வியாழன், 17 டிசம்பர், 2015

பூட்டாத கதவுகளும், திறந்த சன்னல்களும்...



அது ஒரு அழகிய கனாக்காலம். காலை விடிந்தவுடனேயே முதல் வேலையாக திரைகளை விலக்கி சன்னல்களை திறந்துவிட வேடும். பின்னர் வீட்டின் முன் கதவு, பின் கதவு இரண்டையும் அகல திறந்து வைக்க வேண்டும். இளஞ்சூரியனின் இனிய வெப்பமும் வெளிச்சமும் மெல்ல வீட்டை நிரப்பி ஒளிரச் செய்யும். அதன் பின்னர் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அனைவரும் காலைக்கடன்களை முடித்து, குளித்து வந்த பிறகு காலை உணவு.

வீட்டின் சன்னல்களும் கதவுகளும் மாலை வரை திறந்தே இருக்கும். சிறுவர்களும் பெரியவ்ர்களும் வீட்டிற்குள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். யாரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்ததில்லை. பக்கத்து வீட்டு குடும்பத்தலைவிகள் சர்வ சாதாரணமாக நம் வீட்டுச் சமையலறைக்குள் நுழைந்து தக்காளி, கத்தரிக்காய் என இரவல் வாங்கிக்கொண்டுச் செல்வர். சமைத்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது சமையல் பொருள் தீர்ந்துவிட்டாலோ அல்லது வாங்கி வைக்க மறந்துவிட்டாலோ, நாங்கள் பக்கத்து வீட்டு பின்கட்டு கதவை நாடிச் செல்வோம். கதவுகள் இரவுவரை அடைக்கப்படுவதே இல்லை. அதனால் நாங்கள் அதனைத் தட்டியதும் இல்லை. வீட்டிற்குள் நுழையும் போது குரல் மட்டும் கொடுத்தால் போதும்.

மதிய வேலைகளில் சன்னல் அருகில் அமர்ந்துக்கொண்டு வெளியே வருவோரையும் போவோரையும் (பக்கத்துவீட்டுக்காரர்களை) பாட்டுப்பாடிக் கிண்டலடித்து வம்பிழுக்கும் வாய்ப்பு எத்தனைப் பேருக்கு அமையும்? வீட்டிற்கு வெளியே நடக்கும் குடும்பச் சண்டையை ஒளிந்துப் பார்ப்பதற்கு அந்தச் சன்னல்கள் எவ்வளவு உதவியிருக்கின்றன... பள்ளிப்பாடங்களைச் செய்யும் போது களைப்பு ஏற்படும் போதெல்லாம் அந்த சன்னல்கள் வெளியுலகைக் காட்டி எவ்வாறெல்லாம் உற்சாகப்படுத்தின? மாலை கொசு தொல்லை மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அவை இரவு வரை திறந்தேயல்லவா இருக்கும்!

மாலையில் சாத்தப்படுவது அந்தக் கண்ணாடி சன்னல்கள் மட்டுமே. கதவுகள் இரவு அனைவரும் உறக்கச் செல்லும் வரை திறந்தே இருக்கும். சமயங்களில் கதவைத் திறந்து வைத்துக்கொண்டே வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நட்சத்திரங்களை இரசிப்பது, முன் சாலையில் வந்து போகும் வாகனங்களை எண்ணுவது என அமைதியான வாழ்க்கை.

குடும்ப வருவாய் பெரியதாய் இல்லாமற் போயினும் அந்தக் கதவு சன்னல்களிலிருந்து காற்றும் வெளிச்சமும் வீட்டை நிரம்பி குடுப்பத்தை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தன. சன்னல்களையும் கதவுகளையும்  உரிய நேரத்தில் திறப்பதும் அடைப்பதும், அன்றாட கடமைகளில் இன்றியமையாததாய் இருந்தது; ஒரு காலத்தில்!













2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ரொம்ப நாட்கள் கழித்து வாசித்தேன்
.
நீங்க இன்னும் எழுதுவது சந்தோஷமாக உள்ளது

து. பவனேஸ்வரி சொன்னது…

@நட்புடன் ஜமால்
தொடர்ந்து எழுதுவதில்லை. அவ்வப்போது ஏதோ கிறுக்குகிறேன். இளமையில் ஏற்பட்டப் பழக்கம்; எளிதில் விடமுடிவதில்லை. எழுத்தும் ஒருவகை போதை தானே?