செவ்வாய், 28 ஜூலை, 2009

நினைத்துப் பார்க்கின்றேன்…


மாலை வேளையிலே
சன்னல் கம்பிகளின் ஊடே
சின்னத் சின்னத்தாய் மழைச்சாறல்கள்
மனதில் உறங்கிக் கிடந்த நினைவுகளை
சன்னமாய் தட்டி விட்டன;
நினைத்துப் பார்க்கின்றேன்…

அன்றொருநாள்
அடை மழையின் ஊடே
ஒரு குடைக்குள் இருவர் அடைக்கலம் தேடி
குளிரில் நடுங்கிக் கைக்கோர்த்த நினைவுகள்
என் மேல் ஒரு துளி நீர் படாமல்
நீ முழுக்க நனைந்தாயே;
நினைத்துப் பார்க்கின்றேன்…

கடற்கரை ஓரந்தனில்
கையோடு கை கோர்த்து
கால் மீது கால் வைத்து
தட்டுத் தடுமாறி நடந்த நினைவுகல்
ஒருகணம் நிலைத் தடுமாறி
மண்ணில் விழுந்து புரண்டதை
நினைத்துப் பார்க்கின்றேன்…

நலமின்றி நானிருக்க
இரவெல்லாம் உறக்கமின்றி
நொடிக்கொரு தரம் நலம் விசாரித்து
தவிதவித்த நினைவுகள்
எனக்காகக் கவலை கொண்டு
வாடி நின்ற முகத்தை
நினைத்துப் பார்க்கின்றேன்…

பசியென்று நான் சொல்ல
கடைகடையாய் நீ அலைய
வாடிய முகம் கண்டு
துவண்ட நினைவுகள்
சிறுகுழந்தைப் போல் எனக்கு
உணவூட்டி மகிழ்ந்தாயே
நினைத்துப் பார்க்கின்றேன்…

எனது கண்ணீரைக் கூட
ஆனந்தக் கண்ணீராக்கியவன் நீ
கட்டிய மனக்கோட்டைகள் பல
சிலவற்றை நனவாக்கிய நினைவுகள்
பலவற்றை பகல் கனவாய்;
வெறும் கனவாய் விட்டுச் சென்றாயே
நினைத்துப் பார்க்கின்றேன்…