திங்கள், 6 ஏப்ரல், 2009

எங்கே செல்லும்…? (20)


“அனாதை நாயி! உனக்கு அவ்ளோ திமிரா?” என்று அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் மங்களம். அவ்வளவு நேரம் அமைதியாய் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதாவின் பாட்டி, “மங்களம்!” என்று கூவிக்கொண்டு அவளருகே ஓடினாள். ஓங்கியக் கையைத் தனது உறுதியானக் கரத்தால் பிடித்து நிறுத்தினாள் கவிதா. அவளது கண்களிலிருந்து நீர் அருவியாய் ஊற்றெடுத்தது.

“திருப்பி அடிக்க எனக்கு ரொம்பெ நேரம் எடுக்காது. இதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட வச்சுக்கிங்க! என்கிட்ட வேணாம்!” என்று நச்சென்றுக் கூறி, பட்டென்று மங்களத்தின் கையை உதறிவிட்டு, விருட்டென்று அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள் கவிதா.

மங்களத்தால் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கவிதாவின் அறையின் வெளியே நின்றுக்கொண்டு குய்யோ முய்யோ என்று அலறினாள். அவளது அறையை காலால் எட்டி உதைத்தாள். கேட்கத் தகாத கெட்ட வார்த்தைகளால் கவிதாவைத் திட்டினாள். கவிதா அனைத்தையும் அறையின் உள்ளே ஒரு மூலையில் அமர்ந்தவாறுக் கேட்டுக்கொண்டிருந்தாள். வெளியே மங்களத்தின் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. பாட்டியின் குரல் கேட்கவே இல்லை.

‘கடவுளே! எனக்கென்று யாருமே இல்லையா? நான் என்ன அனாதையா? என்னைப் பெற்றவர்கள் உயிருடன் தானே இருக்கின்றனர். பின்னர் ஏன் என்னை அனாதை என்றார்? பெற்றோர் இருந்தும் அனாதையா நான்? பாட்டிக்கூட என்னை ஆதரித்து ஒரு வார்த்தைப் பேசவில்லையே. அத்தைச் சொன்னதை அப்படியே எல்லாரும் நம்பிவிட்டார்களா? என்மீது யாருக்குமே நம்பிக்கை இல்லையா? யாருமே எனது நிலையை நினைத்துப்பார்க்க மாட்டார்களா?’

‘இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கொண்டு நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்? எனக்காக யார் இருக்கிறார்கள்? நான் செத்தால் யார் எனக்காக அழுவார்கள்? என் தாய் தந்தை அப்போதாவது என் பிணத்தைப் பார்க்க வருவார்களா?’ என பலவாறாகச் சிந்திந்தாள் கவிதா. அப்படியே ஒருவாறு உறங்கிப் போனாள். எழுந்தப் பிறகுக் கூட அவள் அறையை விட்டு வெளியாகவில்லை. உணவு உண்ணவில்லை. குளிக்கவில்லை. செத்தப் பிணம் போல் கட்டிலேயே சரிந்துக்கிடந்தாள்.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடம் சென்றாள். அவள் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை. பாடத்தில் கவனம் செல்லவில்லை. திடீர் திடீரென்று நேற்றைய சம்பங்கள் அகக்கண் முன்னே வந்து கண்களைக் கனக்கச் செய்தது. ‘தலைவலி’ என்று தனது நண்பர்களையும் ஆசிரியரையும் சமாளித்தாள். அவளது வீங்கிப் போன கண்கள் மட்டும் அவள் மீளாத துயரில் இருக்கின்றாள் என்பதை பறைச்சாற்றிக்கொண்டு இருந்தது.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள். பாட்டியிடம் எதுவும் பேசவில்லை. உணவு உண்ணவில்லை. அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள். அவளது பாட்டி வெளியிலிருந்துப் புலம்ப ஆரம்பித்தாள்.

“நான் என்னப் பண்ண? நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு எம்மேல கோவத்த காமிக்கிறீங்க. நேத்துலேர்ந்து எதுவுமே சாப்பிடல. ஆக்கி வச்ச சோறு கறி என்னத்துக்கு ஆவுறது? எல்லாருக்கும் மத்தியில நாந்தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். நாய் பொழப்பா போச்சு எம்பொழப்பு!” என்று அழுது தீர்த்தாள். கவிதாவிற்கு மனசுக் கேட்கவில்லை. இருந்தும், வெளியில் செல்ல மனம் இடம் தரவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அறையிலேயே கிடந்தாள்.

“கவி… கவி… கதவைத் திற… அக்கா வந்திருக்கேன்.” என்று சிறிது நேரத்திற்கெல்லாம் தேவியின் தாய் கமலம் அவ்விடம் வந்து கவிதாவின் அறைக்கதவைத் தட்டினார். கவிதா மலர்ந்த முகத்துடன் கதவைத் திறந்தாள்.

“என்னடி பண்ற? சாப்டியா?” என்றார் கமலம். தேவிக்கு நெஞ்சடைத்தது. ‘கடவுளே நான் அழுதுறக் கூடாது,’ என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டாள். கம்மியக் குரலில், “சாப்பிட்டென்’கா. நீங்க சாப்டிங்களா?” என்று வினவினாள். கமலம் கவிதாவைப் பரிதாபமாகப் பார்த்தார். கவிதாவால் அந்தப் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் நீர் திரண்டு, இரு துளிகள் கன்னத்தில் வழிந்தோடிக் தரையைத் தொட்டன. சட்டென்று அதனைத் துடைத்துக்கொண்டாள்.

“ரூம்லேயே அடைஞ்சிக்கிட்டு என்னப் பண்ற? வீட்டுப் பக்கட்டே வரமாட்ற? வீட்டுக்கு வா… போகலாம். இன்னைக்கு எங்க வீட்ல சைவம்தான். வந்து சாப்பிடு,” என்றழைத்தார்.

“நான் சாப்டேன்’கா,” என்றாள் கவிதா.

“என்கிட்டயே பொய் சொல்றியா? பாட்டி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாங்க. மத்தவங்க பேசினா பேசிட்டுப் போறாங்க. அதுக்காக நீ ஏன் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிற? வா, வந்து சாப்பிடு. தேவி உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கா. நாந்தான் உன்னைக் கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்,” என்று கவிதாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கமலம்.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை கவிதாவிற்குப் பீறிட்டுக் கொண்டு வந்தது. ‘எனக்கு இந்த மாதிரி ஒரு அம்மா இல்லையே?’ என்று மனதுக்குள் ஏங்கித் தவித்து அழுதாள். கமலம் அவளைக் கட்டியணைத்துத் தேற்றினார். அவரது கண்களும் கலங்கி நின்றது. கையோடு கவிதாவைக் கூட்டிக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தாள் கமலம்.


தொடரும்…

தமிழா!


தமிழா
தயக்கம் ஏன்?
துடித்தெழு
துன்பத்தைத்
தொடைத்திடு!
தயங்காதே- காலம்
தாழ்ந்தாதே…
தரணியில்- நீ
தாழ்வாகாதே!

மது வேண்டாம்
மாதுவும் வேண்டாம்
மரத்தமிழன் நீயடா
மறவாதே!
மங்கையைக் கண்டு
மயங்காதே
மாய மந்திரம் செய்யாதே!
மதியிழந்துப் போகாதே
மரமண்டையாக ஆகாதே!

உன் முகம்!


காலை வேளையிலே
கண்ணாடி பார்க்கையிலே
கண்ணுக்குள் தெரிந்ததுவே
கண்ணாளன் உன் முகம்தான்!

மாலை வேளையிலே
மாவிளக்கு போடயிலே
மாமா உன் முகம்தான்
மனசுக்குள் துடிக்கிறதே!

அந்தி வேளையிலே
அந்திமழைப் பொழிகையிலே
அத்தான் உன் முகம்தான்
அன்பாகத் தெரிகிறதே!

இரவு வேளையிலே
இன்பக் கனவினிலே
இளமைத் துள்ளலிலே
இனிக்கும் உன் முகம்தான்!

வியாழன், 2 ஏப்ரல், 2009

தவிக்கின்றேன்…


கவலைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
சொல்லத்தான் நினைக்கின்றேன்
வார்த்தைகள் வரவில்லை!

நெஞ்சம் நோகுதடா
சொல்லாமல் வாடுதடா
நஞ்சுக் கசியுதடா
கொல்லாமல் கொல்லுதடா!

அறியாமல் செய்துவிட்டேன்
மாபெறும் தவறொன்றை
தெரியாமல் விழுந்துவிட்டேன்
காதல் குழியொன்றில்!

எழுவதற்கு பலமில்லை
மறக்க இயலவில்லை
அழுவதற்குத் மனமில்லை
சொல்லத் துணிவில்லை!

அஞ்சி அஞ்சி வாழ்கின்றேன்
செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்
தனிமையால் வாடுகின்றேன்
தனியாகத் தவிக்கின்றேன்!

நீ மட்டும்!


நான் பூவாக இருந்தால்
நீ மட்டுமே பறிக்க வேண்டும்
கனியாக இருந்தால்
நீ மட்டுமே சுவைக்க வேண்டும்!

நான் நீராக இருந்தால்
நீ மட்டுமே அருந்த வேண்டும்
காற்றாக இருந்தால்
நீ மட்டுமே சுவாசிக்க வேண்டும்!

நான் கடலாக இருந்தால்
நீ மட்டுமே மூழ்க வேண்டும்
எழுத்தாக இருந்தால்
நீ மட்டுமே வாசிக்க வேண்டும்!

நான் மழையாக் இருந்தால்
நீ மட்டுமே நனைய வேண்டும்
பெண்ணாக இருப்பதால்
நீ மட்டுமே நேசிக்க வேண்டும்!

எங்கே செல்லும்…? (19)

ஆனால், அதற்கான பதில் அவளுக்குக் கூடிய விரைவிலேயே கிடைத்தது! ஒருநாள் சற்று சீக்கிரமே பள்ளி முடிந்து வீடு திரும்பிய கவிதா களைப்பு மிகுதியால் அறையில் படுத்திருந்தாள். அவள் வீட்டிலிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. கவிதாவின் அத்தை அப்போது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள். திடீரென்று தனது பெயரை யாரோ உச்சரிப்பதை உணர்ந்தாள் கவிதா. அறைக்கு வெளியே குமாரியின் தாய் மங்களம் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“நேத்துக்கூட ஒரு பையன் வந்து என்கிட்ட சொன்னான். அக்கா, கவிதாவை ஒரு ஆளுக்கூட பஸ் ஸ்டேசன்’ல பாத்தேன்’னு. அது வரவர அத்துமீறிப் போய்க்கிட்டு இருக்கு. நீங்களும் கண்டிக்க மாட்டேங்கறீங்க. அதுமட்டுமில்ல, கவிதானால எம்பொண்ணு பேரும் கெட்டுப்போச்சு. ரெண்டும் ஒரே மாதிரி இருக்கிறதால, எம்பிள்ளதான் ஊர் மேயுதுன்னு நினைச்சுக்கிறாங்க. அது கிட்ட ஒழுங்கா சொல்லி வையுங்க அம்மா. இல்லாட்டி நான் ஒரு நேரம் போல இருக்க மாட்டேன்!” என்று குதித்துக்கொண்டிருந்தாள் மங்களம்.

கவிதாவின் பாட்டி அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவிதாவுக்குத் தலைச் சுற்றியது. பேசுவது தன்னைப் பற்றித்தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது. இரு கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டுக் கட்டிலில் தொப்பென்று விழுந்தாள். அவர்கள் பேசப் பேச இவளுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது. ‘அடப் பாவிகளா! இப்படியும் பேசுவீங்களா?’ என்று உள்ளுக்குள் நொந்துக் கொண்டாள் கவிதா.

அன்றிலிருந்து அவள் மங்கைகைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லத் தொடங்கினாள். அவளது முகத்தைப் பார்க்கவே கவிதாவிற்குப் பிடிக்கவில்லை. மங்கை ஏதாவது கேள்விக் கேட்டாலும் பதிலேதும் கூறாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிடுகிறாள் கவிதா. இது மங்கைக்கும் சற்று நெருடலாகவே இருந்தது. இருந்த போதிலும் அதனை வெளியில் காட்டவில்லை. அதே சமயம் கவிதாவைத் தூற்றுவதையும் நிறுத்தவில்லை. நிலமை இவ்வாறே தொடர்ந்துச் சென்றது. பழிக்கு மேல் பழி கவிதாவை வந்துச் சேர்ந்தது.

இனியும் பொறுத்துப் பயனில்லை என்பதைக் கவிதா உணர்ந்தாள். அதே வேளை யாரையும் பகைத்துக்கொள்ளவும் அவள் விரும்பவில்லை. பெற்றோரை விட்டுப் பிரிந்திருந்துப் பாட்டி வீட்டில் வசிக்கும் கவிதா உறவினர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பவில்லை. அவள் விரும்பாமலேயே அவள் மீது அனைவரையும் வெறுப்புப் பாராட்டச் செய்துவிட்டாள் மங்களம்.

ஒரு முறை மங்களமும் பாட்டியும் வீட்டு ஊஞ்சலில் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டாள் கவிதா. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் நேரே அவர்கள் இருவர் முன்னிலையிலும் போய் நின்றால். அவள் வருகையைச் சற்றும் எதிர்ப்பார்க்காதா மங்களமும் பாட்டியும் ஒரு கணம் திகைத்து நின்றனர். பின்னர் மங்களம் கவிதாவைப் பார்த்தும் முகத்தைச் சுளித்துவிட்டு பாட்டியிடம் வேறு கதைப் பேசத் தொடங்கினாள், கவிதாவிற்கு இரத்தம் சூடேறியது.

“இப்ப என்னைப் பத்தி என்ன பேசுனீங்க?” என்று நிதானமாகக் கேட்டாள். அதற்குள் அவளது அத்தை பொங்கி எழுந்துவிட்டாள்.

“நாங்க ஒன்னும் உன்னப் பத்திப் பேசல! உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ. பெரியவங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை?” என்று பாய்ந்தாள். அதற்கு மேல் கவிதாவால் பொறுக்க முடியவில்லை.

“பெரியவங்களா? மொதல்ல பெரியவங்க மாதிரிப் பேசக் கத்துக்குங்க!”

“ஏய், என்னடி ரொம்பெ பேசுற?”

“ஹலோ, மரியாதையாப் பேசுங்க. உங்க வயசுக்கு மரியாதைக் கொடுக்கிறேன். கேவலமா நடந்துக்காதீங்க.”

“யாருடி கேவலமா நடந்துக்கிறா? நீதான் ஊர் ஊரா பையனுங்க கூட திரியிற. பேரைக் கெடுக்கிற நாயி, உனக்கு அவ்ளோ திமிரா?”

“வயசுக்கூட’னு பார்க்கிறேன். வாய்க்கு வந்தபடிப் பேசாதீங்க. நீங்க பாத்தீங்களா நான் எவன் கூடயாவதுப் போனத?”

“அந்தக் கண்றாவிய நான் வேறப் பார்க்கணுமா? அதா…போறவ வர்றவனுங்கெல்லாம் சொல்றானுங்களே?”

“எவன் சொன்னான் உங்கக்கிட்ட? சும்மா, அவன் சொன்னா இவன் சொன்னான்னு இஷ்டத்துக்குப் பேசாதீங்க! யாரு சொன்னான்னு ஆளக் காட்டுக்க!”

“நான் எதுக்குக் காட்டணும்? ஆளலெல்லாம் காட்ட முடியாது!”

“எப்படிக் காட்ட முடியும்? உண்மையா யாராவது சொல்லியிருந்தா தானே காட்ட முடியும். நீதான் பொய் சொல்லிக்கிட்டு அலையிறியே!” என்று இந்தச் சமயம் மரியாதையைக் கைவிட்டாள் கவிதா.

“அனாதை நாயி! உனக்கு அவ்ளோ திமிரா?” என்று அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் மங்களம்…

தொடரும்…