புதன், 23 செப்டம்பர், 2015

கொல்வதை நிறுத்துங்கள், தடுப்பு மருந்தளியுங்கள்!



கடந்த சில தினங்களாக "ரேபிஸ்" எனப்படும் வெறி நோயினைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு பினாங்கு மாநில அரசு தெருநாய்களைக் கொன்றொழிக்கும் இரக்கமற்ற செயலில் இறங்கியுள்ளது. உணவுக்காக மிருகங்களைக் கொல்வது ஒரு வகை. அது மனித சங்கிலியின் தொடர். அதனைப் பற்றி விவாதிப்பதாக இருப்பின் இக்கட்டுரையை மேற்கொண்டு படிக்க வேண்டாம். தேவையற்ற விவாதங்களில் பங்குக்கொள்ள விருப்பம் இல்லை. தற்போது பல்லாயிரக் கணக்கான குற்றமில்லா உயிர்களைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் யாம் நிற்கின்றோம். இவ்விடம் தங்கள் இயற்கையான இருப்பிடங்களில் உலாவும் நாய்களை வலுக்கட்டாயமாக கொன்றொழிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உலக சுகாதார அமைப்பு இத்தகைய வெறி நோயினைக் கட்டுப்படுத்த தடுப்புமருந்துகளையே பரிந்துரைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட தெருநாய்கள் துடைத்தொழிப்பு எந்தவொரு பயனையும் தரவில்லை. அக்டோபர் 2004‍‍ இல் ஜினிவாவில் நடைப்பெற்ற நிபுணர்கள் கலந்துரையாடலில் இந்த வெறி நோயினைக் கட்டுப்படுத்த நாய்களைக் கொன்றொழிப்பது எந்தவொரு பயனையும் தராது என்பது தெளிவாக விவாதிக்கப்பட்டு அகப்பக்கத்திலும் குறிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் அத்தகைய நடவடிக்கை அப்பகுதிவாழ் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதுவும் அவ்விடமே குறிக்கப்பட்டுள்ளது.

நிலை இப்படியிருக்க, பெரிய அளவிலாக தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நோயினைக் குணப்படுத்தலாம்/தடுக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கொன்றொழிப்பை விட்டுவிட்டு தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியதை ஏன் பினாங்கு மாநில முதல்வர் கேட்கவில்லை என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. பல உயிர்களை ஈவிறக்கமின்றிக் கொல்ல உத்தரவிட்டிருப்பதன் மூலன் மாநில அரசு தனது கோர முகத்தை முதன் முதலாக மக்களிடையே வெளிக்காட்டியுள்ளது. 

இதற்கு முன் அமெரிக்கா, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த வெறி நோயினைக் கட்டுப்படுத்த இதே போன்று நாய்களைக் கொன்றொழித்தனர். பின்னர் அந்த நடவடிக்கைப் பயன் தராது போன பின்னர் நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர். இவ்வளவு நடந்த பிறகும் இதனைப் படிப்பினையாகக்கொள்ள பினாங்கு முதல்வர் மறுப்பது அவரது அகங்காரத்தையே வெளிப்படுத்துகிறது. நாய்களைக் கொல்வதைவிட அவைகளுக்குப் தடுப்பு மருந்து வழங்குவது சுலபம். தடுப்பு மருந்துகளை உணவுகளுடன் கலந்துக்கொடுத்தாலே போதுமானது. நாய்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் இடங்களில் இவ்வாறு மருந்துகளை உணவுடன் கலந்து வழங்குவதன் மூலம் இந்த வெறி நோயினை இலகுவாகக் களையலாம். அதைவிடுத்து அவைகளைக் கொல்ல உத்தரவிட்டிருப்பது மனிதநேயமிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாய்களைக் கொன்று நெகிழிப் பைகளில் கட்டி வைத்திருக்கும் கொடூரக் காட்சி

மேலும், நாய்க்கடிகள் மூலம் இந்த நோய் இலட்சத்தில் ஒருவருக்கே பரவக்கூடும் (வெறிநோய் அந்த நாய்களுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட). பினாங்குமாநில அரசுக்குத்  தடுப்பு மருந்துகளைத் தருவித்துத் தரவும், தேவையான மனிதவளத்தை அளித்து உதவவும் உலக கால்நடைச் சேவையகம் முன்வந்துள்ளது. அதனைஅரசு முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனையே விலங்குகளின் நலம் பாதுகாக்கும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இவை எவற்றையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் முதல்வர் நாய்களைக் கொல்வதிலேயே குறியாக இருப்பது இந்த நடவடிக்கையின் உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது. பினாங்கு மாநிலம் பணக்காரர்களுக்கும் அவர்கள் வளர்க்கும் பணக்கார நாய்களுக்கு மட்டுமே சொந்தமானதா? ஏழைகளுக்கும் தெருநாய்களுக்கும் அங்கு வாழ உரிமை இல்லையா? மாநில கடன்களை மின்னல் வேகத்தில் அடைத்த முதல்வரால் நாய்களுக்குத் தடுப்பு மருந்துக்கூட வழங்க முடியாதா? அல்லது வழங்குவதற்கு விருப்பம் இல்லையா? இப்படி பலதரப்பட்ட சந்தேகங்கள் மக்கள் மனதில் எழாமல் இல்லை.

இப்படி ஈவிறக்கமின்றி கொலைத்தொழியில் இறங்க பினாங்கு முதலவருக்கு யார் அதிகாரம் வழங்கியது? கொன்றொழிப்பதை விட தடுப்பு மருந்தளிப்பதுச் சிரமமான காரியமா? கடந்த செப்டம்பர் 16 லிருந்து இன்று வரையில் சுமார் 283 நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இவ்வகை நோய் வந்தால் நாம் அவர்களைக் கொல்வதில்லையே? பின்னர் ஏன் இந்த நாய்களை மட்டும் கொல்ல வேண்டும். குணப்படுத்தவே முடியாது, கொல்வதுதான் ஒரே தீர்வு என்ற நிலையும் இங்கில்லையே? பின்னர் ஏன் இந்த கொடூர நடவடிக்கை? தடுப்புமருந்துகளின் மூலம் இந்த நோயினை 100 விழுக்காடுத் தடுக்க முடியும் என்று தெரிந்தப்பின்னரும் அவைகளின் உயிரை எடுப்பது எந்த வகையில் நியாயம்?

சமீபக் காலமாக மலேசிய நாட்டில் நிலவும் அரசியல் சூழல், அரசியல்வாதிகள் எதனையும் செய்யலாம், மக்கள் கண்டுக்கொள்ள மாட்டார்கள்; அப்படிக் கண்டாலும் அவர்களுக்குத் தட்டிக்கேட்க‌ தைரியம் இல்லை; தைரியம் இருந்து மக்கள் என்ன கூப்பாடு போட்டாலும் அதனை நாம் காதில் வாங்கத் தேவையில்லை என்ற மனபோக்கினை அரசியல்வாதிகளிடையே விதைத்துவிட்டதா? இந்த உயிர்களுக்காகக் குரல்கொடுக்க யாருமே இல்லையா? முடிந்தால் சற்று நின்று அவைகளின் கண்களைப் பாருங்கள். "எங்களைக் கொல்லாதீர்கள்" என அவை ஏக்கத்தோடு வேண்டுவதை நீங்கள் உணரவில்லையா? நாய் மனிதனின் சிறந்த நண்பன். நண்பனைக் கொல்ல எப்படி மனம் வருகிறது இவர்களுக்கு? 

பினாங்கு மாநில அரசின் இந்தக் கொடுஞ்செயலுக்கு எதிராக நீங்கள் குரல்கொடுக்க விரும்பினால், விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் அமைதி ஒன்றுக்கூடல்களில் கலந்துக்கொள்ளுங்கள். விபரம் கீழ்வருமாறு:

பினாங்கு
கொல்வதை நிறுத்துங்கள், தடுப்பு மருந்தளியுங்கள்
திகதி: 23 செப்டம்பர் 2015
நேரம்: இரவு 8 மணி
இடம்: ஸ்பீக்கர் கார்னர் , பாடாங் கோத்தா லாமா, பினாங்கு
(*மெழுகுவர்த்தி, வாசகங்களை ஏந்திய அட்டைகள், சுவரொட்டிகள் மற்றும் உங்கள் அன்பு கலந்த நெஞ்சத்துடன் கலந்துக்கொள்ளுங்கள்)

ஈப்போ, பேராக்
முதல்வரே, அப்பாவி உயிர்கள் மேல் கருணைக்கொள்ளுங்கள்
திகதி: 24 செப்டம்பர் 2015
நேரம்: காலை 9.45
இடம்: விஸ்மா இம்பியான் 574, ஜாலான் பசார், கம்போங் சிமி



நன்றி,
தெ மலேசியன் இன்சைடர்
தெ ராக்யாட் போஸ்ட்
மகேஸ்வரன் முத்தையா
டால்பின்டர் சிங் கில்
வனிதா ஆதிமூலம்







கருத்துகள் இல்லை: