வியாழன், 1 டிசம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 5)




பேருந்து நிறுத்தத்திலிருந்து மூவரும் நடந்தே அருகாமையில் அமைந்திருந்த கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் வீடு சென்ற வேளையில் அண்ணி வெளியே சென்றிருந்தார். அண்ணாவின் மச்சினன் மகேந்திரனும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அவரது இரண்டு குழந்தைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை எம்முடன் வெகு சீக்கிரமே ஒட்டிக்கொண்டாள். பெயர் மதிவதனி! “எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே,” என நான் சொல்ல, “உன்னையெல்லாம் எப்படி போராளியாக்குவது? தலைவரின் மனைவி பெயரைக் கூட மறந்துவிட்டாயே?” என அண்ணா ஏமாற்றத்துடன் கூறினார்.

பையனின் பெயர் வைகறையாளன். ஏற்கனவே அவனைப் பற்றி அண்ணாவின் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். சற்று நேரத்தில் அவனும் எம்முடன் சேர்ந்துக் கொண்டான். நான் அடிக்கடி அழைப்பேசியில் சண்டைப் போடும் வாசன் நேரிலும் விட்டு வைக்கவில்லை. எலியும் பூனையும் போல அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவின் நண்பரான பாண்டியன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவரும் அவ்விடம் இருந்தார்.

மகேந்திரன் ஒரு சொம்பில் எனக்குத் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுக்க, நன்றி சொல்லி அதனைப் பெற்றுக்கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கேயோ வெளியே சென்றிருந்த அண்ணியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். என்னை விட 2 அல்லது 3 வயதுதான் மூத்தவராக இருக்க வேண்டும். கறுப்பென்றாலும் கஸ்தூரி என்று சொல்வார்களே அதற்கேற்றார் போல கலையான, அழகான முகம். அண்ணி வந்த சில நிமிடங்களிலேயே வேலை நிமித்தமாக வாசனும் அண்ணாவும் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டனர். பாண்டியன் மட்டும் குழந்தைகளை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார். வந்ததும் வராததுமாக அண்ணி அவசர அவசரமாக சமையல் வேலையில் இறங்கினார்.

அதற்கு முன்பாக தான் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தில் கொஞ்சம் வெட்டி எனது கூந்தலில் வைத்துவிட்டார். இங்கே விழாக் காலங்களிலும், சிறப்பு தினங்களில் மட்டுமே பூ வைப்பது வழக்கம் என்பதால் அது சற்று வித்தியாசமாகப் பட்டது. இருந்தும் சேலையும், பூவும் தமிழர் கலாச்சாரம் என்பதால் எனக்குப் பிடித்திருந்தது. பழங்காலத்தில் தேங்காய் திருவப் பயன்படுத்தும் மணக்கட்டையுடன் கத்தி பொருந்திய ஒரு பலகையை அண்ணி எடுத்து வந்து வரவேற்பறையில் ஓரத்தில் போட்டார். அதனை நாங்கள் எங்கள் நாட்டில் ‘தேங்காய்த் திருவி’ என்று அழைப்போம். நான் சிறு வயதாக இருக்கும் போது எனது பாட்டி அதில்தான் வீட்டில் சொந்தமாகத் தேங்காய்த் திருவுவார். இப்போதெல்லாம் இதனைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பாட்டி வீட்டில் இருந்த தேங்காய் திருவி கூட எங்கேயோ காணாமல் போய்விட்டது.

அண்ணி அதனை எடுத்துப் போட்டு, அதிலேயே பரக்பரக்கென்று காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார். சாதாரண கத்தியும், கட்டையும் கொடுத்தாலே நான் நின்று நிதானமாகத்தான் வெட்டுவேன். இவர் இப்படி தேங்காய்த் திருவியில் விறுவிறுவென நறுக்குவது எனக்கு வியப்பாக இருந்தது. என்னிடம் கொடுத்திருந்தால், ஒன்று எனது விரலை அறுத்துக் கொண்டிருப்பேன் இல்லையேல் அவை அனைத்தையும் நறுக்கி முடிக்க 2 மணி நேரம் எடுத்திருப்பேன்.

குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த இனிப்புகளையும் எடுத்துக்கொடுத்துவிட்டு அண்ணியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். திடீரென மின்விசிறி, தொலைக்காட்சி என அனைத்தும் நின்றுவிட்டது. நான் குழப்பத்துடன் அண்ணியைப் பார்த்தேன். “மின்வெட்டு” என்றார்; புரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு நிகழும் என இதற்கு முன்பே தோழர்கள் சொல்லியிருந்தார்கள். இன்று அதனை நேரில் கண்டு, அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. மதியம் 1 மணி இருக்கும். உச்சி வெயில் உச்சந்தலையைக் காய வைக்கும் நேரம். மின்விசிறி கூட இல்லாததால் வியர்வையிலேயே குளித்துவிட்டேன்.

இதே நிலை மலேசியாவில் ஏற்பட்டிருந்தால் ஆளும் கட்சிக்கு நேரக்கூடிய விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்தேன். தமிழ்நாட்டு மக்கள் அதனை அதிகம் பெரிதுப்படுத்தவில்லை போலும் என எண்ணிக்கொண்டேன். 1 மணி நேரம் சென்ற பிறகுதான் மின்சாரம் மீண்டும் வருமாம். சரி, புழுக்கத்தில் புழங்க பழக்கப்படுத்திக் கொள்வோம் என அமைதியாய் இருந்தேன். பாண்டியனிடம் முட்டை வாங்கி வரும்படி கூறி, மகேந்திரனையும் உடன் அனுப்பினார் அண்ணி. மதிவதனி பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டாள். வைகறையாளன் மட்டும் என்னுடனேயே இருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கீரா அண்ணாவும், வாசனும் வந்துச் சேர்ந்தனர். வந்த உடனேயே எனக்கும் வாசனுக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இம்முறை குழந்தைகளை விட்டு ஒருவரை ஒருவர் அடிக்க வைத்து திருப்தி பட்டுக்கொண்டோம். குழந்தைகளை யாரும் திருப்பி அடிக்க முடியாதல்லவா? முதலில் வாசன் பக்கம் இருந்த வைகறையாளன் பின்பு என் கட்சியில் சேர்ந்துவிட்டான். “டேய், இப்பவே பொண்ணுக்காக என்னை அடிக்கிறியே?” என்று வாசன் அந்தச் சிறுவனைக் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. மதிவதனி மட்டும் சிறிது நேரம் என் பக்கமும், பின்பு வாசன் பக்கமும் கட்சி மாறிக் கொண்டிருந்தாள். அதற்குள் முட்டை வாங்கச் சென்றவர்களும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

கீரா அண்ணா எனக்காக அரைவேக்காடு முட்டை தன் கையால் போட்டுத் தந்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்தார். கோழிக்கறி, இரசம், அரைவேக்காடு முட்டை என சமையல் பிரமாதமாய் இருந்தது. வாசன் அனைவருக்கும் தட்டில் சோறு போட்டு வைக்க, அண்ணன் முட்டை பொறிப்பதில் தீவிரமாக இருந்தார். அன்று மதியம் அனைவரும் வட்டமாக அமர்ந்து ஒன்றாக மதிய உணவு உட்கொண்டோம். கறி (குழம்பு) வேண்டுமென்று நான் சொல்ல, அண்ணி கோழி இறைச்சித் துண்டுகளை அள்ளி என தட்டில் வைத்தார். “இல்லை இல்லை, எனக்குக் கறி (குழம்பு) வேண்டும்,” என மீண்டும் சொல்ல, மறுபடியும் அவர் இறைச்சித் துண்டுகளை கரண்டியில் அல்ல, நான் குழம்பிப்போனேன். பின்னர்தான் “கறி இல்லை, குழம்பைத்தான் தங்கை கறி என்கிறாள்,” என கீரா அண்ணன் தெளிவுப்படுத்தினார்.

அப்போதுதான் எனது தவற்றையும் நான் உணர்ந்தேன். ஆம், கறி என்றால் இறைச்சியைத் தானே குறிக்கும்? குழம்பு என்பதுதானே சரியானச் சொல்? இத்தனைக் காலமும் நானும் என் நாட்டு மக்களும் இந்தச் சொல்லை தவறாகப் பயன்படுத்தி வருகிறோமே என வெட்கமாகவும் இருந்தது. சரி, இனி திருத்திக்கொள்ள வேண்டும் என மனதிற்குள் உறுதிக் கொண்டேன். கீரா அண்ணன் அரைவேக்காடு முட்டையை நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என பார்க்க ஆவலாக இருந்தார். அதனை கீழே ஒழுகாமல் ஒரேயடியாக வாயில் போட்டு முழுங்க வேண்டும். எனக்கு அந்த அளவிற்குத் திறமை கிடையாது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, மதிவதனி அவளுடைய முட்டையைச் சாப்பிட்டுவிட்டு வேறு யாரிடம் முட்டை இருக்கிறது எனத் தேடிக் கொண்டிருந்தாள்.

சாப்பிடத் தெரியாமல் மற்றவரின் கேலிக்கு ஆளாவதை விட அதனைச் சாப்பிடாமல் இருந்துவிடலாம் எனத் தோன்றியது. எனவே, அண்ணன் பொறித்த முட்டையை மதிவதனியிடம் கொடுத்துவிட்டேன். ஆசையாய் பொறித்த முட்டையை நான் சாப்பிடவில்லை என அண்ணன் சற்று ஏமாற்றமடைந்தார். இன்னொரு நாள் நிச்சயம் சாப்பிடுகிறேன் எனச் சொல்லி தப்பித்துக் கொண்டேன். கோழிக் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. வயிறு முட்ட சாப்பிட்டு எழும்பும் போது, “என்ன அதற்குள் எழுந்துவிட்டாய்? இன்னும் கொஞ்சம் சோறு போட்டு இரசம் ஊற்றிச் சாப்பிடு,” என அண்ணா சொல்லவும் எனக்குத் தலைச் சுற்றிவிட்டது. உண்மையிலேயே எனது வயிற்றில் இடமில்லை. போதும் என்று சொல்லியும் விடவில்லை. சரியென்று அவர்கள் திருப்திக்காக இன்னும் கொஞ்சம் சோறும், இரசமும் பிணைந்துச் சாப்பிட்டு முடித்தேன்.

நாங்கள் அனைவரும் உண்டு முடித்த வேளையில் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது. இவர்கள் எப்படித்தான் இந்தப் புழுக்கத்தையும் மின்வெட்டையும் சமாளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் தோழர் அருண்ஷோரி அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். இதற்கு முன் தொலைப்பேசியிலும், இணையத்திலும் பேசியிருந்தாலும் இன்றுதான் நாங்கள் நேரில் சந்திக்கிறோம். மிகவும் ஒல்லியாகவும் சற்று உயரமாகவும் இருந்தார். ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ சவரம் செய்யாத முகம். தாறுமாறாக வளர்ந்திருந்த தாடி முகத்தில் பாதியை மறைத்திருந்தது. அந்த கறுப்பு முகத்தில் வெள்ளைக் கண்கள், இரவு வானில் மின்னும் நிலவு போல ஒளிவீசிக் கொண்டிருந்தன. அணிந்திருந்த கறுப்புச் சட்டை அவர் பெரியார் கொள்கையினைப் பின்பற்றுபவர் என்பதனைப் பறைச்சாற்றிக் கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை: