்துப் பழகியிருக்கிறாள் என்பது தெரிந்தது. இருபது காசு நாணயத்தைக் கொண்டு வரைத்தாளின் ஓரங்கள் முழுவதும் 36 வட்டங்கள் வரைந்தாள். அதனுள் 26 ஆங்கில எழுத்துக்களையும் அச்சடித்தாற்போல் தெளிவாக எழுதினாள். பின்னர் சுழியத்திலிருந்து ஒன்பது வரையிலான எண்களை ஒவ்வொன்றாய் எழுதினாள். இப்பொழுது அவள் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.

என்னதிது?” என ஆர்வம் தாங்காமல் பவானி கேட்டாள். மேகலா பதில் சொல்லத் தொடங்குவதற்கு முன்பு அந்தக் கடைசி அறையின் கதவு பலமாகத் தட்டப்பட்டது. மூவரும் திடுக்கிட்டு, “யாரதுஎன ஒரே குரலில் கேட்டனர்.

நான்தான் பாலாஎன்று பதில் வந்ததும் மூவருமே நிம்மதி பெருமூச்சு விட்டனர். வாணி எழுந்துக் கதவைத் திறந்தாள்.

நீ தாத்தாவுக்கு உதவி செய்யலையா பாலா?” என்று வந்ததும் வராததுமாய் பவானி கேட்டாள்.

இன்னைக்கு வியாபாரம் குறைவு. தாத்தா என்னைத் தூங்கச் சொன்னாங்க. எனக்குத் தூக்கம் வரல,” என்றவன் அறையின் நடுவே விரிக்கப்பட்டிருந்த வரைத்தாளைக் கவனித்தான். குறிப்புணர்ந்த வாணி, “போய் உட்கார்என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்தினாள். பாலா மேகலாவின் அருகில் சென்று உட்கார்ந்து வரைத்தாளை உற்று நோக்கினான். அதற்குள் வாணியும் தனது இடத்தில் வந்தமர்ந்தாள்.

என்னலா செய்யறீங்க?” என்று கேட்டான் பாலா. “உஷ்என்று அவனைது கேள்விக்குப் பதிலளிக்காமல் மிரட்டினாள் பவானிமேகலா 20 காசு நாணயத்தை எடுத்துஹோம்என்று குறியிடப்பட்ட வட்டத்திற்குள் வைத்தாள். இன்னொரு வெற்றுத் தாளை அருகில் வைத்துக்கொண்டாள்.

எல்லாரும் அமைதியா இருங்க. யாரும் குறுக்கப் பேசக் கூடாது. யாரும் சாமி கும்பிடக் கூடாது. இப்ப நாம இங்க இருக்கிற ஆவிக்கிட்ட பேசப் போறோம். நான் இந்தக் காசு மேல என்னோட விரலை வைப்பேன். ஆவி நம்ம கூடப் பேச தயாரா இருந்தா இந்தக் காசு தன்னால நகர்ந்துஎஸ்என்ற வட்டத்துல போய் நிற்கும். அதுக்கப்புறம் நாம கேட்குற கேள்விகளுக்கு எழுத்துகள் மூலமா பதில் சொல்லும். உதாரணமா, நாம அதோட பெயரைக் கேட்டா, காசு மெதுவா நகர்ந்து ஒவ்வொரு எழுத்தையும் காட்டும். அது காட்டுற எல்லா எழுத்தையும் கூட்டினா, அதோட பெயர் நமக்குத் தெரிஞ்சிடும். வயசைக் கேட்டா, இங்க இருக்கிறநம்பரைக்[4] காட்டும்.”

அதுக்கு நம்ம கூட பேச விருப்பம் இல்லைனா?” பவானி சந்தேகத்துடன் கேட்டாள்.




[1] வீடு
[2] ஆம்
[3] இல்லை
[4] எண்களை

...தொடரும்