திங்கள், 10 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 15)




அதிக களைப்பால் எவ்வித கனவுமின்றி நிம்மதியாக உறங்கினேன். அதிகாலை 5.30 மணியளவில் நானாகவே விழித்துக் கொண்டேன். பறவைகளின் சத்தம் சன்னலின் ஊடே தவழ்ந்து வந்து எமது செவிகளில் நுழைத்து இதயத்திற்கு இதமூட்டின. வெளிநாட்டிலிருந்து சில அழைப்புகள் வந்த வண்ணமாகியிருந்ததால் மெல்லிய குரலில் அவர்களுடன் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்.

காலை 7 மணியளவில் எதிர்பாராத (எதிர்ப்பார்த்து ஏமாந்த) அழைப்பு ஒன்று வந்தது. 9 மணி வரையில் அறையிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இவ்வளவு நாட்கள் வராத அழைப்பு என்பதால் வைக்கவும் மனமில்லை. நேரமாகிக்கொண்டே இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு 9.30 மணிக்குத் தொலைப்பேசி தொடர்பைத் துண்டித்தேன். பின்னர் குளித்துத் தயாராகி அறையைவிட்டு வெளியான போது அறிவழகன் அங்கே நொந்து போய் அமர்ந்திருந்தார். “என்னங்க, இவ்வளவு நேரமா பேசுவாங்க,” என்ற அவரது கேள்விக்கு சும்மா சிரித்து மட்டும் வைத்தேன். உண்மையிலே அன்றைய காலைப் பொழுதில் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தேன்.

காலை சிற்றுண்டியின் போது எங்களுக்குத் தோசை வார்த்துவிட்டு கோதை மட்டும் இரண்டு நாட்கள் ஊற வைத்த பாசிப்பயிற்றைப் பேரிச்சம் பழத்தோடு கலந்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “ஏனம்மா இதை உண்கிறாய். தோசை சாப்பிடலாமே?” எனக் கேட்டதற்கு உடலுக்கு மிகவும் நல்லது என பதில் கூறினாள். கோதையின் தந்தை என்னையும் அறிவழகனையும் தமது மகிழுந்தில் சத்யமங்கலம் பேருந்து நிலையம் வரையில் கொண்டு விட்டார். போகும் போது, அந்தப் பெண் கோதையை ஆரத்தழுவி விடைப்பெற்றேன்.

அறிவழகன் திரும்ப பெங்களூர் செல்ல வேண்டும். நானோ தஞ்சாவூர் செல்ல வேண்டும். எனவே, பேருந்து நிலையத்திலேயே இருவரும் விடைப்பெற்றுப் பிரிந்தோம். நான் சரியாக சென்று விடுவேனா என்ற கவலை அறிவழகன் முகத்தில் படர்ந்திருந்தது. “கவலை வேண்டாம். நான் சென்று விடுவேன்,” என்று ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தேன். தஞ்சாவூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என ஏற்கனவே நண்பரிடம் கேட்டு அறிந்து வைத்திருந்ததால் எனக்கு அவ்வளவாகக் குழப்பம் ஏற்படவில்லை. அங்கிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தேன்.

இரண்டு கூடை நிறைய பூக்களுடன் நடுத்தர வயது பெண்ணொருத்தி எனதருகில் வந்தமர்ந்தாள். பேருந்து புறப்பட ஆரம்பித்தது. குளிர்சாதன வசதி இல்லாததாலும், பேருந்தின் உள்ளே நெருக்கம் அதிகமாக இருந்ததாலும் புழுக்கமாக இருந்தது. பேருந்தின் சன்னலை திறக்க முயற்சித்தேன்; முடியவில்லை. அது மிகவும் கடினமாக இருந்தது. அதனை அந்தப் பெண் கவனித்திருக்க வேண்டும். “வேகமாக இழுக்கணும்,” என்றாள். மீண்டும் முயற்சித்தேன், இயலவில்லை. “முடியவில்லை,” என்றேன். அந்தப் பெண் எட்டி ஒரே இழுப்பாக சன்னலை இழுத்தாள், திறந்துக் கொண்டது. நல்ல பலசாலிதான்!

“நன்றி” என்றேன். “அதைக் காதில் வாங்காமல், இது இழுக்கக் கடினமாகத்தான் இருக்கும்,” என்றாள். கையோடு கொண்டு வந்திருந்த நெகிழிப் பையைப் பிரித்து பூக்கள் சிலவற்றை முந்தானையில் கொட்டினாள். கூடையில் ஒரு பக்கத்தில் வைத்திருந்த கயிற்றை எடுத்து பேருந்திலேயே பூக்களைக் கொண்டு சரம் கட்ட ஆரம்பித்தாள்.

அது மல்லிகை அல்ல. ரோஜாவும் அல்ல. அந்தப் பூவை நான் இதற்கு முன் பார்த்தவும் இல்லை. மார்க்க மல்லிகைப் போன்று ஆனால் சற்று கூர்மையாக இருந்தது. லேசாக சிகப்பு நிறம் கலந்திருந்தது. “இது என்னப் பூ?” என அவளிடமே கேட்டுவிட்டேன். எமக்கு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த வயதான கிழவர் ஒருத்தருக்கு எமது கேள்வி விளங்கிவிட்டது. “அது, ……..,” என்று ஏதோ ஒரு பெயர் சொன்னார். (எமக்கு மறந்துவிட்டது, மன்னிக்கவும்.) அவரது அருகில் வயதான பாட்டி ஒருவர் அமர்ந்திருந்தார். அந்தக் கிழவரின் மனைவியாக இருக்க வேண்டும். அவர்கள் இருவரைவும் பார்த்து புன்னைகைத்தேன். அவர்களும் பதிலிக்குப் புன்னகைத்தனர்.

“எங்கம்மா போற?” என்று கிழவர் உரையாடலைத் துவக்கினார். அவருடன் மகிழ்ச்சியாகக் கதைத்துக் கொண்டிருந்தேன். வழியில் ஏதோ ஒரு நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிக் கொண்டனர். மீண்டும் பூக்காரியின் பக்கம் என் கவனம் திரும்பியது. “நீங்கள் எங்கே இறங்குவீர்கள்,” எனக் கேட்டேன். “ஈரோடு,” என்றார். ஆஹா, பேச்சுத் துணைக்கு இன்னொரு ஆள் கிடைத்துவிட்டது என சற்று மனநிம்மதியடைந்தேன். அவளுடன் பேச்சை வளர்த்தேன்.

அவர் சத்யமங்கலத்தைச் சேர்ந்தவர். பூ விற்பனைச் செய்வதற்காக தினமும் காலை ஈரோடு சென்று மாலை வீடு திரும்பிவிடுவதாகச் சொன்னார். பூ விற்பதற்கு இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டுமா என நினைத்தேன். எனது வாய் அதனைக் கேட்டே விட்டது. “என்ன செய்வது? அங்க அவ்வளவா வியாபாரம் இல்லை. ஈரோடு போனால் கொஞ்சம் காசு பார்க்கலாம்,” என்றவாறு கையில் வைத்திருந்த பைலிருந்து கைத்தொலைப்பேசியை எடுத்தார். யாருக்கோ அழைத்து பூவில் காபித்தூளோ என்னவோ கலக்கச் சொன்னாள். தகவல் தொடர்புச் சாதனங்கள் பட்டித் தொட்டிகளிலெல்லாம் படர்ந்திருப்பதை எண்ணி வியந்தேன்.

பேருந்து ஈரோட்டை வந்தடைந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் தாகமாக இருந்தது. ஒரு கடைக்குள் நுழைந்து விலாம்பழம் சாறு வாங்கிக் குடித்துவிட்டு சற்று இளைப்பாறினேன். பின்னர் திருச்சிச் செல்லும் பேருந்தைத் தேடி அலைந்தேன். பேருந்து இன்னும் வரவில்லை. ஒரே இடத்தில் நிற்க மனமின்றி இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருதேன். அங்கு நின்றுக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரிடம் திருச்சி செல்லும் பேருந்து எத்தனை மணிக்கு வரும் எனக் கேட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும் என அவர் சொல்ல அங்கேயே காத்திருந்தேன். 20 நிமிடங்களுக்குப் பிறகே பேருந்து அவ்விடம் வந்தது. முதல் ஆளாக நான்தான் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

தஞ்சாவூரைச் சேர்ந்த எமது நண்பர் கொடுத்த எண்களுக்கு அழைத்து எமது வருகையைத் தெரியப்படுத்தினேன். அவன் பெயர் வாணன் (வழமை போல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). ஏனோ, அவன் என்னிடம் பேசிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. நண்பரின் நண்பர் ஆயிற்றே, தவறாக நினைக்கக் கூடாது என எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன். அப்படியே நண்பருக்கும் நான் சென்றுக் கொண்டிருப்பதாகத் தெரியப்படுத்தினேன். ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் வழியெங்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடந்தது. வயல் வெளிகள், கிராமங்கள், மலைகள், கிணறுகள், குளங்கள் என அனைத்துமே கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

ஒரு குளத்தில் பெண்கள் மார்பு வரையில் பாவாடையைக் கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர். சிலர் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் அவர்களைப் பார்க்கக் கூடுமே என்ற அச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவ்வாறே குளித்துப் பழகிவிட்டது போலும். சில சிறுவர்கள் அம்மணமாகவே குளித்துக் கொண்டிருக்க, நானோ பார்வையைத் திருப்பாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் செய்கை எனக்கு அநாகரிகமாகத் தெரியவில்லை. அதுதான் அவர்களது வாழ்க்கைச் சூழல். எனவே அவர்களது வாழ்வியலை நான் அங்கம் அங்கமாக இரசித்துக் கொண்டிருந்தேன்.

பேருந்துச் சென்றுக் கொண்டிருக்க, சாலையில் ஓரத்தில் கூட்டமாக பன்றிகள் மேய்ந்துக் கொண்டிருந்தன. இதுவரையில் எங்கள் நாட்டு மிருகக்காட்சி சாலைகளில் சிகப்பு சிறத்திலான பன்றிகளையே நான் கண்டுள்ளேன். அப்பொழுதுதான் முதல் முதலாக கறுப்பு நிற பன்றிகள் இருப்பதைக் கண்டேன். அதுவும் கூட்டமாகவும் சுதந்திரமாகவும் சாலை ஓரத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தன. இவைதான் காட்டுப் பன்றிகள் போலும் என நானே அனுமானித்துக் கொண்டேன். அந்தப் பயணம் மிகவும் அழகானதாக அமைந்திருந்தது. பேருந்தை விட்டிறங்கி அப்படியே நடந்துச் செல்லலாமா என்று கூட தோன்றியது. புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால் ஆசைகளுக்கு அணைக்கட்டிவிட்டு, பேருந்தில் பயணித்தபடியே கிராமத்து அழகுகளை எமது கண்களால் பருகிக்கொண்டிருந்தேன்.

அதற்குள் வாணன் எனக்கு ஐந்தாறு முறை அழைத்துவிட்டான். என்னைக் கொண்டு போய் நண்பரின் வீட்டில் விடுவது மட்டுமே அவன் வேலை. அதற்கு ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறான் என்றுதான் தெரியவில்லை என மனதுக்குள் நொந்தவாறு கிளிப்பிள்ளை போல், “வந்துக்கொண்டிருக்கிறேன், வந்துக்கொண்டிருக்கிறேன்,” என அவன் அழைக்கும் போதெல்லாம் ஒரே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏனோ, அவன் தேவையில்லாமல் பேச்சை வளர்ப்பது போல் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், “எனது தொலைப்பேசியில் பாட்டெரி முடிய போகிறது. அடிக்கடி அழைக்க வேண்டாம். இடம் நெருங்கியதும் அல்லது வந்து சேர்ந்ததும் நானே அழைக்கிறேன்,” என்று சொல்லிய போதும் குறுஞ்செய்தி மட்டும் பஞ்சமில்லாமல் வந்துக் கொண்டிருந்தது.

2 கருத்துகள்:

Ramesh சொன்னது…

"பார்க்க மல்லிகைப் போன்று ஆனால் சற்று கூர்மையாக இருந்தது. லேசாக சிகப்பு நிறம் கலந்திருந்தது." நீங்கள் குறிப்பிட்டதை பார்க்கும் போது,அந்தப்பூ "கனகாம்பரம்" என்று நினைக்கிறேன்.சரிதானா?

து. பவனேஸ்வரி சொன்னது…

கனகாம்பரம் எனக்குத் தெரியும் நண்பரே. அது மல்லிகைப் போன்று இருந்தது... நிறம் இயற்கையானது அல்ல...வெள்ளைப் பூவில் சிகப்பு கலந்தது போல் இருந்தது.