செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 4)



பேருந்தில் அதிகம் கூட்டம் இல்லை. ஏறியவுடன் இடம் கிடைத்தது. ஏதோ பழங்காலத்து வண்டியில் பயணம் செய்வது போல் ஒரு அனுபவம். கண்டெக்டரிடம் பாரிஸ் வந்தவுடன் எங்களுக்கு அறியப்படுத்துமாறு தெரிவித்தோம். அவரும் சரியென்றார். பேருந்துச் செல்லும் வழியெங்கும் சென்னையில் அழகை இரசித்தவாறுச் சென்றேன். வழி நெடுகிலும் ஏதாவது கட்சியின் பெயரையோ, கட்சித் தலைவர் பெயரையோ சுவற்றில் எழுதி வைத்திருந்தனர்.

பேருந்தில் கல்லூரி மாணவ மாணவியர் சிலர் ஏறினர். சில மாணவிகளில் கண்கள் நொடிக்கொரு தரம் எம்மை நோக்குவதை உணர்ந்தேன். அணிந்திருந்தக் கருப்புக் கண்ணாடியைக் கலட்டிவிட்டு அவர்களை நோக்கி புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தினர். ‘படிக்கிறீர்களா?’ என பேச்சுக் கொடுத்தேன். ‘உங்களுக்குத் தமிழ் தெரியுமா?’ என ஆச்சர்யத்துடன் கேட்டனர். புன்னகையுடன் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினேன். புனிதா அக்கா யாருடனே கைப்பேசியில் கதைத்துக்கொண்டிருந்தார். மாணவிகள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மகிழ்வுடன் கையசைத்துச் சென்றனர். அவர்கள் கதைத்துவிட்ட பிறகு என்னுள் இனம் புரியாத ஒரு உற்சாகம்.

இழுத்துப் பின்னிய கூந்தல், அதில் மல்லிகைச் சரம், கையில் வளையல், காலில் கொலுசு என தமிழ்நாட்டு மக்களை இரசித்துக் கொண்டிருந்தேன். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. பாரிசில் இருந்த பேருந்து நிலையத்தில் புனிதா அக்காவின் நண்பருக்காகக் காத்துக்கொண்டிருந்தோம்.

அங்கே திராட்சைப் பழங்கள் போன்று நாவற்பழங்கள் கூடை கூடையாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. பார்க்கவே நா ஊறியது. சிறுவயதில் பாட்டி வீட்டின் அருகில் இருந்த நாவல் மரத்தில் பழுக்காத நாவல் பழங்களை எக்கி எக்கி பறித்து உண்டது நினைவுக்கு வந்தது. பத்து ரூபாய்க்கு கொஞ்சம் நாவல் பழங்கள் வாங்கி உண்ண ஆரம்பித்தேன். திடீரென்று குழந்தைகள் கூட்டமொன்று என்னைச் சூழ ஆரம்பித்தது.

அவர்கள் பேசிய மொழி எனக்கு விளங்கவில்லை. மிகவும் கறுப்பாக இருந்தார்கள். ஆடைகள் கிழிந்தும் சிலர் ஆடை அணியாமலும் இருந்தனர். பலநாள் குளிகாததைப் போன்று அழுக்காகத் தோன்றினர். அதில் ஒரு சிறுவன் கையில் குரங்குக் குட்டி ஒன்று வைத்திருந்தான். எங்கேயிருந்து வந்தார்கள் இவர்கள்? இவர்களைப் பெற்றவர்கள் எங்கே? யோசித்துப் பார்ப்பதற்குள் அவர்கள் என்னிடம் என்னவோ கேட்டுச் சைகை செய்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாவல் பழம் கேட்கிறார்களோ என நினைத்து கையில் வைத்திருந்த நாவல் பழங்களைக் கொடுத்தேன். ஒரு சிறுமி அதனைப் படக்கென்று வாங்கிக்கொண்டாள்.

பழங்களைக் கொடுத்த பிறகும் அவர்கள் என்னை விட்டு விலகுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் எதையோ சொல்லி சைகை செய்தனர். இன்னும் அதிகமான சிறுவர் சிறுமியர் கூட்டம் என்னைச் சூழ ஆரம்பித்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவாறு அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்பதனைப் புரிந்துக்கொண்டேன். ‘என்னிடம் ஒன்றுமில்லை, செல்லுங்கள். சாப்பாடு வேண்டுமானால் வாங்கித் தருகிறேன். பணமில்லை’ என்றேன்.

நான் சொல்வதை அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. ஒரு சிறுமி எனது கைகளைப் பிடித்து இழுக்கத் துவங்கினாள். இன்னொரு சிறுவன் எனது சட்டையைப் பிடித்து இழுத்தான். சிறுவர்கள் என்னை நெருக்கத் துவங்கினர். நானும் சற்று எரிச்சலடைந்து, ‘தள்ளிப் போங்கள்!’ கோபமாகக் கூறினேன். அங்கு நடந்துக் கொண்டிருந்தத கூத்தைக் கண்ட சிலர் ஓடிவந்து அந்தச் சிறுவர்களை படு மோசமாக மிரட்டி விரட்டினர். எனக்குக் கொஞ்சம் பாவமாக இருந்தது. இருந்தாலும் அந்த சிறுவர்கள் நடந்துக் கொண்ட விதம் சரியில்லைதானே?

“இதுகள் இப்படித்தான். வெளியூர்க்காரர்கள் வந்துவிட்டால் இப்படித்தான் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். நீ ஒன்னும் கொடுக்காதேம்மா,” என பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்துக்கொண்டிருந்த மாது அறிவுரைக் கூறினார்.

அவ்வேளையில் புனிதா அக்காவின் நண்பர் ஒருவர் அவ்விடம் வர, நாங்கள் மூன்று பேரும் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே கடைத்தெருவுக்குச் சென்றோம். சுடிதார் துணிகள் வாங்கி அங்கேயே தைக்கக் கொடுத்தேன். இனி தமிழ்நாட்டுப் பெண்கள் மாதிரிதான் உடுத்த வேண்டும் என மனதில் முடிவுப் பண்ணிக் கொண்டேன். கடைத்தெருக்களில் வெயில் என்று கூட பாராமல் அலைந்துத் திரிந்துக்கொண்டிருந்தோம்.

அவ்விடம் சாலை ஓரமாக இளைஞர் கும்பல் ஒன்று சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது. படம் பிடிக்கலாம் என்று முயற்சித்த வேளையில் சிறுவன் ஒருவன் எங்களை கவனித்து விட்டான். ‘அக்கா, போட்டொ எல்லாம் எடுக்காதீங்க. நாங்களே பொழுது போகாமல் விளையாடுறோம். நீங்க பாட்டுக்கு போட்டோ எடுத்து பேப்பெர், டி.வி’னு போட்டுறாதீங்க,’ என கெஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டான்.

அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். நாங்கள் பயண அனுபவமாக வைத்துக் கொள்வோம் என்று தெளிவுப் படுத்திய பின்னரே புகைப்படம் எடுக்க எங்களை அனுமதித்தனர். அடுத்தது, அரசாங்க மதுபானக் கடை! ‘டாஸ்மார்க்’! ‘குடி’மக்களின் நலன் காக்கும் அருமையான அரசு! வாழ்க தமிழ்மக்கள் என நினைத்தவாறு ‘தலப்பாக்கட்டி’ உணவகத்தில் நுழைந்தோம்.

அக்காவின் நண்பர் என்னிடம், “முதல்ல இங்க உள்ள பிள்ளைகள் மாதிரி சுடிதார் ஒன்னு வாங்கிப் போடுங்க. ரோட்டுல போறவ வர்றவன் எல்லாம் உங்களைத்தான் பார்க்குறானுங்க,”என்றார். நான் வாய்விட்டுச் சத்தமாக சிரித்துவிட்டேன். “ஏன் சிரிக்குறீங்க,” எனக் கேட்டார். “ஒன்றுமில்லை,” என்று சாப்பிட ஆரம்பித்தேன். சேலை, சுடிதார் அணிந்தால் மட்டும் பார்க்க மாட்டார்களா என்ன?

சாப்பிட்டு முடிந்து கை கழுவச் சென்றேன். சவர்க்காரம் இல்லை. சவர்க்கார பாட்டிலை எத்தனையோ முறை அமுக்கிவிட்டேன். ஒன்றும் வருவதாக இல்லை. வெள்ளை வேட்டிச் சட்டை அணிந்த ஒருவர் என்னருகில் உள்ள இன்னொரு குழாயில் கை கழுவிக் கொண்டிருந்தார். ‘சவர்க்காரம் இல்லையம்மா,’ என்று கனிவோடு கூறினார். மிகவும் சாந்தமான முகம். நல்ல அரசியல்வாதி மாதிரி தோற்றமளித்தார். நன்றி சொன்னேன். சிரித்துவிட்டுச் சென்றார்.

“அண்ணா,” என அழைத்தேன். திரும்பி, ‘என்னம்மா?’ எனக் கேட்டார். “குழாயை அடைக்காமல் போகிறீர்,” என்றேன். அசடு வழிய குழாயை அடைத்துவிட்டுச் சென்றார். நான் சிரித்துக்கொண்டே இருக்கையில் வந்தமர்ந்தேன். சிறிது நேரத்தில் அந்த மனிதர் கடையைவிட்டு வெளியே செல்ல ஆயத்தமானார். சற்றும் யோசிக்காமல், “அண்ணா கொஞ்சம் இங்க வாங்களேன்,” என அழைத்தேன். புனிதா அக்காவும் அவர் நண்பரும் எனது இந்தச் செய்கையால் திகைத்தனர்.

அந்த மனிதர் வந்தார். “நீங்கள் எந்த அரசியல் கட்சியிலாவது இருக்கிறீர்களா?” எனப் பட்டென்று கேட்டேன். “அ.தி.மு.க-வில் இருக்கிறேன். கன்னியாகுமரி எம்.ஜி.ஆர் மன்றத் தலைவராகவும் உள்ளேன்,” என்றார். நீங்கள் ஏன் செருப்பு அணியவில்லை என்றேன். அப்பொழுதுதான் அனைவரும் அவரது காலை கவனித்தனர். “தங்கும் விடுதியிலேயே விட்டுவிட்டேனம்மா. அருகில்தான் இருக்கிறது, அப்படியே நடந்து வந்துவிட்டேன்,” என்றார்.

என்னமோ தெரியவில்லை, அவரிடம் இன்னும் கதைக்க வேண்டும் போல் இருந்தது. என்னென்னமோ கேட்டேன். அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். அவருடைய பெயர் அட்டையை எம்மிடம் கொடுத்தார். கன்னியாகுமரி வந்தால் அவசியம் வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் எமது பெயர் அட்டையும் தொடர்பு எண்களையும் கொடுத்தேன். எமக்கு இந்த விசித்திர பழக்கம் உண்டு. யாரிடமும் அதிகம் கதைக்க மாட்டேன். சிலரிடம் பார்த்தவுடேனே வெகுநாள் பழகியதைப் போல பேச ஆரம்பித்துவிடுவேன். அவர்கள் மேல் இனம் புரியாத அன்பு ஏற்படும். இந்த அண்ணாவிடமும் எனக்கு அப்படியொரு அன்பு ஏற்பட்டது. செல்லும் போது, “போய்ட்டு வாரேன் தங்கச்சி,” என அவர் கூறியது எமது நெஞ்சத்தை நெகிழச் செய்தது.

கருத்துகள் இல்லை: