செவ்வாய், 11 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 16)






திருச்சியை அடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது வாணனுக்குக் குறுந்தகவல் அனுப்பினேன். அவனும் அவ்விடம் எமக்காகக் காத்திருப்பதாகக் கூறினான். அழைப்பேசியில் உண்மையாகவே பாட்டரி முடியும் தருவாயில் இருந்தது. சரி, நண்பரின் வீட்டிற்குத் தானே செல்கிறோம், பின்னர் சார்ஜ் செய்து கொள்ளலாம் என இருந்துவிட்டேன். அவ்விடம் இறங்கியவுடன் தொந்தியும் தொப்பையுமாக இருந்த வாணன் எம்மை அடையாளம் கண்டுக் கொண்டான்.

“எப்படிக் கண்டுப் பிடித்தீர்கள்,” எனக் கேட்டேன். “எங்க ஊர் பெண்கள் உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க,” என்றான். நானும் இங்கே உள்ளவர்கள் மாதிரி சுடிதார் தானே போட்டிருக்கிறேன்? ஏதோ ஒன்று என நினைத்தவாறு அவனது காரில் ஏறி அமர்ந்தேன். இங்கிருந்து தஞ்சாவூர் எவ்வளவு தூரம் எனக் கேட்டேன். “இரண்டு மணி நேரம் பிடிக்கும்,” என்றான். எமக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது.

“எனக்குப் பசிக்கிறது. இங்கேயே சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்வோமா?” எனக் கேட்டேன். அவனும் சரியென்று ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட நல்ல பெரிய உணவகம்தான். ஏனோ, அங்கே எங்களைத் தவிர வேறு வாடிக்கையாளர்களே இல்லை. உணவக வேலையாட்கள் வேறு என்னை ஏற இறங்கப் பார்த்தனர். கை கழுவிவிட்டு வாணனின் எதிர்ப்புறம் அமரச் சென்ற போன்று, “இங்க பக்கத்தில் வந்து உட்காருங்க,” என அவன் பக்கத்து இருக்கையைக் காட்டினேன். எனக்குச் சற்றுக் கடுப்பானது.

“நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன்,” என்றேன். அமர்ந்த பின் குரலைத் தாழ்த்தி அவன் சொன்னான், “இங்க உள்ளவனுங்க எல்லாம் உங்களையே பார்க்குறானுங்க. பாருங்க, பின்னாடி ரெண்டு பேரு நாம என்ன பேசுறோம்னு கேட்டுக்கிட்டு இருக்கானுங்க. சுதந்திரமா பேச முடியாது. அதான் பக்கத்துல வந்து உட்காரச் சொன்னே. இங்க நாம பேசினா அவங்களுக்கு அவ்வளவா விளங்காது.”

எனக்கு சுர்ரென்று ஏறியது. “யாருக்கும் கேட்காமல் பேசுவதற்கு நாம என்ன இரகசியமா பேசப் போறோம்?” என சற்று சத்தமாகவே சொல்லிவிட்டு வேண்டிய உணவுகளைக் கேட்டேன். அவன் முகத்தில் அசடு வழிந்தது. ஏனோ, எனக்கு இவனையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நண்பர் எதற்காக இவனை அனுப்பி வைத்தார் என அவர் மீதும் கொஞ்சம் ஆத்திரம் வந்தது. இனி இவனிடம் எப்படிப் பேச வேண்டும், நடந்துக் கொள்ள வேண்டும் என முடிவுச் செய்துக் கொண்டேன். வீடு போய் சேரும் வரை இவனிடம் அளவோடுதான் பேச வேண்டும்.

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்த போது நன்றாக இருட்டிவிட்டது. முக்கியமான விடயம் தொடர்பாக எமது மின்னஞ்சல்களைப் பார்க்க வேண்டும். எங்குச் செல்வது? அவனிடம் சொன்னேன்; அவனது கைப்பேசியில் பார்த்துக்கொள்ளும்படிச் சொன்னான். அவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. “இல்லை, எனக்கு கணினி மையம் வேண்டும்,” என்றேன். ஏனெனக் கேட்டான். “தனிப்பட்ட விடயம், காரணம் சொல்ல முடியாது.  முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள். இல்லையேல் பரவாயில்லை,” என முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லாமல் சொன்னேன். அவனிடம் பேசக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. தேவையற்ற வெட்டிப் பேச்சுகள் அதிகம் பேசினான். நான் எதனையும் காதில் வாங்காது சாலையைப் பார்த்தபடி பயணித்தேன்.

ஒரு கணினி மையத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்தினான். மிகச் சிறிய படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும். உள்ளே, சின்ன, சின்ன மேசைகளின் மேல் சில கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் 2 பேர் மட்டுமே இருந்தனர். நானும் ஒரு கணினியைத் தேர்வு செய்து அதன் முன் அமரும் போது, அந்த நாதாரியும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு என் பக்கத்தில் அமர்ந்தான். இவனை என்னவென்றுச் சொல்வது?
என் முகத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச புன்னகையும் முற்றாகத் தொலைந்துப் போனது.

“நான் தனிப்பட்ட முறையில் கணினி பயன்படுத்த வேண்டும். நீங்கள் வேறு எங்காவது சென்று அமர்கிறீர்களா?” என வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன். “மன்னிச்சிடுங்க,” என்று எழுந்துச் சென்றான். பத்து நிமிடங்களில் எமது வேலையை முடித்துவிட்டு, “கிளம்பலாம்,” என்றேன். “அதற்குள்ளவா?” என்றான். “வேலை முடிந்தது. அவ்வளவுதான்,” என்றேன். “அதற்கு எனது கைப்பேசியைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா,” என்றான். அவனிடம் பேச்சை வளர்க்க விருப்பமில்லாது, கட்டணத்தைச் செலுத்திவிட்டு படிகளில் இறங்கிச் செல்ல ஆரம்பித்தேன். எமக்குப் பின்னால் அவனும் இறங்கினான்.

மகிழுந்தில் ஏறியவுடன், “அதிகம் இருட்டிவிட்டது. நீண்ட தூரம் பயணம் செய்ததால் உங்களுக்குக் களைப்பாக இருக்கும். இங்கேயே ஏதாவது ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிவிடுகிறீர்களா?” எனக் கேட்டான். இவன் எதற்குத் தேவையில்லாமல் கேட்கிறான். நண்பர் வீட்டில் இறக்கிவிட்டுச் செல்ல இவனுக்கு என்ன வந்தது? நிஜமாகவே அவன் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. தனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்ற பந்தா பேச்சு வேறு. என்ன மனிதன் இவன் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றியது. நண்பரின் நண்பன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அந்தக் கருமங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“வேண்டாம், எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. வீட்டிற்கே செல்லுங்கள்,” என்றேன். “தாஞ்சூர் செல்ல நேரமாகும்,” என்றான். இவன் ஏன் ஆங்கிலேயர் பாணியில் தஞ்சாவூரைச் சுருக்கி இப்படிக் கேவலமாக அழைக்கிறான் என எனக்கு வெறுப்பாக இருந்தது. கொடுமையிலும் கொடுமை தனக்கு அவ்விடம் செல்ல சரியாக பாதை தெரியாது என்று வேறு கூறினான். “நன்றாக வந்து மாட்டிக் கொண்டோமே,” என என்னை நானே நொந்துக் கொண்டேன். சரி வந்துவிட்டோம், நடப்பது நடக்கட்டும் என மனதை தைரியப்படுத்திக் கொண்டேன்.

எப்போதும் என்னுடனேயே வைத்திருக்கும் மிளகுத்தூள் மற்றும் ஒரு சிறிய கத்தி பத்திரமாக கைப்பையில் இருந்தது. “உங்கள் நண்பரிடம் கேட்கலாமே?” என்றேன். “அவன் பதில் கொடுக்க மாட்டேங்கறான்,” என்றான். நயவஞ்சகன்! ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்று மட்டும் தெரிந்தது. “பிறகு என்ன செய்வது?” எனக் கேட்டேன். “விடுதியில் தங்கிக் கொள்கிறீர்களா? நாளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்,” என்றான். வேறு வழி இல்லை, சம்மதித்தேன். அந்த எருமை மாடு தஞ்சாவூரில் இருந்த தங்கும் விடுதியின் முன்புதான் மகிழுந்தை நிறுத்தினான். நமட்டுச் சிரிப்பு வேறு. காரில் அந்த நாதாரியுடன் தனிமையில் இருந்த கொடுமையை விட, விடுதியில் சில மக்கள் நடமாட்டத்தைக் கண்டவுடன் மனம் சற்று ஆறுதல் அடைந்தது.

சரி, வருகிறேன் என மகிழுந்தை விட்டு இறங்கவும், “நானும் வருகிறேன்,” என என்னைப் பின்தொடர்ந்தான். வரவேற்பறையில் இருந்த பணியாளர்களிடம் என்னென்ன அறைகள் வாடகைக்கு இருக்கின்றன என விசாரித்துக் கொண்டிருக்கையில் அதிகப் பிரசங்கித்தனமாக, “இரண்டு படுக்கைகள் கொண்ட அறை எவ்வளவு,” என அவன் கேட்க நான் கடுப்பின் உச்சிக்குச் சென்றேன்! “எதற்கு இரண்டு படுக்கை? நான் ஒரு ஆள் தானே? ஒற்றைப் படுக்கை (சிங்கிள் ரூம்) கொண்ட அறைத் தாருங்கள்?” என நான் சற்றுக் கடுமையாகச் சொல்லவும் விடுதி பணியாள் குழப்பத்துடன் என்னை நோக்கினான். வாணனின் முகத்தில் ஈயாடவில்லை. “நான் மலேசியாவிலிருந்து வருகிறேன். இன்று மட்டும்தான் இங்குத் தங்கப் போகிறேன், தனியாக,” என சற்று அழுத்தமாகக் கூறிவிட்டு எனது கடவுச்சீட்டினை நீட்டினேன்.

வாணன் அங்கேயே நின்றிருந்தான். அறைக்கான வாடகைப் பணத்தைச் செலுத்திவிட்டு, “மிக்க நன்றி. நாளை சந்திப்போம்,” என கூறிவிட்டு விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் அறைக்குச் சென்றுவிட்டேன். அப்போதுதான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சி வந்தது.

அறைக்கு வந்த சில நிமிடங்களில் எமது அழைப்பேசி அலறியது. ஏற்கனவே ‘பெட்டரி’ குறைவு. இப்பவோ அப்பவோ செத்துவிடும் தருவாயில் அது இருந்தது. வாணன்தான்! எதற்கு மீண்டும் அழைக்கிறான்? எடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணிக் கொண்டிருந்தேன். அதுவும் ஓயாமல் அலறிக்கொண்டிருந்தது. இறுதியாக எடுத்தேன்.

“அறை பிடித்திருக்கிறதா?” எனக் கேட்டான். அதற்கு பதிலளிக்காமல், “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. குளித்துவிட்டுத் தூங்கப் போகிறேன். தொலைப்பேசி எந்நேரத்திலும் நின்றுவிடும். நாளை சந்திக்கலாம். பாய்,” என்றேன். நள்ளிரவு மணி 12-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. “உங்களுக்கு அறை கிடைத்தவுடன் சென்றுவிட்டீர்கள். என்னைப் பற்றி கவலைப் படவே இல்லை. நான் திரும்ப காரை ஓட்டிக் கொண்டுச் செல்ல வேண்டும். இன்னும் விடுதியின் முன் புறம்தான் இருக்கிறேன். எனக்கும் தூக்கம் வருகிறது,” என்றான்.

சனியன் விட்டுத் தொலையாது போலிருக்கிறதே! எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என, “வீட்டிற்குப் போய் தூங்குங்கள். சரி, நேரமாகிவிட்டது. பாய்,” என படக்கென்று தொடர்பைத் துண்டித்தேன். தொலைப்பேசி மீண்டும் அலறியது. எடுக்கவில்லை. அதன் சத்தம் எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இவன் சரி வரமாட்டான். இவன் சகவாசமே கூடாது என அப்போதே முடிவெடுத்தேன். நாளை அவன் வருவதற்கு முன்னர் நான் சென்றுவிட வேண்டும் என மனதிற்குள் கணக்கிட்டுக் கொண்டேன்.

இவன் கொஞ்சம் பயங்கரமான ஆசாமிதான் போல. வெறுப்பை வெளிப்படையாகக் காண்பித்தும் அடங்கமாட்டேங்கறானே என பலவாறு எண்ணினேன். எனது தொலைப்பேசி கதறிக்கொண்டே செத்தது. அதை எடுத்து ‘சார்ஜ்சரில்’ பொருத்திவிட்டு அறையில் இருந்த அழைப்பேசி மூலம் விடுதியின் வரவேற்பறையைத் தொடர்புக் கொண்டேன். “நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. என்னைத் தேடி யார் வந்தாலும் எனது அனுமதியின்றி அறைக்குள் வர விடாதீர்கள்,” என ஒன்றுக்கு மூன்று முறை அழுத்தமாகச் சொல்லிவிட்டு வைத்தேன்.

பின்னர், அறைக்கதவை நன்றாகப் பூட்டினேன். இருக்கும் அத்தனை தாழ்பாள்களையும் போட்டேன். சிறிய கத்தியை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டேன். அன்றைய தினம் நடந்த சம்பங்களை அசைபோட்டவாறே நீண்ட குளியல் எடுத்துக் கொண்டேன். குளித்த பிறகு செத்துக்கிடந்த தொலைப்பேசிக்கு உயிரூட்டினேன். தவறவிட்ட அழைப்புகள் வரிசைக் கட்டி நின்றன. அனைத்தும் அந்த நாதாரி அழைத்ததுதான். புனிதா அக்காவின் அழைப்பொன்றும் இருந்தது.
தவிர ஒரு குறுந்தகவல்.

“ஹஹஹா, நீ புத்திசாலி (hahaha, you are smart)” என வாணன் அனுப்பியிருந்தான். முதல் முறையாக எனது கைகளில் நடுக்கத்தை உணர்ந்தேன். என்ன ஒரு விஷமத்தனம்! சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். கொஞ்சம் அசந்திருந்தால் எம்மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. எனது நண்பர் மீது கோபம் கோபமாக வந்தது. வாணனின் இலட்சணத்தைப் பற்றி ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, புனிதா அக்காவைத் தொடர்புக் கொண்டேன்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டுக்  கொடுமை தலையை விரித்துப் போட்டுட்டு அம்மணமா ஆடிச்சாம் என்ற கதையானது. நான் எனது அனுபவத்தைச் சொல்ல, பெங்களூரிலிருந்து சென்னைக்குப் போன பயணத்திலும், சென்னையிலும் தான் பட்ட அவலங்களை அவர் சொல்ல, “இனி தமிழ்நாட்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என இருவருமே முடிவு செய்துக் கொண்டோம்.

அக்காவுடன் கதைத்து முடிக்க வாணனை ஏற்பாடு செய்த நண்பர் அந்த நடு இரவிலும் அழைத்தார். நடந்த அத்தனையும் கூறி, இனி உங்கள் சகவாசமே வேண்டாம் என்றேன். “என்னை மன்னித்துவிடு. அவன் ஒரு மாதிரிதான். உன்னிடம் அப்படி நடந்துக்கொள்ள மாட்டான் என நினைத்தேன். அவனிடம் படித்துப் படித்துக் கூறினேன். உன்னிடம் நல்ல முறையில் நடந்துக்கொள்ளும்படி. அவனுக்கு உன்னைப் பற்றித் தெரியவில்லை,” என ஏதேதோ சமாதானம் கூறினார். அதனை ஏற்க என் மனம் தயாராக இல்லை.

“உங்களால் இயலவில்லை என்று சொன்ன போது நான் சென்னைக்கே திரும்பியிருப்பேன் அல்லவா? குடும்பத்தைச் சென்று பார், என் நண்பன் அழைத்துச் செல்வான் என எதற்காக கூறினீர்கள்? ஒரு தோழியின் பாதுகாப்பில் உங்களுக்கு இருக்கும் அக்கறை இவ்வளவுதானா? இனி யாருடையத் துணையும் வேண்டாம். எங்குச் செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என எனக்குத் தெரியும்,” என பொரிந்துத் தள்ளி தொடர்பைத் துண்டித்தேன்.

கருத்துகள் இல்லை: