செவ்வாய், 8 செப்டம்பர், 2015

அவளும் அதுவும்... (பாகம் 7)




3. பிள்ளை பிறப்பு
அன்று வீடு களைக்கட்டியிருந்தது. பாட்டியின் கடைசி மகன் சிவகாமி தலைப்பிரசவத்திற்காகத் தாய்வீடு வந்திருந்தாள். அத்தை சிவகாமி வந்துவிட்டாலே குழந்தைகள் உல்லாசத்தில் மிதப்பர். சிவகாமியும் குழந்தைகளின் மனம் அறிந்து வரும் போதெல்லாம் விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள், பழ வகைகள் என வகை வகையாக வாங்கி வருவாள். அதற்கு நன்றி கூறும் வகையில் குழந்தைகளும் சிவகாமியை விழுந்து விழுந்து கவனிப்பர். சிவகாமி திருமணமாகிச் சென்ற பிறகு அந்த வீடே சிறிது காலம் வெறிச்சோடித்தான் கிடந்தது. இப்போது சிவகாமி மீண்டும் வந்துவிட்டாள். இனி பிரசவம் ஆகும் வரையில் அவள் இங்குதான் இருப்பாள்.

ஒருநாள் மாலை வேளையில், சிவகாமி பவானியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு அருகே இருந்த சீனன் கடைக்குப் பொருள் வாங்கச் சென்றாள். அவர்கள் கடைக்குச் செல்லும் வழியில் பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. பலகையினால் ஆன அந்த வீட்டைச் சுற்றிலும் புற்களும் காட்டுச்செடிகளும் ஆள் உயரத்திற்கு மண்டிக்கிடந்தன.  அந்த வீட்டைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு வேறு எந்த வீடுகளோ கடைகளோ இல்லை. பவானி அந்த வீட்டை பலமுறைக் கடந்துச் சென்றிருக்கிறாள். ஆனால், இந்த முறை ஏதோ ஒன்று அவளை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தது. திடீரென அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுள் உதித்தது. பவானி அந்தப் பாழடைந்த வீட்டையே திரும்பித் திரும்பிப் பார்ப்பதைச் சிவகாமி கவனித்தாள்.

”எதுக்கு அந்தப் பேய் வீட்டையே பார்க்குற?” என சிவகாமி கேட்டாள்.

“பேய் வீடா?” என ஆர்வமாக எதிர்க்கேள்விக் கேட்டாள் பவானி.

“உனக்குத் தெரியாதா? முன்னெல்லாம் சில நேரத்துல இராத்திரி அந்த வீட்ல தானாவே விளக்கெரியும். மனுசனுங்க யாருமே அந்த வீட்டுப்பக்கம் போகமாட்டாங்க. காலையில விளக்குத் தானாவே அணைஞ்சிடும்,” என்று ஏதோ யோசித்தவாறு சொன்னாள் சிவகாமி. பவானி அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை; சிவகாமியும் எதுவும் சொல்லவில்லை.

சிவகாமி வந்த எட்டாவது தினத்தில் பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்ற செய்தி வீடு முழுக்கப் பரவியது. தாத்தா ஜாதகம் குறித்துக் குழந்தைக்குப் பெயர் சூட்டப்படவேண்டிய முதல் எழுத்துக்களை அனைவரிடமும் சொல்லி வைத்தார். ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக்கொண்டுத் தங்களுக்குத் தெரிந்த பெயர்களை எழுதித் தந்தனர். யார் சொன்ன பெயரைக் குழந்தைக்குச் சூட்டப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது. ஒரு அழகிய மாலை வேளையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடி வரிசையிடப்பட்ட பெயர்களை விவாதித்து இறுதியாக ‘கீர்த்தனா’ என்ற பெயரைத் தெரிவு செய்தனர்.

பிரசவித்த மூன்றாம் நாள் சிவகாமி கைக்குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள். புதிய குடும்ப அங்கத்தினராகச் சேர்ந்திருக்கும் கீர்த்தனாவைப் பார்ப்பதற்காகச் சிறுவர்கள் அனைவரும் வீட்டு வாயிலில் ஆவலுடன் காத்துக்கிடந்தனர். சிவகாமியை வரவேற்பதற்காக, பின்புறமுள்ள பெரிய வீட்டிலிருந்தும் பெண்கள் வந்திருந்தனர். அவர்களுடன் அவரிகளின் சிறிய பிள்ளைகளும் வந்திருந்தனர். பாட்டி உட்பட ஐந்து பெரிய பெண்கள் சேர்ந்து சிவகாமிக்கும் குழந்தைக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்தனர். பெரியவர்கள் அனைவரும் ஆளாளுக்குக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினர்.  

பாட்டி ஒரு வாளி நிறைய மஞ்சள் தண்ணீர் நிரப்பி முன் வாசலிலும், பின் வாசலிலும் வைத்தார். இனி வீட்டிற்குள் வரும் அனைவரும் மஞ்சள் தண்ணீரில் கால் கழுவிய பின்னரே உள் நுழைய வேண்டும் என கட்டளையிடப்பட்டது. அன்று இரவு கொல்லைப் புறத்தில் பெரியவர்கள் இரகசியமாக ஒன்றுக்கூடிக் குழந்தையின்  தொப்புள் கொடியைப் புதைத்தனர். 

குழந்தை வீட்டிற்கு வந்த மறுதினம் அவளுக்காகத் தொட்டில் கட்டப்பட்டது. அன்று இரவு குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு சிவகாமி கட்டியில் தன் தாயாருடன் படுத்திருந்தாள். அம்மா எங்களுடன் அதே அறையில் கீழே பாயில் படுத்திருந்தார். குழந்தை எந்நேரமும் பசியால் அழக்கூடும் என்பதால் சிவகாமி அரைத்தூக்கத்திலேயே இருந்தாள். அறையில் பூட்டப்பட்டிருந்த சிறிய விடிவிளக்கு மங்கலான மஞ்சள் நிற வெளிச்சத்தை அறையெங்கும் பரப்பிவிட்டிருந்தது. மின்விசிறியின் மெல்லிய ஒலியும், வீட்டு மேற்கூரையில் இரைக்காகச் சண்டையிடும் பல்லிகளின் சத்தமும் மிகத் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தன. வீட்டில் அனைவரும் உறங்கிவிட்டனர்.  அவ்வப்போது எழுந்து மகளுக்கு உதவியாக இருந்த பாட்டியும் அன்று இரவு எழவே இல்லை.

விடியற்காலை சுமார் மூன்று மணி இருக்கும். தாழிடப்படாத அறைக்கதவு லேசாகத் திறப்பதை மங்கலான ஒளியில் சிவகாமி பார்த்தாள். அரைத்தூக்கத்தில் இருந்ததாலோ என்னவோ அவளால் கண்களை முழுமையாகத் திறக்கவோ, எழவோ முடியவில்லை. பாதித் திறந்திருந்த கண்களின் வழி அவள் கதவையே பார்த்துக்கொண்டிருந்தாள். கரிய பெரிய உருவம் ஒன்று திறந்திருந்தக் கதவின் மெல்லிய இடைவெளியிலிருந்து வெளிப்பட்டது. சிவகாமியின் பார்வை மங்கிற்று. அந்த உருவம் குழந்தையின் தொட்டிலை நோக்கி வந்தது. அதன் நீண்டக் கூந்தல், அது பெண்ணுடையை உருவம் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் ஏனோ சிவகாமியால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அந்த உருவம் தொட்டிலை நெருங்கவும் சிவகாமியின் நெஞ்சம் படபடத்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். ஏனோ, அவள் உடல் அவளுக்கே பாரமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளால் விரலைக் கூட அசைக்க முடியவில்லை. செயலற்றவளாய் அவள் மங்கலான அந்த உருவத்தையே இயலாமையுடனும் கலவரத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள். 

அந்த உருவம் தொட்டிலில் கிடந்த குழந்தையை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்றது.  பின்னர் மெதுவாகத் தொட்டிலை ஆட்டியது. தொட்டிலில் கிடந்தக் குழந்தை உடலை நெளித்து முண்டுவது தெரிந்தது. பார்த்துக்கொண்டிருந்த அந்த உருவம் மெதுவாக சிவகாமியின் பக்கம் முகத்தைத் திருப்பியது. அதன் முகத்தைப் பார்க்கச் சக்தியற்றவளாய் சிவகாமி இரு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டாள். அவள் உடல் முழுக்க வியர்த்துக்கொட்டியது. அவள் மீண்டும் கண்களைத் திறந்த போது அந்த உருவம் அங்கில்லை. சிவகாமி அறை முழுக்க கண்களை உலவவிட்டாள். கதவு முன் போலவே மூடப்பட்டிருந்தது. நீண்ட பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது.

மறுநாள் தொட்டிலுக்கு அருகே பாட்டி செருப்பும் துடைப்பக்கட்டையும் கொண்டு வந்துப்போட்டார். இன்னொரு செருப்பு அறைக்கதவருகிலும், மற்றொன்று சிவகாமியின் கட்டிலுக்கருகிலும் வைக்கப்பட்டன. வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டிய பொருட்கள் படுக்கையறை உள்ளே கொண்டுவரப்பட்டது பவானிக்குக் குழப்பத்தையும் ஒருவித பயத்தையும் உண்டாக்கியது. 

“சிவகாமி அத்தை பிள்ளைப் பெத்திருக்காங்கல்ல, அதனால வீட்ல தீட்டுப் பட்டிருக்கு. பச்சப்புள்ள இருக்குற வீட்ல காத்துக் கருப்பு அண்டக்கூடாதுன்னு தாத்தாதான் விளக்கமாத்தையும் செருப்பையும் ரூம்ல வைக்கச் சொன்னாங்க.” ஒருநாள் இரவுத் தூங்கும் வேளையில் மேகலா சொன்னாள். 

“விளக்கமாறும் செருப்பும் வச்சா பேய் கிட்ட வராதா?” என்று சந்தேகம் தீராதவளாய் கேட்டாள் பவானி. 

“எனக்கே தெரியல. அப்படித்தான் இருக்கும் போல. கே.எல். பாட்டிக்கூட அப்படித்தான் சொல்லியிருக்காங்க,” என்று முடித்தாள் வாணி. 

அன்றிலிருந்து பவானி படுக்கும் போது, அறைக்குள் போடப்பட்டிருக்கும் செருப்புக்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் படுத்துக்கொண்டாள். செருப்புத் தனக்குப் பாதுகாப்பானது என தனக்குள் சொல்லிக்கொண்ட போதும், அதனைப் பார்க்கும் போது அவளையும் அறியாமல் அவளது நெஞ்சம் நடுங்கவே செய்தது.

கீர்த்தனா வீட்டிற்கு வந்த பிறகு வீடு முழுக்க ஒரே குதூகலம்தான். காலையில் சிறுவர்கள் பள்ளிக்குக்குப் போகும் போது சிவகாமி அத்தைக் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருப்பாள். காலையிலேயே கீர்த்தனா விழித்திருக்கிறாளா என்று பார்த்துவிட்டு அவள் கன்னத்தை வருடிவிட்டுப் பள்ளிச் செல்வதில் பவானிக்குத் தனி சந்தோஷம். பள்ளி முடிந்து வந்தவுடனேயே சிறுவர்கள் நான் நீ என போட்டிப் போட்டுக்கொண்டுக் கீர்த்தனாவைத் தூக்கி வைத்துக்கொள்வர்.

“நீங்க எல்லாரும் இப்படி மாறி மாறி அவளை மடியிலேயே தூக்கி வச்சுக்கிறதாலதான் அவ கீழேயே படுக்க மாட்றா. நான் மாமியார் வீட்டுக்குப் போயிட்டேனா, அங்க யார் இப்படி தூக்கி வச்சுக்குவா? அவளைத் தரையிலேயே போட்டுப் பழகுங்க,” என்று சிவகாமி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

குழந்தையைத் தூக்குவதுதான் குறைந்ததே தவிர, அவளைச் சுற்றியிருந்த சிறுவர் கூட்டம் குறையவில்லை. அதிலும் பவானிக்குக் கீர்த்தனாவின் மேல் தனி அன்பு. குழந்தையின் அருகிலேயே அமர்ந்து பல மணி நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருப்பாள். குழந்தையின் ரோஜா இதழ் கன்னத்தை மென்மையாக வருடிக்கொடுப்பாள். ஒரு விரலைக் குழந்தையின் கரங்களுக்கு அருகே நீட்டுவாள். குழந்தைத் தன் பிஞ்சு விரல்களால், அந்த விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.  தன் கரங்களில் சிக்கிய விரலை வாயருகே கொண்டுச் செல்ல முயற்சி செய்யும், உடனே பவானி விரலைத் தூரமாக இழுத்துக்கொள்வாள். குழந்தை மீண்டும் அதனை வாயில் வைக்க முயற்சி செய்யும். இப்படியே அவள் குழந்தையுடன் மணிக்கணக்கில் விளையாடினாள். 

சிறுவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து வந்தப் பிறகுதான் பாட்டி கீர்த்தனாவைக் குளிப்பாட்டுவாள். மேகலா குழந்தையின் துணிகளைக் களைவாள். குழந்தைக் குளிப்பதற்கு வெந்நீர் சுடவைத்து, அதனைக் குளிர்ந்த நீருடன் கலந்து, மிதமான சூட்டில், குழந்தையின் சருமம் நோகா வண்ணம் வெதுவெதுப்பான நீர் தயார் செய்து வைப்பாள். கூடவே பாட்டி உட்கார்வதற்கு மணக்கட்டையும் எடுத்து வைத்துவிடுவாள். பாட்டிக் குழந்தையைக் குளிப்பாட்டும்போது மேகலாதான் உடன்நின்று உதவி செய்வாள். பவானி பக்கத்தில் நின்று அனைத்தையும் ஆர்வமுடன் பார்ப்பாள்.

பாட்டி மணக்கட்டையில் அமர்ந்து, சேலையைத் தொடைவரையில் மடித்து வைத்துக்கொள்வாள். கால்களை நேராக நீட்டிக் குழந்தையைக் காலில் கிடத்திக்கொள்வாள். மேகலா கொஞ்சம் கொஞ்சமாக நீரூற்ற, பாட்டி மெல்ல குழந்தையைத் தடவிக்கொடுப்பாள்.  உடல் முழுக்கச் சவர்க்காரம் போட்டுக் கை கால்களை உருவி விடுவாள். பின்னர் அரைத்த பூலாங்கிழங்கு மாவைத் தண்ணீரில் குழைத்து, குழந்தையில் உடல் முழுக்கப் பூசுவாள். தலைக்குச் சாம்பூ போட்டு அலசுவாள். தண்ணீர் குழந்தையின் முகத்தில் படாமல் இருக்க, கையைக் குழந்தையில் நெற்றியில் அணை போல் பிடித்துக்கொள்வாள். மேகலா மெதுவாக எச்சரிக்கையுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றுவாள். குழந்தையின் முகத்தைக் கழுவும்போது மட்டும் கீர்த்தனா அழத்தொடங்கிவிடுவாள். விறுவிறுவென்று குழந்தை முகத்தைக் கழுவிவிட்டு எழுந்திருக்கையில், சிவகாமி கையில் துண்டுடன் வந்து நிற்பாள். ஈரம் சொட்டச்சொட்டப் பாட்டி குழந்தையை நீட்ட, சிவகாமி துண்டால் சுற்றி அணைத்தபடி குழந்தையைத் துவட்டுவாள். 

அதற்குள்ளாக, வாணி பின்புறமிருக்கும் பெரிய வீட்டிலிருந்து கனன்றுக்கொண்டிருக்கும் கரித்துண்டுகளைத் தூவக்காலில் நிரப்பிக் கொண்டுவந்துவிடுவாள். வண்ணான் வீட்டில் பாரம்பரிய முறையில் துணிகளை அவிப்பதற்கு இன்னமும் பெரிய குண்டான் சட்டியும், மரப்பலகைகளையுமே பயன்படுத்திவந்தனர். எவனே, சாம்பிராணிப் புகைப் போடுவதற்குத் தேவையான கரித்துண்டுகளைப் பெறுவது இலகுவாயிற்று. 

குழந்தையைத் துவட்டுவதற்குள்ளாக பவானி ஓடி வந்து வரவேற்பறையில் ஓலைப் பாய் விரித்து வைப்பாள். குழந்தையின் லோசன், பவுடர், காது குடையும் பஞ்சு என குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஓடி ஓடி எடுத்துவைப்பாள். பாட்டிக் குழந்தைக்குப் புகைக் காட்டக்காட்ட இவள், தூவக்காலில் இருக்கும் கரித்துண்டுகளின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகச் சாம்பிராணித் துகள்களைத் தூவுவாள். சாந்துப்பொட்டு உரசிக்கொடுப்பாள். அனைத்தும் முடிந்துக் குழந்தையை அதன் மெத்தையில் கிடத்திய பின்னர் குழந்தையை மீண்டும் மீண்டும் முகர்ந்துப் பார்ப்பாள். குழந்தையின் பவுடர் மணமும், சாம்பிராணி மணமும் கலந்து ஒருவித கிரக்கத்தை ஏற்படுத்தும். அதனை அவள் வெகுவாக ருசித்தாள். 


...தொடரும்...

கருத்துகள் இல்லை: