புதன், 24 மார்ச், 2010

எனக்குத் தகுதியில்லை!


காதல் கடல் போன்றது
எனக்கு நீந்தத் தெரியாது
காதல் மலர் போன்றது
என்னிடம் நறுமணம் எல்லை!

காதல் பெண் போன்றது
என்னிடம் மென்மை இல்லை
காதல் தென்றல் போன்றது
என்னால் தவழ முடியாது!

காதல் கொடி போன்றது
என்னால் படர இயலாது
காதல் மலைப் போன்றது
என்னிடம் உறுதி இல்லை!

காதல் கட்டுரைப் போன்றது
என்னிடம் கருத்து இல்லை
காதல் கவிதைப் போன்றது
என்னிடம் நயங்கள் இல்லை!

காதல் நடனம் போன்றது
என்னிடம் நளினம் இல்லை
காதல் உயிர்ப் போன்றது
எனக்கு ஜீவனே இல்லை!

திங்கள், 22 மார்ச், 2010

உயிரே!


கண்கள் கலங்குகின்றது
சத்தம் வெளிவராமல்
கதறி அழுகின்றேன்
இதயம் ஏங்குகின்றது
ஏங்கி ஏங்கி நொந்து
பலவீனமாகிவிட்டது!

யாருக்கும் தெரியாமல்
தினமும் வேண்டுகிறேன்
என்னைக் கொல்லாதே
உயிரைத் திருடிவிட்டு
உயிரற்ற உடலாய்
நடைப்பிணமாக உலாவரும்
என்னைக் கொல்லாதே!

புதன், 17 மார்ச், 2010

சோகம்!


இரவு வேளையிலே
வானத்தை நோக்கினேன்
ஒரே இருள் சூழ்ந்த கருமை!
வானத்தில் மட்டுமல்ல
என் மனதிலும் தான்!

அங்கொன்றும் இங்கொன்றுமாக
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள்
அதைவிட பன்மடங்கு சோகங்கள்
என் நெஞ்சினிலே!

பொழுது புலர்ந்தால்
விடியல் வந்துவிடும்
வானத்தில் மட்டும்தான்
என் மனதில் இல்லை!

மனித வாழ்க்கையில்
துன்பங்கள் இயற்கை
சோதனைகள் சகஜம்
அதுவே வாழ்க்கையானால்?

திங்கள், 1 மார்ச், 2010

கவிதைத் தந்த காயம்!


அருமையான கவிதை
இனிமையான வரிகள்
எனக்கு மட்டும் கசந்தது
எண்ணத்தைக் குழப்பியது
பலமுறைப் படித்துப் பார்த்தேன்
சரியாக விளங்கவில்லை
புரிந்துக்கொள்ள இயலவில்லை!

காயம் பட்ட இதயத்திற்கு
மருந்துத் தடவ நினைக்கின்றாய்
உன் நற்குணத்திற்கு நன்றி!
என் இதயம் சதைதான் –ஆனால்
கண்ணாடியின் தன்மைக் கொண்டது
ஒருமுறை உடைந்துவிட்டது
இனி ஒட்டவைக்க இயலாது!

பிடிக்காது என்று கூறவில்லை
பிடிக்கும் என்றும் சொல்லவில்லை
தூய்மையான நட்பை நாடினேன்
கொடியக் காதலைக் கொடுக்காதே
துயரக் கடலில் மூழ்கிவிட்டேன்
மீண்டும் அழ நான் விரும்பவில்லை!

இரணப்பட்ட மனதை
காதலெனும் கத்தியால் கீறாதே
நான் வலி தாங்க மாட்டேன்!
நொந்துப்போன இதயத்தை
உன் அன்பால் மேலும் அழுத்தாதே
நான் சுமைத் தாங்க மாட்டேன்!