வெள்ளி, 2 டிசம்பர், 2011

பினாங்கு, மலேசியாவில் மாவீரர் தினம்




கடந்த 27 நவம்பர் 2011 அன்று உலகில் பல இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. வழமை போல பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி ஐயா தலைமையில் பட்டர்வெர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கேணல் சங்கரின் மரணத்தைத் தழுவிய நாளையே மாவீரர் தினமாக தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அறிவித்திருந்தார். இருப்பினும், 27-ஆம் திகதி நிகழ்வினை நடத்த இடம் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி 28-ஆம் திகதி, திங்கட்கிழமை இந்நிகழ்வு நடத்தப்பட்டது. காலை 11.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு சரியாக 2.00 மணிக்கு நிறைவுற்றது.

மக்கள் ஓசையின் நிருபரும், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவருமான தோழர் சே.குணாளன் நிகழ்வினை வழிநடத்திச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ஈழப் பண் இசைக்கப்பட்டு முறையே நிகழ்ச்சித் தொடங்கியது. சுமார் 200 பேர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் பினாங்குத் துணை முதல்வர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகன், வழக்குரைஞர் மங்களேசுவரி, சமூக நல இயக்கத் தலைவர் ஏ.சவுந்தர்ராஜன், டத்தோ ஆர். அருணாசலம், கவியழகர் க. பெருமாள் மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் ஈழத்து ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர். பேராசிரியர் அவர்கள் மாவீரர்களை நினைவுக் கூரும் வண்ணம் அகல் விளக்கினை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரமுகர்கள் குத்துவிளக்கினை ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர், நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் மலர் தூவி போரில் உயிர் நீத்த மாவீரர்களை வணங்கினர்.

கவிச்சித்தர் பெ.கோ.மலையரசன் வாசித்த விடுதலைப் போராட்டம் குறித்தான கவிதை அனைவரது மனதினையும் கவர்ந்தது. இவர் ‘பாய் புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. மாவீரர் தின அறிக்கையை பேராசிரியரின் அரசியல் – ஊடக பிரிவு செயலாளர் திரு. சத்தீஸ் முனியாண்டி வாசித்தார். பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகனின் திறப்புரையைத் தொடர்ந்து, மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் தமக்கும் தலைவர் மேதகு பிரபாகரனுக்கும் இருந்த உறவை வந்திருந்தோரிடம் பகிர்ந்துக் கொண்டார். போரின் இறுதிக் கட்டத்தின் போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை தம்மால் எப்போதுமே மறக்க முடியாது என்று ஆக்ரோஷமாக முழங்கினார். தாம் பிரபாகரனைத் தம்பி என்று அழைத்த போதிலும், அவரையே தமது முதன்மை தலைவராக வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“பிரபாகரன், ஆயிரங்காலத்துப் பயிர். கடவுளுக்கு நிகரானவர். இப்படியொரு மனிதர் இந்த உலகிற்கு இனி எப்போது கிடைப்பார் என்பது யாருக்குமே தெரியாது. எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் பிரபாகரனுக்கு ஈடாகமாட்டார்கள்,” என அவர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் நடந்த தனிப்பட்ட சந்திப்பில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவர் அவையில் அனைவரிடமும் பகிர்ந்துக்கொண்டார். “கலைஞர் தங்களுக்கு எந்த உதவியுமே செய்யவில்லை என அவரே தன் வாயால் என்னிடம் கூறினார். நம் நாட்டு ‘தலைவர்’ சாமிவேலுவைப் பற்றிக் கேட்டேன். அவர் கொடுத்ததை திருப்பிக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என பிரபாகரன் சொன்னார்,” எனவும் அவர் தெரிவித்தார்.

போரில் இறுதிக்கட்டத்தின் போது, கே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் தம்மைத் தொடர்புக் கொண்டு தலைவர் வீரமரணம் எய்துவிட்டார் என்று சொன்னதாகவும், அச்செய்தி உண்மையாக இருந்தால் விடுதலைப் புலிகளே அதனை அறிவிக்கட்டும் என தாம் அந்த இனத் துரோகியிடம் கூறியதாக பேராசிரியர் குறிப்பிட்டார். “தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சையில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராட வேண்டும். போராட்டங்கள் பலவகைப் படும். ஆயுதப் போராட்டத்தைப் பிரபாகரன் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்களவனின் வெறியாட்டத்தை ஒடுக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அன்றைய சூழலில் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது போராட்டத்தின் சூழல் மாறியுள்ளது. அதற்கேற்றாற் போல நாமும் நம்மை மாற்றிக்கொண்டு போராட வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் கூட்டணி ‘புத்ரா ஜெயாவை’ (மத்திய அரசை) கைப்பற்றுமானால், ஈழத்திற்குத் தகுந்த அங்கீகாரத்தினை தாங்கள் வழங்குவோம் எனவும் பேராசிரியர் வாக்குறுதியளித்தார். “சீமான் தலைமையில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டில் கலந்துக்கொண்டு நான் ஈழத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினேன். நான் மேடையில் பேசுவதற்கு முன்பு, பயண விசாவில் வந்திருப்பதால் மேடையில் எதுவும் பேசக்கூடாது என காவல் துறையினர் என்னை எச்சரித்தனர். இந்தியா, ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். அத்தனைப் பெரிய ஜனநாயக நாட்டில் இந்த இராமசாமி பேசுவதால் என்ன வந்துவிடப் போகிறது? கைது செய்தால் செய்துக் கொள்ளுங்கள், நான் பேசுவேன் என்று சொல்லிவிட்டேன். சுமார் 2000 காவல் துறையினர் அங்கே குவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. அன்று நான் ஈழதிற்குக் குரல் கொடுத்ததால் தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இன்று வரையில் அந்த தடை இன்னும் அகற்றப்படவில்லை,” என தெரிவித்தார்.

மேலும், தாம் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழீழத்திற்கு ஆதரவாக என்றுமே குரல் கொடுப்பேன் எனவும் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். அவரது உரையில் மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் மகுடிக்குக் கண்டுண்ட பாம்பு போல் மயங்கிக் கிடந்தனர். பேராசிரியரின் சிறப்புரைக்குப் பிறகு, மலேசிய வலைப்பதிவு எழுத்தாளர் து. பவனேஸ்வரி, புலிகளின் ஊடகப் பிரிவினைச் சார்ந்த இசைப்பிரியாவைப் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்தார். உருக்கமான அக்கவிதை வந்திருந்தோர் ஒரு சிலரது கண்களில் நீரை வரவழைத்தது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சே.குணாளன் தொகுப்புரை வழங்கினார். மாவீரர் தின கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிப்பிற்குரிய திரு. வைகோ வெளியிட்ட ஈழம் தொடர்பான குறுந்தட்டு இலவசமாக வழங்கப்பட்டது. மாலை மணி 2.00-க்கு மாவீரர் தின கூட்டம் இனிதே நிறைவுற்றது. மலேசியாவில் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்துடன் சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது என இவ்விடம் அறியத் தருகிறோம். அதுமட்டுமின்றி தமிழீழத் தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளையின் பிறந்த தினமும் நாட்டில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. நம்புங்கள், தமிழீழம் வெகு தொலையில் இல்லை!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!

கருத்துகள் இல்லை: