வெள்ளி, 18 செப்டம்பர், 2015

அவளும் அதுவும்... (பாகம் 10)



"எல்லாரும் போய் விளையாடுங்க," என முருகன் குழந்தைகளை அனுப்பி வைத்தார். பெரியவர்கள் அறுவரும் (சிவம், அமுதா, சிவகாமி, குமார், வள்ளி, முருகன்) மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

"என்ன சிவகாமி? என்ன ஆச்சு உங்கம்மாவுக்கு?" என குமார்தான் பேச்சைத் தொடங்கினார்.

"எங்களுக்கே தெரியல... அன்றைக்கும் பேச்சியம்மனுக்குப் படையல் போடும் போது இப்படித்தான் ஆச்சு. எல்லாரும் அம்மாதான் வந்திருக்காங்கன்னு நினைச்சோம். இன்னைக்கு அப்பா வேற என்னவோ சொன்றார். அவர்கிட்டதான் கேட்கணும்," என்று சிவகாமிக்குப் பதில் வள்ளி பதிலளித்தாள். அதற்குள்ளாகவே தாத்தா மீண்டும் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

"உங்கம்மா எங்க?" எனக் கேட்டார்.

"பின்னாடிசமையல் கட்டுக்குப் போனாங்க," என்று சொல்லியவாறு பின்னே சென்ற சிவகாமி மீண்டும் திரும்பி வந்து, "பின்னாடி வீட்டுக்குப் போயிருக்காங்க போல," என முடித்தாள்.

"என்ன மாமா? என்ன நடக்குது இங்க?" என குழப்பத்துடன் கேட்டார் மூத்த மருமகனான முருகன்.

"என்னத்த சொல்ல? அவங்க அம்மாதான் வந்திருக்கு..." என்ற தாத்தாவை அனைவரும் வியப்புடன் நோக்க, "புரியல? உங்க பாட்டி எப்படியோ தேடி வந்திருக்கு. அதான் இப்படி நாடகம் ஆடுது!" என்றார் தாத்தா.

"அவங்க எதுக்கு இப்போ அம்மா மேல வர்றாங்க?" என சிவம் கேட்டார்.

"ஆசைதான். குடும்பம், பிள்ளைங்க கூட இருக்கணும்'னு ஆசை. முடியுமா? விதி முடிஞ்சா போய் சேரணும். இப்படி அலையறது நல்லது இல்ல. நம்ம குடும்பத்துக்கும்தான் நல்லது இல்ல."

"இப்ப என்ன செய்யறது? வீட்ல குழந்தை வேறு இருக்கு," என குமார் கவலையுடன் கேட்டார்.

"அதெல்லாம் ஒன்னும் செய்யாது. செய்ய விட்டிருவோமா? ஏதோ குழப்படி பண்ணுது. என்னன்னு பார்க்கணும்!" எனத் தீவிரமாக எதையோ சித்தித்தவாறு சொன்ன தாத்தா மீண்டும் அரைவை அறையை நோக்கிச் சென்றார். தாத்தா கண்ணிலிருந்து மறையும்வரை காத்திருந்த சிவம்,

"எங்கேயாவது போய் பார்ப்போமா? அப்பா எதையும் தெளிவா சொல்ல மாட்றார். சாமி பார்த்தா என்ன ஏதுன்னு தெளிவா சொல்லிடுவாங்க, " என ஏனையர் முகங்களைப் பார்த்தார்.

"அதுக்கு மாமா ஒத்துக்குவாரா? அவருக்குத்தான் சாமி பார்க்கிறது எல்லாம் பிடிக்காதே?" என சிவத்தின் மனைவி அமுதா கேட்டாள்.

"எதுக்குச் சொல்லிக்கிட்டு? முதல்ல நம்ம பார்த்து என்ன ஏதுன்னு பார்த்துட்டு அப்புறம் தேவைப்பட்டா சொல்லிக்கலாம். வீட்ல பிள்ளைகள் எல்லாம் இருக்கு. இப்படியே நடந்துக்கிட்டு இருந்தா என்ன செய்றது? 'அது' எப்படி நடிச்சிச்சுன்னு பார்த்தீங்கல்ல?"

"ஆமாம். அப்பா அடிக்க வந்ததும் ஓடிட்டு திரும்ப வந்திருச்சி. அப்பா!!! நினைக்கவே சிலிர்க்கிறது! " என அண்ணனுக்கு ஒத்து ஊதினாள் சிவகாமி.

"சரி மச்சான்,  நீங்க பார்த்துட்டு தகவல் சொல்லி அனுப்புங்க. நேரமாகுது, நாங்க முதல்ல கிளம்பிறோம். எங்க அத்தை?" என சுற்றி முற்றும் பார்த்தார் முருகன். கணவனின் குறிப்பை அறிந்த வள்ளி இந்திரனை அழைத்துப் பின் வீட்டிலிருந்து பாட்டியை அழைத்து வருமாறு கூறினாள். சிறிது நேரத்தில் பாட்டி அரக்கப்பறக்க வீடு வந்து சேர்ந்தார்.

"என்ன மாப்பிள்ளை? அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? இருந்துட்டு நாளைக்குப் புறப்படலாமே?" என கனிவுப்பொங்க பழைய மாமியாகக் கேட்டார். 

"இல்ல அத்தை. வேலை இருக்கு. இன்னொருநாள் வந்து தங்கிட்டுப் போறோம்," என அவரிடம் விடைப்பெற்றார் முருகன். பின்னர் வீட்டிலுள்ள அனைவரிடமும் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டனர். 

இத்தனைக்கும் நடுவில் மீண்டும் வந்த பாட்டியை யாரும் அறியா வண்ணம் பார்த்துக்கொண்டே இருந்தாள் பவானி. அவரின் முக‌த்தில் தாங்கவொண்ணா வேதனைப் படிந்திருந்தது அவளுக்கும் மட்டும் தெரிந்தது. பாட்டியின் மேல் அவளுக்கு அனுதாபமும் கவலையும் கூடியது. மற்றவர்கள் பாட்டியிடம் இருந்து ஒதுங்கியிருக்க இவள் மட்டும் மனதில் பயம் இருந்தாலும் இயன்றவரை இயல்பாக இருக்க முயற்சித்தாள். பாட்டியின் மனதிலும் ஓராயிரம் குழப்பங்கள் இருந்தது. ஆனால், அவர் முடிந்தவரை இயல்பாக முகத்தை வைக்க வெகுவாக முயன்றார் என்றே சொல்ல வேண்டும். ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவருக்குத் திண்ணமாகத் தெரிந்தது. ஆனால் அது என்னவென்று கேட்பதற்கு அவருக்கு வாய் வரவில்லை. ஏதோ ஒன்று அவரைக் கேட்கவிடாமல் தடுத்தது என்றும் கூறலாம்.

பாட்டிக்குத் திடீர் திடீரென இப்படி ஆவது அனைவரையும் திகிலடைய வைத்தது. வழக்கமாகச் சிறுவர்கள் பேசும் பேய்க்கதைகள் கூட வெகவாகக் குறைந்துப்போயின. ஏதோ ஒன்று இந்த வீட்டில் பாட்டியின் கூடவே இருக்கிறது என்று பவானி அடிக்கடி நினைத்துக் கொண்டாள். அதனை அவள் மற்றவர்களிடம் சொல்வதற்கும் அஞ்சினாள்.

மறுவாரம் ஏதோ ஒரு இடத்தில் யாரையோ பார்த்துவிட்டு வந்த சிவம், அமுதாவையும் சிவகாமியையும் தனியே அழைத்து சமையலறையில் பேசிக்கொண்டிருந்தார். மதிய வேளை ஆகையால் பாட்டியும் மற்றவர்களும் வழக்கம் போல குட்டித் தூக்கத்தில் இருந்தனர். படுத்தும் தூக்கம் வராத பவானி தந்தையின் குரலைக் கேட்டதும் தனது காதுகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டாள். தனது உடன்பிறப்புகளை எழுப்ப எத்தனித்து பின்னர் கைவிட்டாள். 

"பாத்தியா? என்ன சொன்னாங்க?" என சிவகாமியின் குரல் கேட்டது.

"அப்பா சொன்ன மாதிரி பாட்டிதான். ஆனா, நம்ம அம்மாவோட பாட்டி. அது நம்மள விடாதாம். பரம்பர பரம்பரையா கூடவே வருமாம். அம்மாவுக்குப் பிறகு அம்மாவோட வாரிசுக்கிட்ட போயிருமாம். பொம்பள பிள்ளைங்கக்கிட்டதான் போவுமாம். நம்ம வள்ளிக்கிட்டேயும் சொல்லி வைக்கணும். குடும்பத்துல ஏதாவது குழப்படி பண்ணிக்கிட்டே இருக்குமாம்," என்ற சிவத்தின் குரலில் கவலைத் தெரிந்தது.

"என்னங்க இப்படிச் சொல்றீங்க? இவ்ளோ நாள் அத்தை நல்லா தானே இருந்தாங்க?" என்று அமுதாவும் கவலையுடன் கேட்டாள்.

அப்போது பாட்டியின் சிரிப்பொலி மீண்டும் பயங்கரமாக ஒலித்தது. அது தூங்கிக்கொண்டிருந்த சிறுவர்களையும் எழுந்து உட்கார வைத்தது. விழித்த சிறுவர்கள் ஒரு கணம் செயலற்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் தாங்கள் இருப்பது கடைசி அறை என்பது நினைவு வரவே, நீ நானென்று கதவைத் தள்ளிக்கொண்டு சமையலறைக்கு ஓடினர். அங்கே சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் இடையில் பாட்டி விகாரமாக நின்றுக்கொண்டிருந்தார்.

"டேய்! ஏய்!" என பயங்கர ஒலியை எழுப்பிக்கொண்டே பாட்டி அட்டகாசமாக சிரிக்க அங்கிருந்த அனைவருக்குமே மெய் சிலிர்ந்தது. பவானிக்குப் பாட்டியின் கோலம் பயத்தை அளிக்கவே அவளது கை கால்கள் வெலவெலத்துக் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துக்கொண்டிருந்தது. சிவம், சிவகாமி, அமுதா மூவரும் பாட்டியை அதிர்ச்சியுடன் நோக்கினர். சத்தமான அரைவை அறையில் இருக்கும் தாத்தாவிற்கும் பாலாவிற்கும் பாட்டின் குரல் கேட்க வாய்ப்பில்லைதான்.

"என்னடா? என்னை அனுப்பப் பார்க்கிறியா? உங்கப்பனுக்குத்தான் அறிவில்ல. உனக்குமா இல்ல?" என லேசாகக் குதித்துக்கொண்டே தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு சிவத்தை நோக்கி தனது கேள்விக்கணைகளை வீசினார் பாட்டி. சற்றுத் தடுமாறிய சிவம் பின்னர் சுதாரித்துக்கொண்டு பாட்டி நோக்கிச் சென்றார்.

"நீ இன்னும் இங்கதான் இருக்கியா? உன்னை அன்னிக்கே போகச் சொன்னாங்க தானே?" என்று குரலை உயர்த்தினார். அவர் அப்படிப் பாட்டியை மரியாதைக் குறைவாகப் பேசியதுச் சிறுவர்களுக்கு வியப்பளித்தது.

"யாருடா போவணும்? இது என் வீடு! நீங்கள்லாம் என் பிள்ளைங்க!" எனப் பாட்டி கண்ணீர் விட ஆரம்பித்தார். பவானிக்கு மனம் உருகியது. அவளது கண்ணீர் நின்றபாடில்லை. நடந்துகொண்டிருக்கும் களேபரத்தில் அதனை யாரும் கவனிக்கவும் இல்லை.


....தொடரும்........



கருத்துகள் இல்லை: