புதன், 21 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (8)


இருவரும் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தயாரானார்கள். அனைவரது மனதிலும் ஒரு வித படபடப்பு. ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வி அங்கே குழுமியிருந்த அனைவரது உள்ளத்திலும் எழுந்தது. அனைவரது கண்களும் போட்டியில் பங்கேற்கப் போகும் அந்த இருவரையுமே மொய்த்துக் கொண்டிருந்தன.

கவிதா மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டாள். அவளிடம் படபடப்புக்குப் பதிலாக கோபமே மிஞ்சி நிற்பதை அவளது தோழிகள் கண்டார்கள். அவளுடன் போட்டியிட வந்தவனோ மிகவும் அலட்சியமாக நடந்து வந்தான். 500 மீட்டர் சுற்றளவைக் கொண்ட அந்த ஓட்டப்பந்தயத் திடலை அவர்கள் 3 முறை சுற்றிவர வேண்டும். போட்டி ஆரம்பமானது…

3, 2, 1, ரன்…

சொல்லியதுதான் தாமதம்…கவிதாவுடன் போட்டியிட வந்தவன் காற்றைப் போல் பறந்தான். அவன் முக்கால்வாசி திடலைக் கடக்கும்போது கவிதா பாதித் திடலை மட்டுமே கடந்திருந்தாள். இருப்பினும் அவளது தோழிகள் மனம் தளராது அவளுக்கு உற்சாகக் குரல் கொடுத்து வந்தனர். முதற்சுற்றை வேகமாக ஓடி முடித்தவனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. அவனது கால்கள் மெல்ல மெல்ல சக்தியை இழக்கத் தொடங்கின. அவனது வேகம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. கவிதாவோ ஆரம்பித்த வேகத்திலேயே இன்னனும் ஓடிக்கொண்டிருந்தாள். அவளது வேகம் குறையவும் இல்லை கூடவும் இல்லை.

இரண்டாவது சுற்றின் இறுதிக்கட்டம். ஓடியவன் திரும்பிப் பார்த்தான். கவிதா அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

“மச்சான், ஓடுடா! அது கிட்ட வந்துக்கிட்டு இருக்கு. விடாதே. ஓடு… உன்னால முடியும்… ஓடு!”

“டேய் விட்டுடாத’டா. ஓடு! கமான். இன்னும் ஒரு ரவுண்டு’தான். நீதான்’டா மொதல்’ல இருக்க. அப்படியே மெயிண்டன் பண்ணு. வா, வா, வா…”

“ரமேஷ், சீக்கிரம் வா’டா!”

ஓ, கவிதாவுடன் ஓடுபவன் பெயர் ரமேஷ் போலும். ரமேஷால் வேகத்தை அதிகப்படுத்த முடியவில்லை. பாவம்! 100, 200 மீட்டர் ஓடுபவனை 1500 மீட்டர் ஓடச் சொன்னால் அவன் எப்படி ஓடுவான்? பெண்தானே வென்றுவிடலாம் என்று அலட்சியமாய் ஒப்புக்கொண்டான். இப்போது மானமே போய்விடும் போலல்லவா இருக்கிறது? நண்பர்களின் உற்சாகக் குரல் கலவரக் குரலாக மாறியது.

இறுதிச் சுற்று வந்துவிட்டது. பாதித்திடலைக் கடக்கும் போது கவிதா ரமேஷை முந்திக்கொண்டு ஓடிவந்தாள். ஆண்களின் முகத்தில் ஈயாடவில்லை. அனைவரும் கவிதாவையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். கவிதா தன்னைக் கடந்துச் செல்லும் போதே ரமேஷ் மிச்சமிருந்த நம்பிக்கையையும் இழந்துவிட்டான். இருந்தாலும் களத்தில் இறங்கிவிட்டோமே என்று தனது சக்தி அனைத்தையும் திரட்டி ஓடினான்.

போட்டி முடிந்தது! கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள். ரமேஷ் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே திடலை விட்டு வெளியேறினான். பெண்களின் ஆரவாரம் திடலைச் சூழ்ந்துக் கொண்டது. ஆண்கள் கூட்டம் சத்தமே இல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்துக் கொண்டிருந்தது.

“ஹலோ, வெயிட்!” என்றவாறு அவர்களை நோக்கிச் சென்றாள் கவிதா.

கூட்டம் திகைத்து நின்றது. சிலர் வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டனர். இன்னும் சிலர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர். ரமேஷ் முகம் நிலத்தை நோக்கியிருந்தது. போட்டிக்கு முன்பு சமாதானம் பேச முயன்றவன் மட்டும் கவிதா வருவதையே பார்த்துக் கொண்டிருந்தான். கவிதா அவர்களை நெருங்கினாள்.

“உங்கப் பேர் என்ன?” என்று தன்னுடன் போட்டியிட்டவனை வினவினாள்.

“ரமேஷ்…” ஒற்றை வரியில் பதில் தந்தான் அவன்.

“நீங்க சோர்ட் டிஷ்தன்ஸ் (short distance) ஓடுவீங்க தானே? ஓடும்போதே தெரிஞ்சது. என்னைக்கும் யாரையும் குறைவா மதிப்பிடாதீங்க. அவங்கவுங்களுக்கு ஒரு ஒரு திறமை இருக்கும். குறிப்பா, கேர்ஸ் தானே’னு அலட்சியப்படுத்தாதீங்க. நாங்களும் உங்க மாதிரி ஒரு நார்மல் ஹியூமன் பியிங். நெக்ஸ் டைம் இந்த மாதிரி நடந்துக்காதீங்க!” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று திரும்பிச் சென்றுவிட்டாள்.

மூன்று நாட்கள் மாவட்ட அளவிலான போட்டி தொடர்ந்து நடைப்பெற்றது. மூன்று நாட்களும் கவிதாவும் தோழிகளும் போட்டியில் பங்கெடுக்கச் சென்றனர். மூன்று நாட்களும் அதே ஆண் கும்பல் அவ்விடம் வந்து நின்றது. ஒருவரையொருவர் பார்த்து லேசான புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். மூன்றாவது நாள்… போட்டியின் இறுதிநாள்... வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்….

தொடரும்…

12 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

போட்டி ஓட்டம் முடிந்து
அழகான நடையில் பயணிக்கிறது கதை...
தொடருங்கள்...

தங்கள் வலைப்பூவை
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டீர்களா...?
இல்லையெனில், உடனே இணைத்துவிடுங்கள்
அப்போது தான் அதிகமானோர் தங்கள் பதிவை படிக்கமுடியும்...

மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் சுட்டியில் செல்க...

http://www.tamilmanam.net/

நான் சொன்னது…

பெண்ணியம் வெற்றிபெற்றதாக எழுதியிருக்கும் தொடரில் பெண்ணியம் சாய்ந்து விடாமல் தொடர வாழ்த்துகள் நன்றி

A N A N T H E N சொன்னது…

//கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள்.//

இந்த முடிவு - எங்களுக்கு "எங்கே செல்லும்…? (7)" படிக்கும்போதே தெரியுமாக்கும்... விட்டு கொடுப்பீங்களா?

பெண்ணியம் தலைவிரிச்சி ஆடுது.... அதுக்கு சடை பின்னி பூ வைக்க யாருமே இல்லையே!!!

//வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்….//

அந்த "அமைதியானவன்" வந்து பேச்சுக் கொடுத்ததாவோ இல்ல ஸ்மைல் பண்ணதாவோ சொல்லிடாதிங்க... old fashion!... சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஹா ஹா ஹா... இது போன தொடரிலேயே கண்டு நினைச்சேன்... இந்த தொடரின் அடுத்தக் கட்டம் என்னனு போன தொடரில் போட்டி வைத்திருந்தால் சரியா சொல்லி இருப்பேன்.

இப்ப ஸ்மைல் பண்ணி இருக்காங்க... அடுத்து பேச ஆரம்பிப்பாங்க... அவன் நல்ல எண்ணத்தில் பழக போறானா இல்லை பழி வாங்க பழக போறானா என்பது தான் கேள்விக் குறி...

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல விருவிருப்பான ஓட்டம் உங்கள் எழுத்திலும்.

பெயரில்லா சொன்னது…

தொடருங்கள்...
காத்திருக்கிற்றோம்.....

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

புதியவனின் கருத்துக்கு நன்றி. சென்ற வாரம்தாம் தமிழ்மணத்தில் இணைந்தேன். தகவலுக்கு நன்றி.

நான் கூறியது...
//பெண்ணியம் வெற்றிபெற்றதாக எழுதியிருக்கும் தொடரில் பெண்ணியம் சாய்ந்து விடாமல் தொடர வாழ்த்துகள் நன்றி//

நான் அவர்களின் கருத்துக்கு நன்றி. பெண்ணியம் சாய்ந்து விடாமல் எழுதுவதற்கு ஆசைதான். பொறுத்திருந்து பார்ப்போம்...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் அனந்தன்,

//கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள்.//

//இந்த முடிவு - எங்களுக்கு "எங்கே செல்லும்…? (7)" படிக்கும்போதே தெரியுமாக்கும்... விட்டு கொடுப்பீங்களா?பெண்ணியம் தலைவிரிச்சி ஆடுது.... அதுக்கு சடை பின்னி பூ வைக்க யாருமே இல்லையே!!!//எதுக்கு விட்டுக்கொடுக்கணும்? பெண்கள் ஆண்களை வெல்வது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? முதலில் ஆணாதிக்கத்திற்கு முடி வெட்டி விடுங்கள். பிறகு பெண்ணியத்திற்கு சடைப் பின்னி பூ வைக்கலாம்.

//வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்….//

//அந்த "அமைதியானவன்" வந்து பேச்சுக் கொடுத்ததாவோ இல்ல ஸ்மைல் பண்ணதாவோ சொல்லிடாதிங்க... old fashion!... சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்!//

அப்படினா இப்போ எதுங்க நியூ ப்பேஷன்? சொன்னா நாங்களும் அதுக்கு ஏத்த மாதிரி எழுதுவோம்'ல.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

விக்னேஸ்வரனின் கருத்துக்கு நன்றி. பழகுவார்களா இல்லையா என்பதைப் பொருத்திருந்துப் பார்ப்போம்.

சுப.நற்குணன் அவர்களின் தகவலுக்கு நன்றி. தாமதமாக பதிலளிப்பதற்கு வருந்துகிறேன். பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி. ஆதரவைத் தொடருங்கள்.

கவின் அவர்களை வணக்கம் கூறி வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி.

A N A N T H E N சொன்னது…

//அப்படினா இப்போ எதுங்க நியூ ப்பேஷன்? சொன்னா நாங்களும் அதுக்கு ஏத்த மாதிரி எழுதுவோம்'ல.//

நியூ ப்பேஷனா? அது எங்க எஸ்ஜேசூரியாட்டத்தான் கேக்கனும்... கேட்டு சொல்லட்டுங்களா?

//பெண்கள் ஆண்களை வெல்வது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? //

யார் சொன்னது ஏற்கலைன்னு? பெண்ணும் ஆணைப்போல மனித இனம் தானே...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் அனந்தன்,
சீக்கிரமா எஸ்.ஜே. சூர்யாகிட்ட கேட்டுச் சொல்லுங்க... காத்திருக்கிறேன்.