குழந்தைப் பிறந்த முப்பதாம் நாள். அவர்கள் குல வழக்கப்படி பேச்சியம்மனுக்குப் படையல் போடும் நாள் வந்தது. அதற்கு முன்பாகவே தங்கள் தாயார் அமுதா வாங்கி வந்த சிகப்பு, வெள்ளைப் பாசிமணிகளை வாணியும், பவானியும் சேர்ந்துக் கோர்த்துக் குழந்தைக்குச் சங்கிலியும், கை வளையலும் செய்துவைத்துவிட்டனர். அன்று வீடே விழாக்கோலம் பூண்டது. உறவினர்கள் அனைவரும் காலையிலேயே வந்துச் சேர்ந்தனர். ஆண்கள் படையலுக்குத் தேவையானப் பொருட்களைத் தேடி ஓடி வாங்கி வந்தனர். பெண்கள் வீட்டு வேலையிலும் சமையலிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர்.
அமுதாவின் கணவனும் ஏழு சிறுவர்களின் தகப்பனுமான சிவம் அங்கும் இங்கும் அலைந்துத் திரிந்துக் கடைசியாகப் பாட்டிக் கேட்ட கறுப்புச் சேவலைக் கொண்டு வந்தார். தன் மூத்த மகள் வள்ளியையும், மருமகள் அமுதாவையும் உடன் அழைத்துக்கொண்டு, கால்கள் கட்டப்பட்டக் கறுப்புச் சேவலை ஒரு கையிலும், மறுகையில் அரிவாளையும் தூக்கிக்கொண்டுப் பாட்டி கொல்லைப்புறத்திற்குச் சென்றார். சிறுவர்கள் யாரும் வீட்டின் பின்புறம் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொல்லையில், குழந்தையின் தொப்புள்கொடி புதைக்கப்பட்ட இடத்தில் சேவலைப் படுக்க வைத்து, ஒரே வெட்டில் அதன் கழுத்தை அறுத்தார் பாட்டி! குழாயிலிருந்துத் திறந்துவிடப்பட்ட நீர் போல வெட்டப்பட்டச் சேவலின் கழுத்திலிருந்து இரத்தம் பீய்ச்சியடித்தது. தொப்புள்கொடி புதைக்கப்பட்ட நிலம் சேவலின் உதிரத்தில் நனைந்து ஈரமானது.
கழுத்தறுப்பட்டச் சேவலை எடுத்த வந்த பாட்டி, ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுடுநீரில் அதனைப் போட்டார். கழுத்தறுப்பட்ட நிலையிலும் அந்தச் சேவல் இன்னமும் துடித்துக்கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, பரபரவென சேவலின் இறகுகளைப் பிய்த்தெறிந்தார். துகில் உரித்த சேவலின் வயிற்றுப்பகுதியின் நடுவே கத்தியாய் கீறி, அதன் உடலை இரண்டாகப் பிளந்தார். அதனுள்ளே இருந்த கழிவுகளையும், தேவையற்ற உடலுறுப்புகளையும் வெளிக்கொணர்ந்துக் குப்பையில் வீசினார். நன்றாகச் சுத்தம் செய்த பிறகு அதனை வழக்கத்தைவிட பெரியப்பெரியத் துண்டாக வெட்டினார். சேவல் குழம்பு தயாரானது.
மேகலா, வாணி, பவானியுடன் வள்ளியின் மகள் குமாரியும் சேர்ந்துக்கொண்டாள். நால்வரும் பெரியவர்களுக்கு உதவியாக்க் காய்கறிகள் நறுக்கி சமையலுக்கு உதவி செய்தனர். அன்று காலை விடிந்ததிலிருந்து அந்த வீட்டில் அனைவருமே மிகப் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தனர். மாலை ஆறு மணிக்கெல்லாம் அனைவரும் குளித்துத் தயாராகிவிட்டனர்.
மாலை ஏழு மணியளவில் சிவகாமி படுத்திருக்கும் இரண்டாவது அறையில் நீண்ட தலைவாழை இலை போடப்பட்டது. இலை நிறைய வெள்ளைச் சோறு, வாசம் மிகுந்த கருவாட்டுக் குழம்பு, சமைத்தக் கோழிக் கால்கள், அவித்த கோழி முட்டைகள், வறுத்த கருவாடு துண்டுகள், காது வடிவிலான ‘கப்பு’ ரொட்டி, கீரை வகைகள், வாழைப்பழம், வெத்தலைப் பாக்கு, சுருட்டு, இளநீர், கொழுக்கட்டை, அரிசிமாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டை விளக்கு ஆகியவை நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே சிறிய மது புட்டிலும் இருந்தது. படையலுக்குத் தேவையானச் சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, குழந்தைக்குப் புதுத்துணிகள், கறுப்பு வளையல்கள், கோர்த்து வைக்கப்பட்டப் பாசிமணி சங்கிலி, வசம்பினால் செய்யப்பட்ட காப்பு, வெள்ளி அரநாற்கயிறு ஆகியவைகளும் அவ்விடம் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
ஆண்கள் அந்த அறைக்குள் வர தடைவிதிக்கப்பட்டது. அதே போல் இலையில் பரிமாறப்பட்ட எந்த உணவையும் ஆண்கள் எவரும் உண்ணவோ, தொடவோ கூடாது எனவும் கண்டிப்புடன் கூறப்பட்டது. அறைக்குள் போடப்பட்ட படையல் போலவே வீட்டின் கொல்லைப்புறத்தில் தொப்புள் கொடி புதைத்த இடத்திலும் இன்னொரு படையல் போடப்பட்டது. படையல் போட்டு முடித்தவுடன் குழந்தைக்குப் புத்தாடைக் கட்டினர். வளையல், பாசிமணி, தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசு, மோதிரம், புத்தாடை என ஆளாளுக்குக் குழந்தைக்குப் பரிசளித்து மகிழ்ந்தனர்.
அறையில் போடப்பட்ட படையல் உணவு முழுவதையும் பெண்கள் சாப்பிட்டு முடித்துவிடவேண்டும் என பாட்டி உத்தரவிட்டார். பெண்களும் சிறுமிகளும் சேர்ந்துச் சாப்பிட்டும் கூட படையல் உணவு முழுவதும் முடிக்க முடியாமல் திணறினர். வெற்றிலைப்பாக்குச் சாப்பிடாதவர்களும், சம்பிரதாயத்திற்காகச் சிரமப்பட்டு அதனைக் கடித்து விழுங்கினர்.
அனைத்தும் சாப்பிட்ட பிறகு கடைசியாக சுருட்டும் மது பாட்டிலும்தான் மிஞ்சியது. பாட்டி வந்துப் பார்த்துவிட்டு, அதனையும் எப்படியாவது முடிக்கச் சொன்னார். ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்த அமுதா முன் அனுபவம் மிக்கதால், முதலில் அவள்தான் சுருட்டை பற்ற வைத்தாள். அதனை எப்படிப் புகைக்க வேண்டும் என சிவகாமிக்குச் சொல்லிக்கொடுத்தாள். பிள்ளைப் பெற்ற புண்ணியவதிகள் சேர்ந்துப் புகைத்து முடிந்து, மது பாட்டிலையும் காலி செய்தனர். அந்த வீடு முழுவதுமே சிரிப்பொலியும் மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்தது. ஆண்கள் வீட்டிற்கு வெளியே ஊஞ்சல் அருகில் கூடுதல் நாற்காலிகள் போட்டமர்ந்துக் கதைப்பேசினர். தாத்தா வரவேற்பறையில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது திடீரென்று, வீடே அதிரும் வண்ணம் கணீரென சிரிப்பொலி கேட்டது. அனைவருமே சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததால் ஒரு கணம் அதனை யாருமே பொருட்படுத்தவில்லை. ஆனால், வினோதமாகத் தொடர்ந்து ஒலித்த சிரிப்பும், அதனைத் தொடர்ந்து வந்த கைத்தட்டலும் மற்றவர்கள் மத்தியில் சில நொடிகள் அமைதியை ஏற்படுத்தியது. மறுகணம், அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர். அங்கே பாட்டித் தனியாகக் கையைத் தட்டித்தட்டி, லேசாக தரையில் குதித்தபடி பயங்கரமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். அவரது முகம் அவரது வயதைக் காட்டிலும் பத்து வயது கூடுதல் முதுமையைக் காட்டியது. ஆனால், அவரது கண்களிலும் உதடுகளிலும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.
”என்னம்மா? என்ன ஆச்சு?” வள்ளிதான் முதலில் கேட்டாள். பாட்டி பதில் சொல்லவில்லை. அவர் இன்னமும் சத்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துப் பார்த்துச் சிரித்தார். அவரது சிரிப்பு பவானியின் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கியது. அதற்குள்ளாக, தாத்தா எழுந்து வந்துவிட்டார்.
“என்ன? என்னாச்சு?” என்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தார். தாத்தாவைப் பார்த்ததும் பாட்டியின் சிரிப்பு அதிகமாகியது.
“எல்லாரும் நல்லாயிருக்கீங்க….” என்று ஆனந்தத்தில் தொடங்கிய பாட்டியின் பேச்சு, “இவ்ளோ நாளா என்னை மறந்துட்டீங்களே?” என அழுகையில் முடிந்தது. கூட்டத்தில் அனைவரும் குழம்பித் தவித்தனர். தாத்தாதான் முதலில் சுதாரித்தார்.
“யாரு நீ? இங்க எதுக்கு வந்த?” என்று சாந்தமாகக் கேட்டார். அவரது கண்களில் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் தெரிந்தது. இப்பொழுது பாட்டி விசித்திரமாக அழுதுக்கொண்டே சிரித்தார்.
“நான் யாருன்னு தெரியலையா? உன் குடும்பத்த இத்தன காலமும் நாந்தானே காவந்துப்பண்ணி வரேன். இவ்ளோ நாளா எல்லாரும் என்னை மறந்துட்டீங்க. இன்னைக்குத்தான் என் நினைப்பு வந்திருக்கு.” என கொஞ்சம் அழுதும், கொஞ்சம் சிரித்தும் மாறி மாறிப் பேசினார் பாட்டி.
குதித்துக்கொண்டே இருந்த பாட்டி, “எனக்கு காலெல்லாம் வலிக்குது. காடு மேடு எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வந்தேன். உங்களையெல்லாம் பார்க்கணும்னு பறந்து வந்திருக்கேன். என்னை உட்கார வையுங்க, என்னை உட்கார வையுங்க,” என குதித்தார்.
அமுதாவும் வள்ளியும் அவரது தோளைப் பற்றி வரவேற்பறைக்குக் கொண்டுச் சென்றனர். அங்குள்ள நாற்காலியில் அவரை உட்கார வைக்க முயன்ற போது பாட்டி அதனை மறுத்துவிட்டார்.
“இது வேணாம்! எனக்கு இது வேணாம். நல்லா காலை நீட்டி உட்காரணும்,” என்று சொல்லிக்கொண்டே படக்கென்று கீழே அமர்ந்துவிட்டார். இரு கால்களையும் நீட்டி, பின்னர் ஒரு காலில் மேல் இன்னொரு காலை வைத்துக்கொண்டார். கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியபடி சுற்றிநின்ற கூட்டத்தைக் கண்ணோட்டமிட்டார். எதனையோ நினைத்து மகிழ்ச்சியில் தலையாட்டினார்.
“எம்பிள்ளைங்க எல்லாரும் நல்லாயிருக்கீங்க.! உங்களுக்குக் காவலா நான் இருக்கேன்!” என்று ஆனந்தம் பொங்கக் கூறினார்.
“யாரு நீங்க?” இப்பொழுது சிவம் கேட்டார்.
“இன்னுமாடா தெரியல? உங்கப்பனைக் கேளு. அவனுக்குத் தெரியும். தினம் பூசைப் போடுறான்ல…?” என்று சொல்லிக்கொண்டே பவானியைப் பார்த்தார். பவானிக்கு உடம்பெல்லாம் உதறியது. மேகலாவிற்குப் பின்னால் ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்தாள்.
“ஹ…ஹ…ஹா… பயப்படாதே’டா. கெட்டிக்காரி… எங்க போனாலும் பொழைச்சுக்குவா… இங்க வா…” என்று பவானியை அழைத்தார். அனைவரின் கண்களும் பவானியை நோக்கின. பவானி மேகலாவின் கரங்களை இறுக்கப் பற்றிக்கொண்டாள். அவள் கன்னங்களும் இரண்டும் நனைந்திருந்தன. அவள் எப்போது அழ ஆரம்பித்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
“கூப்பிடுறாங்கல்ல, வா!” என்று சிவமும் சேர்ந்து அழைத்தார். மேகலா பவானியின் கையை முன்னே இழுத்துவிட்டாள். கண்களில்
நீர் வழிந்தோட பவானி பாட்டியின்
முன்னே நின்றாள்.
"திருநீறு
கொண்டுவாங்க.
எம்பிள்ளைங்களை
எல்லாம் நான் ஆசீர்வாதம்
பண்ணனும்!
பயப்படாதே...
நான்
என்றைக்கும் உங்களுக்கெல்லாம்
காவலா இருப்பேன்,"
என்று
சுற்றி நின்றவர்களைச் சுற்றிச்
சுற்றிப் பார்த்தார் பாட்டி.
அதற்குள்
வள்ளி பூஜையறையில் இருந்த
திருநீற்றுச் சிமிழைக்
கொண்டுவந்துக் கொடுத்தாள்.
அதனைக்
கைகளால் பெறும்போதே பாட்டியின்
கைகள் வெகுவாக ஆட்டம் காணுவதை
அனைவரும் கவனித்தனர்.
சிமிழியிலுள்ள
திருநீறு மேலும் கீழும் சிதற,
அதனை
உடனே தரையில் வைத்துவிட்டார்
பாட்டி.
மீண்டும்
அனைவரையும் கண்ணோட்டமிட்டவாறு
சைகையால் பவானியை அழைத்தார்.
பவானி
முன்னே சென்று மண்டியிட்டு
பாட்டியின் முன்னே அமர்ந்தாள்.
நடுங்கும்
விரல்களால் திருநீற்றை எடுத்து
பவானியின் நெற்றியில் பூசி,
"நல்லாயிரு"
என்று
ஆசீர்வதித்து அனுப்பினார்
பாட்டி.
அடுத்து
மேகலாவை அழைத்தார்.
அவளுக்கும்
திருநீறு பூசப்பட்டது.
இப்படியாக
ஒருவர் பின் ஒருவராக பாட்டியின்
முன் மண்டியிட்டு வணங்க,
அனைவருக்கும்
திருநீறு பூசி ஆசி வழங்கப்பட்டது.
தன்
பங்குக்கு சிவமும் பாட்டியின்
முன்னே வந்து அமர்ந்தார்.
"நீ
நல்லா இருப்பப்பா.
இனி
மேலும் என்னைப் பட்டினி போடாதே
ராசா.
காலங்காலமா
உன் குடும்பத்தைக் காவந்துப்
பண்றேன்.
என்னைப்
பசியா அலைய விடாதே.
இந்தக்
கிழவி தாங்கமாட்டா.
பச்சப்புள்ள
இருக்கிற வீடு.
தெம்பு
இருந்தாத்தான் என்னால காவக்காக்க
முடியும்.
முடியுமா
உன்னால?
அம்மாவாசைக்கு
அமாவாசை எனக்குப் படையல் போட
முடியுமா உன்னால?"
எனக்
கண்ணீரும் கெஞ்சலுமாய்
கேட்டார் பாட்டி.
அவர்
'பச்சப்புள்ள'
என்று
சொன்ன விதம் அனைவர் வயிற்றிலும்
புளியைக் கரைக்கவே செய்தது.
"ஒவ்வொரு
அமாவாசையுமா?
முயற்சி
பண்றேன்,"
என்றார்
சிவம்.
"உன்
குடும்பத்தையே காவந்துப்
பண்றேன்.
எனக்கு
இதைச் செய்யமாட்டியா?
வாக்குக்கொடு!
செய்யறேன்னு
வாக்குக்கொடு!"
இப்பொழுது
பாட்டியின் குரலில் சற்று
பயங்கரம் தொனித்தது.
"செய்யறேன்னு
சொல்லு அண்ணே,"
வள்ளி
சத்தமாகவேச் சொன்னாள்.
"சரி,
செய்யறேன்.
ஆனா,
என்
பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும்
வரக்கூடாது,"
சிவம்
வாக்குக்கொடுத்தார்.
"ஹ...ஹ...ஹா..."
என்று
சிரித்துக்கொண்டே பாட்டி
சிவத்திற்குத் திருநீறு
பூசிவிட்டார்.
"எனக்கு
ரொம்பெ களைப்பா இருக்கு.
தண்ணீ
கொடுங்க,
நான்
போறேன்.
உங்களையெல்லாம்
பார்த்ததுல எனக்கு ரொம்ப
சந்தோசம்....ரொம்பெ
சந்தோசம்..."
என்று
சொல்லிக்கொண்டிருக்கும்
போதே வள்ளி வெள்ளிக் கிண்ணத்தில்
தண்ணீர் கொண்டுவந்துக்
கொடுத்தாள்.
நடுங்கும்
கைகளால் பாதியைக் கீழே சிந்தி,
மீதியை
வாயிலும்,
மேலிலும்
சிந்திக் குடித்த பாட்டி
வேகவேகமாக மூச்சினை உள்ளே
இழுத்துவிட்டார்.
வினாடிகளில்
மயக்கமுற்று கீழே விழுந்தார்.
அவர்
தலை தரையில் சாய்வதற்குள்
சிவம் ஓடிச்சென்று பாட்டியைத்
தாங்கிக்கொண்டார்.
சில
வினாடிகள்தான்!
"ஏன்'டா
என்னைப் பிடிச்சிருக்க?
யாரு
தண்ணிய என் மேல கொட்டுனது?"
என
சிவத்தின் கரங்களை உதறியபடி
எழுந்து நின்றார் பாட்டி.
அனைவரும்
வாயடைத்து நின்றனர்.
என்ன
சொல்வதென்று அங்கு யாருக்கும்
விளங்கவில்லை.
வழக்கம்
போல வள்ளிதான் முதலில்
சுதாரித்தாள்.
"இந்தப்
பிள்ளைங்களுக்கு இதே வேலை!
ஓடி
விளையாடுறேன்னு தண்ணிய மேல
கீழ கொட்டி வச்சிருக்குங்க,"
என்று
சொல்லியபடியே கீழே கொட்டிக்கிடந்த
தண்ணீரையும் திருநீற்றையும்
துடைத்துச் சுத்தம் செய்தார்.
பெரியவர்கள்
சாடைமாடையாய் கண்களால் ஏதோ
பேசிக்கொண்டனர்.
சிறுவர்கள்
பேந்தப் பேந்த முழித்தனர்.
அன்றைய
நிகழ்வு நிறைவடையா முற்றுப்புள்ளி
போல் நீளப்போகிறது என்பதை
அன்று எவரும் அறியவில்லை.
...தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக