சீசர் இறந்துவிட்டான்
சீற்றத்தில் துடித்தாள் கிளியோபாட்ரா
கண்ட நாள்முதல் காதலில் திளைத்தவள்
கண்ணீர் நதியினில் மூழ்கிச் சாகின்றாள்!
நண்பன் இறந்துவிட்டான்
நாடித் துடிக்கிறதே
திரோகம் இளைத்தவரை
தீர்த்திட முயல்கிறதே
வருகின்றான் அண்டனி
வஞ்சம் தீர்த்திட
சவத்தின் முன்னாலே
சபதம் ஏற்றிட...
தங்க ஆடையில்
தகதகக்கும் பீடத்தில்
தெய்வம் போல் மின்னிட
தாரகையும் காட்சி தர,
பிரமாண்டம் கண்திகைக்க
பித்து போல் அவன் நிற்க
பிடித்தது காதல் நோய்
பின்விளைவுதான் என்னவோ?
சீசரை மயக்கியவள்
சிரிப்புடனே நெருங்கினாள்
அசைவுகள் ஏதுமின்றி
அண்டனி சிலையானான்!
உணர்ச்சிகள் கலந்தன
உடல்களும் இணைந்தன
காலம்தான் பொறுக்குமா
காதல்தான் நிலைக்குமா?
சீசரின் உறவொன்று
சீறித்தான் வந்ததுவே
ஆண்டனி உயிர்க்கொய்ய
ஆவலாய் முயன்றதுவே!
வெடித்தது போர் ஒன்று
விலகினான் அண்டனியும்
மங்கைப் பின் அவன் ஓட
மானமும் பறந்ததுவே!
தோல்வி மனக்கசப்பைத் தர
தீயாய் அது நெஞ்சைச் சுட
துவண்ட மன்னன்
தூரம் சென்றான்
விழிகொண்ட மங்கையை
விலக்கி வைத்தான்!
காதல் தலைவன்
சீறி விலக
கிளியோபாட்ரா
சமாதி சென்றாள்!
அண்டனி தலை வேண்டும்
ஆணையிட்டான் சீசர் மகன்
தந்துவிடு கிளியோபாட்ரா
தப்பிவிடும் எகிப்தின் தலை!
கண்ணியவள் கலங்கி நின்றாள்
காலனை வேண்டி நின்றாள்
அரியணை தனக்கு வேண்டாம்
அன்பனே போதும் என்றாள்!
காலம் கடந்ததுவே
காலன் வந்ததுவே
களத்தில் தோல்வியுற்ற
கண்ணன் மனமுடைந்து
கத்தியை உறுவினான்
கணத்தில் செலுத்தினான்!
செர்வியஸ் அதிர்ச்சியுற்றான்
செய்வதறியாது திகைத்து நின்றான்!
கணங்கள் எனக்கில்லை
கிளியோவை காண வேண்டும்
காரணம் சொல்லாதே
கண்டிப்பாய் சேர்த்துவிடு
கரகரத்தான் அண்டனி!
கிளியோபாட்ரா சமாதியில்
காதல் கண்ணியின் மடியில்
கடைசி நேரத்து மூச்சை
காதல் முத்தத்தில் கலந்தான்!
சோகத்தைத் தாளாதவள்
சர்ப்பத்தின் துணை கொண்டு
சாவை வரவேற்றாள்
சரித்திரத்தில் இடம்பெற்றாள்!
அழிந்தது இரு உடல்கள்
ஆண்டுகள் பல கடந்தும்
வாழ்கிறது காதல்
வாழ்த்துவது சரித்திரம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக