திங்கள், 26 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 3)


விமான நிலையத்திலிருந்து நானும் புனிதா அக்காவும் வெளியேறினோம். அங்கே எங்களை வரவேற்பதற்காக புனிதா அக்காவின் நண்பர்களான அருண் மற்றும் பிரகாஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) காத்திருந்தனர். விமான நிலையத்தின் வெளிப்புறம் ஏதோ பேருந்து நிலையம் போல இருந்தது. அதிகம் வெயில் இல்லை. நீண்ட தூரம் பயணம் செய்ததால் எனக்கு லேசாக பசித்தது.

சாப்பிட்டுவிட்டு வாடகை அறைக்குச் செல்லலாம் என அக்காவிடம் கூறினேன். சென்னையில் என்ன உணவு ருசியாக இருக்கும் என அக்காவின் நண்பர்களிடம் கேட்டோம். உடனே ‘பிரியாணி’ என்றார்கள். சரி, ஒரு கை பார்த்துவிடுவோம் என்று ஒரு உணவகத்திற்குச் சென்றோம். தட்டு நிறைய வந்த பிரியாணியைக் கண்டு ஒரு கணம் திகைத்தேன். அவ்வளவு அதிகமான எம்மால் சாப்பிட இயலாது; உணவை வீணாக்கவும் எனக்குப் பிடிக்காது. ‘அதிகமாக இருக்கிறது,’ என்றேன். முதலில் சாப்பிடுங்கள் என்றார்கள்.

பிரியாணி பூப்போல மிகவும் மெதுவாகவும் சுவையாகவும் இருந்தது. இந்த மாதிரி பிரியாணியை என் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை. கொஞ்சமும் சிரமப்படாமல் அத்தனையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தேன்.

இந்தியாவில் சில நண்பர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு ‘சிம் கார்ட்டு’ தேவைப்பட்டது. எமது தேவையை ஏற்கனவே அக்காவிடம் தெரிவித்திருந்தபடியால், அருண் எங்களுக்காக சிம் கார்ட்டு கொண்டு வந்திருந்தார். உடனே நண்பர்களைத் தொடர்பு கொண்டு எனது வரவினைத் தெரியப்படுத்தினேன். தங்கும் விடுதியின் அறைக்குச் செல்லும் முன் சாலை ஓரத்தில் பானிப்பூரி வாங்கிச் சாப்பிட்டேன். கைத் துடைக்க ‘திசு’ கேட்டதற்கு எனது கையில் காகிதத்தைத் திணித்தனர். ‘இதில் துடைத்துக் கொள்ளுங்கள்’, என உடனிருந்த பிரகாஷ் சொன்னார். கையைக் காகிதத்தில் துடைத்து கையோடு கொண்டு வந்திருந்த கிருமிநாசினி திரவத்தைக் கைகளில் தடவிக்கொண்டேன். அந்தப் பாட்டிலை பிரகாஷிடம் நீட்டினேன். எங்களுக்கு இது பழகிவிட்டது, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்; அதிகம் தேவைப்படும் என்றார்.

பின்னர் தொலைப்பேசிக்கு பணம் போடுவதற்கு கடைத் தேடித் திரிந்தோம். சாலையில் போவோரும் வருவோரும் எம்மை ‘ஒரு மாதிரியாக’ நோக்கினர். நான் கண்டும் காணாமல் விட்டு விட்டேன். என்னுடன் வந்துக்கொண்டிருந்த பிரகாஷ் இதனைக் கவனித்துவிட்டார் போலும். நான் அறைக்குச் செல்லும் முன்பாக, ‘பவனேஸ், இந்த ஊரில் இந்த மாதிரி உடுத்தாதீங்க. எல்லாரும் ஒரு மாதிரியாக பாக்குறாங்க. எனக்குக் கோபம் கோபமா வருது. தேவை இல்லாமல் பிரச்சனைகள் வரும். புரிந்துக்கொள்ளுங்கள்’ என்றார்.

‘அடடா, ஆரம்பித்துவிட்டார்களே,’ என எண்ணியவாறு அறைக்குச் சென்றேன். அதிகக் களைப்பாக இருந்தது. அன்றைய தினம் இரவு தமிழ் ஆர்வலர்களால் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் தமிழ்நாடு வருவதனை அவர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்திருந்தபடியால் எமது வருகைக்காகக் காத்திருந்தனர். சரி, குளித்துவிட்டுச் செல்லலாம் என குளியலறைக்குள் நுழைந்துக் குழாயைத் திறந்தேன். சாத்துக்குடி நிறத்தில் குழாயிலிருந்து நீர் வந்தது. புனிதா அக்காவிடம் தெரிவித்தேன். ‘இங்கு இப்படித்தான் இருக்கும்,’ என்றார்.

எமக்கு மிகவும் மென்மையான சருமம். சரும நோய்கள் விரைவில் பரவிவிடும். என்ன செய்வது? வந்தாகிற்று, சமாளித்துதான் ஆக வேண்டும் என குளித்துவிட்டு சந்திப்பிற்குச் சென்றேன். பகலியேயே ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். எதற்கு வம்பு என்று இரவு நேரத்திலும் அதிகம் கசங்காத சுடிதார் ஒன்று அணிந்துச் சென்றேன். வழக்கம் போல சந்திப்பிற்கு வந்த அனைவரும் ஆண்கள். இந்தப் பெண்கள் எல்லாம் எங்கே மறைந்துவிட்டார்கள் என்றுதான் தெரியவில்லை. சந்திப்பு முடிந்து இந்திய நேரம் அதிகாலை 12.30 மணிக்கு அறைக்கு வந்தேன். மிகவும் களைப்பாக இருந்ததால், வந்தவுடன் உறங்கிவிட்டேன்.

அதிகாலையிலேயே எழும்பி குளித்து உடைமாற்றினோம். காலையிலேயே விடுதியின் பணியாள் ஒருவர் தேநீர் வேண்டுமா எனக் கேட்டார். சரி, கொண்டு வாருங்கள் என்றோம். மிகவும் சிறிய குவளையில் தேநீர் வந்தது. அதனுள்ளும் பாதி தேநீர் தான் இருந்தது, எங்கள் ஊரில் பெரிய குவளையில் தேநீர் குடித்த பழக்கப்பட்ட எங்களுக்கு அது உண்மையிலேயே போதவில்லை. வெளியே செல்லும் வழியில் சிற்றுண்டி சாப்பிடலாம் என விட்டுவிட்டோம்.

எமது திட்டத்தின்படி இன்று யாருடைய வழிக்காட்டலும் இல்லாமல் சென்னையைச் சுற்ற வேண்டும். முக்கியமாக அரசு பேருந்தில் ஏற வேண்டும். புனிதா அக்காவிடம் நான் தனியே செல்வதாகக் கூறினேன். தனக்கும் இன்று பாரிசுக்குச் செல்லும் திட்டம் இருப்பதாகவும் தானும் என்னுடன் வருவதாகக் கூறினார். ‘பாரிஸ்’ என்று சொல்லப்படுவது கடைத்தெருக்கள் சூழ்ந்த ஒரு இடத்தைக் குறிப்பதாகும். நான் கூட முதலில் பிரான்சுக்குத்தான் செல்கிறோமோ என்று அதிர்ந்தேன். சரி செல்வோம் என்று வெளியே கிளம்பினோம். இன்றும் ஊர் சுற்றுவதற்கு வசதியாக இருக்கட்டுமே என்று முட்டி வரையில் நீளமுள்ள, கைகளில்லாத சட்டை ஒன்று அணிந்திருந்தேன்.

நாங்கள் சாலையில் நடக்க ஆரம்பித்த உடனே மக்கள் கண்கள் எங்கள் மேல் மொய்ப்பதை உணர்ந்துக்கொண்டோம். எங்கள் நாட்டில் நான் சேலை அணிந்துச் சென்றால் இப்படித்தான் பார்ப்பார்கள். எனவே, மக்களின் விசித்திர பார்வை எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. வளசரவாக்கத்தில் இருந்த ‘முருகன் இட்லி கடை’ கண்களில் தென்பட்டது. அங்கே சென்று இட்லி சாப்பிட்டோம். இட்லிக்கு மீன் கறி இருக்கிறதா என்று கேட்டதற்கு உணவக ஊழியர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். ‘இங்கு அசைவம் கிடையாது’ என்றார்.

யப்பாஇப்பவே கண்ணக் கட்டுதே, எம்மால் அசைவம் இல்லாமல் உண்ண முடியாது. இது என்னுடன் வந்த அக்காவுக்கும் தெரியும். காலை உணவு தானே சமாளித்துக்கொள்ளலாம் என ஒருவாறு சாப்பிட்டு முடித்தேன். அந்த ஊழியரிடமே பாரிசுக்கு எந்த எண் கொண்ட பேருந்து எடுப்பது, எவ்வளவு செலவாகும் என கேட்டு அறிந்துக் கொண்டேன். காலையிலேயே வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது.

கருத்துகள் இல்லை: