வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அவளும் அதுவும்... (பாகம் 6)பவானிக்கு மிகுந்தக் குழப்பமாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல, மேகலா வாணிக்கும் அதே நிலைதான். நாணயத்தின் நகர்வு ஏன் திடீரென நின்றது? அது தானாகவே நின்றதா அல்லது பவானியின் விரல் பட்டு நின்றதா? மறுநாள் அதனைச் சோதனைச் செய்துப் பார்த்துவிட வேண்டும் என மூவரும் முடிவு செய்தனர்.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் பவானி தனது தோழி கோகிலாவிடம் நேற்று நடந்த விடயத்தைப் பற்றிக்கூறினாள். கோகிலா மேகலாவின் தோழியான சுகன்யாவின் தங்கை.  எனவே அந்த விளையாட்டைப் பற்றி அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள்.

“ஏய், அத விளையாடாத’லா!  ‘அது’ உன் உடம்புல உள்ள இரத்தத்தை விரல் வழியா உறிஞ்சிரும். என் அக்கா இப்படி விளையாடிக்கிட்டே இருந்துச்சு. நான் அப்பாக்கிட்ட சொல்லிட்டேன். நல்லா அடிவாங்கினுச்சு. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. உங்க அக்காவையும் விளையாட வேண்டாம்’னு சொல்லு. அடிக்கடி இத விளையாடினா, அது விரல் வழியா நம்ம உடம்புல புகுந்துக்கும், தெரியுமா?” என எச்சரித்தாள். பவானிக்குக் கோகிலாவிடம் எதற்குச் சொன்னோம் என்றாகிவிட்டது. எப்போது பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வோம் என தவிப்புடன் இருந்தாள். அன்று அவளுக்கு மதிய வகுப்பு இருந்ததால் தாமதமாகவே வீடு செல்ல நேர்ந்தது.

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பாலா பவானியைப் பார்த்ததும் திருட்டு முழி முழித்தான். இவன் முழியே சரியில்லையே என்று எண்ணியவாறு வீட்டினுள் நுழைந்தாள். வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் தூங்கி எழுந்துவிட்டனர். ‘ச்சே, இன்னைக்கு விளையாட முடியாது போல!’ என மனதிற்குள் சலித்துக்கொண்டாள். மேகலாவின் முகம் அழுது வடிந்தது போல் வீங்கியிருந்தது. வாணியைக் காணவில்லை. உடை மாற்ற அறைக்குள் நுழையுமுன் “பவானி!!” என்று தாத்தா உரக்க அழைக்கும் சத்தம் கேட்டது. “இதோ…வரேன்…” என்று கத்தியவாறு பவானி முன் அறைக்குச் சென்றாள்.

பவானியைக் கண்டதுதான் தாமதம், “பள்ளிக்கூடம் போனமா, படிச்சோமான்னு இருக்கணும்! கண்ட கழுதைகளோட சேர்ந்து கண்டதையும் கத்துக்கிட்டு வீட்ல வந்து விளையாடக் கூடாது. பெரியவளுத்தான் அறிவில்லை.  நீ கெட்டிக்காரிதானே? உனக்கு எங்கே போச்சு புத்தி?” தாத்தா இடைவெளி விடாமல் பொரிந்துத் தள்ளினார். எதைப் பற்றிப் பேசுகிறார் என்று தெரியாமல் தவித்த பவானிக்கு அடுத்த வரி வெள்ளிடை மலை போல் அனைத்தையும் புரிய வைத்தது.

“பேய், பிசாசுன்னு இனி இந்த வீட்ல ஒருத்தரும் பேசக்கூடாது. தினமும் மணி அடிச்சி சாமி கும்பிட்டுறோம். பூசைப் போடுறோம். நாம சாமியை நம்பணுமா; பேய் பிசாசை நம்பணுமா? அடுத்த தடவை இந்த மாதிரி விசயத்தைக் கேள்விப்பட்டேன், அத்தனைப் பேரையும் வகுந்திடுவேன் வகுந்து!” என்றதோடு நில்லாமல் இன்னும் என்னென்னவோ சொல்லித் திட்டினார். பவானியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. பாலாவின் திருட்டு முழிக்கு அர்த்தமும் புரிந்தது. அப்போதுதான் தாத்தாவின் குப்பைத் தொட்டியில் கிழித்தெறியப்பட்ட அந்த வரைப்படத்தைப் பார்த்தாள்.  சொட்டிய கண்ணீர்த் துளிகளைத் துடைத்துவிட்டு உடைமாற்ற மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். அங்கே வாணி குப்புறப்படுத்துக்கொண்டு இன்னமும் தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள்.

அன்று யாரும் யாருடனும் அதிகம் பேசவில்லை. இரவு தூங்கும் போது பாலாவின் துரோகச் செயலை மேகலா பவானியிடம் தெரிவித்தாள். ஏற்கனவே இப்படித்தான் நடந்திருக்கும் என யூகித்திருந்த பவானிக்கு இது ஆச்சரியம் அளிக்கவில்லை. மாறாக, கோபத்தையே அதிகரித்தது. இனி அந்த வெள்ளை வரைத்தாள் வீட்டிற்குள் வரப்போவதில்லை. தனது தமக்கைகள் அதனைப் பற்றி பேசப் போவதும் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவளது மனதில் ஏமாற்றம் படர்ந்தது.

பள்ளிக்கூடத்தில் பவானி கோகிலாவிடம் வீட்டில் நடந்த விடயத்தைச் சொன்னாள். பவானியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் கோகிலாவின் மனதைத் தொட்டது. தனது தோழி மனம் வாடுவதை விரும்பாதவள் கோகிலா.

“இதுக்கெல்லாம் கவலைப் படுவாங்களா? உனக்கு அந்தப் பேய் விளையாட்டு தானே விளையாடணும்? அது எப்படி விளையாடுவாங்கன்னு எனக்குத் தெரியும். அடுத்த வாரம் மத்தியான ‘க்கிளாஸ்’ ஆரம்பிக்கிற முன்னாடி க்கிளாஸ்லேயே விளையாடலாம். நிறைய பேர் வீட்டுக்குப் போய் உடுப்பு மாத்திட்டுத்தான் வருவாங்க. நாம ஸ்கூல்லேயே இருந்து விளையாடலாம்.” பவானியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“ஆனா, இந்த ஒரு தடவை மட்டும்தான். அதுக்கப்புறம் நீ இதை விளையாடக்கூடாது!” என்று ஆறுதலால் பேசி கண்டிப்புடன் முடித்தாள் கோகிலா.

“சரி” என சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள் பவானி.
”சத்தியமா?” என்று தனது ஆயுதத்தை எடுத்தாள் கோகிலா. பவானியிடம் சத்தியம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. தன்னால் வாக்கினைக் காப்பாற்ற முடியாது என்று தோன்றினால், பவானி சத்தியம் செய்ய மாட்டாள். ஒரு முறை சத்தியம் செய்துவிட்டால் அதனை மீறவும் மாட்டாள்.

“பார்க்கலாம்,” என்றாள் பவானி.

”அதெல்லாம் முடியாது. இதுதான் கடைசினு சத்தியம் செஞ்சா விளையாடலாம். இல்லாட்டி முடியாது,” எனத் தீர்க்கமாகச் சொன்னாள் கோகிலா. வேறு வழியின்றி பவானி சத்தியம் செய்தாள்.  எப்படியாவது ‘அதனுடன்’ பேசிவிட வேண்டும் என உறுதிக்கொண்டாள்.

அடுத்த வாரம் அவர்களுடன் வகுப்புத் தோழியான வசந்தியும் சேர்ந்துக்கொண்டாள்.  அன்று அவர்களுக்கு மதிய வகுப்பு இருந்தது. பவானி, கோகிலா, வசந்தி ஆகிய மூவரும் மதிய வகுப்பிற்கான மாற்று உடைகளை காலையிலேயே பள்ளிக்கு எடுத்து வந்துவிட்டனர். எனவே, அவர்கள் மூவரும் பள்ளி முடிந்து உடை மாற்ற வீட்டிற்குச் செல்லவில்லை. பள்ளிக்கூடக் கழிவறையில் அவசர அவசரமாக உடை மாற்றிக் கொண்டு யாருமில்லாத தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். பூட்டப்படாதக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்நுழைந்த பவானி, மூவரும் அமர்வதற்கு ஏதுவான இடத்தைத் தேடினாள். கோகிலா வகுப்பறைக் கதவை பழைய மாதிரியே சாத்தினாள். வாயிற் கதவை மறைத்த விதமாக வசந்தி அமர, மற்ற இருவரும் வெள்ளை வரைத்தாள் எடுத்து குறியீடுகளை வரைய ஆரம்பித்தனர்.
“யாரு முதல்ல விளையாடப் போறா?” கோகிலா கேட்டாள். பவானி மற்ற இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“நீயே ஆரம்பி,” என்றாள் வசந்தி. ஹோம் என்ற வட்டத்தில் இருபது காசு நாணயத்தை வைத்து தனது ஆள்காட்டி விரலை மெதுவாக அதன் மீது வைத்தாள் கோகிலா. ’ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்’ என மூவரும் ஒருசேர மெல்ல அழைக்கத் தொடங்கினர். சில நிமிடங்கள் கடந்தோடின.

“என்னலா ஒன்னுமே நடக்கமாட்டுது?” என்று சந்தேகமாய் கேட்டாள் பவானி.

“ஆமா. இங்க கொடு, நான் ‘ட்ரை’ பண்றேன்,” என முன்வந்தாள் வசந்தி. நாணயம் விரல் மாறியது. மூவரும் சேர்ந்து அதனை அழைக்கத் தொடங்கினர். வினாடிகள் நிமிடங்களாயின. திடீரென தன் விரலை நாணயத்திலிருந்து சட்டென நீக்கினாள்.

“என்னாச்சு?” என மற்ற இருவரும் பதற்றத்துடன் வினவினர்.

“ஏதோ ‘கரண்டு’ இழுக்கிற மாதிரி இருந்துச்சு. நான் கையை எடுத்துட்டேன். எனக்கு பயமாயிருக்குல்லா,” என்ற வசந்தியின் கண்கள் மட்டும் நாணயத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.  நாணயம் ஹோம் என்ற வட்டத்தைவிட்டு சற்று வெளியே நகர்ந்திருந்தது. அது தானாக நகர்ந்ததா அல்லது தான் விரலை எடுக்கும் போது தற்செயலாக நகர்த்தப்பட்டதா என்று வசந்திக்குத் தெரியவில்லை.

“சரி, இப்ப நான் ட்ரை பண்றேன்,” என களத்தில் இறங்கினாள் பவானி. எவ்வளவு நேரம் வைத்திருந்தும் நாணயம் இம்மியளவு கூட நகரவில்லை. பவானி கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி மீண்டும் அழைத்தாள். ஒரு கணம் மூடிய வகுப்பறைக்குள் குளிர்ந்த காற்று வீசுவதை மூவரும் உணர்ந்தனர். மூவரின் உடலும் சிலிர்த்தன. பவானி கண்களைத் திறந்தாள். நாணயம் இன்னும் நகரவில்லை. திடீரென தங்கள் உடலை வருடிச் சென்ற குளிர்காற்றினால் உண்டான மிரட்சி மூவர் கண்களிலும் தெரிந்தது.

வகுப்பறைக்கு வெளியே ஆட்களின் நடமாட்டம் கேட்டது. வீட்டிற்குச் சென்றிருந்த மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

“எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. யாராவது பார்த்து டீச்சர்கிட்ட சொன்னா அவ்ளோதான்.  வாங்க போயிடலாம்,” என்று முன்னெச்சரிக்கையுடன் கூறினாள் கோகிலா. பவானி ஏமாற்றத்துடன் நாணயத்திலிருந்து விரலை எடுத்தாள். கோகிலா எழுந்து வரைத்தாளை நார் நாராக்க் கிழித்துக் குப்பைத்தொட்டியில் வீசினாள்.

“ஏன்லா அதக் கிழிச்சுப் போட்ட?” என்று வசந்தி புரியாமல் கேட்டாள்.

“என்னோட அம்மா திடீர்னு பேக்கைச் செக் பண்ணுவாங்க. அம்மா மட்டும் இதைப் பார்த்தாங்கன்னா அவ்ளோதான். அப்பாக்கிட்ட சொல்லி எனக்கு நல்லா அடி வாங்கிக் கொடுப்பாங்க,” என விளக்கினாள் கோகிலா.

”அப்படின்னா மறுபடியும் விளையாடுறதுக்குத் திரும்பவும் புதுசா வரையணுமா?” என எரிச்சலுடன் கேட்டாள் பவானி.

“மறுபடியுமா? நான் விளையாட மாட்டேன்பா. இதுதான் கடைசின்னு நீயும் சத்தியம் பண்ணின தானே?” என எதிர்க்கேள்விக் கேட்டாள் கோகிலா.

“ஏய், நான் விளையாடவே இல்ல தெரியுமா? அந்தக் காசு நகரவே இல்ல,” என மறுத்து வாதாடினாள் பவானி.

“எனக்குக் கூடத்தான் நகரல,” என ஒத்து ஊதினாள் வசந்தி.

”அதெல்லாம் முடியாது. காசு நகர்ந்துச்சோ இல்லையோ, நாம மூனு பேருமே விளையாடிட்டோம். இதுதான் கடைசி! பவானி, நீ சத்தியம் பண்ணியிருக்கே, விளையாடாதே!” எச்சரித்தாள் கோகிலா. அதற்குள் வசந்தி எழுந்து அமர்வதற்காக எடுத்த நாற்காலியை உரிய இடத்தில் நகர்த்தி வைத்தாள். பவானி முகத்தைச் சுழித்துக்கொண்டே வகுப்பறையை விட்டு வெளியேறினாள். அவளை மற்ற இருவரும் பின் தொடர்ந்தனர்.

....தொடரும்...