வியாழன், 20 ஜூன், 2013

மிருகங்கள் உயர்வானவை!



எந்த மிருகத்திடமும் நான் பாசம் வைத்ததில்லை
அவை எம்மை நெருங்கி வரவும் இல்லை
நான் அவைகளுடன் உரையாடுவதில்லை
அவை எம்மிடம் பொய்யுரைப்பதும் இல்லை
எவற்றிடமும் நான் உறவாடுவது இல்லை
அவை எம்மை ஏமாற்றுவதும் இல்லை!

#தயவுசெய்து கேடுகெட்ட மனிதனை மிருகத்துடன் ஒப்பிடாதீர்கள்.
 மிருகங்கள் உயர்வானவை!

செவ்வாய், 18 ஜூன், 2013

சாமசுந்தரா (கறுப்பழகன்)


அழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவ்வுலகத்தில், கறு நிறத்தை மேனியாகக் கொண்டு அவதரித்த கிருஷ்ணன் உலகில் அனைவரது மனதையும் கவர்ந்தான். அவன் அழகன். சாதரண அழகன் அல்ல. கறுப்பு அழகன். அதன் காரணமாகவே அவனை சாமசுந்தரா என்று அழைத்தனர்.

இந்தப் பதிவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியது அல்ல. மலேசியாவில் கடந்த 15 & 16 ஜூன் 2013 அன்று மலாயாப் பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சாமசுந்தரா' என்ற நாட்டிய நாடகத்தினைப் பற்றியது. இயல், இசை, நாடகத்தினைப் போற்றிப் புகழும் தமிழுலகில் 'சாமசுந்தரா' என்ற இந்நாடகம் மற்றுமொரு மைல் கல் என்றால் அது மிகையில்லை.

மலேசிய மலைநாட்டில் மேடை நாடகங்கள் அதிக அளவில் நடைப்பெறுவதில்லை. இருந்த போதிலும் எஸ்.டி, பாலா போன்ற இயக்குனர்களின் பேரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில நாடகங்கள் அபூர்வமாக நடந்தேறுவது உண்டு. அதிலும் மேடை நாட்டிய நாடகங்கள் என்பது சமீப காலமாகவே இவ்விடம் வேறூன்ற தொடங்கியுள்ளது. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண்பதை விட இவ்வாறு நேரில் ஒரு மேடை நாடகத்தினை, அதிலும் நாட்டிய நாடகத்தினை காண்பது மெய்யாகவே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

சுமார் 60 நடனமணிகள் 'சாமசுந்தரா' என்ற மேடை நாட்டிய நாடகத்தில் பங்குப்பெற்றுள்ளனர். இதனை 11 நடன இயக்குனர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர். பரதம், குச்சுப்புடி, கதக் போன்ற பாரம்பரிய நடனத்துடன் பாலிவூட் நவநாகரிக நடனத்தையும் இணைத்து புது பொலிவுடன் இந்நாட்டிய நாடகத்தினை தயார் செய்துளனர். கேசவா, கோபாலா, மதுசூதனா, கோவிந்தா, சியாமசுந்தரா என கிருஷ்ணனின்  பல்வேறு பரிவாரங்களையும் மிக அழகாக விளக்கி அபிநயம் பிடித்துள்ளனர்.

இதில், கிருஷ்ணரின் சிறு வயது விஷமங்களை எடுத்துக்கூறும் பாகத்தில், சிறு குழந்தைகள் மிக அழகாகத் தங்கள் குறுப்புத்தனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளின் குறும்பும் அபிநயமும் பார்ப்போர் இதழ்களில் புன்னகையை மலரச் செய்வதில் வெற்றிப்பெற்றன. நாட்டிய மணிகளில் உடை அலங்காரங்களும் மேடை அலங்கரிப்பும் நம்மை பிருந்தாவனத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டன.

மொத்தம் 16 அத்தியாயங்களில் மிகச் சுருக்கமாக கிருஷ்ணாவின் ஒரு சில லீலைகளை நாட்டிய நாடகத்தின் வழி மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். சுகன்யா வேணுகோபால் அவர்கள் இந்நாட்டிய நாடகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் மிக அழகான சொல்லாடலுடன் விளக்கிக் கூறினார். ஸ்ரீ மதி கீதாசங்கரனின் அபரிதமான நாட்டியத்தினை விவரித்துச் சொல்வதற்கு எமக்கு வார்த்தை கிட்டவில்லை. அவரது சலங்கை ஒலி, கண்ணின் அசைவு, உடலின் நெலிவு, நடனத்தின் இலாவம் அனைத்தும் பார்ப்போரை மயக்கம்கொள்ளச் செய்வதாய் இருந்தன. இப்படியும் நடனமாட முடியுமா என்று வியக்கவும் வைத்தன.


தொடர்ந்து, இராதா, மீரா, திரெளபதை, யசோதா, சத்தியபாமா, கோபால கோபியர்கள் என அனைவருமே தங்கள் கதாப்பாத்திரங்களைச் சிறப்புரச் செய்திருந்தனர். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் வந்திறங்கினான் கிருஷ்ணன்! மங்கையர் மனம் கவரும் கள்வன், மாயக்கண்ணன் சாமசுந்தரா!!! அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்திறங்கியது போன்ற உணர்வு. கதைப் பேசும் கண்கள், நீண்ட நாசி, புன்னகைப் புரியும் வதனம், உருண்டு திரண்ட தோள்கள், மயக்கம் கொள்ள வைக்கும் உடலழகு,சுருள் சுருளான கேசம், மயிலிறகினால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம், மேனியெங்கும் கண்ணைக் கவரும் ஆபரணங்கள்; ஜொலிக்கும் பட்டாடை, தங்க நிறத்தில் புல்லாங்குழல்! வந்திறங்கினான் கண்ணன், காமக்கலைஞன் கிருஷ்ணன்!

தெய்வீக அம்சத்துடன் தோன்றிய கிருஷ்ணரைக் கண்டவுடன் பார்வையாளர்கள் அனைவருமே பரவசமடைந்தனர் என்று சொல்லலாம். இவ்வாறு மேடை நாட்டிய நாடகத்தினை காண வந்த அனைவரையும் கவர்ந்திழுத்த கிருஷ்ணனின் நிஜப் பெயர், கண்ணன் இராஜமாணிக்கம். இவர்தான் 'சாமசுந்தரா'வின் கதாநாயகன். முகம், உடல் முழுக்க நீல நிறக்க கலவையை மிக அழகாகப் பூசி, நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தார். பாவம், அந்த அலங்காரத்தைக் கலைக்கவே அவருக்கு எவ்வளவு அவகாசம் தேவைப்படுமோ தெரியவில்லை.


நிகழ்வின் இறுதியில், அனைத்து நாட்டிய மணிகளும் மேடையிலும் பார்வையாளர் மத்தியிலும் ஒன்றாகத் தோன்றி ஆடி அரங்கையே பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தனர். மலேசியாவில் இப்படி ஒரு தரமான மேடை நாட்டிய நாடகம் உருவாகியிருப்பது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை. இதனை அரும்பாடுபட்டு உருவாக்கிய தயாரிப்பாளரும் பிரபல நடன இயக்குனருமான ரவி சங்கர் அவர்களுக்கு பாராட்டுகள். கடந்த இரண்டு நாட்களாக கோலாலம்பூர், மாலாயா பல்கலைக்கழக அரங்கில் நடைப்பெற்ற இந்நாடகத்தினைக் கண்ட எவரும் இதனைப் பற்றி குறை கூற மாட்டார்கள். அப்படியொரு சிறந்த படைப்பினை அஸ்தானா ஆர்ட்ஸ் படைத்துள்ளது.

இதுபோன்ற மேடை நாட்டிய நாடகங்கள் நமது நாட்டில் இன்னும் அதிக அளவில் நடக்க வேண்டும். நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. கதாப்பாத்திரங்களாக கண் முன் நடித்துக்காட்டிய அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி.


புதன், 23 ஜனவரி, 2013

அன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 1)


ஐந்து வயது குழந்தை அவள். அவளுக்கு எதுவும் தெரியவில்லை. பெற்றோர் சண்டை, குடும்பப் பிளவு, இப்போது பாட்டி வீட்டில் அடைக்கலம். எதுவும் அவளுக்குப் புரியவில்லை. வீடு நிறைய சொந்தங்கள், ஓடியாடும் குழந்தைகள், அனுதினமும் விளையாட்டு, அடிக்கடி வந்து போகும் தந்தை, பாசம் பொழியும் பாட்டி என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். புதிய இடத்தின் சந்தோசத்தில் அவள் தாயை மறந்திருந்தாள்.

தினமும் சேலையுடன் இருக்கும் பாட்டியின் முந்தானைத்தான் அவளுக்கு வழிக்காட்டி. அதனைப் பற்றிக்கொண்டுதான் அவள் எங்கும் செல்வாள். சமயங்களில் வீடே அல்லோலங்கல்லோலப்படும். அவளுக்கு ஏனென்று தெரியாது. பாட்டி அவளை ஏதாவது அறையில் பூட்டி வைப்பாள். வெளியே வராமல் ஒளிந்துக்கொள்ளச் சொல்வாள். அறைக்கு வெளியே அழுகுரலும் ஏச்சுப்பேச்சுகளும் கேட்கும். தாயின் குரல் போலவே ஒளிக்கும். அவளுக்கு வெளியே செல்ல ஆவலாக இருக்கும். உள்ளுக்குள் ஒருவித பயம் சூழ்ந்துக்கொள்ளும். மீண்டும் பாட்டி வரும் வரை திருதிருவென விழித்துக்கொண்டிருப்பாள்.

பாட்டி வருவாள், எதுவும் கூறமாட்டாள். இவளும் எதுவும் கேட்கமாட்டாள். அம்மா வந்திருக்கிறாள் என்பது மட்டும் தெரியும். ஆனால், அம்மா எங்கே என்று கேட்கும் தைரியம் அவளுக்கு வரவேயில்லை. அவளுக்கு யாரும் சோறூட்டியது இல்லை. தானாகவே சிந்திச் சிதறி உண்பாள். எப்போதாவது பாட்டி குளிப்பாட்டுவாள். மற்ற நேரங்களில் குளிருக்குப் பயந்து அவளாகவே கொஞ்சம் தண்ணீரை மேனி எங்கும் தெளித்துக்கொண்டு குளித்துவிட்டது போல் பாசாங்குச் செய்வாள். அப்படியும் ஒருநாள் பாட்டி அதனைக் கண்டுப்பிடித்து மற்றவர்களிடமும் சொல்லி மானத்தை வாங்கிவிட்டாள்.

சமயங்களில் பாட்டி அக்கம் பக்கத்துப் பெண்கள் வீட்டில் கதைப்பேச சென்றுவிடுவாள். முந்தானையைப் பிடித்துக்கொண்டே அவளும் செல்வாள். அந்தப் பெண்கள் அவளைப் பரிதாபத்தோடு பார்ப்பார்கள். அவர்களது பார்வை அவளை என்னவோ செய்யும். இன்னும் சில சமயங்களில் அவள் தூங்கிக்கொண்டிருப்பாள். பாட்டி இவளை விட்டுவிட்டுச் சென்று விடுவாள். இடையில் அவள் கண்விழித்தால், அவ்வளவுதான்! பத்து வீடுகள் தள்ளி அவளது அழுகுரல் கேட்கும். அவளுக்கு எல்லாமே பாட்டிதான். பாட்டி என்ன செய்தாலும் பார்ப்பாள். அது போலவே செய்வாள். அதிகம் பேசமாட்டாள்.

பாட்டிக்கு ஒன்பது பிள்ளைகள். எண்ணிலடங்கா பேரப்பிள்ளைகள். அதில் அவளும் ஒருத்தி. மற்ற பேரப்பிள்ளைகள் வந்தால் அவளுக்கு மவுசு குறைந்துவிடும். அவளுக்குப் பிடித்த அனைத்துத் தின்பண்டங்களும் மற்றவர்களுக்குப் பாட்டி வாரிவாரி வழங்குவாள். அவளுக்கு அது எரிச்சலாக இருக்கும். எதனையும் காட்டிக்கொள்ளாமல் அவர்களுடன் விளையாடுவாள். சயங்களில் விளையாட்டில் சண்டை வரும். அவளும் சண்டைப்போடுவாள். விட்டுக்கொடுக்க மாட்டாள். அவளது வாயை அடைக்க மற்றவர்கள் பயன்படுத்தும் ஒரே மந்திரம், ‘உனக்குத்தான் அம்மா இல்லையே! இரு நான் என் அம்மாக்கிட்டே சொல்றேன்!’
அவள் அழுவாள். என் அம்மா எங்கே? தேடுவாள்யாரிடமும் கேட்க மனம் வராது. குப்புறப்படுத்து அழுவாள். பாட்டிக்கு எதுவும் தெரியாது. அவள் மனதில் ஏற்பட்ட காயம் யாருக்குமே தெரியாது. அவளும் சொல்லவில்லை. சொல்ல விரும்பவில்லை. சொந்தங்களுடன் பழகுவதை அந்த வயதிலிருந்தே குறைத்துக்கொண்டாள். பாட்டி அதனை அவ்வளவாக கவனிக்கவில்லை.

பக்கத்து வீடுகளில் அவளின் வயதை ஒத்த பிள்ளைகள் இருந்தனர். அதில் ஒருத்தி பாலர் பள்ளிக்குச் சென்றுவந்தாள். எப்போதும் பள்ளிச் சீருடையுடன் வீட்டின் அருகில் அவள் தாயுடன் விறகு எடுக்க வருவாள். அவள் பெயர் கல்யாணி. அவள் கல்யாணியைப் பார்ப்பாள், சிரிப்பாள், பேச மாட்டாள். அவளுக்கும் சீருடைப் போட ஆசை. பள்ளிக்குப் போக ஆசை. பாட்டியிடம் கேட்டாள். அடுத்த வருடம் போகலாம் என்று பாட்டி சொன்னாள்.

அடுத்த வருடம் வந்தது. சீருடை, புத்தக்கை, காலணி என அனைத்தும் புதிது. சித்தப்பா கூட்டிச் சென்று வாங்கிக்கொடுத்தார். முதல்நாள் காலுறையைக் கூட சரியாகப் போட அவளுக்குத் தெரியவில்லை. பாட்டிதான் சீருடை போட்டு, தலைவாரிவிட்டாள். அண்ணன் அவளை வகுப்பறையில் விட்டுவிட்டு தமது வகுப்புக்குச் சென்றுவிட்டான். அனைத்தும் புதிது, அனைவரும் புதியவர்கள். பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர்கள் அங்கு வந்திருந்தனர். அவள் மட்டும் தனியே நின்றாள். வெகு நேரத்திற்குப் பிறகு பாட்டி வந்தாள். ஆசிரியைப் பார்த்து ஏதேதோ பேசிவிட்டுச் சென்றுவிட்டாள். மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் வகுப்பு முடியும் வரை கூடவே இருந்தனர்.

என் தாய் தந்தை எங்கே? ஏன் வரவில்லை? மீண்டும் சிறியதாய் ஒரு கீறல். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. அவள் தன்னைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்தால். புதிய சூழலைக் கண்டு அழும் பிள்ளைகள். நொடிக்கொரு தரம் தன் பெற்றோர் இருக்கின்றனரா என்று நோட்டமிடும் குழந்தைகள், பக்கத்தில் உள்ளவர்களுடன் நட்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் சிலர் அன்றைய தினம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அவள் அழவில்லை. ஆனால், நொடிக்கொரு தரம் வாசலை நோக்கி வராத உறவைத் தேடிக்கொண்டிருந்தாள்.



-தொடரும்

திங்கள், 31 டிசம்பர், 2012

இப்பொழுதெல்லாம்…





இப்பொழுதெல்லாம்
பகல்கள் இரவாகின்றன
இரவுகள் பகலாகின்றன
பசியும் நித்திரையும் மறைகின்றன
ஏக்கமும் தவிப்பும் கூடுகின்றன

இப்பொழுதெல்லாம்
அழைப்பேசி கைகளில்
தலையணை அணைப்பினில்
நாள் முழுக்க இணையத்தில்
காதல் பொங்கும் இதயத்தில்.

இப்பொழுதெல்லாம்
தனியாக சிரிக்கிறேன்
தனிமையில் மகிழ்கிறேன்
கனவினிலே மிதக்கிறேன்
வாழ்க்கையை இரசிக்கிறேன்



புதன், 5 டிசம்பர், 2012

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை



ஜென்னி மார்க்ஸ் எழுதிய 'எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை' எனும் நூல் அவரின்  போராட்டகரமான வாழ்வியலை அறிந்துக்கொள்ள உதவுகிறது. போராட்டவாதியின் மனைவியாக இருப்பதில் ஏற்படும் சிக்கல், எதிர்க்கொள்ள வேண்டிய பிரச்சனைகள், தாங்கிக்கொள்ள வேண்டிய சிரமங்கள் அனைத்தையும் இந்நூலின் வழி நம்மால் அறியமுடிகிறது. ஜென்னி தமது குடும்ப நண்பர்களுக்கு எழுதிய சில கடிதங்களும் இந்நூலில் பகிரப்பட்டுள்ளன. 

ஜென்னி, தனது கணவனின் செய்கைக்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாள். ஓரிடத்தில் அமைதியாக குடியமர முடியாமல் இங்கும் அங்குமாக குழந்தைகளுடன் அலைந்துத் திரிந்தாள். போதிய பணமின்றி, உண்ண உணவின்றி, உடுத்த மாற்றுடை இன்றி, படுக்க பாயின்றி, வாழ குடிலின்றி அவள் பட்ட துயரங்கள் எண்ணிடலங்கா. பத்து மாதம் சுமந்துப் பெற்ற பிள்ளைகளையும் ஏழ்மையால் பறிகொடுத்தது கொடுமையிலும் கொடுமை. 

ஜென்னி எனும் இலட்சியப் பெண் எந்த சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை. கணவனின் நடவடிக்கைகளுக்கு அவள் எப்போதும் தடையாய் இருந்தது இல்லை. எல்லா காலக்கட்டங்களிலும் சூழ்நிலையிலும் அவள் கார்ல் மார்க்சுக்கு உறுதுணையாக இருந்தாள். எந்நிலையிலும் அவள் அவனைப் பிரிந்துச் செல்லவில்லை. அவனின் படைப்புகளைப் படித்துப் பார்த்துத் திருத்தினாள், பிரதி எடுத்தாள், பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தாள். கார்ல் மார்க்ஸ் என்கிற மனிதனின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் அவள் ஏணியாய் இருந்தாள்.

வாழ்வில் அவள் பட்ட துயரங்களை எந்தப் பெண்ணும் எண்ணிப்பார்க்கக் கூட நடுங்குவாள். ஜென்னியின் ஒருநாள் குடும்ப வாழ்க்கை என்பதே மற்றவரைக் கண் கலங்கச் செய்யும். அவள் வாழ்நாள் முழுக்கப் பட்ட துயரங்களை என்னவென்று சொல்வது?

ஜென்னி மார்க்ஸ் ஓர் இலட்சியப் பெண்! ஒவ்வொரு ஆணின் கனவு தேவதை! மாதவியிடம் சென்று வந்த கோவலனுக்காக மதுரையை எரித்த கண்ணகி, இராமனின் சந்தேகத்தைத் தீர்க்க தீயில் இறங்கிய சீதை என்று பெண்ணடிமைக்குத் துவக்கமாய் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தையும், இராமாயணத்தையும் விடுத்து, இது போன்ற உண்மையான இலட்சிய, வீரப்பெண்மணிகளைப் பற்றி படித்து நமது பெண்கள் தெளிவுப் பெற்றால் எவ்வளவு அருமையாய் இருக்கும்!

ஜென்னியின் வாழ்க்கை வரலாறு நமது பெண்களும் ஆண்களும் படித்து அறிய வேண்டிய நூல்! நம் சமுதாயம் விழுப்புணர்வு பெற இன்னும் பல ஜென்னி மார்க்சுகள் தேவைப்படுகிறார்கள்!

வியாழன், 1 நவம்பர், 2012

பதில் கவிதை


 
ஆண்:
 
 தாரகையே....
நீ என்னவள் என்று நான் சொல்லிவிட்டேன்...
உனக்கு இன்னும் ஏன் தயக்கம்...?
தயங்காது துணித்து சொல்,
நான் உன்னவன் என்று...!!!
தொட்டு விடும் தூரத்தில் இல்லை நாம்...
தொடர்பற்று போகவில்லை நாம்...
தயங்காது சொல்...
தடுமாற்றம் இல்லாமல் சொல்...
தன்னிலை உணர்ந்து சொல்...
என்னை நம்பி சொல்...
நீ என்னவள் என்று.....!!!!


பெண்:



தாம்பூலம் மாற்றியவள்
உன்னவள் ஆகலாமா?
நீ ஒருவன் சொல்லிவிட்டால்
ஊருலகம் ஏற்றிடுமா?

தடுமாறி நிற்கின்றேன்
தன்னிலை மறந்துவிட்டேன்
தனிமையை நாடுகின்றேன்
தோழனே உதவி செய்!

மண்டியிட்டுக் கேட்கின்றேன்
மன்றாடி அழுகின்றேன்
இன்னொரு வலி வேண்டாம்
என் மீது கருணைக்கொள்!

உடைந்த இதயம்...



உடந்துபோன மனதை
எத்தனை முறை ஒட்டுவது?
ஒட்டுவதும் உடைவதும் வாடிக்கை
இது மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை!

ஒட்டி ஒட்டி உடைந்த மனம்
இன்று துகள்களாகி போயிற்றே
இனி ஒட்டவும் முடியாது
யாராலும் உடைக்கவும் முடியாது!

இனி இதற்கு உயிரில்லை
இதனால் எவ்வித பயனுமில்லை
இருந்த அறிகுறி தெரியவில்லை
இது இருப்பதுதானே பெரும் தொல்லை?

வந்து அள்ளிக்கொள்ளுங்கள்
காற்றினில் கரைக்கலாம்
கடலோடு கலக்கலாம்
மண்ணினிலே புதைக்கலாம்!