திங்கள், 16 பிப்ரவரி, 2015

மரணங்களின் மர்மங்கள்…


இப்பூவுலகில் தினந்தோறும் எத்தனையோ மனிதர்கள் இறந்துக்கொண்டே இருக்கின்றனர். ஒரு மனிதன் பிறக்கும் போது ஏற்படும் மகிழ்வும் கொண்டாட்டமும் அவன் இறக்கும் போது கண்காணாமல் போய்விடுகின்றன. ஒருவன் எதற்காகப் பிறக்கின்றான்? எதற்காக வாழ்கின்றான்? வாழ்க்கை என்பது என்ன? வாழ்க்கையின் அடைவுநிலை என்ன? அவன் எப்படி இறக்கின்றான்? எவ்வாறு அவன் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது? இறந்தபின் அவன் எங்கு செல்கிறான்? அவனுக்கு அவன் வாழ்ந்த காலங்களும் உறவுகளும் நினைவில் இருக்குமா? அவன் மீண்டும் பிறப்பானா? அப்படி பிறந்தால் அவனுக்கு முந்தைய நினைவுகள் யாவும் திரும்புவா? அப்படித் திரும்பாதவாயின் அவனுடைய புதிய பிறப்புத்தான் எதற்காக? அவன் படும் துன்பங்கள் எதற்காக? அவனது மகிழ்ச்சியின் அர்த்தம் என்ன? மீண்டும் அவன் இறக்கப்போவது நிச்சயம் எனில் எதற்காகத் திரும்பத் திரும்ப பிறந்து அழிகிறான்? இவ்வாறு பல கேள்விகள் நம்மில் பலருக்கும் பல சமயங்களில் எழுவதுண்டு.

ஒரு மனிதனின் வளர்ச்சியே அவனது இறப்பை முன்னோக்கிச் செல்கிறது. ஒவ்வோர் ஆண்டும் நமக்கு ஒரு வயது கூடும் போது, இறக்கும் காலம் நெருங்கிக்கொண்டே வருகிறது. நாமோ இந்த உண்மையை மறந்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறித் திரிகிறோம். சாகும் நேரம் தெரிந்துவிட்டால், வாழும் காலம் கசந்துவிடும் என்பார்கள். அதனால்தான் என்னவோ, நம்மில் பெரும்பாலோர் இறப்பைப் பற்றிய சிந்தையே இல்லாமல் இந்த வாழ்வின் மேல் மிகுந்த பற்றுக்கொண்டு விடுகிறோம். நாமும் இறந்துவிடுமோம் என்ற உண்மை பலருக்கு இன்னமும் விளங்காமலேயே இருக்கிறது. பிறர் இறப்பில் அனுதாபம் கொள்கிறோம்; வருத்தப்படுகிறோம். நாமும் ஒருநாள் அதே பாடையில் போகப்போகிறோம் என்பதை நினக்க மட்டும் மனம் உடன்படுவதில்லை.
சரி, நாம் இறக்கப்போவது உறுதி.பின்னர், இந்த வாழ்க்கை எதற்காக? உண்டு, களித்து, துன்புற்று இறப்பதற்கா? இந்தக் குறுகிய வாழ்க்கையில் எத்தனை ஆசைகள், எதிர்ப்பார்ப்புகள், கனவுகள், இலட்சியங்கள்? தவிர்த்து, கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சமூக கோட்பாடுகள்? அத்தனையும் இந்த ஒரே வாழ்க்கையில் வாழ்ந்துவிட முடியுமா? இறந்தபின் நமக்குக் கிடைக்கப்போவதுதான் என்ன? ஆவிகள் உலகம் என்று ஒன்று உள்ளதா? அது உண்மையெனின், இதுவரையில் பிறந்து இறந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் அவ்வுலகில் இடம் இருக்குமா? இந்நேரம் இட நெரிசல் வந்திருக்கலாமோ? சொர்க்கம், நரகம் என்பது உண்டா? அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கும்? யாரெல்லாம் அங்கே இருப்பார்கள்? அங்கிருப்பவர்கள் மீண்டும் பிறப்பார்களா இல்லை அங்கேயே நிரந்தரமாக இருந்துவிடுவார்களா?

கேள்விகள்! கேள்விகள்! கேள்விகள்! பல்லாயிரக்கணக்கான கேள்விகள் மனதினுள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. தலையில் முதல் நரைமுடி தெரிகையில், அளவுக்கதிகமாக முடி உதிர்கையில், பார்வை லேசாக மங்குகையில், உடலில் ஆங்காங்கே தாங்கவொண்ணா வினோத வலி ஏற்படுகையில், 32 பற்களும் வரிசையாக அமைந்த பிறகு அதில் முதல் பல் விழுகையில், சிறு வேலைகள் செய்யும் போதே உடல் அளவுக்கதிகமாக களைப்புறுகையில், உடல் பாகத்தில் ஏதாவதொன்று செயலிழைக்கையில், முதல் மரண பயம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. பெரும்பாலும் நம் அலுவல்களுக்கிடையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் நாம் அதனை அவ்வளவாகப் பெரிதுபடுத்துவதில்லை. இருந்த போதிலும், நம் நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் ஒவ்வொருவரகாக மரணத்தைத் தழுவும் போது, நமக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை சிலர் உணரவே செய்கின்றனர்.

இறக்கும் தருவாய் நெருங்க நெருங்க அவர்களது சுயநலம் சிறிது சிறிதாக அவர்களை விட்டு அகன்றுவிடுகிறது. அதன் காரணமாகவே வயாதான பலரும் சில நல்ல பொதுக்காரியங்களில் தம்மை ஈடுப்படுத்திக்கொள்கின்றனர். ’இருக்கும்வரை நல்லதைச் செய்வோம்’ என்ற எண்ணம் கூட இதன் காரணமாக இருக்கலாம். இதுவே இவர்களுக்குப் ‘பெரியவர்கள்’ என்ற காரணப்பெயரையும் ஈட்டித்தந்திருக்கலாம். தாங்கள் இறந்தபிறகு எங்குச் செல்வோம் என்பது தெரியாத கலக்கமும் மனிதர்களை பெருவாரியாக ஆட்டிப்படைத்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே, அந்தக் கலக்கத்தைக் குறைப்பதற்காகவே இப்புவியில் இறந்தவர்கள் ‘இறையடி’ சேர்வார்கள் என்று தங்களுக்குள் இன்னொரு நம்பிக்கையையும் மனிதர்களே விதைத்துக்கொண்டனர். எனவேதான் மரண பயம் வரும் வேளையில் இறைவனின் நினைவும் ஒருவனைப் பற்றிக்கொள்கிறது. இறந்தபிறகு நாம் என்ன ஆகப்போகிறோம் என்பதை மறக்கச்செய்து, நாம் இறைவனடி சேரப்போகிறோம் என்ற மனநிலையை இது தானாகவே ஏற்படுத்திக்கொடுக்கிறது.


சிலர் இறைவனடி சேர்வதற்கான மன தைரியத்தைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் கோவில், புண்ணிய தரிசனம் என்று வயதான காலத்தில் அலைகிறார்களோ என்றுக்கூட நினைக்கத் தோன்றுகிறது. *கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்குள் இதனை நான் இழுத்து வரவிரும்பவில்லை. பொதுப்படையான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இப்படித்தான் இருக்குமோ என்று முடிவு செய்யத் தோன்றுகிறது. என்னதான் பொதுப்படையாக இறையடி சேர்ந்தனர் என்றுச் சொன்னாலும், எந்த இறைவன்? பின்னர் என்ன ஆகும்? என்ற மேலெழும் கேள்விகளைப் பலரும் கேட்க விரும்புவதில்லை. ஏனெனில், எத்தனைச் சமாதானங்கள் கூறிக்கொண்டாலும் மரணத்தின் மர்மத்தை மட்டும் அறிந்துக்கொள்ளவே முடிவதில்லை.