வியாழன், 17 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 1)





வெள்ளிக்கிழமையாகிவிட்டது. நாளை மாலை சென்னைப் பயணம். அதிக வேலைப் பளுவின் காரணமாக பயண ஏற்பாடுகள் ஒன்றுமே செய்யவில்லை. இன்றைக்கு இரவு தைப்பிங் மாநகர காவல் துறையினரின் தீபாவளி விருந்தோம்பலுக்கு எமக்குச் சிறப்பு விருந்தினர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கும் சென்றாக வேண்டும். இன்றைக்கு மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு வந்து சேருமாறு தம்பி கேட்டுக்கொண்டிருந்தான். விடுப்பு எடுத்தால் எமது வேலையை யார் செய்வது? சரி, அரைநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என வேலைகளை இயன்றவரையில் செய்தேன்.

பின்னர், பயணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். கடந்த முறை நான் சென்று வந்த பிறகுதான் பாக்கியா அக்கா கருவுற்றிருப்பதாகச் சொல்லியிருந்தார். குழந்தைப் பிறக்கும் போது நான் இருப்பேனோ, இல்லையோ. இப்போதே ஏதாவது வாங்கிச் செல்வது நல்லது எனத் தோன்றியது. குழந்தைகள் தூங்கும் சிறிய மெத்தை ஒன்றும், மற்றவர்களுக்குக் கொடுக்க மிட்டாய்களும் வாங்கிக் கொண்டு வீடுச் சென்றேன். வீட்டை அடைந்ததும் கடுமையான மழை பிடித்துக்கொண்டது. சுறுசுறுப்பாக பயணப் பொருட்களைப் பையில் அடுக்கி வைத்தப் பிறகு எப்படி பினாங்கிலிருந்து தைப்பிங் செல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதற்குள் எனது தம்பி தேவா ஐந்தாறு முறை கைப்பேசிக்கு அழைத்துவிட்டான். மழையின் காரணமாக என்னால் வீட்டை விட்டு வெளியாக முடியவில்லை என விளக்கப்படுத்தினேன். எனது மகிழுந்து இன்னமும் தைப்பிங் நகரிலேயே இருக்கிறது. உடனே அவன் நண்பன் ஒருவனிடம் உதவிக்கோரி தாமதமாவதற்குள் விருந்துக்கு வந்துச் சேருமாறு அறிவுறுத்தினான். தம்பியின் நண்பன் உதவிக்கு வர சற்று தாமதமாகவே விருந்துக்குச் செல்ல நேரிட்டது. வழக்கம் போல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறைவில்லாமல் நடந்தேறின. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. நாளை மதியம் நான் கோலாலம்பூரிலுள்ள விமான நிலையத்தில் இருக்க வேண்டும். தம்பி எனது கோலாம்பூர் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்துவிட்டதாகக் கூறினான்.

வேலை முடிந்து பினாங்கிலிருந்து தைப்பிங்  வந்த களைப்பே தீரவில்லை. அதற்குள் ஆட்டம் பாட்டத்துடன் விருந்து. நாங்கள் வீடு போய்ச் சேர அதிகாலை மணி 3 ஆகிவிட்டது. குளித்து முழுகி, பயணத்திற்குத் தேவையான பொருட்களை ஒழுங்குப்படுத்திவிட்டு நான் படுக்கைக்குச் செல்லும் போது அதிகாலை மணி 4.30 ஆகிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் நித்திரைக் கொண்டிருப்பேன், அதற்குள் எனது அலாரம் அலறியது. அதனை அடைத்துவிட்டு படுத்துக்கொள்ள ஆசைதான். என்ன செய்வது? தாமதமாகிவிட்டால் விமானத்தை தவறவிட்டு விடுவேனே. எம்மை நானே கட்டாயப்படுத்தி அதிகாலை 5.30 மணிக்கே எழும்பி காலைக்கடன்களை முடித்துப் பயணத்திற்குத் தயாரானேன்.

வெளியே இன்னமும் மையிருட்டாக இருந்தது. சாலைகளில் வாகனங்களே இல்லை எனக் கூறலாம். கடுங்குளிர் எழும்புகளில்  குத்த, சால்வையை உடலைச் சுற்றிப் போர்த்திக்கொண்டேன். தேவா என்னுடன் பேருந்து நிலையம் வரையில் வந்தான். சரியாக காலை 6.00 மணிக்கு பேருந்து தைப்பிங்கிலிருந்து ஈப்போ நோக்கிப் பயணமானது. அதிக களைப்பாக இருந்ததால் நான் பேருந்தில் ஏறியவுடன் நித்திரைக் கொண்டேன். பாதி வழியில் தான் விழித்தெழுந்தேன். ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு பேருந்து ஈப்போ நகரை வந்தடைந்தது. அங்கியிருந்து விமான நிலையம் செல்லும் பேருந்து காலை 8.00 மணிக்குத்தான் புறப்படும்.

பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது. எமது 3 பெரிய பயணப் பைகளை நிராதரவாக விட்டுச் சாப்பிட செல்ல மனம் வரவில்லை. விமான நிலையத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாக அமர்ந்திருந்தேன். 8.00 மணிக்குப் புறப்பட்ட பேருந்து காலை 11.30-க்குக் கோலாலம்பூர் ‘எல்.சி.சி.தி’ அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது. விமான நிலையத்தின் உட்புறம் அமைந்திருந்த பயண வழிக்காட்டிப் பலகையில் எமது பயண விபரங்களைச் சரிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பங்களாதேசியைப் போல் தோற்றமளித்த ஒரு ஆடவன் என்னையே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏதேச்சையாக நானும் திரும்பி அவனைப் பார்க்க, அவன் நெருங்கி வந்து உருட்டு விழியால் உற்றுப் பார்த்தான். அவன் செய்கை எனக்கு வினோதமாக இருந்தது.

என்னிடம் ஏதாவது விபரம் கேட்க வந்திருப்பானோ என நான் நினைக்கும் போதே, “நீங்கள் புவனேஸ்வரி துரைசிங்கம் தானே?” என அவன் கேட்க, “இல்லை. நான் பவனேஸ்வரி,” என சற்று நக்கலுடன் பதில் சொன்னேன். அவன் அசடு வழிய, “என்னைத் தெரியுதா?” எனக் கேட்டான். “இல்லை. எனது முகநூல் நண்பரா?” என அப்படித்தான் இருக்க வேண்டும் என அனுமானித்துக் கூறினேன். “சரியாகச் சொன்னீர்கள். நான்தான் இராஜ்குமார். ஒருமுறை சினிமா தொடர்பாகக் கூட உங்களிடம் பேசியிருந்தேன். நீங்கள் தான் விருப்பமில்லை என்று கூறிவிட்டீர்கள்,” என்று ஆங்கிலமும் தமிழும் கலந்துக் கதைத்தான்.

“பரவாயில்லையே. இத்தனைப் பேர் நடுவிலும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டீர்களே,” என்றேன். “நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. என்ன, இந்த முறை முகநூலில் பயணத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் வந்துவிட்டீர்,” எனக் கேட்டான். “சென்று வந்த பிறகு சொல்லலாம் என விட்டுவிட்டேன். நான் சந்திக்கச் செல்பவர்களுக்கு எனது வருகைத் தெரியும்,” என்றேன். “நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள் என நான் தெரிந்துக்கொள்ளலாமா,” அவன்தான் மீண்டும் கேட்டான். “சென்னை,” ஒற்றை வரியில் பதில் அமைந்தது. “நானும் சென்னைக்குத்தான் செல்கிறேன்,” அவன் முகத்தில் குதூகலம் தெரிந்தது. “எந்த விமானம்? எத்தனை மணிக்கு?” இம்முறை நான் கேட்டேன். “ஏர் ஆசியா. மாலை 3.55 மணிக்குப் பயணம்,” என்றான். “ஒரே விமானம்தான். பரவாயில்லை, பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்துவிட்டது,” என்றேன்.

“சரி, நான் சென்று எனது பைகளை விமானத்தில் ஏற்ற கொடுக்க வேண்டும். நீங்களும் வருகிறீர்களா?” நான் தான் அழைத்தேன். “எனக்குக் கொடுக்க வேண்டிய எந்த பையும் இல்லை. ஒரு பைதான். நான் என்னுடனே எடுத்துச் சென்று விடுவேன். இருந்தாலும், நானும் உடன் வருகிறேன்,” என தாரளமாய் உடன் வந்தான். பைகளை ஒப்படைப்பதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தோம். “இப்போதுதான் முதன்  முறையாக நான் இந்த மலிவு விமானம் எடுக்கிறேன். நான் எப்போதுமே, ஏர் இந்தியாவில் தான் செல்வேன். ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளுக்குச் செல்லும் போதும் வெவ்வேறு விமானங்களைத்தான் பயன்படுத்துவேன். இன்றுதான் ஏர் ஆசியாவில் ஏறப் போகிறேன்,” என்றான். அவன் பேச்சில் தற்பெருமை இருப்பதாகப் பட்டது. “அப்படியா,” என்றதுடன் முடித்துக்கொண்டேன்.

அவன் தொடர்ந்தான், “எனக்குக் கப்பலில் (ஷிப்) வேலை. எப்போதாவதுதான் விடுப்பு கிடைக்கும். திரைப்பட வேலைகள் கொஞ்சம் இருக்கிறது. அதற்காகத்தான் விடுப்பு எழுதிப் போட்டுவிட்டு வருகிறேன்.” “ம்ம்ம்” என்றேன். இன்னும் அவனது படம் பற்றி என்னென்னவோ சொன்னான். வேலியிலே போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்ட கதையாகிப் போனது என் கதை. அவன் சொல்லச் சொல்ல, அதற்கு ‘ம்ம்ம்’ கொட்டிக் கொண்டிருந்தான்.

பைகளை ஒப்படைக்க என்னுடைய முறை வந்தது. அனைத்தையும் எடை நிறுத்து அனுப்பிவிட்ட பிறகு, விமான நிலைய பணியாள் எனது கடவுச்சீட்டையும் பயண விபரங்களையும் சரிப்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தலை கவிழ்த்து வேலையில் மூழ்கியிருந்ததால் முகத்தைச் சரியாக பார்க்க முடியவில்லை. ‘சூர்யா’ என பெயர் பட்டையில் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் எனது பாரங்களை எம்மிடம் திரும்பத் தந்த போது, “நன்றி சூர்யா” எனத் தமிழில் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். கூடவே இராஜ்குமாரும் வந்தான்.

“இன்னும் நேரம் இருக்கிறது. நான் சாப்பிடப் போகிறேன்.” என்றேன். “நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். உங்களுக்குத் துணையாக வருகிறேன்,” என்றான். “அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை,” எனச் சொல்லி அவ்விடம் இருந்த ‘மெக் டானல்ஸ்” துரித உணவு விடுதிக்குச் சென்றேன். “நீராவது அருந்துகிறீர்களா?” எனக் கேட்டதற்கு ஒன்றும் வேண்டாம் என மறுத்துவிட்டான். நான் எனக்குத் தேவையான உணவு வகைகளை வாங்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்தேன். அவன் திரும்பவும் என்னென்னவோ பேசினான். நாம் , “ம்ம்ம்’ கொட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சில வேளைகளில் எந்த வொரு பதிலும் தராமல் சாப்பாட்டிலேயே முழு கவனத்தையும் செலுத்தினேன்.




கருத்துகள் இல்லை: