திங்கள், 31 டிசம்பர், 2012

இப்பொழுதெல்லாம்…

இப்பொழுதெல்லாம்
பகல்கள் இரவாகின்றன
இரவுகள் பகலாகின்றன
பசியும் நித்திரையும் மறைகின்றன
ஏக்கமும் தவிப்பும் கூடுகின்றன

இப்பொழுதெல்லாம்
அழைப்பேசி கைகளில்
தலையணை அணைப்பினில்
நாள் முழுக்க இணையத்தில்
காதல் பொங்கும் இதயத்தில்.

இப்பொழுதெல்லாம்
தனியாக சிரிக்கிறேன்
தனிமையில் மகிழ்கிறேன்
கனவினிலே மிதக்கிறேன்
வாழ்க்கையை இரசிக்கிறேன்புதன், 5 டிசம்பர், 2012

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கைஜென்னி மார்க்ஸ் எழுதிய 'எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை' எனும் நூல் அவரின்  போராட்டகரமான வாழ்வியலை அறிந்துக்கொள்ள உதவுகிறது. போராட்டவாதியின் மனைவியாக இருப்பதில் ஏற்படும் சிக்கல், எதிர்க்கொள்ள வேண்டிய பிரச்சனைகள், தாங்கிக்கொள்ள வேண்டிய சிரமங்கள் அனைத்தையும் இந்நூலின் வழி நம்மால் அறியமுடிகிறது. ஜென்னி தமது குடும்ப நண்பர்களுக்கு எழுதிய சில கடிதங்களும் இந்நூலில் பகிரப்பட்டுள்ளன. 

ஜென்னி, தனது கணவனின் செய்கைக்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாள். ஓரிடத்தில் அமைதியாக குடியமர முடியாமல் இங்கும் அங்குமாக குழந்தைகளுடன் அலைந்துத் திரிந்தாள். போதிய பணமின்றி, உண்ண உணவின்றி, உடுத்த மாற்றுடை இன்றி, படுக்க பாயின்றி, வாழ குடிலின்றி அவள் பட்ட துயரங்கள் எண்ணிடலங்கா. பத்து மாதம் சுமந்துப் பெற்ற பிள்ளைகளையும் ஏழ்மையால் பறிகொடுத்தது கொடுமையிலும் கொடுமை. 

ஜென்னி எனும் இலட்சியப் பெண் எந்த சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை. கணவனின் நடவடிக்கைகளுக்கு அவள் எப்போதும் தடையாய் இருந்தது இல்லை. எல்லா காலக்கட்டங்களிலும் சூழ்நிலையிலும் அவள் கார்ல் மார்க்சுக்கு உறுதுணையாக இருந்தாள். எந்நிலையிலும் அவள் அவனைப் பிரிந்துச் செல்லவில்லை. அவனின் படைப்புகளைப் படித்துப் பார்த்துத் திருத்தினாள், பிரதி எடுத்தாள், பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தாள். கார்ல் மார்க்ஸ் என்கிற மனிதனின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் அவள் ஏணியாய் இருந்தாள்.

வாழ்வில் அவள் பட்ட துயரங்களை எந்தப் பெண்ணும் எண்ணிப்பார்க்கக் கூட நடுங்குவாள். ஜென்னியின் ஒருநாள் குடும்ப வாழ்க்கை என்பதே மற்றவரைக் கண் கலங்கச் செய்யும். அவள் வாழ்நாள் முழுக்கப் பட்ட துயரங்களை என்னவென்று சொல்வது?

ஜென்னி மார்க்ஸ் ஓர் இலட்சியப் பெண்! ஒவ்வொரு ஆணின் கனவு தேவதை! மாதவியிடம் சென்று வந்த கோவலனுக்காக மதுரையை எரித்த கண்ணகி, இராமனின் சந்தேகத்தைத் தீர்க்க தீயில் இறங்கிய சீதை என்று பெண்ணடிமைக்குத் துவக்கமாய் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தையும், இராமாயணத்தையும் விடுத்து, இது போன்ற உண்மையான இலட்சிய, வீரப்பெண்மணிகளைப் பற்றி படித்து நமது பெண்கள் தெளிவுப் பெற்றால் எவ்வளவு அருமையாய் இருக்கும்!

ஜென்னியின் வாழ்க்கை வரலாறு நமது பெண்களும் ஆண்களும் படித்து அறிய வேண்டிய நூல்! நம் சமுதாயம் விழுப்புணர்வு பெற இன்னும் பல ஜென்னி மார்க்சுகள் தேவைப்படுகிறார்கள்!