புதன், 30 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 4)




சுமார் 5 நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் அவளுடன் நான் கதைத்திருந்தேன். “சரியம்மா, வீட்டிலிருந்து ஆட்கள் வந்திருந்து எமக்காகக் காத்திருப்பார்கள். நான் விடைப்பெறுகிறேன்,” என்றேன். “ஒரு நிமிடம் அக்கா,” எனச் சொல்லி தனது தோள்பையில் கையை விட்டு எதையோ துளாவினாள். பின்னர், சாக்லெட் ஒன்றை எடுத்து என் கைகளுக்குள் திணித்தாள். நன்றி சொல்லி புன்முறுவல் செய்தேன். அவளுக்குக் கொடுப்பதற்கு எனது கைப்பையில் எதுவுமில்லை. அனைத்துப் பொருட்களும் எனது பெரிய பைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தன. கண்ணா அண்ணாவும், பாக்கியா அக்காவும் வந்திருக்கிறார்களா என அறிந்துக்கொள்ள நான் வரவேற்பாளர்கள் காத்திருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தேன். சுமதியும் என்னுடனேயே வந்தாள். அவளது தம்பி தள்ளு வண்டியை எம்மிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவர்களது அன்பை எம்மால் புறக்கணிக்க முடியவில்லை.

நான் அவர்கள் இருவரிடமும் கதைத்துக் கொண்டே நடந்துக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ எம்மைப் பிடித்து இழுக்கவும், திரும்பிப் பார்த்தேன். சித்தி நின்றுக்கொண்டிருந்தார். பக்கத்தில் கண்ணா அண்ணா. பார்த்த வேகத்தில் சித்தியையும் கட்டி அணைத்தேன். சித்தியுடைய குழந்தைகள் இருவரும் உடன் வந்திருந்தனர். பாக்கியா அக்காவின் அம்மாவும் இம்முறை வந்திருந்தார். என் ஒருத்தியை அழைத்துச் செல்ல இத்தனைப் பேர் வந்திருக்கிறார்களே என இனம் புரியாத மகிழ்ச்சிப் படர்ந்தது. அதே வேளை, திருமண காலத்தில் வேலைகளை விட்டுவிட்டு எம்மை அழைத்துச் செல்வதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்களே என வருத்தமாகவும் இருந்தது. அவர்களுக்கு சுமதியையும் அவளது தம்பியையும் அறிமுகப்படுத்தி வைத்தேன். பின்னர் அவர்கள் இருவரும் விடைப்பெற்றுச் சென்றனர்.

கண்ணா அண்ணா எனது பொருட்களை எல்லாம் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பிறக்கப் போதும் குழந்தைக்காக நான் வாங்கி வந்திருந்த மெத்தையை எல்லாரும் பார்த்துவிட்டனர். “பவா யாருக்காக மெத்தையெல்லாம் கொண்டு வந்திருக்கிறியள்?” என சித்தி கேட்க. “அக்கா குழந்தைக்கு,” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன். கண்ணன் அண்ணா முகத்தில் வெட்கம் படர்ந்தது. “அக்காவுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று தெரியுமா? நீல நிற மெத்தை வாங்கி வந்திருக்கிறாயே,” என அம்மா கேட்டார். “அதெல்லாம் தெரியாது. நீல நிறம்தான் அழகா இருந்தது,” என்றேன்.

மழை லேசான தூறல் விட ஆரம்பித்தது. அனைவரும் மகிழுந்தில் ஏறி அமர்ந்தோம். பாக்கியா அக்காவும், கவிதாவும் திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றிருப்பதாக அம்மா கூறினார். போகும் வழியும் மாப்பிள்ளை வீட்டாருக்குச் சமைப்பதற்காகக் கோழியும், முட்டைகளும் வாங்கிக் கொண்டனர். கோழி விற்கும் அந்தக் கடையில் ‘சிக்கன், மட்டன் இங்கே கிடைக்கும்’ என எழுதப்பட்டிருந்தது. கோழி, ஆடு என்று தமிழில் எழுதாமல் ஏன் இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என சற்று வருத்தமாக இருந்தது. தமிழகத்தில் தமிழின் நிலையை நினைத்து நொந்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். சாலையின் குறுக்கும் நெடுக்கும் ஓடும் வாகனங்களும், புகையும், சத்தங்களும் நான் சென்னையில் இருப்பதை அறிவுறுத்துக் கொண்டிருந்தன.

கண்ணா அண்ணாவிடம் எனக்குப் புதிய தொலைப்பேசி எண்கள் எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சரியென்றார். வீட்டை அடைந்தவுடன் சித்தியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பாக்கியா அக்காவும் கவிதாவும் இல்லாததால் சற்று வெறுமையாகத் தோன்றியது. சித்தியிடமும் அம்மாவிடமும் அவர்கள் இருவரும் எப்போது வருவார்கள் என நொடிக்கொரு தரம் கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்த கவிதாவையும் தாவி அணைத்துக் கொண்டேன். அவள் முகத்தில் திருமண கலை குடிக்கொண்டிருந்தது. “அவர் வந்திருக்கிறார். வெளியே நிற்கிறார். உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். வந்துப் பாருங்கள் அக்கா,” என வெட்கத்தோடு கூறினாள்.

நானும் வெளியே சென்று மாப்பிள்ளையைப் பார்த்து சில நிமிடங்கள் கதைத்துவிட்டு உள்ளே வந்து விட்டேன். அதிகம் கதைக்கவில்லை. என்ன பேசுவதென்று எனக்கே தெரியவில்லை. பயணத்தைப் பற்றியும் திருமண ஏற்பாடுகள் குறித்து மட்டும் மேலோட்டமாக கேட்டு வைத்தேன். மாப்பிள்ளையின் சொந்தக்காரர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரவேண்டும் என்று மாப்பிள்ளையுடன் கவிதாவும் சென்றுவிட்டாள். பாக்கியா அக்காவின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது. இருப்பினும், கடைகளில் அலைந்துத் திரிந்ததால் சற்று களைத்திருந்தாள். சற்று பெரிதாகத் தெரிந்த அவரது வயிற்றை கை வைத்து மென்மையாகத் தடவிப் பார்த்தேன். அவர் என் கையினை பிடித்து வயிற்றில் அழுத்தி வைத்தார். எமக்கு உடல் சிலிர்த்தது. அக்காவின் மேல் எமக்கிருந்த பாசம் மேலும் அதிகரித்தது. இந்தச் சின்ன உடல் இன்னொரு உயிரை எப்படிச் சுமக்கப்போகிறது என்ற கவலையும் உடன் வந்துச் சேர்ந்தது.

நான் பிறக்கப் போகும் குழந்தைக்காக வாங்கி வந்திருந்த மெத்தையை எடுத்து அக்காவிடம் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியில் திளைத்துப் போனார். “நான் அத்தானிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். என்ட பிள்ளைக்கு பவா என்ன வாங்கி வரா’னு பார்க்கணும்’னு. நாங்க கேட்காமலேயே வாங்கி வந்துட்டா,” என்று பூரித்தார். அந்த சமயத்தில் திறந்திருந்த எனது பையிலிருந்து எட்டிப்பார்த்த ‘சிவாஸ்’-சை அம்மா பார்த்துவிட்டார். “இது யாருக்கு?” என அவர் கேட்க, நான் பட்டென்று, “கண்ணன் அண்ணாவுக்கு,” என்று உடைத்துவிட்டேன். அம்மாவின் முகம் நொடிப் பொழுதில் மாறிப்போனது. ஆஹா, தப்பு பண்ணிவிட்டோமே என நினைக்கத் தோன்றியது. உடனே பாக்கியா அக்கா, “அத்தானுடை நண்பர்களுக்காக இருக்கலாம். பாலா அண்ணா கேட்டுக்கொண்டே இருந்தார்,” எனக் கூற, “அப்படியும் இருக்கலாம்,” என நானும் சமாளித்தேன்.

நேரமாகிக் கொண்டிருந்தால் நீராட எழுந்துச் சென்றேன். நான் குளித்துவிட்டு வரும் போது மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். களைப்பாக இருந்ததால் அப்படியே மெத்தையில் படுத்துவிட்டேன். அறைக்குள் பாக்கியா அக்கா வந்து வரவேற்பறைக்கு என்னை இழுத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அங்கேயிருந்த படிக்கட்டில் அமர்ந்துக்கொண்டேன். அனைவரும் சாப்பிட ஆரம்பித்த வேளையில் சித்தி எனக்கும் உணவுத்தட்டைக் கொண்டு வந்தார். அதனைப் பார்த்த கண்ணன் அண்ணா, “புலிக்குட்டிக்குத் தீட்டி (ஊட்டி) விடுங்கோ சித்தி,” என அனைவர் முன்னிலையும் கூற எனக்கு வெட்கமாகிப் போனது.

நான் வேண்டாம் என்று மறுத்தும் அண்ணா மற்றும் சித்தியின் வற்புறுத்துதலால் இறுதியில் இணங்க வேண்டியதாயிற்று. உண்மையில் சொல்லப் போனால், அவர்கள் எனக்குத் தீட்டி விடுவதை நான் பெரிதும் விரும்பினேன். ஏதோ சொல்ல முடியாத பாசப்பிணைப்பில் கட்டுண்டுக் கிடந்தேன். அந்த வேலை பாக்கியா அக்கா ஒரு குவளை முழுக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கண்ணன் அண்ணா அடிக்கடி நான் சாப்பிடுகிறேனா என்று பார்த்து, “நல்லா தீட்டுங்கோ,” என சித்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பாச மழையில் நான் நனைந்துக் கொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ வந்த எம்மீதே இவ்வளவு பாசம் வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள் என மனம் நெகிழ்ந்துப் போனேன். பின்னர் கவிதாவிற்கும், சித்தியின் பிள்ளைகளுக்கும் நான் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களையும், இனிப்பு வகைகளையும் வழங்கினேன். நான் வீட்டுப் பெண்களுடன் கதைத்திருந்த வேளையில் கண்ணன் அண்ணா வெளியே சென்று கைப்பேசி எண்கள் வாங்கிக் கொண்டு வந்தார். மலேசிய நேரம் பின்னிரவு 2.30 மணியாகிவிட்டது. தொலைப்பேசி எண்கள் கிடைத்ததும் தோழர் அருண்ஷோரிக்குக் குறுந்தகவல் அனுப்பி எமது வருகையைத் தெரியப்படுத்திவிட்டு அப்படியே உறங்கிவிட்டேன்.

அதிகாலை 6 மணிக்கே அங்கே விடிந்துவிட்டது எமக்கு விழிப்பு வந்துவிட்டது. குளித்து, உடைமாற்றி வீட்டின் வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். இம்முறையில் காலை உணவை சித்தி எமக்கு ஊட்டி விட்டார். அம்மா பாக்கியா அக்காவுக்கு உணவு ஊட்டிவிட்டார். உண்டு முடித்த பிறகு, நானும் பாக்கியா அக்காவும், சித்தியின் குழந்தை திவ்யாவிற்கு காலை உணவை மாறி மாறி ஊட்டிவிட்டோம். அவர்களின் குடும்பச் சூழல் எம்மை மிகவும் கவர்ந்திருந்தது.

அன்று கீரா அண்ணா தமது வீட்டில் மதிய உணவை உட்கொள்ளுமாறு எம்மை அழைத்திருந்தார். எனவே, காலை உணவை முடித்துக்கொண்டு விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்குச் செல்ல தயாரானேன். சென்ற முறை தமிழகம் சென்ற போது அவரது மனைவி குழந்தைகளைச் சந்திக்க இயலவில்லை. எனவே இம்முறை முன்னெச்சரிக்கையாக அவரது குழந்தைகளுக்கு இனிப்புக்களும் அண்ணாவுக்கும் அவரது தோழர்களுக்கும் மேற்சட்டையும் வாங்கிச் சென்றிருந்தேன். கண்ணன் அண்ணா விருகம்பாக்கத்தில் இருந்த இளங்கோ நகர் பேருந்து நிறுத்தம் வரையில் எம்மை மகிழுந்தில் கொண்டுச் சென்றுவிட்டார். அவ்விடம் கீரா அண்ணாவும், அவரது கதாநாயகன் (பச்சை என்கிற காத்து) வாசனும் எமக்காகக் காத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: