செவ்வாய், 8 நவம்பர், 2011

எரியும் பனிக்காடு (Red Tea)






எரியும் பனிக்காடு எனும் நாவலின் தலைப்பை பார்த்தவுடனேயே பனிக்காடு எப்படி எரியும்? என கீரா அண்ணாவைக் கேட்டேன். “படித்துப்பார். எப்படி எரிகிறது என்பது உனக்கே தெரியும்,” என்றார்.

முன்னுரை

பி.எச். டேனியல் எழுதிய இந்நூலை இரா. முருகவேள் அழகாகத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். 1925-ஆண்டு கதைத் தொடங்குகிறது. இதில் முக்கியக் கதாமாந்தர்களாக கருப்பன், வள்ளி, மேஸ்திரி சங்கரப்பாண்டியன், வொய்ட் ஆகியோரும் ஏகப்பட்ட துணை கதாமாந்தர்களும் வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தைச் சுற்றி இந்நாவல் நகர்கிறது. அங்கே இந்திய கூலிகள் தங்கள் வியர்வையையும் இரத்தையும் எப்படியெல்லாம் சிந்தி தோட்டத்து வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளனர் என்பதை இந்நாவல் சித்தரிக்கின்றது.

பஞ்சத்தாலும் ஏழ்மையாலும் பாதிப்புற்ற கருப்பனை, சங்கரபாண்டியன் சந்திக்கிறான். தோட்டத்தில் (எஸ்டேட்டில்) நல்ல வேலை இருப்பதாகவும், அங்கே வந்தால் கை நிறைய சம்பாதித்து வசதியாக வாழலாம் என ஆசைக்காட்டி கருப்பனையும் அவனது மனைவி வள்ளியையும் அழைத்துச் செல்கிறான். அவர்களுடன் இன்னும் ஏராளமான கூலிகள் பயணமாகிறார்கள். தோட்டத்தை அடைந்தவுடன் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அங்கே அவர்கள் ஆடு மாடுகள் போல நடத்தப்படுகின்றனர். அடிப்படைச் சுதந்திரம் கூட இல்லாமல் அடிமைகள் போல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மலேரியாவாலும் இன்னும் பல நோய்களாலும் பெரும்பான்மையான மக்கள் அவ்விடமே இறக்க நேரிட்டது. இவையனைத்தும் சகித்துக்கொண்டு எப்படியாவது பணம் சேர்த்து, கடனை அடைத்து ஊர் திரும்பிவிட வேண்டும் என கருப்பனும் வள்ளியும் போராடுகிறார்கள். இறுதியில் வள்ளியும் அவளது குழந்தையும் இறக்க நேரிடுகிறது. கருப்பன் தன்னந்தனியாக அதே தோட்டத்தில் தனது வாழ்க்கையைத் தொடர்கிறான்.



முதலாளித்துவம்

நாவல் முழுக்க முதலாளிமார்களின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. சங்கரபாண்டியனும் வெள்ளையனும் தங்களுக்குக் கீழுள்ள கூலிகளுக்கு உடல்நிலை சரியில்லாத போதும் வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மீறுபவர்களை அடித்துத் துன்புறுத்துகின்றனர். பலர் தோட்டத்திலேயே அடித்துக் கொல்லப்படுவதும் சகஜமாக இருக்கிறது.

இதில் வரும் வெள்ளை அதிகாரியான வொய்ட், தனக்குக் கீழுள்ள அதிகாரிகளை மிக மோசமாகத் திட்டுகிறார். தனக்குப் பிடிக்காதவர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்கவும் செய்கிறார். தன் முன்னே யாரும் செறுப்பு அணியக் கூடாது, தொப்பிப் போடக் கூடாது, குடைப் பிடிக்கக் கூடாது என ஏராளமான சட்டங்கள் வைத்திருக்கிறார்.

தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு நிறைய சலுகையும், பிடிக்காதவர்களுக்கு ஏராளமான தொல்லைகளையும் இந்த முதலாளிமார்கள் கொடுக்கின்றனர். வொய்ட் தனது கம்பெனிக்கு அதிக இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். அதன் பொருட்டு எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கூலிகளின் நலனுக்காக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கிறார்.

சாதி

தோட்டத்தில் கூலிகளாக வேலைக்குச் சேரும் மக்கள் பெரும்பான்மை கீழ்ச்சாதியினராகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்குச் சேரும் போதே, “எல்லாம் நம்ம சாதி மக்கள்தான்” என சங்கரபாண்டியன் சொல்கிறான். நாயக்கர், தேவரில் ஒரு சிலரே தோட்ட வேலைக்கு வருவதாக நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர கொச்சை வார்த்தைகளின் பயன்பாடு இவர்களிடையே சர்வ சாதரணமாக இருக்கிறது. இந்நாவலில் வரும் மக்கள் மாட்டுக்கறி உண்கின்றனர்.

பெண்ணடிமை

அழகானப் பெண்கள் தங்கள் கட்டிலில் புரள வேண்டும் என அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் எண்ணுகின்றனர். தனக்குக் கீழே வேலை செய்பவள் தனக்கு அடிமை என்றும் எப்போதும் தமது ஆசைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் மாத்யூஸ், வொய்ட் போன்றோர் எண்ணுகின்றனர். தங்களது தோட்டத்தில் வேலை செய்யும் பல பெண்களின் தொடையைக் கிள்ளியும், ஆங்காங்கே தடவியும் வொய்ட் விளையாடுகிறார். இதனை மற்ற பெண்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாத்யூஸ் வள்ளிக்கு பல தடவைகள் தொல்லைக் கொடுக்கிறான். அவள் அவன் ஆசைக்கு இணங்காத போது பல வழிகளில் துன்புறுத்துகிறான்.

பெண்களும் அதிகாரத்தில் உள்ளவர்களை அனிசரித்துப் போனால்தான் தாங்கள் நன்றாக இருக்க முடியும் என நினைக்கின்றனர். எனவே, முதலாளிமார்களின் பார்வை எப்போது தங்கள் மீது விழும் என ஏங்கும் பெண்களும் நாவலில் வருகின்றனர். சில ஆண்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் தங்கள் சொந்த மனைவி பிள்ளைகளையே கூட்டிக் கொடுக்கின்றனர். கதையில் வரும் சங்கரபாண்டியன் தன்னிடம் பணவசதி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரே குடும்பத்தைச் சார்ந்த அக்கா தங்கைகள் மூவரையும் மணந்துக் கொள்கிறான்.



பணத்தின் தேவை

இந்நாவல் முழுவதும் பணத்தின் தேவையை மக்களுக்கு நன்றாக உணர்த்துகிறது. பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே கருப்பனும்  வள்ளியும், ஏனையோரும் தோட்டத்திற்குச் செல்கின்றனர். அங்கே தாங்கள் பட்ட கடனன அடைப்பதற்கு குளிரிலும், காய்ச்சலிலும் வேலை செய்கின்றனர். எப்படியாவது பணம் சேர்த்து, கடனை அடைத்து, ஊர் திரும்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் தங்களுக்கு நேரும் பல்வகையான இன்னல்களையும் தாங்கிக் கொள்கின்றனர். பணத்திற்காக சில பெண்கள் முதலாளிமார்களின் ஆசைக்கு இணங்கவும் தயாராக இருக்கின்றனர். ஆண்கள் தங்கள் மனைவிகளை அனுப்பிவிட்டு கண்டும் காணாமல் இருக்கின்றனர். பணத்தைச் செலுத்த முடியாமல் தங்கள் சொந்த ஊர்களுக்குப் போக முடியாமல் பலர் புழுங்கிச் சாகின்றனர்.

ஒரு சிலர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்கின்றனர். கிருஸ்துமஸ் பண்டிகையின் போது வொய்ட்’டிற்கு ஏராளமான பணமும் பரிசுப் பொருட்களும் குவிகிறது. இவ்வாறு பணம் கொடுத்து முதலாளியின் மனதைக் குளிர வைத்தால் தாங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என  அவருக்கு கீழே உள்ளவர்கள் நினைக்கின்றனர்.



மனிதத்தன்மையற்ற சூழல்

கதையில் முதலாளிமார்கள் மனிதத்தன்மையற்றவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வள்ளி தவறேதும் செய்யாத போதும் அவள் மாத்யூஸ் ஆசைக்கு இணங்காத காரணத்தால் அவளைப் பிரம்பால் அடித்து, கூலி கொடுக்காமல் பல வகையில் துன்புறுத்துகின்றனர். கடுங்குளிர், மழையென்றும் பாராமல் கூலிகள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருந்த போதும் அவர்களைக் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்புகின்றனர். சிலர் பெற்றோர் தங்கள் குழந்தை இறந்த மறு நாளே துக்கத்தை நெஞ்சோடு சுமந்துக் கொண்டு வேலைக்குச் செல்வதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வொய்ட் கூலிகளை மிகவும் கேவலமான கண்ணோட்டத்தோடு பார்க்கிறார். தனக்குப் பிடிக்காதவர்களை ஈவிறக்கமின்றி அடித்துத் துறத்துகிறார். கொச்சை வார்த்தைகளால் திட்டுகிறார். அது தவிர, மாடுகளை விட கேவலமாக கூலிகளை நடத்துகிறார். கூலிகளுக்கு மிகவும் அசுத்தமான, வசதிகள் அற்ற அறைகளே வழங்கப்படுகின்றன. தவிர  இரண்டு மூன்று குடும்பங்கள் அந்தச் சின்ன அறையைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் குடிப்பதற்கோ, கழிப்பதற்கோ முறையான வசதிகள் செய்துக் கொடுக்கப்படவில்லை.

மலேரியா போன்ற நோயினால் மக்கள் மடிந்த போது அதனை எவரும் பெரிதுபடுத்தவில்லை. தோட்டத்தில் இதெல்லாம சாதாரணம் என்பது போல் இருந்துவிட்டனர். அந்த நோய்களைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, “பிளடி நான்சென்ஸ். கொஞ்சப் பிச்சைக்காரப் பயல்கள் செத்தா என்ன- அந்த நாயக்கள்தான் பன்னிமாதிரி பெத்து போடுகிறார்களே! நான் சொல்கிறேன் நமக்கு ஒருநாளும் கூலிகளுக்குப் பற்றாக்குறை வராது,” என வொய்ட் சொல்கிறார். மேலும், “நம்மைப் பொருத்தவரை மலேரியா ஒழிப்புக்கும் மருத்துவத்துக்கும் ஏராளமான தொகையைச் செலவழிப்பதை விட இந்த நாத்தம் பிடித்த பிச்சைக்காரப் பயல்கள் செத்துத் தொலைந்து போவதே நல்லது. கொஞ்சம் ஆட்கள் குறைந்துப் போவது இந்த நாட்டுக்கு மிகவும் நல்லது. பொருளாதார அடிப்படையில்,” என கூசாமல் சொல்கிறார். “மனிதாபிமானத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குத்தாரர்களுக்கு லாபமீட்டித் தருவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம். அதுவும் கொழுத்த இலாபம்,” எனவும் தனது கூற்றை நியாயப்படுத்துகிறார்.

மருத்துவ வசதியின்மை

மலையில் வேலை செய்யும் மக்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாதக் காரணத்தினாலேயே மரண எண்ணிக்கை அதிகப்படியாக இருக்கிறது. கம்பவுண்டர் வேலை செய்து வந்த குரூப் என்ற மனிதரையே அங்குள்ளவர்கள் ‘டாக்டர்’ என அழைத்து வந்தனர். முறையான மருத்துவ கல்வி இல்லாத காரணத்தினால் குரூப் தன்னிடம் இருக்கும் மருந்துகளைக் கொண்டு கூலிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தான். மருத்துவமனை ஆட்டுக் கொட்டகையை விட கேவலமாக இருந்தது. அவ்விடம் குரூப் மற்றும் ஒரு மருத்துவ கூலியாள் ஆகிய இருவர் மட்டுமே பணிப்புரிந்து வந்தனர். எனவே, அவ்விடம் அசுத்தமாகவும் போதிய வசதிகள் இன்றியும் நோயாளிகளுக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்தது.

தவிர குரூப் வேலை செய்ய தகுதியற்றவர்களுக்குக் கூட போலியான சான்றிதழ் கொடுத்து சங்கரபாண்டியனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறான். “குரூப் ஐயா மட்டும் இங்க இருந்தா நாம ஒன்னு கேட்டா மாட்டேனு சொல்லுவாரா? நாம ஒரு கூலிய ஆஸ்பத்திரியில சேத்திக்குங்கன்னு சொன்னா மறுக்க மாட்டாரு. வேண்டான்னு சொன்னா ஒரு வார்த்த மறுத்துப் பேசாம அந்தக் கூலிய தொரத்தியே விட்டுடுவாரு,” என சங்கரபாண்டியன் கூறுகிறான்.

“ஆஸ்பிட்டல்ல மருந்துன்னு ரொம்பெ கொஞ்சம் தான் இருக்கு. ஒரு கருவிகூட இல்ல. ரெண்டே ரெண்டு வார்டுதான் இருக்கு. ரெண்டிலும் கால் வைக்கவே முடியல. அப்படி நாறுது. தினமும் கூட்டறதுக்கு கூட யாரும் இல்ல. மெடிக்கல் கூலிதான் காவல்காரன். அவன் தான் சமையல்காரன். ஆனா இங்க சமைக்கறதேயில்ல. நோயாளிகளுக்கு அவுங்க வீட்டில இருந்துதான் சாப்பாடு வருதுன்னு நினைக்கிறேன், அவுங்க, வறுத்த நிலக்கடலை எல்லாம் கொண்டு வந்து சாப்பிடுறாங்க. இந்த மாதிரி இடத்துக்கு வந்துட்டு எப்படி நோயாளிங்க உயிரோட வெளியே போறாங்கன்னுதான் ஆச்சர்யமாயிருக்கு,” என புதியதாக வந்த மருத்துவர் ஆபிரஹாம் மருத்துவமனையில் நிலையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இயலாமை

இந்நாவலில் வரும் இந்திய வம்சாவளியினர் வெள்ளையர்களை எதிர்க்க முடியாமல் அவர்களுக்குப் பணிந்து அடங்கிப் போக வேண்டியதை நினைத்து பல இடங்களில் வருந்துகின்றனர். ஆட்சியில் வெள்ளையர்கள் இருப்பதால் அவர்களிடமிருந்து எங்குப் போனாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் கூலிகளையும் பிடித்து ஆட்டுகிறது. எனவே, எதிர்க்க, கேள்வி கேட்க துணிவின்றி அந்த மலையிலேயே வேலை செய்து உயிரை விட்டவர்கள் ஏராளம். தனது மனைவிக்கு மாத்யூஸ் பல வகைகளில் தொல்லைக் கொடுப்பது கருப்பனுக்கு தெரிய வந்தபோதும் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவனைச் சுற்றி இருப்போர் அவனது இயலாமையை எடுத்துக்கூறி சமாதானப்படுத்துகின்றனர்.

முடிவுரை

பிரிட்டனில் உள்ள தங்கள் நிர்வாகத்துக்காக அதிகப்படியான இலாபம் ஈட்டவே வெள்ளையர்கள் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களைக் குறி வைத்தனர். அதில் ஏராளமான கூலிகளைக் கொண்டு வந்து குவித்து அவர்களை வதைத்தனர். தோட்டத்தில் பயங்கரமான சீதோஷ்ண நிலையிலும், அட்டை கடிகளுக்கு மத்தியிலும் மற்றும் பல கொடிய நோய்களின் தாக்கத்திலும் கூலிகள் அவதிப்பட நேர்ந்தது. மலைக்கு வேலைக்கு வரும் பாதிப்பேர் அங்கேயே மரணத்தைத் தழுவுகின்றனர். ஒரு வருடத்தில் ஏராளமான பணம் சம்பாதித்து ஊருக்குத் திரும்பிவிடலாம் என்ற அவர்கள் கனவு, தோட்டத்தில் காலடி எடுத்து வைத்ததும் உடைந்துச் சுக்குநூறாகின்றது. இவ்வாறு இந்திய மக்களின் தியாகத்தின் உருவான தேயிலைத் தோட்டத்தின் உண்மை நிலவரம் பலருக்குத் தெரியாமலேயே இருக்குன்றது. ஒவ்வொரு தேயிலை புதருக்குள்ளும் ஓரிரு இந்தியர்களின் உயிர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்நாவலில் வழி கதாசிரியர் தெளிவாக விளக்குகிறார். இந்தியர்களின் உயிர்களைக் காவு வாங்கிய தேயிலைத் தோட்டம் என்பதாலேயே இதற்கு ‘சிகப்புத் தேநீர்’ (Red Tea) என ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார். பனிக்காடு எப்படி எரியும் எனக் கேட்டிருந்தேன். இப்போது புரிகிறது பனிக்காடும் எரியும்!

கருத்துகள் இல்லை: