சனி, 1 பிப்ரவரி, 2020

எது காதல்? ‍-அத்தியாயம் 2

2
கோதைக்கு மனமே சரியில்லை. பள்ளி ஆண்டுகாலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு குமார் வேறு பள்ளிக்கு ஒன்றாம் படிவம் படிக்கச் சென்றுவிடுவான். பெரும் இழப்பு நேரப்போவது போல் அவள் மனம் கனத்திருந்தது. அடுத்தாண்டு மாற்றலாகிப் போகவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பிரியாவிடை விருந்து வைப்பது வழக்கம். கோதை, கோகிலா, வசந்தி, கார்த்திகா ஆகிய நால்வரும் நடனப்பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தனக்குப் பிடித்தமான மின்னல் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊ லலலா' பாடலை கோதை தேர்வு செய்திருந்தாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தனர். பாடலுக்குப் பொருத்தமான அபிநயங்களைக் கோதையே நிர்ணயித்து மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தாள். நடனத்தில் அவளுக்கிருக்கும் திறமை அப்பள்ளியில் யாவரும் அறிந்ததே. ஆகையால் பொறுப்பாசிரியர் கூட முழுப்பொறுப்பையும் கோதையிடமே கொடுத்துவிட்டார். பள்ளி முடிந்து சில வேளையில் கோதையும் அவளது தோழிகளும் வகுப்பறையில் நடனப்பயிற்சி மேற்கொண்டனர். இந்த விடயம் குமாரின் காதுக்கும் எட்டியது.

ஒருநாள் பள்ளி ஓய்வு வேளையின் போது குமார் அவளைக் கடந்துச் செல்ல நேர்ந்தது. அவன் பக்கத்தில் இருந்த சரண். "என்ன? எங்களுக்காக நடனமெல்லாம் ஏற்பாடு செய்கிறாயாமே?" என்று கேலி செய்தான். "உங்களுக்காக தனியாக இங்கே யாரும் மனக்கெடவில்லை. இது ஒட்டுமொத்த ஆறாம் ஆண்டுக்காகச் செய்கிறோமாக்கும்," என்று சிலுப்பிக்கொண்டுச் சென்றாள். தான் நடனம் புரியப்போவது குமாருக்குத் தெரிந்துவிட்டது. நிச்சயமாக அவன் பிரியாவிடைக்கு வருவான். அவனுக்காக எப்பொழுதையும் விட நடனத்தைச் சிறப்பாக ஆடவேண்டும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.

நாட்கள் ஓடின. பிரியாவிடைக்கொடுக்கும் நாளும் வந்துச் சேர்ந்தது. கோதையும் அவளது தோழிகளும் அழகாக உடுத்தி நடனத்திற்குத் தயாராகினர். கோதை தன் மனதைப் பாடல் வரிகளுக்குள் ஒன்றிணைத்து அருமையாக ஆடினாள். அவள் ஆடுவதை முன்வரிசையில் நின்று இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் குமார். 'என் கண்ணு ரொம்ப அழகா? என் இறக்கை ரொம்ப அழகா?' என்ற வரிகளின் போது கோது குமாரைப் பார்த்து அபிநயம் பிடித்தாள்.குமார் வெட்கப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. சரண் குமாரின் இடுப்பில் இடித்து ஏதோ அவன் காதுக்கருகில் முணுமுணுத்ததை நடனத்தின் போதும் கவனிக்க கோதை தவறவில்லை.

ஒருவழியாகப் பிரியாவிடை விருந்து முடிந்தது. அனைத்தையும் சுத்தப்படுத்திவிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் வீடு செல்ல தயாராகினர். கோதையும் கோகிலாவும் உடை மாற்றி பேருந்து நிற்குமிடத்திற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு முன்பாக மிதிவண்டியில் குமாரும் சரணும் காத்திருந்தனர். அவர்களைக் கண்டதுமே கோதைக்கு மனம் படபடத்தது. அவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள்? ஒருவேளை தனக்காகத்தான் நிற்கிறார்களா? இப்போது என்ன செய்வது. இங்கே எல்லார் முன்னிலையும் அவர்களோடு பேசுவது சரியாகப் படாதே. யாராவது இதைப் பார்த்து வீட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது என பலவாறாக எண்ணத் தொடங்கினாள். அவளையறிமால் அவள் கால்கள் நடுங்கின.
"ஏய், அங்கே பார்! குமாரும் சரணும் உனக்காகத்தான் அங்கே நிற்கிறார்கள் போல் தெரிகிறது," என்றாள் கோகிலா.

"தெரியாத மாதிரி வா. நாம் அவர்களைக் கவனிக்காத மாதிரி வேறு பக்கத்தில் நின்றுக்கொள்வோம்," என்று கோகிலாவின் கைகளை இறுக்கமாகப் பற்றி, அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் வெகு வேகுமாய் நடந்தாள் கோதை. அவர்கள் கடந்துப்போகையில் சரண் அவர்களைப் பார்த்து, "ஹாய்" என்றான். அதற்கும் பதிலேதும் கூறாமல் சரேலென்று எதிர்திசையில் சென்று அமர்ந்துக்கொண்டனர் கோகிலாவும், கோதையும்.
அந்தப்பள்ளியின் பேருந்து நிற்குமிடம் மிக முக்கிய சாலையின் அருகில் இருக்கிறது. சாலையில் வருவோர் போவோர் எவர் வேண்டிலும் அங்குப் பேருந்திற்காகக் காத்திருக்கும் மாணவர்களைத் தூரத்திலிருந்தே காண முடியும். அந்தச் சிரிய பட்டிணத்தில் பெரும்பாலும் அனைவருமே ஒருவர் குடும்பத்தை மற்றவர் அறிந்து வைத்திருந்தனர். 'உம்பிள்ளையைப் பள்ளியில் பார்த்தேன், யாரோ இரண்டுப் பையன்களோட பேசிக்கிட்டிருந்தா,' என்று யாராவ‌து வீட்டில் சொன்னால் நிலமை என்னாகும்? அந்தத் தொண்ணூறுகளின் காலக்கட்டத்தின் அவ்வாறு பேசுவதே எவ்வளவுத் தவறாக எண்ணப்பட்டது? இதுதான் கோதையின் பதட்டத்திற்குக் காரணம். இதை குமாரும் தெரிந்துவைத்துதானே இருப்பான். சில நிமிடங்கள் அங்கேயே மிதிவண்டியோடு நின்றுக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு அகன்றனர். குமாரின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று மறையாமல் ஒட்டிக்கொண்டிருந்தது. அது, பதட்ட நிலையிலும் கோதையின் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது.

இன்னும் ஒரு வாரம்தான் எஞ்சியிருக்கிறது. பள்ளி ஆண்டுகாலம் முடிந்துவிடும். குமாரும் சரணும் தொலைவிலுள்ள இடைநிலைப்பள்ளிக்குச் சென்றுவிடுவர். இனி அவர்களை, குறிப்பாக குமாரை எப்போது
பார்ப்பது? தானும் ஆரம்பக்கல்வியை முடித்துவிட்டு அதே இடைநிலைப்பள்ளிக்குச் சென்றால் காணலாம். ஆனால், அதற்கு ஒரு வருடம் பொறுக்க வேண்டுமே. காலங்கள் உருண்டோடக் கூடாதா என ஏங்கினாள் கோதை. அவளுக்கு அவனைக் காண வேண்டும். ஒவ்வொரு நாளும் காண வேண்டும். ஆனால் அதனை யாரிடம் எப்படி விவரிப்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. இவையணைத்தும் அவள் மனதை பாரமாய் அமுக்கிக்கொண்டிருந்தது. சில சமயம் இவற்றை நினைக்கையில் அவளுக்கு அழுகை கூட வந்தது. யாரோ ஒருவன். அவனிடம் சரியாகப் பேசியது கூட இல்லை. அவனைப் பிரியப்போகிறோம் என்று நினைக்கையில் மனதுக்கு ஏன் இத்துணைச் சிரமமாய் இருக்கிறது? அவளுக்கு அவளையே புரிந்துக்கொள்ள இயலவில்லை.

"நீ அவனைக் காதலிக்கிறியா?" கோகிலா வாய் திறந்துக் கேட்டேவிட்டாள்.

"எனக்குத் தெரியல," என்ற பதிலை மட்டுமே கோதையால் தர முடிந்தது. 

அந்தக் கடைசி வாரத்தில் குமாரின் முகத்திலும் சோகத்தின் சாயல் படர ஆரம்பித்தது. அவளைக் கண்டபோதெல்லாம் அவன் புன்னகைக்கவே செய்தான். அந்தப் புன்னகையின் பின்னால் பெரும் சோகம் ஒளிந்திருப்பது போல் கோதையின் மனதிற்குப் பட்டது. ஒரேவேளை இந்தப் பிரிவை எண்ணி அவனும் அவளைப் போலவே மனம் கலங்குகின்றானோ? அந்தக் கடைசி வாரமும் வந்து முடிந்தது. அப்போதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அந்த ஆண்டு இறுதி விடுமுறையை காதல் பாடலிலும், சோகப் பாடலிலும் நிரப்பினாள் கோதை. அடுத்தாண்டு ஆறாம் ஆண்டிற்கான‌ தேர்வு நடைப்பெறும். அதில் நல்லமதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி மனதினுள் வந்துப் போனது. அதற்காக அவள் தன்னைத் தயார்படுத்தவும் செய்தாள். இடையிடையே தலைத்தூக்கிய குமாரின் நினைவுகளை வலிந்து அப்புறப்படுத்தினாள். 

விடுமுறை முடிந்துப் பள்ளித் தொடங்கியது. மீண்டும் தங்கள் நண்பர்களைக் காணும் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்குள்ளும் இருந்தது. கோதையும் குமாரின் நினைவுகளிலிருந்து விடுப்பட்டு ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றாள். அவளின் ஆறாம் ஆண்டு இனிதே தொடங்கியது. அவளும் வழமை போல் பாடத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். இரண்டாவது வாரம் வழக்கம் போல் அவளும் கோகிலாவும் பள்ளிப்பேருந்திற்காகக் காத்துநின்ற வேளையில் இரண்டு மிதிவண்டிகள் அவ்விடம் வந்துச் சேர்ந்தன. இடைநிலைப்பள்ளிச் சீருடையிலிருந்த குமார் தயக்கத்துடனும் புன்னகையுடனும் கோதையின் அருகில் மிதிவண்டியை நிறுத்தினாள். அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. இவன் எப்படி இங்கு? இடைநிலைப்பள்ளி இருப்பதோ வெகு தொலைவில். குமாரின் வீடும் இங்கு இல்லை. இவன் எதற்கு எப்படி இங்கே அன்று குழம்பியவாறு அவனை நோக்கினாள். அவன் முகத்தைக் கண்ட மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனிபோல் உருகினாள் கோதை. கோகிலா அவளை மெதுவாக இடிக்க, அப்போதுதான் தான் பேருந்து நிற்குமிடத்தில் இருக்கிறோம் என்ற சுயநினைவிற்கு வந்தாள். ஏனோ, ஆயிரம் கண்கள் தன்னைப் பார்ப்து போல் அவளுக்கு மனம் குறுகுறுத்தது. 

தான் ஏதாவது வினையில் சிக்கிக்கொள்வதற்கு முன் அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும் என எண்ணியவளாய், கோகிலாவின் கரத்தைப் பற்றக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தாள்.

"கோதை, நில்லு!" சொன்னது குமார். 

அவன் அவ்வாறு அழைத்தது அவளுக்கு என்னவோ செய்தது. அவன் அவளை அழைக்கிறான். அவள் பெயர் சொல்லி அழைக்கிறான். ஏதோ உரிமைக்குரலுடன் அழைக்கிறான். இந்த அழைப்பை எப்படி மீறுவது? அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். அதில் ஏக்காம் குடிக்கொண்டிருந்தது.

"யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்," என்றாள் கோதை. 

அவளுக்கு வேறு என்ன சொல்வது அல்லது செய்வது என்றுத் தெரியவில்லை. இவன் முகத்தைக் காணத்தானே அவள் தவமாய் தவமிருந்தாள். இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்றுதானே காத்திருந்தாள். இந்த சிரிப்பைக் காண்பதற்காக எவ்வளவு ஏங்கினாள். ஆனால், அவளால் அங்கு நின்றுப் பேசத்தான் முடியவில்லை.

"கவலைப்படாதே, நான் சென்றுவிடுவேன். உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதனால்தான் வந்தேன். உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்," என்றான் குமார். அதில் சோகம் படிந்திருந்ததை அவள் உணர்ந்தாள். அவன் அவளுக்காக, அவளைக் காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறானே. அப்படியானால், அவனுக்கும் தன் மீது அன்பிருக்கத்தானே செய்கிறது. நான் அவனை நினைத்திருந்தது போல் அவன் என்னை நினைத்திருக்கிறான் என்பதுதானே அர்த்தம்? அவள் மனம் இளகியது. அவளையறிமால் அவள் கண்களில் நீர் வழிந்தது.

"ஏய், ஏன் அழுகின்றாய்? அழாதே கோதை. நான் சென்றுவிடுகிறேன். உனக்குச் சிரமம் அளித்திருந்தால் என்னை மன்னித்துவிடு," என்றவாறு மிதிவண்டியை வந்த திசை நோக்கி மிதித்தான் குமார். அவள் அருகில் வந்த சரண், "எப்போதும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் இம்சை தாங்காமல் நான் தான் அழைத்து வந்தேன். பாவம், அவன் உன் நினைவாகவே இருக்கிறான். இனி நாங்கள் வரமாட்டோம்," என்றவாறு சென்றுவிட்டான்.

"ஏன் அழுகிறாய்?" என்று கோகிலா கேட்டாள்.

"தெரியவில்லை," என்றாள் கோதை. அவள் மனம் வலித்தது. ஏனென்று அவளுக்கு விளங்கவில்லை. அவள் அவனைக் காதலிக்கிறாளா? ஐயோ, இது வீட்டில் தெரிந்தால் என்னவாகும்? அடுத்து சில தினங்கள் அவள் சோகமே உருவாய் இருந்தாள். அவள் தாய் என்னவென்று கேட்டும் வெறும் களைப்பு என்று மழுப்பினாள். தன்னைத் தேடி வந்த ஒருவனைப் புண்படுத்தி அனுப்பிவிட்டோமோ என்று மனம் நொந்தாள். இனி அவன் தன்னை நினைக்க மாட்டானா என்று வருந்தினாள். இவ்வளவு மனப்போராட்டதிற்கு நடுவிலும் அவள் படிப்பில் கவனம் சிதறவில்லை. மனம் திசை மாறும் போதெல்லாம் அவள் புது நூல்கள் வாசித்தாள். ஒருவாறாக அவ்வாண்டை எப்படியோ கடந்து தேர்வும் எழுதிச் சிறப்பு மதிப்பெண்களும் பெற்றுவிட்டாள்.

அடுத்தாண்டு அவளும் இடைநிலைப்பள்ளிக்கு செல்லவிருக்கிறாள். குமார் படிக்கும் அதே இடைநிலைப்பள்ளி. அவளை அவனுக்கு நினைவிருக்குமா? அல்லது மற்ற இடைநிலைப்பள்ளி மாணவர்கள் போல் இந்நேரம் அவனுக்கும் காதலி இருக்குமா? மீண்டும் குமாரைப் பற்றிய எண்ணம் அவளும் படையெடுத்தது.

வியாழன், 30 ஜனவரி, 2020

வாழ்!

இவன் சரியில்லை அவன் சரியில்லை
இது சரியில்லை அது சரியில்லை
இப்படியே புறம் பேசு
இடுகாட்டில் போய் சேரு!

என்னதான் வேண்டும்
எதற்குத்தான் பிறந்தாய்
எப்படியோ வளர்ந்தாய்
எப்படியும் இறப்பாய்…

வாழும் காலத்திலே
வளத்தோடு வாழலாமே
வாயை மூடிக்கொண்டு
வீட்டை நாம் பார்க்கலாமே?

அடித்தவன் கதையெல்லாம்
அடிப்பினிலே போட்டுவிடு
அண்டிப்பிழைப்பதை நீ
அடியோடு விட்டுவிடு!

நேற்றிருந்தார் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை
நாழிகையைக் கடத்தாமல்
இந்நாளை வாழ்ந்துவிடு!

எது காதல்? -அத்தியாயம் 1

1
அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டுப் பயின்று வரும் கோதையும் கோகிலாவும் பள்ளி முடிந்து அன்றைக்கு வீட்டுக்குச் செல்லவில்லை. புதன்கிழமைதோறும் மதிய வேளையில் புறப்பாட நடவடிக்கைகள் இருப்பதால் அவர்கள் வீடு செல்லாமல் பள்ளியிலேயே தங்கிவிட்டனர்.பள்ளிக்குத் தொலைவில் வசித்துவரும் மாணவர்கள் மதிய வகுப்பின் போது இவ்வாறு பள்ளியிலேயே தங்கிவிடுவது வழக்கம். வீடு அருகில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குச் சென்று மதியம் மீண்டும் பள்ளி திரும்புவர். இது பெரும்பாலான பள்ளிகளில் வழமை.

அப்போது 'மின்னல்' என்ற தமிழ்ப்படம் வெளிவந்து வெற்றிநடைப்போட்டுக்கொண்டிருந்த வேளை. கோகிலாவும் கோதையும் மதிய வகுப்பு தொடங்குமுன் இருக்கும் நேரத்தைச் செலவிட அந்தச் சிறிய பள்ளியை சுற்றி சுற்றி நடந்துக்கொண்டே கதைப்பேசி வந்தனர். அப்போது, "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?" என்ற பாடல்வரிகளை யாரோ ஆண் குரல் பாட, "விளையாட ஜோடி தேவை" என்று கோதை தொடர்ந்தாள். இயற்கையிலேயே சற்று குறும்புத்தனம் மிக்கவள்.

"ஏய்! யாரது எங்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவது" என்று குரலுக்குச் சொந்தக்காரர்களான குமாரும், சரணும் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். குமார், சரண் இருவரும் ஆறாம் ஆண்டுப் படிக்கும் பன்னிரெண்டு வயது மாணவர்கள். கோதையும் கோகிலாவும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள். பிள்ளைப் பருவத்திலிருந்து இளம் பருவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் காலம்.

குமாரும் சரணும் வரும் காலடிச் சத்தம் கேட்கவே, கோகிலாவும் கோதையும் சிரித்துக்கொண்டே தலைத்தெறிக்க ஓடினர். அவர்கள் அங்கிருந்து ஓடுவதைப் பார்த்த குமாரும் சரணும், "ஏய்! ரெண்டு பேரும் நில்லுங்கள்" என்று கூவியவாறு துரத்திக்கொண்டு வந்தனர். தோழிகள் இருவரும் ஓர் அறையின் வளைவில் ஓடிச்சென்ற வேளையில் எங்கிருந்தோ வந்த பள்ளியாசிரியரைக் கண்ட குமாரும் சரணும் சட்டெனெ நின்றனர்.

"என்ன ஒரே ஓட்டம்?" என்று வினவினார் நாராயணன்.

"ஒன்னுமில்லை சார்... சும்மா விளையாடிக்கொண்டிருந்தோம்" என்று மழுப்பினான் சரண்.

"சரி, இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். சில நோட்டுப்புத்தகங்களைக் காரிலிருந்து எடுத்து வர வேண்டும்," என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார் நாராயணன் என்ற கணக்காசிரியர்.

அவர்கள் போவதை வகுப்பறையின் வளைவிலிருந்து மறைந்து நின்று கோதையும் கோகிலாவும் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரின் முகத்திலும் சிரிப்பு. கோதையின் மனம் என்றைக்கும் விட அப்போது அதிகம் படபடத்தது. ஏதோ ஒருவித கிளர்ச்சி, இனம் புரியாத இன்பம்.

"நல்லவேளை அவனுங்க நம்மள பிடிக்கல," என்றாள் கோகிலா.

அதற்கு பதிலொன்றும் கூறாமல் புன்னகையுடன் தலையசைத்தாள் கோதை.
ஒருவேளை பிடித்திருந்தால்? என்று எண்ணியபோது அவளையும் அறியாமல் அவள் கன்னம் சிவந்தது.

குமார் பாடிய அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த சமீபத்திய பாடல், எனவே தான் அதைக் கேட்டதும் அவளும் தொடர்ந்துப் பாடினாள். அதே வேளை தனக்குப் பிடித்த பாடலை இன்னொருவனும் இரசித்துப் பாடுகின்றானே என்று நினைத்த மாத்திரத்தில் அவளுள் எதுவோ, என்னவோ செய்தது. அவன் பெயர் அவளுக்குத் தெரியும். அந்தப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான‌வர்களை அவளுக்குத் தெரியும். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவன் பெயரை நினைத்த மாத்திரத்தில் அவளையறியாமல் அவள் இதழ்கள் புன்னகைத்தன.

"என்ன சிரிப்பு ஒரு மாதிரியா இருக்கு?" என்று வினவினாள் கோகிலா.

"ஒன்னுமில்லை..."

"ஏய், மழுப்பாதே. அவர் பாடுவாராம்; இவங்க சேர்ந்துப் பாடுவாங்களாம். அவர் துரத்துவாராம்; இவங்க ஓடுவாங்களாம். யாருக்கிட்ட?" என்று கிண்டலடித்தாள் கோகிலா. கோதையில் இளமைப் பருவத்தின் மிக முக்கியப் புள்ளியிட்டது அன்று கோகிலாதான். கோதை சிரித்தாள். அவளால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

மதிய வகுப்பின் போது கோதையால் முழுமையாக எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. இது அவளுக்குப் புதுமையாய் இருந்தது. குமாரையும் அவன் பாடிய பாடலையும் நினைத்த மாத்திரத்தில் அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது. வீட்டிற்குச் சென்ற கோதை "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலைத் திரும்ப திரும்பக் கேட்டாள். ஒவ்வோர் வரியையும் இரசித்துக்கேட்டாள். ஒவ்வோர் முறையும் முதன் முறை கேட்பதைப் போலவே அந்தப் பாடல் அவளுக்கு சிலிர்ப்பூட்டியது.

இடையிடையே குமாரின் குரல் அவள் காதுக்கு மட்டும் ஒலித்து மறைந்தது.
அதன்பின் ஒவ்வொரு முறை அவள் குமாரை பள்ளியில் சந்திக்க நேர்ந்த பொழுது ஓரக்கண்ணால் நோட்டமிடுவாள். குமார் எப்போதும் நண்பர்கள் சூழ இருந்தான். சரண் அவனை நிழல்போல் தொடர்ந்தான். கோதையும் குமாரும் பல முறை ஒருவரையொருவர் பள்ளியில் பல சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்த போதிலும் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சில சமயம் நண்பர்கள் காணாத வேளையில் குமார் அவளைப் பார்த்துப் புன்னகைப்பான். அவளுக்கு அப்போது வெட்கம் பிடுங்கித்தின்னும். சட்டென்று பார்வையை வேறு திசைக்குத் திருப்பிவிடுவாள். சில சமயம் இவள் அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள், அவன் முகத்தில் வெட்கம் படர சிரித்தவாறு , நண்பர்கள் கவனியா வண்ணம் முக‌த்தைத் திருப்பிக் கொள்வான். இப்படியே நாட்கள் கடந்தன. அவர்கள் இருவரின் வாய் பேசாவிடினும், கண்களாலேயே அவர்கள் ஆயிரம் கதைகள் பேசினர்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்ற கோதை ஒரு முறையாவது அவனைக் கண்டுவிடமாட்டோமா என்று ஏங்கினாள். அவள் ஏக்கத்தைப் புரிந்துக்கொண்டவன் போல் குமார் அடிக்கடி அவளது வகுப்பறையைக் கடந்துப் போனான். அவன் வரும்போதும், போகும் போதும் ஓரக்கண்ணால் அவளை நோட்டமிட்டான். இதனைக் கோதையின் இணைப்பிரியா தோழி கோகிலாவும் கவனிக்கத் தவறவில்லை.

"என்ன? உன் ரோமியோ அடிக்கடி இந்தப் பக்கம் வரமாதிரி இருக்கு?" என்று கிண்டலடித்தாள்.

"யாரு?" என்று ஒன்றும் தெரியாதது போல் வினவிளாள் கோதை.

"நடிக்காத. எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவர் ஓரக்கண்ணுல பார்க்கிறதும் நீ சிரிக்கிறதும்.

"சிரிச்சா தப்பா?"

"சிரிச்சா தப்பில்ல. ஆனால், நீ சிரிக்கிற விதமே வேற மாதிரி இருக்கு. அங்க பார்வையும் வேற மாதிரி வருது."

கோதை பதில் சொல்லவில்லை. என்னவென்று சொல்வது? அதற்குள் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைய அவர்கள் பேச்சு அத்தோடு நின்றது. இந்தப் பேச்சி அடியோடு நின்றது என்று சொல்வதற்கில்லை. கோதையும் குமாரும் சிரிப்பையும் பார்வையையும் பரிமாறிக்கொள்வதை அவர்களின் நண்பர்களும் நாளடைவில் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் போதோ அல்லது ஒருவரை ஒருவர் கடந்துப் போகும் போது அவர்களுடைய‌ நண்பர்கள் தொண்டையைக் கணைத்து அர்த்தப் புன்னகை வீசுவர். அவர்களின் நட்பும் அன்பும் அந்த அளவிலேயே வளர்ந்தது எனலாம். அவர்கள் இருவருக்கும் அப்பருவத்தில் அதுவே தேவையாய் இருந்தது, ஆயிரம் அர்த்தம் தரக்கூடிய அந்தப் பார்வையும், உலகையே ஒரு கணம் மறக்கச்செய்யும் அந்தப் புன்னகையும் மட்டுமே.

அவர்கள் இருவரின் மனதிலும் வேறு எதுவும் இல்லை. அவளின் முகம் அவனுக்கும், அவனின் எண்ணம் மட்டுமே அவளுக்கும் போதுமானதாய் இருந்தது. பதினொன்று வயது சிறுமிக்கும், பன்னிரெண்டு வயது சிறுவனுக்கும் அந்த தொன்னூறுகளில் வேறு என்னதான் எண்ணத் தெரியும். அப்பழுக்கற்ற அவர்கள் இதயத்தில் தூய அன்பொன்று அழகாய் வேறூன்றத் தொடங்கியது.






புதன், 2 ஜனவரி, 2019

தீட்டு!


தீட்டென்று ஏதுமில்லை
தாரகத்தின் எல்லைக்குள்ளே
என்னைப் படைத்தவனே
உன்னையும் படைத்தான்
பாலுறுப்பு வெவ்வேறு கொடுத்தான்!

உதிரம் உதிர்வதனால்
உட்கார வைத்தார்கள்
வயிற்றுவலி வந்ததினால்
வீட்டோடு வைத்தார்கள்!
மூன்றுநாள் மூலையிலே
முடக்கி வைத்ததினால்
மூளையற்ற மூடர்கள்
தீட்டென்றுச்  சொன்னார்கள்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மன்னித்துவிடு மகனே



No automatic alt text available.
தாய்மையற்ற எனக்கு
தலைமகனாய் வந்தவனே
நான்குகால் நாய்மகனே
நல்லுள்ளம் கொண்டவனே...

குட்டியாய் நீ இருந்தாய்
குதூகலம் எனக்களித்தாய்
எத்தனை இன்பம் கண்டோம்
அன்பிலே திளைத்திருந்தோம்

வாழ்க்கையை வாழ நினைத்து
வீட்டை நான் விட்டு வந்தேன்
வருத்தம் கொண்ட போதும்
வந்திடுவாய் என நினைத்தேன்

ஏமாந்துவிட்டேன் மகனே
உன்னை நான் இழந்துவிட்டேன்
பழிவாங்கும் இழிபிறவி
பிரித்துவிட்டான் நம்மையடா

ஏதுமில்லையடா எனக்கு
நீயின்றி உயிரும் போகுதடா மகனே
கோபம் வருகிறது, மனது வலிக்கிறது
கொஞ்சம் குரைத்து உன் வருகையைச் சொல்லிவிடு

என்றாவது நீ வருவாய்
என்று நான் காத்திருந்தேன்
அனைத்தும் கனவாக‌
அலைக்கடலில் கரைகிறதே!

உன் கண்களைக் காணாது
என் கண்கள் கலங்குகிறது
உன் காதுகளைத் தடவ வேண்டும்
உரசி அமர்ந்துவிடு

மடிமீது துயில்வாயே
மழலைப்போல் பார்ப்பாயே
கருவர்ண கண்ணா நீ
கருணைக்கொள் எந்தன் மீது!

செல்லக்குட்டி ரோக்கி
என் அம்முக்குட்டி ரோக்கி
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா உலகமடா

மனிதனின் கொடூர புத்திக்கு
நம் உறவு பலியாகிவிட்டது
நீ எனக்கு வேண்டுமடா
உன்னை நான் பிரியவில்லை

உன்னை நினைக்காத நாளில்லை
கலங்காத இரவில்லை
வந்துவிடு செல்லக்குட்டி
என்னைச் சேர்ந்துவிடு ரோக்கி குட்டி!

அம்மா அழைக்கிறேன்
வந்துவிட்டு ரோக்கி குட்டி
பாய்ந்தோடி வாடா செல்லம்
சென்றிடுவோம் தூரமாக!

உன்னை நான் நீங்கவில்லை
நீ என்னிடமிருந்து பிரிக்கப்பட்டாய்
இன்னமும் போராடுகிறேன்
உன்னை மீட்டெடுக்க..

யாருமில்லையடா இங்கெனக்கு
பழிச்சொல் தவிர வேறேதும் இல்லையா
உனக்குத் தெரியாதா என் அன்பு உண்மையென்று
நானின்றி நீ எப்படியடா இருக்கிறாய்?

நான் என்ன செய்ய சொல் மகனே?
குறுக்குப்புத்தி எனக்கு இல்லை
எவரையும் துன்புறுத்தும் எண்ணமில்லை
எட்டிச் செல்வதனால், எட்டி மிதிக்கின்றனரே?

காசு பணம் வேண்டாமடா
நீ மட்டும் போதுமென்றேன்
பலவீனம் தெரிந்ததனால்
பிரித்தனரோ நம்மை இன்று?

ரோக்கி...
கேட்கிறதா ரோக்கி?
அம்மாவின் குரலைத் தேடுகிறாயா?
என்னைக் காணாது ஏமாந்துப் போனாயா?

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்
உன்னை இழந்துவிட்டேனே ரோக்கி
என் முதல் குழந்தையடா நீ
நீயின்றி எப்படி வாழ்வேன்?

உறக்கம் பிடிக்கவில்லை ரோக்கி
உயிர்பிரியும் வலி உணர்கிறேன்
அனைத்தையும் பிரிந்த எனக்கு நீதானே ஆறுதல்?
அம்மா செல்லம் ரோக்கி, ஓடி வா ரோக்கி!

என் செல்லமே  வாடா செல்லம்
அம்மா இங்கு இருக்கிறேன்
அழுதாயா என்னைத் தேடி
அழைத்தாயா நடு இரவில்?

யாருக்கும் புரியவில்லை
நாய்தானே என்கின்றனர்
அவர்களுக்கு என்ன தெரியும்?
இந்த நாய்க்கு நான் தாய் என்று?

கெஞ்சிக் கதறினேன் மகனே
நீ எனக்கு வேண்டுமென்று
வசைச்சொல் பொறுத்தேன்
வலிகளைத் தாங்கினேன்

ஏதும் பலிக்கவில்லையடா
நம் அன்பு ஜெயிக்கவில்லையடா
என்னை மன்னித்துவிடு ரோக்கி
அம்மாவை மன்னித்துவிடு!

நான் உன்னை புரக்கணிக்கவில்லை
ஐயகோ, அப்படி மட்டும் எண்ணிவிடாதே
நீ என்னிடமிருந்துப் பறிக்கப்பட்டாய்
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டாய்

என்னை வெறுத்துவிடாதே ரோக்கி
இப்படி ஏதேனும் நிகழும் என்ற அச்சத்தால்
பெக்கியை உனக்குத் துணையாக்கினேன்
உன்னை நான் தனிமையில் விடமாட்டேன்!

என்னை நினைக்கின்றாயா ரோக்கி?
என் நினைவு இருக்கின்றதா?
மறந்துவிடு மகனே
மகிழ்வாய் இருந்துவிடு மகனே

இந்தத் துன்பம் என்னோடு போகட்டும்
என்னை நினையாதே
நினைத்து உருகும் வாழ்க்கை உனக்கு வேண்டா
நீ நன்றாய் வாழ வேண்டும்!

தூக்கி தூக்கி வளர்த்தேனடா
துயில்வதைக் கூட இரசித்தேனடா
வாஞ்சையில்லா உன் அன்பு
வஞ்சனைக்கொண்ட மனிதர்க்குப் புரிவதில்லை

எப்படி புரியவைப்பேன் உனக்கு?
என்னை மன்னித்துவிடு ரோக்கி
பாதியில் விட்டுச்சென்ற என்னை
மன்னித்துவிடு மகனே...


இது வேறு உலகம்!

பிராவுன்ஸ்பீல்ட், டெக்சாஸ்

மகிழுந்து நீண்ட நேரம் மனித நடமாடமற்ற அந்தச் சாலையில் மிக மெதுவாக நகர்ந்தது. காட்டு மிருகங்கள், குறிப்பாக மான்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் குறிப்பிட்ட வேகத்திற்கும் குறைவாகவே மகிழுந்தைச் செலுத்த வேண்டியதாயிற்று.

உங்கள் இடம் வந்தாயிற்று என ஜி.பி.எஸ். அலறவும் நான் சுற்றும் முற்றும் பார்த்து விழித்தேன். இந்தக் காட்டுக்குள்ளா வீடு இருக்கிறது?  ஆம், சுற்றும் முற்றும் மனித நடமாடமற்ற காட்டிற்குள்தான் வீடு. அது ஒரு தனி வீடு. பெரிய நிலம், சுற்றிலும் மரம், செடி கொடிகள் தாறுமாறாக வளர்ந்திருந்தது. பிரம்மாண்டமான பலகை வீடு. வீட்டிற்குள் நவீனத்தின் அறிகுறியாக குளிர்ச்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதே சமயம், அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் தலைகள் பாடம் செய்யப்பட்டு, வீட்டின் சுவர்களை அலகங்கரித்தன. வீட்டின் வடிவமைப்புத் தவிர, நவீன வீட்டிற்கான அத்தனை வசதிகளும் அந்தப் பலகை வீட்டில் செய்யப்பட்டிருந்தன.

வீட்டின் பின்புறம், சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல். ஊஞ்சல், சறுக்கு மரம், கூடைப்பந்து விளையாடும் என அடிப்படை விளையாட்டு வசதிகள் இருந்தன. இன்னொரு பக்கம் சிறு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடம் ஓய்வாக அமர்ந்துப் பேச நாற்காலி, மேசைகள், மின்விசிறி போன்றவை வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தாண்டி நீச்சல் குளம். சிறுவர்கள் நீந்தி விளையாட, பெரியவர்கள் கூடாரத்தில் அமர்த்துக் கதைத்துக்கொண்டிருந்தோம்.

மாலை மங்கி இரவு வந்தது. அந்த வானத்தில்தான் எத்தனை நட்சத்திரங்கள்? பட்டணத்து வானத்தில் இல்லாத நட்சத்திரங்கள் அனைத்தும் யாருமற்ற இந்தக் காட்டில் வந்து ஒளிந்துக் கொண்டனவையா? சற்று தூரத்தின் சிறு அரவம். மான்கள் இரண்டு தங்கள் இரவு உணவை வேலியின் ஓரமாகக் கொறித்துக்கொண்டிருந்தன. என்ன ஒரு அருமையான காட்சி! எங்களுக்கு இரவு உணவாக கோழி, மான் இறைச்சி, சோளம் ஆகியவை வழங்கப்பட்டன. அனைவரும் இரவை இரசித்தபடி கூடாரத்திலேயே உணவை ருசித்தோம்.

அவர்களிடமிருந்து விடைபெறும் முன், வீட்டையொட்டிய கொட்டகையைப் பார்வையிட்டோம். சிறியவையிலிருந்து, பெரியவை வரையிலான, பலவகைத் துப்பாக்கிகள் அவ்விடம் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன் செயல்பாடுகளைக் காட்டுவதற்காக அதன் மீது ஒலி உறிஞ்சியைப் பொருத்தி, வானின் மீது ஒருமுறை சுட்டுக்காட்டினார்கள். சத்தமே வரவில்லை. இதனைக்கொண்டுதான் விலங்குகளை வேட்டையாடுவார்கள், இன்னமும்.

இப்படியானவொரு வாழ்வை சில படங்களில் கண்டுள்ளேன். அதனையே நேரில் பார்க்கும் போது என்னையும் மறந்து வியந்து நின்றேன். இது வேறு உலகம்!

ஞாயிறு, 11 ஜூன், 2017

முதிர்ச்சி (All Grown up) -Jami Attenberg


Image result for all grown up novel

ஆண்ரியா 40 வயதைத் தொடும் திருமணமாகாதப் பெண். அவள் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என தீர்மானிக்கவில்லை. சமூகம் விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டுக்கொள்ளவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கவில்லை. அவள் மனம் போன போக்கில் வாழ்கிறாள். தனிமை அவளை வாட்டுகிறது, ஆனால் அவள் தனது வாழ்க்கையை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பவில்லை. தான் விரும்பும் ஆணுடன் உறவுக்கொள்கிறாள். வேண்டிய நேரத்தில் போதையின் உதவியை நாடுகிறாள். தான் வளர்ந்துவிட்டபடியால் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி தனக்கிருப்பதை உணர்கிறாள். இருப்பினும், அவளுக்கு அது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சி அவளை ஏதோ செய்கிறது. மனதளவில் தான் இன்னும் வளரவில்லை என்ற உண்மை அவளுக்குப் புரிகிறது.

தனது அண்ணன் மகள் ஊனமுடன் பிறந்து, வளர்ச்சியின்றி இறப்பதைப் பார்க்கிறாள். தன் தந்தை அளவுக்கதிமான போதையில் இறப்பதைப் பார்க்கிறாள். தான் விரும்பிய ஆண், வாழ்க்கையைப் பற்றி கவலைக்கொள்ளாமல் ஏழ்மையில் தவிப்பதைப் பார்க்கிறாள். தன் தாய் வாழ்க்கையை வாழ பிற ஆண்களின் தயவை வேண்டி நிற்பதைப் பார்க்கிறாள். திருமணமான தனது தோழி, விவாகரத்துக் கேட்டு நிற்பதைப் பார்க்கிறாள். இந்த வாழ்க்கை அனைவருக்கும் ஏதோ ஒரு சிரமத்தை, தடையை விதித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்ரியாவுக்கு இது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சியை அவள் விரும்பவில்லை. இருப்பினும், அவளின் அனுமதியின்றி அவள் வளர்ந்துவிட்டாள். எனவே, இந்த வாழ்க்கையை அவள் வாழ வேண்டும்; அவள் போக்கில்...

பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் சிந்திக்கும் விதமும், வாழ்க்கையை அவர்கள் எதிர்க்கொள்ளும் வழியும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதை சற்று விரக்தியாகவே நகர்கிறது. வளர்ந்துவிட்டவர்களின் வாழ்க்கையே விரக்தி நிறைந்தது தானே? வளர்ச்சியும், வயதின் முதிர்ச்சியும் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது, சிந்திக்க வைக்கிறது என்பதை விளக்க நாவலாசிரியர் ஜாமி அத்தென்பெர்க்ஸ் முயன்றுள்ளார். 

செவ்வாய், 30 மே, 2017

நேசிக்க நேரிடும் (May Cause Love)

Image result for may cause love
பத்தொன்பது வயதில் தான் கர்ப்பமாக இருப்பதை காசி அன்டர்வூட் அறிகிறாள். கையில் பணமில்லை, திருமணமாகவில்லை, மதுவுக்கு அடிமை, வீட்டைலிருந்து வெகு தூரம் வசிக்கும் வேளையில், கருவினைக் கலைக்க முடிவு செய்கிறாள். அவளின் முடிவு சரியா தவறா என்று அவளுக்குத் தெரியவில்லை.

கருக்கலைப்பு அவளிடமிருந்த பெண்ணியச் சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமை, எதையோ தொலைத்த உணர்வு, எல்லையில்லா குடிப்பழக்கம் என அவள் தனது மனதினை தேர்த்த முயல்கிறாள். தனது கருக்கலைப்பினைப் பற்றிப் பெற்றோர், நண்பர்கள், அயலார் என எல்லாரிடமும் உரையாடுகிறாள்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு எவ்வாறோ குடிப்பழக்கத்தை நிறுத்தி, தனது கனவு வேலையில் அமர்கிறாள். அப்போது அவளைக் கருவுறச் செய்த முன்னாள் காதலன் வேறு ஒருத்தியுடன் குழந்தைப் பெற்றுக்கொண்ட செய்தி அவளை என்னவோ செய்கிறது. அவள் உடைந்துப் போகிறாள். ஆழ்ந்த மன அழுத்தம் அவளை உட்கொள்கிறது. கருக்கலைப்புச் செய்த குற்ற உணர்விலிருந்து தான் என்றுமே விடுப்பட போவதில்லை என எண்ணுகிறாள்.

உணர்ச்சிகளை வெல்ல ஆன்மீகத்தைப் பயன்படுத்திய‌ பெண்களின் சரித்திரத்தைத் தேடிப் படித்த காசி, தானும் அவ்வழியைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கிறாள்.  புத்தம், ரோமன் கத்தோலிக், மனோதத்துவ நிபுணர் என இன்னும் பலரின் உதவியுடன் அவள் தனது தேடலைத் தொடர்கிறாள். கருக்கலைப்புச் செய்த பெண்களுக்கு ஆறுதலாகச் செயல்படவும் ஆரம்பிக்கிறாள்.

காசியின் இந்த வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக் கதையல்ல. அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற ஒரு பெண் சந்தித்த ஏமாற்றங்களும் சவால்களும், அதனை எதிர்க்கொள்ள அவள் செய்த முயற்சிகளையும் இரசனையுடன் சொல்லும் நாவல். நாவலில் ஆங்காங்கே வெளிப்படும் காசியின் வாழ்க்கைச் சிந்தனைகள் எம்மை வியப்புறச் செய்தன.

காசி...அவளுக்கு என் வயதோ அல்லது என்னைவிட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். அவள் மேற்கொண்ட பயணங்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி இவற்றில் நூறில் ஒரு பங்குக் கூட நான் செய்ததில்லை. காசியின் விடிவை நோக்கிய இந்தப் பயணம் என்னுள் ஓர் எழுச்சியை உண்டாக்குகிறது. எனது வட்டத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது. இவ்வுலகை வேறு கண்ணோட்டத்தில் காண வைக்கிறது.






திங்கள், 22 மே, 2017

இதயம் இருக்கும் இடம் (Where The Heart Is)

Image result for where the heart is


நோவலி பதினேழு வயது நிறைமாத கர்ப்பிணி. தனது காதலன் வில்லி ஜாக்குடன் புதிய வாழ்வை ஆரம்பிக்க கனவுகளுடன் கலிபோர்னியா நோக்கி பழைய மகிழுந்தில் பயணம் மேற்கொள்கிறாள். வில்லி ஜாக்கின் கையைப் பிடித்து தனது வயிற்றின் மீது வைத்து, "கேட்கிறதா? இதுதான் இதயம் இருக்கும் இடம்," என்கிறாள். அவனோ எதுவும் கேட்கவில்லை என மிக அலட்சியமாகக் கூறி கையை இழுத்துக்கொள்கிறான். பயணத்தின் போது அவளது காலணி மகிழுந்தில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்துத் தொலைந்துப் போனது. அவளிடம் இருந்த ஒரே காலணி அது மட்டுமே. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணாகிய அவளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு. பயணத்தின் ஊடே 'வால்மாட்' எனும் பேரங்காடியைக் கண்ட நோவலி செருப்பு வாங்கவும், சிறுநீர் கழிக்கவும் அவ்விடம் வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.

பேரங்காடியில் செருப்பு வாங்கிக்கொண்டிருந்தவளின் மூளையில் ஏதோ தோன்ற, ஓடி வந்து வெளியே பார்க்கிறாள். அங்கு வில்லி ஜாக் இல்லை. அவளது புகைப்படக் கருவி மட்டுமே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்தது. அவளிடம் எதுவுமே இல்லை, வயிற்றில் சுமக்கும் குழந்தையும் கையில் இருக்கும் புகைப்படக் கருவியைத் தவிர்த்து. அந்நேரத்தின் சிஸ்டர் ஹஸ்பண்ட் எனும் பெண்மணி, நோவலியை வேறொரு பெண் என நினைத்து உரையாடுகிறார். அந்த சிறு பட்டணத்திற்கு மீண்டும் திரும்பி வந்திருப்பதாக நினைத்து வரவேற்புப் பரிசுக் கூடை ஒன்றையும் நோவலியின் கையில் திணித்துவிட்டு நேரம் இருக்கையில் தன் வீட்டுற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

நோவலி பட்டணத்தைச் சுற்றி வரும் போது, பென்னி குட்லட் எனும் சிறுவன் அவளுக்கு 'பக் அய்' எனும் மரக்கன்றை வழங்கி, அது நல்ல சகுனத்தை வழங்கும் எனக் கூறுகிறான். அடுத்து என்ன செய்வது என்றறியாது தவித்த நோவலி பக் அய் செடியுடன் வால்மாட் பேரங்காடியில் வாழ ஆரம்பிக்கிறாள். ஒரு சமயம் தனது செடி வாடுவதைக் கண்ட அவள் அதனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள நூலகம் செல்கிறாள். அங்கே போர்னி அவளுக்கு உதவி புரிகிறான். சிஸ்டர் ஹஸ்பண்ட் வீட்டிற்குச் சென்று அந்தச் செடியை நட உரிமைப் பெற்று அங்கேயே செடியை நடுகிறாள்.

ஒருநாள் இரவு அவளுக்குப் பிரசவ வலி எடுத்தது. அவள் பேரங்காடியில் தங்கியிருப்பதை ஏற்கனவே போர்னி அறிந்துக்கொண்டான். நோவலி வலியில் துடித்த போது, கண்ணாடி கதவினை உடைத்து போர்னி அவளுக்கு பிரசவம் பார்க்கிறான். வால்மாட்டில் வசித்து, அங்கேயே குழந்தைப் பெற்ற நோவலியைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல் பரவியது. வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ் என அனைத்திலும் அவளைப் பற்றிய செய்திகள் வெளியாயின. அதனைக் கண்ட நோவலியின் தாய், பத்து வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் நோவலியைப் பார்க்க வருகிறாள். மகளுக்கு உதவி செய்வதாகக் கூறி அவளிடம் இருந்த அனைத்துப் பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்று விடுகிறார். சென்றவர் மீண்டும் வரவே இல்லை.

சிஸ்டர் ஹஸ்பண்ட் நடந்ததைக் கேள்வியுற்று, நோவலியையும் அவளது மகள் அமெரிகுஸ் நேசனையும் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். நோவலிக்கு வால்மாட் பேரங்காடியில் வேலை தரப்பட்டது. கால ஓட்டத்தின் மோசசின் உதவியுடன் புகைப்படங்கள் எடுக்கக் கற்றுக்கொண்டு சிறந்த புகைப்படக் கலைஞர் விருதையும் பெறுகிறாள். போர்னி அவளுக்கு நிறைய நூலக புத்தகங்களையும் தந்து வாசிக்கிக் கற்றுக்கொடுத்து, அவளைப் புதிய மனிதனாக்குகிறான். அவளை வீதியில் விட்டுச்சென்ற வில்லி ஜாக், சிறைச் சென்று, பலவாறாகத் துன்புற்று, இறுதியில் தண்டவாளத்தில் தனது கால்களை இழக்கிறான்.  போர்னியும, நோவலியும் இறுதியில் ஒன்றாக இணைகின்றனர்.

இந்நாவலில் 'லெக்சி' போன்று இன்னும் சில முக்கியக் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் இருக்கின்றன. பதினேழு வயது பெண்ணின் முட்டாள் தனமும், போராட்டமும், அமெரிக்க வாழ்க்கை முறையும் இந்நாவலில் வெகுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் இதே தலைப்பில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



வியாழன், 3 நவம்பர், 2016

நிறைவு!


என்னுடன் வேலை செய்வபர்களில் 90% பதினெட்டிலிருந்து, இருபத்தைந்து வயதிற்கு உட்பட்ட மாணவர்கள். சுயமாக உழைத்துச் சொந்த சம்பாத்தியத்தில் படித்துக்கொண்டிருப்பர்கள். ஊழியம் குறைவாக இருப்பினும், படிப்புச் செலவுக்கு ஆகுமே என தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளப் போராடிக்கொண்டிருப்பவர்கள். அதில் இருவருக்குக் கடந்த வாரம் பிறந்தநாள். 

பெண்ணுக்குப் பதினெட்டு வயது. ஆணுக்கு இருபத்திரண்டு வயது. நேற்றைய தினம் அவர்களுடன் எனக்கு வேலை. கடையில் நாங்கள் மூவர் மட்டுமே வேலை பார்த்துக்கொண்டிருந்தோம்.  இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் இருக்கும் கடை ஒன்றில் இரவு 9.30 வரையில் வேலை. காலையிலிருந்து மதியம் வரை வேறு சிலர் வேலை செய்வர். மதியத்திலிருந்து நாங்கள் வேலையைத் தொடங்குவோம். நேரமும் ஆட்களும்  மாறி மாறி வருவர். 

மாலை மணி 4.30-ஐத் தாண்டும் போது அந்தப் பெண் "கடையில் சாப்பாட்டு ஏதுமில்லையா?" என பசியுடன் கேட்டாள். தினசரி விடுதி சமையலறையிலிருந்துக் கொண்டுவரப்பட்ட உணவுகள் அனைத்தையும் விற்றாகிவிட்டது. அந்தப் பையனும் இன்னும் உணவு உண்ணவில்லை. "எதுவுமே இல்லை" என அவனும் பாவமாய் கூறினான். பசியின் கொடுமை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். பணியாளர்களுக்கென அமைக்கப்பட்ட அருந்தகமும் மாலை 4 மணிக்கெல்லாம் மூடிவிடும். மற்றபடி கடையில் இருக்கும் நொறுக்குத் தீணிகளும், ஏனைய உணவுப் பொருட்களையும் பணம் கொடுத்துத்தான் வாங்கி உண்ண வேண்டும். விலையோ ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். 

"எதுவுமே இல்லை. வெளியிலிருந்து ஏதாவது வாங்கலாமே?" என்றேன். "அதிக விலையாக இருக்கும்," என இருவருமே சோகத்துடன் கூறினர். பசி படிந்த அந்த முகங்களைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. எனது வங்கியிலோ வெறும் 50 டாலர்கள் மட்டுமே இருந்தது. நம்மிடம் இருந்தால் கொடுக்கலாம், நமக்கே இல்லாதபோது எங்கிருந்துக் கொடுப்பது என பேசாமல் இருந்துவிட்டேன். நேரம் ஆக ஆக, அவள் பசிக்கிறது என முனக ஆரம்பித்தாள். மணி ஐந்தைத் தாண்டியபோது அவர்களின் முகங்களை என்னால் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.

"உங்கள் இருவருக்கும் என்ன வேண்டுமோ வாங்கிச் சாப்பிடுங்கள். நான் பணம் தருகிறேன்," என்றேன். எப்படியும் 50 டாலர்களுக்கு மேல் சாப்பிட மாட்டார்கள் என்பது தெரியும். அவர்கள் இருவரும் நான் சொன்னதை நம்பாமல், "உண்மையாகவா?" என திரும்பத் திரும்பக் கேட்டனர். "உங்கள் இருவருக்கும் எனது பிறந்தநாள் உபசரிப்பாக இருக்கட்டும்," என்றேன். அப்பொழுதும் அவர்கள் நம்பவில்லை. 

"நான் பிட்சா சொல்லலாமா?" என அந்தப் பையன் கேட்டான். "சொல்" என்றேன். "உண்மையாகவா?" என அவள் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள். ஒருவழியாக தொலைப்பேசியில் உணவுகளைக் கேட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்தியவுடனேயே அவர்களின் முகம் மலர்வதைக் கண்டேன். உணவு வந்த பிறகு குறைந்தபட்சம் இருபது முறையாவது நன்றி சொல்லியிருப்பார்கள். "வயிறு நிறைந்துவிட்டது," என அவர்கள் சொன்ன போது என் மனம் நிறைந்துவிட்டது.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, உணவு நேரத்தைத் தவறவிட்டு, ரொட்டித்துண்டு வாங்கிச் சாப்பிடக்கூட பணமில்லாமல், பசியில் அழுதுக்கொண்டே உறங்கிப் போன நினைவுகள் கண்முன் வந்துச் சென்றது. இவர்களின் பசியை இன்று போக்கிவிட்டோம் என்ற நிறைவு , மனம் முழுக்கப் பரவியது.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

கிளியோபாட்ரா & அண்டனி


சீசர் இறந்துவிட்டான்
சீற்றத்தில் துடித்தாள் கிளியோபாட்ரா
கண்ட நாள்முதல் காதலில் திளைத்தவள்
கண்ணீர் நதியினில் மூழ்கிச் சாகின்றாள்!

நண்பன் இறந்துவிட்டான்
நாடித் துடிக்கிறதே
திரோகம் இளைத்தவரை
தீர்த்திட முயல்கிறதே
வருகின்றான் அண்டனி
வஞ்சம் தீர்த்திட‌
சவத்தின் முன்னாலே
சபதம் ஏற்றிட...

தங்க ஆடையில்
தகதகக்கும் பீடத்தில்
தெய்வம் போல் மின்னிட‌
தாரகையும் காட்சி தர,
பிரமாண்டம் கண்திகைக்க‌
பித்து போல் அவன் நிற்க‌
பிடித்தது காதல் நோய்
பின்விளைவுதான் என்னவோ?

சீசரை மயக்கியவள்
சிரிப்புடனே நெருங்கினாள்
அசைவுகள் ஏதுமின்றி
அண்டனி சிலையானான்!

உணர்ச்சிகள் கலந்தன‌
உடல்களும் இணைந்தன‌
காலம்தான் பொறுக்குமா
காதல்தான் நிலைக்குமா?

சீசரின் உறவொன்று
சீறித்தான் வந்ததுவே
ஆண்டனி உயிர்க்கொய்ய‌
ஆவலாய் முயன்றதுவே!

வெடித்தது போர் ஒன்று
விலகினான் அண்டனியும்
மங்கைப் பின் அவன் ஓட
மானமும் பறந்ததுவே!

தோல்வி மனக்கசப்பைத் தர‌
தீயாய் அது நெஞ்சைச் சுட‌
துவண்ட மன்னன்
தூரம் சென்றான்
விழிகொண்ட மங்கையை
விலக்கி வைத்தான்!

காதல் தலைவன்
சீறி விலக‌
கிளியோபாட்ரா
சமாதி சென்றாள்!

அண்டனி தலை வேண்டும்
ஆணையிட்டான் சீசர் மகன்
தந்துவிடு கிளியோபாட்ரா
தப்பிவிடும் எகிப்தின் தலை!

கண்ணியவள் கலங்கி நின்றாள்
காலனை வேண்டி நின்றாள்
அரியணை தனக்கு வேண்டாம்
அன்பனே போதும் என்றாள்!

காலம் கடந்ததுவே
காலன் வந்ததுவே
களத்தில் தோல்வியுற்ற
கண்ணன் மனமுடைந்து
கத்தியை உறுவினான்
கணத்தில் செலுத்தினான்!

செர்வியஸ் அதிர்ச்சியுற்றான்
செய்வதறியாது திகைத்து நின்றான்!

கணங்கள் எனக்கில்லை
கிளியோவை காண வேண்டும்
காரணம் சொல்லாதே
கண்டிப்பாய் சேர்த்துவிடு
கரகரத்தான் அண்டனி!

கிளியோபாட்ரா சமாதியில்
காதல் கண்ணியின் மடியில்
கடைசி நேரத்து மூச்சை
காதல் முத்தத்தில் கலந்தான்!

சோகத்தைத் தாளாதவள்
சர்ப்பத்தின் துணை கொண்டு
சாவை வரவேற்றாள்
சரித்திரத்தில் இடம்பெற்றாள்!

அழிந்தது இரு உடல்கள்
ஆண்டுகள் பல கடந்தும்
வாழ்கிறது காதல்
வாழ்த்துவது சரித்திரம்!





ஹாரி போட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (Harry Potter and The Cursed Child)



ஹாக்வர்ட்ஸ் போர் முடிந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கதை நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹாரி போட்டர் ஜின்னியை மணம் புரிந்து ஜேம்ஸ் மற்றும் ஆல்பஸ் ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். ஹெர்மியோனி - ரோன் தம்பதியினருக்கு ரோஸ் எனும் பெண் குழந்தை இருக்கிறது. டிராகோ மால்ஃபோய்'யின் மகனாக ஸ்கோர்பியஸ் வருகிறான்.

இக்கதையில் ஹாரியின் இளைய மகன் ஆல்பஸ் தந்தையின் பெயருக்கும் புகழுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணருகிறான். தந்தையின் திறமை தன்னிடம் இல்லை என எண்ணி மனதிற்குள்ளேயே குமுறுகிறான். அதன் விளைவாகத் தன் அடையாளமாகத் திகழும் ஹாரியை விட்டு விலக முயல்கிறான். டிராகோவின் மகன் ஸ்கோர்பியஸ் அல்பஸ்சின் உற்ற நண்பனாக வலம் வருகிறான்.

தனது மகன் சிட்ரிக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அமோஸ், நேரத்தின் ஊடாக பயணம் செய்து தனது மகனை மீட்டுத்தரும்படி ஹாரி போட்டரிடம் உதவி நாடுகிறான். அதனால் விளையும் பின்விளைவுகளை எண்ணி ஹாரி உதவ மறுக்கிறான். இதனை ஒட்டுக்கேட்ட அல்பஸ்  அமோசுக்கு உதவ முன்வருகிறான். டெல்பியின் துணையுடன் அல்பசும் ஸ்கோர்பியசும் நேரத்தின் ஊடாகப் பயணம் செய்யும் கருவியைக் கைப்பற்றுகின்றனர். சிட்ரிக்கைக் காப்பாற்றுவதற்காக இரு முறைப் பயணம் செய்து, அதன் பின்விளைவுகளைக் கண்டு அஞ்சி அந்த முயற்சியைக் கைவிடுகின்றனர். நேரத்தின் ஊடாகப் பயணம் செய்வது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என்பதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதனை அழிக்கவும் ஆயத்தமாகின்றனர்.

இதற்கிடையில் தனது மகன் ஆல்பசைச் சுற்றி கறுப்பு மாயைப் படர்வதைக் கேள்வியுற்ற ஹாரி, ஸ்கோர்பியசின் நட்புதான் அதற்குக் காரணம் என எண்ணி அவர்களைப் பிரிக்க முயல்கிறான். இவ்விடம் மிகவும் உணர்ச்சிகரமானச் சம்பங்கள் சில நிகழ்கின்றன. ஆல்பசும் ஸ்க்கோர்பியசும் நேரக் கருவியை அழிக்கும் தருவாயில் டெல்பி அவ்விடம் தோன்றி அதனைக் கைப்பற்றுகிறாள். வல்டெர்மோர்ட் மீண்டும் வரவேண்டும் எனவும் அதற்கான ஆயத்தங்களை அந்தக் கருவின் துணைக்கொண்டு தாம் செய்யப்போவதாகவும் கூறி, அவ்விருவரையும் கடத்தி செல்கிறாள். டெல்பியின் தீய எண்ணத்தை அறிந்த அவ்விருவரும் அவளுக்கு உதவ மறுக்கின்றனர். இதனால் கோபமுற்ற டெல்பி கடந்தக் காலத்திற்குப் பின்னோக்கி சென்று, கருவியை அவ்விடத்திலேயே அழித்து விடுகிறாள். இதனால் மீண்டும் தற்காலத்திற்குத் திரும்ப முடியாமல் சிறுவர்கள் இருவரும் தவிக்கின்றனர்.

இதனிடையே, சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்ட பெரியவர்கள் டெல்பி வல்டெர்மோர்ட்டின் மகள் என்பதனைக் கண்டுப்பிடிக்கின்றனர். சிறுவர்களும் தாங்கள் இருக்கும் காலத்தையும், இடத்தையும் அறிவுப்பூர்வமாக ஹாரி போட்டருக்குத் தெரிவிக்கின்றனர். டிராகோ தன்னிடமிருந்த மற்றொரு நேரத்தின் ஊடே பயணம் செய்யும் கருவியை ஹாரியிடம் கொடுக்கிறான். அதனைப் பயன்படுத்தி சிறுவர்களை டெல்பியிடமிருந்து மீட்கின்றனர். கடந்த கால நிகழ்வுகள் எதனையும் சிதைக்காமல் மீண்டும் தற்காலத்திற்குத் திரும்பி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகு தந்தை - மகன் உறவில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் நிகழ்கின்றன‌.

இவையனைத்தையும் முழுமையாக சுவைக்க வேண்டுமானால் நீங்கள் முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரையில், கதை மிகவும் சுறுசுறுப்பாக நகர்கிறது; வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. கற்பனைக்கதை ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். வாசித்து மகிழுங்கள்!





வியாழன், 7 ஜூலை, 2016

கடல் புறா -சாண்டில்யன் (பாகம் 3)


அஷையமுனையை விட்டு கடலில் பயணம் மேற்கொண்ட இளைய பல்லவன் மனதில் கடாரத்து இளவரசி காஞ்சனா தேவியும், மஞ்சளழகியும் மாறி மாறி வந்துப் போயினர். கடல் மோகினியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கடல் புறாவை கலிங்கத்துப் போர்க் கப்பல்கள் தாக்க ஆரம்பித்தன. கடல் புறாவின் முதல் கடல்போர் வெற்றியில் முடிந்தது. அதிஷ்டவசமாக, கடாரத்து இளவரசி காஞ்சனாதேவியும், அவளது தந்தை குணவர்மனும் கலிங்கத்து கப்பல்களில் இருந்ததினால், அவர்களையும் இளைய பல்லவன் காப்பாற்றினான்.

நக்காவரத்தில் இருக்கும் தமிழர்கள் துணையுடன் போரினால் சேதமடைந்த  தனது கப்பல்களைச் சரிசெய்ய நினைத்த இளைய பல்லவனுக்கு பெருத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. மாநக்காவரத்தில் இருந்த கங்கதேவனைச் சூழ்ச்சியின் மூலம் வீழ்த்துகிறான் கருணாகரப் பல்லவன். கங்கதேவன் காஞ்சனா தேவியை அடைய முயன்றதால், அவனைக் கொலையும் செய்கிறான். அடுத்ததாக, கடாரத்தைப் பலவர்மனுக்குப் பெற்றுக்கொடுக்கும் அடுத்தக் கட்ட முயற்சியில் ஈடுபடுகிறான். கடாரத்தில் குணவர்மனையும் காஞ்சனா தேவியையும் விட்டுவிட்டு, கடல் நாடுகளில் காலை ஊன்றச் சென்றுவிடுகிறான். வெற்றிக்கொண்டு மீண்டும் கடாரம் வந்திறங்கிய இளைய பல்லவனை சொர்ணபூமிக் கடல் பிராந்தியங்களுக்குச் சோழ மன்னரால் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இளவரசர் அநபாயர் சிறைப்பிடிக்கிறார். 

இளைய பல்லவனின் சிறைப்பிடிப்பு ஒரு அரசியல் நாடகம் என்பதை அநபாயர் அவனுக்கு விளக்குகிறார். கருணாகரனைச் சிறிது காலம் அஷையமுனையில் தங்கியிருக்குமாறும், காஞ்சனா தேவியை உடன் அழைத்துச் செல்லுமாறும் உத்தரவுப் பிறப்பிக்கிறார். மஞ்சளழகியை நினைத்து இளைய பல்லவன் அதற்கு உடன்பட மறுக்கிறான். அனைத்தையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த அநபாயக் குலோத்துங்கன் அமீரின் உதவியுடன் தந்திரம் செய்து அவர்களை அஷையமுனைக்கு அனுப்புகிறான். இருப்பினும், கடல் பயணத்தின் பாதி வழியில், இளைய பல்லவன் கப்பலில் வழியை மாற்ற, அது மலையூர்க் கோட்டையை நோக்கிச் சென்றது. ஜம்பி நதி முகத்துவாரத்தில் பெரும் போரில் ஈடுப்பட்ட கடல்புறா இறுதியாக, ஸ்ரீவிஜயத்தின் கடற்படை தளபதி விஜயசந்திரனைச் சுற்றி வளைத்தது. 

மலையூரைத் தன் வசமாக்க நினைத்த இளைய பல்லவன், கோட்டையில் மஞ்சளழகியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான். ஜெயவர்மன் மஞ்சளழகியைத் தன் மகளாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீவிஜயத்தின் இளவரசி பட்டத்தினை அளித்ததையும், தாம் தற்போது மலையூர்க் கோட்டையின் தலைவர் என்பதையும் மஞ்சளழகி விளக்குகிறாள். இருப்பினும், இளைய பல்லவன் மீதுள்ள காதலினால், அவனுக்கு உதவ முற்படுகிறாள். 

இவ்வேளையில், இளைய பல்லவனைத் தேடி கோட்டைக்கு வந்த காஞ்சனா தேவிக்கும், மஞ்சளழகிக்கும் வாக்கு வாதமும், மனவருத்தமும் முற்றுகிறது. மஞ்சளழகி கோட்டையைப் பிடிப்பதற்கு உதவியதையும், தனக்காகச் செய்த பெரும் தியாகத்தையும் இளைய பல்லவன் காஞ்சனா தேவியிடம் விளக்கு இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறான். மலையூர்க் கோட்டையை தன் வசமாக்கிக்கொண்ட இளைய பல்லவன், மங்கையர் இருவரையும் கடல்புறாவில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவிஜ‌யத்தை நோக்கிப் பயணமானான். 

சுமார் மூன்று நாட்கள் நடந்த போரில், ஸ்ரீவிஜயம் வீழ்ந்தது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சொர்ணத் தீவும், கடாரமும் சேர்ந்த பெரும்பகுதி குணவர்மனுக்கும், சைலேந்திரர்களின் ஜன்ம பூமியான சாவகத் தீவு ஜெயவர்மனுக்கும் பிரித்தாள கொடுக்கப்பட்டன. 

தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்ற இளையபல்லவனை வரவேற்ற வீரராஜேந்திர சோழர் வண்டைக் குறுநிலத்தை இளையபல்லவனுக்கு அளித்து கருணாகரத் தொண்டைமான் என பெயரும் வழங்குகிறார். அவனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில், மஞ்சளழகியையும், காஞ்சனாதேவியும் மணமுடித்து வாழ ஆசியும் வழங்குகிறார் வீரராஜேந்திர சோழர். 

இவ்வாறாக சுபமுடன் நாவல் முடிவுறுகிறது. மூன்று பெரும் பாகங்களாகப் படைக்கப்பட்டுள்ள இந்நாவலின் முதல் பாகத்தில் காஞ்சனா தேவியும், இரண்டாம் பாகத்தில் மஞ்சளழகியும் கதைத்தலைவிகளாக வலம்வருகின்றனர். நாவலின் மூன்றாம் பாகத்தில் மட்டுமே மங்கையர் இருவரும் சந்திக்கின்றனர். ஆகவே, மூன்றாம் பாகத்தில் இளையபல்லபன் மற்றும் இரு மங்கையர் துணையுடன் பயணிக்கிறது கடல்புறா. 

நாவலில் இடம்பெரும் கடாரம் பற்றிய சில குறிப்புகள்:

*இராஜேந்திர சோழதேவரைப் போன்ற வீரரும் ரசிகரும் தமிழகத்தில் இருந்ததில்லை காஞ்சனாதேவி. அவர் கங்கையைக் கொண்டதன்றிக் கடாரத்தையும், ஏன் கீழ்த்திசை முழுவதையுமே வெற்றிக் கொண்டதும் உலகமே வியந்தது. பக்.70

*தமிழர்கள் சங்க காலம் முதல் அறிந்த கடாரத்தின் சிறப்பையும் இயற்கைக் காவலையும் கூட அசட்டை செய்தவண்ணம்... பக்.362

*'தொடு கடல் காவல் கடுமுரட்  கடாரமும்' என்று இராஜேந்திர சோழ தேவர் தஞ்சை இராசராசேச்சுரத்துக் கர்ப்பக்கிருகத்தில், தென்புறத்திலுள்ள இரண்டாம் பட்டைக் கல்வெட்டில் படைத்த சாஸனத்தை நினைத்து ஓரளவு புன்முறுவல் கொண்டான். பக்.363

* "கலைத்தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும்
    திதமாவல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிரக்'
    கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில்
    மானக்காவரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்..."  பக்.363

*மலாக்க ஜலசந்தி என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸ்ரீவிஜய சாம்ராஞ்யக் கடற்பகுதி நாடுகளில் பல இடங்களில் தனது கால்களை ஊன்றினான். பக்.365

*கி.பி. 1062-வது வருடத்திற்குப் பிறகு குலோத்துங்கத் தேவன் கடாரத்தில் வீரராஜேந்திரன் பிரதிநிதியாகப் பணியாற்றியதாகவும், சோழநாட்டுத் தூதனாக கி.பி.1067-ல் சீனத்துக்கும் சோழத் தூதராகச் சென்றதாகவும் கூறுகிறார். பக்.372

*நமது நாட்டு இளவலொருவன் தற்கால வசதிகளில்லாத அக்காலத்தில் கடாரத்தில், அங்குள்ள மன்னர்களுக்கும் உத்தரவிடும் நிலையில் அமர்ந்திருந்தான். பக்.373



ஞாயிறு, 3 ஜூலை, 2016

கடல் புறா- சாண்டில்யன் (பாகம் 2)



பாலூர்ப் பெருந்துறையில் சிக்கிக்கொண்ட இளைய பல்லவனை அகூதா காப்பாற்றி கப்பலில் போர் பயிற்சி அளிக்கிறார். அகூதாவின் வழிக்காட்டலின் பேரில் மிக விரைவிலேயே இளையபல்லவன் பிரசித்திப்பெற்ற கடற்போர் வீரனாக அறியப்படுகிறான்.

நாவலின் இரண்டாம் பகுதி அஷையமுனையில் தொடங்குகிறது. அஷையமுனைக் கோட்டைத் தலைவன் பலவர்மன், குணவர்மனின்  ஒன்றுவீட்டுச் சகோதரன் என்பதையும் , மிகவும் ஆபத்தானவன் என்பதையும் இளையபல்லவன் கண்டறிகிறான். அஷையமுனையில் தான் சிறிய கடற்படை அமைக்க விரும்புவதாக கோட்டைத் தலைவனின் உதவியை நாடுகிறான். அவ்விடம் கோட்டத் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சளழகியின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மஞ்சளழகியும் இளையபல்லவன் பால் ஈர்க்கப்படுகிறாள். இவற்றை தனது அரசியலில் இலாபத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள பலவர்மன் முனைகிறான். 

இதற்கிடையில் மஞ்சளழகியை மணமுடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனக்குக் கிடைத்த சலுகையைப் பயன்படுத்தி இளையபல்லவன் தனது மரக்கலத்தை மறுசீரமைக்கிறான். அதற்கு புறாவின் முகத்தை அமைத்து, கடாரத்தின் இளவரசியின் நினைவாக 'கடல் புறா' என பெயரிடுகிறான். இளையபல்லவனைக் கொலை செய்ய பலவர்மன் வெகுவாக முயன்று தோல்வியைத் தழுவுகிறான். மஞ்சளகி அகூதாவின் சகோதரிக்கும் ஜெயவர்மனுக்கும் பிறந்தவள் என்ற இரகசியம் வெளிவருகிறது.

இறுதியாக, தனது சாமர்த்தியத்தின் மூலம் கலிங்கத்தின் கடற்பலமாகத் திகழ்ந்த அஷையமுனையை இளையபல்லவன் கைப்பற்றி, மறுசீரமைக்கிறான். அதனை மஞ்சளழகிக்கு அளித்து அரசாளும் உரிமையை வழங்குகிறான். பின்னர், மிஞ்சியிருக்கும் தனது கடமையை நிறைவேற்ற மீண்டும் படற்பயணம் மேற்கொள்கிறான். இம்முறை கரையிருந்தபடியே கனத்த இதயத்துடன் அவனை வழியனுப்புவது மஞ்சளழகி.

...தொடரும்...








சனி, 2 ஜூலை, 2016

கடல்புறா -சாண்டில்யன் (பாகம் 1)




சரித்திர நாவல்களில் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு. அதிலும் கல்கி, சாண்டில்யன் ஆகிய இருவரின் தீவிர வாசகி. வெகுகாலமாகவே சாண்டில்யனின் கடல்புறா எனும் நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மலேசியாவின் 'கெடா' (கடாரம்) என்ற மாநிலம் குறித்து இந்நாவலில் சில குறிப்புகள் இருந்ததனால் இது எனது ஆர்வத்தை மென்மேலும் தூண்டியது. நாவலை வாசித்து முடித்து பல மாதங்கள் ஆன போதிலும் இதனைப் பற்றி சிலவற்றை குறிப்பெழுத வேண்டும் என உள்மனம் நச்சரித்துக்கொண்டே இருந்தது. அதற்கான அரிய வேளை இப்பொழுதுதான் எனக்கு வாய்த்தது.

கடல்புறா நாவல் மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. 1967-இல் எழுதப்பட்ட இந்நாவலில் பல சரித்திர நிகழ்வுகள் பதியப்பெற்றிருக்கின்றன. புனைக்கதையாக இருந்த போதிலும் பல வரலாற்று நூல்களின் துணைக்கொண்டே இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

இளைய பல்லவனைக் (கருணாகர பல்லவன்) கதைத்தலைவனாகக் கொண்டு கலிங்கத்தில் கதைத் தொடங்குகிறது. பாலூர்ப் பெருந்துறையில் வந்திரங்கிய உடனேயே சிக்கலில் மாட்டிய கருணாகரனுக்குச் சுங்க அதிகாரி தப்புவதற்கு உதவி செய்கிறான். உயிர் தப்பி ஒரு மாளிகையில் தஞ்சம் புகுந்த இளைய பல்லவன் அவ்விடம் கடாரத்தின் அரசகுமாரி காஞ்சனா தேவியைச் சந்திக்கின்றான். கலிங்க வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இளைய பல்லவனையும், கூலவாணிகன் சேந்தனையும், அநபாய குலோத்துங்கன் (சோழர் குல இளவல்) மற்றும் காஞ்சனாதேவி ஆகிய இருவரும் தக்க நேரத்தில் வந்து காப்பாற்றுகின்றனர்.அநபாயரின் நண்பனான அரபு நாட்டைச் சேர்ந்த அமீர் அவர்களுக்கு உதவ முன்வருகிறான். அமீர் பிரசித்திப்பெற்ற கடற்கொள்ளைக்காரனான அகூதாவின் சிறந்த சீடன் என்பது குறிப்பிடத்தக்கது. அகூதா மற்றும் அமீரின் துணையுடன் அநபாயன், காஞ்சனாதேவியையும் அவளது தந்தை குணவர்மனையும் கப்பலில் ஏற்றி கலிங்கத்தை விட்டு வெளியேறுகிறான். இவர்களைத் தப்புவிக்கும் முயற்சியில் அமீரும், இளைய பல்லவனும் கரையிலேயே தங்கி விடுகின்றன. மாளிகையில் முதன் முதலாகச் சந்தித்த அன்றே தனது இதயத்தை இளைய பல்லவனிடம் பறி கொடுத்த காஞ்சனா தேவி கனத்த இயத்துடன் கப்பலில் பயணிக்கிறாள். இவ்வாறாக நாவலின் முதல் பாகம் சோகத்துடன் நிறைவடைகிறது.

கடாரத்தைப் பற்றி நாவலில் இடம்பெறும் சில தகவல்கள்:

*வைரமும் வைடூரியமும் பதிக்கப் பெற்ற மணிக்கதவுகள் உள்ள கடாரத்துக்கும், தங்கம் மண்ணிலே கொழித்துக் கிடக்கும் சொர்ணத்தீவுக்கும் இந்த பாலூர்ப் பெருந்துறைதான் திறவுகோல். -பக்.44

*தென்கிழக்கு நாடுகளின் வாணிபத்தின் முழுப்பலனை அடையும் கடாரத்தை வெற்றி கொண்டு மரகதத் தோரணத்தையும் ஆபரண வாயிலையும் கொண்டு வந்தும்  முதலாம் ராஜேந்திரரின் கடற்படை இங்கிருந்துதான் கிளம்பியது. -பக்.45

*கோட்டைக் காவலரிடமிருந்து தப்பிக் கடாரத்தின் இளவரசர் தங்கியிருக்கும் மாளிகைக்குள் வந்து குதிப்பேனென்பதை நாம் எப்படி எதிர்ப்பார்த்திருக்க முடியும்? -பக்.68

*தந்தையின் பெயர் குணவர்மன் என்றேன். கடாரத்தின் இளவரசர் ஒருவருக்குத்தான் அந்தப் பெயர் இருக்க வேண்டுமா? -பக்.68

*ஓலையில் கண்டிருப்பது நடந்தால் எங்கள் குலம் ஒழிந்தது! சைலேந்திரர் பேரரசு முறிந்தது! சொர்ண பூமியே அழிந்தது! -பக்.74

*கடாரத்தின் மன்னன் என ஜெயவர்மனை இளைய பல்லவன் குறிப்பிட்டதை ரசிக்காத குணவர்மனின் முகம் லேசாகச் சுளித்தது. -பக்.78

*கடாரத்தின் ஆட்சி பீடத்தையும் அந்த ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத்தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப்பட்டது. -பக்.90

*கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே அனுப்பியிருந்தீர்களே? -பக்.90

*அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்தர்களின் மாபெரும் அரசான ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது. பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. -பக்.91

*பாரதத்தின் கடற்கரையோரமாகப் போய்த் தெற்கே திரும்பினால் கிழக்கு நாடு பாரதத்தின் நிலப் பரப்புடன் தொடர்பு கொண்டே செல்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடாரத்துக்குக் கீழேதான்,  கடல் குறுக்கிட்டு உடைக்கிறது. அப்படிக் கடல் உடைத்துப் பிரிந்த இடங்கள் தீவுகளாகிச் சொர்ணத் தீவு (சுமாத்ரா) என்றும், சாவகத் தீவு என்றும், பாலித் தீவு என்றும் வெவ்வேறு விதமான பெயர்களைப் பெற்றுத் திகழ்கின்றன. -பக்.92

*ஸ்ரீமார விஜயதுங்கவர்மனுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்த ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் பாரதத்திலிருந்து வரும் பொருள்களுக்குப் பலமான சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெகுண்ட இராஜேந்திர சோழ தேவர் ஸ்ரீ விஜயத்தை நோக்கித் தமது கடற்படையை ஏவினார். எந்தக் கடலைத் தாண்டி பெருவாரியான தமிழர் படை வர முடியாதென்ற தைரியத்தால் ஸங்க்ரம விஜயதுங்கர் சுங்க வரிகளை விதித்தாரோ, அந்தக் கடலைத் தாண்டித் தமிழர் பெரும் படை வந்தது. கடாரத்தையும், ஸ்ரீ விஜயத்தையும் சூறையாடியது. ஸங்க்ரம விஜயதுங்கவர்மனையும் சிறை பிடித்துச் சென்றது. பிறகு ராஜேந்திர சோழதேவரின் கருணையால் ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் விடுதலையடைந்தார். அவர் காலமுதல் ஸ்ரீவிஜயம் வலிமை குன்றியது. என் தந்தையின் காலத்தில் அரியணைப் போட்டிச் சண்டையும் கிளம்பியது. என் சகோதரன் அரசைப் பறித்துக்கொள்ள விரும்பினான். அதன் விளைவாக, என்னைச் சொர்ணத் தீவிலிருந்து கடாரத்துக்கு அனுப்பி அங்கு என்னை இளவரசனாக்கினார் என் தந்தை. -பக்.95

*ஜெயவர்மன் ஆட்சி ஸ்ரீவிஜயத்துக்குப் பெரும் சாபக்கேடாக முடிந்தது. மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். சாதாரணக் குற்றங்களுக்குப் பெரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஜெயவர்மனுக்குப் புத்தி சொல்ல முற்பட்ட மந்திரிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மெள்ள மெள்ளச் சீரழியத் தொடங்கியது. அக்கம் பக்கத்து அரசாங்கங்களின் விரோதமும் வந்து சம்பவித்தது. இப்படியே போனால் மக்கள் தவிப்பார்கள், நாடு அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே, கடாரத்தைத் தன் வசம் ஒப்புவிக்கும்படி ஜெயவர்மன் அனுப்பிய ஓலையைத் திருப்பியனுப்பினேன். முடிந்தால் ஜெயவர்மன் கடாரத்தை அழித்திருப்பான். ஆனால் மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கிருப்பதைக் கண்டு அஞ்சியிருக்கிறான்.  அவன் அச்சம் குலையுமுன்பு சோழர் உதவியை நாடி சைலேந்திரர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தவும் , என் நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்கவும், இந்நாடு வந்திருக்கிறேன். -பக்.96

*கடாரத்தின் மன்னர்-இவர் இளவரசரா மன்னரா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது- ஆகவே மன்னரென்றே அழைக்கிறேன். இவரும் இவரது மகள் இளவரசி காஞ்சனாதேவியும்  கடாரத்தின் தளையை அவிழ்க்கச் சோழ நாட்டு உதவி நாடி வந்திருக்கிறார்கள். -பக்.367

...தொடரும்...





வெள்ளி, 24 ஜூன், 2016

மரணம்


மரணம்...ஆம், அவ்வளவுதான் வாழ்க்கை. நாம் எவ்வளவுதான் இந்த வாழ்க்கையை எதிர்க்கொள்ள போராடினாலும்,இறுதியில் அனைவருக்குமே மரணம்தான். எவ்வளவோ கற்றுக்கொண்ட மனிதனால் இன்று வரையில் காலனை வெல்லும் வழியினைக் கண்டுக்கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் மரணமே இல்லாதவர்கள் போல் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். எத்தனைப் பெருமை, கர்வம், பொறாமை, வஞ்சகம், போட்டி?? இறுதியில் நடப்பதென்ன? காலன் வெல்லும்போது நாம் நமது இயலாமையை உணர்கிறோம். 

நமது உடல் மிகவும் மென்மையானது. அதனை ஒவ்வொருவரும் பெரும்பாடுபட்டுக் காக்க வேண்டியுள்ளது. சிறு கீறலும் கூட நம் உயிரை பறித்துவிடும். தீயில் எளிதில் கருகி வெந்துவிடுவோம். சாலை விபத்தில், கணத்தில் மரணம் நிகழலாம். நாம் சக்தியற்றவர்கள். நாம் தினமும் உயிர் வாழ உண்ணும் உணவு கூட சில சமயங்களில் நமக்கு எமனாய் வந்து நின்றுவிடுகிறது. இவ்வளவுதான் மனிதன். பிற உயிர்களைப் போல் வெறும் இரத்தமும், எலும்பும், சதையும் கொண்டவன். ஆனால், மரணம் கண் முன் தெரியும்வரை மனிதன் இதனை உணர மறுக்கிறான்.

எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு அனுபவங்கள் பெற்றிருந்தும், நமது வாழ்க்கையின் முடிவு மரணம்; அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற உண்மையை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ சாகாவரம் பெற்றவர்கள் போல் கர்வத்துடன் பூமியில் அலைகிறோம். வாழ்க்கையை மேம்படுத்த, பணம் சம்பாதிக்க என்னென்னவோ செய்கிறோம். பெயரையும் புகழையும் தேடி ஓடுகிறோம். பிறரைக் கண்டு அஞ்சி நடுங்குகிறோம். அடுத்தவரைக் கண்டு நகைக்கிறோம்; ஏளனம் செய்கிறோம். பிறர் மரணத்தைக் கண்டு பரிதாபம் கொள்கிறோம். நாமும் எதிர்க்காலப் பிணம் என்பதை உணர மறுக்கிறோம்.

மரணம், இதுதான் வாழ்க்கையின் முடிவு. பிறந்த ஒவ்வொருவருக்கும் இதுதான் முடிவு. இதில் எள்ளளவும் மாற்றமில்லை. அது இப்போதும் நிகழலாம், எப்போதும் நிகழலாம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியைத்தான் நாம் வாழ்க்கை என்கிறோம். இந்த இடைவெளி சிலருக்குக் குறுகியதாய் இருக்கலாம், பலருக்கும் நீண்டதாய் இருக்கலாம். எப்படி இருப்பிலும், இடைவெளி நீங்கியப்பின் நமக்கெல்லாம் காத்திருப்பது மரணம்! ஆம், எனக்கும் மரணமுண்டு, உனக்கும் மரணமுண்டு!


வெள்ளி, 27 மே, 2016

நிரந்தரமில்லை...


இதுவும் நிரந்தரமில்லை 
அதுவும் நிரந்தரமில்லை 
சுற்றும் உலகில்
எதுவும் நிரந்தரமில்லை!

நேற்று அழுதவன் 
இன்று சிரிக்கிறான்
இன்று சிரிப்பவன்
நாளை அழுகலாம்...

மாடியில் இருப்பவன் 
குடிசைக்கு வரலாம்
குடிசையில் இருப்பவன்
மாடி ஏறலாம்...

இன்றைய காதலி மனைவியாகலாம்
நேற்றைய நண்பன் பகைவ‌னாகலாம்
பெற்ற தாயும் மறைந்துப் போகலாம்
வாழ்க்கை என்பதே வெறுத்துப் போகலாம்

நேற்றைய பழக்கம் மாறி போகலாம்
புதியன அனைத்தும் வந்து சேரலாம்
நண்பர் கூட்டம் பெருகிப் போகலாம்
அடுத்த நாளே இறந்துப் போகலாம்!

இதுவும் இல்லை
அதுவும் இல்லை
வாழ்க்கையில் எதுவும்
நிரந்தரமில்லை!

ஹரி போட்டரும் மந்திரவாதியின் கல்லும் -ஜெ.கே.ரோவ்லிங் (Harry Potter and The Sorcerer's Stone)


பெற்றோர் மறைவிற்குப் பிறகு ஹரி சித்தியின் வீட்டில் பல கொடுமைக்களுக்கிடையில் வளர்கிறான். பதினோரு வயது வரையில் தனது பிறந்தநாளை ஒருநாள் கூட அவன் கொண்டாடியதில்லை. ஒருநாள் அவனுக்கு ஆந்தையின் மூலம் கடிதம் கொண்டு வரப்பட்டது. அவனது சித்தாப்பாவும் சித்தியும் அதனை அவனிடம் கொடுக்காது கிழித்துவிடுகின்றனர். சித்தியின் குடும்பத்தினரைத் தவிர்த்து வேறு உறவோ நட்போ இல்லாத நிலையில் அவன் அந்தக் கடிதம் யாருடையதாக இருக்கும் என நினைத்து ஏங்குகிறான். அவனது ஏக்கத்தைப் போக்க, கடிதங்கள் கிழிக்கப்பட இன்னும் பல கடிதங்கள் வந்த வண்ணமாகவே இருந்தன. 

ஹரியின் 11-வது பிறந்தநாளன்று ஹாக்ரிட் எனப்படும் பெரிய மனிதன் ஒருவன் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, ஹாரி ஒரு மந்திரவாதி என்ற உண்மையைச் சொல்கிறான். மேலும், மந்திரவாதிகளான ஹரியின் பெற்றோர் எப்படி கொல்லப்பட்டனர் என்பதையும் விவரிக்கிறான். ஹரியை ஹோக்வர்ட் எனப்படும் மந்திரம் பயிலும் பள்ளியில் சேர்ப்பதற்கே தான் அவ்விடம் வந்ததாகக் கூறி அழைப்புக் கடிதத்தை கொடுத்து ஹரியை அழைத்துச் செல்கிறான். 

ஹரியின் படிப்புச் செலவிற்கு அவனது பெற்றோர் அதிகமான செல்வத்தை வங்கியில் வைத்திருந்தனர். ஹாக்ரிட்டின் உதவியின் மூலம், வங்கிலியிருந்து பணத்தை எடுத்துப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறான். பொருட்கள் வாங்கும் சந்தையில் ஏறத்தாள அனைவருக்குமே ஹரியை நன்குத் தெரிந்தது. அவனது நெற்றியில் இருந்த மின்னல் வெட்டு போன்ற தழும்பு அவன் மரணத்தை வென்ற 'ஹரி போட்டர்' என்பதை உலகிற்குப் பறைச்சாற்றியது.

மாயத் தொடர்வண்டியில் ஏறி மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஹரிக்கு, ரோன் மற்றும் ஹெர்மியோனியின் நட்பு கிட்டுகிறது. பள்ளியிலும் மூவருக்கும் ஒரே குழுவில் இடம் கிடைத்ததால் பிற்காலத்தில் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மாயப்பள்ளியின் அழகையும் ஆடம்பரத்தையும் கண்டு ஹரி மயங்குகிறான். அவனிடம் மற்ற சிறுவர்களைவிட ஏதோ ஒரு பெரிய சக்தி இருப்பதை அனைவரும் உணர்கின்றனர். ஹோக்வர்ட்டின் பிரபலமான பறக்கும் பந்து விளையாட்டுப் போட்டிலும் ஹரி கலந்துக்கொண்டு தன் குழுவிற்கு வெற்றித் தேடி தருகிறான். பள்ளியின் தலைமையாசிரியர் அல்புஸ் டம்பெல்டோர் மற்றும் ஹாக்ரிட் இருவரும் ஹரியிடம் மிகுந்த அன்புக் காட்டுகின்றனர். இருந்த போதிலும், பேராசிரியர் சினேப் அவனை விரோதியைப் போல் நடத்துகிறார். 

ஒரு சமயம் வங்கியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாட முயற்சி நடந்திருப்பதான செய்தி நாளிதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முந்தினம்தான்  தலைமையாசிரியரிடம் ஒப்படைப்பதற்காக ஹாக்ரிட் வங்கியிருந்து அதனை எடுத்து வந்திருந்தான். அது என்னப் பொருளாக இருக்கும் என அலசி ஆராய்ந்துக் கடைசியாக அது, மரணமில்லாமல் வைத்திருக்கும் மந்திரக் கல் என்பதை ஹரி தெரிந்துக்கொண்டான். அந்தக் கல்லைப் பெருவதற்கு சினேப்  முயன்றுக்கொண்டிருக்கிறான் என்றெண்ணி எப்படியாவது அந்தக் கொடியவனைத் தடுக்க வேண்டி தனது நண்பர்கள் ரோன் மற்றும் ஹெர்மியோனியின் உதவியுடன் செயல்படுகிறான். 

பலத் தடைகளைத் தாண்டி, இறுதியாக மந்திரக்கல் இருக்கும் இடத்தை அடைந்த ஹரி, பேராசிரியர் கியூரல் என்பவரே அந்தக் கல்லைப் பெருவதற்கு முயற்சிகள் செய்துவந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியுறுகிறான். தன் பெற்றோரைக் கொன்ற வொல்டெமோர்ட் என்ற தீயச்சூனியக்காரனுக்கு கியூரல் உதவி வந்துள்ளதை அறிந்து அந்தக்கல்லை அவனிடமிருந்துக் காப்பாற்ற முயல்கிறான். மாயக்கண்ணாடியின் உதவியால் கல் ஹரியின் காற்சட்டைப்பைக்குள் வருகிறது. கியூரலால் ஹரியைத் தடுக்க முடியவில்லை. ஹரியிடமிருந்த  மாயச்சக்தி கியூரலைத் தடுத்தது. பள்ளி முதல்வர் டம்பெல்டோர் தக்க சமயத்தில் வந்து ஹரியைக் காப்பாற்றுகிறார். அந்தக் கல் மேலும் துன்பங்களை விளைவிக்காமல் இருப்பதற்கு அதனை அழிக்கவும் செய்கிறார். 

இவ்வாறாக, ஹரி போட்டரும் மந்திரக்கல்லும் என்ற இந்தப்பாகம் நிறைவடைகிறது. மாயஜாலங்கள் நிறைந்த இக்கதை வாசிக்க மென்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இக்கதைத் திரைப்படமாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களையும் அற்புதங்களையும் எம்மால் இவ்விடம் பதிய முடியவில்லை. வாய்ப்பிருப்பின், நீங்களே படித்து ஹரி போட்டரின் மாய உலகில் வலம் வாருங்கள். 

வியாழன், 19 மே, 2016

பாவப்பட்டப் பெண் -ஜாக்கி கோலின்ஸ் Poor Little Bitch Girl -Jackie Collins



டென்வர் ஜோன்ஸ், அனபெல்லா, கரோலின் ஆகிய மூவரும் பெவெர்லி ஹில்சில் ஒன்றாகப் படித்தவர்கள். 

அனபெல்லா
பிரபலமான சினிமா நடிகர்களின் ஒரே மகள். பால்ய வயதிலேயே அழகினைக் கூட்டுவதற்காகப் பல அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டவள். அழகியாக இருந்த போதிலும், பெற்றோரின் கவனிப்பு இல்லாமையால் செல்வத்தை தன் விருப்பப்படி செலவழிக்கிறாள். நியூ யார்க்கில் ஆடை வடிவமைப்புத் துறையில் தனக்கென தனி அடையாளத்தைத் தேடுவதற்காகப் புறப்படுகிறாள். சென்ற இடத்தில் போதைப் பித்தனான பிராங்கியுடன் காதல் வயப்படுகிறாள். இருவரும் விரைவான வழியில் பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தைக் கையிலெடுக்கின்றனர். மிகவும் பிரபலமான பணக்காரர்களுக்கு உயர்தர நடிகைகள், அழகிகளைத் தயார் செய்து கொடுப்பது இவர்களது இரகசியத் தொழிலாக இருந்தது. இதற்கிடையில் அனபெல்லாவின் அழகிய தாயார் சொந்த வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்படுகிறார். அதே சமயம், இவளது இரகசிய தொழில் பத்திரிக்கைகளில் ஆதாரத்தோடு அம்பலத்திற்கு வருகிறது. இறுதியாக, பிராங்கியை விட்டுப் பிரிகிறாள்.

கரோலின்
வாசிங்டனின் ஆட்சிக்குழு உறுப்பினர் கிரேகரியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு கர்ப்பமாகிறாள். தனது காதலனைக் கலட்டிவிட்டு ஆட்சிக்குழு உறுப்பினரைத் திருமணம் செய்துக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள். ஏற்கனவே திருமணமான கிரேகரி அதனது குடும்பத்தை விட்டுப்பிரிய விரும்பவில்லை. இதற்கெல்லாம் கரோலினின் கர்ப்பம்தான் காரணம் என எண்ணிய அவன் ஆட்களை வைத்து அவளைக் கடத்து கர்ப்பத்தை கலைக்க முயல்கிறான். பல இன்னல்களுக்குப் பிறகு எப்படியோ உயிர்த்தப்பிய கரோலினை டென்வர் காப்பாற்றுகிறாள். கிரேகரியின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்த கரோலின், அவனை விட்டு நீங்கி தனது சொந்த ஊருக்கே செல்கிறாள். 

டென்வர் ஜோன்ஸ்
சிறுவயதிலேயே நன்றாகப் படித்து சட்டதாரியாக உருவெடுக்கிறாள். அனெபெல்லாவின் தாயாரின் திடீர் கொலை அவளை ஊரெங்கும் அலைய வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே தனது நீண்டநாள் காதலனால் கைவிடப்பட்ட டென்வர் மனதை ஒருநிலைப் படுத்தி தனது வேலையிலேயே குறியாக இருக்கிறாள். அப்பொழுதுதான் பள்ளியில் தான் விரும்பிய பணக்காரப் பையனான போப்பியைச் சந்திக்கிறாள். பலப் பெண்களுடன் பழகி சலிப்புற்ற போப்பி அனெபெல்லாவின் இயற்கையான நற்குணத்தில் தனது மனதைப் பறிக்கொடுக்கிறான். இறுதியாக இருவம் காதல் வயப்படுகின்றனர்.


முடிவுரை
ஹாலிவுட்டில் இளையோர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களிடையே நிலவும் சீர்க்கேடுகளையும் இந்நாவலின் வழி அறிந்துக்கொள்ள முடிகிறது. 



செவ்வாய், 29 மார்ச், 2016

நான் பன்முகம் கொண்டவள்!



அன்பொழுகும் ஒரு முகம்
ஆண்மையான‌ ஒரு முகம்
இம்சைத் தரும் ஒரு முகம்
ஈகை செய்யும் மறு முகம்...

உண்மையான ஒரு முகம்
ஊர்ச்சுத்தியாய் ஒரு முகம்
எளிமையான ஒரு முகம்
ஏற்கவியலா மறுமுகம்...

ஐயம் தரும் ஒரு முகம்
ஒழுக்கமில்லா ஒரு முகம்
ஓவியமாய் ஒரு முகம்
ஒளவியம் கொண்ட மறுமுகம்...

பன்முகங்கள் எனக்குண்டு
எந்த முகம் வேண்டுமென்று
தீர்மானம் நீயே செய்வாய்
கண்களில் அதையே காண்பாய்!