புதன், 12 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 17)





சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேனோ எனத் தோன்றியது. நண்பரை நினைக்கவும் பாவமாக இருந்தது. ஆனால், அத்தகைய சூழலில் வேறு எப்படி பேசுவது என எனக்குத் தெரியவில்லை. படுக்கையில் சாய்ந்தேன். நிம்மதியாக உறங்கமுடியவில்லை. இவ்வளவு பெரிய, வசதியான, குளிர்சாதனம் போடப்பட்ட அறையில் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லையே. அதிகாலை மூன்று மணியளவில் நண்பரிடமிருந்து குறுந்தகவல் வந்தது, “கவலை வேண்டாம். இனி அவன் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டான்.” அதற்குப் பதில் கூட எழுதாமல் அழைப்பேசியைத் தூக்கி படுக்கையில் போட்டேன். புரண்டுப் புரண்டுப் படுத்துப் பார்த்தேன். தூக்கம் வருவதாக இல்லை.

மிகவும் சிரமப்பட்டு கண்ணயர்ந்தேன். அதிகாலை 5.30 மணிக்கு அழைப்பேசி சிணுங்கியது. சில வெளிநாட்டு நண்பர்களுடன் கதைத்துவிட்டு, காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியில் கிளம்பத் தயாரானேன். பசிக்கவில்லை. தஞ்சைப் பெரியக் கோவிலைப் பார்த்துவிட்டு, சென்னைக்குத் திரும்ப வேண்டும். விடுதி பணியாட்களிடம் சொல்லி ஒரு ஆட்டோ பிடித்தேன். முதலில் தொடர்வண்டி நிலையம் சென்று சென்னைக்குப் பயணச் சீட்டு வாங்கினேன். பிறகு அதே ஆட்டோவிலேயே தஞ்சாவூர் பெரியக் கோவிலுக்குச் சென்றேன்.

கோவிலின் முன் ஆட்டோ நின்றது. காலைப் பொழுதாக இருந்த பொழுதும் வெயில் சூடேற ஆரம்பித்திருந்தது. கோவில் நுழைவாயில் முன்புறம் இரண்டு வரிசைகளிலும் பிச்சைக்காரர்கள் வரிசைப் பிடித்து அமர்ந்திருந்தனர். எதற்காக பெரும்பாலான கோவில்களுக்கு முன்பு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் எனக்கு விளங்கவேயில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடமாக இருப்பதாலா? அல்லது கோவிலுக்கு வருபவர்கள் மட்டுமே புண்ணியம் கிட்டும் என பிச்சையிடுவதாலா?

தட்டை ஏந்திக் கொண்டு, “அம்மா,” என பரிதாபக் குரல் கொண்டு அவர்கள் பிச்சைக் கேட்கும் போது மனம் இரங்கத்தான் செய்கிறது. கேட்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்க நான் ஒன்றும் பாரி வள்ளல் பரம்பரை அல்லவே? அவர்களின் கெஞ்சும் குரலைப் பொருட்படுத்தாமல் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தேன். கூடை நிறைய பூக்களுடன் பெண்ணொருத்தி அவ்விடம் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாள். தமிழ்நாட்டில் பூக்களுக்கு மட்டும் பஞ்சமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மற்றொரு புறம் சாமிக் கயிறுகளும், தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் தாண்டி வாசலை அடைந்தேன்.

தஞ்சைப் பெரிய கோவில் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. கோவிலுக்கு நுழையுமுன் பாதுகாவலர்கள் இருவர் எனது பைகளைத் திறக்கச் சொல்லி சோதனை செய்தனர். முன் புறம் பெரிய நந்தி சிலை ஒன்று இருந்தது. பழமையான கோவில் தான். அதனையே பார்த்தபடி நின்றிருந்தேன். சிலர் காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு கும்பலாக எங்கோ சென்றார்கள். கண்டிப்பாக காலணிகள் வைக்கும் இடத்திற்குத்தான் செல்வார்கள் என அனுமானித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன். எனது அனுமானம் சரியானது. கூடுதல் பணம் கொடுத்து எனது பைகளையும் அவ்விடம் விட்டுவிட்டு கோவிலைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன்.

தமிழகத்திற்கு வந்து இத்துணை நாட்களில் அன்றுதான் ஒரு வயதான வெள்ளைக்கார தம்பதிகளைக் கண்டேன். அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தனர். “நல்ல பொழுதாக அமையட்டும் (Have a nice day),” என்றேன். “உங்களுக்கும் (u too)” என்றனர். எமக்குக் கோவிலைப் பார்க்க குறைந்த கால அவகாசமே இருந்ததால் அவர்களுக்குக் கையசைத்துவிட்டு நடையைக் கட்டினேன். கோவிலின் சிற்பங்களில் மெய்மறந்துக் கிடந்தேன். எமது இரு கரங்களால் பண்டைய காலத்துத் தூண்களையும் சிற்பங்களையும் கைகளால் தடவிப் பார்த்து பேரானந்தம் அடைந்தேன். சிறு வயதிலிருந்தே பழங்காலத்து பொருட்கள், கட்டிடங்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம்.

கோவிலின் உள்ளே நுழைந்த போது, அந்தக் காலத்து இராஜராஜ சோழன் இங்கே தானே நின்றிருப்பான் என நினைப்பு வர உடலெல்லாம் புல்லரித்தது. உட்புறம் உள்ள கட்டிட கலைகளை இரசித்த பிறகு கோவிலின் வெளிப்புறம் நடக்க ஆரம்பித்தேன். திடீரென பலத்த காற்று வீசிற்று. முன் ஒரு அடி எடுத்து வைக்கவே மிகுந்த சிரமமாய் இருந்தது. ஒருவேளை இதுதான் புயல் காற்றோ என்று கூட ஒரு கணம் அச்சப்பட்டேன். ஒரு கணம் எமது துப்பாட்டா காற்றில் பறக்க, நான் அதைப் பிடிக்க ஓட, ஒருவாறு அது எமது கையில் அகப்பட்டது. மீண்டும் பறக்காத வண்ணம் முடிச்சுப் போட்டு உடலில் குறுக்காக நன்றாகக் கட்டிக்கொண்டேன்.

பின்னர் கோவிலின் ஓரத்தில் ஏராளமான லிங்கங்கள் வரிசையாக இருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு லிங்கமாகப் பார்த்துக் கொண்டு வருகையில் மீண்டும் தொலைப்பேசி சிணுங்கியது. சென்னைக்கு எத்தனை மணிக்கு வந்து சேர்வேன் என அண்ணா கேட்டிருந்தார். அவரிடம் கதைத்துக்கொண்டு வருகையில் எமது பக்கத்தில் இன்னொரு இளைஞன் ஒருவன் தனியாக நடந்து வந்துக் கொண்டிருந்ததை கவனித்தேன். அவன் என்னைப் பார்த்து சிரித்தான். சிரிப்பதில் என்ன வந்தது என நானும் சிரித்து வைத்தேன். சரி இந்தப் பையனிடம் புகைப்படம் எடுக்கச் சொல்லலாம் என நினைத்துப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

“தனியாகதான் வந்தீர்களா?” என உரையாடலைத் துவங்கினேன். “ஆமாம் அக்கா,” என்றான். எமது தோற்றத்திலிருந்து எமது வயதை அவன் கணித்திருக்க வேண்டும். சின்னப் பையன் தான். அவன் அக்கா என்று அழைத்ததில் எனக்கு வியப்பேதும் இல்லை. “எந்த ஊர்?” என நான்தான் திரும்பவும் கேட்டேன். “இந்த ஊர்தான். தஞ்சாவூர். அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வந்து செல்வேன்,” என்றான். “சரித்திரப் புகழ் பெற்ற இடம். இங்கு எப்போதும் இப்படித்தான் பலத்த காற்று வீசுமா? பொல்லாத காற்றாக இருக்கிறதே?” என வினவினேன்.

“இல்லை அக்கா. இது பருவக் காற்று. கடந்த சில தினங்களாக இப்படித்தான் இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் இப்படித்தான் வீசும். சில பருவங்களில் காற்றே வீசாது. உங்களைப் பார்க்க வெளிநாட்டுக்காரர் மாதிரி இருக்கிறீர். நன்றாகத் தமிழ் பேசுகின்றீர். எங்கிருந்து வருகிறீர்?” என வினவினான். அவனது கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு எமது கைத்தொலைப்பேசியில் ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அவனும் படம் பிடித்து உதவினான். சிறிய உரையாடலுக்குப் பிறகு அந்தப் பையனிடமிருந்து விடைப்பெற முனைகையில் பட்டப்படிப்பை முடித்த தனது அண்ணனுக்கு மலேசியாவில் வேலைப் பார்த்துத் தர முடியுமா எனக் கேட்டான்.

“எங்கள் இனத்திற்கு எங்கள் நாட்டில் நல்ல வேலை கிடைப்பதே சற்று கடினம்தான். உங்கள் அண்ணனை இங்கேயே நல்ல வேலையைத் தேடச் சொல்லுங்கள். இல்லையேல், ஐரோப்பா கண்டத்தில் தேடலாம். மலேசியாவில் தேசிய மொழியான மலாய் தெரிந்திருக்க வேண்டும். தனியார் துறைகளில் முயற்சிக்கலாம். ஆனால், எங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கே முன்னுரிமைக் கொடுக்கப்படும். உங்களிடம் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. அங்கே வந்து சிரமப்பட வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்,” என சில அறிவுரைகள் வழங்கினேன். அவனும் தனது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுப்பெற்றான்.
பின்னர், பைகளையும், காலணிகளையும் எடுத்துக் கொண்டு மீண்டும் ஆட்டோ பிடித்து தொடர்வண்டி நிலையம் சென்றேன். சென்னைச் செல்லும் தொடர்வண்டி நிற்கும் இடம் எதுவெனத் தெரியவில்லை. அங்கு நின்றுக்கொண்டிருந்த ஒரு ஆளிடம், “சென்னைச் செல்ல எந்த இடத்தில் ஏற வேண்டும்,” என கேட்கும் போதே அவன் பேயைக் கண்டவன் போல விலகிச் சென்றான். அடக்கடவுளே, வழி கேட்டால் கூட சொல்ல மாட்டார்களா? நான் என்ன இவனுடைய சொத்தில் பங்கா கேட்டேன் என மனதிற்குள் முனகியவாறு சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறைய தமிழ்மக்கள் தான்.

பெண்ணொருத்தி தனது தாயுடன் பேசிக்கொண்டுச் சென்றாள். இவளிடம் கேட்கலாம் என்று அவளை நெருக்கினேன். பயணச் சீட்டை அவளிடம் காட்டி, “இந்த வண்டியில் ஏற எப்படிச் செல்ல வேண்டும்?” எனக் கேட்டேன். அவள் அதனை ஏறெடுத்தும் பார்க்காமல், “இப்படியே போம்மா,” என ஒரு திசையை நோக்கிக் கைகாட்டினாள். நான் அடுத்தக் கேள்வி கேட்பதற்குள் சட்டென்று அவ்விடத்தை விட்டு அவர்கள் நகன்றுவிட்டனர். அவள் காட்டிய திசையை நோக்கினேன். நிறைய பேர் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். சரி, நாமும் போய்த்தான் பார்ப்போமே என அவள் கை நீட்டிய திசை நோக்கி நடந்தேன்.

அங்கே பல நடைமேடைகள் (ப்பிளாட்பார்ம்) இருந்தன. எங்கு நான் காத்திருக்க வேண்டும் என குழப்பமாக இருந்தது. ஏற்கனவே இரண்டு பேரிடம் கேட்ட அனுபவம் இன்னும் கசந்துக் கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை: